போகிற போக்கில் பாலன் போன்றவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே ஒரு Ph.D. படிப்பின் ஆராய்ச்சிக்கு உரியது என்றால், ஒரு நூலே அவர் எழுதியிருக்கும்போது அது எப்படி இருக்கும்?
எமது கணிப்பு தவறவில்லை. இந்த சமூகம், ஆன்மீகம், கடவுள், தொண்டு, போராட்டம், வெற்றி, தோல்வி, இவை குறித்து அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் சவுக்கடி போன்றிருந்தது.
இந்த சமூகத்தை உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் கூறியுள்ள கருத்தும் நம் கருத்தும் ஒரே மாதிரி இருந்ததை கண்டு நாம் அகமகிழ்ந்தோம். நாமே எழுதியதை போன்று தான் அந்த நூலை வாசிக்கும்போது உணர்ந்தோம்.
அந்த நூல் முழுவதுமே திரும்ப திரும்ப படித்து, உருகி, பலருக்கு பரிசளித்து மகிழவேண்டிய ஒன்று என்றாலும் அந்நூலில் அவர் இறைவன் குறித்து தனது அனுபவத்தில் இருந்து எழுதியிருக்கும், “சுவாமியே சரணம் ஏசப்பா..!!” என்னும் அத்தியாயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. மதத்தின் பெயரால் இறைவனை வேறு படுத்தி பார்ப்பவர்களுக்கு சரியான சவுக்கடி இந்த கட்டுரை.
அந்நூலில் இரண்டாம் அத்தியாயத்தில் ‘எயிட்ஸ்’ நோயின் கொடுமை குறித்தும் அந்நோய் குறித்து நமக்கு இருக்கவேண்டிய அணுகுமுறை குறித்தும் எழுதியிருக்கும் கட்டுரையில் கௌசல்யா என்கிற அப்பாவி கிராமத்து பெண்மணி ஒருவர் எப்படி தனது லாரி ஓட்டுனர் கணவர் மூலம் இந்த நோயை பெற்று பல இன்னலுக்கு ஆளாகி, பின்னர் சுதாரித்துக்கொண்டு தன்னைப்போல இந்த சமூகத்தில் எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்று POSITIVE WOMEN NETWORK என்ற அமைப்பை துவக்கி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி வருகிறார் என்பதை விளக்கியிருந்தார். (இரண்டு நாட்களுக்கு முன்னர் டிசம்பர் 1 சர்வதேச எயிட்ஸ் தினத்தன்று அந்த கட்டுரையை நமது தளத்தில் நாம் அளித்திருந்தது நினைவிருக்கலாம்.)
பாரதி கண்ட புதுமைப் பெண் எவரையேனும் நம் பாரதி விழாவிற்கு அழைத்து கௌரவிக்கவேண்டும் என்று ஏற்கனவே நமக்கு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. பேட்ரீசியா நாராயணன் அவர்களை அழைக்கலாம் என்றால் அவருக்கு தற்போது உடல் நலம் சரியில்லை. எனவே அவரை அழைக்க இயலவில்லை. எனவே வேறு ஒரு பொருத்தமான பெண்மணியை தேடிக்கொண்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் பாலன் அவர்களின் நூலில் கௌசல்யாவை பற்றி படிக்க, நேரிட்டது. பாரதி விழாவில் கௌரவிக்க அவரை விட பொருத்தமான பெண் வேறு எவரும் இருக்க முடியாது. உடனே கௌசல்யாவின் நம்பரை எப்படியோ தேடிப்பிடித்து அவரை தொடர்புகொண்டு அனைத்து விபரங்களையும் கூறினோம்.
நம் தளத்தை பற்றியும், நம் பணிகள் பற்றியும், நம் வாசகர்கள் எந்தளவு TRUE VALUES ஐ மதிக்கிறார்கள் என்பதையும் எடுத்து கூறினோம். டிசம்பர் 8 ஞாயிறு அன்று தமக்கு வேறு சில முக்கிய அலுவல்கள் இருப்பதாகவும், இருப்பினும் நமது அன்புக்கு கட்டுப்பட்டு நம் தள வாசகர்களுக்கு நன்றி கூறும் விதமாக விழாவில் தாம் கலந்துகொள்வதாக கூறினார்.
====================================================================
பாரதி கண்ட புதுமைப் பெண் !
“நமக்கு என்ன நிகழ்கிறதோ அது வாழ்க்கையல்ல. அப்படி நிகழ்பவற்றுக்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதே வாழ்க்கை!” பிரபல தன்னம்பிக்கை வாக்கியம் இது. கௌசல்யாவின் வாழ்க்கை உணர்த்துவதும் அதைத் தான்.
நாமக்கல்லை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த கௌசல்யாவை ஒரு லாரி ஓட்டுனருக்கு திருமணம் முடிக்கிறார்கள். அப்போது அவருக்கு வயது 19. திருமணமான சில மாதங்களில் கௌசல்யாவுக்கு உடல் நலம் குன்ற மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு எச்.ஐ.வி. பாஸிட்டிவ் என்று கண்டுபிடிக்கிறார்கள். கனவுகளுடன் திருமண வாழ்க்கையை துவக்கிய ஒரு பெண்ணுக்கு அதுவும் ஒரு கிராமத்து பெண்ணுக்கு அது எத்தனை பெரிய இடி என்பதை யோசித்து பாருங்கள். கௌசல்யாவுக்கு ஏற்பட்டது PASSIVE எச்.ஐ.வி. தொற்று (திருமணம் போன்ற உறவுகள் மூலம் வருவது) என்றாலும், சமூகத்திற்கு அதையெல்லாம் புரியவைத்துக்கொண்டிருக்க முடியுமா?
எச்.ஐ.வி. குறித்து சரியான புரிதல், அணுகுமுறை படித்தவர்களுக்கே நகரத்தில் இருப்பவர்களே இல்லை எனும்போது 1995 இல் அதுவும் ஒரு கிராமத்தில் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள்…?
குடும்பத்தினர் உறவினர்கள் டார்ச்சர் செய்ய கௌசல்யாவின் கணவர் தற்கொலை செய்துகொள்கிறார். கௌசல்யா தனிமரமாகிவிடுகிறார்.
வேறு எவருக்கேனும் இது நிகழ்ந்திருந்தால் அவர்கள் இதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் கௌசல்யா? பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், தனக்கு நிகழ்ந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது என்று முடிவு செய்து எயிட்ஸ்க்கு எதிராக போராடும் ஒரு அரும்பணியை துவக்கினார்.
சிறு பிரச்னைகள், சோதனைகள் வந்தாலே முடங்கிப் போகும் பெண்களுக்கு கௌசல்யா ஒரு கலங்கரை விளக்கம் என்றால் மிகையாகாது.
இவரை பற்றி பதிவெழுத முற்பட்டபோது இவரது பணிகள் மற்றும் எச்.ஐ.வி.க்கு எதிரான பயணத்தை பற்றிய செய்திகளை படிக்க நேர்ந்தது. ஒவ்வொரு செய்தியும் அப்பப்பா…. பிரமிப்பு, மலைப்பு, சிலிர்ப்பு….! இதுவரை சுமார் 20,000 பெண்களுக்கு இவர் எச்.ஐ.வி.க்கு எதிரான போராட்டத்தில் உதவி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
கௌசல்யா அவர்களை குறித்து நாமே ஒவ்வொரு வரியும் எழுத விரும்பினாலும் பாரதி விழாவின் ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் எழுத நேரம் கிடைக்கவில்லை. எனவே கௌசல்யாவின் பயணம், அவரது போராட்டம், அவரது சாதனை என அனைத்தையும் விளக்கும் வகையில் தி ஹிந்துவில் வெளியான ஒரு கட்டுரையை இங்கு தருகிறோம்.
அனைவரும் நிச்சயம் படிக்கவேண்டும்!
====================================================================
பாஸிட்டிவ் கௌசல்யா!
எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளுக்குத் (டிச. 1) தயாராகிக் கொண்டிருந்தார் கௌசல்யா பெரியசாமி. இந்தியாவின் முதல் பாசிட்டிவ் பெண்கள் அமைப்பை உருவாக்கிய அவர், தேசிய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்காக உத்தரப்பிரதேசத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானதை முதன்முதலாக வெளிப்படையாக அறிவித்தவர்களில் ஒருவர் கௌசல்யா. திருமணம் மூலமே எச்.ஐ.வி. தொற்றைப் பெற்ற அவர், மற்ற இல்லத்தரசிகளும் தன்னைப் போல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அப்படி அறிவித்தார். அப்போது முதல் இன்றுவரை பெண்களும் குழந்தைகளும் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கவும் போராடிக் கொண்டிருக்கிறார்.
“எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்பான ஒரு நிறுவனத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எச்.ஐ. விக்கான தேசிய திட்டம் வகுப்பதற்காக 1997இல் சென்னையில் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிக எச்.ஐ.வி. நோயாளிகள் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான், மறைந்த ஜோன்ஸ், வரலட்சுமி, ஹேமலதா ஆகியோர் பங்கேற்றோம். அந்தக் கூட்டத்தில் எச்.ஐ.வி. யாருக்கு வேண்டுமானாலும் வர லாம். பெண்களுக்கு விழிப்புணர்வை அதிக ரிக்க வேண்டும் என்றோம். ஆனால், நீங்கள் நிபுணர்களா என்று கேள்வி எழுப்பினார்கள்.
அமைப்பாக இல்லாததால்தான், நமது குரல் எடுபடவில்லை என்று புரிந்து கொண்டோம். தென்னிந்தியாவில் உள்ள 18 பெண்கள் சந்தித்துப் பேசி, 1999இல் ஒரு அமைப்பானோம். ஆசியாவிலேயே வெளிப்படையாக சங்கமாகப் பதிவு செய்த முதல் எச்.ஐ.வி பாசிட்டிவ் பெண்கள் அமைப்பு எங்களுடையதுதான்” என்று பி.டபிள்யு.என். தொடங்கிய கதையைச் சொல்கிறார் கௌசல்யா.
தற்போதும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய எச்.ஐ.வி. பாசிட்டிவ் பெண்கள் அமைப்பு இதுதான். 13 மாநிலங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அத்துடன், தன்னார்வமாக உழைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பெண்களை சாதாரண வாழ்க்கைக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் பி.டபிள்யு.என். அமைப்பின் நோக்கம். இந்த அமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் கேண்டீன், திருநெல்வேலியில் 40 ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை, விழுப்புரத்தில் வீ பிராண்ட் என்ற துணிக் கடை ஆகியவை நடத்தப் பட்டு வருகின்றன. 58க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்பு சாத்தியப்படுத்திய சில மாற்றங்கள்: தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் விதவையானவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் விதவை பென்ஷன் வழங்க வேண்டும் (முன்பு 45 வயதாக இருந்தது). எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து கொடுக்க வேண்டும் என்ற இவர்களது வலியுறுத்தலைத் தொடர்ந்தே, ஏ.ஆர்.வி. இலவசமாகத் தரப்பட்டு வருகிறது. நெவ்ரெபி என்ற மருந்துக்கு பேட்டன்ட் உரிமை கோரப்பட்டிருந்ததற்கு எதிராக, வழக்கு போட்டு போராடி உரிமம் பெற்றுள்ளார்கள்.
தற்போது தமிழக அரசின் எச்.ஐ.வி. ஆலோ சனைக் குழுவில் இவர்களுடைய அமைப்பும் ஒரு பிரதிநிதி. முன்பு குழந்தைகளுக்கான தேசிய எச்.ஐ.வி. ஆலோசனைக் குழுவில் கௌசல்யா பிரதிநிதியாக இருந்திருக்கிறார்.
“எல்லோருக்கும் எய்ட்ஸ் என்றால் என்னவென்று தெரியும், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்பு எப்படிப்பட்டது, எவ்வளவு மோசமானது என்று தெரியாது. “எங்களுக்கெல்லாம் எச்.ஐ.வி. தொற்று வராது” என்ற மாயையே பலரிடம் அதிகம். “என் குடும்பம் நல்ல குடும்பம்” என்ற அலட்சியமும் இருக்கிறது. ஆனால், இதுவெல்லாமே பொய்.
இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் பேரில், 40 சதவிகிதம் பேர் (8 லட்சம் பேர்) பெண்கள். இதில் 86 சதவிகிதம் பெண்களுக்கு திருமண உறவு காரணமாகவே எச்.ஐ.வி. தொற்றியுள்ளது. எனவே, எச்.ஐ.வி. பரவுவதற்கு இதுவே முக்கிய காரணம். பாலியல் தொழில், ரத்தம் மூலம் எச்.ஐ.வி. பரவியது வெறும் 14 சதவிகிதம்தான். ஆனால் “கே”, லெஸ்பியன் போன்ற ஒரு பால் உறவு, திருநங்கைகளால்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுவதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்களில் 60 முதல் 70 சதவிகிதம் பெண்கள் விதவையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களும் இறந்து போனால், குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி விடுகின்றனர்.
இப்போது தமிழகத்தில் ஒவ்வொரு துறையின் கீழும் வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகளில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உதவித்தொகையை வைத்துக்கொண்டு வாழ முடியாது. கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ரூ.3,000மும், நகரத்தில் ரூ.5,000மும் அவசியம்.எனவே, அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும், குறிப்பாக பெண்களுக்கு.
தற்போது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலும் மகாராஷ்டிராவில் நாக்பூரிலும் பாசிட்டிவ் பெண்களுக்கான அரசின் ஆதார மையத்தை ஏற்று நடத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். இது போன்றதொரு மையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டால், நாமக்கல் மாவட்டத்துக்கு மட்டும் 4 மையங்கள் தேவை. ஏனென்றால், அங்கு 10,000 பெண் எச்.ஐ.வி. நோயாளிகள் இருக்கிறார்கள். இந்த மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் எச்.ஐ.வியை பரவச் செய்வதைத் தடுக்க முடியும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம்.
எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் வளரும்போது வாழ்க்கையை கையாள்வதற்கான கல்வியும், வளர்ந்தபின் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் மருந்தும் தேவை. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திலேயே இளைஞர்களுக்கான சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சையும் உதவியும் பெறலாம். இது பற்றி பெரும்பாலோருக்குத் தெரியாது.
இதைத் தாண்டி பள்ளி, கல்லூரிகள், பொது மருத்துவமனைகளில் எச்.ஐ. வி. பாதிக்கப் பட்டவர்களை நடத்தும் முறை பெரிதாக மாறவில்லை. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர் களைப் பற்றிய பொதுமக்களின் மனோபாவம் மாறவில்லை. எச்.ஐ.வியை அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டால் இந்த மனோபாவத்தை மாற்றலாம். அப்போது எச்.ஐ.வி. பாதிப்பில் சிக்காமல் இருப்பதுடன், வேறு பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். அந்தப் புரிதல்தான் அவசியம்” என்கிறார் கௌசல்யா.
(நன்றி : தி ஹிந்து)
=====================================
Also check :
அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
=====================================
[END]
“நமக்கு என்ன நிகழ்கிறதோ அது வாழ்க்கையல்ல. அப்படி நிகழ்பவற்றுக்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதே வாழ்க்கை!” பிரபல தன்னம்பிக்கை வாக்கியம் இது. பிரபல தன்னம்பிக்கை வாக்கியம் இது. கௌசல்யாவின் வாழ்க்கை உணர்த்துவதும் அதைத் தான்.
உண்மையில பாரதி கண்ட புதுமை பெண் தான் கௌசல்யா …
அருமையின பதிவு சுந்தர் சார்
பாரதி விழாவில் கௌரவிக்க அவரை விட பொருத்தமான பெண் வேறு எவரும் இருக்க முடியாது.
கௌசல்யாவை நம் தளத்தின் மூலம் பாரதி விழாவில் சிறப்பிப்பது மிகவும் சரியானது.
விழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துக்கள்
நன்றி
uma
பாரதி கண்ட புதுமை பெண் தான் கௌசல்யா மேடம்.
தான் பட்ட கஷ்டம் மற்றவர் பட கூடாது என்று மனசாட்சி உள்ள பெண்கள் நினைப்பது இயல்பு. ஆனால் அதை கௌசல்யா செயல்படுத்த அவர் எடுத்துள்ள முயற்சி வரவேற்க தக்கது,
பல கஷ்டங்களுக்கும், அவமானங்களுக்கும் பின்னால் தான் இப்படி ஒரு அமைப்பு ஏற்பட்டுள்ளது.
அவரை போல பல பெண்களின் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்துள்ளார்.
அவர் இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
நம் பாரதி விழாவில் கௌரவபடுத்த இவரை விட பொருத்தமான நபர் இல்லை.
ஹிந்துவில் வந்த விசயங்களை படிக்கும்போதே மனம் வேதனைபடுகிறது முழுக்க அவர் கதையை படித்தால் மனம் தாங்குமா என்று தெரியவில்லை.
சுந்தர்ஜி
பெண்கள் நாட்டின் கண்கள். அந்த பெண்ணிற்கு ஒரு கஷ்டம், நஷ்டம் வந்தால் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் விட்டில்உள்ளவர்களுக்கு ஒரு கஷ்டம், நஷ்டம் என்றால் அதை தம் கஷ்டம் போல் நினைத்து அதை சரிசெய எண்ணுவாள். அதையும் மீறி தம் கஷ்டம் யாருக்கும் வர கூடாது என்று நினைக்கும் நம் கௌசல்யா
உண்மையில் பாரதி கண்ட புதுமை பெண் தான்.
பாரதி விழாவிற்கு ஒரு மணிமகுடம் நம் கௌசல்யா. எச்.ஐ. வி.பற்றி நாமும் விழிப்புணர்வு பெற வேண்டும்.
கௌசல்யா அவர்களுக்கு மிகப் பெரிய மனசு. நிச்சயமாக அவர் போர்ட்டுதளுக்கும் , பாராட்டுதலுக்கும் உரியவர். அவருக்கு ஏற்பட்ட
நிகழ்வு வேறு ஒருவருக்கும் நிகழகுடதுன்னு அவர் சேவை செய்கிறார் .
அவர் செய்கிற சமுதாய பணிக்கு என் பணிவான வணக்கத்தையும்
நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பு சுந்தர்,
மிகவும் பொருத்தமான நபர்களைத் தேடிப்பிடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். திரு வீ.கே.டி பாலன் அவர்களும், செல்வி கௌசல்யா அவர்களும் மிகச் சரியன தேர்வுகள். செல்வி கௌசல்யா உண்மையிலேயே பாரதி கண்ட புதுமைப் பெண் தான்.அவருக்கு நிகழந்ததைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிராமல் அவர் கையில் எடுத்துள்ள பணி பத்ம விருதுகளுக்குத் தகுதியானது. படிக்கும்போது நெஞ்சு விம்முவதை தடுக்க முடியவில்லை. அவருக்கு நீண்ட ஆயுளையும் தைரியத்தையம் எல்லோரது ஆதரவையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.
உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
நாராயணன்
வாழ்க வளமுடன்
ஓ ….. ஒரு தென்றல் புயலாகி வருதே
ஒரு ஆணின் சபலத்தால் ஒரு பெண்ணின் வாழ்வு நாசமானது
இதற்கு யார் பொறுப்பு , இந்த சமுதாயத்தில் உள்ள நாம்தான் காரணம் . எது எதுவிர்கோ நாம் போராடுகிறோம் , இதற்கு ஒரு சட்டம் கொண்டு வந்தால் என்ன . திருமணத்திற்கு முன் அனைவரும் ஆண் , பெண் , இருபாலரும் மருத்துவ சோதனை செய்து அதனை பதிவு திருமணத்தின்போது கண்டிப்பாக காட்டவேண்டும் . எல்லோரும் பயனடைவார் . எல்லா பொருத்தமும் பார்க்கும் நாம் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். அபோதுதான் இது போன்ற அநியாயங்கள் தடுக்கப்படும் . நல்ல மனிதர்கள் அரசாண்டால் இவை அனைத்தும் கைகூடும் . கடவுளை நம்பி பயனில்லை . என்னுடைய மனக்காயம் …………….ஆறாது