Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

print
CHARITY BEGINES AT HOME என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? “முதலில் உன் வீட்டில் இருப்பவர்களையும் உன்னை சார்ந்தவர்களையும் கவனி. பிறகு ஊரை கவனிக்கலாம்” என்பது தான். எனவே நம்மை சுற்றியிருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக – எவ்வித குறையும் இல்லாமல் – (குறைகள் இருந்தாலும் நிறைகளை எண்ணி சந்தோஷப்படுகிறவர்களாக) இருக்கவேண்டும் என்பதில் நாம் மிக மிக உறுதியாக இருக்கவேண்டும்.

பாலம் கலியாணசுந்தரம் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா சில மாதங்களுக்கு முன்பு மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நீதிபதி திரு.சந்துரு, சாய்ராம் கல்விக் குழுமங்களின் தலைவர் திரு.லியோ முத்து போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அந்த விழாவில் வரவேற்புரை வழங்கும் பொன்னான வாய்ப்பு நமக்கு கிடைத்தது நினைவிருக்கலாம். அந்த விழாவிற்கு – அது குறித்த நம் பதிவை பார்த்து – நம் தள வாசகர்கள் சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். இவர்கள் தவிர இணையம் பார்க்க வசதியற்ற / பார்க்க தெரியாத சிலருக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்திருந்தோம்.

இந்நிலையில் நாம் எதிர்பாராமல் அங்கு வந்து நம்மை ஆச்சரியப்படுத்திய ஒருவர் யார் தெரியுமா?

மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோவில் குருக்கள் திரு.ஆறுமுகம்.

எனக்கு அவரை அங்கு விழா நடைபெறும் மண்டபத்தில் பார்த்ததும் ஒரே சந்தோஷம். அவரை வரவேற்று உபசரித்து அமரவைத்து “எப்படி சார் உங்களுக்கு தெரியும்?” என்றேன் பரவசத்துடன். பதிவை பார்த்துவிட்டு தாமே வந்ததாக கூறினார். எத்தனை பெரிய பண்பு!! (இருக்காதா பின்னே? வள்ளுவருக்கு பணி செய்பவராயிற்றே!)

நாம் வரவேற்புரை ஆற்றும்போது மறக்காமல் திரு.ஆறுமுகம் அவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்டோம்.  “இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு எத்தனையோ பேரை அழைத்தேன். ஆனால் நான் எதிர்பாராமல் ஒருவர் இங்கு வந்து என்னை கௌரவித்திருக்கிறார். அவர் தான் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோவிலின் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் ஐயா. இவர் வந்திருப்பது சாட்சாத் அந்த திருவள்ளுவரே வந்து எனக்கு ஆசி கூறுவதை போல போன்று உணர்கிறேன். ஏனெனில் இந்த வரவேற்புரையையே திருக்குறளை மையமாக வைத்து தான்அமைத்தேன்.” என்றேன். நாம் அவர் பெயரை குறிப்பிட்டு கூறியதும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த திரு.ஆறுமுகம் எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்தார்.

அவரை அங்கு பார்த்து நான் பரவசப்பட்டதற்கு வேறு காரணங்கள் உண்டு. ஒன்று அந்த விழாவின் உரையை நான் திருக்குறளை அடிப்படையாக வைத்தே முழுக்க முழுக்க தயாரித்திருந்தேன். அடுத்து அந்த திருமண மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் ஓவியத்துடன் திருக்குறள் காணப்பட்டது. (இதை பார்ப்பதற்கே நீங்கள் ஒருமுறை அந்த மண்டபத்திற்கு செல்லவேண்டும்!)

இப்போது புரிகிறதா என் பரவசத்திற்கு காரணம்?

சரி… விஷயத்திற்கு வருகிறேன்…..

திரு.ஆறுமுகம் அவர்களிடம் மாதமிருமுறையாவது அலைபேசியில் பேசுவது என் வழக்கம். ஓரிரு வாரங்களுக்கு முன்பு எதேச்சையாக இவரை தொடர்புகொண்டபோது இவர் மனைவி திருமதி.கற்பகம் ஃபோனை எடுத்தார்கள். அப்போது தான் எனக்கு தெரிந்தது – மாரடைப்பு ஏற்பட்டு ஆறுமுகம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷயம். விஷயத்தை கேட்டதும் பதறிப்போனேன்.

உடனேஅவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மயிலை கல்யாணி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். என்னால் முடிந்த உதவிகளை செய்வதாக கூறினேன். மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கிடையே கடன் வாங்கி மருத்துவமனை செலவுகளை அவர்கள் செய்வதை அறிந்தேன். டிஸ்சார்ஜ் ஆனவுடன் வீட்டில் வந்து சந்திப்பதாக கூறினேன்.

அடுத்து அவர் நலம் பெறவேண்டி பிரார்த்தனையும் நமது பிரார்த்தனை கிளப்பில் அறிவிக்கப்பட்டது.  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அவர் குடும்பத்தினருக்கு உதவேண்டியது நமது கடமை என்றும் அதில் கூறியிருந்தேன். (http://rightmantra.com/?p=5981) அதை பார்த்துவிட்டு நமது வாசக அன்பர்கள் சிலர் உடனடியாக அவருக்கு பொருளாதார உதவி செய்ய முன்வந்தார்கள். ரூ.7500/- சேர்ந்தது. ரூ.10,000/- சேரட்டும் என்று காத்திருந்தேன்.

இது நடந்து ஒரு வாரம் இருக்கும்.

இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று காலை இலம்பையங்கோட்டூர் சென்று உழவாரப்பணிக்கான சர்வே செய்து விட்டு மதியம் என் தங்கையின் நான்கு வயது குழந்தை டிரேட் சென்டரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை முன்னிட்டு அந்த சுட்டிப் பெண்ணை பார்க்க டிரேட் சென்டர் சென்றுவிட்டேன்.

டிரேட் சென்டரில் நிகழ்ச்சி முடிந்து மாலை வீடு திரும்ப எத்தனிக்கையில் வள்ளுவர் கோவில் குருக்கள் ஆறுமுகம் அவர்கள் நினைவுக்கு வந்தார். “அடடா… ஆறுமுகம் அவர்களுக்காக நண்பர்கள் கொடுத்த ரூ.7,500/- கையில இருக்கே… இந்த பணம் அவர்கிட்டே இருந்தா அவருக்கு ரொம்ப உபயோகமா இருக்குமே…ரூ.10,000/- சேர்ற வரைக்கும் நாம் காத்திருக்கனுமா?” என்று தோன்றியது.

மேலும் அப்போது விட்டால் அவரை சந்திப்பதற்கு எனக்கு வேறு நாள் கிடைப்பது அரிது. ஏனெனில் தொடர்ந்து வரும் ஞாயிறு நான் சீர்காழி செல்வதாக பிளான். எனவே இன்றே போய் பார்த்துவிட்டு இந்த தொகையை கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று கருதினேன்.

இருப்பினும் கொடுக்கும் தொகை ஒரு ரவுண்டாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. என்ன செய்வதென்று புரியவில்லை. என்னிடம் அப்போது என் பர்சனல் கையிருப்பு குறைவாக இருந்தது.

நம் தளத்திற்கு தேவைப்படும் உதவிகளோ அல்லது இது போன்ற அறப்பணிகளுக்கு தேவைப்படும் உதவிகளோ – எதுவாக இருந்தாலும் தானாக வந்தால் உண்டு. எவரிடமும் கேட்டு பெறுவதில்லை என்ற முடிவு செய்து இயன்றவரை கடைபிடித்துவருகிறேன். பெரியதோ சிறியதோ தாமாக விரும்பி மனமுவந்து செய்பவர்களிடம் மட்டுமே உதவிகள் ஏற்றுக்கொள்ளப்படும். கிடைக்கவில்லையா? எங்களுக்குள் எங்கள் சக்திக்குட்பட்டு செய்வோம். அந்த திருப்தி எங்களுக்கு போதும்.

இதனிடையே நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார். ஆடி அமாவாசை அன்று பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தரும் கைங்கரியத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ளும்படி கூறி தொகை அனுப்பியிருந்தார். அப்போது அவர் நம்மிடம் பேசும்போது, மேலும் சில கைங்கரியங்களுக்கு உதவ விரும்புவதாகவும்… ஏதேனும் தேவைப்பட்டால் சிறிதும் தயங்காமல் தொடர்புகொள்ளவேண்டும் என்றும் வேண்டி விரும்பி அன்புடன் கேட்டுக்கொண்டார். எனவே அவருக்கு ஃபோன் செய்து திரு.ஆறுமுகம் அவர்களுக்கு நாம் உதவ விரும்பும் விஷயத்தை சொல்லி நம்மிடம் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை கூறினேன்.

காலை நிச்சயம் பற்றாக்குறை தொகையான ரூ.2500/-ஐ ட்ரான்ஸ்பர் செய்துவிடுவதாக சொன்னார். மேலும் இந்த பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றியும் கூறினார். அவர் உறுதியளித்ததை தொடர்ந்து அங்கே இங்கே கேட்டு எப்படியோ ரூ.10,000/- தயார் செய்துவிட்டேன்.

உடனே திரு.ஆறுமுகம் அவர்களுக்கு ஃபோன் செய்தேன். அவர் லைனில் கிடைக்கவில்லை. ஒருவேளை கோவிலில் அர்ச்சனையில் இருக்கலாம் என்று கருதி – சற்று இடைவெளி விட்டு – திரும்ப திரும்ப ஃபோன் செய்தேன்.

எப்படியும் இன்று அவரை பார்த்து, பணத்தை ஒப்படைத்துவிட்டால் தான் எனக்கு தூக்கம் வரும். அவர் லைனில் வரவேயில்லை. நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது. பேசாமல் வீட்டுக்கு போய்விடலாமா? இந்த நேரத்தில் ஏதாவது ஒரு பதிவாவது தயார் செய்யலாமே என்று எண்ணம் மனதில் ஓடியது.

வண்டியை வீடு நோக்கி திருப்ப எத்தனிக்கையில், ஆறுமுகம் அவர்களிடம் இருந்து போன் வந்தது. எதிர்முனையில் அவரது மனைவி திருமதி. கற்பகம். “சுந்தர் சார் எப்படியிருக்கீங்க? சார் போனை சார்ஜில் போட்டுவிட்டு கோவிலுக்கு போயிருக்கார்….” என்றார்.

டிச்சார்ஜூக்கு பிறகு ஆறுமுகம் குருக்கள் அவர்களை நாம் சந்திக்க விரும்பிய விஷயத்தை கூறி, “உங்க ரெண்டு பேரையும் சந்திக்கணும்மா. இப்போ வரலாமா?” என்றேன்.

“தாராளமா வாங்க. நான் இப்போ காரணீஸ்வரர் கோவிலுக்கு பாட்டு பாட போய்க்கிட்டுருக்கேன். ஒரு மணி நேரம் கழிச்சி வந்தீங்கன்னா நல்லாயிருக்கும். நானும் அதுக்குள்ளே வந்துடுவேன்” என்றார்கள்.

“சரி… நீங்கள் போயிட்டு வாங்க. அதுக்குள்ளே நான் வந்தா ஐயா கிட்டே பேசிக்கிட்டுருக்கேன். அவரை கோவில்ல இருக்க சொல்லுங்க…” என்றேன்.

சித்ரா பௌர்ணமி அன்று நடைபெற்ற திருவள்ளுவர் திருக்கல்யாணத்தின் போதும், அதற்கு முன்பாக நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி கல்யாணத்தின் போதும் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றபோதும் திருமதி.கற்பகம் அவர்களை பார்த்திருக்கிறேன். ஆகையால் பரஸ்பர அறிமுகம் உண்டு.

திரு.ஆறுமுகம் அவர்களை சந்திக்கச் செல்லும் விஷயத்தையும் நோக்கத்தையும் கூறி, நம் நண்பர்கள் சிலரை அழைத்தேன். அந்த நேரம் அவர்களால் வரவியலாத சூழ்நிலை. கடைசியில் மந்தைவெளியில் இருக்கும் நண்பர் சந்திரமௌலியிடம் விஷயத்தை கூறியதும், அவர் தான் நிச்சயம் வருவதாக கூறினார். தாம் திருவள்ளுவர் கோவிலை பார்த்ததில்லை என்றும் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். (திரு.சந்திரமௌலி ஒரு தேடல் மூலம் நமது தளத்தை கண்டுபிடித்து வாசகரானவர். இதுவரை மூன்று உழவாரப்பணிகளில் நம்முடன் பங்கேற்று விட்டார்!)

அடுத்த அரை மணிநேரத்தில் மயிலையில் திருவள்ளுவர் கோவிலில் நாம் ஆஜராகிவிட, நண்பர் சந்திரமௌலி நமக்கு முன்பாகவே வந்திருந்தார்.

அவரை திரு.ஆறுமுகம் அவர்களிடம் அறிமுகப்படுத்தினேன். தொடர்ந்து திருவள்ளுவரையும், வாசுகி அன்னையையும், ஏகாம்பரேஸ்வரரையும் காமாட்சியையும் தரிசித்தோம்.

தரிசனம் முடித்துவிட்டு சிறிது நேரம் பிரகாரத்தில் அமர்ந்தபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும்போதே திருமதி.கற்பகம் வந்துவிட்டார்.

பழங்களும் ஊட்டச் சத்து பானமும் திரு.ஆறுமுகம் தம்பதியினருக்கு அளிக்கப்படுகிறது.

காரணீஸ்வரர் கோவிலில் தேவாரம் பாடிவிட்டு வருவதாக சொன்னார்.

“அட உங்களுக்கு தேவாரம் தெரியுமா?” என்றோம் ஆச்சரியத்துடன்.

முழுமையாக தெரியும் என்றும் சிறுவயதிலேயே தமது தந்தை தேவார வகுப்பில் தம்மை சேர்த்துவிட்டுவிட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து நலம் விசாரித்துவிட்டு, வந்த நோக்கத்தை கூறினோம். நம் தளம் சார்பாக பழங்கள் மற்றும் காம்ப்ளான் திரு.ஆறுமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பணத்தை தனிப்பட்ட முறையில் அவருக்கு தருவதால் வீட்டில் வைத்து தருவதாக சொன்னோம். (வீடு கோவிலுக்கு அடுத்து அமைந்துள்ளது.)

வீட்டிற்கு நம்மை வரவேற்று அமரவைத்தார். பேசிக்கொண்டிருக்கும்போது நாம் மறுத்தும் காஃபி கொடுத்து உபசரித்தார்கள்.

அடுத்து, நம் தளத்தில், ஆறுமுகம் அவர்களை பற்றிய பிரார்த்தனை பதிவில், “இவருக்கு உதவ வேண்டியது நம் கடமை” என்று நாம் குறிப்பிட்டிருந்ததை படித்து நம் வாசகர்கள் சிலர் தாமாகவே உதவ முன்வந்ததை கூறினேன்.

தொடர்ந்து நம் வாசகர்கள் அளித்த ரூ.10,000/- தம்பதியினரிடம் அளிக்கப்பட்டது.

நம் தளம் சார்பாக ரூ.10,000/- ஆறுமுகம் தம்பதியினரிடம் நண்பர் சந்திரமௌலி ஒப்படைக்கிறார்!

அவர்களுக்கு தான் எத்தனை சந்தோஷம். அந்த கண்களில் தான் எத்தனை நெகிழ்ச்சி…நன்றி பெருக்கு.

“சாருக்கு மருத்துவம் பார்க்க ஏற்பட்ட கடனை அடைக்கவோ அல்லது கல்லூரி செல்லும் உங்கள் மகளின் படிப்பு செலவுக்கோ எதற்க்கு வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பம். உங்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்டை  ஒப்பிடும்போது இது மிகப் பெரிய உதவி அல்ல. இருந்தாலும் உங்களுக்கு ஏதாவது செய்து உங்கள் பொருளாதார சிரமத்தை சிறிதளவாவது குறைக்கவேண்டும் என்று கருதியே இதை செய்தோம். மேலும் திருவள்ளுவருக்கு உங்கள் கணவர் செய்யும் தொண்டிற்கு இந்த எளியவர்கள் தரும் பரிசு.” என்றேன்.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். “அம்மா… இன்னைக்கு சாயந்திரம் வரைக்கும் உங்களுக்கு இந்த பணத்தை கொடுக்கணும் என்று நான் முடிவு செய்யலை. காரணம், என்னிடம் இருந்தது ரூ.7,500/- தான். என்னோட சம்பளம் வாங்கினதுக்கு பிறகு, கூட பணம் போட்டு ரூ.10,000/- தரலாம்னு நினைச்சிக்கிட்டுருந்தேன். ஆனால், உங்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்குமோ? நாம் கையில் வெச்சிகிட்டு இருக்கிறதுக்கு பதிலா அதை உங்ககிட்டே இன்னைக்கு ஒப்டைக்கனும்னு தோணிச்சு. உடனே பேலனஸ் பணத்தை புரட்டி இதோ கொண்டு வந்துட்டேன். மாலை வரைக்கும் தோன்றாத ஒன்று அதற்கு பிறகு தான் தோன்றியது. நீங்கள் தேவாரம் பாடியதற்கு எங்கள் சிவபெருமான் கொடுத்த பரிசு போல இது!!!!” என்றேன்.

அப்போது திருமதி.கற்பகம், “இன்னைக்கு எனக்கு பணம் வரும்னு தெரியும் சார். ஆனா நீங்க கொண்டு வந்து கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கலை” என்றார்.

“பணம் வரும்னு தெரியுமா? எப்படி?” என்பது போல வியப்புடன் அவரை பார்த்தேன்.

“காரணீஸ்வரர் கோவலில் எங்கள் குழு மூலம் தினமும் போய் தேவாரம் பாடுகிறோம். இன்னைக்கு தேவாரத்துல ‘இடரினும் தளரினும்’ பதிகம் நான் பாடினேன். அந்த பதிகத்தை மனமுருகி பாடினா பணம் தேடி வரும். திருஞானசம்பந்தர் ஒரு சமயம் வேள்வி செய்ய பொருளில்லாமல் கஷ்டப்பட்டபோது இந்த பதிகம் பாடினார். இறைவன் உடனே அவருக்கு தேவையான பொருளை தந்துதவினார். எனவே இன்னைக்கு பணம் வரும்னு தெரியும். நீங்க கொண்டு வந்து கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கலை!” என்று கூற, எனக்கு ஒரு கணம் சிலிர்த்துவிட்டது.

இறைவா… எப்பேற்ப்பட்ட கருணை உனக்கு. உன் திருவிளையாடலில் ஒரு கருவியாக இந்த எளியவர்களையும் சேர்த்து கொண்டதற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்?

உள்ளம் உருக ஒரு ஆன்மீக கடமையாக தினசரி தேவாரம் பாடி வந்த தன் பக்தைக்கு தேவைப்படும் நேரத்தில் இறைவன் அருள் புரிந்திருக்கிறான் என்பது புரிந்தது.

திருவிளையாடல் – பிட்டுக்கு மண் சுமந்த படலம் – பட உதவி : sankriti.blogspot.in

நல்லா கவனிக்கணும்…. நான் பணம் கொடுக்கணும்னு முடிவு செய்தது (ஆகஸ்ட் 15) அன்னைக்கு மாலை தான். நான் திருமதி.கற்பகத்திற்கு ஃபோன் செய்தபோது கூட “பணம் கொடுக்க உங்களை பார்க்க வர்றோம்”னு சொல்லலை. சென்ற வாரம் மருத்துவமனைக்கு சென்று திரு.ஆறுமுகம் அவர்களை நலம் விசாரித்தபோது “டிஸ்சார்ஜ் ஆனதுக்கு பிறகு சொல்லுங்க. ஐயாவை வீட்டுக்கு ஒருமுறை வந்து பார்க்கிறேன்” என்று தான் சொல்லியிருந்தேன். அவரும் நான் அதற்காகத் தான் வருகிறேன் என்று நினைத்துவிட்டார்.

அந்த பக்கம் அவர் காரணீஸ்வரர் முன்பு ‘இடரினும் தளரினும்’ பாட, இந்த பக்கம் அருணாச்சலேஸ்வரர் எங்களை பணத்துடன் அனுப்பிவிட்டார்.

ஆறுமுகம் அவர்களுக்கு உதவிட இறைவன் நடத்திய இந்த திருவிளையாடலில் பங்குபெறும் வாய்ப்பு  நம் வாசகர்கள் மூன்று பேருக்கு கிட்டியது. மொத்தம் மூன்று அன்பர்கள் சேர்ந்து ரூ.10,000/- தந்திருந்தனர். அவர்கள் மூன்று பேருக்கும் என் மொபைலில் இருந்து ஃபோன் செய்து, “இருங்க… நண்பர் ஒருத்தர் உங்ககிட்டே பேசணும்னு சொல்றார்” என்று சர்ப்ரைஸாக ஃபோனை திரு.ஆறுமுகம் அவர்களிடம் கொடுக்க, திரு.ஆறுமுகம் தன்னை அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு அவர்கள் செய்த பொருளுதவியை நாம் கொண்டு வந்த சேர்த்துவிட்ட விஷயத்தை கூறி மூவருக்கும் நன்றி சொன்னார். அவர் மனைவி கற்பகமும் நன்றி சொன்னார்.

நண்பர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் மறுபக்கம் சின்ன வருத்தம். என்னை கடிந்துகொண்டனர். “ஏன்… சுந்தர் சார் எங்க பேரெல்லாம் அவர் கிட்டே சொல்லிக்கிட்டு இருக்கீங்க?” என்று கோபித்துக்கொண்டனர்.

“உங்களிடம் எப்போது ஒப்படைத்தோமா அப்போதே இதை மறந்துவிட்டோம். அவர் நேரடியா எங்களுக்கு நன்றி சொல்லித் தான் எங்களுக்கு இதெல்லாம் தெரியனுமா?” என்றனர்.

“உங்கள் உதவி உரிய நபரிடம் முழுமையாக போய் சேர்ந்துவிட்டது என்று உங்களுக்கு தெரியவேண்டும் இல்லையா? அதனால் தான்  இவ்வாறு செய்தேன்!” என்றேன்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திரு.ஆறுமுகம் தம்பதியினரிடம் காலில் வீழ்ந்து ஆசி பெற விரும்பினோம். அந்நேரம் பார்த்து திருமதி.கற்பகம் அவர்களுடன் கோவிலில் தினசரி தேவாரம் பாடும் ஒரு வயதான தம்பதியினர் வந்தார்கள்.

அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்த, “நீங்க எல்லாரும் சேர்ந்து நின்னு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க!” என்று கூறியபடி அவர்களின் முன் சாஷ்டாங்கமாக விழுந்தேன்.

உடனே அவர்கள்,

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில், நல்லகதிக்கு யாதும் ஓர்குறைவு இலை;
கண்ணில், நல்லஃதுஉறும்; கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

போதையார் பொன்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உறத் தான் எனை ஆண்டவன்
காதையார் குழையினன்; கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே

என்று வாழ்த்துப் பா பாடியபடி நம்மை ஆசீர்வதிக்க நம் கண்கள் நெகிழ்ச்சியில் கசிந்துவிட்டது. நம்முடன் சேர்ந்து நண்பர் மௌலியும் ஆசி பெற்றார்.

“அம்மா எனக்காக, ‘இடரினும் தளரினும்’ ஒரு முறை பாடுங்க” என்று நாம் கேட்டுக்கொள்ள, அவர் பாட… அப்போது தான் அவரது குரலை முழுமையாக கேட்டேன். அப்பா…. என்ன ஒரு வெண்கலக் குரல்… சிறு வயதிலிருந்தே இறைவனை பாடும் குரலாயிற்றே…!

“அம்மா… திருவள்ளுவர் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணத்தின்போது நீங்கள் பாடியதை கேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது உங்கள் குரல் மற்றவர்களுடன் சேர்ந்து ஒலிக்கும். தனியாக கேட்கும் பாக்கியம் இப்போது தான் கிடைத்தது. உங்களுக்கு எங்கள் ஈசன் அருளால் ஒரு குறையும் வராது. எங்கள் பிரார்த்தனை எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு” என்று கூறி  விடைபெற்றேன்.

இந்த பாடலின் முதல் நான்கு வரிகளை மட்டும் நமக்கு மின்னஞ்சல் செய்யும்படி திருமதி.கற்பகம் அவர்களை கேட்டுக்கொண்டேன். வீடு வந்து சேரும் முன், மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள.

=========================================

குழந்தை பசி எடுத்து அழுதால் தான் நான் சோறூட்டுவேன் என்று எந்த தாயாவது கருதுவாளா? அது போல நம்மை சுற்றியிருப்பவர்களின் தேவையை உணர்ந்து நாமே உதவிக்கரம் நீட்டவேண்டும். அதுவே உண்மையான தொண்டு. திரு.ஆறுமுகம் அவர்கள் நம்மிடம் எந்த உதவியம் கேட்கவில்லை. இருப்பினும் அவரது சூழ்நிலை உணர்ந்து நாம் உதவி செய்ய விரும்பினோம். இறைவன் அதை நிறைவேற்றி வைத்துவிட்டான். அது மட்டுமா, இந்த திருவிளையாடலின் மூலம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் வாசகர்களுக்கும் ஒரு அருமையான பதிகத்தை அடையாளம் காட்டியிருக்கிறான்.

பதிகத்தின் முதல் நான்கு வரியே பாருங்க… எத்தனை உருக்கம்… எத்தனை கருத்து…. அன்னையிடம் பாலுண்ட ஆளுடையப் பிள்ளையாயிற்றே…!

இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன் கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!—
இதுவோ எமை ஆளும்ஆறு?
ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்? ஆவடுதுறை அரனே!

இந்த பாடலை பற்றி நாம் மேலும் ஆராய்ச்சி செய்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தது.

எந்த சூழ்நிலையில் சம்பந்தர் இதை பாடினார்?

இறைவன் எப்படி அவரது பொருளாதார நெருக்கடியை நீக்கினார்?

நமக்கு இது சரிப்பட்டு வருமா?

நமது பொருளாதார பிரச்னையை இந்த பாடல் தீர்க்குமா?

முழு பாடலுடன் விரிவான பதிவு நாளை….

(இறைவன் நம்மை வைத்து ஆடிய ஒரு திருவிளையாடலை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவும், உங்கள் அனைவரின் பொருளாதார பிரச்னையை தீர்க்க ஒரு எளிமையான வழியை காட்டவுமே இந்த பதிவு. மற்றபடி நாம் செய்த உதவியை வெளிச்சம் போட்டு காட்டுவதல்ல என்ன நோக்கம்!)

=========================================

[END]

17 thoughts on “பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

  1. நாம் ஒரு நல்ல விசயத்துக்காக முயற்சி மேற்கொண்டு இருக்கும்போது தன்னால் நமக்கு பின்னால் உதவிகள் தேடி வரும். மேலும் ஆண்டவனுக்கு தெரியாதா யாரிடம் எதை ஒப்படைத்தால் போய் சேர வேண்டிய இடத்திற்கு சரியாக போய் சேரும் என்று.இதன் மூலம் மிகப் பெரிய வழியை கடவுள் நமக்கு காட்டியிருக்கிறார்.

  2. வணக்கம் சார்

    தங்களின் பதிவு மிகவும் அருமை சார். பெரியவர்கள் இடம் எவ்ளவு பெரிய ஆசி வங்கீருகங்க சார்.. நம் தல வாசகர்களுக்கு மிக பெரிய பயன் உள்ள தகவல் சார்..

    மிக நன்றி..

  3. சுந்தர்ஜி,

    நிகழ்வுகளை படிக்கும் போதே இறைவனின் கருணையை எண்ணி வியக்க வைக்கின்றது. யாருக்கு எந்த நேரத்தில் என்ன வேண்டுமோ அந்தந்த நேரத்தில் உதவுவது தங்களின் குறிகோளில் ஒன்று.

    ஆண்டி முதல் அரசன் வரை போகி முதல் யோகி வரை
    அனைவருக்கும் ஒருப் பாடம் சொல்லிஅன்பும் , பன்பும் , ஒற்றுமையும்மனித குளத்தின் வேர்கள் என்று மனித மேம்பட ஒவொரு குறளிலும் நம்மை செம்மை படுத்திய திருவள்ளுவர் அவர்களுக்கு தம் வாழ் நாளையே அர்ப்பணித்து கொண்டு இருக்கும் திரு ஆறுமுகம் அவர்களுக்கு நம் தளம் சார்பாக அவரது சூழ்நிலை உணர்ந்து தாங்கள் உதவி செய்ய,அதற்கு நமக்கு வாழ்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்ஒவ்வொருவருக்கும்
    ஒரு அருமையான பதிகத்தை அடையாளம் காட்டிய இறைவனினின் கருணையை நினைக்கும் போது உடல் சிலிர்கின்றது.

    வளர்க உங்கள் தொண்டு. முடிந்த வரை என்றென்றும் துணை இருப்போம்.

    நன்றி.

  4. உண்மையில் திருவள்ளுவரின் ரோல்மாடல் குடும்பத்திற்கு சென்று வந்துள்ளீர்கள் சுந்தர் சார். திருமதி கற்பகமும் திரு ஆறுமுகம் அய்யா அவர்களும் வள்ளுவரும் வாசுகியும் போலதான் எனக்கு தெரிகிறது. நீங்கள் சொன்னதை போல் அவர்களுக்கு இனி எந்த குறையும் வராது. காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பதை அருள்மிகு காரணீஷ்வரர் நமக்கு நிரூபித்துவிட்டார். தம் முன் பதிகம் பாடும் பக்தைக்கு நம் தளம் மூலமும் தக்க சமயத்தில் உதவியதோடு அல்லாமல் (சுந்தர் சார்) தங்களின் உண்மையான பக்திக்கும் தேடுதலுக்கும் தகுந்த ஆசீ ர்வாதமும், அனைவர்க்கும் உதவும் பதிகத்தையும் அளித்து மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் நம் ஈசன்.

  5. யார் யாருக்கு எப்போ எப்படி கொடுக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியும் ..சதா இறைவனின் சன்னதியில் அவனின் திரு நாமத்தை சொல்லிக்கொண்டு இருந்தாலும் அவன் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது…தருமிக்கு ஈசன் நடத்தய திருவிளையாடல் போல் திரு.ஆறுமுகம் அவர்களுக்கு இறைவன் வைத்த சோதனை…திரு சுந்தர் அவர்களின் மூலம் அளித்துள்ளார் என்பதே உன்மை..

  6. சுந்தர்ஜி தயவுசெய்து என்னையும் இது போல நல்ல விசயத்தில் சேர்க்குமாறு அன்போட கேட்டு கொள்கிறேன் please

  7. மிக அற்புதமான சேவை, வாழ்க உங்கள் தொண்டு

  8. திருவாவடுதுறை ஆதீனம் விதியை வெல்லவது எப்படி cd வாங்கி கேளுங்கள், மொத்தம் 27 படிகம்

    சிவயநம

  9. சுந்தர் சார் அவர்களின்மூலம் அனைவர்க்கும் பதிகம் முழுவதும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி அய்யா எங்களுக்கு உதவி புரிந்த உங்களுக்கும் மற்றும் உங்களுடன் உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறோம்.

    1. உங்களுக்கு உதவினோம் என்று சொல்வதைவிட ஒரு மிகப் பெரிய சேவை செய்ய எங்களுக்கு இறைவன் வாய்ப்பளித்தான் என்று தான் சொல்லவேண்டும்.

      பெற்றுக்கொண்டு எங்களை கௌரவித்தமைக்கு இந்த தளம் சார்பாக நன்றி.

      – சுந்தர்

  10. சிம்பிள் சுந்தர் சார்,
    மிக பெரிய விஷயம்! சிம்பலாக செய்துள்ளிர்கள்.
    நன்றியுடன் அருண்.

  11. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் அவரவர் தேவைகளை சமாளிப்பதே மிக கடிமாக உள்ள வேளையில் பிறர் துயரை தம் துயர் என கருதி தம்மால் முடிந்த உதவியை செய்வதும் அப்படி ஒரு வேலை செய்ய இயலாமல் போனால் அதற்க்கான முயர்ச்சியையாவது எடுப்பதுதான் சாலச்சிறந்தது – அவ்வகையில் தங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது !!!

    பிறர்க்கு உதவேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றிய மறுகணமே அந்த பரம்பொருள் அதற்க்கான மார்கத்தை நமக்கு உடன் காட்டி விடுகிறார்

    காலத்தினர் செய்த உதவி என்ற ஐயனின் கூற்று போல தக்க தருணத்தில் செய்யப்படும் உதவி மிகவும் விசேஷமானது – அத்தோடு அளிக்கப்படும் உதவி அதன் நோக்கத்தை செவ்வனே அடையுமாயின் அந்த உதவி முழுமை பெறுகிறது

    உங்களோடு இந்த மகத்தான தொண்டில் தம்மையும் இணைத்துக்கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

    நீங்கள் வணங்குகின்ற பரம்பொருளும் உங்களுக்கு வழிகாட்டும் அந்த வள்ளுவரும் என்றென்றும் உங்களுக்கு துணை நின்று அருள் புரிவாராக

    தொடரட்டும் அறப்பணி

    வாழ்க வளமுடன் !!!

  12. “தும்பி முகன் தம்பித் துணை ”
    ஐயா,
    சிறிது நேரத்திற்கு முன் தான் உங்களின் பதிவினைக் காண நேர்ந்தது ;
    நானும் அவரை முக நூல் வாயிலாக தான் அறிமுகம் ஆனேன் .
    நான் நேரில் சந்தித்த முதல் முக நூல் நண்பர் அவர்தான்
    என்னை சந்திக்க வைத்தவர் முழு முதல் கடவுள் அந்த வினாயகரே !
    எங்களது குல தெய்வம் அவருடைய தம்பி ஆறுமுகனே
    அதனால் தான் நான் எப்பொழுதும் எழுதினாலும்
    “தும்பி முகன் தம்பித் துணை “என்று எழதுவது வழக்கம் ஏனென்றால் அந்த வினாயகனையும் , குல தெய்வத்தையும் ஒரு சேர தொழுத மாதிரி இருக்குமே !நான் என் சிறு வயதில் அதே திருவள்ளுவர் கோவிலில் தான் எப்போதும் இருப்பேன்
    நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே மைலாப்பூர் தான்
    உங்கள் பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி ! முடிந்தால் மற்றொரு முறை நேரில் சிந்திப்போம் இறைவன் சித்தம்
    இவண்
    எல். என். சுந்தரம்
    அம்பத்தூர்
    9445376232 — 9444529951

  13. ஹலோ சார்,

    நானும் உதவ ஆசை படுகிறேன். யாருக்காகனாலும், எதுகாகனாலும். எல்லாரும் நல்ல இருக்கனும். இன்னிக்கு நாம குடுத்தா நாளைக்கு நமக்கு கடவுள் தருவான்… மேலும் உதவ.

    நன்றி.
    பிரியா

  14. படிக்கும்போதே கண்கள் கலங்கி விட்டது. இறைவன் தற்போது எங்களை சோதிப்பதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். தங்களின் கருணைக்கும் உதவும் பண்பிற்கும் ஆண்டவன் மென்மேலும் அருள்வான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *