பல வாசகர்கள் தியானம் குறித்த பதிவை ஏன் வெளியிடவில்லை என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார்கள். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தொடர்பு கொண்ட சில வாசகர்கள் தியானம் குறித்த நமது அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்கள்.
நாம் நினைத்ததைவிட அதிக எதிர்பார்ப்பு தியானம் பற்றிய பதிவுக்கு ஏற்பட்டுவிட்டதால் நமது பொறுப்பு அதிகரித்துவிட்டது. (சரி… சரி… விஷயத்துக்கு வருகிறோம்…)
தியானம் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய சமுத்திரம். ஒரு பல்கலைக்கழகம். தியானத்தில் பல படிகள் இருக்கின்றன. பொருளாதார பிரச்னை, மன அமைதியின்மை, நோய், உள்ளிட்ட பல்வேறு துன்பங்களில் சிக்கொண்டு வாழும் வழி தெரியாமல் அல்லாடுபவர்களை தியானம் என்னும் அந்த மகத்தான பிரம்மாண்ட பல்கலைக்கழகத்தின் வாசலில் கொண்டு போய் விடுவது நம் கடமை. ஆனால் உள்ளே சென்று ஆர்வமுடன் படித்து பட்டப்படிப்பு வரை முன்னேறுவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. (உங்களால் முடியும். நீங்கள் நினைப்பது அத்தனையையும் சாதிக்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது என்று நாம் உறுதியாக சொல்வோம்!)
தியானம் தான் செய்கிறோமே… இனி எல்லாம் தானே நடந்துவிடும் என்கிற மனப்பான்மையும் கூடாது. தியானம் என்பது உங்கள் வெற்றிக்கான பாதை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நீங்கள் தான் அதில் நடந்து செல்லவேண்டும். உங்கள் லட்சியங்களுக்காக நீங்கள் வழக்கமாக செய்யும் முயற்சி, உழைப்பு இவை அத்தனையும் இருக்கட்டும். அவை விழலுக்கிறைத்த நீராக போகாமல் பார்த்துக்கொள்வது தியானத்தின் கைகளில் இருக்கிறது. எனவே தான் தியானம் செய்பவர்களுக்கு அனைத்தும் கைகூடுகிறது.
தியானத்தை முறைப்படி கற்று தருவதற்கென்று பல மையங்கள் இருக்கின்றன. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இருப்பவர்கள் அங்கு சென்று கற்றுக்கொள்ளவும். மற்றவர்கள் இந்த பதிவின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ள எளிய முறைகளை பின்பற்றி தியானத்தை துவக்கிவிடுங்கள். (Video also attached.)
அரசமரத்தை சுற்றிவந்து உடனே அடிவயிற்றை தடவி பார்த்த கதையாக ஓரிரு நாட்கள் தியானம் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தியானத்தின் பலன்கள் தெரிய குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். சிலருக்கு வருடம் கூட ஆகலாம். ஆனால் உறுதியான பலன் நிச்சயம் உண்டு. அதை நீங்களே கண்கூடாக உணர்வீர்கள்.
வரும் மார்ச் 12 வளர்பிறை முஹூர்த்த நாள். புதிதாக தியானத்தை துவக்க விரும்பும் வாசகர்கள் அனைவரும் அன்றே தியானத்தை துவக்குங்கள். உங்கள் நண்பர்களிடமும் இது பற்றி கூறி அவர்களையும் அன்று துவக்கச் சொல்லுங்கள். மார்ச் 12 முதல் தியானத்தை துவக்க இப்போதிலிருந்தே உங்கள் மனநிலையை தயார்படுத்தி வாருங்கள்.
எந்த சூழ்நிலையிலும் தியானத்தை நிறுத்தாதீர்கள். தினசரி 10 – 15 நிமிடங்கள் போதும். சாப்பிடுவது, குளிப்பது போன்று நமது அன்றாட கடமைகளில் ஒன்றாக தியானம் ஆகிவிடவேண்டும். 5 நிமிடத்தில் துவங்கி 10, 15, 30 நிமிடம் என்று உங்களால் எவ்வளவு நேரம் தியானத்திற்கு ஒதுக்க நேரம் ஒதுக்குங்கள். கூடுமானவரை ஒரே நேரத்தில் தியானம் செய்வது சிறந்தது. ஆனால் ஒரே நேரம் ஒதுக்க முடியாதவர்கள், போகப் போக அதாவது ஓரிரு வாரங்கள் கழித்து அதற்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கிவிடுங்கள்.
நம்பிக்கையுடன் தியானத்தை துவக்குங்கள். உங்கள் வாழ்க்கையின் போக்கே மாறி நீங்கள் நினைத்தது யாவும் நடந்து உங்கள் தேஜஸும் அதிகரிக்கும்.
ஏன் இதற்கு ஒரு நாள் ஃபிக்ஸ் செய்கிறோம் என்றால், தியானத்தை எப்போது ஆரம்பிப்பது என்று சிந்தித்து சிந்தித்தே அதை செய்யாமல் விட்டுவிட்டவர்களின் வசதிக்காகவே! மேலும் ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்கிற ஊசலாட்டத்தில் இருந்துகொண்டு அதை தொடர்ந்து ஒத்திப்போடும் வழக்கம் உடையவர்களுக்கு ஒரு டார்கெட் பிக்ஸ் செய்யும்போது அவர்களால் சுலபமாக ஒரு வரையறைக்குள் வரமுடியும். மேலும் மனோரீதியாக தங்களை அவர்கள் தயார்படுத்திக்கொள்ள முடியும்.
அப்புறம் இன்னொரு விஷயம்… மனம் லயித்து எந்த பணியை செய்தாலும் அது தியானம் போலத் தான்.
நம்மை பொறுத்தவரை நமக்கு தினசரி இரண்டு மணிநேரங்களுக்கு மேல் தியானம் செய்த பலன் கிடைத்துவிடுகிறது. எப்படி தெரியுமா? பதிவு எழுத இரவிலோ அதிகாலையிலோ நாம் உட்காரும்போது.
நமது தளத்தை ரெகுலராக பார்த்து வருபவர்களுக்கு தெரியும்… ஒவ்வொரு பதிவையும் நாம் ஒரு தவம் போல கருதித் தான் அளித்து வருகிறோம். ஏனோதானோ என்று எந்த பதிவையும் நாம் எழுதுவது கிடையாது. ஒவ்வொரு பதிவையும் அதற்குரிய SUPPORTIVE தகவல்கள், புகைப்படங்கள், என்று மிக நேர்த்தியாக (ஏனுங்க… நான் சொல்றது சரிதானுங்களா?) நாம் அளிக்கக் எடுத்துக்கொள்ளும் முயற்சி கிட்டத்தட்ட ஒரு தவம் தான்.
நாம் வீட்டில் பதிவை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது, அம்மா சில சமயம் நமக்கருகில் ஸ்டூலில் காஃபியை வைத்துவிட்டு போய்விடுவார். பதிவை தயாரிக்கும் மும்முரத்தில் அதை கவனிக்காமல் நாம் எழுத்தில் மூழ்கியிருப்போம். அனைத்தும் முடித்துவிட்டு “அடேடே… காஃபியை மறந்துட்டோமே” என்று காபியை எடுத்தால் அது ஐஸ் காபியாகியிருக்கும். நாம் தயங்கி தயங்கி “அம்மா. காபி ஆறிப்போச்சு…. கொஞ்சம் சூடு பண்ணிக்கொடும்மா” என்று கேட்டால்… “உனக்கு இதே வேலையா போச்சு. காஃபியை நான் வெச்சிட்டு வந்து 2 மணிநேரம் ஆகுது!” என்பார்கள்.
இதை எதற்கு இங்கு குறிப்பிடுகிறோம் என்றால் எழுத்தில் நாம் மூழ்கியிருக்கும்போது வேறு எதுவும் தோன்றாது. நம் முழு கவனமும் அதில் தான் இருக்கும்.
வீட்டில் அமர்ந்து பதிவை தயார் செய்து DRAFT MODE இணையத்தில் அதை SAVE செய்துவிட்டு அலுவலகம் சென்றவுடன் தேநீர் இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளைகளில் மொபைல் மூலம் அதை பப்ளிஷ் செய்துவிடுவோம்.
நீங்கள் அன்றாடம் வீட்டில் செய்யக் கூடிய சிறு சிறு வேலையையும் மனம் லயித்து செய்தால்… உதாரணத்திற்கு வீடு பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது, காய்கறி நறுக்குவது, துணி துவைப்பது போன்ற சின்னஞ்சிறு வீட்டுவேலைகளை மனம் ஒன்றிச் செய்யும்போது அவை தியானமாக மாறிவிடும்.
பகவான் ரமணர் அடிக்கடி ஆசிரம சமையல் கூடத்துக்கு வந்து அவரே காய்கறிகள் நறுக்கித் தருவது வழக்கம். அப்பளப் பாட்டு என்ற பெயரில் ஆத்ம விசாரத்தை செய்யுள்களாக இயற்றியுள்ளார் பகவான் ரமணர். இதுதான் சூட்சுமம். நாம் செய்கிற காரியங்களை எல்லாம் இறைவனுக்கு நிவேதனமாகப் படைத்து விட வேண்டும். இதுவே தியானம்.
கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் பொங்கல் கூடுதல் ருசியாக இருக்கும். அதே பொங்கலை வீட்டில் செய்யும்போது அவ்வளவு ருசிக்காது. இதேபோல் வாழ்க்கை ருசிக்க வேண்டுமெனில் அதை அப்படியே இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும். இதற்கு தியானம் துணை செய்யும்.
மனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பலரும் எடுத்தவுடன் சொல்லும் ஒரு வைத்தியம் என்னவெனில், “தியானம்”. மேலைநாடுகளில் தியானம் செய்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
மகாகவி பாரதி சொல்வதை கவனியுங்கள்:
“தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்பியபடியே ஆகிறான். ஒருவன் மனதில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் தோற்றங்கள் எல்லாம் தியானமாக மாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்ற கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தை தியானம் என்று கூறுகிறோம்.
தெய்வ பக்தி உள்ளவர்கள் ஆயினும் நாஸ்திகர்கள் ஆயினும் எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும் ஒரு மார்க்கத்தையும் சேராதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தியானம் அவசியம். பாரத தேசத்திற்கு தற்காலத்தில் நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. சோற்றைவிட்டாலும் விடு. தியானத்தை விடாதே. “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பது குறள்.
பரிபூர்ண விருப்பத்துடன் தியானம் செய். ஊற்றிலிருந்து நீர் பெருகுவதுபோல் உனக்குள்ளிருந்து தெளிந்த அறிவும் தீரத்தன்மையும் சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். இது சத்தியம். அனுபவத்திலே பார்…’
மனிதவாழ்வில் மகத்தான இடத்தை பிடித்துள்ள தியானத்தை, மாணவர்கள் சிறந்த முறையில் கைகொண்டால் வெற்றி அவர்களுக்கே.
தியானத்தின் நன்மை பல மாணவர்களுக்கு தெரிந்திருந்தாலும், தியானத்தை எப்படி செய்வது என்று தெரியாததாலும், அதை ஒரு மிகப்பெரிய கடினமான விஷயமாக நினைப்பதாலும், மாணவர்கள் தியானம் பற்றி நினைத்தாலே சோர்ந்து விடுகிறார்கள். ஆனால் அவ்வாறு நினைத்து பயப்பட தேவையில்லை.
தியானம் என்பதன் ஆரம்ப பயிற்சியாக மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
உங்களின் மூச்சை நீங்கள் கட்டுப்படுத்திப் பழக வேண்டும். இந்த பயிற்சியை நீங்கள் ஓய்வு கிடைக்கும் எந்த நேரத்திலும் செய்யலாம். இரவு தூங்கும் முன்புகூட செய்யலாம். அதேசமயம், மூச்சுப் பயிற்சியை, சற்று குளிர்ச்சியான, வெளிச்சம் குறைந்த, இரைச்சலற்ற இடத்தில் செய்வது சிறந்தது. இந்த பயிற்சியில், உங்களின் கவனம் முழுவதும் மூச்சில்தான் இருக்க வேண்டும். மூச்சு உள்ளே செல்வதையும், வெளியேறுவதையும் கவனிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் உங்களின் மனம் அங்கங்கே அலை பாய்ந்தாலும், இறுதியில் அது மூச்சை நோக்கி இழுத்துவரப்பட்டு, அதன்மீதே நிலைநிறுத்தப்படும். கட்டுக்கடங்காமல் ஓடும் எண்ணங்களை கடினப்பட்டு அடக்காமல், ஆராம்பத்தில் அதன்போக்கிலேயே விட்டுவிடவும். பின்னர் அது தானாகவே சரியாகிவிடும். உங்களின் கவனம் எல்லாம் மூச்சிலேயே இருக்க வேண்டும்.
இந்த பயிற்சி ஆரம்பத்தில் உங்களுக்கு கடினமாக இருந்தாலும், போகப்போக எளிதாகிவிடும். பொதுவாக, அதிகாலை மற்றும் தூங்குவதற்கு முந்தைய நேரங்கள் தியானம் செய்வதற்கு சிறந்த பொழுதுகள். மேலும், படிப்பதற்கு முன்பும், உண்பதற்கு முன்பும் இதை செய்யலாம். இதன்மூலன் உங்களின் மனம் மட்டுமில்லாமல், உடலும் ரிலாக்சாக இருக்கும்.
மாணவர்களை பொருத்தவரை ஒரு சூப்பர் மாணவனாக அவர்களை உருவாக்குவதில், தியானமே சிறந்த குரு என்பதை மறந்துவிட வேண்டாம்.
தியானம் செய்வது எப்படி ?
பலர் மனதை வெறுமையாக்கிக்கொள்வதை தியானம் என்று நினைக்கிறார்கள். அப்படி அல்ல. ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை, உருவத்தை, கடவுளே குறித்து நமது சிந்தினையை செலுத்துவதே தியானம்.
1. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும். (ஒரு வேளை கூட ஓ.கே. ஆனால் பிற்பாடு இரு வேளைகளுக்கு வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்!)
2. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.
3. வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.
6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.
7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் ‘ராம,ராம’ என்று தொடர்ந்து ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும்.
10. இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.
11. முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்கவும்.
(தயாரிப்பில் உதவி : தினமலர்/கல்விமலர், தினகரன்.காம், தினமணி.காம்)
உங்கள் சௌகரியத்திற்காக தியானம் செய்வது எப்படி என்கிற வேதாத்திரி மகரிஷியின் எளிய விளக்கத்தின் தமிழ் வீடியோவை இணைத்திருக்கிறோம்.
தியானம் செய்வது எப்படி? – வேதாத்திரி மகரிஷி – VIDEO
[END]
மிக அருமையான பதிவு .சார்
excellent
தியானம் – 2 விரைவில் அளித்ததற்கு மிகவும் நன்றி.
படிக்க படிக்க மனம் லயிக்கும் நம் தொடர்களில் தியானம் தொடர் முதல் இடம் பிடிக்கும். ஆகர்ஷன சக்தி இருந்தது.
முதன்முதலில் தியானம் செய்பவர்களுக்காக முறையாக எதிரில் இருந்து சொல்லிகொடுத்த மாதிரி இருந்தது.
தியானம் கைவரபெற்றால் அவனுக்கு எல்லாமும் சித்திக்கும்
நம் வாசகர்கள் அனைவருக்கும் இது ஒரு வரபிரசாதம்.
சுந்தர் அவர்களுக்கு மிகவும் அருமையான பதிவு.தியானத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.மார்ச் 12 முதல் ஆரம்பித்து விட வேண்டியதுதான்.
டியர் சுந்தர்ஜி
தியானத்தை பற்றிய பதிவு மிக அருமை. நீங்கள் எவ்வளவு மனம் லயித்து இந்த பதிவை எழுதி இருக்கிறீர்கள் என்று இந்த பதிவை படிக்கும் பொழுதே புரிகிறது
///அப்புறம் இன்னொரு விஷயம்… மனம் லயித்து எந்த பணியை செய்தாலும் அது தியானம் போலத் தான். //
நாங்களும் உங்கள் ஒவ்வொரு article யும் மனம் ஒன்றி படிப்பதே தியானம் செய்வது போல் தான். உங்கள் ஒவ்வொரு உரைநடையும் எங்களை மனம் வேறு எங்கும் செல்லாமல் கட்டிபோட்டு விடுகிறது.
எங்கள் பிளாட் entrance லேயே யோகா சென்டர் இருக்கிறது. செல்வதற்கு நேரம் இல்லை.
//Why are you knocking at the every other door. Go knock the door of your own ஹார்ட் //
நீங்கள் சொன்னபடி march 12 ல் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம்.
நன்றி
உமா
சுந்தர்ஜி
அனைவருக்கும் பயனுள்ள பதிவு. நாங்கள் எதிர்பார்த்த எளிமையான பயனுள்ள தியான முறை இது, இதன் வெற்றி இதை தொடர்ந்து செய்வதில் தான் இருக்கிறது என்பது 100% உண்மை. மிக்க நன்றி. எங்கள் வாழ்க்கையோடு நம் தளம்+ மஹா பெரியவா பக்க பலமாக தொடர்ந்து வருவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நன்றி
மிகவும் நல்ல முயற்சி. எனினும் இது போன்ற தியானங்கள் ஒரு குருவின் தீட்சை பெற்று செய்வது இன்னும் சிறந்தது. கீழே உள்ள வீடியோவை யும் பார்க்கவும் (Isha Kriya). எது உங்களுக்கு எளிமையாக இருக்கிறதோ அதனை செய்யவும்.
http://www.youtube.com/watch?v=lPt9OgXE9Is
சுந்தர் சார் மாலை வணக்கம் …..மிக அருமையான பயனுள்ள பதிவு …. நீங்கள் சொன்னபடி மார்ச் 12 முதல் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம்…. தனலட்சுமி ……
நல்ல பயனுள்ள பதிவு..
very nice article and usefull. we wil try to follow this in our life
நான் வெகு நாட்களாக தேடிய பதிவு இப்போதுதான் கிடைத்தது. மிக மிக சூப்பர். தங்களுக்கு மிக்க நன்றி.
டியர் சுந்தர்ஜி
அருமை ; நன்றி எப்படி சொல்வதன்றே தரியவில்லை
மிக அருமை சற்று விளக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும்…
என் குழப்பம் தீர்த்தமைக்கு நன்றி
Comment:very nice tips thanks sir.
.