நான் சொன்னேன்… “எனக்கு ஹரியும் ஒன்று தான். ஹரனும் ஒன்று தான். இருவரையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. பரமேஸ்வரன் மீது எந்தளவு பக்தி வைத்திருக்கிறேனோ அதே அளவு பரந்தாமன் மீதும் பக்தி உண்டு. ஹரியும் ஹரனும் வேறு வேறு என்ற எண்ணம் எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. சிறு வயதில் இருந்தே அந்த எண்ணம் என் மனதில் ஊறிவிட்டது ஒரு வகையில் எனக்கு கிடைத்த வரம்!” என்றேன்.
சில சைவர்கள் இருக்கிறார்கள். சிவபெருமான் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருப்பார்கள். ஆனால் பெருமாளை மறந்தும் கூட சேவிக்க மாட்டார்கள். தங்கள் தெய்வத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத பக்திக்கு மரியாதை மற்ற தெய்வத்தை புறக்கணிப்பது தான் என்கிற எண்ணம் எத்தனை பேதைமை?
அதே போல சில வைணவர்கள் உண்டு. ஏதாவது திவ்யதேச திருத்தலத்திற்கு சென்று பெருமாளை வணங்கிவிட்டு வந்தால், கூப்பிடு தூரத்தில் இருக்கும் சிவனை சென்று தரிசிக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அந்த ஊரில் பிரபலமான கோவிலாக அது இருக்கும். இதுவும் அறியாமையே அன்றி வேறு எதுவும் இல்லை.
ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதற்கு நம் புராணங்களில், இதிகாசங்களில், சரித்திரங்களில் பல சம்பவங்கள் இருக்கின்றன. பல ஆழ்வார்கள் கோவிந்தனை பாடும்போது, “உன் உருவில் சிவனைக் காண்கிறோம்” என்று பாடியிருக்கிறார்கள்.
ஆதி சங்கரர் உள்ளிட்ட பல சைவ மதத்தை சார்ந்த அவதார புருஷர்கள் விஷ்ணு மீது ஆறாத பக்தி கொண்டு ஒழுகியிருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆதி சங்கரர் மனமுருகி அழைத்த போதும் ஆபத்தில் சிக்கித் தவித்த போதும் சிவனை விட விஷ்ணு பல முறை உடனே ஓடிவந்திருக்கிறார்.
அவ்வளவு ஏன் ? கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் இருந்து இன்றும் நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கும் மஹா பெரியவா அவர்கள் சந்திரமௌலீஸ்வரர் மீது எந்தளவு பக்தி கொண்டு ஒழுகினாரோ அதே அளவு வரதராஜ பெருமாள் மீதும் பக்தி கொண்டிருந்தார்.
ஆகையால் சைவர்கள் மகாவிஷ்ணுவை புறக்கணித்தாலோ அல்லது வைணவர்கள் சிவபெருமானை புறக்கணித்தாலோ தங்கள் தெய்வத்தை புறக்கணிப்பதாகத் தான் அர்த்தம்.
ஆத்மார்த்தமான பற்று என்பது அனைத்து தெய்வங்களிடமும் ஒருவருக்கு ஏற்பட்டுவிடாது என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. அதே சமயம், திருத்தல யாத்திரை உள்ளிட்டவைகளுக்கு செல்லும்போதோ அல்லது வேறு சூழ்நிலைகளிலோ தரிசிக்க வாய்ப்பிருக்கும்போது கூட மற்ற தெய்வத்தை புறக்கணிப்பது தான் தவறு என்று கூறுகிறேன்.
சிவனும் விஷ்ணுவும் ஒன்றே. ஒருவர் மீது பக்தி கொண்டிருப்பதால் மற்றவரை புறக்கணிக்கவேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் திருமால் அடியவர்களின் திவ்ய சரித்திரங்களை கூறும் ‘ஸ்ரீ மஹா பக்த விஜயம்’ நூலிருந்து ஸ்ரீ நரஹரி பக்தர் என்னும் அடியவர் ஒருவரின் உன்னத அனுபவத்தை தருகிறேன்.
ஸ்ரீ பக்த விஜயத்தில் ஸ்ரீ நரஹரி பக்தரின் சரித்திரம் 41 வதாக இடம் பெற்றுள்ளது. மேற்படி நூலில் இருந்ததை அப்படியே தட்டச்சு செய்து கீழே தந்திருக்கிறேன்.
(சமீபத்தில் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசித்தபோது அங்கு கோவிலின் பிரகாரத்தில் எடுத்த படம் தான் நீங்கள் காணும் சங்கரநாராயனின் படம். எத்தனை அழகு பாருங்கள்…!)
இந்த பதிவிற்காக நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரத்யேக ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து தந்திருப்பது நமது தளத்திற்கு ஓவியங்கள் வரையும் ரமீஸ் என்னும் இஸ்லாமிய அன்பர். மிகுந்த சிரமத்திற்கு பிறகு – நெடிய தேடலுக்கு பிறகு – இவரை கண்டுபிடித்தேன். நமது எண்ணங்களை அப்படியே ஓவியமாக வடிக்கும் திறன் பெற்றவர் இந்த இளைஞர். அவருக்கு என் நன்றி!
இந்த பதிவை அளிக்க நீண்ட நாட்களாக முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் கிருஷ்ண ஜெயந்தி அன்று கைகூடியிருப்பது அந்த பரந்தாமனின் அருள் தான்.
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
=====================================================
கண்ணை திறந்து பார்த்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
‘ஏகோ தேவ : கேசவோ வா சிவோ வா’ என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. அதாவது ஒரே கடவுளிடத்து உன் மனத்தை ஆற்றுப்படுத்து, அது கேசவனாக இருந்தாலும் சரி; சிவனாக இருந்தாலும் சரி என்பதே. இதை இப்பொழுதும் மனதில் இருத்தி ஹரி ஹரன் இருவர் பாலும் பக்தி செலுத்துபவர்கள் அநேகம் உண்டு.
ஆனால், நாட்டிலே வீர் சைவர்கள் என்றும் வீர வைஷ்ணவர்கள் என்றும் சிலரைக் கூறலாம். வீர சைவர்கள் வீர வைஷ்ணவர்கள் தொட்ட சொம்பைக் கூட தொடமாட்டார்கள். இறைவனது திருநாமம் என்று யாராவது பெயரிட்டாலும் கோபிப்பர். பொதுவாக, மதச் சம்பிரதாயமான சடங்குகள் அனைத்தும் விஷ்ணுவையே முன்னிலைப்படுத்தியே நடைபெறும். ஆனால், வீர சைவர்களோ அச்சடங்குகளை சிவபெருமானை முன்னிலைப்படுத்தியே செய்வர்.
இதே போன்று வீர வைஷ்ணவர்களும் சாலேசுவரம் போன்ற சொற்களை கையாளாமலும், தில்லைநகர் திருச்சித்திரக்கூடத்திலே (சிதம்பரம்) எழுந்தருளியுள்ள கோவிந்தராஜ பெருமாளை சேவிக்க செல்லும்போது எதிரே ஆனந்த தாண்டவமாடும் நடராஜப் பெருமானது திருவுருவம் கண்களில் பட்டுவிடக்கூடாதென்று விசிறியினால் வலப்புறத்தை மறைத்துக் கொண்டு செல்வதும் உண்டு. ‘ஆனை துரத்தினாலும் ஆலயத்தில் நுழையக்கூடாது’ என்ற பழமொழியும் உண்டு.
இத்தகைய வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களும் முன்பு இருந்திருக்கிறார்கள் என்பதற்கு நரஹரி பக்தர் சிறந்த உதாரணம்.
1. பொன்னரைஞானில் புலப்பட்ட ஞானம்
பாண்டுரங்கன் குடிகொண்டிருக்கும் பண்டரீபுரத்திலே நரஹரி என்னும் பக்தர் வாழ்ந்து வந்தார். நரஹரி பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்தவர். இவர் சிறந்த சிவா பக்தர். உடல் பொருள் ஆவி எல்லாம் சிவபெருமானின் திருப்பணிக்கே என்று அர்ப்பணம் செய்தவர். ஆனால் பாண்டுரங்கன் எழுந்தருளியிருக்கும் பண்டரீபுரத்திலே சிவனடியார்களை காண்பதும் அளவளாவுவதும் ஏது? ஊர் முழுவதும் பாண்டுரங்கனது நாமாவளிகளின் கோஷம். இது அவரது செவிகளுக்கு நாராசம் போல இருந்தது. எப்பொழுதேனும் பாண்டுரங்கனது சன்னதி வழியே செல்ல நேரிட்டால், நேர்வழியே சென்றால் பாண்டுரங்கனது விக்ரகம் கண்ணில் படும் என்று சுற்றி வளைத்து செல்வார். கோவிலில் பிரம்மோற்சவம் என்னும் கொடியேற்றும் முன்னே எங்காவது வெளியூர் சென்றுவிடுவார். இப்படியே நெடு நாட்கள் நடந்து வந்தது.
பண்டரீபுரத்திலே ஒரு வணிகன். பண்டரிநாதனிடத்திலே எல்லையற்ற அன்பு பூண்டவன். நெடுநாள் புத்திரப் பேறு இல்லாமல் பண்டரிநாதன் சன்னதியிலே தவமிருந்தான். தவத்தின் பயனாக அருள் கிடைத்தது. ஒரு அழகிய மகன் பிறந்தான். மகன் பிறந்தால் பண்டரிநாதனுக்கு அவ்விக்ரகத்தின் எடை அளவாக பொன்னில் நவரத்தினங்கள் இழைத்த பொன் அரைஞாண் செய்து சமர்ப்பிப்பதாய் வேண்டியிருந்தான். அந்த அழகிய பொருளை சிறந்த முறையில் செய்து தரக்கூடிய பொற்கொல்லனை தேடிக்கொண்டிருந்தான். பலரையும் விசாரித்தபோது எல்லோரும் ஒரே வாக்காக நரஹரியை போல அற்புதமாக பொன் வேலையும் குந்தன வேலையும் செய்யக்கூடியவர் அந்த வட்டாரம் முழுவதிலும் இல்லை என்றனர்.
வணிகனும் தேவையான பொன்னையும் நவரத்தினங்களையும் சேமித்து வைத்துக்கொண்டு நரஹரியின் வீட்டை அடைந்தான். நரஹரி வேலை செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், “உங்கள் கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை. விக்ரகத்தின் எடையின் அளவை அளந்துகொண்டு வந்தால் செய்து தருகிறேன்” என்று சொன்னான்.
வணிகனும் சரி என்று ஒப்புக்கொண்டு சென்றான். அவன் மனம் நரஹரியின் குணத்தை எண்ணி வியந்தது. “தேசாந்திரங்களிலிருந்தெல்லாம் மெய்யடியார் கூட்டம் மலரை நாடி வரும் வண்டுகள் போல பண்டரிநாதனது திருவடியை நாடி ஓடி வருகின்றது. இந்த பேதை மனிதன், தாமரை குளத்து தவளை போல இங்கே அவர் காலடியில் வாழ்ந்தும் அவரை சேவிக்கும் பாக்கியமற்றவனாக வாழ்கிறானே. ஐயோ பாவம்!” என்று அங்கலாய்த்தான்.
வணிகனது விருப்பம் போல நரஹரி மிகவும் அழகிய நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதும் காண்போர் ஆச்சரியப்படக் கூடியதுமான நவரத்னங்கள் இழைத்த ஒரு அரைஞாண் செய்து முடித்தார். அதன் அமைப்பை கண்டு அவருக்கே வியப்பு உண்டாயிற்று. அதை வணிகனிடம் கொடுக்க, அவர் அதை கோவிலுக்கு கொண்டு சென்று இறைவனது இடையிலே அணிவித்தான். அது ஆறு விரற்கடை அளவு குறைவாக இருந்தது. ஆகவே மீண்டும் கொண்டு வந்து கொடுத்து ஆறு விரற்கடை இசைத்து தரும்படி கேட்டான்.
நரஹரி மீண்டும் ஒரு நாள் வேலை செய்து அதை நீட்டித் தந்தார். மறுபடியும் அதை கொண்டு சென்று பண்டரிநாதனது இடையிலே அதை பூட்டிப் பார்த்தான் வணிகன். இம்முறையும் சில விரற்கடை அதிகம். மீண்டும் வந்து இழைத்துக்கொண்டு போனான். அப்போதும் அளவு குறையவில்லை.
வணிகனது மனம் துயரத்தில் வாடியது. “அடியேன் எவ்வளவோ பிரயாசைப்பட்டு மிகுந்த சிரத்தையுடன் செய்த இந்த ஆபரணம் இப்படி அமைவானேன் ? இது சோதனையா? என் முன்வினையா?” என்று அழுது அரற்றினான்.
பிறகு நரஹரியிடம் சென்று, “ஐயா நான் அளவெடுத்ததிலே தான் தவறு நேர்ந்திருக்கவேண்டும். நீங்களே சென்று ஒரு முறை அளவெடுத்து வந்தால் நல்ல முறையில் அமையலாம்” என்று கெஞ்சினான்.
நரஹரிக்கு அசாத்திய கோபம். “நீர் இந்த பேச்சை மட்டும் என்னிடம் பேசவேண்டாம். நான் உங்கள் வேலையை ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். எழுந்து போம்” என்று சீறினார்.
வணிகனோ விடுவதாயில்லை. நெடுநேர வாதங்களுக்கு பின் கண்களை கட்டிக்கொண்டு வந்து பாண்டுரங்கனது விக்ரகத்தை கையினால் தடவிப் பார்த்து அளவெடுக்க இசைந்தார் நரஹரி.
கோவில் வாசல் வரை இருவரும் சென்றனர். கோயிலை அடைந்ததும் ஹரியின் கண்கள் கட்டப்பட்டன. அங்கே கூடியிருந்த அர்ச்சகர்களும் பக்தர்களும் நகைத்து “எது என்ன மதியீனம் ? எல்லோரும் இந்த இறைவனை காண கண்கோடி வேண்டும் என்று வேண்டுவார்கள். இவனோ இரு கண்களும் நல்ல பார்வையில் இருந்தும் கண்ணிழந்த கபோதிபோல தடவிப் பார்க்க போகிறானே?” என்றனர்.
வணிகன் வழிகாட்டி போல செல்ல, இருவரும் கர்ப்பகிரஹத்தை அடைந்தனர். நரஹரி இரு கைகளாலும் விக்ரகத்தை தடவ ஆரம்பித்தார். அவர் இறைவனை கைகளால் தடவிப் பார்க்க பகவானது இடையிலே புலித்தோல் அவர்கள் கைகளுக்கு தட்டுபட்டது. மேலும் சந்தேகத்துடன் மற்ற அங்கங்களை எல்லாம் தடவிப் பார்க்க, மான், மழு, சூலம், அக்னி, உடுக்கை, யானைத் தோல் போர்வை, சடாமகுடம், அதன் மீது இளம்பிறை, கங்கை, குண்டலங்கள், நெற்றிக்கண் எல்லாம் இருப்பது புலப்பட்டது.
நரஹரி மயக்கத்தில் ஆழ்ந்தார். “அடாடா… பாண்டுரங்கனை காணக்கூடாதென்று அல்லவா கண்களை கட்டிக்கொண்டு வந்தேன். இங்கேயே திருமாலுக்கு பதிலாக சிவபெருமானல்லவோ என் கைகளுக்கு அகப்பட்டிருக்கிறார்” என்று நினைத்து கண்களை கட்டியிருந்த துணியை அவிழ்த்தார்.
அங்கே அவர் கண்டதென்ன ? நீல மேக சியாமளனாய் இடையிலே கையை வைத்துக்கொண்டு எதிரே நின்று புன்னகை பூத்தான் பாண்டுரங்கன். சங்கும் சக்கரமும் பீதாம்பரமும் மணிமுடியுமாய் நிற்கும் பண்டரிநாதனின் விக்ரகத்தை கண்டதும் மறுபடியும் கண்களை கட்டிக்கொண்டு தடவிப் பார்த்தார்.
முன்பு போலவே சிவபெருமானுடைய சின்னங்கள் கைகளுக்கு புலனாயின. மறுபடி கண்களை திறந்தார். எதிரே பண்டரிநாதன். ஆகவே மனம் வாடி… “அந்தோ! கண் மூடினால் கங்காதரனும், திறந்தால் திருமாலுமாகவல்லவா காண்கின்றேன். இது என்ன அதிசயம் ? ஒன்றும் புலப்படவில்லையே!” என்று ஏங்கி பன்முறை இவ்விதம் செய்து பார்த்தார்.
கடைசியில் நரஹரி பக்தர், இருவரும் ஒருவரே என்று உணர்ந்து அகண்ட ஞானம் பெற்றவராய் இறைவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து “திருநாபிக்கமலத்திலே பிரம்மனை தோற்றுவித்து அகில உலகங்களையும் சிருஷ்டித்த பிரானே ! அடியேன் பேத புத்தியால் நான் வணங்கும் சிவனே பரதெய்வம்; தேவரீர் தாழ்ந்தவர் என்றும் நினைத்திருந்தேன். ஆனால், இன்று தேவரீரில் சிவபெருமானையே காண்கின்றேன். அரியும் சிவனும் ஒன்று என்று இன்று தான் உணர்ந்தேன். இப்படி எனக்கு உபதேசித்ததன் பொருட்டு தமக்கு என் நன்றியை எவ்வவாறு காண்பிப்பேன் ? அடியேன் பேத புத்தியினால் செய்த அபராதத்தை மன்னிக்கவும்” என்று கண்ணீர் பெருக அகங்குழைந்து வேண்டினார்.
2. இறைவன் அருளிய இன்னுபதேசம்
“வத்ஸ! உன் மீது எனக்கு எல்லையற்ற வாத்சல்யம் உண்டு. அது காரணமாகவே உன்னை இவ்வாறு சோதனை செய்தேன். உனக்கு பொது நோக்கு, சமரசம், வெறுப்பின்மை இவை செறிந்த அகண்ட ஞானம் கிடைக்கவேண்டுமென்றே வணிகனை ஏவினேன். உலகில் புத்தியில்லாதவர் தாம் இது போன்ற பேத புத்தி கொண்டு உழல்கின்றனர். இங்கே திருமாலாக வைஷ்ணவர்கள் கண்டால் அங்கே சைவர்கள்; எம்மை சிவபெருமானாக தரிசிக்கின்றனர். இங்கு இருப்பதும் சிவம். அங்கும் இருப்பதும் நானே. இதில் ஏதும் ஐயமுறவேண்டாம்.
சிவன் வேறு. நான் வேறு என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. தெய்வம் ஒன்றே எனும் சிந்தனை உலகில் பரவும் நாளே மங்கல நாள் ஆகும். தன் தெய்வம் என் தெய்வம் என்று வழக்கிடுவது அறியாமையே. உனக்கு இதை மெய்ப்பிக்கவே இவ்விதம் செய்தேன்.
முற்காலத்தில் எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, அழிக்கும் சர்வவியாபக, சர்வஞ்ஞனாகிய மூர்த்தியை தரிசிக்கவேண்டும் என்ற அவாவினால் அத்திரி மகரிஷி நெடுநாள் தவம் புரிந்தார். அத்தவத்திற்கு உவந்து பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் என்ற மூர்த்திகளாக தரிசனம் தர விரும்பினான் இறைவன். “இப்படி மூன்று உருவாய் வந்த மூவரையும் வணங்கி, முத்தொழில் புரியும் மூர்த்தியான நீங்கள் வந்தாலும் உங்கள் உருவம் மூன்றும் ஒன்றே. மூவரும் ஒருவரே” என்று மூன்று மூர்த்தியை ஒரு மூர்த்தியாய் கூறினார் அத்திரி. பிறகு எம்மூவரின் அம்சமாய் ஒரு புதல்வன் உமக்கு உண்டாகட்டும் என்று அருள் செய்ய அதன்படி தோன்றியவரே ஸ்ரீ தத்தாத்ரேயர்.
“இறைவன் தன்னை வழிபடுவோர் விரும்பும் வண்ணம் அவர்களது பக்திக்கும் சிரத்தைக்கும் ஞானத்திற்கும் ஏற்ப ஏதாவது ஒரு வடிவிலே காட்சி தந்து ஆட்கொள்கிறான். இதனால் ஒருவரையொருவர் பகைத்தும் உன் தெய்வம் என் தெய்வம் என்றும் சண்டையிட்டும் பழித்தும் வாழவேண்டும் என்பதில்லை. எல்லாம் ஒரே பரம்பொருளின் பல்வேறு வடிவங்கள் என்பதை உணர்ந்து வாழ்வதே நல்வாழ்வு.” என்றார்.
நரஹரி பக்தர் இறைவனின் திருவுருவை கண்குளிர மீண்டும் ஒரு முறை பார்த்தார். சிவபெருமானும் விஷ்ணுவும் கலந்த ஹரிஹர உருவமாய் காதியளித்தான் பண்டரிநாதன். நரஹரி பக்தரின் சித்தம் தெளிந்தது.
(நன்றி : லிப்கோ பதிப்பகம் ‘ஸ்ரீ மஹா பக்த விஜயம்’)
=====================================================
[END]
அனைவர்க்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
அருமையான பதிவு. சென்ற வாரம் தான் பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனை தரிசித்தேன். அப்போது கோவில் அருகில் நரஹரி வணங்கிய சிவபெருமான் கோவிலும் இருந்தது. அருமையான கோவில் மற்றும் சரித்திரம்.
திருச்சிற்றம்பலம்
நமசிவாய வாழ்க
ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா
வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்..
நன்றி சுந்தர்ஜி…
ஹரிஹரன், சங்கரநாராயணன் அருள் நம் எல்லோருக்கும் கிடைத்தது போல் இருந்தது இந்த பதிவு.
மிக்க நன்றி
ப.சங்கரநாராயணன்
வணக்கத்திற்குரிய சுந்தர் அவர்களுக்கு,
இறைவன் எல்லாருள்ளும் உள்ளான் ( ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், புத்தம், மற்றும் அனைத்திலும் ) என்று போற்றி முக்தியை அடைவோம்.
ரமீஸ் என்னும் இஸ்லாமிய அன்பர் நமக்கு அளித்த ஓவியம் அருமை. ஹரியும் சிவனும் ஒன்று என்பதோடு, அல்லாவும் ஒன்று தான் என்பது போல் அவரின் கைவண்ணத்தில் இந்து கடவுளின் திரு உருவங்கள் கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் வந்துள்ளது. இந்த நல்ல நாளில் அந்த படத்தோடு பாண்டுரங்கனின் கதைதனை படிக்க வைத்ததற்கு உங்களுக்கும் திரு ரமீஸ் அவர்களுக்கும் நன்றி.
சுந்தர்ஜி,
arumayaana karuthulla padhivu.
“இறைவன் தன்னை வழிபடுவோர் விரும்பும் வண்ணம் அவர்களது பக்திக்கும் சிரத்தைக்கும் ஞானத்திற்கும் ஏற்ப ஏதாவது ஒரு வடிவிலே காட்சி தந்து ஆட்கொள்கிறான். இதனால் ஒருவரையொருவர் பகைத்தும் உன் தெய்வம் என் தெய்வம் என்றும் சண்டையிட்டும் பழித்தும் வாழவேண்டும் என்பதில்லை. எல்லாம் ஒரே பரம்பொருளின் பல்வேறு வடிவங்கள் என்பதை உணர்ந்து வாழ்வதே நல்வாழ்வு என்பது குறித்து புராணங்கள் நம்மை செம்மை படுத்திய போதும்.
இன்று நமது தளத்திற்கு பிரத்யேக ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து தந்திருப்பது ஓவியங்கள் வரையும் ரமீஸ் என்னும் இஸ்லாமிய அன்பர் என்பது மகிஷ்சியான விஷயம் ஆகும். ரமிஸ் அவர்கள் மதம் பார்க்காமல் தத்ரூபமாக வரைந்த படம் மிகவும் அருமையாக உள்ளது.அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
nandri
அருமை அருமை.
ஹரியும்,சிவனும் ஒன்று என்பதோடல்லாமல் ஏசு, புத்தர், அல்லா, என அனைத்தையும் ஒன்று என நினைப்பவன் நான்.. மனிதர்கள் தத்தம் மத விருப்பப்படி, தன்னுடைய கடவுளை தேர்ந்தெடுத்துக்கொண்டார்களே தவிர, கடவுள் சக்தி என்பது ஒன்ரெ ஒன்ருதான். பாதை பல வேறாக இருந்தாலும் போய் சேரவேண்டிடய இடம் சரியானதாக இருக்கவேண்டும். இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால், அமைதி இவ்வுலகில் கன்டிப்பாக பிறக்கும்.
பாண்டு ரங்க ஹரி . ராம கிருஷ்ண ஹரி.மோகன்
அருமையான சம்பவத்தின் மூலம் ஹரியும் ஹரனும் ஒன்று என்பதை தத்துவத்தையும் , ஒவ்வொருவர் உள்ளத்தில் சுடர்விடும் அந்த பரம்பொருள் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அவர்களின் எண்ணப்படி காட்சிதந்து ஆட்கொள்கிறார் என்பதையும் எளிமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி !!!
நாட்டில் பெரும்பாலும் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் அன்றாடம் சண்டை சச்சரவுகள் அதிகரித்தவண்ணம் உள்ளன – இதனை களைந்திட வேண்டுமெனில் பரம்பொருள் ஒன்று என்பதையும் நாம் எந்த காரியத்துக்காக இந்த பூஉலகுக்கு அனுப்பப்பட்டோமோ அதனை செவ்வனே முடித்து போகும் காலத்தில் சிறிதேனும் புண்ணியத்தை சேர்த்து செல்லும் வழி பலவாகினும் இறுதியில் சென்று சேர்வது எல்லாம் வல்ல அந்த பரம்பொருளின் போர் பாத கமலங்கள் என்பதை உணர்ந்து எவ்வுயிர்க்கும் தீங்கு என்னாது வாழ்வோமாயின் நாம் எடுத்த இந்த ஜென்மம் அர்த்தமுள்ளதாகும் !!!
நரஹரியின் மூலம் ஹரியும் சிவனும் ஒன்று என்பதை இறைவன் நம் எல்லோருக்கும் உணர்த்தி இருக்கிறார். நர ஹரி கதை அருமை.
மிகவும் அழகான பதிவு. ஓவியம் மிக அருமை.ஓவியருக்கு எமது பாராட்டுக்கள்
நன்றி
உமா