முதலில் ‘சிவபுண்ணியம்’ என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள அது குறித்த முழுமையான புரிதல் தேவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாவத்தை உடைத்து தூள் தூளாக்கிவிடும். அதே நேரம், கடுகளவு சிவநிந்தனை கூட மலையளவு புண்ணியத்தை தகர்த்து நரகில் தள்ளிவிடும். எனவே இது குறித்த முழு புரிதல் வேண்டும். அப்போது தான் அளவற்ற சிவபுண்ணியத்தை நம்மால் சேர்த்துக்கொள்ள இயலும்.
எனவே சிவபுண்ணியம் குறித்து ஒரு தனித் தொடர் இந்த பதிவு முதல் துவங்குகிறது. மற்ற தொடர்கள் போலல்லாமல், இது ஒரு எக்ஸ்ப்ரெஸ் தொடராக வெளிவரும். எந்தளவு வேகமாக வருகிறது என்பது வாசகர்களின் ஆதரவைப் பொறுத்தே இருக்கிறது.
இதனிடையே கர்மா Vs கடவுள் தொடரும் ஒன்றிரண்டு பதிவுகள் அளிக்கப்படும்.
நம் தளத்தில் வெளியாகும் ‘தொடர்கள்’ 99% தனிப்பட்ட கதை மற்றும் சம்பவத்தை (SEPARATE STORY & INCIDENT) அடிப்படையாக வைத்தே தரப்படுவதால் தனித் தனியாக படித்தாலும் சரி, தொடர்ச்சியாக படித்தாலும் சரி எளிதில் புரியும். CONTINUITY பிரச்னை இருக்காது. எனவே வாசகர்கள் இது குறித்து குழப்பம் அடையத் தேவையில்லை.
ஒவ்வொரு பதிவுக்கும் மையக்கருத்து என்ற ஒன்று இருக்கும். அதை நீங்கள் கண்டு உணர்ந்துகொண்டால் போதும். பதிவின் நோக்கம் நிறைவேறிவிடும்.
இந்த தொடரைப் பொறுத்தவரை ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் பதிவுக்கு பொருத்தமான பதிவு கூறும் கருத்தை ஒத்திருக்கும் தேவாரப்பாடல் ஒன்று அளிக்கப்படும்.
தேவாரப் பாடல் படிப்பதோ கேட்பதோ சாதாரண விஷயம் அல்ல. அதுவே ஒரு சிவவழிபாடு போலத் தான். (இது பற்றிய அற்புதமானதொரு சம்பவம் இந்த தொடரில் பின்னர் இடம்பெறும்.) இத்தொடரை படிக்கும் அனைவருக்கும் சிவபுண்ணியம் உரித்தாகவேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறோம்.
திருச்சிற்றம்பலம்.
************************
தனது தூதுவர்களை எச்சரித்த எமதர்மன்!
மாளவ தேசத்தில் வைணவபுரம் என்னும் நகரம் ஒன்று இருக்கிறது. (தற்போதைய மத்தியபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் குறிப்பாக குஜராத் மற்றும் தென் கிழக்கு ராஜஸ்தான் ஆகியவற்றை ஒட்டிய பகுதிகளே அன்றைய மாளவ தேசம்).
அந்த நகரில் கிரது ரூபன் என்கிற பிராமணன் வசித்து வந்தான். அந்தண குலத்தில் பிறந்திருந்தாலும் ஆச்சார அனுஷ்டானங்களையோ நியம நிஷ்டைகளையோ அறியாத அந்தணன் அவன். தர்ம காரியங்களில் உலோபி. அதர்ம காரியங்களில் பரோபகாரி.
விரதம் முதலான நாட்களை பற்றிய தெளிவு கூட இல்லாமல், பெருந்தீனி உண்டு வயிறு வளர்த்து வந்தான். போதாகுறைக்கு பரத்தையர் நட்பும் அவனுக்கு இருந்தது. பார்க்கும் பெண்களிடம் எல்லாம் காமம் கொண்டு அவர்களை மயக்கி அவர்களோடு கூடிக்குலாவி இன்பம் அனுபவித்து வந்தான்.
ஒரு நாள், வீதியில் நடந்து சென்ற ஒரு தாசியின் பால் மையல் கொண்டு அவள் பின்னாலேயே சென்றான் கிரது ரூபன். அவளோ மிகுதியான பொருளைக்கொண்டு வந்தால் தான் அவன் ஆசைக்கு உடன்கொள்ளமுடியும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டாள். இதையடுத்து என்ன செய்வதென்று கையைப் பிசைந்தவன், ஆசை நாயகியிடம் செல்லும்பொருட்டு பொருளுக்காக வழிப்பறியும் செய்யத் துணிந்தான். இவ்வாறாக பணத்தை சம்பாதித்து அவளுக்கு கொடுத்து அவளுடனேயே காலத்தை கழித்தும் வந்தான்.
ஒரு நாள் அரண்மனை சிப்பந்தி ஒருவன் நந்தவனந்தில் இருந்து பூக்களை பறித்து அரண்மனைக்கு பூக்கூடையில் அவற்றை எடுத்துச் சென்றுகொண்டிருந்தான். அதைக் கண்ட கிரது ரூபன் இந்த பூக்களை தனது ஆசை நாயகியிடம் கொண்டு சென்றால் அவள் மிகவும் மகிழ்வாள் என்று கருதி, அந்த சிப்பந்தியை தாக்கி அந்தப் பூக்கூடையை பறித்துக் கொண்டன்.
அந்தப் போராட்டத்தில் அந்த பூக்கூடையில் இருந்து சிறிது பூக்கள் கீழே வீதியில் சிந்தின. உடனே அந்த புஷ்பங்களை பார்த்து, “இந்த பூக்கள் சிவபெருமானுக்கு உரித்தாகுக. சிவார்ப்பணம்!” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
பின்னர் தான் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று, தன் ஆசை நாயகி மீது அப்பூக்களை கொட்டி அவளை பலவாறு மகிழ்வித்து அவளோடு இன்பம் அனுபவித்து வந்தான்.
========================================================
For earlier episodes…
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
========================================================
இந்நிலையில் அரண்மனை சிப்பந்தி, நடந்த சம்பவத்தை அரசனிடம் சென்று புகாராக தெரிவிக்க, வெகுண்டெழுந்த அரசன், “அவன் எங்கிருந்தலும் உடனே சென்று விலங்கிட்டு அழைத்து வாருங்கள்” என்று ஆணை பிறப்பித்தான்.
உடனே அரண்மனை காவலர்கள் கிரது ரூபனை தேடி நாலாபுறமும் சென்றார்கள். ஏற்கனவே கிரது ரூபனிடம் தத்தங்கள் பொருட்களை நகைகளை பறிகொடுத்திருந்த பலர், கிரது ரூபன் தஞ்சம் புகுந்திருக்கும் தாசியின் வீட்டை காட்டினார்கள்.
அங்கு சென்று கிரது ரூபனை கைது செய்து, தங்களுடனே இழுத்துச் சென்றார்கள்.
அரசன், இவன் ஏற்கனவே செய்த பல அக்கிரமங்களை பற்றி விசாரித்தறிந்து, “இவனை சிறையில் அடையுங்கள். தினசரி நூறு கசையடி வீதம் கொடுங்கள்” என்று ஆணையிட்டான்.
தான் செய்த தவறுகளுக்கெல்லாம் சிறையில் பலவாறு தண்டனை அனுபவித்த கிரது ரூபன் ஒரு நாள் சிறைச்சாலையிலேயே மாண்டு போனான்.
அப்போது அவனை இழுத்துச் செல்ல எமகிங்கரர்கள் வந்தார்கள். அவர்கள் அவனை கட்டியிழுத்துச் செல்லும் தருணத்தே, அங்கு தோன்றிய சிவகணங்கள் இருவர், எம தூதர்களை அடித்து விரட்டிவிட்டு, கிரது ரூபனை புஷ்பக விமானத்தில் ஏற்றி, கயிலை நோக்கி சென்றார்கள்.
சிவகணங்களால் தாக்கப்பட்டு எமலோகம் ஓடிவந்த எமதூதர்கள், எமதர்மனிடம் நடந்த அனைத்தையும் சொன்னார்கள்.
கோபம்கொண்ட எமதர்மன், சித்திரகுப்தனிடம் “அந்த துராத்மா தப்பிக்க காரணம் என்ன?” என்று கேட்டான்.
சித்திர குப்தன் அவனது பாப புண்ணிய கணக்குகளை ஆராய்ந்து, “பிரபோ, அவன் செய்திருக்கும் பாபங்களை நான் கூற ஆரம்பித்தால் அதற்கு கோடி வருடங்கள் கூட போதாது. அந்தளவு அவன் பாபங்களை செய்திருக்கிறான். அவன் செய்யாத பாபங்களே இல்லை. ஆனால் அனைத்து பாபங்களும் அவன் செய்த ஒரு சிறு சிவபுண்ணியத்தால், நெருப்பில் பட்ட பஞ்சு போல, பொசுங்கிப் போய்விட்டன”
“அது யாது? அதன் விபரம் என்ன??”
“ஒரு சமயம், அரண்மனைக்கு பூக்களை கொண்டு சென்ற சேவகனிடம் இவன் வம்பு செய்து அப்பூக்கூடையை பறித்தான். அப்போது சிறிது பூக்கள் கீழே விழுந்து இறைந்தன. அப்பூக்களை பார்த்து இவன் “சிவார்ப்பணம்” என்று கூறிவிட்டு சென்றான். எனவே மானச சிவ பூஜை செய்த பலன் இவனுக்கு கிட்டியது. அதைத் தொடர்ந்து இவனது பாபங்கள் அனைத்தும் அந்த சிவபூஜையால் அழிந்துவிட்டன. அந்த சிவபூஜையின் பலன் காரணமாக அவன் கயிலைக்கு செல்லும் பேறு கிடைத்தது!” என்றான்.
“சித்திரகுப்தா… சிவபூஜைக்கு கிடைக்கும் பலனை ஈரேழு உலகங்களிலும் எடுத்துக் கூற வல்லவர் எவருமுண்டோ??” என்றவன், தனது தூதுவர்களிடம், “சிவபூஜை செய்கிறவர்கள் மற்றும் அவர்கள் சுற்றத்தார், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை கண்டால் எப்போதும் தொலைவில் இருந்து வணங்கிவிட்டு உங்கள் வழியே போய்விடுங்கள்” என்றான்.
************************
இது ஏதோ இட்டுக்கட்டிக் கூறிய கதை அல்ல. இது போன்ற சம்பவக் கதைகள் விநாயகர் புராணம், ஸ்கந்த புராணம், சிவமஹா புராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றில் நிறைய இருக்கிறது. இவற்றின் நோக்கம் ஒருவர் எவ்வளவு தீய வழியில் சென்றாலும் சிவபுண்ணியம் இருந்தால் அவர்களாலும் உய்ய முடியும் எனும்போது உள்ளன்போடு சிவபெருமானை அனுதினமும் துதிப்பவர்களுக்கு, பூஜிப்பவர்களுக்கு எத்தனை பலன் என்று எடுத்துகூறுவது தான். ஆனால் வேண்டுமென்றே தவறுகளை செய்துவிட்டு சிவபுண்ணியம் செய்தால் போதும் நற்கதியடையலாம் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது.
மேலும் இக்கதையின் கடைசி பத்தியில் நாம் கண்டபடி, சிவனை வழிபடுகிறவர்களை மட்டுமல்ல அப்படி வழிபடுகிறவர்களுடன் நட்பாக இருப்பவர்களைக் கூட அணுக எமன் அஞ்சுவானாம்!
இதை மிக அழகாக திருஞானசம்பந்தர் நமச்சிவாய திருப்பதிகத்தில் கூறுகிறார்…
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே
பாடல் விளக்கம் : தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும். இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களை கூட அணுக இயமன் தூதன் பயப்படுவான்.
….. சிவபுண்ணியக் கதைகள் தொடரும்
==========================================================
* To those who are new to this website
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
==========================================================
[END]
சிவ பெருமானின் திவ்ய பெருமைகளை படிப்பதுவும், சிவ புண்ணியம் தான். அத்தகைய பாக்கியம் தந்தமைக்கு நன்றி சுந்தர்ஜி .
அருமையான பதிவு,
ஆரம்பமே எக்ஸ்பிரஸ் வேகம் தான்.
சர்வம் சிவார்ப்பணம் என்று சொல்லும் சிவ புண்ணிய தொடர் பாகம் – 1 அருமை.
சிறு சிறு செயல்களில் சிவன் நற்கதியை தருவார் என்று மெய்பிக்கும் தொடர்.
தொடரட்டும் அடுத்தடுத்து மிக விரைவில்.
மிகவும் அருமை. அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்.
மிக மிக அற்புதமான நுட்பமான பதிவு! சிவ புண்ணியம் தொடர் ஆரம்பித்த தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். எப்படி என்றால் கதையில் வரும் அந்தணரைப் போல் நாங்களும் பல பாவம் செய்து இருந்தாலும் அவரைப் போலவே சிறிது புண்ணியம் செய்து இருப்போம். அதனால் தான் இந்த மாதிரியான சிவ புண்ணிய கதைகளைப் படிக்க கொடுத்து வைத்து இருக்கிறோம்!! வாழ்க உங்கள் சிவப்பணி! அவன் அருளால் அவன் தாள் வணங்கி நாங்களும் பின் தொடர்வோம் !! (ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை எல்லோரும் உச்சரிக்கலாமா! தீட்சை பெற வேண்டுமா? )
நம சிவாய மந்திரத்தை யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். சுத்தமாக இருக்கவேண்டும். அவ்வளவு தான். மற்ற நேரங்களில் ‘அம் பகவ’ என்கிற மந்திரத்தை உச்சரிக்கலாம்.
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் . சிவபெருமானின் பெருமைகளை படிக்கும் பாக்கியம் கிடைக்க பெற்றமைக்கு நன்றி . இதை படிக்கும் அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும் . நமசிவாய பதிகம் இந்த தளத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது ( 11 பாடல்கள் ) அதை தினமும் படித்து வருகிறேன் . இமயன் தூதரும் … ( 4ம் பாடல் )
தொடரட்டும் சிவ தொண்டு …….
‘சிவபுண்ணியம்’ என்று நீங்கள அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தையின் வலிமை இப்போது தான் புரிகிறது.
சிலிர்க்க வைக்கும் கதை.
பதிவில் இடம்பெற்றுள்ள சிவாயலா கோபுரம், சிவலிங்கத்தின் ஓவியம் பிரமாதம். சம்பந்தர் படமோ பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அழகு.
சிவபூஜையின் மகத்துவத்தை உண்மையில் யாராலும் விளக்கி கூறமுடியாது. தன்னை பூஜித்த நாரைக்கே அருள்செய்து முக்தியளித்தவன் நம்மை விட்டுவிடுவானா?
அன்பே சிவம்.
பதிவின் அடுத்தடுத்த அத்தியாயங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். எக்ஸ்பிரஸ் வேகம் புல்லட் ட்ரெயின் வேகமாக மாறினாலும் எங்களுக்கு ஓகே தான். 🙂
பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
ஹர ஹர மாகதேவ… படிக்கும் போதே உடம்பிலும் உள்ளத்திலும் ஒரு உணா்ச்சி தென்னாடுடைய சிவனே போற்றி… அண்ணாமலையானே போற்றி போற்றி மிக்க நன்றி