சைவ சமயக் குரவர்கள் நால்வரையும் கொண்டு இறைவன் பலமுறை இதை உணர்த்தியிருக்கிறான். திருநாவுக்கரசரையும் திருஞானசம்பந்தப் பெருமானையும் கொண்டு அப்படி அவன் நிகழ்த்திய ஒரு (நிஜமாகவே நடந்த) திருவிளையாடலை பார்ப்போம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையில் வீழிநாதர் கோவில் உள்ளது. சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர். சீர்காழி – மயிலாடுதுறை சாலையே ஒரு சோலைவனம் தான். பார்க்கும் இடம் எங்கும் பசுமையும், பாசன வாய்க்கால்களும், வயல்வெளிகளும் என ஒரே பசுமை தான். திருவீழிமிழலையும் அப்படியே.
மகா விஷ்ணு இங்குள்ள வீழிநாதரை 1000 தாமரை மலர்களை கொண்டு வழிபட முயற்சித்த போது ஒரு மலர் குறைய தனது தாமரை போன்ற தனது கண்ணை மலராக பாவித்து அதை பிடுங்கி எடுத்து சிவனை வழிபட்டார். மகா விஷ்ணுவின் பக்தியை கண்டு சிலிர்த்த சிவபெருமான் அவர் முன் தோன்றி சக்கராயுதத்தை பரிசாக வழங்கினார். இங்கு இறைவன் பெயர் நேத்ரார்ப்பணேஸ்வரர். இறைவன் மாப்பிள்ளை சுவாமியாக கார்த்தியாயினியை மணந்த தலமாகவும் இது விளங்குகிறது. இது ஒரு தலைசிறந்த திருமண பரிகாரத் தலம்!
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட “வவ்வால் நந்தி மண்டபம்’ உள்ளது.
“தொண்டு செய்யுங்கள். வசதி வாய்ப்புக்களை நான் ஏற்படுத்தி தருகிறேன்” என்று உலகிற்கு இறைவன் உணர்த்திய தலம் இது.
தானத்தில் சிறந்தது அன்னதானம். மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத் தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர். சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும் பட்டினத்தாரே, ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்…’ எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை?
இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில் அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது. அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர் பசியைப் போக்குவதுமே ஆன்மிகம்.
நீங்கள் எதை கொடுத்தாலும் “போதாது… போதாது… இன்னும் வேண்டும்… இன்னும் வேண்டும்” என்று சொல்லும் மனிதன், அன்னமிடும்போது மட்டுமே ஒரு கட்டத்தில் வயிறு நிறைந்து “போதும்!” என்பான். எனவே அன்னதானத்திற்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு.
ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அஞ்ஞான இருளை போக்கி, மக்களிடம் ஞான மார்க்கத்தை புகுத்திக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும், திருவீழிமிழலை என்ற இந்த திருத்தலத்தில் தங்கி, நேத்ரார்ப்பணேஸ்வரர் கோவிலில், சிவபெருமானை, வழிபட்டுக் கொண்டிருந்த வேளை அந்த ஊரில் மழையில்லாததாலும், நதிகளில் நீர்ப்பெருக்கு குறைந்ததாலும், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் மிகுந்த பசித் துன்பம் அடைந்தனர்.
மக்கள் படும் துயர் இறைவனின் மெய்யன்பர்களுக்கு பொறுக்குமா? அவர்கள் சிவனிடம் மனமுருகி வேண்ட, அவர்கள் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நீங்கள் இந்தக் காலபேதத்தால் மனத்துயர் அடைய வேண்டாம். உங்களுக்காக தினமும் படிக்காசு தருகிறோம். அவற்றை வைத்து மக்களின் பசித் துன்பத்தை தீருங்கள்…’என்று கூறி, கோவிலின் கிழக்கு வாசல் படியிலும், மேற்கு வாசல் படியிலும், தினந்தோறும் படிக்காசு – பொற்காசு வைத்தருளினார்.
அந்த இரு காசுகளையும், திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் எடுத்து, அதன் மூலம் பண்டங்களை வாங்கி, உணவு தயாரித்து, ‘அடியார்கள் எல்லாரும் அமுது உண்ண வாருங்கள்…’ என, பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டனர்.
அப்போது அப்பருக்கு நல்ல காசும், தனக்கு சற்று மாற்று குறைந்த காசும் இறைவன் தந்திருப்பதை கண்டு வருத்தமுற்ற ஆளுடையப்பிள்ளை, அப்பர் பெருமான் தெய்வீகப் பணியுடன் மக்கட் பணி என்றழைக்கப்படும் உழவாரப்பணியும் செய்து வருவதால் அவருக்கு இறைவன் மாற்று குறையாத காசை வழங்கியிருக்கிறார் என்று தெரிந்துகொள்கிறார். மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். “இறைவா அடியேன் என்ன தவறு செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் மாற்று குறைந்த காசு?” என்று “வாசி தீரவே காசு நல்குவீர்…” என்று ஒரு பதிகத்தை பாடினார். தன் குழந்தையின் உள்ளக் குமுறலை கண்டு மனமிரங்கிய இறைவன், சம்பந்தருக்கும் நல்ல காசை தந்தருளினார்.
(இறைவனைப் பொறுத்தவரை அப்பர், சம்பந்தர் இருவர் மீதும் சமமான அன்பை தான் வைத்திருந்தாலும், ஞானக்குழந்தை சம்பந்தரின் பாடலை கேட்கவும், நமக்கு இப்படி ஒரு பதிகத்தை அருளவுமே இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் அது! நினைத்து பாருங்கள்… இல்லையென்றால் நமது பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவும் இப்படி ஒரு அருமையான பதிகம் நமக்கு கிடைத்திருக்குமா?)
இறைவன் படிக்காசு அருளிய இந்தச் செயல், பஞ்சம் தீரும் வரை தொடர்ந்தது. பல ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டன, கண்மாய்கள் செப்பனிடப்பட்டன, கேணிகள் அமைக்கப்பட்டன, உரிய காலத்தில் மழை பொழிந்தவுடன் நீர் ஆதாரங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பஞ்சம் விலகியது.
சம்பந்தரும், அப்பரும் படிக்காசுப் பெற்று அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை என வழங்கப்படுகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் – செட்டியப்பர், அம்பாள் – படியளந்த நாயகி. உற்சவமூர்த்தி தராசு பிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்தக் கையோடும் காட்சித் தருகின்றனர். தல விருக்ஷம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொன்றாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து இருக்கவுள்ளது பலாமரமாகும்.
‘அன்னத்தை இகழாதே; அன்னத்தை உற்பத்தி செய்…’ என மறைகளும் முழங்குகின்றன. அதனால், எந்த விதத்திலும், ஒரு பிடி அன்னமாக இருந்தாலும், ஒரு பருக்கை அன்னமாக இருந்தாலும் அன்னத்தை வீணாக்கக் கூடாது.
தானத்தில் எளியது, எவரும் செய்யக்கூடியது, என்றும் செய்யக்கூடியது, எங்கும் செய்யக்கூடியது அன்னதானம். இதிகாசங்கள், புராணங்கள், மறைகள், வழிபாட்டு முறைகள் என, எல்லாவற்றிலும் புகழப்படும் அன்னதானத்தை, முடிந்த வரை செய்வோம்!
(சென்ற வருடம் ஒரு முறை திருவாசக சித்தர் தாமோதரன் ஐயா அவர்களின் திருவாசக முற்றோதலை கேட்க சீர்காழி சென்றிருந்தபோது, இந்த தலத்தையும் தரிசித்தோம். அப்போது நாம் எடுத்த புகைப்படங்கள் தான் இவை. சைவ சமயக் குரவர்கள் நால்வரும் சம்பந்தப்பட்ட இறைவனின் பல அற்புதங்கள் உண்மையிலேயே அந்தந்த காலகட்டங்களில் நிகழ்ந்தவையே தவிர கற்பனையாக புனையப்பட்டவை அல்ல என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படிக்காசு பீடத்தின் புகைப்படங்கள் மூலம் அதை உணர்ந்துகொள்ளலாம்.)
======================================================================
நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வறுமை என்கிற ஆற்றாமையா?
உங்கள் உறவினர்கள் எல்லாரும் வசதி வாய்ப்புடன் இருக்க, நீங்கள் மட்டும் வறுமையில் உழல்கிறீர்களா? உங்களுக்கு தான் இது.
வளமான வாழ்க்கை வாழத்தான் எல்லாருமே விரும்புகிறார்கள். ஆனால் எல்லோராலும் வளமான வாழ்க்கை வாழ முடிகிறதா? முடிவதில்லையே ஏன்?
வருமானம் போதுமானதாக இல்லை என்பார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசே தங்குவதில்லை என்பார்கள். ஐயோ நம் செலவுக்கு பணம் போதவில்லையே என்பார்கள். இதற்கு என்ன காரணம்? முன்வினை பயன் தான். ஒரு சிலர் மட்டும் வளமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் முன் வினை பயன் தான் காரணம்.
பசி, பஞ்சத்தால் வாடிய மக்களின் பசித் துயரை போக்க வேண்டி திருவீழிமிழலை தலத்தில் திருஞான சம்பந்தர் இறைவனை வேண்டிய பாடி பொற்காசு பெற்ற இந்த பதிகத்தை நாமும் மனதார இறைவனை வேண்டி தினமும் படித்து வந்தால் வருமானம் பெருகும். வாழ்வு செழிக்கும். வந்த பணம் நிலைக்கும், நற்பயன்கள் விளையும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை தானே வாழ்க்கை.
இதோ அந்த பதிகம்!
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர் மறைகொள் மழலையீர்
கறைகொள் காசினை முறையை நல்குவே
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவீனீர் உய்ய நல்குமே
நீறுபூசினீர் ஏற தேறினீர்
கூறும் மிழலையீர் பேறும் அருளுமே
காமன் வேலஓர் தூமக் கண்ணிணீர்
நாமம் மிழலையீர் சேமம் நல்குமே
பிணிகொள் சடைவயினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணி கொண்டருளுமே
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே
பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவதறியதே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே!
To download the pdf of above padhigam : https://goo.gl/ehlj8r
======================================================================
(கோவில் தகவல் & பதிக உதவி : தினமலர் | பி.என்.பரசுராமன்)
[END]
திருவீழிமிழலை – பெயரே அத்தனை அழகு. கோபுரம் அதை விட அழகு. கோவிலை நேரில் தரிசித்த உணர்வை இந்த பதிவு தந்தது என்றால் மிகையாகாது. இறைவன் அருள் இருந்தால் ஒரு நாள் நாமும் இந்த கோவிலில் உழவாரப்பணி செய்யலாம். படங்கள் யாவையும் அருமை.
நன்றி
உமா
வணக்கம்….
பாடல் பெற்ற தலங்கள் அனைத்திற்கும் சென்று இறைவனை தரிசிக்க ஆசை…….. எப்பொழுது கைகூடுமோ இறைவனுக்கே வெளிச்சம்…
ஆனால் ரைட் மந்த்ரா தளம் மூலமாக அது நடக்கிறது….
நன்றி…….
தாமரை வெங்கட்
சுந்தர் அண்ணா
மிகவும் நல்ல பதிவு .நாளுக்கு நாள் நமது தளம் மெருகேறி வருகிறது.நன்றி அண்ணா
subha
திருவீழிமிழலை அருமையான திருகோயில் …..மிகவும் அருமையான பணம் தரும் பதிகம் ….வாழ்த்துகள் சுந்தர் சார் …சிவ …சிவ…சிவ…
திருவீழிமிழலை ஆலயத்தைத் தரிசித்த திருப்தியைத் தந்தது, இப்பதிவு!. நன்றிகள் ஐயா!.
வணக்கம் சுந்தர் சார்
மிக அருமையான பதிவு. இதை நான் கடந்த ஆறு மாத காலமாக பாராயணம் செய்து வருகிறேன்.
கண்டிப்பாக நம்பிக்கை தான் வாழ்கை.
நன்றியுடன்
ராஜாமணி
திரு ராஜாமணி அவர்களே,
தங்களிடம் படிக்காசு பெற்ற பதிகம் கணினி பதிப்பு இருந்தால் தயை கூர்ந்து என்னுடைய ஈமெயில் விலாசத்திற்கு அனுப்புமாறு வேண்டிக் கொள்கிறேன்
என்றும் அன்புடன்
ச வெங்கடேசன்
சென்னை