Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, November 4, 2024
Please specify the group
Home > Featured > வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

print
64 வது நாயன்மார் என்று அன்போடு அழைக்கப்படும் திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அவதாரத் திருநாள் வரும் ஆகஸ்ட் 25  ஆம் தேதி வரவிருக்கிறது. ஸ்வாமிகள் பிறந்தது ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் நட்சத்திரப்படி ஆகஸ்ட் 31 அவரது பிறந்த நாள். வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூரில் அவரது திருச்சமாதியில் ஆகஸ்ட் 31 ஞாயிறு அன்று அவரது ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

ஆகஸ்ட் 30 அன்று நமது தளத்தில் விசேஷ பதிவுகள் அளிக்கப்படவுள்ளன. அன்னதானமும் நடைபெறவுள்ளது. (நாம் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு காங்கேயநல்லூர் சென்றது  பற்றிய பதிவு இடம்பெறும்.)

மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.

அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

நேற்றைய தினமலர் – ஆன்மீக மலரில் நாம் படித்த வாரியார் சுவாமிகளை பற்றிய இரண்டு முத்துக்களை தருகிறோம்.

Variyar Swamigal

ஒரு பவுன் 13 ரூபாய்

முருகனின் அடியவரான கிருபானந்த வாரியார், இளைஞராக இருந்த போது, சென்னையில் தங்கி தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் 3 ஆண்டாக வீணை கற்றார்.  வாரியாரின் தந்தை மல்லையதாசர், அந்த ஆசிரியருக்கு குரு தட்சணையாக இரு வேட்டிகளை அனுப்பி வைத்தார்.  ஆனால். வாரியாருக்கு அந்த வேட்டியுடன் கொஞ்சம் பணமும் கொடுக்க ஆசை. ஒரு முருகன் கோவிலுக்குச் சென்று , “முருகா! குரு நாதருக்கு காணிக்கை கொடுக்க காசில்லையே!”என வருத்தப்பட்டு வேண்டினார்.

மறு நாளே, புரசைவாகத்தில் ஒரு வீட்டு சுப நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற திடீர் அழைப்பு வந்தது.  அதற்கு சன்மானமாக 40 ரூபாய் அளித்தனர்.  புதையல் கிடைத்தது போன்ற  மகிழ்ச்சியுடன் வாரியார் நகைக்கடைக்குப் புறப்பட்டார்.  அப்போது பவுன் 13 ருபாய் 2 அனா (12 காசு) விலை விற்றது.  இரண்டரை பவுனில் தங்கச் சங்கிலியும், அரை பவுனில் ராமர் பட்டாபிசேக டாலரும் வாங்கிக் கொண்டார். அத்துடன் பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை, வாழைப்பழம் , வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு குருநாதர் வீட்டுக்கு வந்தார். அப்பா கொடுத்த வேட்டியுடன் அவற்றையும் சேர்த்து ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து குருநாதரின் காலில் விழுந்தார்.

“குருவே! என்னை காங்கேயனல்லூருக்கு (வாரியாரின் சொந்த ஊர்) வரும்படி அப்பா கட்டளை இட்டுள்ளார்.  தங்களுக்கு இதையும் விட இன்னும் அதிகமாகத் தருவதற்கு ஏழையான அடியேனிடம் காசில்லை.  இந்த சிறு காணிக்கையை ஏற்று ஆசிர்வதியுங்கள்” என்று காணீர் மல்க நின்றார்.

“நீ உத்தமமான பிள்ளை.  உனக்கு தெய்வம் எப்போதும் துணை இருக்கும்.  சௌக்கியமாகப்  போய் வா.  சென்னைக்கு வரும்போது என்னை வந்து பார்” என்று குருநாதரும் ஆசி அளித்து அனுப்பி வைத்தார்.

நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு

வடலூரிலுள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் வாரியார்  திருப்பணி நடந்து வந்தது.  பணியாளர்களுக்குச சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் , வாரியார் தான் அணிந்திருந்த தங்க நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கொடுத்தார்.  இருந்தாலும் மனதிற்குள் கடவுள் நம்மை இப்படி அடகு வைக்கும் நிலைக்கு ஆளாக்கி விட்டாரே என்று வருந்தினார்.

இந்த சமயத்தில் தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவரும் அவரது மனைவியும் வழிபாட்டிற்காக வந்திருந்தனர்.

பணக்காரர்களான அவர்களிடம் வடலூர் திருப்பணிக்கு உதவும்படி வாரியார் வேண்டினார். சம்மதித்த அவர்கள், வாரியாரை தங்கள் ஊருக்குச் சொற்பொழிவாற்றும்படி அழைத்தனர்.   அதன்படி அங்கு சென்ற பொழுது பெருமழை பெய்தது.  இருந்தாலும், மழை ஓய்ந்த பின் ”வள்ளலார் வரலாறு” என்னும் தலைப்பில் வாரியார் சொற்பொழிவாற்றினார். வழக்கமாக சன்மானமாக வாரியார் 500 ரூபாய் பெறுவது வழக்கம். இருந்தாலும் திருப்பணிக்காக ரூபாய் 1000 கேட்க எண்ணி இருந்தார். அந்த சமயத்தில் ராஜமாணிக்கம் பிள்ளையும் அவரது மனைவும் வெள்ளித் தட்டில் சாத்துக்குடி, ஆரஞ்சு, வெற்றிலை, பாக்குகளைக் கொண்டு வந்தனர். இதைப் பார்த்த வாரியார் நிறைய பழம் இருப்பதால் ரயில் செலவுக்கு மட்டும் பணம் தருவார்களோ என்று பயந்து போனார். ஆனால் தட்டில் 100 ருபாய் நோட்டுக்கள் இருந்தன. ரசீது தருவதற்காக வாரியார் பணத்தை எண்ணிய போது 35 நூறு ரூபாய் தாள்கள் இருந்தன. வள்ளலாரே அவர்களிடம் சொல்லிக் கொடுத்தது போல 3500 ரூபாய் இருந்ததை எண்ணி வாரியார் வியப்பில் ஆழ்ந்தார்.

* புகழை விரும்பாத நல்லவர்களின் பெயரை, கடவுளே மூன்று உலகத்திலும் விளம்பரப்படுத்தி விடுவார்.

* வயது தளர்ந்த பெரியவர்கள் படும் துன்பத்தை சிந்தித்துப் பார்த்து உதவ முயல வேண்டும்.

* படிப்பினால் உண்டாகும் அறிவை விட அனுபவத்தால் உண்டாகும் அறிவே மேலானது.

* பணம் சேரச் சேர சாப்பாடு குறையும். பக்தி, ஒழுக்கம், தூக்கம் இவையும் கூட குறைந்து போகும்.

* நாம் இதுவரை முன்னேறாமல் இருக்க, நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே காரணம்.

* உண்ணாமல் இருக்கலாம், உறங்காமல் இருக்கலாம்; ஆனால் கடவுள் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது.

* கடவுள் இல்லை என்பவனுக்கு அனைத்தும் இல்லாமல் போய்விடும். கடவுள் உண்டு என்பவனுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

* அறிவையும், அன்பையும் கெடுக்கக்கூடிய ஆகாரத்தை சாப்பிடுவதை விட, தூய உணவை சாப்பிட்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* உலகம் நிலையற்றது, தர்மம் நிலையானது. தர்மத்தால் தான் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த மகன்.

* இறைவனுடைய கருணையைப் பெறத்துடிக்கும், ஒவ்வொருவரும் பிற உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.

* உடம்பும் நாமும் வேறு, வேறு. ஆனால் சிவமும் சக்தியும் அப்படியல்ல. மலரும் மணமும் போன்று இணைந்திருப்பது.

* இறைவனுக்கு செய்யும் வழிபாட்டை விட, ஏழைகளுக்குச் செய்யும் வழிபாடே உயர்ந்தது.

– வாரியார்

10 thoughts on “வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

  1. வாரியார் சுவாமிகளைப் பற்றிய இரண்டு கதைகளும் அருமையாக உள்ளது. வாரியார் அவர்களின் பொன் மொழிகள் அருமை. குருவிற்கு தட்சணை அளிக்க வேண்டும் என்று நினைத்த சுவாமிகளுக்கு இறைவனே உதவி இருக்கிறார்.

    வள்ளலாரின் நற் பணிக்கு உதவ வேண்டும் என்று நினைத்த பொழுது வள்ளலாரே அவர் எண்ணத்தை நிறைவேற்றி இருக்கிறார்.

    அன்ன தான நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள் இந்த இரண்டு கதைகளையும் தொகுத்து அளித்த தங்களுக்கு நன்றிகள் pala

    நன்றி
    உமா

  2. ஹலோ சுந்தர்

    http://www.dinamalar.com/news_detail.asp?id=1049427

    திரு. ஞானப்ரகாசம் அவர்கள் பற்றிய பதிவு இன்றைய தினமலரில் வந்துள்ளது. உங்களால் தினமலருக்கு ஒரு செய்தி கிடைத்ததற்கு நான் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் இன்னும் நூற்றுகணக்கான மக்கள் அந்த சிவ தொண்டனை பற்றி தெரிந்து கொள்வார்கள், உதவி புரிவார்கள் என நம்புகிறேன்.

    நன்றி

  3. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் மீண்டும் வருகிறேன். எங்கள் ஊர் திருவிழாவுக்கு சென்றுவிட்டேன். எதை முதலில் படிப்பது என்றே தெரியவில்லை. ஒன்றைவிட ஒன்று சிறப்பாக உள்ளது. ஒவ்வொன்றாக படித்துவருகிறேன்.

    நீங்கள் கூறியது போல, வாரியார் தொடர்புடைய இந்த இரண்டு சம்பவங்களும் முத்துக்கள் தான்.

    வாரியார் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப எவரும் இல்லை என்பதே உண்மை.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. வாசித்த வரிகள்:

    பெரியார் போற்றிய வாரியார்:

    வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் “கிருபானந்த “லாரி” வருகிறது” என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார்,அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. “வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!” என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.

    வாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது.

    இறைவனை ஏன் வணங்க வேண்டும்?
    இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்” என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.

    மத நல்லிணக்கம்:
    ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, “சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?” என்று கேட்டார்.

    அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.” என்று கூற “அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.

    இதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

    “எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்” என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.

  5. இம்மகானைக் காணும் பாக்கியமும் அவரது சொற்பொழிவினை கேட்ட்கும் பேரும் கிட்டியும் என்னுடைய அறியாமையினால் அவ்வாய்ப்பை இழந்துவிட்டேன். நான் ஒன்பதாம் வகுப்பு படித்த பொழுது எங்களது பள்ளிக்கு சொற்பொழிவாற்ற வந்தார். ஆனால் அன்று எங்கள் வீட்டில் அனைவரும் திருமணத்திற்கு வெளியூர் செல்வதாக இருந்தது, ஆகையால் மதியத்துடன் வீட்டிற்கு வரசொல்லிவிட்டனர். எனக்கும் அப்பொழுது சுவாமிகளைப் பற்றி ஏதும் அறியாத வயதாகையால் அவ்வாய்ப்பை கைநழுவ விட்டுவிட்டேன் வாரியார் சுவாமிகளைப் பற்றிக் கேட்கும் பொழுதும், படிக்கும்பொழுதும், நான் வருந்தாத நேரமில்லை. இக்கட்டுரையைப் போல அடிக்கடி படிக்கும் விஷயங்களே எனகு ஆறுதல். மிக்க நன்றி.

  6. பதிவும் அருமை . பதிவைப் பற்றிய valtaire ன் கருத்தும் அருமை .
    C. R …Camp at Montreal , Canada

  7. Dear Sundarji,

    What a coincidence. Today i was hearing Kripanantha Variyar speech about arunagirinathar.It was an excellent speech mixed with humours,song and stories. Meanwhile when i opened right mantra blog it was about vaariyar swami.

    I will just share one small quote i inspired from his speech i heard today.

    en aanmavirku vayathu kidayathu indha udambirku vayathu endru avar than vayathai koorukirar. Matroruvar ketkirar un peyar enna endru. Arunagirinathar kooriyathavathu

    En thaai ku nan arunagiri nathar,
    En thanthai ku nan magan
    En pillai ku nan appa
    En Peranuku na thatha
    En thambiku nan annan endru.

    Murugan adimai kripanantha variyar avargalai patri pathivu alithamaiku mikka nandri.

    Thanks & Regards

    V Harish

  8. வாரியார் சுவாமிகளின் வாழ்வில் நிகந்த சம்பவங்களையும் அவருடைய பொன்மொழிகளையும் பகிர்ந்ததற்கும் நன்றி. என்றென்றும் நாம் கடைபிடிக்க வேண்டியவை இவை.

  9. வாரியார் பொன்மொழிகள் அனைத்தும் மிக மிக அருமை.
    இவற்றை எல்லாம் நமது அன்றாட வாழ்வில் கடைபிடித்து மேலும் மேலும் நாம் பக்குவம் அடைய வேண்டும்.
    நாம் வாழ்வில் கடக்க வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ உள்ளது.
    அவற்றை கடக்க இந்த பெரியோர்களின் துணை மிக மிக அவசியம்.

    இந்த கருத்துக்களை எல்லாம் இறைவன் உங்கள் மூலமாக எங்களைக்கேட்க வைத்துள்ளான்.

    வாழ்க வளமுடன்

  10. எத்தனை இன்னல் வந்தாலும், எடுத்துக்கொண்ட நல்ல செயல்களை எப்படியாவது செய்து முடிக்கவேண்டுமென நாம் நினைத்தால், அதை இறைவன் கண்டிப்பாக முடித்து வைப்பான் என்பதற்கு மேற்கூறிய இரண்டு கதைகளும் நல்ல சான்று.

    அடியேன்
    இரா.புனிதன், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *