சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளின் படி நம்மால் விரதம் இருக்க முடியுமோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் அன்றைக்கு ஒரு நாள், நாவை கட்டுப்படுத்திக்கொண்டு வயிற்றை காயப்போடுவதை தவறாமல் அனுஷ்டித்து வருகிறோம். மற்ற நாட்களில் நாம் எதேச்சையாக செய்யக்கூடிய சிறு சிறு தவறுகளை கூட விரதத்தின் போது செய்வதில்லை.
இந்த தமிழ் புத்தாண்டை பொறுத்தவரை என்ன சிறப்பு என்றால் முந்தைய தினம் மகத்துவம் மிக்க பங்குனி உத்திரம். அன்று முழுதும் உபவாசம் இருந்தோம். காலை குன்றத்தூர் முருகனை தரிசித்த பின்னர் நீண்டநாட்களாக நாம் செல்ல நினைத்த குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்திற்கு சென்றோம்.
குன்றத்தூர் முருகனை தரிசித்துவிட்டு நாம் இங்கு செல்லும்போது கடுமையான வெயில். எப்படியும் மணி 11.00 இருக்கும். வெளியே இருந்து பார்த்தால் கேட் பூட்டப்பட்டிருந்தது.
“அடடே… எப்போது திறப்பார்கள் என்று தெரியவில்லையே… மறுபடியும் இதற்கு என்று நேரம் ஒதுக்கி வருவது சிரமமாயிற்றே. இங்கு வந்து மணிமண்டபத்தை பார்த்துவிட்டு பிறகு குன்றத்தூர் முருகனை தரிசிக்க சென்றிருக்கவேண்டும் போல…” மனம் அதன் போக்கில் சிந்தித்தபடி இருந்தது
என்ன செய்வது… திரும்பப் போகவேண்டியது தான். மறுபடியும் சாயந்திரம் தான் வரவேண்டும். உடம்பு வேறு மிகவும் களைப்பாக இருந்தது. கையை பிசைந்து கொண்டு நின்றோம்.
எதிரே ஒரு அரிசி மண்டி கடை இருந்தது. அங்கே விசாரிக்கலாம் என்று அங்கு சென்று கடையில் இருந்தவரிடம் கேட்டோம்.
“சார் சேக்கிழார் மணிமண்டபம் பூட்டியிருக்கே… மறுபடியும் எப்போ திறப்பாங்க? டைமிங் என்ன?”
எதிரே மண்டபத்தை பார்த்தார்… பிறகு தனது வாட்ச்சை பார்த்தார். “டயம் ஆகலியே இன்னும். திறந்து தான் இருக்கும்….”
“இல்லே சார் பூட்டியிருக்கு… வெளியிலே பூட்டு தொங்குது பாருங்க…”
“ஆமாம்… பூட்டு போட்டிருக்கு….”
அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே…. மூட்டைகளை ஏற்றி இறக்கி வைத்துக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், “இல்லே சார்… திறந்திருக்கு. சின்ன கேட் திறந்திருக்கும்…. கிட்டே போய் பாருங்க…” என்றார்.
நாம் கேட் அருகே சென்றபோது தான் கவனித்தோம். பெரிய கேட்டுக்குள் ஒரு சின்ன கேட் இருந்தது. அது திறந்திருந்தது. (பார்க்க படம்).
நம்மை நொந்துகொண்டோம். சின்ன விஷயம் தான். ஆனால் இது உணர்த்துவது எவ்வளவு பெரிய நீதி தெரியுமா?
இப்படித்தான் எட்ட நின்று பார்த்தே பல சந்தர்ப்பங்களை வாழ்க்கையில் கோட்டை விட்டுவிடுகிறோம். நம்மால் முடியுமோ இல்லையோ…பிரச்சனைகளை தைரியமாக அணுகவேண்டும். அவற்றை நெருங்கி ஆராயவேண்டும். ஏதேனும் ஒரு வழியை நிச்சயம் இறைவன் வைத்திருப்பான். எட்ட நின்று பார்த்தே முடிவு செய்யக்கூடாது.
உள்ளே சென்றோம்… வாட்ச்மேன் மற்றும் மணிமண்டப பணியாளர்கள் சிலர் அமர்ந்திருந்தனர்.
“என்ன சார்… கேட்டை சாத்தியிருக்கீங்க…திறந்து வைக்கக்கூடாதா? பூட்டியிருக்குன்னு நினைச்சு நான் வெளியவே நின்னுகிட்டு இருந்தேன்…”
“இல்லே… சார் சின்ன கேட் திறந்து தான் இருந்தது. யாரோ சாத்தியிருக்காங்க…. 12 மணிவரைக்கும் திறந்து தான் இருக்கும். நான் இங்கேயே தான் இருப்பேன்” என்றார்.
அவரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு மனிமண்டபத்தினுள் சென்றோம்.
சேக்கிழாரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு பத்து நிமிடம் அவர் முன்பு அமர்ந்து தியானம் செய்தோம். மிகவும் அமைதியான காற்றோட்டமான இடம் என்பதால் தியானம் செய்வதற்கு ஏற்றோ ஒரு இடம். தவிர அந்த சூழல் ஏதோ சேக்கிழாரே நிஜமாக நம் முன்பு அமர்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வை தரும்.
குன்றத்தூர் கோவில்கள் நிறைந்த நகரம். பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், திருநாகேச்சுரம் என பல தொன்மை வாய்ந்த கோவில்கள் அமைந்துள்ள ஒரு நகரம். (போரூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு தான் குன்றத்தூர்.. வடபழனியில் இருந்தும் பிராட்வேயில் இருந்தும், பூவிருந்தவல்லி, மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.)
குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள அதே தெருவில், அமைந்துள்ளது சேக்கிழார் மணிமண்டபம். பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமானுக்கு சென்ற தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மணிமண்டபம் அது. மணிமண்டபத்தின் அழகை படம்பிடித்த பிறகு, அங்கிருந்த சேக்கிழார் திருவுருவச் சிலையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
சேக்கிழார் மிகச்சிறந்த தமிழ் இலக்கிய புலவர். குன்றத்தூரில் 12ம் நூற்றாண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் அருள் மொழித் தேவர். இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதன்மை மந்திரியாக இருந்த சேக்கிழார் பின், சிதம்பரத்திற்கு சென்று, 63 அடியார்களை பற்றிய திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தை எழுதினார். சிதம்பரத்தில் அவர் பெரிய புராணத்தை அரங்கேற்றியபோது போது, இறைவனே, ‘உலகெலாம்,’ என்று அடியெடுத்துக் கொடுத்ததாக வரலாறு.
காவியங்கள் பல இருக்கின்றன. சிலவற்றில் உலகைக் காணலாம். சிலவற்றில் உயிரைக் காணலாம். சிலவற்றில் இறைவனைக் காணலாம். இம்மூன்றும் ஒருங்கே காணப்படுவது சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் தான். உலகெலாம் என்று தொடங்கி உலகெலாம் என்று முடியும் இந்நூல் உலகம் முழுவதற்கும் உரியது என்றால் மிகையாகாது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் பெரிய புராணத்தை அரங்கேற்றினார். தொண்டர் சீர் பரவுவார், உத்தம சோழ பல்லவர் போன்ற சிறப்பு பெயர்களும் இவருக்கு உண்டு. குலோத்துங்க சோழனுக்கு தமிழ் இலக்கியத்தில் உள்ள இதிகாசம், காப்பியம், காவியம் உள்ளிட்ட சிறந்த நூல்களை சேக்கிழார் அறிமுகப்படுத்தினார். சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் திருமுறையாக போற்றப்படுகிறது. இதன்பின், 63 நாயன்மார்களின் பக்தியால் கவரப்பட்ட சேக்கிழார், தானும் அவ்வழியையே பின்பற்றி சிவனடி சேர்ந்தார்.
சேக்கிழார் பிறந்த குன்றத்தூரில் அவரை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடி செலவில் சேக்கிழார் மணிமண்டபம், தியான மண்டபம், நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.விமான திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, இந்த மணிமண்டபத்தை தற்போது பராமரித்து வருகிறது.
மணிமண்டபம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் அழகிய செடிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மணிமண்டபத்தில் சேக்கிழார் உருவச் சிலை மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகளும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இங்கு தினமும் தேவார திருமுறைப் பாடல்கள் ஒலிக்கப்பட்டும், கண்கவர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டும் உள்ளதால் இங்கு வந்தால் மன அமைதி கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, இந்த மணிமண்டபத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.
மணிமண்டபம் அருகில் உள்ள தியானமண்டபத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் வேதந்திர மகரிஷியின் தியானம் மற்றும் உடற்பயிற்சிகள் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இந்த மணிமண்டபம் காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கிறது.
குன்றத்தூருக்கு சென்றால் அவசியம் திருநாகேச்சுரம் கோவிலுக்கும் அருகே உள்ள இந்த மனிமண்டபத்துக்கும் சென்று வாருங்கள். சேக்கிழார் பெருமானின் பரிபூரண நல்லாசிகள் இந்த மணிமண்டபத்துக்கு உண்டு என்பதை அங்கே நிலவும் ஒரு வித சாந்நித்தியத்தை வைத்தே புரிந்துகொள்ளலாம்.
குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் SPIRITUAL PICNIC செல்ல ஏற்ற இடம் குன்றத்தூர். மதிய உணவோ அல்லது டிபனோ சாப்பிடவேண்டும் என்றால் சிறந்த சைவ ஓட்டல்களும் உண்டு.
சேக்கிழார் மணிமண்டபம் சென்ற ஆட்சியில் தமிழக அரசு சார்பாக கட்டப்பட்டது. மொத்த செலவில் ஒரு பங்கு அறநிலையத் துறையும் இன்னொரு பங்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு தனியாரிடமும் பொதுமக்களிடமும் கூட நிதி திரட்டி கட்டப்பட்டது. குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, தற்போது பணியாளர்களை வைத்து பராமரித்து வருகிறது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… தற்போது பராமரிப்பது தமிழக அரசு அல்ல. ஒரு தனியார் அறக்கட்டளை. மணிமண்டபம் நல்ல முறையில் பரமாரிக்கப்பட்டு வந்தாலும் நமது உழவாரப்பனியின் தேவை அங்கு உள்ளதை மணிமண்டபத்தை சுற்றிப் பார்க்கும்போது உணர்ந்துகொண்டோம்.
அடுத்த மாதம் சேக்கிழார் குரு பூஜை வருகிறது. அப்போது ஒரு வாரம் திருநாகேச்சுரம் கோவிலில் விழா களைகட்டும். அதன் பின்னர் இங்கு மணிமண்டபத்தில் பட்டிமண்டபம், தேவார திருமுறைகள் ஓதுதல், பெரியபுராண சிறப்பு சொற்பொழிவு, குழந்தைகளுக்கு தேவார திருவாசகம் போட்டிகள் என நடைபெறும். அதுசமயம் மணிமண்டபம் முழுதும் சுத்தம் செய்யப்படும். நமது உழவாரப்பணி குழுவினருடன் நாமும் சேர்ந்து அந்த பணியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்து உரியவர்களிடம் அனுமதியும் பெற்று வந்துள்ளோம்.
சேக்கிழார் மணிமண்டபத்தை காப்பதும், பராமரிப்பதும், பரமரிப்பவர்களுக்கு உதவுவதும் நம் தலையாய கடமை ஆகும்.
சேக்கிழார் மணிமண்டப உழவாரப்பணிக்கு முன்னதாக, இம்மாத இறுதியில் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் (ஏப்ரல் 27) உழவாரப்பணி நடைபெறும். தொடர்ந்து மே பிற்பகுதியில் நடுக்காவேரி பயணம் இருக்கும்.
=======================================================================
நம் தளம் சார்பாக அடுத்து நடைபெறும் உழவாரப்பணி விபரங்கள் :
* கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் (ஏப்ரல் 27)
* குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம் (தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை)
* நடுக்காவேரி காவிரிக்கரை பிரசன்ன கணபதி கோவில் (தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை)
விரும்பும் அன்பர்கள் பணியில் பங்கேற்று இறையருள் பெற வேண்டுகிறோம்.
=======================================================================
[END]
கட்டுரை மற்றும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை. நேரில் சென்று தரிசித்த உணர்வு. சேக்கிழார் பெருமான் அவர்களுக்கு மணிமண்டபம் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்.
சுந்தரின் சீரிய முயற்சிகளால் புதிய நல்ல உருப்படியான விஷயங்களை நம் தளத்தின் மூலம் தெரிந்துகொள்வது மிகப்பெரிய சந்தோஷம்.
தெய்வ புலவர் சேக்கிழார் மணி மண்டபம்.
சென்னையில் இதுவரை நாம் தெரிந்திராத பல கோயில்களையும் முக்கியமான இடங்களையும் மனிதர்களையும் நமக்கு தெரியபடுத்திய பெருமை நம் சுந்தர் சார் அவர்களுக்கு தான் சேரும்.
அந்த வரிசையில் தற்போது மணி மண்டபம்.
கொள்ளை அழகுடன் அதை பார்க்கும் போது இத்தனை நாள் மிஸ் பண்ணிய உணர்வு மனதை கஷ்டபடுத்துகிறது.
பெரிய புராணம் தந்தது சேக்கிழார் பெருமான் என்பது மட்டும் தெரியும். வேறு விஷயங்கள் தெரியாது.
படங்கள் அனைத்தும் அருமை.எல்லா படங்களும் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வைக்கிறது.
இந்த பதிவில் உங்கள் வார்த்தைகளை விட படங்கள் அதிகமாக அந்த இடங்களை நேரில் பார்த்த மகிழ்ச்சி வருகிறது.
காவியங்கள் பல இருக்கின்றன. சிலவற்றில் உலகைக் காணலாம். சிலவற்றில் உயிரைக் காணலாம். சிலவற்றில் இறைவனைக் காணலாம். இம்மூன்றும் ஒருங்கே காணப்படுவது சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் தான். உலகெலாம் என்று தொடங்கி உலகெலாம் என்று முடியும் இந்நூல் உலகம் முழுவதற்கும் உரியது என்றால் மிகையாகாது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
உங்களின் பல வேலைகளுக்கு நடுவே தமிழ் புத்தாண்டு பதிவு மிக அருமையாக இருக்கிறது. தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்கிறோம்.
நன்றி சார்.
Through this article only, we came to know about Sekkizar. All the photos are fabulous.
திருவருள் துணை இருந்தால் உழவார பணியில் கலந்து கொள்வோம்
Dear sundarji,
Very good article.
All the photos are amazing.I hereby confirm that , i will attend the uzhavarapanni on 27th instant.
படங்கள் மிக அருமையாக உள்ளது ,கண்களுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது..
///காவியங்கள் பல இருக்கின்றன. சிலவற்றில் உலகைக் காணலாம். சிலவற்றில் உயிரைக் காணலாம். சிலவற்றில் இறைவனைக் காணலாம். இம்மூன்றும் ஒருங்கே காணப்படுவது சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் தான். ///
ஆன்மிகம் சம்பந்தப்பட்ட புதிய புதிய தகவல்களை எங்களுக்காக தேடித்தேடி அளிக்கும் உங்களுக்கு எங்களுடைய நன்றிகள் ..புகைப்படம் எடுப்பதும் பதிவிடுவதையும் விட பெரியது அதற்க்கான வரலாற்றை திரட்டுவது அந்த விசயத்தில் தாங்களுக்கு நிகர் தாங்கள் தான் ..
///காவியங்கள் பல இருக்கின்றன. சிலவற்றில் உலகைக் காணலாம். சிலவற்றில் உயிரைக் காணலாம். சிலவற்றில் இறைவனைக் காணலாம். இம்மூன்றும் ஒருங்கே காணப்படுவது சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் தான். ///
இந்த வரிகள் ஒரு சொற்பொழிவில் கேட்டது. மனதில் ஆணியடித்தாற்போல பதிந்துவிட்டது. சொல்லப்போனால், பெரியபுராணத்தின் மீது நமக்கு ஈர்ப்பு அதிகரித்ததே மேற்படி வரிகளை கேட்டபிறகு தான்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
– சுந்தர்
வாழ்க வளமுடன்
பதிவும் படங்களும் அருமை.நன்றி!…
தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடத்தை பார்பதற்கு மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. இதே போல் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கட்டுரைக்கு நன்றி.
சொல்லுவ தறியேன் வாழி
தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந் தருளி யென்னை
வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம்
எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம் பலத்து ளாடுஞ்
சேவடி போற்றி யென்ன.