Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

print
ம் தளத்தை கருவியாக வைத்து நம் வாசகர் ஒருவரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய மகிமை இது. சென்ற வாரம் – வியாழக்கிழமை அன்று – குரு ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாளை முன்னிட்டு சிறப்பு பதிவு ஒன்றை (உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!) நாம் அளித்திருந்தது நினைவிருக்கலாம்.

அந்த பதிவு அளித்த பின்பு மறுநாள் காலை வழக்கம் போல அலுவலகத்தில் பணிகளில் மூழ்கியிருந்தபோது நமக்கு ஒரு அலைபேசி வந்தது.

“சுந்தர் சாரா???” குரலில் ஒரு படபடப்பு தெரிந்தது.

“ஆமாம்…!”

“ஒரு அஞ்சு நிமிஷம் உங்கிட்டே பேசனும் சார்….பேசலாமா?”

“சொல்லுங்கம்மா….”

“சாயந்திரம் ஏழு மணிக்கு மேல தான் கூப்பிடனும்னு சொல்லியிருக்கீங்க அதான்…” எதிர் முனையில் இருந்த அந்த பெண் அழுதுகொண்டே பேசுவது புரிந்தது.

“சொல்லுங்கம்மா… பரவாயில்லே….”

“சார்… என் பேர் பாகீரதி. கள்ளக்குறிச்சியில இருந்து பேசுறேன். என் பையன் இங்கே ஏ.கே.டி. அகாடமி ஸ்கூல்ல ப்ளஸ்1 படிக்கிறான். பேர் ராமசுப்ரமணியன்….”

“ராமசுப்ரமணியன்…? பேரே சைவ வைணவ சங்கமமா இருக்கே? வெரிகுட்… வெரிகுட்!”

“எங்களுக்கு சைவம் வைணவம் ரெண்டும் ஒன்னு தான் சார்!”

“ரொம்ப சந்தோஷம்… என்ன விஷயம் சொல்லுங்கம்மா…”

“நம்ம ரைட் மந்த்ராவுல சுந்தரகாண்டம் படிக்கிறதுனால கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி நீங்கள் பதிவு போட்டதில் இருந்து நான் தினமும் சுந்தரகாண்டம் படிச்சிகிட்டு வர்றேன் சார். என் கிட்டே ‘அனுமன் துதிகள்’ அப்படின்னு ஒரு ஸ்பெஷல் ஆஞ்சநேயர் ஸ்லோக புக்கே இருக்கு. இன்னைக்கு காலையில் என் பையன் ராமசுப்ரமணியன் ராகவேந்திர சுவாமி இயற்றிய சுந்தரகாண்டம் ஸ்லோகத்தை அந்த புஸ்தகத்தை பார்த்து சுவாமி படம் முன்னாடி உட்கார்ந்து படிச்சிட்டிருந்தான் சார்.

ஸ்கூலுக்கு போற நேரம் வந்துட்டதால “கண்ணா…ஸ்கூலுக்கு டயமாச்சு கிளம்பு”ன்னு சொன்னேன். என்னை அவன் சட்டையே பண்ணலை. அவன் பாட்டுக்கு எழுத்து கூட்டி கூட்டி படிச்சிக்கிட்டுருந்தான். எனக்கு இவன் எப்போ எழுத்துக்கூட்டி அந்த ஸ்லோகத்தை படிச்சி முடிக்கிறது, எப்போ ஸ்கூலுக்கு போறதுன்னு தோணிச்சி.

“இப்போ நீ கிளம்பப் போறியா இல்லையா? லேட்டா போய், கடைசீயில ஸ்கூலுக்குள்ளே என்னை ALLOW பண்ணலை. அதனால நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லக்கூடாது. முதல் கிளம்பு” அப்படின்னு அதட்டினேன்.

“ஏன்மா இப்போ கத்துறே? ஸ்லோகம் படிக்கும்போது தொந்தரவு செய்யாதே”ன்னு பதிலுக்கு அவன் கத்தினான். எனக்கு சர்றுன்னு கோவம் தலைக்கு மேல ஏறிடிச்சு.

“படிக்கிறதே தப்பும் தவறுமா… அதுல எதிர்த்து வேற பேசறியா நீ?” அப்படின்னு அவனை போட்டு நாலு சாத்து சாத்தினேன். வாய் மேலே கூட ஓங்கி ரெண்டு அடி போட்டேன்.

கொஞ்ச நேரத்துல அவன் ஸ்கூலுக்கு கிளம்பி போய்ட்டான்.

ஆனா அவன் போனதுக்கப்புறம் என் மனசு கேட்கலே. பிள்ளை ஸ்லோகம் தானே சொல்லிகிட்டிருந்தது. அது என்ன ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா? அதுக்காக எதுக்கு பிள்ளையை நாம் அடிச்சோம்?….நான் அப்படி நடந்துகொண்டதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. மனம் சற்று வலித்தது. ஒருவேளை ஸ்லோகத்தை தப்பும் தவறுமா படிக்கிறதுனால ராகவேந்திரரே கோபப்பட்டு நம்ம மூலமா அவனுக்கு தண்டனை கொடுத்துட்டாரு போல என்று எண்ணிக்கொண்டேன்.

சற்று நேரத்தில் கம்ப்யூட்டரை ஆன் செய்து, வழக்கம்  போல நம் தளத்தை செக் செய்தால்… ராகவேந்திர சுவாமிகள் படத்துடன் நீங்கள் அளித்த “உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!” என்கிற பதிவு முதல் பதிவாக கண்ணில் பட்டது. எனக்கு ஒரு கணம் சிலிர்த்துவிட்டது. படித்ததும் எனக்கு அழுகையே வந்துவிட்டது.

சாட்சாத் அந்த ராகவேந்திரரே நம் தளம் சார்பாக எனக்கு புத்திமதி கூறுவது போல இருந்தது. “உன் மகன் உள்ளன்போடு என்னிடம் சொன்ன ஸ்லோகத்தை தடுத்து நிறுத்திவிட்டாயே…?” என்று அவர் என்னை கேட்பது போல இருந்தது.

“என் குழந்தையை நான் தெரியாமல் அடித்துவிட்டேன். அதுவும் உன் ஸ்லோகத்தை அவன் உள்ளன்போடு சொல்லும்போது அடித்துவிட்டேன். மன்னித்துவிடு குருராஜா” என்று அவர் படம் முன்பு கதறினேன் சார்…” இப்படி நம்மிடம் சொல்லும்போதே அவர் வார்த்தைகள் உடைந்து விட்டது. அழுதுகொண்டே தான் பேசினார்.

“அம்மா… குருராஜர் முக்காலமும் உணர்ந்தவர். இன்று உங்கள் வீட்டில் அவரது மகிமை வெளிப்படவேண்டும் என்று அவரது திருவுள்ளம் போலும். நம் தளம் அதற்கு  ஒரு கருவியாக அமைந்தது நான் செய்த பாக்கியம். நம் வாசகர்கள் செய்த பாக்கியம்.

காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை. இறைவழிப்பாட்டில் நாம் முதலில் கடைபிடிக்க வேண்டியது ‘அன்பு’ தான். அதற்கு பிறகு தான் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம். இதை வலியுறுத்துவதற்காகத் தான் இறைவன் கண்ணப்பன் நாயனாரின் உமிழ்நீரை கூட அபிஷே நீராக ஏற்றுக்கொண்டான். அவன் படைத்த மாமிசங்களை பழங்களாக எடுத்துக்கொண்டான். ஆத்மார்த்தமான உண்மையான பக்திக்கும் அன்புக்கும் இறைவன் என்றுமே கட்டுப்பட்டவன்….” என்றேன்.

நம்மிடம் இந்த மெய்சிலிர்க்கும் நிகழ்வை பகிர்ந்துகொண்டமைக்கு திருமதி.பாகீரதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து நமது தளத்தில் வெளியிடுவதற்கும் அனுமதி பெற்றேன்.

அடுத்து திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களுக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறியதும், “இதுவும் ராகவேந்திர மகிமை தான். இதன் மூலமும் அவர் ஒரு பேருண்மையை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார் சுந்தர்!” என்றார்.

===============================================
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தர காண்ட சுலோகம்!

யஸ்ய ஸ்ரீ ஹநுமானநுக்ரஹபலாத்
தீர்ணாம்புதிர் லீலயா
லங்காம் ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்
பங்த்வா வனம் ராக்ஷஸான் I
அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்ய தஸகம்
தக்த்வா புரீம் தாம் புன:
தீணாப்தி: கபிபிர்யுதே
யமனமத்தம் ராமசந்த்ரம் பஜே II

பொருள்: யாருடைய அருளின் வலிமையால் அனுமன் எந்தவொரு அயர்ச்சியும், களைப்பும் இல்லாமல் கடலைத் தாண்டி ராமபிரானின் அன்புக்குரிய சீதாதேவியைக் கண்டாரோ,
யாருடைய அருளால் அசோக வனத்தை சேதப்படுத்தினாரோ,
அக்ஷகுமாரன் முதலிய அரக்கர்களைக் கொன்று, ராவணனைக் கண்டு, இலங்கையைத் தீக்கிரையாக்கினாரோ,
யாருடைய அருளால் மறுபடியும் கடலைத் தாண்டினாரோ,
மஹேந்திர மலையில் இருக்கும் வானரங்களுடன் சாஷ்டாங்கமாய் யாரை வணங்கினாரோ,
அப்படிப்பட்ட ராமச்சந்திர மூர்த்தியை நான் வணங்குகிறேன்!

===============================================

[END]

8 thoughts on “முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

  1. உச்சரிப்பைவிட உன்னத பக்தி சிறந்தது.
    அந்த தாய்க்கு தன் மகன் மூலம் கடவுள் பக்குவத்தை உண்டாக்கினர்.
    உலவரபணி அன்று நானும் சுபா அக்காவும் பேசும் போது கூட அவர்களும் இறைவன் கண்ணப்பன் நாயனாரின் உமிழ்நீரை கூட அபிஷே நீராக ஏற்றுக்கொண்டான். அவன் படைத்த மாமிசங்களை பழங்களாக எடுத்துக்கொண்டான். ஆத்மார்த்தமான உண்மையான பக்திக்கும் அன்புக்கும் இறைவன் என்றுமே கட்டுப்பட்டவன் என்று தான் சொன்னார்கள்.
    இனிமேல் நாங்களும் தைரியமாக சுலோகம் படிக்கலாம்

  2. படிக்க சந்தோசமா இருக்கு !!!

    சூப்பர் சுந்தர் சார்…!

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ…..

  3. சுந்தர் சார்
    எனக்கும் ரொம்ப நாளாக இந்த டவுட் இருத்ஹ்து அதை தெளிவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி.

    எனக்கு கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க ஆசை. தப்பு வரும்னு பயந்து படிக்கவில்லை. அதை என்று ஆரம்பிக்கலாம் என்று சொல்லவும்.

    Selvi

    1. ஏதாவது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவும். (அசைவ உணவுகளை தவிர்க்கவும்).

      ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ சி.டி./டி.வி.டி. கூட கிடைக்கிறது.அதை போட்டு கேட்டு உடன் படித்து வரவும்.

      – சுந்தர்

  4. வணக்கம் சுந்தர் சார்

    நிஜமா படிக்கும் போதை மிகவும் சந்தோசமா இருக்கு சார்

    நம்ம தளத்திற்கு எத்தனை எத்தனை கடவுள்கள் ஆசி சார்

    மிகவும் சந்தோசமா இருக்கு சார்.

    நன்றி

  5. சுந்தர்ஜி
    குருராஜர் நம் தளத்தை மகிமைபடுத்திக் கொண்டு இருப்பதற்கு இதை விட சான்று ஏது?. அதே நேரத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு போடும் பதிவிற்கு இறைசக்தி உங்களையும் அந்த தாய் மூலம் உற்சாகபடுத்தியுள்ளது எனவும் சொல்லலாம். முந்தைய மந்திர உச்சரிப்பு பதிவு அனைவர்க்கும் தைர்யமாக சுலோகம் சொல்ல ஒரு உந்துதல் என்றால், இந்த பதிவு அதற்கு ஒரு சாட்சி எனலாம். நன்றி

  6. கடவுள் எப்போதும் யாருக்காவது ஒரு திருவிளையாடலை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றார். சில மனிதர்களால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை ,சிலரால் அதுபுரிந்துகொள்ள முடிகிறது,சில அமானுஸ்ய சக்திகளும் அவ்வப்பொது விஞ்ஞான மனிதர்களுக்கு சவாலாகவே உள்ளது. சமீபத்தில் அடிக்கடி தானாக தீப்பற்றி எரியும் குழைந்தை பற்றிய பதிவை தாங்கள் நம் தளத்தில் இட்டதுபோல்…அனுபவத்தில் தான் இதை உனரமுடியும்.

    அப்படித்தான் நம் தளத்தின் வாசகி சகோதரி பாகீரதி. அவர்களுக்கும் இறைவன் ஒரு சிரு திருவிலையாடலை அரங்கேற்றியுல்லான் போலும்…எப்படியோ, நம் சகோதரி அவர்கள் இறைவனை உண்மையில் உணர்ந்துள்ளார்கள். எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த உடனுக்குடன் இதன் மூலம் புத்தி தெளிவு. நன்றி.

  7. கோபம்

    இந்த ஒரு குணம் பல பேரின் வாழ்க்கையில் விளையாடி இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டு விடுகிறது

    நமது வினைப்பயனால் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் இந்த மிருகம் நாம் நமது நிதானத்தை இழக்கும்போது விஸ்வரூபம் எடுக்கிறது

    மேற்கூறப்பட்டுள்ள சம்பவத்தை கடந்து வராதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது – கோபப்படும் அந்த நொடி நம்மையே நாம் மறந்து என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்பதை அறியாது மற்றவரை காயப்படுத்திவிட்டு பின்பு அதை எண்ணி எண்ணி வருந்தி பிராயச்சித்தம் தேடுகிறோம்

    த்யானம், இறைபக்தி, தற்சோதனை போன்ற எளிய வழிமுறைகளால் கோபம் என்னும் அந்த கொடிய அரக்கனை நாம் எளிதில் வெற்றிகொள்ள முடியும்

    எல்லாம் வல்ல அந்த குரு நமக்கு நல்வழி காட்டி நம் ஜென்மம் கடைத்தேற அருளவேண்டி மன்றாடுவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *