Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 19, 2024
Please specify the group
Home > Featured > காமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2

காமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2

print
ர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் ஸ்பெஷல் இரண்டாம் பகுதி இது. அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய, படித்து பகிரவேண்டிய ஒன்று. பதிவின் இறுதியில் உங்களில் பலர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு முக்கிய தகவல் உள்ளது.

தவி ஆசையே இல்லாத ஒரே பாமரனை பதவியிலேற்றி வைத்த பெருமையைப் பாரதம் பெறக் காரணமானவர்தான் கர்மவீரர் காமராஜர். பதவி ஆசை இல்லாத அவரை பதவியில் அமர்த்தியதால் தான் பதவி மூலம் அவர் பலன் பெற முயலவே இல்லை. கிடைத்த பதவியை விடாமல் காப்பாற்ற வேண்டுமென்று துடிப்பவர்கள் தான், பதவியைக் காப்பதில் காலத்தை செலவிட்டு பாமரனைக் காப்பாற்றத் தவறி விடுகிறார்கள். காமரஜாருக்கோ பதவி ஒரு துண்டு மாதிரி. எனவேதான் எப்போதும் விடத் தயாராக இருந்தார். இன்று பலருக்கு பதவி வேட்டி மாதிரியும், சேலை மாதிரியும் ஆகிவிட்டது. எனவே விடமுடியாமல் விழிப்பதையும் காணமுடிகிறது. பதவி போனால் பலம் போய் விடுமோ என்று பயப்படும் பலவீனமானவர்கள் நிறைந்த நாட்டில் ஒரு பாமரத் தலைவர் மட்டுமே, பதவியைத் தூக்கி எந்நேரமும் எறியத் தயாராக இருந்தார். எறிந்து விடவும் செய்தார்.

பதவி போனால் செயலிலந்து செல்லாக் காசாகி விடுபவர்கள் மத்தியில் பதவியைத் துறந்து அரசியல் துறவி ஆன பின்பும், செல்லும் காசாகவே செயல்பட்டு அரசர்களை உருவாக்கும் அரசராகவே வாழ்ந்தார். ஒரு அரசியல்வாதிக்கு உரிய அனைத்துத் தகுதிளும் உடைய உத்தமத் தலைவர் காமராஜர். அதனால்தான்அரசியலில் அடுத்தவர்க்குப் பதவியைக் கொடுத்துவிட்டு, பதவியில் இல்லாமலும் மக்களுக்குத் தொண்டாற்ற முடியும் என்று கூறி நிரூபித்துக் காட்டவும் செய்தார்.

பதவிப் பல்லக்கில் ஏறி ஏறியே பழகிப்போனவர்கள் இறங்க நேர்ந்தால் பல் பிடுங்கிய பாம்பாகி செயலிழந்துவிடுகிறார்கள்.

ஆனால் காமராஜர் அவர்களுக்கு அந்த நிலை வரவே இல்லை. அது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.

பொதுவாக முதுமை என்பது சுறுசுறுப்பைக் குறைக்கும். அதில் செயல் திறன் குறையும்.

அரசியல் என்பது அறப்பணி அந்த அறப்பணிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டவர்கள் வயோதிகம் வந்தால் வாலிபர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்றார் பெருந்தலைவர்.

தான் முதலமைச்சராக இருந்து கொண்டு இப்படியொரு கருத்தைச் சொன்னால் அறிவுரை எல்லாம் அடுத்தவருக்கே என்று ஆகிவிடும் என்று கருதினார் காமராஜர்.

சொல்வது யாருக்கும் எளிது, சொல்லியது போல் நடப்பதுதான் எல்லோர்க்கும் அரிது. ஆனால், உயர்ந்தோர்கள் சொல்வதையே செய்வார்கள், செய்வதையே சொல்வார்கள்.

இவ்வாறு, சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்பவர்களையே வையகமும் வைத்துப் பாதுகாக்கும்.

 சென்ற வாரம் மெரீனா கடற்கரைக்கு சென்றபோது நாம் எடுத்த படம் இது!
சென்ற வாரம் மெரீனா கடற்கரைக்கு சென்றபோது நாம் எடுத்த படம் இது!

காமராஜர் ஆட்சியையும் இராமராஜ்ஜியத்தையும் ஒப்பிட்டு நாம் முந்தைய பதிவை அளித்த நிலையில், இந்த பதிவை தயார் செய்தபோது, மேற்கண்ட புகைப்படத்தில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வரிகளை படித்தபோது சிலிர்த்துப்போனோம்.

(மேற்காணும் பெருந்தலைவரின் சிலையில் செதுக்கப்பட்டுள்ள கண்ணதாசனின் வைர வரிகள்... சற்று குளோசப்பில் உங்களுக்காக!)
(மேற்காணும் பெருந்தலைவரின் சிலையில் செதுக்கப்பட்டுள்ள கண்ணதாசனின் வைர வரிகள்… சற்று குளோசப்பில் உங்களுக்காக!)

இராமாயணத்தில் கம்பரின் வரிகளும், காமராஜர் குறித்து கண்ணதாசன் கூறிய வரிகளும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இது அதிசயமான ஒற்றுமை.

அந்த வரிகள் உங்களுக்காக….

‘நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!
எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று?’ என்றான்

– கவிச்சக்கரவர்த்தி கம்பர்

வாரா விடுதலையை வரவழைத்தாய்; வளரறிவில்
தேரா இளைஞர் நலம் தேர்வித்தாய்; எஞ்ஞான்றும்
ஊரார் நலம் காக்க உடல் நலத்தை தானிழந்தாய்
சீராகும் தலைவா நின் திருமேனி தொழுகின்றோம்

– கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன்

கர்மவீரரின் வாழ்வில் நடைபெற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சில சம்பவங்களை பார்ப்போம்.

1) டாக்டர் பட்டம் வேண்டாம்!

பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் இன்று தலைவர்கள் எப்படி அலைகிறார்கள் என்று பார்க்கிறோம். ஆனால், அன்று தன்னை தேடி வந்த டாக்டர் பட்டத்தையே மறுத்துவிட்டார் கர்மவீரர்.

காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி கல்வித்துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரை தேடி வந்தனர் ..

அவர்களிடம் பெருந்தலைவர் “டாக்டர் பட்டமா..? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க? இதெல்லாம் வேண்டாம். நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவங்களை கண்டு பிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம். நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். போய் வாங்க!” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

2) தலைவரும் தொண்டனும்!

தலைவர் காமராஜர் மீது அளவு கடந்த மதிப்புகொண்டவர் மணலி ராமகிருஷ்ண முதலியார்.மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் இடம் முதலியாருக்கு சொந்தமானது.என்னை சுத்திகரிப்பு ஆலை அமைக்க அது தான் ஏற்ற இடம் என நிபுணர் குழு தேர்ந்தெடுத்தது .முதலியாரோ அந்த இடத்தைக் கொடுப்பதற்கு பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

அந்த பிரச்னை அப்போது முதலவராக இருந்த காமராஜரிடம் சென்றது . அவர் மணலியாரை வரவழைத்து பேசினார்.தலைவரிடம் தனது ஆட்சேபத்தை தயங்கி தயங்கி வெளியிட்டார்..

அதைகேட்டு தலைவர் “நியாயம் தான் உங்களது பூர்விக கிராமத்தை விட்டுகொடுப்பது சாதாரணமான விஷயம் அல்ல ஆனாலும் இந்த இடத்தை தவிர வேறு இடம் சரிவராது என நிபுணர்கள் சொல்கிறார்கள் நீங்கள் மனது வைத்து நிலத்தைக் கொடுத்தால் பல நூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள பெரிய தொழிற்சாலை தமிழ் நாட்டுக்கு கிடைக்கும் இல்லாவிட்டால் ஆந்திர மாநிலத்துக்கு போய்விடும் .நான் உங்களை வற்புறுத்தவில்லை” என்று சொல்லிவிட்டார்.

காமராஜர் ஓர் ஆணையை பிறப்பித்து அந்த இடத்தை அரசுக்கு எடுத்துக் கொண்டிருக்க முடியும் ஆனால் அவ்வாறு செய்ய தலைவர் விரும்பவில்லை .யாரையும் கட்டாயப்படுத்தி எதையும் செய்யும் பழக்கம் அவருக்கு கிடையாது . வீடு திரும்பிய மணலியார் மனதில் தலைவர் கூறிய ஒரு சொல் ஆழமாக பதிந்து விட்டது .”நீங்கள் மனது வைத்தால் ஒரு பெரிய தொழிற்சாலை தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் , இல்லா விட்டால் ஆந்திர மாநிலத்துக்கு போய்விடும் “.என்ற அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன .அதிகாலையில் அவர் எழுந்த போது ஒரு தெளிவான முடிவுடன் எழுந்தார். தலைவர் காமராஜரை சந்தித்தார்.”எனது கிராமத்தை எடுத்துக் கொள்ளுங்கள் “என்று கூறினார்.

இப்படி நல்லது நினைத்த தலைவர், அந்த நல்ல விசயத்துக்கு உதவ நினைத்த நல்ல தொண்டரின் மனம் , இது தானே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை !!!!!

Kamarajar With Kannadasan

3) சேவை என்றால் என்ன?

இரண்டு பஸ் கம்பெனி முதலாளிகள், தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, காமராஜரைப் பார்க்க வந்திருந்தனர். ‘ஐயா! தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளன. கம்பெனியை நடத்துவதில் லாபமும் அதிகம் இல்லை. எனவே பஸ் கட்டணத்தை உயர்த்துங்கள்” என்றனர்.

”சரி… உங்க கம்பெனியோட பேர் என்ன? ” – என்று கேட்டார் காமராஜர். உடனே ஒருவர் ‘…டிரான்ஸ்போர்ட் சர்வீஸஸ்’ என்றார்; மற்றொருவர், ”… பஸ் சர்வீஸஸ்” என்றார்.

இதைக் கேட்டதும், ”சர்வீஸ்னு பேரு வைச்சுருக்கீங்களே… இதுக்கு என்ன அர்த்தம்.? தமிழ்-ல சேவைன்னு சொல்லுவோம்; சேவைன்னா எந்த லாப நோக்கமும் இல்லாம, மத்தவங்களுக்கு உதவறதுதானே.? உங்ககிட்ட பஸ் தயாரிக்க வசதி இருக்கு. அந்த வசதிய பொதுமக்களோட வசதிக்கு பயன்படுத்துங்க. அதுதான் உண்மையான சேவை! அதைவிட்டுட்டு, லாபம் குறையுதேன்னு புலம்பாதீங்க!” என்று அவர்களை வழியனுப்பி வைத்தாராம் காமராஜர்

4) கடவுளுக்கே மகிழ்ச்சி!!

காமராஜர் கூறியது…

ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி
ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்துவர்களுக்கு மகிழ்ச்சி
ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி
ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி
ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மை படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி.

5) விடுதலை போராட்ட வீரருக்கு மரியாதை கொடுத்த அய்யா காமராஜர்

முன்னால் முதல்வர் குமாரசாமிராசாவின் திருவுருவப்படத்தை திறப்பதற்காக பாரத பிரதமர் நேரு ராஜபாளைய்த்திற்கு வந்திறுந்தார். முதவர் காமராஜரும் உடன் வந்திருந்தார். நேருவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு தரபட்டது. யார் யார் நேருவுக்கு மாலை அணிவிப்பது என பட்டியளிட்டு மாவாட்ட ஆட்சித்தலைவரால் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. விடுதலை போராட்ட வீரர் ஏ.கே.பெருமாள்ராஜா என்ற “பேச்சி ராஜா” அவர்கள் தெரு வழியாகவும் பிரதமர் நேரு போவதாக பயணத்தில் இருந்தது. எனவே, தன் தெருவிற்க்கு வருகின்ற நேருவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்க தியாகி ஏ.கே.பெருமாள்ராஜா விரும்பினார். ஆனால் அதற்கான முன் அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை. எனவே, தியாகியாக இருந்தாலும், பிரதம்ர் நேருவுக்கு மாலை அணிவிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்து கொண்டிருந்தது.

அவருடன் இருந்தவர்களும், அனுமதி இல்லை, எனவே மாலை அணிவித்து மாட்டிக்கொள்ள வேண்டாம்” என அவரை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். விடுதலைக்காக பாடுபட்ட அந்த தியாகி கட்டாயம் மாலை அணிவித்தே ஆகவேண்டுமென உறுதி கொண்டிருந்தார். அதற்க்கான் எச்சரிக்கைகளையும் அவர் பொருட்படுத்தவில்லை.

பாரத பிரதமர் நேரு, முதல்வர் காமராசர் இருவரும் ஊர்வலமாக் வந்து கொண்டிருந்தனர். தொலைவிலிருந்தே தியாகி பெருமாள்ராஜா, தனது வீட்டில் மாலையுடன் காத்திருப்பதை காமராஜ் பார்த்துவிட்டார். உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தை தியாகி பெருமாள்ராஜா வீட்டருகே கொண்டு செல்ல கட்டளையிட்டார். பெருமாள்ராஜாவை கூப்பிட்டு பிரதமர் நேருவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பெருமாள்ராஜாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு நேருவிற்க்கு மாலை அணிவித்தார். இதன் வழியாக நாட்டிற்க்கு பாடுபட்ட ஒரு தியாகிக்கு நேர்ந்திருக்க கூடிய கசப்பான உணர்வுகளை தவிர்து விட்டார்.

இதற்கு அடிப்படை காரணம், மாட மாளிகையில் இருந்து ஆட்சி செய்யாமல் மக்களோடு மக்களாக இருந்த காரணத்தால் அவர்களுடைய உண்ர்வுகளை புரிந்துகொண்டு செயல்படக்கூடிய தன்மையை காமராஜ் அவர்கள் பெற்றிருந்தார்.

6) குழந்தைகள் மேல் உள்ள பாசம்

பெருந்தலைவர் காமராஜருக்கு பால மந்திர் காப்பக குழந்தைகளிடம் தனி பிரியம் இருந்தது . அங்கிருந்த 400 குழந்தைகளுக்கும் அவர் ஒரு அன்பான தந்தையை போல பாசத்துடன் இருந்தார். அவருக்கு அன்பளிப்பாக எந்த பொருள் கிடைத்தாலும் அவற்றில் தனக்காக எதையும் எடுத்துக் கொள்ளாமல் பாலா மந்திர் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார்.

அனாதைகளுக்கு ஆதரவு கொடுப்பவன் இறைவனுக்கு பணிபுரிவது போல சிறப்பானது என்பதை உணர்த்தினார் நம் பெருந்தலைவர் !!!

7) தியாகிகளை நேசிக்கும் நெஞ்சம்

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தியாகிகள் யார்? யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதெல்லாம் பெருந்தலைவருக்கு மனப்பாடமாக தெரியும். மற்றவர்களை காட்டிலும் தியாகிகளிடம் அவருக்கு ஒரு விஷேச மதிப்பும் மரியாதையும் உண்டு.

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் தியாகிகள் திருமலை பிள்ளை ரோடு க்கு வந்து காமராஜரை அவரது இல்லத்தில் சந்திக்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள் .

தியாகிகளோடு நீண்ட நேரம் உரையாடுவது அவர்களுடன் சுதந்திர போராட்ட நினைவுகளை பகிர்ந்து கொள்வது அவர்களுடைய தற்போதைய குடும்ப சூழ்நிலைகளை அறிந்து கொள்வது ஆகியவற்றில் அவருக்கு ஈடுபாடு இருந்தது .அவர்களது தற்க்கால வாழ்கையில் சிரமம் இருந்ததை அறிந்து வருந்தினார்.

உடனே சத்யா மூர்த்தி பவனுக்கு போன் செய்து இன்னார் வந்திருகிறார்கள், அவருக்கு இன்ன உதவிகள் செய்ய வேண்டும் என்று சொல்வது இயல்பு ,இப்படி எத்தனையோ தியாகிகளுக்கு வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்கு தெரியாமல் காதும் காதும் வைத்தது போல உதவி இருக்கிறார்.

(இப்போதுள்ள சில தலைவர்களிடம் சுதந்திரத்திற்க்காக போராடிய பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களை சொல்லச் சொல்லுங்கள். அப்படி சொன்னால் பதிவு எழுதுவதையே நான் நிறுத்திவிடுகிறேன்!)

indira_kamraj_20121105_1

8) அடுக்கு மொழியிடம் தோற்ற எளிமை !

காமராஜருக்குப் செயற்கையாகப் பேச வரவில்லை. வீர வசனம் பேசுவது அவருக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் சினிமா நடிகர் இல்லை

திமுகவினர் பேசியது அப்போது புதியதாக இருந்ததால் மக்கள் அவர்கள் பின் ஓடினர்.அவர்கள் மக்களை ஏமாற்ற பேசிய டயலாக் ‘ அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’

‘ரூபாய்க்கு ஒரு படி படிப்படியாக மூன்று படி,’  ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’, ‘தட்டினால் தங்கம் வரும் வெட்டினால் வெள்ளி வரும்’ ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’.

இந்த மாதிரி பல வெட்டி வசனங்களைப் பேசி மக்களை ஏமாற்றி நன்கு கொழுத்தனர். இப்போதும் அது நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.

9) பாய்லர் தொழிற்சாலை தமிழகத்திற்கு கிடைத்த கதை!

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் “காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?”, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

“ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்றார்.

என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.

10) மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்களல்ல!

“ஒரு கிராமப் பஞ்சாயத்தில் உள்ள பெரிய குளத்தில், மீன்பிடிக்கும் உரிமையை யாருக்கு கொடுப்பது என்று முடிவு செய்வதற்க்கு உரிய கோப்பு ஒன்னு, முதல்வர் காமராஜர் பார்வைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலரிடம் இது குறித்து பேசிய காமராஜர், “இந்த குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையை தனிபட்ட நபருக்கு கொடுத்தால், அதில் வரக்கூடிய லாபம் முழுவதும் அவருக்கே போய்ச் சேரும். அதேபோல் 10 பேருக்குச் சேர்த்துக் கொடுத்தால், லாபம் முழுவதும் அந்த 10 பேருக்குத்தான் போகும். ஒரு கூட்டுறவு சங்கத்துக்கு அந்த உரிமையை வழங்கினால், அந்த லாபம் அனைத்தும் அந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே போய் சேரும். இப்படியெல்லாம் செய்யாமல், அந்த கிராம பஞ்சாயத்து ஏற்று நடத்தினால், அதில் வரக்கூடிய லாபம் முழுவதும் அந்தக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும். இதில் எது நல்லது” என்று கேட்டார்.

“தாங்கள் சொன்னபடி, கிராம பஞ்சாயத்து ஏற்று நடத்துவதுதான் நல்லது. ஆனால், அதற்க்கு சட்டத்தில் இடமில்லையே” என்று அந்த அதிகாரி கூறினார். உடனே முதல்வருக்கு கோபம் வந்து விட்டது. “எது நல்லது என்று நீங்களே கூறினீர்கள். அதை நிறைவேற்றச் சட்டவிதிகள் இடம் தரவில்லையெனில், அதை உடனே மாற்றி உத்தரவு போடுங்கள். மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்களல்ல” என்று உறுதியுடன் தெளிவாக கூறினார் காமராஜர் !

11) புகழ்ச்சியை வெறுத்த பண்பாளர்!

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’  என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்  வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார்.  என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்  சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து! சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்! இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

“பதவியை நீ தேடிப்பொனால் பதவிக்குகப் பெருமை. பதவி உன்னைத் தேடி வந்தால் உனக்குப் பெருமை” – என்ற உயர்ந்த அரசியல் இலக்கணத்துக்கு ஏற்றாற் போல, உலகம் போற்ற வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர்.

12) “இப்போதுள்ள அரசியல் தலைவர்களோடு ஒப்பீடுகையில் காமராஜர் எப்படிப்பட்ட தலைவர்?”

“இப்போதுள்ள அரசியல் தலைவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் காமராஜர். அரசியல்வாதி என்றால் மக்களுக்கு சேவை செய்பவர் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் காமராஜரிடம், “நீங்க முதல்வரா இருக்கீங்களே. உங்களுக்கு அந்தப் பதவி பிடித்திருக்கிறதா” என்று கேட்டுள்ளார். அதற்கு காமராஜர், “யாருக்குப்பா வேணும் அந்த பதவி? தொரட்டி பிடிச்ச வேலை அது. எவன் பார்ப்பான் அதை. ஒரே தொந்தரவு. என்ன, இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுது. அதனால் மட்டுமே அந்த வேலையில் இருக்கேன்” என்று கூறியுள்ளார்.

காமராஜர் என்றைக்குமே பதவியைத் தேடிப் போனதில்லை. அவர் ஒரு கட்சியின் அடையாளம் அல்ல. தூய்மையின் அடையாளம். அவரிடம் காங்கிரஸ்காரர், தமிழன் இப்படி எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

தூய்மையான அரசியலின் வடிவம்தான் காமராஜர். இனி வரும் அரசியல்வாதிகளும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பணிக்காக உருவாக்கப்பட்டதுதான் முதல்வர் பதவி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்”  – ‘காமராஜர்’ திரைப்பட இயக்குனர் திரு.பாலகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறியது இது.

======================================================================

Maha periyava about kamarajar உண்மையான ஒரு அரசியல் துறவி பற்றி ஒரு உண்மையான ஆன்மீக துறவி கூறியது….

“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும் நீதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜர். காமராஜர் மகாபுருஷர்!” – நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவர் ஒரு  முறை பெருந்தலைவரைப் பற்றி கூறியது இது.

======================================================================

(தயாரிப்பில்  உதவி : காமராஜர் – ஒரு சகாப்தம் முகநூல் | ‘பெருந்தலைவர் காமராஜர்’ நூல் | தமிழ் இந்து நாளிதழ்)

[END]

13 thoughts on “காமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2

 1. இன்றைய தினம் கர்ம வீரர் காமராஜர் பதிவை போட்டு அசத்தி விட் டீர்கள். படிக்க படிக்க திகட்டாத மாபெரும் பொக்கிஷமாக இருக்கிறது இன்றைய பதிவுகள் அவரை பற்றி கூறிய 13 சம்பவங்களும் நாம் படிக்கும் பொழுதே நம்மை நெகிழ வைக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் கண்டிப்பாக இவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் காமராஜர் படிக்காத மா மேதை

  இந்த பதிவை தட்டச்சு செய்ய எப்படியும் 3 டு 4 மணி நேரம் ஆகி இருக்கும் அத்துடன் தங்கள் பரபரப்பான அலுவளுக்கிடையிலேயும் மெரினா பீச் சென்று காமராஜரின் சிலையை போட்டோ எடுத்து கல்வெட்டில் உள்ள எழுத்துகளை போட்டு இந்த பதிவிற்கு மேலும் மெருகு சேர்த்து உள்ளீர்கள். ஆன்மிக பதிவில் கலக்கி கொண்டிருக்கும் தாங்கள் இந்த மாதிரி பேருண் தலைவர்கள் பற்றிய பதிவையும் போட்டு ரைட் மந்த்ராவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்

  வாழ்க தங்கள் தொண்டுள்ளம்

  நன்றி
  உமா

 2. ஒரு உத்தம தலைவரை தோற்கடித்த பாவத்தை தான் தமிழக மக்கள் இன்னும் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்

  1. சத்தியமான வரிகள் ராஜா!

   பாவம் செய்துவிட்டோம் என்று தெரிந்த பிறகு நிச்சயம் அதற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும். இந்த பாவத்திற்கு இறைவன் நம்மையெல்லாம்.மன்னித்து நல்லாட்சி தரும் வழியை காண்பிப்பான் என்று நம்புவோம்.

 3. மக்கள் தந்த வாிப்பணத்தில் விளம்பரம் செய்ய விரும்பாத (முதல் மற்றும் கடைசி) முதல்வர்:

  “ஐயா, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற சாதனைகளை நீங்களும் உங்கள் நல்லாட்சியும் செய்திருந்தாலும் நமக்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவு எதிர் கட்சிக்கே செல்வதைப் பார்க்கும் போது நாம் நமது சாதனைகளை மக்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதில் சற்றெ பின் தங்கி இருக்கிறோம் என நினைக்கிறன்” என்று ஒருவர் புலம்ப,

  அதற்க்கு, “சாி அதற்கென்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க?” என்று நம்ம கர்மவீரர் அவாிடேம கேட்க,

  அதற்க்கு கவிஞர் “ஐயா, திரை படங்கள் மிக வலிமை மிக்க சாதனங்கள். மூலை முடுக்கெல்லாம் நாட்டு நடப்புகளை கொண்டு செல்வது அவை தான். இதை நாமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது ஆட்சியின் சாதனைகளையெல்லாம் தொகுத்து ஒரு செய்திப் படம் ஒன்று தயாாித்து வெளியிட்டால் எல்லா தரப்பு மக்கைளயும் அவை சென்றைடயும்.” என்றார்.

  ” நாம்ப மக்களுக்குகாகச் செய்கிற காாியங்கைள நாம்பேள விளம்பரப்படுத்தனுமா ? … சாி, இதுக்கு எவ்வளவு செலவாகும்” என்று காமராஜ் கேட்டார்.
  “சுமாரா 3லட்சம் இருந்தா எடுத்திரலாம்னு நினைக்கிறேன் ஐயா” என்றார் கவிஞர்.
  “ஏ…யப்பா…3 லட்சமா? மக்கள் தந்த வாிப்பணத்தில் நமக்கு விளம்பரமா? அந்த 3 லட்சம் இருந்தா நான் இன்னும் மூணு பள்ளிக்கூடத்தை திறந்திடுவேனே…வேண்டாம்…படமெல்லாம் எடுத்துக் காட்ட வேண்டாம்” என்று சொல்லி கவிஞரை அனுப்பிவிட்டார்.
  இது தான் நம்ம கர்மவீரருக்கும் இன்றைய பதவிபேய்களுக்கும் உள்ள மகத்தான மற்றுமொரு வித்தியாசம்.
  **
  **சிட்டி**.
  Thoughts becomes Things .

 4. நேற்று ஹலோ fm. இரவு திரு. குமரி அனந்தன் பேசியதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூறியதில் ஒரு பகுதியை தொகுத்து இருக்கிறேன்.

  காமராஜர் இரவு தூங்கும்முன்பு தனது உதவியாளர்களிடம் பேசிவிட்டு, அவர்களை வழி அனுப்பும்போது அனைவரும் சென்ற பின்னர் தானே மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு செல்வது வழக்கம். குமரி அனந்தன் தினமும் இதை கவனித்து விட்டு “ஐயா, உங்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச மாட்டோமா என்று பல முதலமைச்சர்கள் காத்துக்கொண்டிருக்க, நீங்கள் நாங்கள் செல்லும் வரை காத்திருந்து, இந்த மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு தான் செல்லவேண்டுமா? நாங்களே இதை செய்ய மாட்டோமா?” என்று கேட்டார். அதற்கு அவர் “நீங்க மறந்துட்டு போயிட்டீங்கன்னா, இரவு முழுதும் மின்சாரம் வீணாகும். அந்த மின்சாரத்தை ஒரு விவசாயிக்கு கொடுத்தால் அவனாவது பயன்படுத்திக்கொள்வான் அல்லவா?” என்று திருப்பி கேட்டார்.

 5. காமராஜர் போல ஒரு தலைவர் நமக்கு கிடைத்தார் .அவரை உதாசீனம் செய்த தமிழ்நாடு எப்போது உருப்படும்?

 6. படிக்காத இவர் இவளோ செய்திருக்கிறார்
  படித்த மனிதர்களோ …இதை இப்போ இருக்கிற அரசியல் வியாதிகள்
  படித்து ஒரு 10 சதவிதமாவது முயற்சி செய்தால் கொஞ்சமாவது நாடு உருப்படும்

 7. வறுமையின் காரணமாக கர்ம வீரர் காமராசர் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடன் போய் 10 ஆம் வகுப்பு பாஸ் ஆகி விட்டு வேலைகேட்டேன். அரசு, மற்றும் உறவினர் உதவியில்
  மேற்கொண்டு படின்னேன். என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார். அவர் ஆசியோடு அவர் சொல் படி பலர் உதவியோடு படித்து பாரிஸ் பல்கலை கழகத்தில் முப்பது ஆண்டுகள் பணி யாற்றி பிரான்ஸ் தமிழ் சங்கம் அமைத்து நல்ல நிலையில் வாழ்கிறேன், என் வாழ்வில் யாரை மறந்தாலும் கர்ம வீரரை மறக்க இயலாது
  பாரிஸ் ஜமால்,
  நிறுவனத்தலைவர்
  பிரான்ஸ் தமிழ் சங்கம் , பாரிஸ், பிரான்ஸ்

  1. அபாரம். பெருந்தலைவரை தாங்கள் பார்த்திருக்கிறீர்கள், அவரோடு பேசியிருக்கிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

   ஜமால் அவர்களே, பெருந்தலைவருடன் உங்கள் அனுபவத்தை இன்னும் சற்று விரிவாக உங்கள் புகைப்படத்துடன் எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

   மிக்க நன்றி.

   simplesundar@gmail.com

  2. பாரிஸ் ஜமாலுக்கு வழி காட்டியது போல் பல ஏழை மாணவர்களுக்கும் காமராசர் உதவி இருக்கிறார், படிக்கவைதிருகிறார்
   அஸ்மா ராணி — சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *