Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 24, 2024
Please specify the group
Home > Featured > “தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

print
ந்த தளத்தை பொருத்தவரை ஆரம்பம் முதலே ஒரு கொள்கை வைத்திருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான பதிவுகள் இடம்பெறக்கூடாது என்பதே அது. இவை இரண்டும் இல்லாமலே ஒரு தளத்தை வெற்றிகரமாக நடத்தமுடியும் என்று நிரூபிக்க நமக்கு ஒரு ஆசை (வெறி). அந்த இலக்கை நாம் அடைந்துவிட்டோமா இல்லையா என்று நமக்கு தெரியாது. ஆனால் இன்றளவும் அதை கடைப்பிடித்து வருவது நீங்கள் அறிந்ததே.

Thirukkural

ஆனால், இப்போது நாம் பகிர்ந்துள்ள இந்த பதிவு ஒரு அரசியல் பிரமுகர் தொடர்புடைய பதிவு.  ஆனால் ஒரு துளியும் இதில் அரசியல் இல்லை. நம் எல்லோருக்கும் தேவையான ஒரு மிகப் பெரிய பாடம் தான் ஒளிந்துள்ளது.

வேலை, தொழில், பிஸ்னஸ் என்று சதா சர்வ காலமும் வீட்டை கவனிக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு ஒரு ஸ்பீட் பிரேக்கர். எச்சரிக்கை பலகை. செக்போஸ்ட்.

நமது முகநூலில் நாம் இதை ஏற்கனவே பகிர்ந்திருந்தாலும், மேலும் பலரை போய் சேரவேண்டும் என்கிற ஒரு நல்லெண்ணத்தில் இதை தளத்தில் அளிக்கிறோம். ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை படியுங்கள். நேற்று குளித்தாலும் இன்றும் குளிப்பதில்லையா? அது போல… ஏனெனில், இந்த பதிவும் நம்மிடையே உள்ள மிக பெரிய குறையை கழுவிக் களைய வல்லது.

முகநூலில் வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவு, இந்த வார ஜூ.வி.யில் வெளியாகியுள்ளது.

மனைவியிடம் பேசுங்கள் !

இப்படிக்கு – திருச்சி சிவா M.P

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.

அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதே இல்லை. காரணம், எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால், கடந்த இரண்டு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. இரக்கமற்ற நோய் ஒன்று, என்னிடம் இருந்து என் மனைவியைப் பிரித்துக் கொண்டுபோய்விட்டது. வாழ்ந்த காலத்தில் அந்த ‘தியாகி’யை மதிக்க, அங்கீகரிக்க, பாராட்டத் தவறிவிட்ட பாவம்தான் என்னுடைய வெட்கத்துக்குக் காரணம்!

திருச்சி மலைக்கோட்டையின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் தெருவில்தான் இருவரது வீடுகளும் இருந்தன. அப்போது எனக்கு 26 வயது. எம்.ஏ முடித்துவிட்டு தி.மு.க செயல்வீரனாக அப்போதே செயல்பட ஆரம்பித்துவிட்டேன். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆனேன். மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்துவிட்டேன். ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற என்னுடைய விருப்பம் காரணமாக, முதல்கட்ட தேர்வும் ஒருமுறை எழுதினேன். ஆனால், திராவிட இயக்கம் என்னை அதன்பக்கமே இழுத்தது என்பதால், ஐ.ஏ.எஸ்-ஸை மூட்டை கட்டிவிட்டேன். அப்போது 12-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தார் தேவிகா ராணி. 17 வயது. பார்வையால் மலர்ந்த காதல், மணமேடை வரைக்கும் போனது. இரண்டு வீட்டினரும் ஒப்புக்கொண்டனர். தலைவர் கலைஞர் தலைமையில் 1981-ம் ஆண்டு மே 1-ம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவானது. உடல்நிலை காரணமாக தலைவரால் வர இயலவில்லை. புதுவை அமைச்சர் வி.எம்.சி.சிவகுமார்தான் நடத்திவைத்தார்.

Trichy Siva mp

12-ம் வகுப்பை பாதியில் விட்டு வந்தவர் என்பதால், ‘மறுபடி படிக்கிறாயா?’ என்று கேட்டேன். ‘எனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. உங்களைக் கவனித்துக்கொண்டே இருந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டார். அப்போது எனக்கு எந்த வேலையும் இல்லை. நிரந்தர வருமானமும் கிடையாது. இரண்டு வீட்டில் இருந்தும் எதையும் வாங்கக் கூடாது என்ற வைராக்கியமும் இருவருக்கும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயக்கத்தின் மீது இருக்கும் பற்று காரணமாக, அவளிடம் ஒரு வாக்குறுதியைக் கேட்டு வாங்கினேன். அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்துடன்தான் கேட்டேன். ‘எனக்கு இயக்கம்தான் முக்கியம். என்னை எந்தக் காலகட்டத்திலும், வேலைக்குப் போ என்று சொல்லக் கூடாது. சம்மதமா?’ என்று கேட்டேன். ‘எனக்கு உங்களைப்பற்றித் தெரியும். அப்படிச் சொல்ல மாட்டேன்’ என்று சொல்லி, தன்னுடைய நகைகளைக் கழற்றி குடும்பச் செலவுக்குத் தூக்கிக் கொடுத்து வாழ்க்கைப் பயணத்தை தொடங்க வைத்தாள். பொன் நகைகளைக் கழட்டிக் கொடுத்துவிட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. எந்த நிலையிலும் தலைதாழ்ந்து வாழ்ந்திடக் கூடாது என்கிற என் குணத்துக்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையைக் காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.

ஒரு பெண்ணின் மிகப்பெரிய கனவு, பிரசவ நேரத்தில் தன் கணவன் அருகில் ஆறுதலாக இருப்பதுதான். ஆனால், காலையில் ஒரு ஊர், மாலையில் ஒரு ஊர் என்று பிரசாரப் பயணத்திலேயே வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு இருப்பவனுக்கு இந்த ‘சென்டிமென்ட்’டுகளை நினைக்க எங்கே நேரம்?

முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்போதுதான் பெரியகுளம் இடைத்தேர்தல். 1982 செப்டம்பர் 15-ம் நாள் முரசொலியில், ‘என் கண்கள் உன்னைத் தேடுகின்றன’ என்று தலைவர் கலைஞர் எழுதி, தொண்டர்களைத் தேர்தல் பணிக்கு அழைத்திருப்பார். ‘கடிதத்தை உங்களுக்காகவே தலைவர் எழுதியிருக்கிறார்’ என்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை இடைத்தேர்தலுக்கு அனுப்பி வைத்தார். செப்டம்பர் 17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19-ம் தேதி நான் பார்க்க வந்தேன். சிறிதும் முகம் சுளிக்காமல் குழந்தையைக் காட்டினாள். ஒரு மணி நேரத்திலேயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்தாள்.

இரண்டாவது குழந்தை பிறந்தபோது வேறொரு வழக்கின் காரணமாக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தேன். மருத்துவமனையில் இருந்து நேராக காவல் நிலையத்துக்கு வந்தார். குழந்தையைக் காட்டினார். ‘என்னம்மா, பிள்ளை பிறந்தா முதல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கா எடுத்துட்டு வர்றது?’ என்று போலீஸ்காரர் ஒருவர் சொன்னபோதும், அதற்காக அவர் வருந்தவில்லை. ‘நீங்கள் பத்திரமாக இருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போன லட்சியவாதியின் சரியான துணை.

மூன்றாவது குழந்தை பிறக்கும் நேரத்திலும், நான் ஊரில் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்ற தகவல் எனக்கு சொல்லப்பட்டதும் கிளம்பினேன். கணவர் கையெழுத்துப் போட வேண்டிய அளவுக்கு ஏதோ சிக்கல். இந்தக் காலதாமதத்துக்குள் நான் வந்து சேர்ந்துவிட்டேன். இந்த மூன்று முக்கியமான நேரத்தின்போதும் சின்ன அளவில்கூட முகம் சுளிக்காமல், என்னுடைய இயக்கப் பணிகளைப் புரிந்துகொண்ட அன்புத் தெய்வம்.

மூத்த மகளுக்கு சடங்கு நடந்தபோது நான் மாநிலங்களவை எம்.பி-யாக ஆகிவிட்டேன். பத்திரிகை அடித்து, உறவினர்களுக்குக் கொடுத்தாகிவிட்டது. முந்தைய நாள் திருச்சி வந்தாக வேண்டும். ஆனால், ஏதோ ஒரு முக்கியப் பிரச்னை காரணமாக அண்ணன் முரசொலி மாறன் என்னை சென்னையில் இருக்கச் சொல்லிவிட்டார். சடங்குக்குப் போக முடியவில்லை. சடங்கு நேரத்தில் சென்னையில் அண்ணன் மாறனுடன் இருந்துவிட்டு கிளம்பி திருச்சி செல்லும்போது மாலை ஆகிவிட்டது. மண்டபத்தைக் காலி செய்துகொண்டு இருந்தார்கள். ‘அவரு அப்படித்தான்’ என்று நினைத்துக்கொண்டாரே தவிர, என் மனம் புண்படும் மாதிரி எதையும் சொன்னதும் இல்லை. மனதார நினைத்ததும் இல்லை.

மிகவும் சோகமாக ஒருநாள் என் அறையில் உட்கார்ந்து இருந்தேன். யாரும் இல்லாமல் நான் தனிமையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து என் அருகில் வந்து உட்கார்ந்தார். ‘ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள்… என்மீது ஏதாவது கோபமா?’ என்று கேட்டார். ‘உன்மீது என்ன கோபம் இருக்க முடியும்?’ என்றேன். குடும்பத்து பொருளாதார நிலைமைகளைச் சொல்லி வருத்தப்பட்டேன். ‘எனக்கு அந்தக் கவலை கொஞ்சமும் இல்லை. கடன்காரங்க வந்து நிற்கல. என்னை ஏமாத்திட்டாருன்னு யாரும் புகார் சொல்லல. நாம சந்தோஷமாகத்தானே இருக்கோம்’ என்று அவள் சொன்ன வார்த்தைகள்தான், சாதாரண மனுஷிக்குள் இருக்கும் லட்சியவாதியை எனக்கே அறிமுகப்படுத்தியது.

இப்போது அவள் இல்லாதபோது இவ்வளவையும் பெருமையாகச் சொல்லிப் பூரித்துப் போகிறேனே! ஆனால் ஒரு தடவை, ஒரே ஒரு தடவை அவளிடம் நான் இதை எல்லாம் சொல்லியிருந்தால்..?

இத்தனை கருத்துகளை அவள்மீது நான் கொண்டிருந்தும், ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதே இல்லை. ஆண்செருக்கு இதற்கு காரணமா? நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல், இப்போதுகூட எனக்கு வந்திருக்காது. நேரம் இல்லையா? அதுவும் பொய். 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும்? ‘தானாகவே புரிந்துகொள்வார்கள்’ என்பார்கள். அப்படியானால் மொழி எதற்கு? இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், ‘உன்னால்தான் உயர்வு பெற்றேன் என்றுகூட அல்ல, உன்னால்தான் இந்தப் பிரச்னை தீர்ந்தது; உன் துணைதான் இந்தத் துன்பமான நேரத்தைக் கடக்க வைத்தது; உன் ஆலோசனைதான் என் குழப்பத்துக்கு தீர்வு தந்தது; என் வேதனையை பகிர்ந்துகொண்டு என்னை லேசாக்கினாய்’ என்று ஒருமுறையாவது கூறியிருந்தால், எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே.

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்துக்குச் சென்றிருந்த நேரத்தில்தான் அந்தத் தகவல் கிடைத்தது. பதறிப் பாய்ந்து வருகிறேன். மூன்றாவது அழைப்பில் கண்திறந்து ஒரு துளி கண்ணீர் வடித்தாள். அவளிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவள் கேட்கும் நிலைமையில் இல்லை. பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்துக்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். இவ்வளவு மரண துன்பத்திலும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அவளை தூக்கி உட்கார வைக்கும்போது என்னைப் பார்த்து, ‘உங்களுக்கு பேக் பெயின் இருக்கிறது. ரொம்ப குனியாதீங்க’ என்று சொன்னாள். எத்தனையோ ஆண்டுக்கு முன்னால் முதுகுவலியால் நான் அவதிப்பட்டதை, மரண அவதியிலும் மறக்காமல் இருந்த அவளை, நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கும் என்னால் புரிந்து உணர்ந்து பாராட்ட முடியாமல் போய்விட்டதே!

தோழர்களே! தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.

பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைக்காமலே மனைவியை அனுப்பிவைத்த கொடுமை இனி வேறெங்கும் நிகழ வேண்டாம். வேண்டிக்கொள்கிறேன்… மனைவியிடம் பேசுங்கள்!

நன்றி : ஜூனியர் விகடன்

[END]

9 thoughts on ““தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

 1. குறள் 1122
  உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
  மடந்தையொடு எம்மிடை நட்பு.
  விளக்கம்
  என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.
  Couplet 1122
  Between this maid and me the friendship kind Is as the bonds that soul and body bind.
  Explanation
  The love between me and this damsel is like the union of body and soul.

  The relationship between wife and husband is the relationship between Hardware ( Body ) & Software(Soul ) . C R from http://www.voiceofvalluvar.org

 2. “மரண அவதியிலும் மறக்காமல் இருந்த அவளை, நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கும் என்னால் புரிந்து உணர்ந்து பாராட்ட முடியாமல் போய்விட்டதே! ”

  உண்மையா சொல்ல போனால், உயிரோடு இருக்கும் வரை யாருக்குமே யாரோட அருமையும் தெரியறது இல்லை..மதிக்கறதும் இல்லை..போனதுக்கப்புறம் என்னதான் உருகினாலும் அவர்கள் காதில் விழவா போகிறது?

  இவர மாதிரி ஆளுங்களுக்கு நான் சொல்றதெல்லாம், இனி வரும் காலத்தில் இருக்கிற உங்க தாய், தகப்பன், பிள்ளைகளிடமாவது மனசு விட்டு பேசுங்கள்.

  விட்டு கொடுத்து, வாழும் பெண் தெய்வங்களால் தான் இன்றும் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இல்லையெனில் பல குடும்பங்கள் தலை எடுக்காமல் போயிருக்கும். அந்த தெய்வங்களை நீங்கள் தலையில் வைத்து கொண்டாடவில்லை என்றாலும், பரவாயில்லை, பரஸ்பரம் புரிந்து கொண்டு மனம் விட்டு பாராட்டுங்கள். மனிதம் வளர்ப்போம்..அது புனிதமாக இருக்கட்டும்..
  .

 3. Though we have lots of love on our spouse, how many times we express that to them? This is an eye-opener to do that before it is too late.

 4. படிக்கும் பொழுதே மனம் கலங்குகிறது. வாழும் காலத்தில் அன்பாகவும், அவளுடைய சுக துக்கத்தில் பங்கேற்காமல் , அவள் இந்த உலகை விட்டு சென்ற பின் புலம்பி என்ன்ன பயன். ஆண், பெண் இருவருக்கும் இது பொருந்தும். வாழும் காலத்திலேயே அவர்கள் செய்யும் ஒவொரு செயலுக்கும் appreciation வேண்டும் அதே போல் நாம் தாய் , தந்தயரிடமும் அன்பு செலுத்தி அவர்கள் உணர்வ்க்கு மதிப்பு அளிக்க வேண்டும். வேலை வேலை என்று ஓடிக் கொண்டிrunthaal குடும்பத்தை eppoluthu பார்ப்பது.

  இந்த கட்டுரையை படித்த பிறகாவது ஒரு சிலராவது தங்கள் குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசினால் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி

  aandaalum அழூது புரண்டாலும் maandaar வருவதில்லை.

  நன்றி
  uma

 5. சிலபேர் குடும்பத்துக்காக உழைத்து தன அம்மா அப்பா விடம் மனைவியிடம் குழந்தைகளிடம் பேச கூட நேரமிலாமல் ஓடுகிராகள்
  அவர்கள் இதை படிக்க வேண்டும்
  வாழ்கை யில் குடும்பத்துக்கு செய்யும் செலவை விட அவர்களுக்கு செலவு செய்யும் நேரம் அற்புதமானது
  வாழ்கை எவளவு காலம் என்று யாரும் அறிய முடியாது
  இன்று இப்போ நாம் எதனை பேரை பார்க்கிறோம் நாளை எத்தனை பேர் இருப்பார்கள் இறப்பார்கள் என்றும் யாருக்கு தெரியும்
  பேசினால் தான் தெரியும் என்று சில பேருக்கு எண்ணம் இருக்கிறது
  பேசுவது ஒரு வரம்
  பேசமால் புரிந்து கொள்வதால் ஒரு சுகம் என்றால்
  பேசி தெரிந்து கொள்வதால் இன்னும் ஒரு சுகம் அதயும் நம்மை நம்ம்பி இருப்பவர்கள் அனுபவிக்கட்டுமே

 6. பதிவு அருமை, இங்கு ஒரு விஷயம் சொல்ல தோன்றுகிறது. மனைவியோடு பேசாமல் இருந்ததை எண்ணி வருந்துபவர் மனைவியின் அருமையை புரிந்து கொண்டதை போல் இறைவனின் அருமையையும் புரிந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுகொள்கிறோம் . இல்லையெனில் “நண்பர்களே, தோழர்களே என் வாழ்வில் நான் இறைவனை உணர மறுத்துவிட்டேன் நீங்களாவது தவறாமல் இறைவனை வழிபடுங்கள்” என்று இன்னும் சற்று காலத்தில் இது போல் கடிதம் எழுத நேரிடும். எந்த கொள்கையும் நாடி தளரும் போது கூட வராது, ” இறை அன்பை தவிர”. இருப்பினும் தவறை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படையாக அறிவிக்க தனி தைரியம் வேண்டும் அதற்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *