இப்போதைக்கு ஒரு அவசர குறிப்பு : சரஸ்வதி பூஜை என்றழைக்கப்படும் ஆயுத பூஜையன்று அவசியம் அனைவரும் பொரி சாப்பிடவேண்டும். (குறைந்தது இரண்டு கைநிறைய). தேவர்களுக்கு மிகவும் பிடித்தமானது பொரி. பொரி சாப்பிடுவது பாபத்தை போக்கும் என்று மகா பெரியவா ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக அவல் பொரி. வெள்ளம் கலந்த அவல் பொரியை பசுக்களுக்கும், குழந்தைகளுக்கும், பறவைகளுக்கும் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.
ஏனைய விஷயங்கள் அடுத்து நாம் அளிக்கும் பதிவில் இடம்பெறும்.
இது சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் பதிவு. “செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம்” என்பதை உணர்த்தும் விதமாகவே, நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை தருவதற்காக நவராத்திரியில் ஒரு சிறப்பான நாளை ஒதுக்கி, அன்று வித்தைகளுக்கு தெய்வமான அன்னை சரஸ்வதியை துதிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
அன்னை சரஸ்வதி கல்விக்கு மட்டும் கடவுள் அல்ல. ஆயகலைகள் 64 க்கும் அவள் தான் அதிபதி. தவிர, சமயோசிதம், புத்திக்கூர்மை, நாவன்மை உள்ளிட்டவைகளுக்கும் அதிபதி கலைவாணியே.
ஒருவர் என்ன தான் திருமகளின் துணையோடு பொருளை சம்பாதித்தாலும் அவற்றை கட்டிக் காப்பாற்றி விருத்தி செய்ய கலைமகளின் அருள் அவசியம் வேண்டும். இல்லையெனில் ஓட்டைப் பாத்திரத்தில் நீரை நிரப்பிய கதையாகவே முடியும்.
“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் வாராதிங்கு இடர்.”
– கவிச்சக்கரவர்த்தி கம்பர்
முருகன் தந்த பேசும் சக்தி; கலைவாணி தந்த பன்மொழியாற்றல்!
அன்னை சரஸ்வதியின் அருளால் குமாரகுற்பரர் என்பவருக்கு இக்கட்டான நேரத்தில் பன்மொழி ஆற்றல் கைவரப்பெற்று, அதன் பயனாக நமக்கு கிடைத்த ‘சகலகலாவல்லி மாலை’ என்னும் அற்புத பாடல் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழறிஞர். கலைவாணியின் அருளை பூரணமாக பெற்றவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோரம் அமைந்திருக்கும் திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர் இவர். இவரது தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர்; தாயார் சிவகாமி அம்மையார். குமரகுருபரர் ஐந்து வயதுவரை வாய் பேசமுடியாது இருந்தார். தங்கள் மகன் இப்படி ஊமையாக வாய் பேசமுடியாது இருப்பதைக் கண்ட குமரகுருபரரின் பெற்றோர் மனம் வருந்தினர்; குமரகுருபரருடன் திருச்செந்தூருக்குச் சென்றனர். அங்கே முருகன் அருளால் குறை நீங்கப் பெற்று முருகனைப் போற்றும் வகையில் கந்தர் கலிவெண்பாப் பாடலைப் பாடினார்.
அதன் பின்னர் தாம் வாழும் காலம் முழுதும் தமிழ்த்தொண்டும் இறைத்தொண்டும் ஒருங்கே செய்துவந்த குமரகுருபரர், வடக்கிலும் தமிழின் பெருமையை நிலைநிறுத்தவேண்டி காசி சென்று விஸ்வநாதரை போற்றி பாடினார்.
காசியின் ரம்மியத்தையும் அந்த நகரின் தெய்வீகத்தையும் பார்த்த குமரகுருபரருக்கு கங்கைக் கரையில் தமிழ் தழைக்க ஒரு மடம் கட்ட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. மடம் கட்ட வேண்டும் என்றால் அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும் அல்லவா? அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில், மடம் முதலியவற்றை நிறுவுவதற்கு பல தடைகள் இருந்தன. அப்போது ஷாஜஹான் டில்லி பாதுஷாவாக இருந்தார். அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உள்ளிட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் ஆளுனராக இருந்தார். அவரை நேரில் சென்று சந்தித்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.
அவரை சந்திக்க கிளம்பிய குமரகுருபரர், தமது வசிய சக்தியால் ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது அமர்ந்து ஷிக்கோவை காண சென்றார். அவரை வரவேற்று உபசரித்தான் தாரா ஷிக்கோ. ஆனால் மேற்கொண்டு இருவராலும் பேச இயலவில்லை. காரணம் தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி (ஹிந்தி) தெரியாது.
எனவே, இக்கட்டான அந்த தருணத்தில் தமக்குப் பன்மொழியாற்றல் அருள வேண்டி அன்னை கலைவாணியை துதித்து “சகலகலாவல்லி மாலை” என்னும் பாடலை பாடினார். பிள்ளையின் இக்கட்டை பார்த்து சும்மாயிருப்பாளா அன்னை? சரஸ்வதியின் அருளால் அவருக்குப் உடனே பன்மொழியாற்றல் ஏற்பட்டது. இந்தியில் சரளமாகப் பேசும் புலமை வந்தது. இந்தியில் நவாப்பிடம் சாதுரியமாக பேசி மடம் கட்டுவதற்கு இடம் பெற்றார். கேதார கட்டத்தில் இன்றும் குமாரசுவாமி மடம் அழகுடன் இருக்கிறது.
தமிழ் செம்மொழி மாநாடு திமுக ஆட்சியில் நடைபெற்றபோது தமிழக அரசின் முயற்சியால் இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
ஸ்ரீகுமரகுருபரர் ஸ்வாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை
(சரஸ்வதி தோத்திரம்)
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா?
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள் பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அழங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே! நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதனூடாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேறை அருளுவாயாக!
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ்செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே
திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!
செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?
பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும் உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
வானம்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே! பண், பரதம்,நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
அடியார்கள் நல்மனதால் எண்ணிப் புனைகின்ற நூல்களில் காணப்படுகின்ற வீடு பேற்றின்பமாகிய பாலையும் உலகியல் இன்பமாகிய நீரையும் தனித்தனியாக பிரித்தறிகின்ற தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும் வெண்மையான பெண் அன்னம் போன்றவளே!
சகல கலாவல்லியே! பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் பாடலில் பொருந்து நிற்கின்ற பயனும் எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் எளியேனுக்கு கலைமகளே…..உமது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் நமக்கு வாய்க்கப்பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாவண்ணம் காலத்தால் அழியாத கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே!
சொல்வன்மையும், அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும் எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.
நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக!
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!
மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக!
(மேற்கூறிய பாடலுக்கு இணையத்தில் விளக்கவுரை தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில் sivathamiloan.blogspot.in என்னும் அன்பரது தளத்தில் கிடைத்தது. அவருக்கு எம் நன்றி!)
சகலகலா வள்ளி மலை – ஆடியோ – YOUTUBE
நாளை: விஜயதசமியின் சிறப்பு என்ன? விசேஷ தகவல்கள்!!
[END]
This is Naharani Chennai wishing you sir the best and we are proud to be a reader of LIVINGEXTRA the WORLD IS NOT ENOUGH to know moreand thanks to rishi sir for which leads to this new way to GOD too…NAHARANI CHENNAI
I dont know what to say…
But one day u r going to achieve something very big in ur life…
—————————————
நன்றி ராஜகோபாலன். எம் நல்ல முயற்சிகளுக்கு உங்களைப் போன்ற நல்ல ஆத்மாக்கள் துணையிருக்க நிச்சயம் வானமே எல்லை.
– சுந்தர்
excellent work and translation
சகல கலா வல்லி மாலை மிகவும் நன்றாக உள்ளது. சரஸ்வதி மற்றும் குமரகுருபரர் போட்டோ அருமை. எல்லோரும் இந்த ஸ்லோகத்தை படித்து பயன் பெறுவோம்.
நன்றி
உமா
சரியான நேரத்தில் சரியான பதிவு.
பொரி சாப்பிடுவது பாபம் போக்குமா? புது தகவல். நன்றி.
சகலாவல்லி மாலை தோன்றிய கதை அற்புதம். கலைவாணியின் அருள் கிடைத்த விதம் அதைவிட அற்புதம்.
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
Excellent article sir.
உங்களின் ஆற்றல் வியக்க வைக்கின்றது. தமிழ் தொண்டு, ஆன்மீகம், சமூகப்பற்று இன்னும் பல…. தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்க பல்லாண்டு…!