Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

print
‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்று சொல்வார்கள். அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க. பணத் தேவை என்றால் தான் தற்போது பலருக்கு பத்தும் அல்ல பதினொன்று கூட பறந்து விடுகிறது. பாக்கெட்டில் ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால் அந்த தெம்பே வேறு. பணம் கொடுக்கும் தெம்பை வேறு எதுவும் தர இயலாது. இன்றைக்கு நாம் பார்க்கின்ற கேள்விப்படுகின்ற பெரும்பாலான குற்றங்கள் பணத்தை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்டவர்கள் செய்த குற்றங்கள் தான்.

பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழ்நிலைக்கு பெரும்பாலானோர் தள்ளப்பட்டது ஏன்?

Cashier counts currency notes inside bank in Lucknow

காரணம் பணத்தை சுற்றித் தான் இன்று உலகம் இயங்குகிறது. அந்தளவு பணம் என்பது இன்றைக்கு மனிதனின் அத்தியாவசியத் தேவையையும் தாண்டி பிராண வாயு போல மாறிவிட்டது. ரூபாய் நோட்டின்றி ஒரு நொடி இருக்கமுடியாது இங்கே. கையில் காசு இல்லாவிட்டால் கலகலப்பின்றி செத்த பிணம் போல சிலர் இருப்பார்கள். ஒன்று உம்மென்று இருப்பார்கள். அல்லது குடும்பத்தினர் மீது எரிந்து விழுவார்கள். காரணம் இயலாமை.

சிலர் பணம் தேடுவார்கள். தேடி ஈட்டும் பணம், நோய்க்கே செலவாகிக்கொண்டிருக்கும். தேடுகிற பணம் சுபகாரியங்களுக்கு செலவழிப்பதற்கு பதில் வைத்தியர்களுக்கே செலவாகும். சிலர் பணத்தை தேடுவார்கள். அதனுடன் சேர்த்து பழி, பாவமும் தேடுவார்கள். ஒரு பக்கம் பணம் வரும். இன்னொரு பக்கம் பழியும் சேர்ந்து வரும்.

பணத்தை சம்பாதிப்பது ஒரு கலை. முயற்சிக்கு ஏற்றவாறு பொருளை சம்பாதிக்கவேண்டும். அந்தப் பொருளால் புகழும் பெருமையும் கிடைக்கவேண்டுமே தவிர அதனால் பழி வந்து சேரக்கூடாது. அந்த பணம் நல்ல காரியங்களுக்கு சுபகாரியங்களுக்கு புண்ணிய காரியங்களுக்கு பயன்படவேண்டும். தேவையற்ற விஷயங்களுக்கு பயன்படக்கூடாது. பணமானது ஐந்து ஐம்பதாகி, ஐம்பது ஐநூறாகி, ஐநூறு ஐயாயிரமாகி, ஐயாயிரம் ஐந்து லட்சமாக வளர வேண்டுமே தவிர, இருப்பதும் கரைந்து போகக்கூடாது. வரும் வேகத்தில் வீட்டை விட்டு ஓடக்கூடாது. பணத்தின் மூலம் ஏற்படும் கொடுக்கல் வாங்கலில் நண்பர்களுடன் பகை ஏற்பட்டு வெறுப்பும் பிரிவும் உருவாகக்கூடாது. இத்தனை விஷயங்கள் இருக்கு இந்த பணத்திற்குள்!!

ஆக… பணம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அது இறைவனின் அனுக்கிரகத்தினால் நம் தேவைக்கு வரவேண்டும். கொஞ்சம் தான தர்மத்திற்கு பயன்படவேண்டும். மிச்சப்பட்டால் பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கு பயன்படவேண்டும். அதனால் பழி வராமல் இருக்கவேண்டும். எனவே அது வரும் வழி செம்மையாக இருக்கவேண்டும். இத்தனை விஷயம் இருக்கு அதில்.

ஆனால் ‘கையில் காசில்லை… கடன் கொடுப்பார் யாருமில்லை’ என்கிற சூழல் தான் பலருக்கு.

எனவே வினையற்ற செல்வத்தை வழங்க இறைவனை நாம் பற்றிக்கொள்ளவேண்டும்.

நேர் வழியில் வருகின்ற பணம் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்பட்டு புகழையும் பெருமையையும் தேடித் தரும். சில நேரங்களில் தகப்பனார் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்துவிட்டு போயிருப்பார். பிள்ளை பொறுப்பின்றி அவற்றை கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கியிருப்பான். வயிற்றை கட்டி வாயை கட்டி அந்த தகப்பன் சம்பாதித்த பொருளாக அது இருந்திருக்கும். நமக்கு தெரிந்து ஒரு ஜோடி செருப்பை மூன்று வருடங்களாக போட்டுக்கொண்டிருந்த தகப்பன்களை பார்த்திருக்கிறோம். காரணம் பிள்ளைகளுக்கு பொருள் சேர்க்க வேண்டிய அந்த பொறுப்புணர்வு. ஆனால் அதே குடும்பத்தில் அப்பா பாடுபட்டு சம்பாதித்த பணத்தை பையன் தீய வழிகளில் செலவு செய்து கடைசியில் கடன்களை வேறு சுமந்துகொண்டு நிற்பான். பல குடும்பங்களில் இது நடப்பது தான்.

எனவே பணம் தேடுவது என்பது மட்டும் பெரிய விஷயமல்ல. அந்தப் பணம், நம்மிடம் தங்கவேண்டும், விருத்தியாகவேண்டும், நல்ல விஷயத்திற்கு பயன்படவேண்டும், தர்மமும் செய்யவேண்டும், அதன் மூலம் அது புண்ணியமும் கொண்டு வரவேண்டும். இப்படி ஒரு செல்வம் நம்மிடத்தே வர இறைவனின் கருணையல்லவா வேண்டும்?

இன்றைக்கு தமிழ் புத்தாண்டு. இந்த ஆண்டு மட்டும் அல்ல…இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நம் வாசகர்களுக்கு வினையற்ற செல்வத்தை வாரி வாரி வழங்கிட, அதன் மூலம் அவர்கள் பலன் பெற்று, நிம்மதி பெற்று, மேலும் மேலும் பல அறப்பணிகளிலும் புண்ணிய காரியங்களிலும் ஈடுபட இந்த பதிவை அளிக்கிறோம். புத்தாண்டு அன்று இடம்பெறும் இந்த பதிவு பலரது வாழ்வில் ஒளியேற்றும் என்றால் மிகையல்ல.

Ilampirai Manimaranபிரபல சொற்பொழிவாளர் திருமதி. இளம்பிறை மணிமாறன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறிய உண்மை சம்பவத்தை இத்துடன் தருகிறோம். அவரது அனுமதி பெற்று அவரது உரையை தட்டச்சு செய்து இங்கே நமது தளத்தில் பகிர்கிறோம். இந்தப் பதிவில் பணம் குறித்து நாம் கூறியுள்ள பல கருத்துக்கள் இளம்பிறை அம்மா அவர்கள் சொற்பொழிவுகளில் கூறியது தான்.

தூத்துக்குடியை சேர்ந்த திருமதி.இளம்பிறை மணிமாறன் அவர்கள் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பேராசிரியராக 27 ஆண்டுகளும் முதல்வராக 10 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பல திருக்கோவில்களில் பக்தி சொற்பொழிவாற்றியிருக்கிறார். செஞ்சொல்வாரிதி, தமிழ்ஞானவாரிதி, சிலம்புச்செல்வி, முத்தமிழ் பேரறிஞர் போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளார்.

தனது நாவன்மையால் தேசபக்தியையும், தெய்வ பக்தியையும் மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்வதோடு, மனித நேயத்தையும் வளர்ப்பது, இளைய தலைமுறையை ஏற்றமுறச் செய்வது இவரது லட்சியம்.

நமது லட்சியமும் கூட இது தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். தனது நாவன்மையால் மேற்கூறிய உயரிய லட்சியங்களை அடைய இவர் பாடுபடுகிறார். நாம் இறைவன் இட்ட பிச்சையான நமது எழுத்து திறனை வைத்து மேற்படி லட்சியங்களை எட்ட முயன்று வருகிறோம்.

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் 
தெளிந்த நல்லறிவு வேண்டும்

====================================================================

அருமையான சிலிர்ப்பூட்டும் சம்பவம் இது.  படிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

பின்னே……?

வினையற்ற செல்வத்தை தேடி வரவழைக்கும் கலையை அல்லவா அவர்கள் தெரிந்துகொள்ளப் போகிறார்கள்!!

திருமதி. இளம்பிறை மணிமாறன் அவர்கள் வார்த்தைகளில் இருந்து….

தேடி வந்த மூன்று லட்ச ரூபாய் – பதிகம் புரிந்த அதிசயம் – உண்மை சம்பவம்!

திருநெல்வேலிக்கும் திருசெந்தூருக்கும் இடையே ஒன்பது வைணவத் திருத்தலங்கள் இருக்கின்றன. நவதிருப்பதி என்று அவற்றுக்கு பெயர். அவற்றில் முதன்மையானது ஆழ்வார் திருநகரி. நம்மாழ்வார் அவதாரத் தலம் இது.

எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு நண்பர் ஒருவர். தூத்துக்குடியை சேர்ந்தவர். வெங்கடாச்சாரி என்று பெயர். தூத்துக்குடி கலக்டரேட் அலுவலகத்தில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தார். பழுத்த வைணவர் அவர். தீவிர வைணவர்கள் சிவனையோ அல்லது வேறு யாரையோ வணங்கமாட்டார்கள். இது பொதுவாக உள்ளது தான். அனைவரும் அறிந்தது தான். ஆனால் இவர் அதற்கும் மேல். எப்படி என்றால் திருப்பதி ஸ்ரீனிவாசனையோ அல்லது ஸ்ரீரங்கம் ரங்கநாதரையோ கூட வணங்கமாட்டார். ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாளைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். அப்படி ஒரு வீர வைணவர்.

Appar-Sambandhar-Sundarar-Manickavasagar-Nalvar

ஆழ்வார் திருநகரியில் உள்ள சிவாலயம் ஒன்றில் பேச நான் சென்றிருந்தேன். வெங்கடாச்சாரி எனக்கு மிகவும் தெரிந்தவர் என்பதால் நான் வருவது தெரிந்து, என்னை வந்து பார்க்காவிட்டால் நன்றாக இருக்காதே என்று கருதி என்னை பார்க்க வந்தார். வந்தவர் அது சிவன் கோவில் என்பதால் உள்ளே வராமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தார்.

எனக்கு ஒரு கணம் காரணம் புரியவில்லை. “என்ன வெங்கடாச்சாரி… உள்ளே வாங்களேன்… இப்போ நான் இங்கே பேசப்போறேன். நீங்களும் இருந்து கேட்டுட்டு போங்களேன்” என்றேன்.

அதற்கு அவர், “ஐயய்யோ…. நான் சிவன் கோவில் வாசல்ல நிற்பதற்கே பலர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு போறாங்க. உள்ளே வந்தேன் என்றால் ‘வெங்கடாச்சாரி சிவன் கோவிலுக்குள் போனான்’னு போஸ்டர் அடித்தே ஒட்டிவிடுவார்கள். நான் உள்லே எல்லாம் வரவில்லை!”

“நீங்க உள்ளே வந்து தரிசனமெல்லாம் பண்ணவேண்டாம். நான் இப்போ சுவாமியை தரிசனம் பண்ணிவிட்டு பேசப்போகிறேன். சும்மா வந்து பேச்சை கேளுங்க சார்.. போதும்!”

வராவிட்டால் எங்கே நான் தவறாக நினைத்துக்கொள்வேனோ என்று கருதியவர் அங்கே இங்கு சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே உள்ளே வந்தார். வந்தவர் சொன்னார், “உங்களுக்காக ஒரு பத்து நிமிஷம் இருப்பேன். அப்புறம் ஓடிபோய்டுவேன்!” என்றார்.

அவர் வர்றேன்னு சொன்னதே பெரியவிஷயம். எனவே “சரி… வாங்க” என்று அவரை வரவேற்று அழைத்து வந்து அமரவைத்து பேசுவதற்கு மேடைக்கு சென்றேன்.

நான் உடனே, ‘இடரினும் தளரினும்’ என்னும் பதிகத்தை பற்றி பேச ஆரம்பித்தேன். பேசும்போது சொன்னேன்… “இந்த பதிகத்தை படித்தால் நிச்சயம் பணம் வரும். இது சத்தியமான உண்மை. பணம் வராமல் இருக்கவே இருக்காது!” என்று சொல்லிவிட்டு வெங்கடாச்சாரி போய்விட்டாரா இருக்கிறாரா என்று அவர் இருந்த திசையை நோக்கி பார்த்தேன். ‘பணம்’ என்று சொன்னவுடன் மனிதர் அப்படியே அங்கேயே உட்கார்ந்துவிட்டார். என்னுடைய பேச்சு முடியும் வரை அங்கேயே ஆணியடித்த மாதிரி அமர்ந்துவிட்டார். நான் பேசி முடித்ததும் அவரை நோக்கி வந்தேன்.

“என்ன நீங்க பத்து நிமிஷத்துல போய்டுவேன்னு சொன்னீங்க… கடைசியில முழு பேச்சும் முடியுற வரைக்கும் இருந்துட்டீங்களே….”

“எனக்கு தேவையான ஒரு விஷயத்தை பத்தி நீங்க பேசுறீங்க… எப்படி நான் எழுந்து போறது?”

வெங்கட்டாச்சாரி தொடர்ந்து சொன்னார்…. “நீங்க பணத்தை வரவழைக்கும் பதிகம் ஏதோ ஒன்னு சொன்னீங்களே… அது எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார்.

அவர் கேட்ட அந்த பதிகம் அடங்கிய புத்தகம் அந்த நேரம் நல்லவேளையாக என் கைப்பையில் இருந்தது. அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

அந்த புத்தகத்தை வாங்கியவர் அட்டையை திரும்பி திரும்பி பார்த்தார். “என்ன இது விபூதி பூசிகிட்டு ஏதோ நாலு பேரு படம் இருக்கே?” என்று கேட்டார்.

“இது தான் நால்வர் படம். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை இயற்றியவர்கள்” என்றேன்.

“இல்லே… என் வீட்டுக்காரி இதை பார்த்தா சத்தம் போடுவாளே… ” என்றார் தயங்கிக்கொண்டே.

“அதுக்கென்ன ஏதோ ஒரு நியூஸ் பேப்பரை அட்டை மாதிரி போட்டு படிங்களேன்” என்றேன்.

அப்போது கூட சிவனை பரீட்சிப்பது போல “சரி.. சரி… கொண்டு போய் படிக்கிறேன். எனக்கு பணம் வருதான்னு பார்ப்போம்…” என்றார்.

இவர் கொண்டு போய் அந்த புத்தகத்துக்கு ஒரு அட்டை போட்டு படிக்க ஆரம்பித்தார். அவர் வீட்டுக்காரம்மா… அவரும் ஒரு வீர வைணவர் தான்.. என்ன இது எப்போ பார்த்தாலும் ஏதோ ஒரு புத்தகத்தை மாய்ஞ்சு மாய்ஞ்சு படிக்கிறாரே இந்த மனுஷன்… அப்படி என்ன புத்தகம் என்று ஒரு நாள் இவர் ஆபீஸுக்கு போனவுடன் அந்த புத்தகத்தை எடுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்.

அந்த அட்டையை கழற்றி பார்த்தவர்…. நான்கு பேர் நெற்றியில் விபூதி பூசி அவர்கள் படத்தை பார்த்தவர் திடுக்கிட்டார். அந்த மனுஷன் வரட்டும் சாயந்திரம் வெச்சுக்குறேன் கச்சேரியை… என்று இவர் வருகைக்கு கோபம் கொப்பளிக்க காத்திருந்தார்.

இவர் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தது தான் தாமதம், “என்னய்யா நினைச்சிக்கிட்டுருக்கே நீ… இந்த புஸ்தகத்தை எல்லாம் வீட்டுக்குள்ளே கொண்டு வந்து படிச்சிக்கிட்டுருக்கே… அந்தம்மாவையெல்லாம் பார்க்கப் போகாதேன்னு நான் சொன்னா… நீ என்னடானா அவங்க பேச்சையெல்லாம் கேட்டுட்டு ஏதோ மந்திரத்தை எல்லாம் வீட்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டுருக்கே…. நம் மனுஷா யாருக்காச்சும் தெரிஞ்சா என்ன ஆகும்?”

இந்த திடீர் தாக்குதலை வெங்கடாச்சாரிஎதிர்பார்க்கவில்லை. ஆனால் சுதாரித்துக்கொண்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நீ சித்த பேசாம இருக்கியா? எனக்கு இப்போ மூணு லட்சம் பணம் வேணும். யாரு கொடுப்பாங்க? இந்த பதிகத்தை படிச்சா பணம் கிடைக்கும்னு சொன்னாங்க. அதனால படிச்சிகிட்டு இருக்கேன்… இன்னும் ஒரு நாற்பது நாள் தான் படிப்பேன். அது வரைக்கும் நீ இதுலே தலையிடாதே….” என்றவர்… ‘மூணு லட்சம்’ ‘மூணு லட்சம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டே அந்த பதிகத்தை நிறுத்தாமல் படித்துக்கொண்டே வந்தார்.

கடைசியில இவர் நினைத்தது போல ஒரு நாள் நடந்துவிட்டது.

எப்படி?

ஒரு ஒன்றரை மாதம் கழித்து ஒரு நாள், பூ, பழம், வெற்றிலைப் பாக்கு இவற்றை வாங்கிக்கொண்டு மனைவியையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிட்டார். மதியம் ஒரு மூன்று மணியிருக்கும். என் வீட்டு காலிங் பெல் ஒலிக்கிறது. இந்த நேரத்துல யார்டா என்று கதவைத் திறந்தால் வெங்கடாச்சாரி நிற்கிறார். பக்கத்துல அவங்க ஒய்ப்.

“வாங்க… வாங்க… என்ன திடீர்னு என்னை தேடி வந்திருக்கீங்க?” என்று அவரை வரவேற்று ஹாலில் அமரவைத்தேன்.

“என் பொண்ணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடிச்சு…. அதான் உங்களுக்கு இன்விடேஷன் கொடுக்க வந்தேன்” என்றவர் அவரே தொடர்ந்தார்.

“பணத்தை தேடி வரவழைக்கும் பதிகம்னு நீங்க பேசும்போது சொன்னதை கேட்டுட்டு நானும் அந்த பதிகத்தை படிக்க ஆரம்பிச்சேன். எனக்கு அப்போ உண்மையிலேயே மூணு லட்சம் தேவைப்பட்டது. என் பொண்ணுக்கு ஒரு நல்ல இடத்துல வரன் அமைஞ்சு வந்தது. எல்லா செலவும் சேர்த்து ஒரு மூணு லட்சம் தேவைப்பட்டது. என் மூத்த பொண்ணுக்கு போன வருஷம் தான் கல்யாணம் பண்ணி வெச்சேன். ஸோ… புதுசா எந்த லோனுக்கும் அப்ளை பண்ண முடியாது. மாப்பிள்ளை வீட்ல வேற ஒரு மாசத்துக்குள்ளே பதில் சொல்லுங்க… இல்லே நாங்க வேற இடத்துல பார்த்துக்குறோம்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. வாங்குற சம்பளம் முழுக்க போட்ட லோனுக்கு இன்ஸ்டால்மென்ட் கட்டறதுலயே போய்டுது. நான் போய் சொந்தக்காரங்க கிட்டே கடன் கேட்டா, “ஏம்பா கலக்டரேட்ல வேலை பார்த்துகிட்டு எங்ககிட்டே கடன் கேட்கிறே? போய் ஏதாச்சும் பேங்க்ல கேட்டுப் பாரு அப்படின்னு சொல்றாங்க. பேங்க்லயோ புதுசா எந்த கடனும் வாங்க முடியாது. அப்படியிருக்குறப்போ அவ்ளோ பெரிய தொகைக்கு நான் எங்கே போறதுன்னு ஒன்னுமே புரியலே.

என் மனைவி வேற, ‘வயசுக்கு வந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுக்க வக்கில்லை. இதுல ஆபீஸ் போறேன்னு ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாம காலைல போய்ட்டு சாயந்திரம் வரவேண்டியது’ன்னு தினமும் அர்ச்சனை பண்ணிக்கிட்டுருந்தா…. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைல தான் உங்க பேச்சை கேட்டேன். இந்த பதிகத்தை படிச்சா பணம் கிடைக்கும்னு நீங்க சொன்னீங்கல்ல… அதுக்கப்புறம் அந்த பதிகத்தை படிக்க ஆரம்பிச்சேன். நான் இந்த பக்கம் பதிகத்தை படிப்பேன். அந்த பக்கம் என் மனைவி அர்ச்சனை பண்ணுவா. இந்த பக்கம் பதிகத்தை படிப்பேன். அந்த பக்கம் அவ அர்ச்சனை பண்ணுவா. ஒரு நாள் ராத்திரி 11 மணிக்கு அவ அர்ச்சனையை ஆரம்பிச்சுட்டா. “ஆமாம்…. நாலு இடம் போனோமா… நாலு பேரை பார்த்தோமா பணத்தை புரட்ட ஏற்பாடு பண்ணினோமா, பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி வெச்சோமான்னு இல்லை. அந்தம்மா ஏதோ சொல்லிட்டாங்கன்னு இதையே உட்கார்ந்து படிச்சிக்கிட்டுருந்தா பணத்தை என்ன கடவுள் கூரையை பிச்சுகிட்டா கொட்டப்போறார்?”ன்னு திட்டினா.

நிம்மதியா உட்கார்ந்து பதிகத்தை கூட படிக்க விடாம அவ திட்டினதை தாங்க முடியாம இவர் வீட்டை விட்டு எங்காவது போய்ட்டு அப்புறமா அவ தூங்கின பிறகு வரலாம்னு வெளியே கிளம்பிட்டார். எப்போன்னா ராத்திரி பதினொரு மணிக்கு.

வெளியே வந்தவர் ஆழ்வார் திருநகரி மார்கெட் தெருவுக்கு வந்தார். அங்கே அப்போது ஒரே ஒரு பெட்டிக்கடை தான் திறந்திருதது. அங்கே ஒரு பழம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு அந்த கடைக்காரனிடம் கதை பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த கடைக்கு வந்த ஒருவர் இவரைப் பார்த்துவிட்டு, “நீ… நீ… வெங்கடாச்சாரி தானே?” என்று கேட்க, “ஆமாம்.. நான் தான் வெங்கடாச்சாரி” என்று சொல்லியிருக்கிறார்.

“அட… என்னை தெரியலியாப்பா…?? நம்ம ரெண்டு பேரும் ஒன்னா எய்த் ஸ்டாண்டர்ட் வரைக்கும் படிச்சோமே…”

“ஆமாம்… எப்படிடா இருக்கே… பார்த்து ரொம்ப நாளாச்சு… இப்போ எங்கே இருக்கே என்ன பண்றே?”

“நான் இப்போ துபாய்ல இருக்கேன். அங்கேயே செட்டிலாகிட்டேன். அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை தான் வருவேன்… இந்த முறை உன்னை சந்திக்கனும்னு இருக்கு போலருக்கு”

“ரொம்ப சந்தோஷம்பா உன்னை மீட் பண்ணினதுலே”

“அது சரி… இந்த நேரத்துலே நீ எங்கே இங்கே? பெட்டிக்கடைக்கு?”

“அதே ஏன்பா கேக்கிறே….” என்று அலுத்துக்கொண்டவர் நடந்த அனைத்தையும் விளக்கி, தன் மனைவி தூங்கியவுடன் தான் மீண்டும் வீட்டுக்கு செல்லவிருப்பதாக கூறினார்.

“கொஞ்சம் பொறுமையா இருன்னா என் ஒய்ப் கேட்கமாட்டேங்கிறா… இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல ரிட்டயர் ஆகிடுவேன்…. அதுக்கு அப்ப்புறம் பொண்ணு கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி வைக்கலாம்னு சொன்னா கேட்கமாட்டேங்கிறா!”

“ஓ… அப்படியா.. கவலையேபடாதே… நான் நிறைய பணம் கொண்டு வந்திருக்கேன்… உனக்கு அந்த மூணு லட்சத்தை நான் தர்றேன்… பொண்ணோட கல்யாணத்தை உடனே ஜாம் ஜாம்னு நடத்து!”

“என்னப்பா நீ… நிஜமாத் தான் சொல்றியா இல்லே காமெடி கீமெடி பண்றியா?”

“இல்லேப்பா… என் கிட்டே பணம் போதுமானளவு இருக்கு. உனக்கு அது இப்போ உபயோகப்படும்னா எனக்கு ரொம்ப சந்தோஷம். உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ரெண்டு வருஷம் கழிச்சி நீ ரிட்டயர் ஆகும்போது எனக்கு பணத்தை திருப்பி கொடுத்தா போதும்” என்று அவர் சொல்ல, இவருக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை. கண்களிலிருந்து ஆறாக கண்ணீர் பெருகி வழிந்தது.

“உடனே கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை பண்ணு… நான் இங்கே இருக்கும்போதே கல்யாணத்தை முடிச்சிடு… ஆசீர்வாதம் பண்ணிட்டு அப்புறம் துபாய் போறேன்” என்றார்.

சொன்னது போல, அடுத்த நாள் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு போய்விட்டார் அந்த நண்பர்.

மனைவி கேட்டாள்… “என்ன திடீர்னு ஒரே சந்தோஷமா இருக்கீங்க… புது ஷர்ட்டெல்லாம் பலமா இருக்கு?”

“இதோ பார்… அந்த பதிகத்தை படிக்க ஆரம்பிச்ச நேரம் மூணு லட்சம் தேடி வந்துடுச்சு… இனி கல்யாண ஏற்பாட்டை ஜாம் ஜாம்னு நடத்தவேண்டியது தான் பாக்கி”

“அடப்பாவி மனுஷா… படிக்கும்போதே அஞ்சு லட்சம் அஞ்சு லட்சம்னு சொல்லியிருக்கக்கூடாதா… அஞ்சு லட்சம் கிடைச்சிருக்குமே… அதுல கூட எதுக்குய்யா சிக்கனம்?”

பதிகத்தை ஏன் படிக்கிறீர்கள் என்று சண்டை போட்டவள், “ஏன் குறைவாக கேட்டாய்… அதிகமாக கேட்டால் சிவன் அதிகம் கொடுத்திருப்பாரே…” என்று தற்போது சண்டையிட்டாள்.

கல்யாணப் பத்திரிக்கையெல்லாம் அடிச்சு இதோ என் வீட்ல என் முன்னால பத்திரிகை இருக்கு.

“இளம்பிறை அம்மா… ஞானசம்பந்தர் பாடினாரே பதிகம்… அது சாதாரண பதிகம் இல்லேம்மா… கல்யாணத்தை கைகூட வெச்சு… கல்யாண மாப்பிள்ளையை கொண்டு வந்து, அதுக்கு தேவையான பணத்தையும் கொண்டு வந்து, ராத்திரி பதினொரு மணிக்கு அதை உறுதி செய்ததோடல்லாமல் மறுநாள் காலைல அதை என்னை தேடி வரவெச்சிடுச்சும்மா… யார் என்ன சொன்னாலும் இனிமே நான் கவலைப்படப் போறதில்லை… பத்திரிக்கை கொடுத்திருக்கேன் வந்துடுங்க… கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு தாம்பூலப் பை கொடுப்போம் இல்லீயா… அதுல இந்த பதிகத்தை பிரிண்ட் செஞ்சி உள்ளே போட்டு தரப்போறேன். ஆழ்வார் திருநகரில யார் என்ன சொன்னாலும் நினைச்சாலும் கவலை இல்லே. ‘ஓ… இதை படிச்சிட்டு தான் வெங்கடாச்சரிக்கு பணம் கிடைச்சுதான்னு தெரிஞ்சா தெரியட்டும்!” அப்படின்னார்.

அதே மாதிரி கல்யாணத்தன்னைக்கு பதிகத்தை எல்லாருக்கும் தாம்பூலப் பையோட சேர்த்து கொடுத்தார்.

மூணு லட்ச ரூபாய் பணம். சிரமப்படாமல், எதையும் அடகு வைக்காமல், விற்காமல், எந்த வித அலைச்சலும் இன்றி, நான் கொடுக்குறேன் தேவையான பணத்தை வட்டியில்லாம என்று ஒருவரை சொல்ல வைத்தது என்றால் இந்த பதிகத்தின் மகத்துவம் தான் என்ன…. இது சாதாரண விஷயமா என்ன?

3 லட்சம் விடுங்க… ஒரு முப்பதாயிரம் கேட்டுப் பாருங்க… அட ஒரு மூவாயிரம் தான் கடனா கேட்டுப் பாருங்க… அப்போ புரியும் பணத்தோட மதிப்பும் அருமையும் நாம் சொல்ற இந்த பதிகத்தின் பெருமையும்…!

வெங்கடாச்சாரி ரிட்டயர் ஆனபிறகு, தனது நபரிடம் சொன்னது போல மூன்று லட்ச ரூபாய் பணத்தை செட்டில் செய்தததோடு தற்போது பேரப்பிள்ளைகளை கொஞ்சியபடி சௌகரியமாக ஓய்வுக்காலத்தை அனுபவித்து வருகிறார்.

மேலே நான் கூறியது உண்மை சம்பவம். வெங்கடாச்சாரி அவர்கள் தூத்துக்குடி கலக்டரேட் அலுவலகத்தில் DRDA DEPARTMENT ல் வேலை பார்த்து ஒய்வு பெற்ற உயரதிகாரி.

இந்த பதிகத்துக்கு ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. ஒன்று ரெண்டு இல்லை. ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. காரணம் இதை பாடியது சாதாரண மனிதர் அல்ல. கருவிலே திருவுடையவராய் திகழ்ந்த அம்பிகையின் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தர் பாடிய பதிகம். அந்த பதிகத்தின் மேல் நம்பிக்கை கொண்டு பாராயணம் செய்கிறவர்களுக்கு பணத் தேவை நிச்சயம் பூர்த்தியாகும். அதுமட்டுமல்ல… அனாவசியமாய் பணம் செலவாகாது… பணம் கையில் நிற்காமல் கையைவிட்டு ஓடாது… அதன் மூலம் பழியோ பகையோ வந்து சேராது.

திருவாவடுதுறை தலத்தில் சம்பந்தர் பாடிய அற்புதமான பதிகம் இது.

Ilampirai Manimaran 2

இந்த பதிகத்தை பற்றி திருநெல்வேலியில், நெல்லையப்பர் கோவிலில்…. ஒரு முறை பேசும்போது, “இந்த பதிகத்தை படிங்க… நிறைய பணம் கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்…. சொல்லும்போதே… கவனிங்க… வார்த்தைங்க எப்படி விழுது பாருங்க… பதிகத்தை சொல்வேன்.. பணம் வரும்… பதிகத்தை சொல்வேன் பணம் வரும்…. ” நான் பேசிக்கொண்டே இருக்கிறேன்… முன்னே உட்கார்ந்திருந்த ஜனங்கள் எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஒன்னுமே புரியலே…. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் நடந்த சம்பவம் இது.

விஷயம் என்னன்னா…. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவசரமாக ஹைதராபாத் கிளம்ப வேண்டிய சூழல். கிளம்புவதற்கு முன்னர் எனக்கு இந்த சொற்பொழிவுக்காக கொடுக்கவேண்டிய பணத்தை ஒரு சிறிய தாம்பாளத்தில் அடுக்கி, அதனுடன் பூ, பழம் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு பின்னால் நிற்கிறார். அது எனக்கு தெரியாது. நான் கவனிக்கவில்லை. ஆனால் என் முன் உட்கார்ந்திருக்கும் ஆடியன்ஸ் பார்த்துவிட்டார்கள்.

இங்கே நான் அந்த பதிகத்தை அப்படியே ஒரு முறை சொல்லி… “இந்த பதிகத்தை சொல்லுவேன்… பணம் வரும்… பதிகத்தை சொல்லுவேன்… பணம் வரும்…” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களில் ஒருவருக்கு பொறுக்கவில்லை. “இதோ வந்துடுச்சு… பாருங்க… ” என்று எழுந்து என் பின்னால் கையை காண்பித்தார். அப்போது தான் நான் பணத்துடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நின்றுகொண்டிருப்பதை பார்த்தேன்.

“இதோ பாருங்க… பதிகத்தை சொன்னேன்…பணம் வந்துவிட்டது” என்றேன்.

உடனே ஒருவர் எழுந்து, “நான் சொன்னால் எனக்கும் வருமா?” என்று கேட்டார்.

“நிச்சயம் வரும். நம்பிக்கை தானே வாழ்க்கை!”

====================================================================

இந்த பதிகத்தை பாராயணம் செய்ததால் வீடு தேடி ஒருவருக்கு ரூ.10,000/- பணம் வந்தது பற்றி நாம் முன்பே பதிவிட்டிருக்கிறோம். அதுவும் நம் தளம் சார்பாக அந்த தொகை அவரை தேடி வந்தது.

(Check : பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!)

பொருளாதார தேவையை தீர்க்கும் மேற்படி ‘இடரினும் தளரினும்’ பதிகத்தை ஞானசம்பந்தர் எந்த சூழலில் பாடினார் என்பது பற்றியும் அந்த பாடல் வரிகளுடனும் ஏற்கனவே பதிவு ஒன்று தரப்பட்டுள்ளது. அதை ஒரு முறை பார்க்கவும்.

(பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு அருமருந்து !)

இதே போல நம் வீட்டிலும் ஒரு சுவையான சம்பவம் சமீபத்தில் நடந்தது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள், நாம் அலுவலகம் புறப்புடும்போது அம்மாவை அழைத்து அந்த மாதத்திற்கான வீட்டுச் செலவுக்கான தொகையை தந்தோம். எப்போதும் வாடகை, கரண்ட் பில் உள்ளிட்டவற்றை சரியாக செட்டில் செய்துவிடும் நாம் வீட்டுக்கு தரும் பணத்தை மட்டும் கொஞ்சம் இழுத்தடித்து தான் தருவது வழக்கம். காரணம், அதில் தான் அவசரத்திற்கு கை வைக்க முடியும். வீட்டு வாகையோ கரண்ட் பில்லோ ஒரு நூறு இரு நூறு குறைத்து தரமுடியுமா? வீட்டு மளிகை செலவுக்கு கொடுக்கும் காசில் கை வைப்பது தான் (ஹி… ஹி…!!) பெரும்பாலானோர் வழக்கம்.

ஆனால்… அன்று என்ன நினைத்தோமோ தெரியாது. கையில் காசு இருக்கும்போதே கொடுத்துவிடவேண்டும். இல்லையென்றால்… கடைசியில் நூறு நூறாக அது குறைந்து கொடுக்க நினைத்தது ஒரு தொகை, கடைசியில் கொடுத்தது ஒரு தொகை என்றாகிவிடுகிறது. விளைவு… மாதக் கடைசியில் பத்தியச் சாப்பாடு சாப்பிடவேண்டியிருக்கிறது. குளிக்கும்போது சோப்பு காலி என்றால் புது சோப்பு எங்கே என்று கத்த முடியாது….!

padhigangal

எனவே கையில் இருக்கும் தொகை செலவாவதற்கு முன்னால் கொடுத்துவிடலாம் என்று கருதி, அம்மாவை கூப்பிட்டு பணத்தை கொடுத்தோம். கொடுத்துவிட்டு இப்படி ஒரு பதிவை தயார் செய்து வருகிறேன்… இப்படி ஒரு சம்பவம் இந்த பதிவில் இருக்கிறது. பாக்கியை டைப் செய்து முடித்தவுடன் தமிழ் புத்தாண்டு அன்று வாசகர்களுக்கு இதைத் தான் அளிக்கப்போகிறேன்… என்று கணினியில் இந்த தட்டச்சை காண்பித்தோம்.

“இப்போ இந்த பதிகத்தை தான்டா நான் படிச்சிட்டு இருந்தேன். இப்போ தான் படிச்சி முடிக்கிறேன்…. நீ கூப்பிட்டு பணம் கொடுக்குறே… அதுவும் எப்போதும் இல்லாத அளவு நான் கேட்கிறதுக்கு முன்னாலேயே கொடுக்குறே… அதுவும் இத்தனை சீக்கிரமா வேற கொடுக்குறே!” என்றார்.

அம்மா வீட்டில் தினசரி சில ஸ்லோகங்களை படித்து வருவது வழக்கம். ‘பலன் தரும் பதிகங்கள்’ என்கிற சிறு பாகெட் சைஸ் நூலில் இது போன்ற முக்கியமான பதிகங்கள் உள்ளன. நமது உழவாரப்பணி ஒன்றின் போது (சேக்கிழார் மணி மண்டப உழவாரப்பணி)  கலந்துகொண்டோருக்கு பரிசளிக்க இந்த புத்தகத்தை சுமார் 20 வாங்கியிருந்தோம். அதில் எஞ்சிய புத்தகம் ஒன்றை அம்மா எடுத்து வைத்து படித்து வந்திருக்கிறார். அதில் உள்ள இந்த பதிகத்தை படித்திருக்கிறார். அதுவும் அன்று தான் அவர் அதை படித்திருக்கிறார்.

DSC02782

சொன்னவுடன் நமக்கே சிலிர்ப்பாகிவிட்டது.

எனவே வாசகர்களே… உங்கள் பொருளாதார பிரச்சனை எத்தகையதாக இருந்தால் என்ன? உங்கள் நியாயமான தேவைகளுக்கு பணம் கிடைக்க, அதுவும் வினையற்ற செல்வமாக அது கிடைக்க இந்த பதிகத்தை படித்து வாருங்கள்.

மனதுக்குள் குறித்தாகிவிட்டது… நமது அடுத்த பாரதி விழாவில் நிச்சயம் திருமதி.இளம்பிறை அம்மா அவர்கள் கலந்துகொண்டு பேசுவார்கள். நம் மனதில் நாம் ஒரு குறிக்கோளை வைத்தோமானால் அதை அடையாமல் விடுவதேயில்லை. அதுவும் மிக உயர்ந்த லட்சியங்களை மனதில் விதைத்துவிட்டால் அது அதை அறுவடை செய்யாமல் விடாது. இதற்கிடையே திருமதி.இளம்பிறை மணிமாறன் அவர்களை நேரில் சந்தித்து நம் தளம் சார்பாக அவரை கௌரவிக்க அப்பாயின்மென்ட் கிடைத்திருக்கிறது. விபரங்கள் விரைவில்…!

இளம்பிறை மணிமாறன் அவர்கள் கூறிய இது போன்ற உண்மை சம்பவங்கள் மேலும் இந்த தளத்தில் இடம்பெறும்.

====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

====================================================================

திருத்தணி என் சுவாமிநாதன் அவர்களின் இனிய குரலில் ‘இடரினும் தளரினும்’ – Youtube video

====================================================================

இடரினும் தளரினும்….

பாடல் எண் : 1

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

திருப்பாற்கடலில் , அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் , இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும் , தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும் , உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 2

வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும் , பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும் , தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் , வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும் , உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக ) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 3

நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கங்கையையும் , நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும் , கனவிலும் , மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில் , அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 4

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல் , அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 5

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும் , மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும் , பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும் , உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல் , வேறெதனையும் நான் சிந்தை செய்யேன் . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 6

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி , நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும் , எம் தந்தையே ! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது . அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ . ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 7

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை , அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும் , அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 8

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 9

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

திருமாலும் , மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும் , பசியால் களைத்திருக்கும் நிலையிலும் , உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது . அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 10

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

புத்தரும் , சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும் , தலைவா ! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 11

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

பொழிப்புரை :

அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர் . துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார் .

(பாடல் மற்றும் விளக்கம் எழுத்துரு  : www.thevaaram.org)

====================================================================

Also check similar articles and true incidents :

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

====================================================================

[END]

 

10 thoughts on “தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

  1. கடந்த வாரம் ஒரு மதுரையில் இருக்கும் வள்ளுவன்பார்வை உறுப்பினர் ஒருவர் இப்பதிகத்தினைக் குறித்துக் கேட்டார். அவரும் இவ்வம்மையாரின் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டுவரும் அன்பர் தான். இப்பதிகத்தையும் இதற்கான விளக்கத்தையும் கேட்டிருந்தார். shaivam.org தளத்திலிருந்துதான் எடுத்து அனுப்பினேன். திருஞான சம்பந்தப் பெருமான் பாடிய அனைத்து பதிகங்களுமே நம்பிக்கையுடன் படித்தால் நிச்சயம் பலன் தரக்கூடியதென்பதை மற்றுமொருமுறை அம்மையாரின் அனுபவத்தின் மூலம் அறியத் தந்தமைக்கு நன்றிகள் சகோதரரே!.

  2. அருமை அருமை. விஷு கனி காணும் நன் நாளில் மிக பொருத்தமான பதிவு.

  3. மிகவும் சிலிர்ப்பூட்டும் பதிவு. தமிழ் புத்தாண்டு அன்று இந்த பதிவை வெளியிட்டது மிகவும் பொருத்தம். இடரினும் தளரினும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    திருமதி இளம்பிறை மணிமாறன் கூறியுள்ள வெங்கடாச்சாரி அவர்களுக்கு பணம் கிடைத்த சம்பவம் மிக அருமை.

    இந்த புத்தாண்டில் தினமும் இந்த பாடலை படித்து நாமும் பொருளாதார முன்னேற்றம் பெற்று அடுத்தவர்களைய்ம் முன்னேற்றுவோம்

    நானும் மேற்படி புத்தகத்தை நம் சேக்கிழா மணிமண்டப உழவாரப்பணியின் போது பெற்றேன்.

    பதிவு சுபெரோ சூப்பர்

    நன்றி
    உமா வெங்கட்

  4. வணக்கம்…………… அருமையான பதிவு…………திருமதி.இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவுகளை விஜய் தொலைக்காட்சி சானலில் காலைப் பொழுதுகளில் கேட்பதுண்டு……….மிகவும் அருமையான சொற்பொழிவாளர்…….. நம் தள பாரதி விழாவில் அவர்களின் சொற்பொழிவை நேரில் கேட்கப் போவது குறித்து மகிழ்ச்சி……….

    இடரினும் தளரினும் பதிகத்தின் மகிமையை உணர்ந்து கொண்டோம்……. நன்றிகள் பல……….

  5. வணக்கம் சுந்தர். எல்லோருகும் தேவையான ஒன்றை பற்றி பதிவு போட்டு இருகிறீர்கள்.நன்றி. மிகவும் அழகாக எழுதி இருகிரீகள். நால்வர் படத்தில் பெயர்கள் இடம்மாறி இருக்கிறது . பயனுள்ள அழகான பதிவுக்கு மீண்டும் நன்றி.செல்வ செழிப்போடு வாழ இறை அருளும் குருவருளும் துணை இருக்கட்டும். நன்றி.

  6. வாழ்க வளமுடன்

    புத்தாண்டு பதிகம் அருமை

    அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை

    நன்றி

  7. வணக்கம் திரு சுந்தர்,
    நான் ஆப்பிரிக்காவில் வேலை பார்கிறேன்.எனது 2 வருட ஒப்பந்தத்தை 1 வருடமாக ரத்து செய்து விட்டார்கள் .
    நான் இடரினும் தளரினும் பதிகம் மற்றும் சிவபுராணம் தினசரி காலை மற்றும் மாலை தொடர்ந்து படித்து வந்தேன். ஆனால் திடீரென மீண்டும் தொடர்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பை கொடுத்து உள்ளார்கள். அந்த ஈசனுக்கு நன்றி நன்றி . இந்த பதிகத்தை பற்றி தெரிய படுத்திய திரு சுந்தர் அவர்களுக்கும் நன்றி ..,
    இந்த பதிகத்தின் மகிமையை அனைவரும் தெரிந்து தொடர்ந்து படித்து வாழ்வில் வளம் பல பெற வேண்டும் என்று ஈசனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் .

    என்றும் அன்புடன்
    பாலு
    ஆப்ரிக்கா காங்கோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *