Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

print
லியுகத்தில் ஊழ்வினையால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் இதர பிரச்சனைகளுக்கும் கண்கண்ட மருந்தாய் இருந்து அவர்களை காத்து இரட்சிப்பதில் ‘பன்னிரு திருமுறைகள்’ எனப்படும் சிவாகமங்களின் பங்கு மகத்தானது. அளப்பரியது.

நமது ஒவ்வொரு வார பிரார்த்தனை பதிவின் போதும் நண்பர் சிவ. விஜய் பெரியசுவாமி அவர்கள் பரிகாரங்களுடன் அதற்குரிய திருமுறைகளையும் தந்து  உதவுகிறார். அதன் அருமை உணர்ந்தவர் எத்தனை பேரோ என்று நமக்கு தெரியாது. ஆனால் உணர்ந்துகொண்டவர்கள் பாக்கியசாலிகள். அதிர்ஷ்டசாலிகள். (ஏனெனில், சுலபமாய் கிடைக்கும் எதன் அருமையும் நமக்கு தெரியாது!)

பன்னிரு திருமுறைகளை சுமக்கும் ஒரு அடியவர்
திருவாசக முற்றோதலில் பன்னிரு திருமுறைகளை சுமக்கும் ஒரு அடியவர்

த்தனை தான் திருந்த வேண்டும் என்று நாமாக விரும்பினாலும்  நமக்குள்ள அறியாமை காரணமாக , திரும்பத் திரும்பத் தவறுகளை நாம் செய்து கொண்டு தான்  இருக்கிறோம் . அந்த அறியாமையிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் துணை செய்கின்றன .

இறைவன் , வினைவயபட்டுத்  துன்பப்படும் நாம் அனைவரும் , திருந்தி உய்யும் பொருட்டு , அருளாளர்களை இப்பூவுலகற்கு அனுப்பி , அவர்கள் வாயிலாக நமக்குத் தன்  அருளிப்பாடுகளை செய்துள்ளான் . அருளாளர்களை அதிட்டித்து நின்ற , இறைவனே திருவாய் மலர்ந்து அருளிய சொற்களே திருமுறைகளில் உள்ளன .  இவ்வுண்மையை  எனது உரை தனது உரையாக  என்று அருளிச் செய்துள்ள சம்பந்தப் பெருமான்  திருவாக்கிலிருந்து அறியலாம் . திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது  . எனவே , திருமுறைகளை நாம் பாராயணம் செய்யும் போது , அதில் உள்ள மந்திர ஆற்றல் , நமது உயிரில் கலந்து , நமது அறியாமையை போக்கும் திறன் உடையது.

வினைகளையும், பிறவிகளையும், விதியையும் மாற்றிக் கொள்ள முடியுமா? இறைவனாலும் மாற்றியமைக்க முடியாதது விதி என்றால், அது இறைவனின் இறைத் தன்மையையே கேள்விக்குரியதாகச் செய்யும். இறைவனாலும் கூட விதியை மாற்ற முடியாது என்றால், நமது சமயத்தின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டு விடும். பிரார்த்தனைகளுக்கு அங்கு இடமே கிடையாது. வழிபாட்டில் ‘காம்ய வழிபாடு’, ‘நிஷ்காம்ய வழிபாடு’ என்று இரு வகையுண்டு. எதையேனும் வேண்டிப் பெறுதலுக்காகச் செய்யப்படுவதே ‘காம்யம்’. இறைவன்பால் அன்பால் இறைவனுக்கே அர்ப்பணமாகச் செய்யப்படுவது, ‘நிஷ்காம்யம்’. ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடுவராத நட்பும்’, என்ற பாடலில் அன்னை அபிராமியிடம் நீண்ட பட்டியலிட்டு பதினாறு பேறுகளையும் நிறையவே கேட்கிறார், அபிராமி பட்டர்.

இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி, சுப்பிரமணிய பட்டா! எல்லாமே விதிப்படிதான் நடக்கும். இதையெல்லாம் அடைய உனக்கு விதியில்லை. ஆகவே நீ கேட்பது எதையுமே என்னால் தர இயலாது”, என்று கூறினால், எப்படியிருக்கும்? விதி என்றிருந்தால், விதி விலக்கும் இருக்கும் அல்லவா? விதியிலிருந்து விலகி நின்று விதிக்கெல்லாம் விலக்கு வழங்க வல்லான் இறைவன். கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலில்,

“கருவாய் உயிராய், கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய்; அருள்வாய் குகனே! ”

கதி என்பது மாற்றப்பட முடியாத . விதி என்பது அதற்குள் உள்ள மாற்றக்கூடிய அம்சம். விதியை, மதியால் பண்ண முடியும். விதியை மாற்றுமாறு இறைவனை இறைஞ்சுவதும் கூட மதியினால் ஆவதுதான்.

பன்னிரு திருமுறைகள் நமக்கு கிடைக்க காரணமாய் இருந்தவர் திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி. நம்பி மட்டும் இல்லையேல் நமக்கு திருமுறை கிடைத்திருக்காது.

வைகாசி 18 ஆம் நாளான இன்று அவரது குரு பூஜை.

இந்த நன்னாளில் பன்னிரு திருமுறைகளின் பெருமையையும் நம்பியாண்டார் நம்பி அவர்களின் வரலாற்றையும் பார்ப்போம்.

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.

==========================================================

பன்னிரு திருமுறைகளின் பெருமை!

1.வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்தது பிறகு திருத்தாளிட்டது

2.பாலை நிலம் நெய்தல் ஆனது

3.பாண்டியன் சுரம் தீர்த்து கூன் நிமிர்த்தியது

4.தேவார ஏடுகளை தீயில் கருகாமல் பச்சை யாக எடுத்தது எதிர் நீச்சல் இடவைத்தது

5.ஆண் பனை பெண் பனையாகியது

6.விஷத்தினால் இறந்த செட்டி உயிர்பெற்றது

7.எலும்பை பெண்ணாக்கியது

8.சுண்ணாம்புக் காளவாயில் 7 நாட்கள் இருந்தும் உயிர் பிழைத்தது

9.மத யானையை வலம் வரச்செய்து வணங்கவைத்தது

10.மானசரோவரில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தது

11.கல்லை தெப்பமாக கொண்டு கரையேறியது

12.செங்கல்லைப் பொன்னாக்கியது

13.விருதாசலத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை ஆரூர் குளத்தில் எடுத்தது

14.முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது

15.காவேரி பிரிந்து வழி விட்டது

16.நரியை குதிரையாக்கியது

17.வெள்ளானையில் கயிலாயம் சென்றது

18.குதிரையை நரியாக்கியது

19.பிறவி ஊமையை பேச வைத்தது

20.பரம்பொருளான சிவபெருமானே எழுதிய பெருமைக்குரியது

இப்படி திருமுறைகளின் அற்புதங்கள் ஏராளம் அதன் பெருமைகளை அளவிட முடியாது திருமுறைகளை நாளும் ஓதுவோம் சிவானுபவம் பெறுவோம் .

==========================================================

பன்னிரு திருமுறைகளை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும், பொள்ளாப் பிள்ளையாரும்!

சிறப்பு மிக்க சைவ நெறி சார்ந்த நூல்கள் ‘பன்னிரு திருமுறைகள்’ என்றழைக்கப்படுகின்றன. பன்னிரண்டு திருமுறைகளும் 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

தேவாரத் திருமுறை ஓலைச் சுவடிகளை, தமிழை எதிர்த்தவர்களிடமிருந்து காப்பாற்றவும், மழை, வெள்ளம், புயல், காற்று போன்ற இயற்கைச் சீரழிவிலிருந்து காப்பாற்றவும், அவற்றை சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் பூட்டி முத்திரை வைத்து விட்டார்கள்.

அபயகுலச் சோழன் என்று சைவ இலக்கியங்கள் சிறப்பித்து கூறிய தஞ்சையில் இருந்து அரசாண்ட ராஜராஜ சோழன், ஓதுவார்களும், இசைவாணர்களும் பாடக் கேட்டு தேவாரப் பாடல்கள் மீது அளவுகடந்த ஈடுபாடு கொண்டார். அவற்றைத் தொகுக்க விரும்பினார். அவை கோவிலில் அறையில் பூட்டி வைத்திருப்பது தெரிந்து அவற்றை எப்படி எடுப்பது என்று யோசித்தார். அப்போது அவரது அவைப் புலவர்கள், நம்பியாண்டார் நம்பி மனது வைத்தால் அவற்றைத் தொகுக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். அப்படி என்ன சிறப்பு நம்பியாண்டார் நம்பியிடம் என்று ராஜராஜன் வியந்து கேட்டார். அவைப் புலவர்கள் நம்பியாண்டார் நம்பியின் கதையைச் சொன்னார்கள்.

நம்பியாண்டார் நம்பியின் கதை

நம்பியாண்டார் நம்பியின் தந்தை சிதம்பரத்துக்கு அருகில் உள்ள திருநாரையூரில் பிள்ளையார் கோவில் ஒன்றில் அர்ச்சகராகப் பணியாற்றினார். நம்பி சிறுவனாக இருந்த போது, ஒரு நாள் அவருடைய தந்தை வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அன்றைய பூஜை செய்யும் பொறுப்பை, சிறுவன் நம்பியிடம் ஒப்படைத்துச் சென்றார். நம்பியின் தாய் பிரசாதத்தைத் தயார் செய்து கோவிலுக்குக் கொடுத்தனுப்பினாள்.

polla-pillaiyar-thirunaraiyur1 copy

சிறுவன் நம்பியும் தந்தையின் கட்டளைப்படி பிள்ளையாருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து, தான் கொண்டு வந்த பிரசாதத்தைப் பிள்ளையாருக்குப் படைத்தார். வெகு நேரம் ஆகியும் பிரசாதம் அப்படியே இருந்தது. பிள்ளையார் உண்மையாகவே பிரசாதத்தைச் சாப்பிடுவார் என்றெண்ணியிருந்த நம்பிக்கு அது ஏமாற்றமாய்ப் போய்விட்டது. தான் செய்த பூஜையில் பிழை இருந்தால் மன்னித்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அதன் பிறகும், பிரசாதம் அப்படியே இருக்கவே, தனது தலையைக் கோவில் சுவரில் மோதிக் கொண்டு அழுதார். நம்பியின் கடமையுணர்வையும், பக்தியையும் கண்டு பிள்ளையார் மனம் கசிந்து பிரசாதத்தை மிச்சம் மீதியின்றி அப்படியே சாப்பிட்டு விட்டார். நம்பி மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டிற்குச் சென்றார். வெற்றுப் பாத்திரத்துடன் வந்த நம்பி சொன்னதை யாராலும் நம்ப முடியவில்லை.

Polla Pillaiyar blesses Chola

அடுத்த நாள் நம்பியின் தந்தை வெளியூரிலிருந்து திரும்பி வந்ததும், அவருடன் நம்பி கோவிலுக்குச் சென்றார். அவரே பூஜையும் செய்தார். அன்றும் பிள்ளையார் பிரசாதத்தைச் சாப்பிட்டார். அதை நேரில் பார்த்தவர்களுக்கு உண்மை புரிந்தது. நம்பியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

தன் பக்தனான நம்பி ஏழைமையில் கல்வி பயில முடியாத சூழலில் இருந்ததால், பிள்ளையார் தானே தினந்தோறும் கல்வி புகட்ட ஆரம்பித்தார். நம்பியை மாமேதை ஆக்கினார். இறைவனிடம் நேரடியாகக் கல்வி பயின்றதால் நம்பியாண்டார் நம்பியின் புகழ் எங்கும் பரவியது.

நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள்

இத்தகைய சக்தி வாய்ந்த நம்பியாண்டார் நம்பியைச் சரணடைந்தால் திருமுறைகளைத் தொகுக்கலாம் என்ற அவைப் புலவர்களின் ஆலோசனைப்படி, அவைப் புலவர்கள் மற்றும் மந்திரிகளுடன் திருநாரையூருக்குச் சென்று பிள்ளையாரை தரிசித்து விட்டு, நம்பியாண்டார் நம்பியின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். பின்னர் திருமுறைகளைத் தொகுக்க வேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்தார் ராஜ ராஜன்.

நம்பியாண்டார் நம்பி, பிள்ளையாரின் திருவருளால், தேவாரப் பாடல்கள் அனைத்தும் சிதம்பரம் கோயிவில் இருப்பதாகத் தெரிவித்தார். மன்னரும், மந்திரிகளும், அவைப் புலவர்களும் நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் கோவிலுக்குச் சென்று நடராஜர் சந்நிதியில் உள்ள தீட்சிதர்களை அணுகி, சுவடிகளைக் கேட்டனர். அவர்கள் தேவார மூவர் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்) வந்து கேட்டால் மட்டுமே முத்திரையிட்ட அறைக் கதவைத் திறக்க இயலும் என்று கூறினர்.

Rajarajan meets Dikshidhars

பல காலங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த தேவார மூவரை எப்படித் திரும்ப அழைத்து வந்து கேட்க வைப்பது? என்று யோசித்ததோடு மட்டுமல்லாது, ராஜ ராஜன் புத்திசாலித்தனமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். தேவார மூவரின் திருஉருவங்களை அலங்கரித்து, கோயிலுக்குள்ளும், வெளியேயும் உலா அழைத்து வந்து நடராஜர் சந்நிதிக்கு முன் எழுந்தருளச் செய்து “இதோ தேவார மூவர் வந்துள்ளனர்” என்று கூறினார்.

தேவார மூவரின் திருஉருவங்களை வெறும் சிலை தானே என்று சொல்லித் தட்டிக் கழிக்க நினைத்த தீட்சிதர்கள், அப்படிச் சொன்னால் கோயிலுக்குள் உள்ள நடராஜரும் சிலைதானே என்ற வாக்குவாதம் வரும் என்ற எண்ணத்தில் அதைத் தவிர்த்து விட்டு, தேவாரச் சுவடிகள் உள்ள அறையைத் திறந்து விட்டனர்.

Hymns found

உள்ளே பார்த்தால் ஓலைச் சுவடிகளை கறையான் புற்று மூடியிருந்தது. பெரும்பாலான ஓலைச்சுவடிகள் செல்லரித்து போயிருந்தன.

அப்போது அசரீரியாக ஒலித்த இறைவன், “தற்காலத்துக்கு தேவையானவைவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு மீதியை நாம் தான் செல்லரிக்கச் செய்தோம்!” என்று கூறியருளினார்.

இது பற்றி காஞ்சி மகா ஸ்வாமிகள் மிக அழகாக தன் பாணியில் கூறுகிறார்.

//’ஐயோ, இத்தனை ப்ரயாஸைப் பட்டும் கடைசியில் மலையைக் கெல்லி எலியைப் பிடித்தாற்போல, சுவடிகளையெல்லாம் ஒரேயடியாகச் செல்லு மூடிப் போயிருக்கிறதே’ என்று எல்லாரும் வருத்தப்படும்படிச் சுவடிக் கட்டெல்லாம் செல்லரித்து மூடிக் கிடந்தது. மொத்தம் மூவர் பாடின லக்ஷத்து சொச்சம் பதிகங்களிலே எண்ணூறுக்கும் குறைச்சலானவை தான் அரிபடாமல் தப்பித்திருந்தன.

எல்லாரும் சோகாக்ராந்தர்களாக இருக்கும்போது அசரீரி கேட்டது. “மலையைக் கெல்லி எலி இல்லை, இந்த எலியே வரப்போகிற காலங்களில் பிறக்கப் போகிறவர்களுக்கு யானைக்கு மேலே!அது பொதுவிலே அவஸர யுகமாயிருக்கும். அந்த அவஸரத்திலும் சினிமா, கிரிக்கெட் தண்டப்பேச்சு, பாலிடிக்ஸ், பத்திரிகை என்றால் மட்டும் மணிக் கணக்காக பொழுது இருக்குமே தவிர இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மற்ற விஷயங்களில் ஒரே பறப்பாக இருக்கும். அதிலேயும் ஆத்ம ஸம்பந்தமான விஷயமென்றால் கேட்கவே வேண்டாம்!லக்ஷம் பதிகம் என்றால் யாரும் கிட்டேயே போகமாட்டார்கள்!அதனால்தான் திவ்ய ஸங்கல்பத்தினால் இப்படி ஆச்சு. அது மாத்திரமில்லாமல் இந்த 796 பதிகங்களே ஒரு ஜீவனைக் கடைத்தேற்றவும் போதும்” என்று அசரிரி சொல்லிற்று. அது சுருக்கமாக ‘ஹின்ட்’ பண்ணினதில் என் சரக்கும் சேர்த்துச் சொன்னேன்!

எண்ணூறு பதிகங்களையும்கூட ஒருமொத்தமாகப் பார்த்தால் எதிர்கால ஜனங்கள் ஜாஸ்தீ என்று தள்ளி விடுவார்களோ என்று ராஜா பயந்து, அதையும் பல பாகங்களாக க்ளாஸிஃபை பண்ணச் சொல்லி நம்பியாண்டார் நம்பியைக் கேட்டுக் கொண்டான். //

– (தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)

கரையான் அரித்தது போக மீதமிருந்த சுவடிகளை எடுத்து வந்தார் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தி, 27 ஆசிரியர்கள் இயற்றிய பாடல்களை 12 திருமுறைகளாகத் தொகுத்தார். அவை, சோழ நாட்டுச் செப்பேடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன

arangetram of thirumurai

1, 2, 3ம் திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 பாடல்களும், இரண்டாம் திருமுறையில் 1331 பாடல்களும், மூன்றாம் திருமுறையில் 1346 பாடல்களும் அடங்கியுள்ளன. 4, 5, 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. நான்காம் திருமுறையில் 1069 பாடல்களும், ஐந்தாம் திருமுறையில் 1015 பாடல்களும், ஆறாம் திருமுறையில் 980 பாடல்களும் அடங்கியுள்ளன. 7ம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 1026 பாடல்கள் உள்ளது. 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்டது. இதில் திருவாசகம் 656 பாடல்களும், திருக்கோவையார் 400 பாடல்களுமாக மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. 9ம் திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புரு÷ஷாத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. 10ம் திருமுறை திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகும். இதில் மொத்தம் 3047 பாடல்கள் உள்ளது. 11ம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. 12ம் திருமுறை சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் ஆகும். இதில் 4286 பாடல்கள் உள்ளது.

இவற்றுள் பதினோரு திருமுறைகளைத் தொகுத்து வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை அரங்கேறச் செய்து அதைப் பன்னிரண்டாவது திருமுறை ஆக்கினான். இதுவரை கிடைத்துள்ள பன்னிரு திருமுறைகள் 27 ஆசிரியர்களால் 76 நூல்களில் பாடப்பட்ட 18326 பாடல்களை கொண்டது. இந்த திருமுறைகள் அனைத்தும் சிவபெருமானின் திருவாக்குகளே. அவரே அடியவர்களுக்கு உள்ளிருந்து உணர்த்தியும், முதலடி எடுத்துக் கொடுத்தும் வெளிப்படுத்திய அருள்வாக்குகள். அவை சிவபிரானின் அருளை அன்பர்களுக்கு அன்றும் தேடித்தந்தன; இன்றும் தரவல்லன. அதனாலேயே இவை அருட்பாக்கள் எனப்படும். இவற்றுள் சிவசக்தி யாகிய உயிர் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், என்றும் அழியாத அமரத்துவம் பொருந்தி நிற்கிறது. மிகப்பெரிய சிவாலயங்களில் நடராஜரின் சன்னதிக்கு அருகில் இந்த பன்னிரு திருமுறைகள் ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்து முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படும். பன்னிரு திருமுறைகளை படித்தாலோ, கேட்டாலோ வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.

(ஆக்கத்தில் உதவி : vivekaanandan.blogspot.in, Dinamalar.com, Kamakoti.org)

=================================================================

Also check :

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

=================================================================

[END]

6 thoughts on “பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

  1. இப்பதிவின் மூலம் திருமுறை பற்றி தெரிந்து கொண்டோம். திருமுறையில் ஒவொரு நோய்க்கும் மருந்தாக திருமுறை பதிகங்கள் உள்ளது. அவற்றை மனம் ஒன்றி படித்தாலே நமக்கு உள்ள நோய்கள் குணமாகும். ஒவொரு வாரமும் திரு விஜய் பெரியசுவாமி பிரார்தனை கிளபில் கோரிக்கை வைத்திருக்கும் ஒவ்வோருவருக்காகவும் thirumuai medicines ஆகிய பதிகத்தை தொகுத்து வழங்குகிறார். அவருக்கு மிக்க நன்றி

    ஒரு முறை திரு ஞான சம்பந்தரின் தந்தையார் தன் மகனிடம் நாளுக்கு நாள் திருமுறை பதிகம் அதிகமாகி கொண்டே போவதால் அனைதையு படிப்பதற்கு கடினமாக உள்ளது என்று சொன்னார். தனது தந்தைக்காக திருஞானசம்பந்தர் சீர்காழியில் ”ஒரிருவாயினை ‘ ‘ என்று தொடங்கும் திருவெழுகூற்றரிக்கை என்ற பதிகத்தை எழுதினார். இந்த பதிகத்தை படித்தால் திருமுறை அனைத்தும் படித்த பலன் கிடைக்கும்,

    திரு நம்பிஆண்டர் நம்பி இல்லை என்றால் நமக்கு திருமுறை என்னும் அறிய பொக்கிஷம் கிடைத்திருக்காத்து. நாமும் திருமுறை ஓதி பயன் பெறுவோம்

    தங்கள் பதிவிற்கு நன்றி

    உமா

  2. சிறப்பான பதிவு……….திருமுறையின் பெருமையினையும்,பொல்லாப்பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி அவர்களின் வரலாறும் சிறப்பு…..நன்றிகள்!……………

  3. Sundar Sir , Thank you from the bottom of my heart for this wonderful article about Panniru Thirumuraigal
    Under the heading Panniru Thirumuraigalin Perumai,
    3. Pandian Suram theerthu koon nimirthiyathu.

    Could you please inform me the lyrics of the pathigam which cured Pandiyan’s fever and Koon. My elder sister is suffering from koon muthugu (hunch back).
    Your article is a god sent for me.
    thank you again
    Sakuntala

    1. உங்களுக்கான பதிலை சம்பந்தப்பட்ட பதிகத்துடன் ஒரு பதிவாகவே நாளை தருகிறேன்.
      நன்றி.

      – சுந்தர்

  4. சுந்தர் சார்:தேங்க்ஸ் நிறைய ஆன்மிக தகவல்கள் கிடைத்தமைக்கு nanri

  5. மிகவும் பயனுள்ளதாக இக் கட்டுரை அமைந்து இருந்தது. மிக்க நன்றி மதிப்புக்குரிய ஆசிரியர்..மேலும் இவ்வாறு கட்டுரைகளை எழுதி வெளியிட்டால் மாணவர்களாகிய எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    “நம்பியாண்டார்நம்பி பாடல்களூடாக உணர்த்தப்படும் இறை கருத்து” இதை பற்றி சிறிதளவு கருத்துக்களை வெளியிட முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *