ஆனால் அவரிடம் அந்த நேரம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு பத்திரிக்கையின் ஆசிரியருமான வரதராஜுலு நாயுடு என்பவர் தண்டபாணி பிள்ளையிடம் ரூ.20,000/- கடன் பெற்றிருந்தார். அவரிடமிருந்து பணத்தை திரும்ப வாங்கி, வ.உ.சி.க்கு தர எண்ணினார். ஆனால், வரதராஜுலு நாயுடுவோ பணத்தை தராமல் சாக்கு போக்கு சொல்லி வந்தார்.
பொறுத்து பொறுத்து பார்த்த தண்டபாணி பிள்ளை, இவரிடம் பணத்தை எப்படி வாங்குவதென்று எனக்கு தெரியும் என்று கூறி, வரதராஜுலு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக வ.உ.சி.யிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்டு சிதம்பரம் பதறிப்போனார். “அது மட்டும் வேண்டாம். நாயுடு சிறந்த தேசபக்தர். அவர் நடத்தி வந்த தமிழ்நாடு பத்திரிகை வேறு நஷ்டமடைந்துவிட்டது. இந்நிலையில், என் பொருட்டு அவரை கஷ்டப்படுத்தவேண்டாம். சற்று பொறுமையாக இருப்போம்.” என்றார்.
அடுத்தவன் எக்கேடு கேட்டா எனக்கென்ன எனக்கு வரவேண்டியது வந்தா போதும் என்ற எண்ணம் கொண்ட இந்த உலகில் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த மாமனிதர் திரு.வ.உ.சி.
1908 ஆம் ஆண்டு இந்திய தேசிய விடுதலை உணர்வை தூண்டியமைக்காக தேச துரோக குற்றம் சுமத்தப்பட்ட சிதம்பரனாருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மத்திய சிறையிலும் கண்ணூர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
தேச விடுதலைக்காக் சிறை சென்ற சிதம்பரனார் கொலை, கொள்ளை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சமூக விரோதிகளுடன் சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் சிதம்பரனார், சிவா போன்றோர் மிகவும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டனர்.
சிதம்பரனாரின் கால்களில் பெரும் இரும்பு சங்கிலி பூட்டப்பட்டது. தலை மொட்டையடிக்கப்பட்டது. அவரது விடுதலையை குறிக்கும் பட்டயம் கழுத்தில் தொங்கவிடப்பட்டது. இத்துடன் அவர் செக்கிழுத்தார். கப்பலோட்டிய தமிழன் சிறையில் கல் உடைத்தான்.
செக்கை இழுக்கும்போது, குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக எண்ணை வந்தால், மீண்டும் பிண்ணாக்கை செக்கில் இட்டு ஆட்டச்சொல்வார்களாம். சரியான அளவு கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் செக்கிழுப்பாராம் வ.உ.சி.
ஆனால், செக்கிழுக்கும்போது செக்கை இழுப்பதாக நினைக்கமாட்டாராம். சுதந்திர தேவியின் திருக்கோவிலை சுற்றி, தேர் இழுத்து வடம் பிடிப்பது போல எண்ணிக்கொள்வாராம். அவர் விடுதலையாகும் போது சிறை செல்லும்போது இருந்த எடையைவிட நான்கு மடங்கு எடை குறைந்துவிட்டாராம்.
ஆனால், செக்கிழுகும்போது செக்கை இழுப்பதாக நினைக்கமாட்டாராம். சுதந்திர தேவியின் திருக்கோவிலை சுற்றி, தேர் இழுத்து வடம் பிடிப்பது போல எண்ணிக்கொள்வாராம்.
‘ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை’ என்னும் கூற்றைப் போல, அவர் சிறையில் இருந்த காலம் அவரது சுதேசிக் கம்பெனி நொடித்துப் போனது. அதன் நிர்வாகிகள் வெள்ளையருக்கு விலை போனதை தொடர்ந்து சிதம்பரனாரது கப்பல்கள் வெள்ளையர்களுக்கு அடிமாட்டு விலையில் விற்கப்பட்டது.
1912 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான சிதம்பரனாரை வரவேற்க, மூவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவர் சிதம்பரனாரின் மனைவி. மற்றொருவர் கணபதி ஐயா பிள்ளை. மற்றொருவரை சிதம்பரனாருக்கு அடையாளம் தெரியவில்லை.
இங்கே ஒரு சிறிய விளக்கம். மகாகவி பாரதி கூட வ.உ.சி.யை வரவேற்க வரவில்லையா? என்று கேட்கலாம்.
வ.உ.சி. அவர்களால் அன்புடன் ‘மாமா’ என்றழைக்கப்பட்ட மகாகவி பாரதி, வ.உ.சி.யின் விடுதலை சமயம் புதுவையிலிருந்தார். 1908 ஆம் ஆண்டு இந்தியா பத்திரிகையில் அரசுக்கெதிரான செய்திகளை வெளியிட்டதற்காகவும் அயர்லாந்து நாட்டு விடுதலை இயக்கத்தின் புரட்சி ஏடான ‘காயலிக் அமெரிக்கன்’ என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை இரகசியமாக வரவழைத்ததற்காகவும் பாரதியைக் கைது செய்ய முடிவு செய்தது ஆங்கில அரசு. இந்நிலையில் பாரதியின் நண்பர்கள், பாரதி அரசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக அவரைப் புதுவைக்கு அனுப்ப எண்ணினர். (புதுவை அப்போது பிரெஞ்சு வசம் இருந்தது) பாரதி தொடக்கத்தில் உடன்படவில்லை. நண்பர்களின் வற்புறுத்தலும், கோவைச் சிறையிலிருந்து வ.உ.சி. பாரதியைப் புதுவைக்குச் செல்லுமாறு அனுப்பிய செய்தியும் பாரதியைப் புதுவைக்கு அனுப்பி வைத்தன. 1908ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் பாரதியார் புதுவையை அடைந்தார். பாரதியார் புதுவையில் பத்தாண்டுகள் வாழ்ந்தார். எனவே பாரதியால் தமது நண்பரை வரவேற்க வரமுடியவில்லை.
தமது நண்பருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டு பொங்கியெழுந்த பாரதி, இந்த நிகழ்வுகளை தமது கவித் திறத்தால் பதிவு செய்தார். உலகத்தில் வேறு எந்த வரலாற்றிலும், ஒரு தலைவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மற்றொரு தலைவன் உணர்ச்சி பொங்க கவிதைகள் பாடியதில்லை. பாரதி, வ.உ.சி. இருவருக்குமே உள்ள சிறப்பு இது.
இதன் காரணமாகவே வ.உ.சி.யின் வாழ்வில் பாரதி அசைக்க முடியாத இடம் பெற்று விட்டார்.
வ.உ.சி.க்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்த பாரதி, மக்கள் சார்பாக வாழ்த்துவதாக கூறினார். தமது கவிதைகள் மூலம், வ.உ.சி.யை நாடு முழுதும் கூட்டிச் சென்றார். வ.உ.சி. விரைவில் சிறையிலிருந்து மீண்டு வருவார் என உறுதி கூறினார்.
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ,
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி!வாழ்தி!
– பாரதி வ.உ.சி.க்கு எழுதிய வாழ்த்துப்பா.
இங்கே சிறையில் தம்மை வரவேற்க வந்த மூன்றாவது நபரை அடையாளம் தெரியாமல், அவரை நோக்கி நடந்தார் வ.உ.சி.
“பிள்ளைவாள், நான் யார் என்று தெரியவில்லையா?”
“எனக்கு மிகவும் பழக்கப்பட்ட குரல் போலத் தெரிகிறது. ஆனால் எனக்குத் தான் அடையாளம் தெரியவில்லை”
“பிள்ளைவாள்… வெள்ளையன் கொடுத்த பரிசால் உடலெல்லாம் தொழுநோய் தாக்குண்டு அடையாளம் தெரியாமல் போனேன். நான் தான் உங்கள் நண்பன் சுப்பிரமணியம் சிவா”
வ.உ.சி. கதறிக்கொண்டே அவரை ஓடிச் சென்று கட்டி அணைத்தார். “வேண்டாம் பிள்ளை… வேண்டாம்… என்னை அணைக்கவேண்டாம். என்னைப் பிடித்த நோய் உங்களையும் பிடித்துவிடும்” என்று விலக முற்பட்டார் சுப்பிரமணியம் சிவா. ஆனால், நாட்டுக்காக உழைத்து தொழுநோய் கண்ட அவரை புறந்தள்ளுவாரா நம் வ.உ.சி.? முன்னிலும் இறுக்கமாக அவரைத் தழுவிக்கொண்டார். இருவரது நட்பையும் கண்டு மற்ற இருவரும் கண்ணீர் வடித்தனர்.
– செப்டம்பர் 5. இன்று ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள்.
===========================================================
Also check :
வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!
===========================================================
[END]
வணக்கம் சுந்தர் சார்
TNPSCக்கு ரொம்ப USEFUL இருக்கு சார்
நன்றி
வ உ சி பற்றிய பதிவு படிக்கும் பொழுதே மனம் கலங்குகிறது வறுமை யிலும் செம்மையாக வாழ்ந்த உத்தமர். தாம் வாழும் காலத்தில் தமக்கென பணம் சேர்க்காமல் நாட்டுக்காக உழைத்த உத்தமர் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதில் நம் எல்லோருக்கும் பெருமை. வ உ சி அவர்கள் தனது நண்பரிடம் வைத்திருந்த நட்பை பார்க்கும் பொழுது நம் கண்களில் கண்ணீர் வருகிறது . இந்த இனிய நாளில் நாட்டுக்காக உழைத்து தனது இனிய உயிரை தியாகம் செய்த உத்தமரை வணங்குவோம்
ஜெய் ஹிந்த்
நன்றி
உமா
செக்கிழுத்த நம் சுதந்திர போராட்ட தியாகி திரு, வ.உ.சி . பிள்ளை அவர்களுக்கு வீர வணக்கம் செய்வோம்.
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.
sir
அருமையான தொகுப்பு நம் முன்னோர்கள் அரும்பாடுபட்டு வங்கிய சுதந்தரம் அதன் அருமை எல்லோரும் உணர்ந்து நாட்டு பற்று உள்ளவர்களாக வாழ வேண்டும்.
வணக்கம்……….
நம் நாட்டு விடுதலைக்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நம் நன்றிகள்………..வணக்கங்கள்…………அஞ்சலிகள்………
வங்கத்தில் கப்பல் விட்ட வழக்கறிஞர் வ உ சிதம்பரனாரின் சந்ததிகள் வறுமையில்……… நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்??????
எங்கள் ஊரில் இரு சகோதரர்களின் பெயர், சுப்ரமணிய சிவா மற்றும் இராமலிங்க சிவா…..சிறுவயதில் எனக்கு அப்பெயர்கள் வித்தியாசமாக இருந்தாலும் பின்னர் அவர்களின் பெயர்க்காரணம் அறிந்து வியந்தேன்…….
நாமும் நமது சந்ததிகளுக்கு விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை எடுத்துரைப்பதின் மூலம் அவர்களின் தியாகங்கள் மறந்து, மறைந்து விடாமல் காப்போம்……..
வாழ்க வளமுடன்
ஆன்மீகத்தை ஒரு கண்ணாகவும் , சுய முன்னேற்றத்தை மறு கண்ணாகவும் கருதும் நீங்கள் விடுதளை போரட்ட தியாகிகளை நெற்றி கண்ணாகவும் கருதி அவர்களின் தியாகத்தை இந்த தலைமுறை மாணவரும் அறியும் வண்ணம் கட்டுரை எழுதிய நீங்கள் ஒரு துருவ நட்சத்திரம் . நன்றி
வ.உ.சி. அய்யா வாழ்ந்த ஊரில்(தூத்துக்குடி) பிறந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
அன்பு நண்பர் சுந்தர்க்கு,
அருமையான பதிவுகள், அற்புதமான விளக்கங்கள், நான் பின்பற்றும் சாய்நாதன் உங்களுக்கு எல்லா அருளும் தர பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன்.
தூத்துக்குடி உங்கள் சொந்த ஊர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இதுவல்லவா பெருமை…! அடியேன் பிறந்த ஊர், பஞ்சபூத தலங்களுள் ஒன்றான திருவானைக்காவல். சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் எங்கள் ஊர்.
– சுந்தர்
வறுமையிலும் நேர்மை, கணிவு, மற்றவர்களின் துயரினை புரிந்த மனம், நாட்டுக்காக உழைத்தல் இத்தனை அருங்குணங்களையும் கொண்ட வ.ஊ. சி. அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் பாடம். அளித்தமைக்கு நன்றி.