நண்பர் ஒருவர் சென்ற மாத துவக்கத்தில் கொஞ்சம் தொகை அனுப்பி அதில் குறிப்பிட்ட அளவு கோ-சம்ரோக்ஷனத்துக்கு வைத்துக்கொண்டு, மீதி தொகையை ரைட்மந்த்ரா செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நாமும் பணியை முடித்துவிட்டு தொடர்புகொள்வதாக கூறியிருந்தோம். சொன்னோமே தவிர நமக்கு நேரம் எளிதில் கிடைக்கவில்லை. மற்ற விஷயங்களைவிட கோ-சம்ரோக்ஷனத்துக்கு நேரம் சற்று கூடுதலாக தேவைப்படும். காரணம், தீவனம் ஆர்டர் செய்யப்பட்டு கலக்கப்பட்டு கொண்டு வந்து கோவிலில் இறக்கி வைக்கப்படும் வரை நாம் அருகில் இருப்போம். இது நீண்டநாட்களாக நாம் செய்துவரும் ஒன்று தான். அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதற்கு பிறகு நாம் ஆண்டுவிழா மற்றும் ரைட்மந்த்ரா விருதுகள் விழாவில் சற்று பிஸியாக இருந்தபடியால் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை. அவருக்கு நிலைமையை விளக்கி, ‘தவறாக நினைக்கவேண்டாம். விழா முடிந்தபிறகு நீங்கள் கூறிய பணியை முடித்துவிட்டு தொடர்புகொள்கிறேன்’ என்று மின்னஞ்சல் அனுப்பிவிட்டோம்.
நடுவிலேயே ஒருமுறை முயற்சித்தும் அதை செய்ய முடியவில்லை. விழா முடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். விழா முடிந்ததும் ஒரு நாள், மேற்கு மாம்பலம் சென்று தீவன மூட்டைகளை ஆர்டர் செய்து இறக்கிவைத்தோம். அன்றைக்கு மார்கழி ஒன்று. தவிர சனிப்பெயர்ச்சி வேறு.
நல்லதாக போச்சு… நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பி விஷயத்தை தெரிவித்தோம். மார்கழி 1 மற்றும் சனிப்பெயர்ச்சி அன்று அது நிறைவேறியதில் அவருக்கு ஒரே சந்தோஷம்.
முன்னதாக அன்று காலை தீவனம் டெலிவரி செய்ய கோவிலுக்கு சென்றபோது கோ-சாலை ஊழியர் பாலாஜியை பார்க்க நேர்ந்தது. நவக்கிரக சன்னதியில் சாரம் கட்டுவதில் பிஸியாக இருந்தார்.
“என்ன பாலாஜி ஒரே பரபரப்பா இருக்கீங்க?” என்று விசாரித்தோம். மாலை சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருப்பதாக தெரிவித்தார். அவர் செய்துகொண்டிருந்த ஏற்பாடுகளை பார்த்தபோது மாலை கூட்டம் கட்டுங்கடங்காமல் வரும் என்று மட்டும் தெரிந்தது.
கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தவரை நாம் அன்று அறச்செயல்களை செய்ய ஒரு வாய்ப்பாகத் தான் பார்ப்போமே தவிர மற்றபடி கிரங்களின் மீது நமக்கு எந்தப் பயமும் கிடையாது. காரணம் கிரகங்களை விட எம் இறைவன் பெரியவன் என்பது எமக்கு தெரியும்.
அதே சமயம், கிரகங்களுக்கு பிரியமாய் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை பெயர்ச்சி அன்று நிச்சயம் அனைவரும் செய்யவேண்டும். நம் தளம் சார்பாக நாம் அன்று அறப்பணிகளை நிச்சயம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் நமக்கு உண்டு. கடந்த காலங்களில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய தினங்களின்போது இதை நீங்கள் கண்ணுற்றிருப்பீர்கள்.
நம் தளம் சார்பாக சனிப்பெயர்ச்சிக்கு நிச்சயம் ஏதேனும் நல்லதொரு விஷயம் செய்யவேண்டும் என்று ஏற்கனவே ஒரு யோசனை இருந்தது. ஆனால் என்ன செய்வது என்று முடிவு செய்யவில்லை. காரணம் நேரமின்மை தான்.
நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழாவையொட்டி ஐந்து தினங்கள் விடுமுறை எடுத்திருந்த நாம், தொடர்ந்து குடும்பத்தினருடன் நவக்கிரக கோவில்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால் விடுப்பை நீட்டித்திருந்தோம். எனவே விடுமுறையை நன்கு பயன்படுத்திக்கொண்டு அன்று மாலை ஏதேனும் செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம். நண்பர்கள் ஒரு சிலர், விழாவின் பற்றாக்குறை பற்றிய நமது பதிவை பார்த்துவிட்டு கொஞ்சம் பணம் அனுப்பியிருந்தனர். நண்பர்கள் ஒரு சிலர் பிரதி மாதம் அவர்களால் இயன்ற தொகையை நமது தளத்தின் அறப்பணிகளுக்கு அனுப்புவதாலேயே நினைக்கும்போது இது போன்ற கைங்கரியங்களை நம்மால் எந்தவித தடுமாற்றமும் இன்றி செய்யமுடிகிறது.
மாலை சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்க விரும்புவுதாகவும், கூடவே கோ-சம்ரோக்ஷனம் செய்ய விரும்புவதாகவும் உடனிருந்து உதவவேண்டும் என்றும் பாலாஜி அவர்களை கேட்டுக்கொண்டோம். நிச்சயம் அனைத்தையும் கூட இருந்து முடித்து தருவதாகவும் கூறினார்.
பசுக்களுக்கு பால், நெய் கலக்காத சர்க்கரைப் பொங்கல் கொடுக்கலாம். பக்தர்களுக்கு என்ன கொடுப்பது? எள்ளு சாதம் தயார் செய்து கொடுக்கலாம் என்றால் சனீஸ்வர பிரசாதம் என்று பயந்து எவரும் வாங்கவில்லை என்றால என்ன செய்வது? வீணாகப் போய்விடுமே…
சனீஸ்வர பிரசாதத்தை ஏற்க மறுக்கக் கூடாது. அது சனீஸ்வரரை அவமதிப்பது போல. சனீஸ்வர பிரசாதத்தை புசித்தால் சனீஸ்வரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சர்வ மங்களம் உண்டாகும். ஆனால் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இல்லையே… என்ன செய்வது.
இப்போதைக்கு நாம் ரிஸ்க் எடுக்கவேண்டாம், வேறு ஏதேனும் ஒரு பிரசாதத்தை கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். கொடுக்கும் பிரசாதத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் சனீஸ்வரருக்கும் பிரீதியாக இருக்கவேண்டும். என்ன கொடுப்பது? அப்போது புளியோதரை தான் நினைவுக்கு வந்தது. புளியோதரை சாதாரண விஷயம் இல்லீங்க. அது ஒரு பரம பிரசாதம். புளிசாதத்திற்கு ‘நவதானிய சாதம்’ என்கிற பெயர் உண்டு. காரணம் நவதானியங்களும் இதில் அடங்கியிருக்கும். வேறு எந்த பிரசாதத்திற்கும் இந்த சிறப்பு கிடையாது. (நண்பர் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் நம்மிடம் கூறிய தகவல் இது.)
காசி விஸ்வநாதர் கோவிலுக்காக பிரசாதங்களை வழக்கமாக தயாரித்து தரும் நண்பரை அலைபேசியில் அழைத்து மாலை சனிப்பெயர்சியை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க எள்ளு அதிகம் சேர்க்கப்பட்ட புளியோதரையும், பசுக்களுக்கு நெய், பால் சேர்க்காத சர்க்கரைப் பொங்கலும் தேவை என்றோம். கடைசி நேர ஆர்டர்களை ஏற்றுக்கொண்டு செய்து தருவது சுலபமல்ல. இருப்பினும் நம்மை நன்கு தெரியும் என்பதாலும் தொடர்ந்து பிரசாத ஆர்டர்களை தருவதாலும் அவர் ஏற்றுக்கொண்டார்.
ஹப்பா… சனிப்பெயர்ச்சிக்கு நம்மால் ஒரு நல்ல காரியத்தை செய்ய ஏற்பாடு செய்தாகிவிட்டது என்று பெருமூச்சு விட்டோம். தளத்தில் இது பற்றி அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ‘வரவிருப்பம் உள்ள நண்பர்கள் வாசகர்கள் நம்முடன் மாலை மேற்படி கைங்கரியத்தில் வழிபாட்டில் கலந்துகொள்ளலாம்’ என்றும் கேட்டுக்கொண்டோம்.
நண்பர் ஹரீஷ் மற்றும் ராஜா ஆகியோர் வர விருப்பம் தெரிவித்தனர். குட்டி சந்திரனை உதவிக்கு வருமாறு கேட்டுக்கொண்டோம்.
மாலை சற்று சீக்கிரமே கோவிலுக்கு சென்றுவிட்டோம். நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.
முதலில் காசி விஸ்வநாதரையும், காமாக்ஷி அம்பாளையும் தரிசித்தோம். காசி விஸ்வநாதருக்கு அர்ச்சனை செய்தோம். கோவிலை வலம் வந்ததில், மக்கள் பலர் தீபம் ஏற்றிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
நவக்கிரக மண்டபத்தில் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல கோவிலைச் சுற்றி வளைந்து வளைந்து க்யூ வரிசை காணப்பட்டது.
இதனிடையே கோ-சம்ரோக்ஷனத்துக்கு சர்க்கரைப் பொங்கலும் பிரசாதத்திற்கு புளியோதரையும் வேறு தயாராக இருந்தது. சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவற்றை நிவேதனம் செய்யவேண்டும்.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் கோவில் திமிறிக்கொண்டிருந்தது. இதில் எங்கே அர்ச்சனை செய்வது என்கிற மலைப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஆலய ஊழியர்கள் மற்றும் கோ-சாலை நண்பர்கள் உதவியுடன் சனீஸ்வரரை தரிசித்தோம். நம்முடன் நண்பர்களும் இருந்தனர். வாசகர்கள் அனைவருக்காகவும் பிரார்தித்துகொண்டோம். சில நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் அந்த வார பிரார்த்தனை சமர்பித்திருந்தவர்களுக்கு அர்ச்சனை செய்தோம்.
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
சனீஸ்வர காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி நின்றுகொண்டிருந்தோம்.
சனீஸ்வரருக்கு சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் நைவேத்தியம் செய்யப்பட்டது.
“ஐயனே…. உன் பெயர்ச்சியை மக்கள் ஏதோ நடக்ககக்கூடாது நடப்பது போல பீதியுடன் பார்க்கிறார்கள். நீ தீயோர்களுக்கு பாடங்களையும் நல்லோர்களுக்கு நன்மைகளையும் அள்ளிக் கொடுப்பதில் வல்லவன் என்பதை நிரூபிக்கவேண்டும். நல்லவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிடு. ஏற்கனவே பலவித துன்பத்தில் சிக்கி தவிப்பவர்களை நீ பற்றக்கூடாது. நீ உன் கடமையை செய்யவேண்டும் என்றால் அதற்கு இங்கே பலர் இருக்கிறார்கள். திருந்த வேண்டிய ஜென்மங்கள் இங்கே பல இருக்கின்றன. அவர்களை பீடித்து அவர்களுக்கு பாடத்தை புகட்டு. ‘அன்பே சிவம், கருணையே கோவிந்தன்’ என்று வாழும் மெய்யடியார்களை எதுவும் செய்யவேண்டாம். உன்னை குளிர்விக்கும் பொருட்டே கோ-சம்ரோக்ஷனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். உனக்கு மிகவும் பிடித்த நவதானிய சாதத்தையும் கொண்டு வந்திருக்கிறோம். ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கவேண்டும். இந்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு உன் அருள் நிச்சயம் கிடைக்கவேண்டும்!”
அந்த நேரத்தில் மேலும் மனதில் தோன்றியவைகளை பிரார்த்தித்துக்கொண்டோம். (இது மத்தவங்களுக்கும் நாம சொல்ல நினைப்பது தான். எனவே தான் இங்கே வெளியிடுகிறோம்).
சொல்லவேண்டியதை சொல்லியாகிவிட்டது. இனி அவர் பார்த்துக்கொள்வார். கூட்டம் வேறு நெருக்கியடித்ததால் அங்கிருந்து விடுபட்டு வெளியே வந்தோம்.
தொடர்ந்து பசுக்களுக்கு நண்பர்களின் கரங்களாலும் நமது கைகளாலும் சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டது. அனைவரும் அதை ஒரு பிடிபிடித்தார்கள்.
கோ-சாலையில் சில நிமிடங்கள் பிரார்த்தனைக்கு பிறகு, காசி விஸ்வநாதர் சன்னதிக்கு அருகே, ஒரு சிறிய ஸ்டூல் போட்டு பிரசாதம் கொடுக்க ஆரம்பித்தோம்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
என்கிற கண்ணதாசனின் வரிகள் தான் அந்த நேரத்தில் மனதில் ஒலித்தபடி இருந்தது. எப்போது பிரசாதம் கொடுத்தாலும் இந்த வரிகள் தானாக நாவில் வந்துவிடும்.
பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றார்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் பெயர், என்ன படிக்கிறார்கள் என்று கேட்டு கேட்டு கொடுத்தோம்.
குட்டி சந்திரன் வரிசையில் நிற்பவர்களுக்கு தொன்னையை தர நண்பர் ஹரீஷும் ராஜாவும் பிரசாதம் கொடுக்க ஆரம்பித்தனர். கூடுதலாக கேட்பவர்களுக்கு தயங்காமல் கொடுக்கும்படி கூறியிருந்தோம்.
பிரசாதம் அடுத்த சில நிமிடங்களில் காலி. சுமார் 200 பேர் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறோம். கிடைக்காதவர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். எங்களுக்காக ஆளுக்கு ஒரு தொன்னை பிரசாதம் எடுத்து வைத்திருந்தோம். அதில் மூன்று தொன்னைகளை எடுத்து கடைசியில் வந்து கேட்டவர்களுக்கு கொடுத்தோம். மீதமிருந்த ஒரு தொன்னை பிரசாதத்தை ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டோம்.
மேற்படி கைங்கரியத்திற்கு உதவிய நண்பர்களுக்கும், நமது பிரதி மாத பணிகளுக்கு உதவும் நண்பர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறோம்.
==========================================================
* அடுத்து…
சனிப்பெயர்ச்சியால் கலங்கித் தவிப்பவர்கள், திருநள்ளாறு செல்ல விருப்பம் இருந்தும் நேரமின்மை மற்றும் இதர நடைமுறை சிக்கல்கள் காரணமாக தவிப்பவர்கள் ஆகியோருக்கு ஆறுதலும் தேறுதலும் தீர்வும் அளிக்கக்கூடிய ஒரு அற்புதமான பதிவு தயாராகி வருகிறது. வரும் சனிக்கிழமை வெளியிடப்படும்.
சனி கொடுத்தால் எவர் தடுப்பர்?
==========================================================
Also check :
சனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்?
‘சனிப்பெயர்ச்சி’ பாதிப்பை போக்கும் எளிமையான பரிகாரங்கள்!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
=============================================================
[END]
சனிப்பெயர்ச்சிக்கு கோ-சம்ரோக்ஷனமும் அன்னதானமும் செய்து எங்கள் அனைவருக்கும் புண்ணியத்தை பகிர்ந்து தந்துவிட்டீர்கள். சனிப்பெயர்ச்சிக்கு நாம் எதுவும் செய்யவில்லையே என்கிற உறுத்தல் எனக்கு போயேபோய்விட்டது.
பதிவின் ஒவ்வொரு வரிகளும் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை. ஒவ்வொரு படமும் ஒரு பதிவு தான். குறிப்பாக கன்று பொங்கலை ருசிக்க பசு, நாவை காட்டும் அந்த காட்சி. குழந்தைகள் மகிழ்ச்சியோடு பிரசாதத்தை வாங்கும் அந்த காட்சி… புறாக்கள் பறக்கும் அந்த காட்சி எதை சொல்வது எதை விடுவது?
ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் சிரத்தையும் மலைக்க வைக்கிறது.
சனீஸ்வரர் பிரசாதத்தை இனி யாரும் அலட்சியம் செய்யமாட்டார்கள் என்பது உறுதி.
சனி என்றாலே அலறுபவர்கள் இந்த பதிவை படித்தால் மனம் மாறுவார்கள். சர்வமங்களம் நிச்சயம்.
ரைட்மந்த்ரா கண்ணில் பட்டது எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ? இறைவனுக்கு நன்றி.
சனிக்கிழமை பதிவுக்காக காத்திருக்கிறோம்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்.
சுந்தர் சார் வணக்கம்
நல்ல பதிவு.
நன்றி
இனிய காலை வணக்கம்
மிகவும் நீண்ட அழகிய பதிவு. நம் தளம் சார்பாக சனி பெர்யர்ச்சி நிகழ்ச்சியை வெகு விமர்சையாக கொண்டாடியதை பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாக உள்ளது’
கடுமையான அலுவல்களுக்கு இடையேயும் இந்த கோ சம்ரோக்சனத்தையும் அன்ன தானத்தையும் மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு ராஜா, குட்டி சந்திரன் மற்றும் ஹரிஷுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த பதிவை படித்த பிறகு யாரும் சனி பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். எல்லோருக்கும் இந்த பதிவினால் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
திருச்சிற்றம்பலம்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர் சார் வணக்கம்
நல்ல பதிவு.
நன்றி