Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

print
“எல்லாமே விதிப்படி தான் நடக்குது… நம்ம ஜாதகத்துல கட்டம் என்ன சொல்லுதோ அதுப்படி தான் எல்லாம் அமையுதுங்குறப்போ என்ன கோவிலுக்கு போய் என்ன சார் பலன்? என்ன பரிகாரம் செஞ்சி என்ன மாறிடப்போது? என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும் சார்” – இது போன்ற புலம்பல்களை நாம் நம்மை சுற்றிலும் அதிகம் கேட்பதுண்டு. ஏன் நாமே கூட சில சமயம் விரக்தியில் அப்படி புலம்புவதுண்டு. என்றாலும் அதில் உள்ள கேள்வி யதார்த்தம் தானே?

முன் ஜென்ம வினை அல்லது கர்மா தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றால் கோவில்கள் எதற்கு, அதில் தெய்வங்கள் எதற்கு அல்லது பரிகாரங்கள் தான் எதற்கு? அபிஷேக ஆராதனைகள் எதற்கு ? அங்கப் பிரதக்ஷிணம் எதற்கு? சும்மா வீட்டில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கலாமே ? பணம் & நேரம் இதுவாவது மிச்சமாகுமே…?

பலரை வாட்டி வரும் கேள்வி இது.

“எல்லாமே தலையில் எழுதியபடி தான் நடக்கும் எனும்போது நான் எதுக்கு கோவிலுக்கு போகணும்? அல்லது நல்லவனா இருக்கணும்? எல்லாத்தையும் தூக்கி போட்டு மிதிச்சிட்டு முன்னுக்கு வர்ற வழியை பார்த்துட்டு போய்கிட்டே இருப்பேனே? எதுக்கு சார் இப்படி தினம் தினம் மனசாட்சிகூட போராடனும். எதிரிகள் கூட போடுற சண்டையை விட இந்த மனசாட்சி கூட போடுற சண்டையில தான் சார் நான் அதிகம் டயர்ட் ஆயிடுறேன்… (நமக்கு நாமே உண்மையா இருக்கிறது தாங்க ரொம்ப கஷ்டம்)” என்கிறீர்களா?

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லே… அவனை நம்பினவங்களை அவன் நிச்சயம் கைவிடமாட்டான்.. நீங்க நம்பிக்கையோட பிரார்த்தனை பண்ணுங்க… !” அப்படி இப்படின்னு நாம சமாதானம் சொன்னாலும், நமக்கும் அந்த சந்தேகம் உள்ளுக்குள்ளே இருந்துகிட்டு தான் இருக்கு… இல்லையா?

விதி என்பது இறைவன் கையில் உள்ள ஒரு கருவி… அது குறித்து நினைத்துக்கொண்டு நம்மை முடக்கிக்கொள்ள நமக்கு அதிகாரம் இல்லை என்பதே என் கருத்து. ஆகையால் தான் விதியை வென்று காட்டிக்கொண்டிருக்கும் பல சாதனையாளர்களை  நம் முன்னே நடமாடவிட்டுருக்கிறான் இறைவன். (உ.ம் : திரு.நந்தகுமார், திரு.இளங்கோ etc )

மற்றவர்கள் எப்படியோ எனக்கு தெரியாது. விதியை எண்ணி நான் என்றைக்குமே செயல்பட்டது கிடையாது. அவன் நமக்கு அளித்திருக்கும் இந்த வாழ்க்கையை அவன் மனம் கோணாதபடி வாழ்ந்து காட்டுவோம். மற்றபடி அவன் பார்த்துக்கொள்வான். ஆண்டவனுக்கு பிடிக்கிற மாதிரி வாழ்ந்துட்டு அதுல ஒரு வேளை நாம தோற்றால் அந்த பழி யாருக்கு? அந்த தோல்வி யாருக்கு? அவனுக்கு தானே? அப்போ நாம எதுக்கு சார் அலட்டிக்கணும்… அதே சமயம் அவன் இந்த முடிவு தான் எடுப்பான் என்று ஆரூடம் சொல்ல நாம் யார்? (எந்த ஜென்மாவுல பண்ண எந்த பாவத்தை நமக்காக அவன் டேலி  பண்றானோ? அது நமக்கு தெரியுமா?) இந்த சிற்றறிவை வைத்துக்கொண்டு அதை நாம் கூறலாமா? மாபெரும் ரிஷிகளாலும் யோகிகளாலும் கூட முடியாத விஷயமாயிற்றே அது.

சரி.. தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன். இவ்வாறாக விதி குறித்தும் ஜாதகம், ஜோதிடம் குறித்தும் நமக்கு ஏற்படும் சந்தேகத்துக்கு மிகத் தெளிவான பதில் ஒன்றை சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் அளித்திருக்கிறார். மிக மிக பெரிய ஒரு விஷயத்தை மிக எளிமையாக சுவாமிஜி விளக்கியிருக்கிறார்.

படியுங்கள். புரியவில்லையா? திரும்ப திரும்ப படியுங்கள். இன்னும் புரியவில்லையா? திரும்ப திரும்ப நிறுத்தி நிதானமாக உள்வாங்கி படியுங்கள்.

படைப்பின் ரகசியம் இது. வாழ்க்கையின் சூட்சுமம் இதுவே.

—————————————————————————————————————-

பிராரப்தத்தை வெல்ல முடியுமா ?

சிஷ்யன்: விதியை வெல்வதற்கு ஒருவனிடம் சக்தியிருக்கிறதா? ‘உபபோகேனைவ சாம்யதி’ (பிராரப்தம் பலனைக் கொடுத்துத்தான் தீரும்) என்றும், (யதபாவீ நதத்பாவீ பாவீ சேன்னததன்யதா) (எது நடைபெற வேண்டாமோ அது நடைபெறாது. எது நடைபெறவேண்டுமோ. அது அப்படித்தான் நடைபெறும்) என்றும் நாம் காண்கிறோம். ஆகவே, எனது சந்தேகத்தை ஆசார்யாள் தெளிவுபடுத்துவார்களா?

ஆசார்யாள்: முதலாவதாக, ‘பிராரப்தம்’ என்றால் என்ன? அது எப்படிச் செயல்களைச் செய்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். முற்பிறவிகளில் செய்த எந்தக் கர்மாக்கள் தற்போது பலனைத் தருகின்றனவோ, அவைதான் இப்பிறவிக்கு நேர்க் காரணமாக இருக்கின்றன. இதையே நாம் பிராரப்தமென்று அழைக்கிறோம். பிராரப்தமானது வலுக்கட்டாயமாக ஒருவனை நல்வழியிலோ, தீயவழியிலோ இழுத்துச் செல்வதில்லை. அவை படிப்படியாக இம்மாதிரி வழிகளில் இழுத்துச் செல்கின்றன. எப்படியென்றால் அவை, மனத்தில் விருப்பு, வெறுப்பு என்ற வாஸனைகளைக் கிளப்பி விடுகின்றன. அதனால்தான் கிருஷ்ண பகவான்,

(ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர் ஞானவானபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி)

என்று கூறியுள்ளார்.

இச்சுலோகத்தின் வியாக்யானத்தின் போது சங்கரர் தானே ஓர் எதிர்க் கேள்வியை எழுப்புகிறார். அது என்னவென்றால் “இதுபோல் ஒவ்வொருவனும் தன் ஸ்வபாவம் போல் செயல்களைச் செய்வானென்றால் சாஸ்திரங்களுக்கே இடமில்லை. இதற்குக் காரணம் ‘நடக்க வேண்டியதே நடக்கும்’ என்று கூறுவதேயாகும். இப்படியிருக்கும்போது சாஸ்திரங்களில், ‘நல்வழியில் நட’ என்று கூறுவதில் என்ன பிரயோஜனம்?” இம்மாதிரி ஓர் எதிர்க் கேள்வியொன்றை அவரே எழுப்பி, இது தவறு என்று கூறி, அடுத்து வரும் சுலோகத்தையே உதாரணமாகக் காட்டுகிறார். அங்கு,

(இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ன வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ)

என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து விருப்பு வெறுப்புகளை வென்றால் நாம் அவற்றின் வசம் விழமாட்டோம் என்று தெரிகிறது. ஆகவே, சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு விருப்பையும் வெறுப்பையும் நாம் விட்டுவிட்டால், எப்போதும் நல்வழியிலேயே செல்வோம்.

(ஆதிசங்கரர் ஒரு விஷயம் சொன்னா அதுக்கு அப்பீல் இருக்கு முடியுமா? எவ்ளோ பெரிய அவதார புருஷர் அவர்!)

சிஷ்யன் : ‘பிராரப்தத்தை வெல்ல முடியுமா’?

ஆசார்யாள்: ‘நிச்சயமாக வெல்லலாம்’ என்பதே பதிலாகும். பிராரப்தத்தை வெல்ல முடியாது என்று சொன்னால் மனிதனை அவன் செய்த செயல்களுக்குப் பொறுப்பாளி என்று கூற முடியாது. ஏனென்றால், அவன் அப்படித்தான் செய்ய வேண்டியதாக இருந்தது என்று கூறிவிடலாம்.

முன்பு செய்யப்பட்ட எக்கர்மா இப்போது பலனளிக்குமோ அதுவே பிராரப்தம் என்று நான் கூறினேன். அது முற்பிறவியில் செய்த நம் முயற்சிகளினால் ஏற்பட்ட கர்மா. ஆதலால் முயற்சியினும் மேலான அதிக பலமுள்ளதாக பிராரப்தம் என்றுமே இருக்க முடியாது. ஒருவன் முன் செய்த செயல்களின் வழியை இப்பிறவியில் முயற்சியால் மாற்றலாம். ஆனால் முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மாவின் வாஸனை மிக அதிகமாயிருந்தால் அதை மாற்ற நாம் மிகவும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம். இது முக்கால்வாசி விஷயங்களிலும் உண்மை. இதற்கு உதாரணம் தூணில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பசுமாடே ஆகும். கட்டப்பட்டிருக்கும் கயிறு எவ்வளவு நீளமோ, அது வரை பசுமாடு சுதந்திரமாகச் சுற்றலாம். ஆனால் அதைத் தாண்டிச் செல்ல முடியாது. அதேபோல் நாட்டின் விதியும், மற்றவர்களின் விதியும், நம் செயல்களும் நமது சுதந்திரத்திற்கு ஓர் எல்லையை வைக்கின்றன.

ஒரு மனிதன் ஓரிடம் செல்வதற்காக ஒரு ரயில் வண்டியில் ஏறிச் செல்லலாம். ஆனால், அவ்வண்டி விபத்துக்கு ஆளாகலாம். அதேபோல் ஒருவன் சில சமயங்களில் தேர்வில் நன்கு எழுதியிருந்தாலும் கிடைக்க வேண்டிய மதிப்பெண் கிடைக்காமல் இருக்கலாம். இதையெல்லாம் கண்டு வருத்தத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது.

ஆன்மிக வாழ்வில் ஏறக்குறைய எதனையும் முயற்சியால் அடைந்து கொள்ளலாம். பிராரப்தத்தின் வசப்படி ஒருவன் க்ரஹஸ்தனாக இருக்க வேண்டும் என்றிருக்கலாம். ஆனால், அவன் குருவின் அனுக்ரஹத்தாலும், முயற்சியாலும் பிரஹ்மசர்ய வாழ்க்கையையே கடைப்பிடித்து மேலும் ஸந்யாஸ வாழ்வும் பெறலாம். முன் செய்த செயல்களின் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டுமென்றாலும் பிராரப்தத்தின் சக்தியை இறைவனருளால் மிகவும் குறைத்து விடலாம். ஜபம், ஹோமம், தியானம், பூஜை, நல்லவர்களின் சேர்க்கை போன்றவற்றால் பிராரப்தத்தின் கெட்ட பலனை அதிக அளவிற்குக் குறைத்துவிடலாம்.

சிஷ்யன் : ஒருவனின் ஜாதகத்தில் ஒருவன் 80 வயது இருப்பான் என்றிருந்தால் அவன் அதற்கு முன் இறக்கமாட்டான் என்று அர்த்தமா? அதேபோல் இளமையிலேயே ஒருவன் இறக்க வேண்டுமென்று இருந்தால், அவன் அவ்வயதுக்கு மேல் உயிர் வாழ மாட்டானா?

ஆசார்யாள்: இரண்டு கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்பதே பதில்.

சிஷ்யன் : ஜாதகத்தைத் தவறாகக் குறித்ததாலோ அல்லது ஒழுங்காகப் படிக்காத தாலோதான் இவ்வாறு ஏற்படுமா?

ஆசார்யாள்: இல்லையே.

சிஷ்யன் : அப்படியென்றால் ‘ஜாதகத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு கூறப்பட்டதெல்லாம் பிரயோஜனமில்லை. மேலும் கைரேகையைப் படிப்பதிலும் அர்த்தமில்லை. ஆகவே ஜோதிஷ சாஸ்திரத்திற்கே பிரயோஜனமில்லை“ என்பதா ஆசார்யாளின் கருத்து?

ஆசார்யாள்: இல்லையே.

சிஷ்யன் : ஆசார்யாள் சற்று விளக்கம் கூறுவார்களா?

ஆசார்யாள்: ஜாதகம் ஒருவன் முற்பிறவியில் செய்த கர்மாவின் பலனைக் காட்டுகிறது. ஆதலால் அதன்படி சொல்லப்பட்ட பலன், முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மாவினால் வரக்கூடிய பலன். இந்தப் பிறவியில் நம் சுதந்திரச் செயல்களினால் அதை நிச்சயமாக மாற்றிவிடலாம். மார்க்கண்டேயனைப் போல் நாம் இறைவனின் அருளைப் பெற்றால் நாம் வாழ வேண்டிய காலத்திற்கும் மேல் அதிகமாக வாழலாம். அதேபோல் கெட்ட வழிகளில் சென்று உடல்நலத்திற்குக் கெடுதல் செய்து கொண்டால் வாழவேண்டிய காலங்கூட வாழாமல் மரணமடையலாம். இதெல்லாம், ஜோதிடப் புத்தகத்தில் இல்லாமல் நாமாகவே பார்க்கலாம்.

ஆகவே, முயற்சியினால் முடிந்த அளவிற்கு மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஜோஸ்யர்களும் ‘இம்மாதிரி செய்தால் அக்கர்மாவின் பலன் குறையும்’ என்று கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஜாதகத்தின்படியேதான் நடக்க வேண்டுமென்றால், அம்மாதிரி பிராயச்சித்தங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஆதலால் முயற்சியால் விதியை வெல்லலாமென்பது தீர்மானம்தான். ஜாதகத்தைக் கண்டு ஒருவனும் பயப்பட வேண்டிய தேவையில்லை. அது வரப்போவதற்கு முன் அறிவிப்பாக இருக்கும். ஆனால் அதையே நாம் மாற்றிவிடலாம்.

—————————————————————————————————————-

இதை படிச்சதும் வயிற்றிலே பால் வார்த்தது போல இருக்குமே?

எவ்வளவு பெரிய விஷயத்தை சுவாமிகள் எத்தனை அற்புதமா எளிமையா சொல்லியிருக்கிறார் பாருங்க.

ஒ.கே… நமது முன் ஜென்ம அல்லது முன்பு செய்த வினைகளால் ஏற்படும் கர்மாவை மாத்தலாம்னு புரிஞ்சிடுச்சு. அதை எப்படி மாற்றுவது? அதற்கு வழி ஏதேனும் உண்டா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

ஒரு வழியல்ல… பல வழிகள் இருக்கின்றன….!

நல்லதை தெரிஞ்சிக்கணும் என்கிற ஆர்வம் மற்றும் உங்களோட நல்வினை தான் இங்கே உங்களை கொண்டு வந்து விட்டு இதை படிக்க வெச்சிருக்கணும்! நல்லதே நடக்கும்!!

அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்….

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
For Part 1 please check:
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
http://rightmantra.com/?p=2299

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

13 thoughts on “நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

  1. அருமையான பதிவு சுந்தர் ஜி !!!
    இதை படித்தவுடன் மனதிற்கு ஒரு தெளிவும் நிறைவும் கிடைத்ததை உணர்கிறேன் !!!
    வாழ்வியல் கருத்துக்களை மிக எளிமையாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம் மென் மேலும் வெற்றி அடைய வாழ்த்துவதோடு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை நிற்க வேண்டுகிறேன் !!!

  2. மிகவும் அற்புதமான பதிவு…மிக்க நன்றி சுந்தர்.

  3. என்னுள் இருந்த சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது போல் உணர்கிறேன்.. எல்லாவற்றுக்கும் விதி என்றும், தலையெழுத்து என்றும் சொல்லிக்கொண்டு, தன வேலைகளை ஒழுங்காக செய்யாமல் இருப்பது மாபாவம். அந்த மாதிரி இருப்பவர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாய்த் தான் இருப்பார்கள்…! எந்த சாதனையையும் செய்ய முடியாது அவர்களால்…!

    எந்த சோதனை வந்தாலும், அதனை ஆண்டவன் காலடியில் சமர்ப்பித்து விட்டு வேலைகளில் கவனம் செலுத்தினால், அந்த ஆண்டவனே கர்மா, விதி, தலையெழுத்து போன்றவற்றில் இருந்து தப்பிக்க வழி காட்டுவான் என்பது என் தாழ்மையான கருத்து…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  4. அன்புமிக்க சுந்தர்,

    தங்களது 3வது பகுதியை எதிர்பார்க்கிறேன்.

    அருமையான தளம் அமைத்து உங்களது சேவையை மக்களுக்கு தருவதற்கு எனது வாழ்த்துக்கள்.

    மகேஷ்.

  5. அற்புத பதிவு.
    தொடர்ச்சியை எதிர்பார்கிறோம் …

    உங்கள் சேவை தொடர, எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  6. நன்றி. 3 ஆம் பகுதியை எதிர்பார்கிறேன்.

  7. டியர் சுந்தர்ஜி

    மிகவும் அருமையான நீண்ட பதிவு

    நன்றி
    உமா

  8. சார்,

    மூணாவது பதிவு இந்த டோபிச்க பத்தி எங்கே பாக்கிறது சார்

    ஸ்ரீகாந்த்

  9. அருமையான மனித வாழ்விற்கு அத்தியாவசியமான பதிவு
    மூன்றாவது பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்
    பிரியதர்சினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *