பணி நடைபெற்ற 16 ஜூன் ஞாயிறு காலை 7 மணிக்கெல்லாம் நம் நண்பர்கள் கோவிலுக்கு வந்துவிட்டனர். ஏற்கனவே தர்மகர்த்தா திரு.ராமமூர்த்தி அவர்களிடம் பேசி உரிய அனுமதி நாம் பெற்றிருந்ததால் உள்ளே அர்ச்சகரிடம் என்னென்ன பணிகள் செய்யவேண்டியிருக்கிறது என்று கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டோம்.
பின்னர் அந்தந்த பணிகளுக்கு என வந்திருந்த நண்பர்கள் இரண்டு இரண்டு பேராக பிரித்து விடப்பட்டனர்.
மகளிர் குழுவினர் விளக்குகள் மற்றும் பாத்திரம் துலக்குவதற்கு அமர்த்தப்பட்டனர். குத்துவிளக்குகள், பித்தளை அண்டா, தண்ணீர் குடம் உள்ளிட்ட கோவிலின் பித்தளை பாத்திரங்கள், மற்றும் பிரபை உள்ளிட்டவற்றை தேய்க்க ஆரம்பித்தனர்.
நண்பர் முத்துக்குமார் பாத்திரங்களை முதலில் துணி மூலம் துடைத்து அவற்றில் இருந்த எண்ணை மற்றும் பிசுக்குகளை அகற்றி பின்னர் அவர்களிடம் தந்தார். இதன் மூலம் அவற்றை துலக்குவது சற்று சுலபமானது. பாத்திரம் துலக்கும் இடத்தில் கடும் வெயில் அடித்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாது மகளிர் குழுவினர் தங்கள் பணியை செவ்வனே செய்தனர்.
அடுத்து நண்பர் கண்ணன் வைரமணி மற்றும் சந்திரமௌலி ஆகியோர், விளக்கு ஏற்றும் நீளமான ஸ்டீல் டேபிளை சுத்தம் செய்தனர்.
முதலில் ஒரு சுரண்டும் தகரம் மூலம் (Scrubber) நாள் பட்ட பிசுக்கு அகற்றப்பட்டு பின்னர் அரிசி மாவை தூவி மேலும் ஒட்டி இருந்த எண்ணை படலம் அகற்றப்பட்டது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு இரு நண்பர்களின் முயற்சியில் பெஞ்ச் பளிச்சென சுத்தமானது.
அடுத்து பிரகாரத்தில் உள்ள ‘தேவ ராஜ கணபதி’யின் சிறிய சன்னதியும் இதே போன்று எண்ணை பிசுக்குகள், அர்ச்சனை அபிஷேகப் மிகுதிகள் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
நண்பர் பிரேம் கண்ணன் பிரகாரத்தில் உள்ள ஒட்டடைகளை சுத்தம் செய்தார். பின்னர் முருகன் சன்னதியையும் கங்காதேஸ்வரர் பார்த்துக்கொண்டார். சன்னதியின் கதவுகளில் இருந்த தூசி பெயிண்ட் பிரஷ் மூலம் அகற்றப்பட்டது. இறுதியில் நீர் விட்டு தரை அலம்பிவிடப்பட்டது. இவருக்கு நண்பர் ஹரிஹரசுதன் மிகவும் உதவியாக இருந்தார்.
நண்பர் ராஜா மற்றும் மாரீஸ் ஆகியோர் உள்ள மூலவர் சன்னதி மற்றும் குளிர்ந்தவல்லி தாயார் சன்னதியின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சர விளக்குகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அவற்றை கழற்ற முடியாத படி அமைக்கப்பட்டிருந்ததால் அங்கேயே விளக்குகள் துணி மூலம் துடைக்கப்பட்டு நாள்பட்ட எண்ணை மற்றும் மக்கிய திரிகள் அகற்றப்பட்டது. இருவரும் மிகவும் போராடி சுமார் இரண்டு மணிநேரத்தில் அவ்விளக்குகளை சுத்தம் செய்தனர். காற்றோட்டம் இல்லாத இடமாகையால் இருவரும் வியர்வை மழையில் நனைந்த படி தான் சுத்தம் செய்தனர்.
இருவரும் மிகவும் போராடி சுமார் இரண்டு மணிநேரத்தில் அவ்விளக்குகளை சுத்தம் செய்தனர். காற்றோட்டம் இல்லாத இடமாகையால் இருவரும் வியர்வை மழையில் நனைந்த படி தான் சுத்தம் செய்தனர்.
அடுத்து நண்பர் ஹரிஹர சுதன் துர்க்கையம்மன் சன்னதியையும் தட்சிணா மூர்த்தி சன்னதியையும் பார்த்துக்கொண்டார். குப்பைகள் மற்றும் எண்ணை பிசுக்குகள் அகற்றப்பட்டு, பின்னர் தண்ணீர் விட்டு இரு சன்னதிகளும் அலம்பிவிடப்பட்டன. இந்த உழவாரப்பனியில் அனைவரும் அதிக பணிகள் செய்தாலும் ஹரிஹரன் செய்த பணி தான் மிகவும் சிறப்பாக இருந்தது.
அடையாரிலிருந்து வந்திருந்த நண்பர் சௌந்தரவேல் உள் பிரகாரத்தில் உள்ள முருகன் சன்னதியை பார்த்துக்கொண்டார். அதே போல குப்பைகள், பழைய அகல் விளக்குகள் அகற்றப்பட்டு பின்னர் நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது. ஒரு மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற அவரது அயராத உழைப்பில் முருகன் சன்னதி பொலிவு பெற்றது.
அதற்குள் உணவு இடைவேளை வர, வாங்கி வந்திருந்த சிற்றுண்டியை அனைவரும் சாப்பிட்டு முடித்தோம்.
பின்னர் மீண்டும் பணி துவங்கியது. நாமும் நண்பர் முத்துக்குமாரும் நவகிரக சன்னதியை பார்த்துக்கொண்டோம். முத்துக்குமார் அவர்கள் விக்ரகங்கள் அமைக்கப்பட்டிருந்த மேடையின் மேலே மற்றும் கீழே இருந்த எண்ணை பிசுக்குகளை உழவாரக் கரண்டி மூலம் சுத்தம் செய்தார்.
நாம் சுவற்றை முதலில் துடைத்து பின்னர் அலம்பிவிட்டோம். நாம் வேறு இடத்தில் அழைக்கப்பட, இங்கே நாம் விட்டுச் சென்ற பணியை நண்பர் சந்திரமௌலி பார்த்துக்கொண்டார். இவர்கள் சுத்தம் செய்து பிசுக்குகளை அகற்றிய பிறகு மகளிர் குழுவினர் வந்து நீர்விட்டு தரையை கழுவி சுத்தம் செய்தனர்.
இறுதியில் நவக்கிரக சன்னதி புதிய பொலிவு பெற்றது கண்கொள்ளா காட்சி.
எல்லாரும் அவரவர்க்கு ஒப்படைக்கப்பட்ட பணிகளை செய்துகொண்டிருக்க, நம் பாடு தான் திண்டாட்டமாகிப் போனாது. எந்த பணியையும் முழுமையாக மனம் லயித்து செய்ய முடியவில்லை. அங்கு செல்வதும் இங்கு செல்வதும், அனைத்தும் சரியாக போய் கொண்டிருக்கின்றதா என்றும் பார்ப்பதும், பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் நண்பர்களின் தேவைகளை கேட்டறிந்து பின்னர் அவற்றை செய்து கொடுப்பதும் இதற்கே நேரம் நமக்கு சரியாக இருந்தது.
நண்பர் மனோகரன் அவர் பங்கிற்கு தனது மகன் மோனிஷுடன் களமிறங்கி பிராகாரத்தை பெருக்கி சுத்தம் செய்தார். போக்குவரத்து, சிற்றுண்டி வாங்கி வருவது உள்ளிட்டவற்றை பார்த்துக்கொண்டார்.
இப்படியாக அனைவரும் சிறு சிறு குழுவாக பிரிந்து கைங்கரியம் செய்தோம். கோவில் சுத்தமானதோ இல்லையோ எங்கள் மனமும் வாழ்க்கையும் சுத்தமானதாகவே கருதுகிறோம்.
இந்த பணி செய்யும்போது நமக்கு கிடைக்கக்கூடிய மனநிறைவு வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. ஒருமுறை உழாவாரப்பணி செய்து அந்த மனநிறைவை உணர்ந்து பாருங்கள் புரியும். அதற்கு பிறகு கிரகமாவது தோஷமாவது…. அவன் வீட்டு வேலைக்காரர்களாகிவிட்ட பிறகு நம்மை பார்த்துக்கொள்வது அவன் கடமையாகிவிடுகிறது அல்லவா?
[box size=”large” style=”rounded” border=”full”]ஒருமுறை உழவாரப்பணி செய்து அந்த மனநிறைவை உணர்ந்து பாருங்கள் புரியும். அதற்கு பிறகு கிரகமாவது தோஷமாவது…. அவன் வீட்டு வேலைக்காரர்களாகிவிட்ட பிறகு நம்மை பார்த்துக்கொள்வது அவன் கடமையாகிவிடுகிறது அல்லவா?[/box]
அடுத்து….நமது உழவாரப்பணியின் முக்கிய அம்சமே கோவிலில் ஏற்கனவே துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் கோவிலை பராமரிப்பவர்களை கௌரவிப்பது தான்.
நாம் செய்வது ஜஸ்ட் ஒரு நாள் பணி. ஆனால் அத்தனை பெரிய கோவிலை தினசரி கூட்டி பெருக்கி சுத்தம் செய்கிறார்களே.. அவர்கள் பணி எத்தனை மகத்தானது? சற்று சிந்தித்து பாருங்கள். அவர்களது சேவைக்கு நன்றி கூறி கௌரவிப்பது நம் கடமையல்லாவா?
இந்த கோவிலில் துப்புரவு பணி செய்வது யாரென்று விசாரித்தபோது ஜெகதா என்கிற ஒரு அம்மா தனது மருமகளுடன் இந்த பணியை செய்துவருவதாக அறிந்தோம். அவர்களை கௌரவிக்க எண்ணினோம். விஷயத்தை ஜெகதா அம்மாவிடம் சொன்னபோது, “எனக்கெதுக்கு சாமி இதெல்லாம்… ஏதோ என் கடமையை செய்றேன்…..” என்றார்கள்.
“இல்லை… இல்லை… அது உங்கள் கடமை என்றால் உங்களை கௌரவிப்பது எங்கள் கடமை” என்று கூறி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தோம். அவர்களின் பணி பற்றியும் அதன் மேன்மையையும் அனைவருக்கும் உரக்க எடுத்துக்கூறி பின்னர் நண்பர்களின் கைதட்டல்களுக்கிடையே அவரை கௌரவித்தோம். அவர்கள் கையில் ரொக்கமும், ஒரு பாக்ஸ் உயர் தர இனிப்புகளும் தரப்பட்டது.
[box size=”large” style=”rounded” border=”full”]அவர்களின் பணி பற்றியும் அதன் மேன்மையையும் அனைவருக்கும் உரக்க எடுத்துக்கூறி பின்னர் நண்பர்களின் கைதட்டல்களுக்கிடையே அவரை கௌரவித்தோம். அவர்கள் கையில் ரொக்கமும், ஒரு பாக்ஸ் உயர் தர இனிப்புகளும் தரப்பட்டது.[/box]
“பேரக்குழந்தைகளுக்கு இதை கொடுங்க. வீட்ல எல்லார் கிட்டேயும் சொல்லுங்க. கோவிலை நல்லா பார்த்துக்கோங்க. அவன் உங்களை பார்த்துக்குவான். ரொம்ப நன்றிம்மா… நீங்கள் செய்துவரும் பணி மகத்தானது! எங்களையும் எங்கள் குழுவையும் ஆசீர்வதியுங்கள்!” என்று கூறி ஜெகதா அம்மாவிடம் விடைபெற்றோம்.
அவர்கள் முகத்திலும் அந்த குழந்தைகளின் முகத்திலும் எத்தனை சந்தோஷம் பாருங்கள். அவர்கள் முகத்தில் நாம் ஏற்படுத்திய இந்த சிறிய சந்தோஷம், கௌரவம் நிச்சயம் அவர்கள் பணியை மேன்மேலும் சிறப்பாக செய்ய வைக்கும் என்பது மட்டும் திண்ணம்.
அதே போல கோவிலின் மணியக்காரராக உள்ள பெரியவர் ஒருவரையும் கௌரவித்தோம். கோவிலை திறப்பது, அடைப்பது, பூஜை ஏற்பாடுகள், உற்சவங்கள் தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்பவர் இவர் தான்.
இவை தவிர, சரியான அதற்குரிய இடத்தில் விளக்கு ஏற்றுவது, கோவிலை சுத்தமாக வைத்துக்கொள்வது, அலைபேசியை தவிர்ப்பது போன்ற வாசகங்களை அடங்கிய ஸ்டிக்கர் தயார் செய்து, அதை ஒரு அட்டையில் ஒட்டி கோவிலில் ஆங்காங்கும் வைத்துள்ளோம். கீழே முருகன் சன்னதியின் அருகே உள்ள சுவற்றின் கதியை பாருங்கள். நாம் ஒட்டிய ஸ்டிக்கர் காணப்படுகிறது.
மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பணியை தொடர்ந்து செய்து முடித்து, 12.30 மணிக்கு கோவிலில் இருந்து கிளம்பினோம். எங்கள் அனைவருக்கும் விஷேட தரிசனம் செய்விக்கப்பட்டது.
உழவாரப்பணி தொடர்பான செலவுகளை நண்பர் ஹரி கிருஷ்ணன் என்பவரும் துபாயிலிருக்கும் நண்பர் மெய்நாதன் என்பவரும் ஏற்றுக்கொண்டனர். குழுவில் இடம்பெற்றிருந்த நண்பர் முத்துக்குமார், மற்றும் கண்ணன் வைரமணி ஆகியோரும் பணியின் இடையே தேவைப்பட்ட பொருட்களை வாங்கி தந்து உதவினர். இவர்களின் உதவிகள் இல்லையேல் பணி இத்தனை சிறப்பாக நடைபெற்றிருக்காது. இவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை நாம் மேற்க்கொண்டு உழவாரப்பணிகளில் அதிகபட்ச நபர்கள் வந்து இந்தமுறை தான். பெங்களூர், கோவை இங்கிருந்தெல்லாம் நண்பர்கள் வந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை கூடுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. நமது உழவாரப்பணிக்கு பலதரப்பட்ட மட்டங்களிலிருந்து நண்பர்கள் வருகிறார்கள். ஐ.டி. நிறுவனங்களில் உயர்பதவியில் பணிபுரிபவர்கள் முதல், ஹோட்டலில் தினசரி ஊதியத்திற்கு வேலை செய்பவர் வரை அனைவரும் நம் பணிக்குழுவில் உள்ளனர். செய்யும் தொழிலும் பார்க்கும் வேலையும் வெவ்வேறானாலும் இங்கு அவன் முன்பு நாங்கள் அனைவரும் ஒன்று தான். எங்களை இணைப்பது அவன் தான்.
அன்று மாலை நண்பரின் குடும்பத்திற்காக பாலாபிஷேகத்திற்கு நாம் மீண்டும் ஆலயம் வந்தபோது கோவிலின் முதன்மை குருக்களாக இருந்து தற்போது ஓய்வில் இருக்கும் சச்சிதானந்த குருக்களை எதேச்சையாக சந்தித்தோம். 96 வயதாம் இவருக்கு. காளிகாம்பாள் கோவில் சாம்பசிவ குருக்களின் அண்ணனாம் இவர்.
“காலைல நீங்க உழாவாரப்பணி செய்யும்போது பார்த்தேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க. உங்க குழுவில் இருக்கும் அனைவருக்கும் என் ஆசிகள். அம்பாள் மேலே இருக்கும் பிரபை கும்பாபிஷேகத்தப்போ தேச்சது. அதுக்கு பிறகு இன்னைக்கு தான் அது பளபளன்னு சுத்தமாகியிருக்கு. ஒவ்வொரு சன்னதியும் போய் பார்த்தேன். பிரமாதப்படுத்தியிருக்கீங்க!” என்று நமது பணி குறித்து பாராட்டுக்கள் தெரிவித்தார்.
சுமார் 20 நிமிடம் நம்மிடம் பல அரிய விஷயங்கள் குறித்து பேசினார்.
மறுநாள் மாலை கோவில் தர்மகர்த்தா திரு.ராமமூர்த்தியிடமிருந்து ஃபோன் வந்தது.
“சார்…. நான் நேத்து ஊர்ல இல்லை. வெளியூர் போயிருந்தேன். இன்னைக்கு காலைல தான் வந்தேன். பிரமாதப்படுத்தியிருக்கீங்க. எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இதுவரை நிறைய பேர் பண்ணியிருக்காங்க எங்க கோவில்ல. இது மாதிரி யாரும் பண்ணதில்லை. ஒவ்வொரு சன்னதியும் பளபளன்னு இருக்கு. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே.”
“அடடா.. இப்படி ஒரு சேவை செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு தந்ததற்கு நாங்க தானே நன்றி சொல்லணும். சொல்லப்போனா எங்களுக்கு வேலை கொஞ்சம் உங்க கோவில்ல குறைவு!” என்றேன்.
“பெரியவர் (சச்சிதானந்த குருக்கள்) என்னை கூப்பிட்டு தனித் தனியா ஒவ்வொரு சன்னதியும் கூட்டிட்டு போய் ‘எப்படி இருந்தது எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா?”ன்னு காட்டினார். உங்க டீமோட வேலையை ரொம்ப APPRECIATE பண்ணார். இதுவரைக்கும் யாரையுமே அவர் APPRECIATE பண்ணதில்லை. அவர் கிட்டே பாராட்டு வாங்குறது சுலபமில்லை. இனி ரெகுலரா உங்களை கூப்பிடுறோம். எங்கள் கோவில்ல லக்ஷ தீபம், அன்னாபிஷேகம், சிவராத்திரி இந்த மூனும் விமரிசையா நடக்கும். அந்த சமயத்துல வந்தீங்கன்னா இன்னும் நிறைய வேலை இருக்கும்!” என்றார்.
“எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்புகொள்ளுங்கள். அவனுக்கு பணி செய்ய காத்திருக்கிறோம்!” என்றேன்.
இதுவரை நாம் மூன்று கோவில்களில் உழவாரப்பணி செய்துள்ளோம். ஆனால் இப்படி ஒரு பாராட்டும் அங்கீகாரமும் நமக்கு இதுவரை கிட்டியதில்லை. முதல்முறையாக கிட்டியது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
உழவாரப்பணி என்பது சாதாரண விஷயம் அல்ல. அதில் ஈடுபட போதிய அனுபவமும் மனவுறுதியும் தேவை. நமது உழவாரப் பணிக்குழு துவக்கி ஜஸ்ட் நான்கு மாதங்களே ஆனா சூழலில் கிடைத்த பாராட்டும் சான்றும் உண்மையில் அந்த ஈஸ்வரனின் பாராட்டு தான் என்றால் மிகையில்லை.
இந்த பாராட்டும் பெருமையும் நமது பணிகளுக்கு துணை நிற்கும் நமது நண்பர்களுக்கும், இந்த பணிகளில் தேவைப்படும் பொருளதவி வழங்கி உதவிய சில வாசகர்களையுமே சாரும். அவர்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்று நம்மிடம் கேட்டுக்கொண்டாலும் இது போன்ற பதிவுகளில் நிச்சயம் அவர்கள் பெயர் இடம் பெறவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
கோவிலுக்கு ட்யூப் லைட் வாங்கி கொடுத்துட்டு, அந்த லைட் வெளிச்சத்தையே மறைக்கிற மாதிரி பெயிண்ட்ல பேர் எழுதுற உலகம் சார் இது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நல்ல பணிக்கு எங்கிருந்தோ உதவும் உள்ளங்களின் பெயர்களை இந்த பதிவிலாவது நாம் வெளிப்படுத்தவேண்டும் அல்லவா?
உழவாரப்பணியில் ஈடுபட்ட நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்களை கவனித்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்னேற்றம் என்றால் பொருளாதார ரீதியிலானது மட்டும் அல்ல. பல விதங்களில். அதாவது சந்தோஷம், சந்தானம், சௌபாக்கியம், சாந்தி என அனைத்தும் பெருகி ஒரு மனநிறைவான முன்னேற்றம் நிச்சயம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.
EVERY ACTION TOWARDS GOD HAS MULTIPLE AND POSITIVE REACTIONS.
=====================================================
உழவாரப்பணியில் ஆர்வமுள்ள வெளியூர் வாசகர்களுக்கு :
வெளியூரில் இருக்கும் வாசகர்கள் பலர் நமது பணியில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் நடைமுறை சிக்கல்கள் காரணமாக அவர்களால் கலந்துகொள்ள முடிவதில்லை.
நாம் உழவாரப்பணி செய்யும் அதே நேரம் அவர்களும் பணி செய்ய ஒரு எளிய உபாயம்:
அவர்கள் தங்கள் பகுதிகளில் அருகாமையில் இருக்கும் கோவில்களுக்கு சென்று விசாரித்து இதே போன்று அவர்களால் இயன்ற கைங்கரியம் செய்யலாம். தனி மனிதர்கள் செய்யக்கூடிய பணிகள் எத்தனையோ இருக்கின்றன. கோவிலின் அலுவகலத்திலோ அல்லது அர்ச்சகர்களிடமோ பேசி கோவிலை கூட்டி பெருக்கி, கழுவி விடுவது, ஒட்டடை அடிப்பது, பாத்திரம் துலக்கி தருவது, ரிப்பேரான மின் இணைப்புகளை சரி செய்து தருவது, ப்யூஸ் போன லைட்டுகளை மாற்றி தருவது, மோட்டார் பம்பு ரிப்பேர் செய்து தருவது, இப்படி ஏதேனும் அவரவர் சௌகரியத்திற்கேற்ப உதவி செய்யலாம்.
கோவில் புராதனமான கோவிலாகவும், வருமானம் குறைவாக உள்ள கோவிலாகவும் இருப்பது முக்கியம்.
எதுவுமே இயலாதவர்கள் செய்தித் தாள்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு கம்பியில் கட்டி விபூதி, குங்குமம் மடிக்கவாவது தரலாம்.
நீங்கள் செய்யும் கைங்கரியங்களை – பேரம்பாக்கம் உழவாரப்பணி குறித்து நாம் பதிவிடும் போது – அவசியம் நம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும். மின்னஞ்சலும் அனுப்பவும்.
=====================================================
நமது அடுத்த உழவாரப்பணி!
நமது அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு 14/07/2013 அன்று திருவள்ளூரை அடுத்துள்ள (பேரம்பாக்கம்) நரசிங்கபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது. இம்முறை வேன் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தான் அனைவரும் செல்லவுள்ளோம். எனவே வரவிருப்பம் உள்ள நண்பர்கள் நமக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.நன்றி. (காலை 5.30க்கு கிளம்பி பணி முடித்து மதியம் 1.00 மணிக்கு திரும்புவோம்.)
மதிய உணவாக கோவில் நிர்வாகமே மடப்பள்ளியில் பிரசாதம் தயார் செய்து நமக்கு தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
கோவிலில் தற்போது பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. வரும் 12 ஆம் தேதி அது நிறைவடைகிறது. அது சமயம் நமது கைங்கரியம் இருந்தால் நலம் என்பதால் இந்த ஞாயிறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
http://rightmantra.com/?p=4665
=====================================================
சுந்தரகாண்டம்
முதல்கட்டமாக சுந்தரகாண்டம் நூல் கேட்ட அனைவருக்கும் 3 நூல் அடங்கிய செட் அனுப்பப்பட்டுவிட்டது. இரண்டாம் கட்டமாக தற்போது அனுப்பி வருகிறோம்.
எவருக்கேனும் நூல் கிடைக்கவில்லையெனில் எமக்கு முன்னர் அனுப்பிய அதே மின்னஞ்சலில் மீண்டும் தொடர்பு கொள்ளவும்.
மறுபடியும் மறுபடியும் நினைவூட்ட தவறவேண்டாம்.
சுந்தரகாண்டம் படிக்கத் துவங்கியதிலிருந்து ஏற்படும் முன்னேற்றங்களை அவசியம் இங்கு பகிர்ந்துகொள்ளவும்.
அதே போல நூல் கிடைத்தவர்கள் அவசியம் நமக்கு தெரிவிக்கவும்.
நன்றி!!
=====================================================
[END]
வாழ்த்துக்கள் !!!!!
Was waiting for this article…late ah vandalum latest ah vandiruku..
Our presence is being felt, we are slowly progressing towards our goals..
Let the almighty give all of us and especially sundar anna the strength to move in this path…
And our team’s work is getting recognized. So it’s a great achievement!!
Also kindly include my name for the next event also.
With god’s grace I will be able to serve him and wipe out the effects of past karma!!
Sincerely Request all our members to join and make this a huge success.
Regards
R.HariHaraSudan
“HE WHO KNOWS THE SELF KNOWS ALL”.
ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை கூடுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
வாழ்க நம் வாசகர்கல் நலம், வலர்க நம் இரை தொண்டு.தொடர்க உங்கள் அரும்பனி….
இரண்டு முறை சிவன் கோவில் உழவாரபணிக்கு வந்தேன் பெருமாள் கோவில் உழவார பணிக்கு சென்ற முறை வர முடியவில்லை ,இந்த முறை கண்டிப்பாக வருவேன்.
(கோவிலுக்கு ட்யூப் லைட் வாங்கி கொடுத்துட்டு, அந்த லைட் வெளிச்சத்தையே மறைக்கிற மாதிரி அதுல பெயிண்ட்ல பேர் எழுதுற உலகம் சார் இது) – இது ரொம்பநாள் நானே நினனச்சு நினச்சு சிரிச்சுக்குவேன் அட பாவிகளா 40 ரூபாய்க்கு tube லைட் வாங்கி விட்டு ,அதுக்கு 20 ருபாய் பெயிண்ட்கு செலவு பண்றீங்களே நு என்ன பண்றது அப்படி பட்ட சூழ்நிலையில் நம் தல வாசக நண்பர்கள் தங்களால் ஆனா உதவி செய்து ,அதை உரியவர்களுக்கு கொடுக்கும் போது புகைபடம் எடுக்க கூட கூச்சபடுகிறார்கள்.
உழவாரபணி எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பது அறிது?.
நமது சுந்தர் ஜி சொல்வது போல் அவன் வீட்டு வேலைக்கு, அவனே ஆட்களை தேர்ந்தெடுக்கிறான்.
விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.”இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் ,அவன் நம்மை நோக்கி பத்து அடி வைக்கிறான் ” .
நமது நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்வது,பார்பதற்கு நாம் அனைவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற பாசம் வருகிறது .
இந்த பாசம் நிறைந்த குடும்பத்தில் எம்மை இணைத்து கொண்டமைக்கு நன்றி .
-மனோகர்.
வாழ்க நம் வாசகர்கள் நலம்,
நண்பர்கள் அரும்பனி,
வாழ்த்துக்கள்! சுந்தர் ஜி.
அருமையான சேவை…..
//ஒருமுறை உழவாரப்பணி செய்து அந்த மனநிறைவை உணர்ந்து பாருங்கள் புரியும். அதற்கு பிறகு கிரகமாவது தோஷமாவது…// 100% உண்மை…
நம்ம டீம்-க்கு வாழ்த்துக்கள்!!!
கொஞ்சம் சொந்த வேலைகள் காரணமா என்னால சேந்துக்க முடியல…..Soon I will also join Ji …
இந்த பதிவை படிக்கும்போதே மனதிற்கு இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே அதை உளமார செய்து அந்த பரம்பொருளின் க்ருபா கடாக்சத்திருக்கு பாத்திரமான உங்கள் அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் !!!
வாழ்க வளமுடன் !!!
வளர்க உங்கள் திருப்பணி !!!
வணக்கத்திற்குரிய சுந்தர் அவர்களுக்கு, உங்கள் அடுத்த உழவாரப்பணி யங்க நடைபருகிறது , ? தேதி ? சுரேஷ்பாபு , சென்னை
கோவில் தூய்மையாக
உள்ளது
மக்கள்
கோவிலை தூய்மையாக
வைத்திருக்க வேண்டும்
வாழ்த்துக்கள் சுந்தர். பழமையான கோயில். தங்கள் குழுவினருக்கு பெரும் பேறு. சிவனருள் கிடைக்கட்டும்.
– பி. சுவாமிநாதன்
வாழ்த்துக்கள் சுந்தர் சார்…தங்கள் நற்பணி தொடரட்டும்