வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்?
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்!
இந்த புண்ணிய பூமியில் 81 வயதுக்கும் மேல் எத்தனையோ பேர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை சரித்திரம் நினைவில் வைத்துள்ளது. காரணம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதையே வரலாறு பதிவு செய்யும். இதை உணர்ந்த வங்கத்து இளம்சிங்கம் ஒன்று ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் துணிச்சலுடன் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பதற்றத்தில் பரிதவிக்கவிட்டது அதுதான் இளம் சிங்கம் குதிராம் போஸ். இன்று அவரது நினைவு நாள். (டிசம்பர் 3, 1889 – ஆகஸ்ட் 11 ,1908)
அவர் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் துணிச்சலுடன் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பதற்றத்தில் தள்ளியவர்.
இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர் குதிராம் போஸ்.
அவரைப் போன்ற லட்சக்கணக்கான வீரர்களின் தியாகத்தால்தான் இன்று இந்தியாவில் சுதந்திரக் காற்று சுழன்று வீசுகிறது.
வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹபிப்பூர் என்ற சிறு கிராமத்தில் திரிலோகநாத் – லட்சுமிபிரியதேவி தம்பதியினருக்கு மகனாக 1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பிறந்தார்.
சிறுவயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம் 1902ல் அப்போதைய வங்க சுதந்திரப் போராட்ட வீரர்ரகளின் குருவாக விளங்கிய அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.
சிறு வயதிலேயே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்ற குதிராம் போஸ் ஆங்கிலேயே ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார்.
குதிராம் போஸின் அப்பா திரிலோகநாத் பாசு. அம்மா லக்சுமிபிரியா தேவி. பதினோரு வயதிலேயே விடுதலை வேட்கை ஏற்பட்டது அவருக்கு. மக்கள் கூடுமிடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்பதே குதிராம் போஸின் வேலை. அந்தத் துண்டுப் பிரசுரங்களில் ஆங்கில அரசின் அத்துமீறல்களும் அட்டூழியங்களும் விவரிக்கப்பட்டு இருக்கும். தேசம் விடுதலையடைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கும்.
ஒருமுறை கண்காட்சி ஒன்று நடந்துகொண்டிருந்தபோது வழக்கம் போல் போஸ் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தார். ஆங்கில அரசின் காவலர் ஒருவர் அவரைப் பிடிக்க யத்தனித்தார். ஆனால் விநாடிக்குள் அவரிடமிருந்து தப்பித்துவிட்டார் போஸ். அதுமட்டுமல்ல, ‘தைரியமிருந்தால் வாரண்ட் இல்லாமல் என்னைக் கைதுசெய்து பாருங்கள்’ எனத் துணிச்சலுடன் சவால்விட்டுச் சென்றார்.
வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்து. குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். வங்கத்தில் இயங்கி வந்த யுகாந்தர் என்ற புரட்சிக்குழுவில் இணைந்து செயல்பட்டார். பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் ஆங்கிலேயே அதிகாரிகளைத் தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது. அதன்படி வங்கத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச குதிராம் போஸும் அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூர் ஐரோப்பிய கிளப்பிற்குச் சென்றனர். (1908, ஏப்ரல் 30)
கிங்ஸ்போர்ட் இந்திய விடுதலை வீரர்கள் மீது கடுமையான தீர்ப்புக்களும் அடக்குமுறைகளும் விதித்துவந்தமையால் அவரை கொலை செய்வதென தீர்மானிக்கப்பட்டது. இதையத்த்து குதிராம் போஸ் தனது பெயரை ஹரேன் சர்க்கார் என்று மாற்றிக்கொண்டு தர்மசாலாவில் தங்கி கிங்ஸ்போர்ட்டின் அன்றாட நடவடிக்கைகள், அவர் வெளியே செல்லும் நேரம், கோர்ட்டுக்கு வரும் நேரம் என அனைத்தையும் கவனித்து வந்தார்.
அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடி குண்டுகளை வீசினர். ஆனால் அதில் கிங்ஸ்போர்ட் வரவில்லை. அந்த வாகனத்தில் வழக்கறிஞர் பிராங்கிள் கென்னடி என்பவரின் மனைவியும், மகளும் இருந்தனர். அவர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதை அறிந்து ஏகத்துக்கும் வருந்தினார் குதிராம் போஸ். அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை எனும் கொள்கை கொண்டவர்கள் அவர்கள்.
இந்த கொலையையடுத்து முசாபர்பூர் நகரில் எங்கும் பீதியும் பரபரப்பும் நிலவியது. போலீசார் குதிராமின் தலைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு நிர்ணயித்தனர்.
40 கி.மீ. நடந்த குதிராம்
ரயில் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு ஏறும் இறங்கும் பயணிகள் கண்காணிக்கப்பட்டனர். எப்படியும் குதிராமை பிடித்துவிடவேண்டும் என்று போலீசார் மும்முரமாயிருந்தனர். இதை யூகித்த குதிராம் ரயிலில் செல்லாமல் ரயில்பாதையையொட்டிய சாலை வழியாக காடு, மேடெலாம் கடந்து ஒரு இரவு முழுவதும் நடந்தே சென்றார். 25 மைல் தூரம் (கிட்டத்தட்ட 40 கி.மீ.) இவ்வாறு பசி வயிற்றிலும் உறக்கம் துறந்தும் நடந்தே சென்ற குதிராம் ‘வைனி’ என்னும் ஊருக்கு வரும்போது மேற்கொண்டு நடக்க தெம்பு இல்லாதவராக, அந்த ஊரில் இருந்த ஒரு சாலையோர டீக்கடையில் குடிக்க தண்ணீர் கேட்டபோது, அப்போது அங்கே இருந்த இரண்டு போலீசார் குதிராமின் மண் படிந்த கால்களை (நீண்ட தூரம் நடந்து வந்தமையால்) பார்த்து சந்தேகமடைந்தனர். மேலும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி அவர் மிகவும் சோர்வுற்றிருந்தது அவர்கள் சந்தேகத்தை வலுப்படுத்தியது. அவரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன தகவல் எதுவும் திருப்தியளிக்காததால் அவரை காலவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரிக்க தீர்மானித்தனர்.
(குதிராம் பிடிபட்ட அந்த ரயில்நிலையம் தற்போது அவரது நினைவாக ‘குதிரம்போஸ் பூஸா ரோட்’ என்று அழைக்கப்படுகிறது.)
போலீசாரிடம் சிக்கிக்கொண்ட குதிராம்
போலீசார் அவரது கரங்களை பற்றி இழுத்துச் செல்ல முயற்சித்தபோது அந்த போராட்டத்தில் குதிராம் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த ரிவால்வர்களில் ஒன்று கீழே விழுந்துவிட்டது. இன்னொரு ரிவால்வரை எடுத்து போலீஸாரை சுட அவர் முயற்சிக்கும் முன், ஒரு காவலர் குதிராமின் பின்னால் சென்று அப்படியே கரடிப் பிடி பிடித்துக்கொண்டார். வயதில் சிறிய அவரால் காட்டுத்தனமாக வளர்ந்திருந்த அந்த காவலர்களுக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை. ஏற்கனவே பசி மயக்கத்திலும் நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பிலும் வேறு இருந்தபடியால் அவர்களின் பிடியில் இறந்து குதிராமால் தப்பிக்க இயலவில்லை. அவரை சோதனையிட்டு அவரிடமிருந்து 37 குண்டுகளும், முப்பது ரூபாயும், ரயில்வே மேப்பும், ரயில் டைம்-டேபிளும் கைப்பற்றப்பட்டன. போலீசார் தேடும் குதிராம் இவர் தான் என்று அறிந்துகொண்டனர்.
குதிராமை மேஜிஸ்திரேட்டிடன் ஆஜர்ப்படுத்த ரயிலில் அழைத்துச் சென்றபோது ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று முழங்கியபடி தான் சென்றார்.

முழுபழியையும் தானே ஏற்ற தீரம்
அடுத்த சில நாட்களில் சமஸ்திப்பூரில் காவலர்களிடம் சிக்கிய பிரபுல்ல சாஹி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது குதிராமுக்கு தெரியாது. தனது சகாவும் இயக்கத்தினரையும் காப்பாற்ற வேண்டி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் குற்றத்தை தான் மட்டுமே செய்ததாக கூறி முழு பழியையும் தானே ஏற்றுக்கொண்டார்.
விடுதலை வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கி வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்ட்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும் அதில் அவர் தப்பியதும் கென்னடியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்தது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். இதன் காரணமாக குதிராமுக்கு தூக்குத் தண்டனை விதித்தார் நீதிபதி. இதை அறிந்த குதிராம் போசு சிரிக்க “ஏன் சிரிக்கிறாய்? நான் சொன்னது புரிந்ததா?”என நீதிபதி கேட்க, “நன்றாக புரிந்தது” என சொல்ல, “இங்கு இருப்பவர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா?” என நீதிபதி கேட்க, “வேண்டுமானால் உங்களுக்கு எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என சொல்லித்தருகிறேன்” என்றார் குதிராம் போஸ்.
அப்போதைய சட்டநடைமுறைப்படி, குதிராமுக்கு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய ஏழு நாட்கள் அவகாசம் இருந்தது. அப்பீல் செய்தால் அவர் விடுவிக்கப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக குதிராமின் வழக்கறிஞர்கள் கருதியதால் அவரை அப்பீல் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் குதிராம் மறுத்துவிட்டார். நீங்கள் உயிருடன் இருந்தால் இந்நாட்டுக்கு இன்னும் சேவைகள் செய்யமுடியுமே என்று எடுத்துக்கூறி அவரை அரைமனதாக சம்மதிக்க வைத்தனர்.
வங்கம் முழுதும் விடுதலை போரை கொழுந்து விட்டெரியச் செய்தமையால் பிரிட்டிஷார் குதிராமை உயிருடன் விட்டுவைக்க மிகவும் பயந்தனர். குதிராமின் வழக்கறிஞர்கள் எவ்வளவோ திறமையாக வாதாடியும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு தீர்ப்பை ஆங்கிலேயே நீதிபதிகள வாசித்து குதிராமுக்கு மரண தண்டனை விதித்தனர்.
1908 ஆகஸ்ட் 11 ஆம் தேதி குதிராம் போஸுக்கு முசாபர்பூர் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கையில் பகவத் கீதையுடன் “வந்தே மாதரம்” என்கிற கோஷத்துடனும் குதிராம் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு 18 வயது.
அவரது இறுதி ஊர்வலம் கல்கத்தா நகரின் வழியே செல்லும்போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அதில் கலந்துகொண்டு ‘வந்தே மாதரம்’ என்கிற கோஷம் எழுப்பியபடி சென்றனர். பெண்கள் அவர் உடல் மீது பூக்களை வாரி இறைத்தார்கள். அவர் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் அவரின் அஸ்தியை பெண்கள் கொண்டு சென்று தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து கொடுத்தார்கள். தேசபக்தி தங்கள் பிள்ளைகளின் ரத்தத்தில் பாயவேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்களாம்!
* குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டப் போது அவரின் சித்தி கருவுற்று இருந்தார். அப்போது தேசத்திற்காகத் உயிரை தந்த உத்தமன் இப்படி ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டுப்போனார்.
“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்…
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பையிரை?
கண்ணீராற் காத்தோம்…!
==========================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்….
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
21 ஆண்டுகள் காத்திருந்து ‘காரியத்தை’ முடித்த ஒரு கர்மயோகி!
நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ
அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!
இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!
மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?
சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?
வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!
தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!
“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?
கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???
உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!
ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!
==========================================================
[END]
அந்த கவிதை என் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது ஜி!
இந்த தொடர் முழுவதையும் நம் பள்ளி மாணவர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும்.
அப்போதுதான் இந்த கால மாணவர்கள் நடிகர்களின் கட்-அவுட் களுக்கு பாலபிஷேகம் செய்வதை விடுத்து நிஜ உலகில் வாழ்வர்.
மேலும், சுதந்திர தினத்திற்கு ஒரு சில நாட்கள் உள்ள நிலையில் இந்த பதிவு அளித்ததிற்கு பாராட்டுக்கள்!
அன்பன்,
நாகராஜன் ஏகாம்பரம்
டியர் சுந்தர்ஜி , வணக்கம் .
ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த நம் இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் செய்த தவப்பயனால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது . பல காலமாக நம்மிடம் தேச பற்று குறைந்து வருகிறது என்பது உண்மை தான் . இயந்திரமயமாகிவிட்ட மக்கள் நாம் வருந்தி பெற்ற சுதந்திரத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .உங்கள் பதிவுகளை படிக்கும் போது பல உண்மைகளை அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .
ஆன்மீக பக்தியை போன்று தேச பக்தியை வளர்க்க ஒவ்வருவரும் முன் வரவேண்டும் .
மிக சிறந்த பதிவு . வாழ்த்துக்கள்
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்
இத்தகைய வீரர்களின் தியாகத்தால் தான் இன்றும் நம் நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமை ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்தது. ஆனால் இன்று சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கட்டௌட் வைக்கும் நிலைக்கு இளைஞர்கள் செல்வது தான் வேதனை அழிக்கின்றது.