Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

print
புதுவையை சேர்ந்த கஸ்டம்ஸ் அதிகாரி திரு.சந்திரமௌலிக்கு ராயர் மீது அலாதி பக்தி உண்டு. தனது வீட்டுக்கருகே இருக்கும் குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு அடிக்கடி தனது மகன் ஸ்ரீனிவாசனை அழைத்துக்கொண்டு செல்வார். அந்த பிருந்தாவனம் அங்கு தோன்றியது முதலே அவர் அங்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. புதுவை சங்கர வித்யாலாவில் +2 படித்து வந்த ஸ்ரீனிவாசன் படிப்பில் படுசுட்டி. எல்லாப் பாடங்களிலும் 90% மேல் எடுக்கும் நம்பர் ஒன் ஸ்டூடன்ட். ப்ளஸ்-டூ முடித்த பின்னர் அண்ணா பலகலைக்கழகத்திலோ அல்லது ஏதாவது ஒரு நல்ல கல்லூரியிலோ சேர்ந்து பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்கவேண்டும் என்பது அவன் கனவு. பெற்றோரின் விருப்பமும் அதே.

DSC06085

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம். சரியாக பொதுத் தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன், ஸ்ரீனிவாசன் உடலில் அசாதாரண மாற்றம். தீராத தலைவலி, கண்களுக்கு பின்னால் கடும் வலி, வாந்தி, கை மற்றும் கால் மூட்டுக்களில் வலி. என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. டாக்டரிடம் ஓடுகிறார்கள். ஸ்ரீனிவாசனை பரிசோதித்த டாக்டர், அப்படியொரு குண்டை தூக்கி வீசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீனிவாசனுக்கு வந்திருப்பது சிக்கன்குனியா. (சிக்கன்குனியா அப்போது வேகமாக பரவிவந்த நேரம்.​)

இரண்டு நாளில் +2 பொதுத் தேர்வு. எண்ணற்ற கனவுகளோடு தேர்வுக்கு ஆயதமாகிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாசனுக்கு உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது.

சந்திரமௌலி, டாக்டர் கைகளை பிடித்துக்கொண்டு கதறினார். “சார்… எங்களுக்கு ஒரே பையன் சார். என்னெனவோ கனவு கண்டோம். எப்படியாவது அவன் பிளஸ் டூ எக்ஸாம் எழுதி முடிச்சிட்டா போதும்… ஏதாவது பண்ணுங்க சார்….”

மருந்து மாத்திரைகள் கொடுத்த டாக்டர், “என்னால முடிஞ்சதை செய்றேன்…. ஆனா நோய் அதிகமாகுமா, பையன் பரீட்சை எழுதமுடியுமா முடியாதான்னெல்லாம் என்னால  சொல்லமுடியாது. நீங்கள் கடவுளைத் தான் பிரார்த்திக்கவேண்டும்” என்று கூறுகிறார்.

DSCN6384

உடனே மகனை அழைத்துக்கொண்டு குரும்பபேட் பிருந்தாவனம் ஓடுகிறார் சந்திரமௌலி.

“குருராஜா, ஒரே மகனை ஆசை ஆசையாக படிக்க வைத்து அவன் கனவு நனவாகும் நேரம், இப்படி ஆகிவிட்டதே… நீ தானப்பா அவனை காப்பாற்றவேண்டும்….” என்று கதறுகிறார்.

ஸ்ரீனிவாசனும் தன் பங்கிற்கு ராயரிடம் வேண்டிக்கொண்டான். “குருராஜா, நான் நல்லபடியாக பரீட்சை எழுதி, நல்ல மார்க்குகள் எடுத்து, நான் விரும்பியவாறே நல்ல கல்லூரியில் சேர்ந்து, படித்து முடித்து வேலைக்கு போகும்போது என் முதல் சம்பளம் உனக்கே அர்பணிக்கிறேன்” என்று வேண்டிக்கொள்கிறான்.

என்ன ஆச்சரியம், ஓரளவு நோயின் பாதிப்பு குறைந்தது. சிக்கன்குனியா இருந்தாலும் அவன் கைகளுக்கோ, கால்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பரீட்சையை எழுத முடிந்தது. ஒவ்வொரு பரீட்சையாக எழுத எழுத சிக்கன்குனியா போயே போய்விட்டது. பரீட்சை எழுதி முடித்தவுடன், நன்றிக்கடனாக ராயருக்கு அபிஷேகங்கள் நடத்தினார் சந்திரமௌலி.

ரிசல்ட்டுக்காக காத்திருந்த ஸ்ரீனிவாசன், சினிமா, கேளிக்கை அது இதென்று ஊர் சுற்றாமல் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று ராயரின் பிருந்தாவனத்தை 21 நாட்கள் தொடர்ந்து தினமும் 21 முறை பிரதட்சிணம் வந்தான்.

இதற்கிடையே +2 பரீட்சை முடிவுகள் வெளியானது. 1164/1200 மார்க்குகள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான் ஸ்ரீனிவாசன். பரீட்சையே எழுத முடியுமா என்று நினைத்த ஒரு மாணவன், பரீட்சை எழுதி, முதல் மாணவனாக வந்தது அந்த ராயரின் கருணையே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

மந்த்ராலயம் மூல பிருந்தாவனம் போன்றே காட்சியளிக்கும் குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவனம்
மந்த்ராலயம் மூல பிருந்தாவனம் போன்றே காட்சியளிக்கும் குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவனம்

அடுத்து மேற்படிப்பு. பி.இ.

ஸ்ரீனிவாசன் விரும்பியது போலவே, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் பிரிவில் சீட் கிடைத்தது. (அண்ணா பல்கலைக்கு அடுத்து மாணவர்கள் இங்கு தான் சேர விரும்புவார்கள். அந்தளவு பெயர் பெற்ற கல்லூரி.)

நான்காண்டுகள் பி.இ. படிப்பை இந்த ஆண்டு தான் நிறைவு செய்தார் ஸ்ரீனிவாசன். நல்ல மதிப்பெண்கள். சுத்தமான அகாடமிக் ரெக்கார்டு.

கல்லூரி வளாகத்தில் பல முன்னனி நிறுவனங்கள் சார்பில் காம்பஸ் இண்டர்வ்யூ நடைபெற்றது. முதல் இரண்டு அமர்வுகளில் இவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இவரது அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்டது. நண்பர்களுக்கெல்லாம் நல்ல நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட, இவர் மனு மட்டும் ஏற்கப்படவில்லை.

மீண்டும் பெற்றோரை பார்க்க புதுவை வந்த ஸ்ரீனிவாசன், நேரே குரும்பபேட் பிருந்தாவனம் செல்கிறார். “என்னை +2 தேர்வு எழுதவைத்து, நல்ல மதிப்பெண்களும் பெறவைத்து, நல்ல கல்லூரியில் இடமும் வாங்கிக் கொடுத்து, ஆனால் இப்போது வேலை மட்டும் தர மறுக்கிறாயே இது நியாயமா? எனக்கு கிடைக்கும் முதல் சம்பளம் கூட உனக்குத் தான் என்று சொல்லியிருக்கிறேனே….” என்று ராயரிடம் முறையிடுகிறார்.

DSC06152

திங்கட் கிழமை காலை மீண்டும் கல்லூரிக்கு செல்ல, அன்று நடைபெற்ற காம்பஸ் தேர்வில் செலக்டாகிவிடுகிறார். தற்போது ஸ்ரீனிவாசன், பெருங்குடியில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இஞ்சீனியராக பணியாற்றுகிறார்.

முன்னர் வேண்டிக்கொண்டபடி தனது முதல் மாத சம்பளத்தை, (ரூ.21,591/-) ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அப்படியே கொண்டு வந்து குரும்பபேட் பிருந்தாவனத்தில் உள்ள உண்டியலில் போட்டுவிடுகிறார். (பி.இ. படிச்சாலும் இப்போல்லாம் வேலை கிடைக்குங்கிறது எந்த நிச்சயமும் இல்லீங்க.)

DSCN6353கடந்த வாரம், நாம் புதுவை குரும்பபேட் பிருந்தாவனம் சென்றிருந்தபோது நமக்கு கிடைத்த தகவல் இது.

ஸ்ரீனிவாசன், தனது சம்பள பணத்தை வைத்து உண்டியலில் போட்ட கவரை நம்மிடம் காண்பித்தார்கள். வாங்கி கண்களில் அதை ஒத்திக்கொண்டோம்.

ஸ்ரீனிவாசனின் தந்தை திரு.சந்திரமௌலி அவர்களின் அலைபேசி எண் கிடைக்குமா என்று விசாரிக்க, அவர் எண் கிடைத்தது.

“சென்னைக்கு சென்றபிறகு, திரு.சந்திரமௌளியை தொடர்புகொண்டு, இது பற்றி பேசுகிறேன்” என்று கூறிவிட்டு விடைபெற்றோம்.

நேற்றிரவு திரு.சந்திரமௌலி அவர்களிடமும் அவர் மகன் ஸ்ரீனிவாசனிடமும் பேசியபோது கிடைத்த தகவல்கள் தான் மேலே நீங்கள் படித்த பதிவு.

திரு.சந்திரமௌலி அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டபோது, “ராகவேந்திரரும், மகா பெரியவாவும் எனக்கு இரண்டு கண்கள் போல… இருவர் மீதும் பேரன்பு செலுத்திவருகிறேன். என் தளத்தில் இருவரைப் பற்றியும் பல பதிவுகள் அளித்துள்ளேன். இருவரையும் பிரித்துப் பார்க்க எனக்கு தெரியாது!” என்றோம்.

“அட…என் சொந்த ஊர் விழுப்புரம் தாங்க. மகா பெரியவா பிறந்த வீடு இருக்குற தெருவுல தான் நாங்களும் குடியிருந்தோம்” என்றார் சந்திரமௌலி. (பேரைக் கேட்கும்போதே சந்தேகப்பட்டேன்!!!)

இது போதாதா நமக்கு…!

சந்திரமௌலி அவர்களிடம் பேசப் பேச மேலும் மேலும் பல தகவல்கள் கிடைத்தன.

அவர்கள் குடியிருந்தது விழுப்புரத்தில் மகாபெரியவா அவர்கள் பிறந்த வீடு அமைந்துள்ள கீழ் அனுமார் தெரு. (இப்போது சங்கர மடம் தெரு என்று அழைக்கப்படுகிறது.)

இவர்  கொள்ளுத் தாத்தா, கிருஷ்ணய்யர் மகா பெரியவா கந்தம்பாக்கத்தில் படித்தபோது அவருடன் ஒன்றாக படித்தவராம். மேலும் இவரது அம்மா பிறந்த போது, இவரது பாட்டி அப்போது விழுப்புரம் வந்திருந்த மகா பெரியவரிடம் கொண்டு போய் குழந்தையை பெயர் சூட்டுவதற்கு காட்ட, “திரிபுரசுந்தரின்னு பேர் வை” என்று ஆசீர்வதித்தாராம்.

Maha Swamigal padha yathra

விழுப்புரத்திலுள்ள இவர்கள் வீடு அந்தக் காலத்தில் சற்று பெரியது. விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. விஷேட நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அடிக்கடி அன்னதானம் நடக்குமாம். இவரது கொள்ளுத் தாத்தா, தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரின் முயற்சிகளால் ஷேத்ராடனம் வரும் பல பக்தர்கள் இவர்கள் வீட்டில் பசியாறியுள்ளனர்.

ஊருக்கு பெரிய மனிதர்கள், மடாதிபதிகள் யாராவது வந்தால், இவர் வீட்டில் தான் போய் தங்குவார்களாம். புழக்கடையில் கிணறு, காற்றோட்டமுள்ள விசாலமான அறைகள் என்று தாரளமாக இருக்கும். இவர் பாட்டி (திரிபுரசுந்தரி) நிறைமாதமாக இருக்கும்போது, ஒரு முறை சிருங்கேரி சாரதா பீடத்திலிருந்து அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகள் வர, இவர் தாய் எந்த நொடியும் பிரசவத்துக்கு தயாராக இருப்பதை கூறி, அழைக்க முடியாத சூழ்நிலையை குடும்பத்தினர் விளக்கினர் அப்போது அவர், “நிச்சயம் ஆண்  குழந்தை தான் பிறக்கும். குழந்தைக்கு சந்திரமௌலீஸ்வரன்னு பேர் வை!”  என்றாராம்.

அவரது தீர்க்கதரிசனத்தை போலவே, இவர் பிறக்க, இவருக்கு சந்திரமௌலி என்றே பெயர் சூட்டிவிட்டனர்.

தாம் சிறுவயதில் இருந்தபோது தம் தெருவில் உள்ள சங்கர மடத்துக்கு மகா பெரியவா அடிக்கடி வருவது வழக்கம் என்று அப்போது அவரை தமது தந்தையாருடன் சென்று பார்த்து பலமுறை தீர்த்தப் பிரசாதம் தாங்கி வாங்கி சாப்பிட்டிருப்பதாகவும் கூறி, பழைய நினைவுகளில் மூழ்கினார் சந்திரமௌலி.

மேலும் தமக்கு பெண் பார்த்தபோது, முதல்முறை தனது மனைவியின் ஜாதகத்தை பார்த்தபோது, மகா பெரியவா தான் தனக்கு நினைவுக்கு வந்தார் என்றும் அவரிடம் “இந்த பெண் மனைவியாக அமையவேண்டும். என் குடுமபத்துக்கு ஏற்றவாறு நல்ல பெண்ணாக இவர் இருக்கவேண்டும்” என்று மானசீகமாக பிரார்த்திதுக்கொண்டதாகவும், அதன்படியே தனக்கு மனைவி அமைந்தது மகா பெரியவா அவர்களின் ஆசி தான் என்றும் கூறினார் திரு.சந்திரமௌலி. இவர் மனைவி உமா மகேஸ்வரி, சென்னை புறநகரில் அரசு வங்கி ஒன்றில், மானேஜராக பணிபுரிகிறார்.

மேலும் ஒரு தகவலை சொன்னார் திரு.சந்திரமௌலி. ஸ்ரீனிவாசனுக்கு  வேலை கிடைத்தவுடன், ராயரிடம் வேண்டிக்கொண்டபடி தன் முதல் மாத சம்பளத்தை காணிக்கையாக செலுத்த இருவரும் பிருந்தாவனம் சென்றனர். பிருந்தாவன அலுவலகத்தில் ராயர் அருளால் மகனுக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொன்னவுடன் டிரஸ்டி திரு.தேவராஜ் அவர்கள், மந்த்ராலயத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ராகவேந்திரர் தாமிர விக்ரகம் (நமக்கு அளித்ததைப் போல) ஒன்றை பரிசளித்தார். அதை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டில், ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ரஜினி நடித்த ராகவேந்திரர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததாம்.

யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் ய: படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ந ஹி பவேத் தஸ்யா ஸுகம் கிஞ்சன |
கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாத ப்ரஸாதோதயாத்
கீர்த்தி: திக்விதிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி

பொருள் : இந்த ராகவேந்திரர் ஸ்தோத்திரத்தை அனுதினமும் பக்தி சிரத்தையுடன் எவன் சொல்கிறானோ அவனது எண்ணங்கள் யாவும் ஈடேறி சகல சௌபாக்கியத்துடனும் வாழ்வான்… இதற்கு சாட்சி…. பிருந்தாவனத்தின் மீது எழுந்தருளியிருக்கும் சாட்சாத் ஹயக்ரீவரே!

================================================================

இறையருளும் சேவிங்க்ஸ் அக்கவுண்ட்டும்!

இறையருள் என்பது இன்ஸ்டன்ட் லோன் அல்ல. கேட்டவுடன் பெறுவதற்கு. அது ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட்.

சேமிப்பு கணக்கில் மட்டுமே நாம் சேர்க்கும் பணத்தை  நமது தேவைக்கு, நமது அவசரத்திற்கு எடுத்து செலவு செய்ய முடியும்.  அதுப் போலத் தான் இறைவழிபாடும். நேரமிருக்கும்போதெல்லாம், கோவிலுக்கு சென்று நமது கணக்கில் புண்ணியத்தை  சேர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் இக்கட்டான சூழ்நிலையில், அவன் அருளை கேட்டு பெறமுடியும்.

(இறையருளில் இன்ஸ்டன்ட் லோன் கூட உண்டு. ஆனால் அது எல்லாருக்கும் கிடைக்காது. அது தகுதி பார்த்து தரப்படும் ஒன்று. உன்னுடைய ரெக்கார்ட்டில், நீ மிகவும் நேர்மையானவன், ஒழுக்கமானவன், பிறருக்கு உதவும் பரோபகாரி என்று இருந்தால், நிச்சயம் இறைவனிடம் கேட்டவுடன் கிடைக்கும். மற்றபடி நோ சான்ஸ்!)

மேற்படி சம்பவத்தில் பிரச்னை ஏற்படும் முன்பே ராயரின் பிருந்தாவனத்திற்கு அடிக்கடி சென்று சந்திரமௌலி தரிசித்து வந்துள்ளார் என்பதை இங்கே நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அங்கு நடைபெறும் உற்சவங்கள், ஆராதனை இவற்றிலெல்லாம் தவறாமல் கலந்துகொண்டு வந்துள்ளார். ஸ்ரீனிவாசனும் தந்தையுடன் அடிக்கடி சென்றுள்ளார். எனவே தான் சரியான நேரத்தில் ராயரிடம் முறையிட்டு அவர் அருளை பெற முடிந்தது. (மேலும் இவர்கள் தாத்தாவும் பாட்டியும் விருந்தோம்பலும் அன்னதானம் நிறைய செய்து, தமது சந்ததியினருக்கு எண்ணிலடங்கா புண்ணியத்தை சேர்த்துவைத்துவிட்டு சென்றுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.)

ராயரிடம் வேண்டிக்கொண்டாலும் ஸ்ரீனிவாசன் தன் பங்கிற்கு தானும் பரீட்சைக்கு சிறப்பான முறையில் பாடங்களை படித்து தன்னை தயார் படுத்திக்கொண்டார் என்பதும் கவனிக்கத்தக்கது. மனித முயற்சியும் இறைவன் அருளும் சேரும்போது தான் அற்புதங்கள் சாத்தியப்படும்.

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை, பக்தியை, சொல்லிக் கொடுத்து வளர்த்தால், ஸ்ரீனிவாசனுக்கு அது உதவியதைப் போல உங்கள் பிள்ளைகளுக்கும் நாளை இக்கட்டான நேரத்தில் உதவும். இந்த ஸ்மார்ட்  ஃபோன் யுகத்தில் ஓரளவு பிள்ளைகள் வளர்ந்துவிட்டாலே பெற்றோர்கள் பேச்சை கேட்பதில்லை. எனவே, சிறுவயது முதலே அவர்களை நல்ல விஷயங்களுக்கு பழக்கப்படுத்தவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் அல்ல… பதினைந்தில் கூட வளையாது.

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்வதற்கு ஆசைப்படுகிறோம். கோவிலுக்கு செல்வதும் இறைவனை தொழுவதும் மட்டுமே ஆன்மீகமாகிவிடாது. ஆலயம் சென்று ஆண்டவனை வணங்குவதால் மட்டும் அவன் அருளை பெற்றுவிடமுடியாது. அது சுயநலமே… அதனால் யாருக்கு என்ன பயன்? தன்னலமற்ற சேவையே உண்மையான ஆன்மிகம் என்பதை உணர்ந்து நம்மால் முடிந்த சேவைகளை மனமுவந்து செய்து வரவேண்டும். பலனை நீங்கள் ருசிக்கவில்லை என்றாலும் உங்கள் சந்ததியினர் ருசிப்பார்கள்.

பிள்ளைகளின் பிரகாசமான எதிர்கால வாழ்க்கைக்கு ஒருவர் சேர்க்க வேண்டியது பணம் மட்டுமல்ல… புண்ணியமும் தான்.

(….ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் தொடரும்!)

================================================================

ஸ்ரீ ராகவேந்திரரின் அருளாணைப்படி நமது தளம் சார்பாக வரும் செப்டம்பர் 14 ஞாயிறு அன்று புதுவை குரும்பபேட் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு உழவாரப்பணிக்கு செல்லவிருக்கிறோம். வேன் பயணம். காலை 6.30க்கு சென்னையிலிருந்து கிளம்புகிறோம்.

உழவாரப்பணியில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு ராகவேந்திர மடம் சார்பில் வழங்கப்படுகிறது. நம்முடன் வரவிருப்பமுள்ள வாசகர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும்.

* நேரம் இருப்பின் குரும்பபேட்டில் உழவாரப்பணியும்  ராயரின் தரிசனமும் முடிந்தவுடன் அருகே பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரையும் தரிசிக்க திட்டமிட்டுள்ளோம்.

கண்ணில் ஒற்றிக்கொள்ளும் படங்களுடன் நமது குரும்பபேட் பிருந்தாவன தரிசனம் பற்றிய விரிவான பதிவு விரைவில் அளிக்கப்படும்.

நன்றி.

================================================================
Also check :

Articles about Ragavendhra Swamigal in Rightmantra.com

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

===================================================================

[END]

14 thoughts on “முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

  1. Sundar sir வணக்கம்

    மிகவும் நெகிழவைக்கும் அற்புதமான பதிவு..
    இறையருளும் சேவிங்க்ஸ் அக்கவுண்ட்டும் சூப்பர் சார்

    நன்றி

  2. ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்களைப் படிக்க படிக்க வியப்பாக உள்ளது. ஸ்ரீனிவாசின் பெற்றோர்களும் ஸ்ரீனிவாசனும் ராயர் மீது செலுத்திய அபரிமிதமாக நம்பிக்கையும் கடவுள் பக்திக்கும் ராயர் கைம்மாறு செய்து விட்டார். நாமும் நம் குழந்தைகளை கடவுள் பக்தி உள்ள குழந்தைகளாக வளர்க்க வேண்டும். நாம் இறைவன் மீது அன்பு செலுத்தி நம் கடமையை சரியாக செய்தால் இறைவனின் கடைக்கண் பார்வை நம் மீது நிச்சயமாக படும்.

    மேலும் நாம் செய்யும் தான தர்மம் நம் சந்ததியினரை கண்டிப்பாக ஒரு நல்ல இடத்தில் வைக்கும் . நாமும் நம்மால் முடிந்த புண்ணியத்தை சேமித்து வைப்போம்.

    மேலும் விழுப்புரம் சங்கர மடத்தில் தான் போன வருடம் என் பெற்றோர்களின் 90 வயது கனகாபிஷேகம் நடந்தது. மகா பெரியவரின் சிலை மிகவும் தத்ரூபமாக நம்மை ஆசிர்வதிப்பது போல் இருக்கும்.

    ஓம் ஸ்ரீ ராக வேந்தராய நமஹ்

    நன்றி
    உமா

  3. மனிதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் அதேபோல நம் தளத்தில் நமக்கு தெரியாத தெரிந்த பல விஷயங்கள் படிக்க நாம் செய்த புண்ணியம் தான் இந்த தளத்தையும் சுந்தர் அவர்களையும் நமக்கு அறிமுகபடுத்தி உள்ளது
    ஸ்ரீனிவாசனின் பரீட்சை சமயத்தில் நடந்த நிகழ்வுகள் பெரும் அதிசயமும் கடவுள் நம்பிக்கையும் படிக்க படிக்க கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.
    சந்திர மௌலி சார் அவர்களின் தலைமுறையும் அவர்கள் செய்த பல்வேறு நல்ல காரியங்களும் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.
    மகா பெரியவா அவர்கள் சிங்க நடை போட்டு நடந்து அவரும் படித்தில் அவர் அருகில் ஒரு சிறுவன் கை கூப்பி வரும் காட்சி மெய் சிலிர்க்கிறது,
    இறையருளும் சேவிங்க்ஸ் அக்கவுண்ட்டும்! உண்மை உண்மை உண்மை
    நன்றி

  4. I READ THE ABOVE AND I FEEL SURPRISE AND HAPPY BEING MY FRIEND’S SON GETTING JOB WITH THE GREAT BLESSING OF LORD.

  5. வணக்கம்……….

    கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதைப் போல குருவை நம்பினோரும் கைவிடப்படார்……….

    பிள்ளைகளின் பிரகாசமான எதிர்கால வாழ்க்கைக்கு ஒருவர் சேர்க்க வேண்டியது பணம் மட்டுமல்ல… புண்ணியமும் தான் – கிரேட்………

    குருவே சரணம்……….

  6. சார்,இந்த பதிவு மிகவும் அருமை.கண்களில் கண்ணீர் பெருகி விட்டது.

    ராகவேந்திரர் திருவடிகளே சரணம்.

    இப்படிக்கு,
    செந்தில்குமார்.

  7. Article conveys all things in neat manner – Spirituality + Hard work + Helping needy = Removing/Reducing our Karma = Happy Life.
    Sri Ragavendra, Periyava & other gurus save us – either immediately or after some time based on our karmas.

    Perfectly explained about what’s spirituality and how will it help us by Savings a/c example. But instead of adding assets in that savings a/c, most of us are taking from it. Almost all the time all the people are exceeding the overdraft limits. Lol.

    To open savings accounts with him (gurus & gods), requirements are – we shouldn’t harm anyone or any other living things as much as possible.
    **
    And, I’m happy with Mr. Chandramouli and Mr. Srinivasan who got blessed by Sri Ragavendra.

    **
    Finally, great kudos to you Sundarji since you have put more efforts in knowing all these info from respective people themselves from the mere single line info (one devotee puts his first monthly salary) we got in temple.

    And as Suki Sivam says, “Both Spirituality and Self-help things are like my two eyes”, you have put it that success of Mr. Srinivasan in his exams is because of both hard work and spirituality.Great.
    **
    Guru bless us all.
    **
    **Chitti**.

  8. Pondicherry Kurumbapet Brindavana is really special – in terms of so many things. I’m more happy to have gone there for the first time with you even though I’ve been here for few years in this city but didn’t know this brindavana so far.
    **
    Happy to join with you for temple cleaning activity for the first time and more than happier to have temple delicious prasadam (sweet) again which we had last time. Hehe.

    So me too – first visit (to brindavana with you), first temple cleaning activity (I’m going to participate in this activity in this temple only for the first time).
    **
    Guru bless us all.

  9. ஆண்டவன் தன்னை நம்பியவர்களை எப்போதும் கை விடமாட்டான் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.. இந்த பிருந்தாவனத்தை தரிசிக்க எனக்கு இப்போதே மிக ஆவலாக உள்ளது.

    சந்திரமௌலியின் அண்ணாவாக இருப்பதில் மிகவும் பெருமை படுகிறேன் . அந்த கடவுளுக்கும் நன்றி சொல்கிறேன் . ஸ்ரீனிவாசன் மிக நல்ல அடக்கமான பையன் சாரி engineer . சந்திரமௌலி செய்துவரும் எல்லா தர்ம காரியங்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். என்னால் அப்படி செய்ய முடியவில்லையே என்று என் மனதில் எப்போதும் ஆதங்கம் உண்டு. கணவனுக்கு ஏற்ற மனைவி ஆக smt உமா இருப்பது எங்கள் குடும்பத்து அதிர்ஷ்டம் போன ஜென்மத்து புண்ணியம் என்று எப்போதும் நான் பெருமை pattukolven . சந்திரமௌலி, உமா, ஸ்ரீனிவாசன் எல்லோரும் மேலும் சிறந்து பல தர்ம காரியங்கள் பண்ண எல்லா ம் வல்ல ராயர் மற்றும் தெய்வங்களையும் வேண்டுகிறேன்.. நன்றி .

    ஸ்ரீனிவாசன் கிரிஜா

  10. இறைவனின் அருளைப் பெற்ற ஸ்ரீனிவாசன் மென்மேலும் வாழ்வில் ஏற்றம் பெருவார் என்பதில் ஐய்யமில்லை. ஸ்ரீராகவேந்தரின் அருளை நாங்களும் பெறும் வகையைச் செய்த தங்களுக்கு நன்றி.

  11. வணக்கம் , என் பெயர் சரவணன் நான் இந்த முறை தான் புதிதாக படித்ததின் காரணமாக என் மனம் மிகவும் சந்தோசமாக மன அமைதியாக உள்ளது . அன்பானவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .

  12. the god blessing is always there for this family. pray to the almighty to shower his blessing further to this ge ntleman and his son.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *