Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

print
துரை அரசாளும் அன்னை மீனாட்சியின் லீலா விநோதங்களையும் திருவிளையாடல்களையும் சொல்ல ஆரம்பித்தால் இந்த ஜென்மம் போதாது. எனினும் இந்த நவராத்திரி நேரத்தில் அன்னையின் பெருமையை பேசவேண்டும், நீங்கள் அதை படிக்கவேண்டும் என்று நாம் விரும்பும் காரணத்தால் இந்த உண்மை சம்பவத்தை பதிவு செய்கிறோம்.

அன்னைக்கு ‘மீனாட்சி’ என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா?

மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் அன்னைக்கு மீனாட்சி என்ற பெயர் தோன்றியது. மீன் + ஆட்சி = மீனாட்சி. மீனம் என்றால் மீனைக் குறிக்கிறது. அட்சம் என்பது கண்ணைக் குறிக்கிறது. அட்சி என்பது கண்ணை உடையவள் என்பதைக் குறிக்கிறது. மீன் தன் முட்டைகளை கண்ணால் பார்த்து நின்று அக்கண்பார்வை திறத்தால் அம்முட்டைகளிலிருந்து குஞ்சுகளைத் தோன்றச் செய்து காப்பாற்றும் இயல்பை உடையது. அவ்வாறே அன்னை மீனாட்சியும் உலகத்து உயிர்களையெல்லாம் தன் அருள் கனிந்த பார்வையால் காத்தருள்கிறாள். அதனால்தான் தேவி மீனாட்சி என்ற திருப்பெயர் பெற்று திகழ்கிறாள்.

ஊனக்கண்ணை தியாகம் செய்தவருக்கு ஞானக்கண் வழங்கிய மீனாட்சி!

பதினேழாம் நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவம் இது. மதுரையில், இப்போதும் நாம் காணும் ‘புது மண்டபம்’ என்பது, 1626 முதல் 1633 வரை ஏழு வருடங்களில் உருவானது. சில்ப சாஸ்திர நிபுணரான சுமந்திர மூர்த்தி ஆச்சாரி என்பவரின் தலைமையில் ஏராளமான சிற்பிகள் அந்தப் புது மண்டபத்தை உருவாக்கினார்கள்.

அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அந்த மண்டபம் உருவானபோது, மதுரையில் திருமலை நாயக்கர் அரசராக இருந்தார். அவரிடம் ஸ்ரீநீலகண்ட தீட்சிதர் என்பவர் மந்திரியாக இருந்தார். இவருடைய பெரிய பாட்டனார் தான், ஈஸ்வர அவதாரமாகவே மதிக்கப்பட்ட ஸ்ரீ அப்பய்ய தீட்சிதர்.

நீலகண்ட தீட்சிதர் திரிகாலஞானி; அன்னை மீனாட்சியின் அருளைப் பரிபூர்ணமாகப் பெற்றவர். தீட்சிதர் ஒரு நாள் புது மண்டபத்தின் வேலைகளை மேற்பார்வையிட செல்கிறார். நடுவரிசைத் தூண்களின் அருகில், சிற்பி ஒருவர் மிகுந்த துயரத்தோடு இருந்தார்.

“ஏனப்பா… வாட்டத்தோடு காணப்படுகிறாய்?” என்று விசாரிக்க, அவர், தீட்சிதரை வணங்கி, ”ஸ்வாமி! இந்தத் தூண்களில் எல்லாம் மதுரை நாயக்க மன்னர்களின் வடிவங்களைச் செதுக்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால்… என்னதான் நான் கவனத்தோடு ஜாக்கிரதையாகச் செதுக்கியபோதும், நமது மன்னரின் பட்டத்து அரசியின் சிலையை செதுக்கும்போது மட்டும் இடது தொடையில் ஒரு சில்லு பெயர்ந்து விழுந்துவிட்டது. திரும்பவும் செதுக்கலாம் என்றால் அந்த அளவு கல் வேறு இங்கு இல்லை. எனவே வழி தெரியாது தவிக்கிறேன்!” (சிற்பங்களை செதுக்கும்போது தவறு ஏற்பட்டால் அதை சரி செய்ய இயலாது. அந்த சிற்பம் வீண் தான்!)

உடனே அவர் சிற்பியைப் பார்த்து, ”அப்பா! இனிமேல் நீ எவ்வளவு சிலைகள் செய்தாலும், இப்படித்தான் ஆகும். தூய்மையான உன் பக்திக்காகத்தான், அன்னை இப்படிச் செய்திருக்கிறாள். ஸாமுத்ரிகா லட்சணப்படி, நம் பட்டத்து ராணிக்கு இடது தொடையில், இதே இடத்தில் பெரியதொரு தழும்பு இருக்கவேண்டும். அதனால்தான், நீ செதுக்கிய சிற்பத்தில் அப்படி ஆகிவிட்டது. அதை அப்படியே விட்டுவிடு! பரவாயில்லை!!” என்றார்.

சிற்பி கையெடுத்து அவரை கும்பிட, நீலகண்ட தீட்சிதர் சென்றுவிடுகிறார்.

மறுநாள் மண்டப வேலைகளை பார்வையிட திருமலை நாயக்கர் வந்தபோது அந்தச் சிலையைப் பார்க்கிறார். சிலையின் பின்னமான பகுதி அவர் கண்களில் பட, அது குறித்து சிற்பியை விசாரிக்கிறார்.

“ஏன் அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டாய்… வேறு சிலை செய்யவேண்டியது தானே??”

மன்னர் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை சிற்பிக்கும். மென்று முழுங்கி…. “மன்னா… அரசிக்கு அந்த இடத்தில் தழும்பு இருக்கிறது; அதனால்தான் பின்னம் ஏற்பட்டது என்று தீட்சிதர் சொன்னார். அதை அப்படியே விட்டுவிடும்படியும் அவர்தான் சொன்னார்” என்றார் சிற்பி.

மன்னரின் மீசை துடித்தது; கண்கள் சிவந்தன. இரவு முழுவதும் அவருக்குத் தூக்கமில்லை. நம் ஒருவருக்கே மட்டுமே தெரிந்த இந்த விஷயம் எப்படி நீலகண்ட தீட்சிதருக்கு தெரிந்தது? ஒரு வேளை அரசி நீராடும்போது மறைந்திருந்து பார்த்திருப்பாரோ? அந்தப்புரம் வரை வந்து செல்லும் அதிகாரம் பெற்றிருப்பது அவர் ஒருவர் தானே?”

தீட்சிதரைத் தவறாக நினைத்துவிட்டார். விளைவு? நீலகண்ட தீட்சிதரின் இரு கண்களையும் பறிக்க தீர்மானித்தார். விடிந்ததும், அரண்மனை காவலர்களை அழைத்து, தீட்சிதரை உடனே அழைத்து வர உத்தரவிட்டார்.

காவலர்கள் சென்ற நேரம் … தீட்சிதர் தன் வீட்டில், அம்பாளுக்கு பூஜையை முடித்துவிட்டுத் தீபாராதனை காட்டிக்கொண்டு இருந்தார்.

“மன்னர் உடனே உங்களை அழைத்து வரச் சொன்னதாக உத்தரவு!”

ஞான திருஷ்டி பெற்ற தீட்சிதர் மன்னர் தம்மை அழைக்கும் காரணத்தை புரிந்துகொண்டார்.

உடனே அவர், அம்பிகையிடம் தன் துயரத்தை வெளியிட்டு, தீபாராதனை காட்டி, எரியும் கற்பூரத்தைத் தன் இரு கண்களிலும் அப்படியே வைத்துக் கொண்டார். பார்வை பறிபோனது.

காவலர்களிடம் ”மன்னர் எனக்குத் தருவதாக எண்ணியிருக்கும் தண்டனையை, நானே நிறைவேற்றிவிட்டதாக போய்ச் சொல்லிவிடு!” என்று கூற, திடுக்கிட்ட காவலர்கள் அரண்மனையை நோக்கி ஓடுகின்றனர்.

தீட்சிதர் வீட்டில் நடந்ததை கூறினர். தாம் தர நினைத்த தண்டனையை ஞான திருஷ்டியிலேயே உணர்ந்தவருக்கு தம் மனைவியின் உடலில் இருந்த தழும்பு பற்றி தெரிந்திருப்பதில் வியப்பென்ன என்று கருதிய திருமலை மன்னர் நடந்த தவற்றுக்கு மிகவும் வருந்தினர்.

தீட்சிதரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க உடனே அவரை தேடிச் சென்றார்.

பார்வை பறிபோன நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எப்படியோ தட்டுத் தடுமாறி சென்ற தீட்சிதர் அம்பிகையைப் பாதாதி கேசமாக துதிக்கும் பாடல் ஒன்றை இயற்றி பாடிக்கொண்டிருந்தார்.  (பாதாதிகேசம் – பாதம் முதல் கேசம் வரை வர்ணித்து பாடுவது)தீட்சிதர் பாடலை பாடிக்கொண்டிருகும்போதே மன்னர் வந்து சேர்ந்துவிட, அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் அன்னை மீனாட்சி, தீட்சிதருக்கு மீண்டும் இரு கண்களிலும் பார்வையை தந்தாள்.

அப்போது தீட்சிதர் பாடிய பாடல்கள் ‘ஆனந்த சாகர ஸ்தவம்’ என அழைக்கப்படுகின்றன. 17-ஆம் நூற்றாண்டில் உருவான இந்த துதி நூலுக்கு, 70 ஆண்டுகளுக்கு முன்பு உரை வெளியானது. அதற்கு, காஞ்சி மகா பெரியவா விரிவானதொரு ஸ்ரீமுகம் அருளியிருக்கிறார் என்று தெரிகிறது.

துயரக் கடலிலேயே மூழ்கியிருக்கும் சக மனிதர்களால் நம்மைக் காப்பாற்ற முடியாது. அம்பிகைதான் காப்பாற்ற வேண்டும். எனவே, ஒரு தாயின் புடைவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு அழும் குழந்தையைப்போல, தீட்சிதர் அம்பிகையின் அருள் வேண்டி அழுகிறார்.

‘ஆனந்தக் கடல்’ எனும் அந்தத் நூலிலிருந்து…

பாவங்கள் நீங்கி, தெய்வத்தின் அருளை அடையப் பலவிதமான வழிகளை நம் சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. அவற்றையெல்லாம் கற்று, அர்த்தம் புரிந்துகொண்டு, பிற்பாடு அவற்றில் எதை நாம் செய்யலாம் என்று தீர்மானிப்பதற்குள், என்னென்ன பாவங்கள் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கக் காத்திருக்கின்றனவோ? யாருக்குத் தெரியும்?

அதனால், தீட்சிதர் கேட்கிறார்… ”தாயே! வழிகாட்டும் ஞான நூல்களை யெல்லாம் உணர்ந்து செயல்பட்டால்தான் உன் அருள் கிடைக்கும் என்பது எப்படித் தெரியுமா இருக்கிறது? மிகவும் பசியாக இருப்பவனுக்கு, ‘நீ போய் கங்கைக் கரையில் இருக்கும் மணல் துகள்களையெல்லாம் கணக்கிட்டு எண்ணிக் கொண்டு வா! அதன்பிறகு, உனக்குச் சாப்பாடு போடுகிறேன் என்பதைப்போல இருக்கிறது. நடக்கிற காரியமா அது? இப்போதே அருள் செய்!” என வேண்டுகிறார் தீட்சிதர்.

பும்ஸ: க்ஷணர்தமபி ஸம்ஸரணாக்ஷமஸ்ய
ஸாங்க்யாதய: ஸரணயோந விசந்தி கர்ணம்
ஸங்க்யாய காங்கஸிகதா: ஸகலாஸ்ச ஸுக்ஷ்மா
புங்க்ஷ்வேதி வாகிவ மஹாக்ஷ§ தயார்தி தஸ்ய

(பாடல் எண் 21)

108 பாடல்கள் கொண்ட இந்த நூலுக்குப் பதம் பதமாக அர்த்தம், கருத்து, ஆங்கில உரை என அற்புதமாக ‘காம கோடி கோசஸ்தானம்’ பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டு வெளியான ‘மீனாட்சி திருவிளையாடல்’ என்கிற திரைப்படத்தில் இந்த வரலாறு இடம்பெற்றுள்ளது.

இந்த நவராத்திரி நேரத்தில் ‘ஆனந்தக் கடல்’ என்னும் அந்த நூலை பருகுவோம். அன்னையின் அருளை பரிபூரணமாக பெறுவோம். இப்போது திடீரென ‘ஆனந்தக் கடல்’ நூலுக்கு எங்கே போவது என்று திகைக்கவேண்டாம்…. நூல் இல்லை என்றால் என்ன? அமுதக்  கலசத்திலிருந்து ஒரு துளி தான் இங்கே  தரப்பட்டுள்ளதே. அதை படித்து பாராயணம் செய்தாலே போதும். அம்பிகையின் அருள் மழை நிச்சயம் பொழியும்.

(இந்த நூல் மதுரையில் கிடைக்குமாயின் மதுரை நண்பர்கள் வாங்கி நமக்கு அனுப்பிவைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.)

குறிப்பு : பல பதிவுகளை வெளியிட வேண்டியிருப்பதால் நம் தளத்திற்கு  ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை கிடையாது. பதிவுகள் வழக்கம்போல வெளியாகும்.

=====================================================

Also check :

=====================================================

[END]

12 thoughts on “அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

  1. என்கேயிருந்து தான் செய்திகளையும் படங்களையும் தேடிப் பிடிக்கிறீர்களோ… மலைப்பாக இருக்கிறது.

    அன்னையின் படம் அத்தனை அருமை. கண்களில் ஒத்திக்கொண்டேன்.

    கேள்விப்படாத வரலாற்று சம்பவம்.

    மதுரைக்கு ஓரிரு முறை சென்றிருக்கிறேன். இந்த சம்பவம் தெரியாது.

    உருக்கமான பதிவு. அருமையான படம்.

    – பிரேமலதா மணிகண்டன்
    மேட்டூர்

  2. வணக்கம்……

    நவராத்திரி சமயம் அன்னையின் மகிமையை படிப்பது மகிழ்ச்சி தருகிறது……….இப்படத்தை பார்ப்பது அன்னையை நேரில் தரிசிப்பது போல் உள்ளது……..தீட்சிதரின் ஞானமும் அன்னையின் கருணையும் சிலிர்ப்பூட்டுகிறது………..நன்றிகள் பல…………எல்லா பதிவுகளையும் படித்திட ஆவலாய் உள்ளோம்…………

  3. உங்களை பார்க்க பார்க்க இருக்கிறது. தங்களின் பதிப்புகளை படிக்கவே நேரம் இல்லாத (ஏன் என்று புரியவில்லை) நிலையில், தாங்கள் எப்படி 24 மணி நேரத்தை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

    1. நேரத்தை அதிகம் வீணடித்தவனுக்கே அதை எப்படி உபயோகமாய் செலவழிப்பது என்ற வித்தையும் தெரியும். அதுபோலத் தான் அடியேனும்.

  4. எங்கள் ஊர் மதுரை மீனாக்ஷி அம்மனை பற்றிய பதிவை படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்களும் புது மண்டபத்திற்கு நிறைய முறை சென்று இருக்கிறோம். ஆனால் இந்த பதிவில் வரும் உண்மை கதையை இப்பொழுது தான் கேள்வி படுகிறோம். நவராத்திரி சமயத்தில் இந்த பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி. அம்மன் மீனாட்சியை பச்சை புடவை மற்றும் வைர கிரீடத்தில் பார்பதற்கு மிகவும் அழகாக நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த பதிவை படிக்கும் பொழுதே மனத்தால் இறைவியை நேரில் தரிசித்து விட்டேன்.

    இந்த அழகிய பதிவை அளித்த தங்களுக்கு நன்றிகள் பல . ”ஆனந்த கடல்” புக் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி வருகிறேன்.

    நன்றி
    உமா

  5. எங்கள் ஊரின் பெருமை சொல்ல வார்த்தை இல்லை.
    நாம் எந்த ஊரில் இருந்தாலும் மதுரையை பற்றியோ அல்லது அன்னையை பற்றியோ ஒரு சிறு செய்தி வந்தாலும் மனம் துள்ளி குதிக்கும். ஒரு வாரம் கழித்து நம் தளத்தை பார்த்தவுடன் கண்ணில் பட்டது அன்னையின் அருள் மற்றும் சிவாஜி அவர்களை பற்றிய பதிவு.
    அன்னையில் அருட்கடாட்சம் பெற்றவர் பலர்.
    புது தகவல் படித்து சந்தோசம் அடைந்தோம்.
    அன்னையின் படம் மிக அருமை.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *