பதிகங்கள் பாடி மூவர் நிகழ்த்திய அற்புதங்கள் யாவும் உண்மையினும் உண்மை என்பதை நிச்சயம் இந்த உலகிற்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள் ஒன்று. எனவே அப்போதிலிருந்தே அந்தக் கோவிலுக்கு செல்லவேண்டும் நமது தளத்திற்க்காக கவர் செய்து அந்த இடத்தை உங்கள் கண் முன்னர் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினோம். (Please check : பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?)
பிப்ரவரி மாதம் மகாமகம் செல்வதற்கு முன்பு அவிநாசி சென்று அவிநாசியப்பரையம் கருணாம்பிகையையும் தரிசித்துவிட்டு அப்படியே இந்த திருக்குளத்தையும் பார்த்துவிட்டு சுந்தரர் கோவிலையும் தரிசிக்க முடிவு செய்தோம்.
நாம் கோவை வரும் தகவலை பதிவில் அறிந்துகொண்டு திருப்பூரை சேர்ந்த பாலாஜி என்னும் வாசகர், “அவினாசி செல்லவேண்டும் என்றால் எதற்கு கோவை செல்கிறீர்கள்? திருப்பூரில் இறங்கிவிடுங்கள். இங்கேயிருந்து ரொம்ப பக்கம். நான் உங்களை ஸ்டேஷனில் வந்து பிக்கப் செய்ந்துகொள்கிறேன். என் வீட்டில் தங்கிக்கொள்ளலாம். காலை குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு அவிநாசியப்பர் கோவிலுக்கு என் பைக்கில் செல்லலாம்” என்றார்.
அதுவும் சரி தான் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நண்பர் கேட்டுக்கொண்டபடி திருப்பூரில் அதிகாலை 3.30 அளவில் இறங்கி அவர் வீட்டில் தங்கிவிட்டு காலை கோவிலுக்கு சென்றோம்.
அவிநாசியப்பரை தரிசித்தது பற்றியும் அது நமது வாழ்க்கைக்கு கோவிலாக மாறியது பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவில் விளக்கியிருக்கிறோம்.
இந்த சுந்தரர் கோவிலுக்கு என்று அர்ச்சகர் தனியாக இல்லை. அவிநாசியப்பர் கோவில் அர்ச்சகர் திரு.சுரேஷ் குமார் குருக்கள் அவர்கள் தான் இதையும் பார்த்துக்கொள்கிறார். போன் செய்தால் வருவார். வெளியே சுவற்றில் அவர் அலைபேசி எண்ணை தந்திருக்கிறார்கள்.
நாம் சென்ற நேரம், கோவில் திறந்திருந்தது. ஒரு பாட்டியம்மா இருந்தார்கள். சற்று நேரம் உரையாடினோம். அப்போது தான் குருக்கள் வந்து சென்றதாக தெரிவித்தார். அலைபேசியில் அழைத்தால் வருவார் என்றும் சொன்னார்கள்.
அவரிடம் பேசியதில் அவர் தான் அந்த கோவிலை கூட்டிப் பெருக்கும் கைங்கரியத்தை செய்பவர் என்று தெரிந்தது. நம்மால் இயன்ற தொகையை அவரிடம் கொடுத்து “கோவிலை நல்லா பார்த்துக்கோங்கம்மா அடுத்த முறை வரும்போது உங்களுக்கு நல்ல மரியாதை செய்றேன்.” என்றோம்.
“ரொம்ப நன்றி தம்பி” என்றார்கள்.
குருக்களை அழைத்ததும் தற்போது தான் சுந்தரர் கோவிலிலிருந்து தான் வந்ததாகவும் தற்போது அவினாசியப்பர் கோவிலில் இருப்பதாகவும் ஒரு பத்துநிமிடத்தில் வந்துவிடுவதாகவும் கூறினார்.
பாட்டியம்மா நம்மிடம் “அவர் வர்றதுக்குள்ளே நீங்க போய், பின்னால குளத்தை பார்த்துவிட்டு வந்துடுங்க. வழி பக்கத்துல இருக்கு” என்று கூறி முதலை வாழ்ந்த குளத்தை பார்த்துவிட்டு வரும்படி சொன்னார்.
ஆர்வமுடன் சென்றோம். மிகப் பெரும் ஏரியாக ஒரு காலத்தில் விளங்கிய இடம் தற்பொழுது நீரின்றிக் காணப்படுகிறது.
அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றி குளம் போல கட்டிஇருக்கிறார்கள். அறநிலையத் துறையால் இதைத் தான் செய்யமுடியும். செய்திருக்கிறார்கள்.
ஆனால், உள்ளூர் மக்களோ அதன் அருமை புரியாமல் அந்த இடத்தை காலைக்கடன்களை கழிக்கவும் மது அருந்தவும் பயன்படுத்துகிறார்கள் என்பது அந்த பகுதியை பார்க்கும்போதே புரிந்தது.
அடேய்ப்பாவிகளா? இந்த இடத்தின் அருமை புனிதம் உங்களுக்கு தெரியுமா? கண்ணீர் வடித்தோம். (வெளியிட்டிருப்பது சில சாம்பிள் புகைப்படங்கள் தான். வேறு சில புகைப்படங்கள் நம் தளத்தில் வெளியிட ஏற்புடியதல்ல. உங்களுக்கு புரியும் என நினைக்கிறோம்!)
“இறைவா… நடக்கமுடியாத அற்புதம் ஒன்றை உன்னை பாடி நடத்திக்காட்டினார் நம்பி ஆரூரன். அந்த இடம் இப்படியா? நீ தான் மக்களுக்கு நல்லறிவு புகட்டவேண்டும்.” கண்ணீர் மல்க பிரார்த்தித்தோம்.
உள்ளூர் மக்கள், சிவாலயப் பணி குழுவினருடன் சேர்ந்து இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். இங்கு காலைக் கடன்களை கழிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது. எச்சரிக்கை பதாகைகளை வைக்கவேண்டும்.
அந்தத் திருக்குளத்தில் இறங்கி சில வினாடிகள் பிரார்தித்துவிட்டு மீண்டும் கோவிலுக்கு வந்தோம்.
சொன்னது போல குருக்கள் சில அடுத்த சில நிமிடங்களில் வந்துவிட்டார். “அர்ச்சனை செட் வாங்கியிருக்கீங்களா?” என்றார்.
பிரதான கோவில் ஏற்கனவே அர்ச்சனை செட் + மாலை ஒன்று வாங்கி வந்திருந்தோம். அதை அவரிடம் கொடுத்தோம்.
நம் வாசகர்கள் சிலருக்கும், அந்த வார ப்ரார்த்தனையாலர்களின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்து சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் அர்ச்சனை செய்தோம்.
இந்த கோவிலை பொறுத்தவரை, இழக்கக் கூடாததை இழந்திருந்தால் விதியை மாற்றி அதை மீட்டுத் தரும் கோவில் இது.
பொதுவாகவே “முதலை வாய்க்குள் போனாற்போல” என்று ஒரு வழக்கு உண்டு. அதாவது முதலை வாய்க்குள் ஏதாவது சென்றால் அதை மீட்க முடியாது என்பது அதன் பொருள்.
ஆனால் இங்கே சுந்தரர் முதலயுண்ட ஒரு பாலகனையே பதிகம் பாடி மீட்டதால் நாம் இழந்ததையெல்லாம் திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம்.
எனவே மிகப் பெரிய இழப்புக்கள் சிலவற்றை சந்தித்த நம் வாசகர்கள் சிலரின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்தோம்.
குருக்கள் நாம் வாங்கிச் சென்ற மாலையை அணிவித்து அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினார்.
சுந்தரரின் பதிகத்தின் சில பாடல்களை பாடி, வலம் வந்து பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.
முன்னதாக நம்மை முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டு நண்பரையும் அறிமுகப்படுத்தி நமது தளத்தை பற்றியும் நமது பணிகள் பற்றியும் அவருக்கு எடுத்துக்கூறினோம்.
பின்னர் நம் தளம் சார்பாக அவருக்கு ஒரு சிறு மரியாதை செய்தோம். நமது தினசரி பிரார்த்தனை படத்தை சுந்தரர் கோவிலுக்கு பரிசளித்தோம்.
பொதுவாக நாம் எந்தக் கோவிலுக்கு சென்றாலும், நமக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் தல வரலாற்றை அந்த அர்ச்சகரைச் சொல்லச் சொல்லி கேட்போம். சூழ்நிலையை பொறுத்து சற்று விரிவாகவோ அல்லது சுருக்கமாகவோ சொல்வார்கள்.
கோவிலில் தலவரலாற்றை சிரவணம் செய்வது ஒரு நல்ல விஷயம்.
சுந்தரர் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டில் இந்த இடம் எப்படி இருந்தது, என்ன நடந்தது, இந்த கோவில் எப்படி வந்தது என அனைத்தையும் சொன்னார்.
தாமரைக் குளம் என்று இவ்விடம் வழங்கப்படுகிறது. முதலில் இங்கு மரத்தடியில் சுந்தரரின் சன்னதி மட்டுமே இருந்துள்ளது. பின்னர் காலப்போக்கில் சிறிது சிறிதாக இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அருமையாக வந்துள்ளது.
கோவிலுக்குள் நுழைந்தாலே சுந்தரரின் ஸ்பரிசத்தை உணரமுடியும்.
சுரேஷ் குமார் குருக்கள் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
மீண்டும் அவிநாசியப்பர் தரிசனம். இந்த முறை சுரேஷ் குமார் குருக்கள் அவர்கள் உடனிருந்து நல்ல தரிசனம் செய்வித்தார்.
அவிநாசியப்பரை பற்றி எழுதவேண்டும் என்றால் நாள் முழுதும் எழுதிக்கொண்டிருக்கலாம். எனவே தான் அவிநாசி அற்புதங்கள் என்கிற தொடரையே துவக்கினோம். தொடரின் மற்ற பாகங்கள் விரைவில் அளித்து இறுதி செய்யப்படும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய திருமுறை பாடல்களின் மகிமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாலை வசதிகள் எல்லாம் இல்லாத காலகட்டங்களில் தமிழகம் முழுதும் இவர்கள் கால்நடையாகவே பயணம் செய்து, பல திருத்தலங்களை தரிசித்து, நமக்கு ‘திருமுறை’ என்னும் இந்த அரிய பொக்கிஷத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இவர்கள் பதிகம் பாடி புரியாத அதிசயமே இல்லை எனலாம். இந்த பதிவில் சுந்தரர் புரிந்த அதிசயம் ஒன்றை பார்ப்போம்.
விதியையே புரட்டிப் போட்ட இந்த நிகழ்வை படித்த பின்னர் நிச்சயம் மெய்சிலிர்த்துப் போவீர்கள். எப்பேற்ப்பட்ட ஒரு வழிகாட்டிகளை நாம் பெற்றிருக்கிறோம்!! அவர்களது அருமையையும் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள திருமுறைகளின் பெருமையையும் மகத்துவத்தையும் நாம் உணர்ந்திருக்கிறோமா என்று தோன்றும்.
========================================================
பேரன்பு கொண்ட வாசகர்களே, ஒவ்வொரு பதிவிலும் தளத்திற்கு நிதி வேண்டி பதிவின் இறுதியில் நமது தளத்தின் வங்கி கணக்கு விபரங்களை அளித்து நாம் விடுக்கும் கோரிக்கையை கண்டு யாரும் எரிச்சலுற வேண்டாம். ஒரு நாளைக்கு சுமார் 3000 பேர் வரை (சில நாட்களில் 5000) பார்க்கும் இந்த தளத்திற்கு புதிதாக வரும் வாசகர்கள் ஓரிருவராவது உதவ முன்வரமாட்டார்களா என்கிற ஒரு ஏக்கமே காரணம். இதைத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். இந்த தளத்தை தாயின் கருவறை போல தூய்மையாக நாம் நடத்திவருவதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது? அவினாசியப்பன் அறிவான்!
========================================================
Related posts…
சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!
பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!
========================================================
முதலை வாயில் புகுந்த பிள்ளை மீண்டது எப்படி?
திருப்புக்கொளியூரவிநாசியில் அந்தணர்கள் வாழும் அக்கிரகாரத்தில் கங்காதரன் என்னும் ஒரு அந்தணன் பிள்ளைப்பேறு இல்லாமல் வருத்தி அவிநாசிக் கொழுந்தின் வலப்பால் எழுந்தருளிய ஸ்ரீ கருணாலயச் செல்வியை வழிபட்டு ஆறு வருட காலம் தவம் இருந்தார். அம்மையின் திருவருளால் கங்காதர ஐயரின் மனைவி வயிற்றில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்குப் பெற்றோர்கள் அவநாசிலிங்கம் என்ற பெயரிட்டு அன்னப் பிராசனம், சௌளம் முதலியன செய்தனர். நான்கு வயது கடந்து ஐந்தாவது வயது ஆரம்பித்தது . ஒரு நாள் காலையில் எதிர்வீட்டு அந்தணச் சிறுவன் ஒருவன் வந்து அவிநாசிலிங்கத்தை விளையாட அழைக்க, இருவரும் விளையாடிக் கொண்டு தாமரைக் குளத்திற்குக் குளிக்கச் சென்று நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அக்குளத்தில் வசித்துக் கொண்டிருந்த ஒரு முதலை விரைந்து வந்து அவிநாசிலிங்கம் என்ற அந்தணச் சிறுவனைப் பிடித்து விழுங்கிச் சென்றது.
உடன் விளையாடிய அந்தணச் சிறுவன் பயந்து கரையேறி வீட்டிற்கு ஒடி வந்து பிள்ளையைக் காணாது வருந்தும் பெற்றோர்கட்கு குளத்தில் நிகழ்ந்ததை அறிவித்தான். பிள்ளையை இழந்த பெற்றோர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. அழுது அரற்றினார்கள். குளக்கரைக்கு ஓடி வந்து பார்த்தனர். முதலை பிள்ளையை விழுங்கியிருந்தது. மூன்று ஆண்டுகள் கழிந்தன. கங்காதர ஐயரின் மகனுடன் தாமரைக்குளம் சென்ற பையனுக்கு ஏழு வயது ஆயிற்று. அவனது பெற்றோர்கள் அவனுக்குப் பூணூல் அணியும் விழா கொண்டாடுகிறார்கள். அதனைக் கண்ட இறந்த சிறுவனின் பெற்றோர் மிக வருந்திப் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
அச்சமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புக்கொளியூரை அடைந்து அந்தணர்கள் வாழும் வீதி வழியாகச் செல்லும்போது, ஒன்றுக்கொன்று எதிராய் அமைந்த இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மங்கல ஒலியையும் மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டார்.
அங்குள்ள வேதியர்களை நோக்கி, “ஒரே வீதியில் இந்த இரண்டு ஒலியும் நிகழுதற்கு என்ன காரணம்?” என்று வினவினார்.
அப்போது அவர்கள் சுந்தரரை வணங்கி, “மூன்று ஆண்டுகளுக்கு முன்னே இந்த இரண்டு வீட்டுப் புதல்வர்கள் இருவரும் இங்குள்ள தாமரைக் குளத்தில் சென்று குளிக்கும் போது ஒருவனை முதலை பிடித்து விழுங்கியது. பிழைத்தவன் வீட்டில் உபநயனம் நடைபெறும் ஒலி இது. எதிர் வீட்டிலோ இறந்த புதல்வனின் பெற்றோர்கள் கதறும் ஒலி அது’ என்று கூறினர்.
அத்தன்மையினைக் கேட்டுத் திருவுளம் இரங்கி நின்ற சுந்தரரை, மகனை இழந்து வருந்திக் கொண்டிருக்கும் தாயும் தந்தையும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வந்த செய்தியைக் கேட்டு ஒடி வந்து முகமலர்ச்சியுடனே அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள்.
சுந்தரர் அவர்களை நோக்கி, ‘இன்ப மகனை இழந்தவர்கள் நீங்களா?’ என்று வினவினார். அவர்கள் மீண்டும் அவரை வணங்கி, ‘ஆம். அது முன்னே நேர்ந்து கழிந்தது; அது நிற்க, அடியேங்கள் நீண்ட காலமாகத் தங்கள் புகழைக் கேட்டுத் தங்களைத் தரிசிக்க விரும்பி இருந்தோம்; இறைவன் திருவருளால் தேவரீர் இங்கு எழுந்தருளும் பேறுபெற்றோம்’ என்று கூறினார்கள். அவர்களுடைய அன்பில் பிணிப்புண்ட சுந்தரர், மகனை இழந்த துன்பத்தையும் மறந்து நாம் வந்ததற்கு இவர்கள், மனம் மகிழ்கின்றார்கள்; ஆதலால், இவர்கள் புதல்வனை அம்முதலை வாயினின்று அழைத்துக் கொடுத்த பின்னரே அவிநாசியப்பர் திருவடிகளைச் சென்று பணிவேன் என்று கூறி முதலைவாய்ப் பிள்ளையை விழுங்கிய குளம் எங்கே உள்ளது? என்று கேட்டு அறிந்து குளக்கரையை அடைந்தார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாமரைக் குளக் கரையில் நின்று கொண்டு, மனத்தை சிவபெருமானிடம் நிறுத்தி தம் திருக்கரத்தில் தாளம் ஏந்தி, முதலை முன்னே விழுங்கிய சிறுவனை மீளக் கொண்டு வரும் பொருட்டுத் தம் திருவாயால் ‘எற்றான் மறக்கேன்’ என்று தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தைப் பாட ஆரம்பித்தார்;
அதில் ,
உரைப்பார் உரையுகந்து உள்கவல் லார்தங்கள் உச்சியாய்!
அரைக்கா டரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே!
காரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
என வரும் நான்காவது திருப்பாட்டு முடியுமுன்னே வறண்டு கிடந்த தாமரைக் குளத்திலே மழை பெய்து நீர் மிகவும் நிரம்பித் தாமரைகள் மலர, முதலையானது கரையை நெருங்கிவர, உருத்திரன் தாதுவை உண்டு பண்ண, பிரம்மன் உருவத்தை உண்டாக்க, யமன் உயிரைக் கொடுக்க, திருமால் உடலை வளரும்படி செய்ய, முதலை புதல்வனைக் கரையில் மூன்று ஆண்டுகளின் வளர்ச்சியும் உடையதாக உமிழ்ந்து உடனே மறைந்தது. அதனைக் கண்ட தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். மக்கள் அதுகண்டு அதிசயித்தனர்.
அப்பொழுது அன்புகொண்டு மனம் உருகிய தாய் ஓடிச்சென்று அப்புதல்வனை வாரியெடுத்துக்கொண்டு வந்து தன் கணவனுடன் சுந்தரர் திருவடியில் வீழ்ந்து வணங்கினாள். சுந்தரர் அப்புதல்வனையும் அழைத்துக் கொண்டு ஆலயம் சென்று அவிநாசியப்பரையும் கருணாலயச் செல்வியையும் வணங்கித் திருப்பதிகம் பாடி முடித்து வெளியே வந்து, முதலையுண்டு வெளிவந்த புதல்வனுக்கு மங்கல முரசு ஒலிக்க தாமே முன்னின்று உபநயனம் நடத்திவைத்தார். அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் ‘முதலைவாய்ப் பிள்ளை உற்சவம்’ நடைபெறுகிறது. அனைவரும் காணவேண்டிய ஒன்று.
அதன் பின்னர் மலைநாட்டிற்குப் புறப்பட்டுத் துடியலூர், திருப்பேரூர் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு கொடுங்கோளூரை அடைந்தார்.
அவிநாசியில் முதலை விழுங்கிய பாலனை முன்போல உயிர்பெற்று வர மீட்டுக்கொடுத்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருகின்றார் என்ற செய்தியைக்கேட்டு சேரமான் பெருமான் சுந்தரரை எதிர்கொண்டு அழைத்து வணங்கி அன்போடு தழுவித் பல வாத்தியங்கள் முழங்க அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பல நாட்கள் இருந்த பின் ஒருநாள் திருவஞ்சைக்களம் சென்று இறைவனைத் துதித்துப் பாட, அப்போது கயிலைப் பெருமான், தம் கணங்களை நோக்கி, ‘நம் ஏவலுக்குச் சுந்தரனைக் கொணர்க’ என்று அருளி, அயிராவதம் என்ற வெள்ளை யானையையும் தேவர்களையும் அனுப்ப, அவர்கள் திருவஞ்சைக்களம் வந்து சுந்தரரைக் கண்டு இறைவன் அருளிப்பாட்டை அறிவித்து வெள்ளையானையின் மீது ஏற்றித் தேவவாத்திய ஒலியுடன் கயிலைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனை அறிந்த சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலை சென்று அடைந்தார். பரவையாரும் சங்கிலியாரும் கயிலை சென்று அம்மையாரின் பணிவிடைகளைச் செய்து கொண்டு வந்தனர். சேரமான் சிவகணங்களுள் ஒருவராய் அமர்ந்தார். சுந்தரர் தம் முன்னைய திருத்தொண்டுகளைச் செய்து கொண்டிருந்தார்.
திருப்புக்கொளியூர் அவினாசி பதிகம்
– சுந்தரமூர்த்தி நாயனார்
1. எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.
2. வழிபோவார் தம்மோடும் வந்து உடன் கூடிய மாணி நீ
ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே
பொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
இழியாக் குளித்த மாணி என்னைக் கிறி செய்ததே.
3. எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பார் இலை
பொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
எம் கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.
4. உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
5. அரங்கு ஆவது எல்லாமாய் இடுகாடு அது அன்றியும்
சரம் கோலை வாங்கி வரிசிலை நாணியில் சந்தித்துப்
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்ட குழைக் காதனே.
6. நாத்தானும் உனைப் பாடல் அன்றி நவிலாது எனாச்
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்
பூத் தாழ்சடையாய் புக்கொளியூர் அவிநாசியே
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே.
7. மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறும் சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
8. பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே
காணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே.
9. நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே.
10. நீர் ஏற ஏறு நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போர் ஏறு அது ஏறியைப் புக்கொளியூர் அவிநாசியைக்
கார் ஏறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே.
To download the above padhigam as pdf please click the following link:
http://rightmantra.com/wp-content/uploads/2016/08/Thiruppukkoliyur-Avinasi-Padhigam.pdf
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
For more information click here!
========================================================
Also Check :
காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3
பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2
காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1
மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!
========================================================
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
========================================================
[END]
டியர் சுந்தர்ஜி வணக்கம் .
தங்களின் ஒவ்வரு பதிவும் விளக்கத்துடன் பூமாலை போல் தொடுப்பது போல் மிக அழகாக கொடுத்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறோம் . அவிநாசி பதிகத்தின் முதல் பாடல் மட்டும் தெரிந்தநிலையில் மற்றுமுள்ள பாடல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி .
அவிநாசியப்பரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் .
தங்கள் தளத்தை காணும் பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகளே .
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்