ஆயுத பூஜை என்றழைக்கப்படும் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவது பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இருப்பினும் ஒரு சிறிய நினைவூட்டல். தாமதமாக இந்த பதிவை அளிக்க நேர்ந்தாலும் இதில் கூறப்பட்டுள்ள பல விஷயங்களை இன்று மட்டுமல்ல என்று வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். கடைபிடிக்கவேண்டும்.
சரஸ்வதி பூஜைக்கு முதல் நாளே குழந்தைகளின் பாடப்புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை ஒரு பலகையில் அடுக்கி மஞ்சள் துணியால் பாதி மூடியபடி போர்த்திவிட வேண்டும்.
சரஸ்வதி பூஜையன்று காலையில் சரஸ்வதி படத்தை அலங்கரித்து, 3 விளக்குகளை அருகே வைத்து வழக்கமான பூஜை முறைகளை செய்ய வேண்டும். சரஸ்வதி தேவிக்கு வெண்ணெய், பால், தயிர், பாகுவெல்லம், தேன், மோதகம், வடை, கதம்ப சாதம் ஆகியவை பிடிக்கும். ஆகவே இதில் ஏதாவது ஒன்றை தயார் செய்து படைப்பது நல்லது.
தாமரை மலர், அரளி மலர், முல்லைச்சரம் சுற்றி ஏதாவது 3 வகை பழங்களையும் வைத்து, சர்க்கரை பொங்கலுடன் சாமி கும்பிடுங்கள். இதன் பின்னர் பின் வரும் பாடலை பாடுங்கள்.
தூய வெள்ளுடையாய் போற்றி,
துங்க வெண் கமலப்பூவில் மேயினை போற்றி
வெண்மை விரி செப மாலை ஏந்தி
ஆய்தரும் யாழை வாசித்தனைவரும் நலம் பெறச்செய்
தாயுயர் சத்துவஞ்சார் தனித்தெய்வமானாய் போற்றி
இந்தப்பாடலை பாடி முடித்த பிறகு ஓம், ஐம், ஹரீம், ஐம்க்லீம் ஸெளம், ஓம், நமோ பகவதி, சரமேச்வரி மகாத்ரிபுரசுந்தரி, மனோண்மணியை ஸ்வாகா என்ற மந்திரத்தை சொல்லி குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்குங்கள். இந்த நாளில் பெரியவர்களிடம் குழந்தைகள் ஆசீர்வாதம் பெறுவது மிகவும் சிறப்பானது. சரஸ்வதி பூஜையை குடும்பத்துடன் பயபக்தியுடன் மேற்கொண்டால் சகல கல்வி பாக்கியமும் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
கீழ்கண்ட டிப்ஸ்களை ஆயுதபூஜை அன்று மட்டுமல்ல.. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பின்பற்றலாம்.
1) இன்று அனைவரும் குறைந்தது இரு கை நிறைய பொரி சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு தரவேண்டும். பறவைகளுக்கும் பசுக்களுக்கும் பொரி தரவேண்டும். பொரி சாப்பிடுவது பாபம் போக்கும்.
2) வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் போர்டுகள், நமது பணியை சுலபமாக்கும் கருவிகள் வாகனங்கள் அனைத்தையும் துடைத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றில் ஒரு சில பொருட்களை பூஜையில் வைக்க வேண்டும்.
2) நம்மை சுமந்து செல்லும் வாகனங்கள், நமது உயிருக்கு உத்திரவாதம் அளிக்கின்றன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போய் பத்திரமாக சேர்க்கின்றன. எனவே வாகனங்களை கழுவி, துடைத்து சந்தனம், குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வணங்கவேண்டும். ஆயுத பூஜையே ஒரு நன்றி அறிவிப்பு தான்.
3) உங்கள் வீட்டில் நீங்கள் விற்க நினைக்கும் பழைய பொருள் இருந்து உரிய விலைபோகாமல் இருந்தால் (வாகனம், பீரோ, பழைய சைக்கிள், தையல் மிஷின்) இப்படி எதுவாயினும், அதை சுத்தமாக துடைத்து, கழுவக் கூடிய பொருளாக இருந்தால் கழுவி, தூப தீபம் இட்டு பூக்களை சூட்டி அலங்கரித்து வைத்தீர்கள் என்றால் அப்பொருள் சுலபமாக விற்றுப்போகும் அதிசயத்தை காணலாம். இதை ஆயுத பூஜையப்போது தான் செய்யவேண்டும் என்றில்லை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
4) நீங்கள் பயன்படுத்திய ஒரு பொருளால் இனி உங்களுக்கு நன்மையோ பயனோ இல்லை என்பதற்காக அதை எட்டி உதைப்பது, தூக்கி வீசுவது கூடவே கூடாது. குறிப்பாக வாகனங்களை. ஒரு சிலர், தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை (இருசக்கர வாகனங்களோ நான்கு சக்கர வாகனங்களோ) அது சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதை உதைப்பது, தகாத சொற்களால் திட்டுவது என்கிற வழக்கத்தை வைத்திருப்பார்கள். அப்படி செய்வது மிக மிக தவறு. அப்படி செய்தால் அதற்குரிய விலையை நீங்கள் கொடுக்க நேரிடும்.
5) வீட்டில் இன்று அவசியம் சாம்பிராணி புகை போடவேண்டும்.
6) இன்று கட்டாயம் சரஸ்வதியின் படத்துடன் குல தெய்வ படத்தையும் பூஜிக்க வேண்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்ற குலதெய்வ அருள் கிட்டும்.
குருவாரமான இன்று குரு மகிமையை படிக்காமலா?
பொரி சாப்பிட்டா பாபம் போகும் என்பது சாஸ்திரம்!
ஸந்நிதிக்கு வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழமோ கற்கண்டோ ஸ்ரீபெரியவாள் தவறாமல் வழங்குவார். தாமே நேராகக் கொடுப்பதுண்டு; அணுக்கத் தொண்டர்களைக் கொண்டு கொடுப்பதுமுண்டு.
விடுமுறை நாள்களில் பள்ளி ஆசிரியர்கள் பஸ் அமர்த்திக்கொண்டு பசங்களுடன் வருவது வழக்கம். அதனால் அந்நாள்களில் பணியாளர்கள் முன்னதாகவே வாழைப்பழமும் கற்கண்டும் நிறைய எடுத்து வைத்து விடுவார்கள்.
ஒரு விடுமுறை தினத்தன்று பெரியவாள் “இன்னிக்குக் கொழந்தைகளுக்கு வாழைப்பழம், கல்கண்டு குடுக்க வேண்டாம்” என்றார். ஏன் அப்படிச் சொன்னாரென்று புரியவில்லை.
தப தப என்று ஒரு பஸ்-லோட் பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வந்து விட்டனர். தம்மைக் காண வந்த சிட்டுக்களுக்கு ஒன்றும் தராமலா இந்த மா மதுர மஹா தாத்தா திருப்பி அனுப்பி வைப்பார் என்று பணியாளர் எண்ணினார்.
சரியாக அதே சமயம் திருமாளம் பஞ்சாபகேச ஐயர் என்ற பக்தர் ஒரு மூட்டை ஸஹிதம் வந்தார். மூட்டையைப் பெரியவாளுக்கு ஸமர்ப்பித்து, “பெரிவா ப்ரயோஜனப் படுத்திக்கணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
மூட்டையிலிருந்து குண்டு மல்லிகைகள் போன்ற நெற்பொரி. பெரியவாள் திருவமுது செய்து வந்தது அதைத்தான். இதை நினைத்தே அவர் ‘ப்ரயோஜனப் படுத்தி’க் கொள்ளச் சொன்னது. ஆனால் பெரியவாளோ தம்முடைய பிக்ஷைக் காலம் வரை தள்ளிப்போடாமல் அப்போதே அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு விட்டார்.
பணியாளரைப் பார்த்து, “தேவாளுக்குப் பொரி ரொம்ப இஷ்டம். தெரியுமோ? கல்யாணத்துலகூட லாஜ ஹோமம்னு பொரி ஹோமம் பண்றாளோன்னோ? இந்தக் கொழந்தைகள்ளாம் தேவாள்தான். இவாளுக்கு வெல்லச் சக்கரையும் கொஞ்சம் சேர்த்து பொரி நெறய்ய விநியோகம் பண்ணுங்கோ. ஒடம்புக்கும் ஹிதம். மனஸுக்கும் ஸத்வம். பொரி சாப்பிட்டா பாபம் போறதுன்னு சாஸ்த்ரம்” என்றார்.
அவ்வாறே சிறாருக்கு வெல்லச் சர்க்கரை சேர்த்த பொரி வழங்கப்பட்டது. ஆவலாக வாங்கிக் கொண்டனர்.
தலைமையாசிரியர் வியப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் சொன்னார் : “பசங்களில் பல பேருக்கு மஞ்சட்காமாலையும், வயிற்றுப்போக்கும். வாழைப்பழம் கூடாதென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். ‘பெரியவர்களோ வாழைப்பழம் கொடுப்பதுதானே வழக்கம்? அப்படிக் கொடுத்தால் பிரஸாதத்தை என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டுக் கொண்டேதான் வந்தேன். பெரியவர்களுக்குத் தெரியாததா? அதுதான் நெற்பொரி கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்”.
அந்த தீர்க்க திருஷ்டி இருக்கட்டும். அது எல்லா மஹான்களுக்குமே உண்டுதான். ஆனால் அந்தப் பள்ளிப் பாலர்களை தேவர்கள் என்றாரே! அந்த எளிமை அவரொருவருக்கே உரித்தானதல்லவா?
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
Also Check :
===============================================================
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
================================================================
[END]
இன்று சரஸ்வதி பூஜையை வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடினோம். ஆயுத பூஜையின் 6 டிப்சும் மிக அருமை. என்றைக்கும் பயன் தரக் கூடிய ஒன்று.
இன்று குரு வாரத்தில் மகா பெரியவாளின் மகிமையை படித்து மெய் சிலிர்த்தோம். குழந்தைகளை தேவர்கள் என்று சொல்லி எவ்வளவு உயர்ந்த இடத்தில் குழந்தைகளை வைத்திருக்கிறார். மகா பெரியவா ஓர் சர்வ வியாபி. எங்கும் நிறைந்த பரம்பொருள். இன் நான் நாளில் அவர் பாதம் வணங்குவோம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்
குருவே சரணம்
நன்றி
உமா
Arumai.
வணக்கம்…….
சரஸ்வதி பூஜை டிப்ஸ் மிகவும் நன்று………வழக்கம்போல் குருவின் மகிமையும் அருமை………..அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்…………..
உண்மை தான் செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து வணங்கும் வழக்கம் நம் புண்ணிய பூமியில் மட்டுமே உள்ளது. சரஸ்வதி பூஜை டிப்ஸ் உண்மையில் அருமை. அனைவரும் பின்பற்ற வேண்டியது. மகா பெரியவாவின் ஞானதிருஷ்டிக்கு ஈடு இணையேது…! குழந்தைகளின் உடல் நிலை பற்றிய குறிப்பறிந்து எவரும் கூறாமலே அவர்களுக்கு வாழைப்பழத்தை தவிர்த்தது நெகிழவைக்கும் ஒன்று. அதானால் தானோ என்னவோ பொரி சாப்பிடுவதின் மகத்துவம் நமக்கு தெரியவந்துள்ளது.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
அருமை. பெரியவாளுக்கு தெரியாதா யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று.
மிகவும் அருமை. நன்றி