Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > கடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை!

கடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை!

print
சுவாமி விவேகானந்தர் பற்றிய நமது நேற்றைய பதிவை படித்தபின்னர் பலர் என்னிடம் அலைபேசியிலும் மின்னனஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு சுவாமிஜி பற்றிய மேலும் ஒரு பதிவை அளிக்குமாறும், அது எங்களை நிமிர்ந்து உட்காரச் செய்யும்படியும் இருக்கவேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டார்கள்.

கரும்பு தின்ன யாராச்சும் கூலி கேட்பாங்களா இல்லே பல் வலின்னு சொல்வாங்களா? சுவாமி விவேகானந்தர் பற்றி எவ்வளவு படித்தாலும் திகட்டவே திகட்டாது. நமக்கு மேலும் மேலும் சார்ஜ் ஏற்றிவிடும் பவர் செண்டர் அவர். அப்படியிருக்கும்போது நான் யோசிப்பேனோ?

அயல்நாட்டு நண்பர் ஒருவர் “சுவாமி பற்றி தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. ஏதேனும் நல்ல நூலை ரெகமண்ட் செய்ங்க சுந்தர்” என்று கேட்டிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, அவர் குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். அப்போது தான் விவேகானந்தரை நாம் புரிந்துகொள்ளமுடியும். இவர்களை பற்றி பல நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், ரா.கணபதி எழுதிய ‘அறிவுக் கனலே அருட்புனலே’ என்னும் நூலை நான் சிபாரிசு செய்கிறேன்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, இருவரது வாழ்க்கை வரலாறும் மிக மிக அருமையாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

ரா.கணபதி வேறு யாரும் அல்ல…. நடமாடும் தெய்வமாக விளங்கிய மறைந்த காஞ்சி காமகோடி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ‘தெய்வத்தின் குரல்’ நூலை எழுதிய ஒப்பற்ற மேதை. இப்போது புரிந்திருக்குமே இந்நூலின் தரம்!!

சில மாதங்களுக்கு முன்பு ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்’ என்னும் திரைப்படம் ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு அற்புதமான திரைப்படம் வெளியானது.

எது எதற்கோ ஆசைப்பட்டு சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து மலிவான உணர்வுகளை தூண்டும் வகையில் படங்களை எடுத்து சமுதாயத்தை கெடுப்பதோடு மட்டுமின்றி தங்கள் பணத்தையும் சூதாட்டத்தில் தொலைப்பது போன்று தொலைப்பவர்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சிங்கப்பூரில் வாழ்ந்து வரும், சிங்கை அரசுப்பணியில் இருந்து ஒய்வு பெற்றவருமான திரு.ஜி.என்.தாஸ் என்பவர், தானே தயாரித்து இயக்கி வெளிவந்த படம் இந்த ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம். (இவர் சிங்கப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்).

அந்த திரைப்படத்தை பார்த்து ரசித்ததோடு மட்டுமல்லாமல், அதை பற்றிய என் விமர்சனத்தை கூட இணையத்தில் எழுதியிருந்தேன். பின்னர் திரு.ஜி.என். தாஸ் அவர்களை தொடர்பு கொண்டு எனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தேன்.

நம்மை நேரில் சந்திக்க விரும்பினார் அவர். மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சந்திப்பது என்று முடிவானது. குறித்த நாளில் குறித்த நேரத்தில் எங்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தை பற்றி ஒவ்வொரு காட்சியையும் நாம் சிலாகித்து கூற கூற ஒரு படைப்பாளியாக அவருக்கு மிகவும் சந்தோஷம்.

இப்படி ஒரு மாபெரும் முயற்சியை மேற்கொண்டமைக்கு அவருக்கு பொன்னாடையை அணிவித்து வாழ்த்து கூறினேன்.

“நான் தான் சார் உங்களை கௌரவிக்க வேண்டும். இதுக்காக நேரம் ஒதுக்கி என்னை வந்து பாராட்டணும்னு தோணியிருக்கே உங்களுக்கு இது நான் என்ன கைமாறு செய்யப்போறேன்….? உங்களுக்கு ஏதாவது பரிசு தர ஆசைப்படுகிறேன்” என்றார்.

“ஒன்னும் வேண்டாம் சார்…. இங்கே ராமகிருஷ்ண மடத்தோட புக் ஸ்டால் இருக்கு. பரமஹம்சர் மற்றும் விவேகானந்தர் ரெண்டு பேரை பற்றியும் ஏதாவது நல்ல புக் ஒண்ணு வாங்கிக்கொடுங்க போதும்…” என்றேன்.

“ஓ… தாராளமா…. வாங்க….” என்று கூறி புக் ஸ்டாலுக்கு அழைத்து சென்று இந்த “அறிவுக் கனலே… அருட்புனலே” என்னும் நூலை வாங்கித் தந்தார்.

எனக்கு கிடைத்த பரிசுகளில் நான் மிகவும் போற்றி பாதுக்காக்கும் பரிசு இது.

இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள்… www.chennaimath.org என்ற இணையத்தில் கீழ்கண்ட முகவரியில் ஆர்டர் செய்யலாம்.

http://www.chennaimath.org/istore/category/regional-books/tamil-books/sri-ramakrishna-books-in-tamil/life-of-ramakrishna-in-tamil/

——————————————————————————————————————————————————

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை  – சுவாமி விவேகானந்தர்

(விவேகானந்த தாசன் என்ற சுவாமிஜியின் அருமையான தொண்டர் ஒருவர் தனது vivekanandadasan.wordpress.com என்ற தளத்தில் எடுத்தாண்டுள்ள கதை இது. நண்பருக்கு என் நன்றி!)

ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை

நம்பிக்கை , நம்பிக்கை , நம்மிடத்தில் நம்பிக்கை ; நம்பிக்கை , நம்பிக்கை கடவுளிடத்தில் நம்பிக்கை ; இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும். உங்கள் முப்பத்துமுன்று கோடி புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அந்நிய நாட்டவர் புகுத்தியுருக்கும் இதற தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனால் உங்கள் இடத்து நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு கதி மோட்சம் இல்லை. –சுவாமி விவேகானந்தர்.

[END]

8 thoughts on “கடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை!

  1. நாம் பிறக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த ஒரு மாகான் இன்னும் நம்மை கவர்கிறார் என்றால் அது தான் அந்த மாகானின் சிறப்பு

  2. Dear Sundar,

    Please let me know where can I see this “ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்” movie.

    If DVD is available, please let me know where it is available in Chennai.

    Thank you,
    Amuthan Sekar

  3. மிகவும் தன்னம்பிக்கை தர கூடிய அற்புதமான சிந்தனை தரும் கதை. உங்களால் நாங்களும் எங்களுக்குள் மற்றம் உணர்கின்றோம்.

    நன்றி சுந்தர் ஜி.

    ப.சங்கரநாராயணன்

  4. மிகவும் தன்னம்பிக்கை தந்த கட்டுரை . தன்னை நம்பாதவன் உலகில் எதையும் சாதிக்க முடியாது . தன்னால் முடியும் என்று நினைத்த மாத்திரத்தில் எல்லா வலிமையும் கடவுள் அருளால் கிட்டிடும் .இது திண்ணம் . நம்பினோர் கெடுவதில்லை -இது நான்கு மறை தீர்ப்பு .நன்றி .

  5. Thalaiva a!!! என் மனசு ஏதோ போல அலைபாஞ்சிட்டு கஷ்டத்தில் இருந்தது. ஆனா நம்ம சுவாமிஜி அஹ படிச்சா உடனே ஒரு வாழ்க்கைல Achieved பண்ண ஒரு எண்ணம் irukku… மிக்க நன்றி Annan சுந்தர்! என்னோட நபிக்கை நட்சதிரம் நீங்க தான். நெஜமா I love you anna 😉 😉 _^_

  6. இந்த தன்னம்பிக்கை கதையை படித்து நம்மலாலேயும் வாழ்கையில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேர் எனது மனதில் தோன்றி இருக்கிறது. மூங்கிலைபோல் ஒரு நாள் கண்டிப்பாக நாம் நம்பிக்கை சிகரத்தை அடைவோம்.
    சுபெர்ப் article .

    இனிமேல் தினமும் ஒரு தன்னம்பிக்கை தொடர் படிக்க வேண்டும் என நினைக்கிறோம்

    நன்றி
    uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *