Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!

print
மது சென்ற வருட பாரதி பிறந்த நாள் விழா ஒப்பற்ற சாதனையாளர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது உங்களுக்கு  தெரிந்திருக்கும். எனவே இந்த வருட பாரதி விழாவை அதை விட சிறப்பாக நடத்திவிடவேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இயல்பாகவே இருந்தது.

ஆனால் இந்த வருடம் ஏற்பாடு துவங்கியதில் இருந்து நம் மனவுறுதியை சோதிக்கும் வண்ணம் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இருப்பினும் நடத்துவது பாரதி விழா அல்லவா… சோதனையின்றி இருக்குமா? எவர் கைவிட்டாலும் சரி… நினைத்ததை நடத்தியே தீருவோம் என்கிற வைராக்கியம் இருக்கிறது. ஏனெனில் அது இறைவன் தந்தது. நம் கூடவே பிறந்தது!

எண்ணிய முடிதல் வேண்டும்;
     நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
     தெளிந்தநல் லறிவு  வேண்டும்;

Othaiyadi Padhaiவிழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக யாரை கூப்பிடலாம் என்று  யோசித்தபோது, வடலூரில் உள்ள வாழும் வள்ளலார் ஒருவரை பற்றி நண்பர் திருவாசகம் பிச்சையா அவர்கள் மூலம் அறிந்துகொண்டோம். வடலூர் சென்று அவரை சந்தித்துவிட்டு ஒப்புதலும் பெற்று வந்த நிலையில், அவர் வருவதில் ஒரு சிக்கல். எனவே வேறு ஒருவரை உடனடியாக இறுதி செய்ய வேண்டி இருந்தது. சில பெரிய மனிதர்களிடம் பேசியபோது அவர்களுக்கு வர விருப்பம் இருந்தும் அன்றைய தேதியில் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்புகொண்டிருந்த படியால் அவர்களால் வர இயலவில்லை. (பலர் குறைந்தது  இரண்டு மாதங்களுக்கு தங்கள் நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருந்தனர்.) வேறு யாரையாவது அழைக்கலாம் என்றால் மேலும் அலைந்து திரிந்து நம்மால் இது தொடர்பாக ஏற்பாடுகள் செய்ய முடியாத சூழ்நிலை.

பாரதி விழாவுக்கு நாளோ குறைவாக இருக்கிறது. என்ன செய்வது என்று யோசித்த போது தோன்றியவர் தான் மதுரா டிராவல்ஸ் பாலன் அவர்கள். நண்பர் ரிஷி கூட, தனது லிவிங்எக்ஸ்ட்ரா.காம் தளத்தில் இவரை பற்றி ஒரு பதிவு அளித்திருக்கிறார்.

பாலன் அவர்களை நமக்கு எப்படி தெரியும் என்றால்… அது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் ஒரு முன்னணி அச்சகத்தில் LAYOUT DESIGNER ஆக பணிபுரிந்தபோது, அந்நிறுவனத்திற்கு ‘ஒத்தையடிப் பாதை’ என்னும் நூல் அட்டைப் பட வடிவமைப்புக்காக வந்தது. வாழ்க்கையில் மிகவும் போராடி வெற்றிக்கொடி நாட்டிய முதல் தலைமுறை சாதனையாளர்களை பற்றிய நூல் அது. குங்குமம் வார இதழில் தொடராக வந்த அந்த நூலை ஞானவேல் என்பவர் எழுதியிருந்தார்.

DSC06167

உங்களுக்குத் தான் தெரியுமே….நல்ல விஷயங்களை தேடுவதில் நாம் என்றுமே ஒரு தேனி போல…. (ஆகையால் தான் நம் தளத்தின் பேனரில் கூட தேடல் உள்ள தேனீக்களுக்கு என்ற வாசகத்தை வைத்திருக்கிறோம்!) தேனெடுக்கையில் புறங்கையை சுவைக்காதவர் இருக்க முடியுமா என்ன?

அட்டைப்பட வடிவமைப்புக்கு வந்த நூலை நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம்  படித்துக் கொண்டிருக்க, எமக்குள்ளும் ‘சாதனைத் தாகம்’ தொற்றிக்கொண்டது. இருப்பினும் எதற்கும் வழியில்லாது குண்டு சட்டிக்குள் குதிரை தான் ஓட்டிக்கொண்டிருந்தோம். அது தான் உலகம் என்று நினைத்து.

அந்நூலில் பாலன் அவர்களை பற்றிய அத்தியாயத்தை படித்தபோது…  வியப்பின் உச்சிக்கே சென்றோம். “சினிமாவாக எடுத்தால் கூட எவரும் இதை நம்ப மாட்டார்களே?” என்று தான் தோன்றியது.

எனவே இந்த ஆண்டு பாரதி விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.பாலன் அழைக்க முடிவு செய்து உடனடியாக அவரை தொடர்புகொண்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் பேசியதை சரியாக நினைவில் வைத்திருந்தார்.

நம் தளம் பற்றியும் நம் பணிகள் பற்றியும் பாரதி விழா பற்றி எடுத்துக்கூறி, “அவசியம் வந்திருந்து பாரதியை கௌரவித்து எங்களையும் பெருமைப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம்.

தனது அப்பாயிண்ட்மெண்ட் டைரியை ஒரு முறை செக் செய்து, தேதியை ஒதுக்கித் தந்தார். அவரை அவர் அலுவலகத்தில் சந்திக்க விரும்பி நேரம் கேட்டோம். “எதுக்கு தம்பி இந்த பார்மாலிட்டீஸ்?  8 ஆம் தேதி சரியா நான் பங்க்ஷனுக்கு வந்துடுவேன்” என்றார்.  இருப்பினும் நேரே சென்று சந்தித்துவிட்டு வந்தால் சற்று தேவலை என்று தோன்றியது.

அடுத்த சில நாட்களில் அவரை சந்திக்கவும் நன்றி தெரிவிக்கவும் எழும்பூரில் உள்ள அவர் அலுவலக  சென்றோம். நம்முடன் வருவதாக கூறிய நண்பர்கள் கடைசி நேரத்தில் அவரவர் அலுவல் காரணமாக வர இயலாது போக நாம் மட்டும் தனியே போக நேர்ந்தது. (இதைப் பற்றியே ஒரு தனி பதிவு எழுதலாம்!)

இவரை இவரது அலுவலகத்தில் சந்தித்தது ஒரு தனி அனுபவம். அது பற்றி பாரதி விழாவில் பேசுகிறோம்.

நம்மை வரவேற்று உபசரித்து அமரவைத்தார். பாரதி விழா மற்றும் அதன் நோக்கம் குறித்து விளக்கினோம். பொறுமையாக கேட்டுக்கொண்டார். அவரது மதுரா வெல்கம் டைரக்டரி மற்றும் தான் எழுதிய ‘சொல்லத் துடிக்குது மனசு’ நூல் ஆகியவற்றை நமக்கு பரிசளித்தார்.

சந்திப்பின் அவருடன் புகைப்படமெடுத்துக்கொள்ள நமது விருப்பத்தை தெரிவித்தோம்.  தனது அலுவலக ஊழியர் ஒருவரை கூப்பிட்டு புகைப்படமெடுக்க சொன்னார். போஸ் கொடுக்கும்போது நம்மை அருகே இழுத்து தோளில் இறுக்கமாக கையை போட்டு… “என் தம்பி நீங்க… நல்லா வருவீங்க… வாழ்த்துக்கள்!!” என்றார்.

=======================================================
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் !

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் நடக்குமிடத்தில் 26.01.1954 அன்று பாலன் பிறந்தார். இவரது பெற்றோர் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் கூலி வேலை செய்யும் இடத்தில் கிடைக்கக் கூடிய உணவும் உடைகளுமே இவர்களது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வனவாக இருந்தன. மற்றவர்கள் ஒதுக்கும் பழைய சோறே இவர்களுக்கு சுடு சோறு.

Madura Travels VKT Balanகிராமத்து ஆரம்பக் கல்வியின் அடிப்படையில் இவருக்கு 8-ஆம் வகுப்பு வரையிலும் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நடந்த சமூகக் கொடுமைகளும், அவரது சுயமரியாதை உணர்வுகளும் பரம்பரையாகச் செய்து வந்த கூலித் தொழிலைச் செய்ய விடாது பாலனைத் தடுத்தன. உடுத்தியிருந்த வேட்டி, சட்டையோடு வெறும் கையுடன் பெற்றோரிடமும், ஊராரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைப் பட்டினத்தை நோக்கி, பயணச்சீட்டுமின்றி சென்னைக்கு இரயிலேறினார் இவர்.

1981 ஆம் ஆண்டு. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் வந்து இறங்குகிறார். முதல் தடவையாக அவர் சென்னை வருகிறார். வாழ வழி தேடி சென்னைக்கு அன்றாடம் படையெடுத்த ஆயிரத்தில் ஒருவன் இவர்.

நின்றாலே தள்ளிக்கொண்டு போய் எங்கோ விட்டுவிடும் மக்கள் கூட்டம், பரபரப்பான வர்த்தகப் பரிமாற்றங்கள், குறுக்கு நெடுக்காக நெரிசலான வாகனப் போக்குவரத்துகள், சொந்தமில்லை, பந்தமில்லை, அனைவருமே முகம் தெரியாத மனிதர்கள், பரிச்சயமில்லாத அனுபவங்கள், ஒருபுறம் அதிர்ச்சி, மறுபுறம் வேலை கிடைத்து, நான் முன்னேறி விடுவேன் என்ற நம்பிக்கை. எழும்பூர் சுற்றுவட்டாரத்தில் இருக்கக் கூடிய சுற்றுலா, பயண ஓட்டல் நிறுவனங்கள் அனைத்திலும் வேலை கேட்டு ஏறி இறங்கினார். நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் ஏறி இறங்கிய பிறகு தான் தெரிய வருகிறது அறிமுகமில்லாதவர்களை வேலைக்குச் சேர்ப்பது வழக்கத்தில் இல்லை என்பது.

மேலும் எழும்பூர் இரயில் நிலையத்தில் உள்ள நடை பாதைகள் தான் பிச்சைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் மற்றும் தங்க வசதியில்லாதவர்களுக்கு வசிப்பிடம். அப்படி ஒண்டியவர்களில் இவரும் ஒருவர். எழும்பூர் இரயில் நிலையமே அவருக்கு வசிப்பிடமாகியது.

வயிற்றைக் கிள்ளும் பசி, வேலையின்மையால் விரக்தி, மனதில் பாரம், கண்களில் நீர், ஆடைகளில் அழுக்கு, முகத்தில் தாடி, தெருவோரப் பிச்சைக்காரனுக்குரிய இலட்சணங்கள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்தன. தினங்கள் வாரங்களை நோக்கி நகர ஆரம்பித்தன.

ஒரு நாள் இரவு 12 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த, இல்லை இல்லை பசி மயக்கத்தில் இருந்த பாலனின் உடம்பில் அடி விழுந்தது. விழித்துப்பார்த்தால் எதிரில் ஒரு போலீஸ்காரர், குப்பென்ற சாராய நெடியுடன் கையில் இலத்தியோடு “டேய் உன் பெயர்என்ன?” என்று பாலனைப் பார்த்து வினவ, “பாலன்” என்று பாலன் தன் பெயரைச் சொன்னார். போலீஸ்காரரோ சிறிது கூட யோசிக்காது தான் வைத்திருந்த இலத்தியால் பாலனை மீண்டும் அடித்தார். பாலனுக்கு தான் என்ன தவறு செய்தோம் ஏன் அந்த போலீஸ்காரர் தன்னை அடிக்கிறார் எனப் புரியவில்லை, அவர் மூக்கில் இரத்தம். அதிர்ச்சியுடன் அழுகையும் சேர்ந்து கொண்டது. அப்போது போலீஸ்காரர் “ஏண்டா நாயே, உன் பேரைக் கேட்டால் என் பெயரைச் சொல்ற” என மேலும் கோபத்தில் முறைத்தார். அப்போதுதான் பாலன் பார்த்தார். போலீஸ்காரர் சட்டையில் குத்திக் கொண்டிருந்த பேட்ஜிலும் தன் பெயரே இருந்தது என்பதை. அந்தப் போலீஸ்காரர் 5, 6 பேர் நின்று கொண்டிருந்த கும்பலைக்காட்டி “அவர்களுடன் போய் நீயும் நில்லுடா” என ஆணையிட்டார். பாலன் பயத்துடன் போய் நின்றார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவரிடம் “எங்களை ஏன் இந்த போலீஸ்காரர் இப்படிச் சித்திரவதை செய்கிறார்?” என வினவ, ஒருவர் “இது 75 கேஸ்! அதாவது, சந்தேகத்துக்குரியவர்கள் கிடைக்காவிட்டால் இப்படிப் பொது இடங்களில் கிடைப்பவர்களைப் பிடித்துக் கொண்டு போய் இந்தக் கேஸில் உள்ளே தள்ளி விடுவார்கள். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனிலும் இவ்வளவு சந்தேகக் கேஸ்கள் ஒரு மாதத்தில் பிடிக்கப்பட வேண்டும் எனும் கோட்டா – சிஸ்டத்தின் கீழேயே இவர்கள் செயல்படுகிறார்கள்” என்றார்.

விருந்தினர் ஒருவருடன்....
விருந்தினர் ஒருவருடன்….

அப்படியானால் விடிந்தால் பாலனுக்கு ஜெயில். பேந்தப் பேந்த விழித்து பயத்தோடு நின்ற பாலனுக்கு ஒரு வேகம், கொஞ்சம் விவேகம். சுற்றும் முற்றும் பார்த்தார். அந்தப் போலீஸ்காரர் சிறிது தூரத்தில் இன்னொருவனை அடித்து எழுப்பிக் கொண்டிருந்தார். இதுவே சரியான சமயம் என நினைத்து பிடித்தார் ஓட்டம். பாலன் ஓடுவதைக் கண்ட போலீஸ்காரர், “டேய் நில்லுடா! நில்லுடா..!!” என்று விரட்ட, பூனையைக் கண்ட எலியைப் போல பாலனும், எலியைப் பிடிக்க பூனையின் பாய்ச்சலோடு போல¦ஸ் காரரும் ஓடுகிறார்கள். ஓட்டப்பந்தயம் நிகழ்கிறது. பூனையிடம் எலி மாட்டிக் கொண்டால், அது பூனைக்கு ஒரு வேளை உணவு, எலிக்கோ மரணப் போராட்டம்.

சிறிதுநேரத்தில் திரும்பிப் பார்த்தபோது, போலீஸ்காரரைக் காணவில்லை. வழக்கம் போல அகப்பட்டவன் குற்றவாளி, தப்பித்தவன் சுத்தவாளி என்பது நடைமுறையானது. ஓடி ஓடிக் களைத்துப் போன பாலன் திசை தெரியாமல் நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் ஒரு இடத்தில் வரிசையாக ஆட்கள் அமர்ந்து கொண்டும், உறங்கிக் கொண்டும் இருந்ததைப் பார்த்தார். அந்த வரிசையில் அவரும்போய் அமர்ந்து கொண்டார். அந்த இடமே பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதி அங்கேயே அமர்ந்து உறங்கிப் போனார்.

பொழுது புலர்ந்தது. விடியற்காலை 5மணி, விழித்துப் பார்த்தால் அவருக்கு முன்னால் 20 பேர், பின்னால் 200 பேர். அப்போது ஒருவர் அவர் அருகில் வந்து, “இடம் தருவாயா தம்பி ரூ.2/-தருகிறேன்?” என்றார். (அப்போது முழுச்சாப்பாடு ஒன்றின் விலை ரூ.2/-ஆகும்) பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தைக் கொடுத்தார். ரூபாயைப் பார்த்துக் கண்ணில் ஒற்றிக் கொண்ட அவருக்கு இன்ப அதிர்ச்சி. இது அவருக்குக் கிடைத்த முதல் வருமானம்.

அந்த இடத்தை விட்டு வெளியே வந்த பாலன் சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது தான் அவர் கண்ணில் பட்டது “அமெரிக்க தூதராலயம்” (US Consulate) என்ற பெயர்ப்பலகை.

பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துப் பார்த்ததில் அமெரிக்கா செல்வதற்காக விசா பெற இப்படி வரிசையில் நிற்கிறார்கள் என்பதும், முடிந்தவர்கள் முந்தைய தின இரவே வந்து இது போல இந்த இடத்தில் வந்து நின்று இடம் பிடித்துக்கொள்கிறார்கள் என்றும், ஒரு சிலர் மணிக்கணக்காக நிற்க விரும்பாமல் இப்படி இடம் பிடித்துக் கொடுப்பவர்களிடம் பணம் கொடுத்து வரிசையில் சேர்ந்து கொள்கிறார்கள் என்பதும் பாலனுக்குத் தெளிவானது. பாலனுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. வாழ்க்கையின் இன்ப எல்லையைத் தொட்டுவிட்ட நினைப்பு, பாதுகாப்புக்கும் உறங்குவதற்கும் வருமானத்துக்கும் இனி இதுவே சிறந்த வேலை என முடிவெடுத்து விடுகிறார். அவரது வேலைத் திட்டங்கள் பரவலாக்கப்படுகின்றன. அவரும் வரிசையில் நிற்பது மாத்திரமின்றி ஒரு 5 பேருக்கு இடையில் ஒரு கல்லையோ அல்லது ஒரு துண்டையோ போட்டுக் கூடுதலாகவும் இடம் பிடித்து விடுகிறார். அவர் வருமானம் 2, 5,10, 20 ஐ தாண்டி உயர ஆரம்பித்தது.

தூதரகத்துக்கு வரும் பயண முகவர்களுடன் (Travel Agents) பழக்கம் ஏற்படுகிறது. விமான டிக்கெட்டின் விலை, விசா, பயணத் தேவைக்கான விபரங்களை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்கிறார். இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தூதரகத்தின் வரிசையில் இடம் பிடிக்கும் நேரத்தைப் பயன்படுத்தி, அங்கு வரிசையில் நிற்கும் மற்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களுக்குப் பயணச் சீட்டு வாங்கிக் கொடுக்கவும் மற்றும் பயணத்தேவைகளை பூர்த்தி செய்யவும், விமான நிலையம் வரை அவர்களது பெட்டி படுக்கைகளைச் சுமந்து சென்று வழியனுப்புவது வரையிலும் பாலன் பொறுப்பேற்கிறார்.

வாடிக்கையாளரின் திருப்தியே தனது திருப்தி என்பதைக் கொள்கையாகக் கொண்டு பாலன் இயங்க ஆரம்பிக்கிறார். பாலனின் பழக்க வழக்கம், நாணயம், நம்பிக்கை, உழைப்பு இவை சென்னை மாநகரில் இருக்கக்கூடிய பயண முகவர்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்கவும், வாடிக்கையாளர் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளவும் காரணமாக அமைந்தன.

பாலனை நம்பி எத்தனை இலட்சங்களும் கடன் கொடுக்கப் பல விமானப் பயண முகவர்கள் முன்வந்தனர். இவற்றையே மூலதனமாகக் கொண்டு 17.01.1986 மதுரா டிராவல் சர்வீஸ் பிறந்தது.

இதற்கு பிறகு பாலனின் வாழ்க்கையே மாறியது. எந்த எழும்பூரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டாரோ அதே எழும்பூரின் அடையாளமான இம்பீரியல் ஓட்டலில் இவரது திருமணம் நடைபெற்றது. புது மனைவி, புது வாழ்க்கை.

எல்லாமே ஸ்மூத்தாக போய்க்கொண்டிருந்தால் எப்படி ? அயல்நாட்டு வேலைக்கு ஆளெடுப்பது தொடர்பாக யாரோ ஒரு டிராவல் ஏஜென்ட்டிடம் இவர் லட்சகணக்கில் ஏமாற… இவரிடம் சுமார் 20 பேர் ஏமாந்தார்கள். மறுபடியும் BACK TO PAVILION ஆனது வாழ்க்கை. இவரைவிட மிகவும் வறுமையில் இருந்தவர்களுக்கு தன்னால் இயன்ற பணத்தை புரட்டி கொடுத்தார். மீண்டும் பசி… பட்டினி…!

இந்த நேரம் பார்த்து இவர்கள் குடும்பத்தில் ஒரு புது வரவு. ஆமா… இவர் மனைவி முதல் குழந்தையை கருவில் சுமக்கிறார். இருக்குற கஷ்டத்தில் குழந்தையை எப்படி பெற்று வளர்த்து ஆளாக்குவது? டாக்டரிடம் கலைக்க கேட்டுக்கொண்டபோது, அந்த ஸ்டேஜ் தாண்டிவிட்டது. இனி கருவை கலைக்க முடியாது என்று கைவிரித்துவிட்டார். விளைவு இவர்களது வறுமையை பங்குபோட மற்றுமொரு ஜீவன் வந்துவிட்டது.

துவண்டுவிடாமல் நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டார். அந்த நேரம் பார்த்து இலங்கைப் பிரச்னை வெடிக்க, பல தமிழர்கள் அயல்நாடு செல்லவேண்டி பயண டிக்கெட், விசா உள்ளிட்ட தேவைகளுக்கு இவரிடம் வந்தனர். வர்த்தகம் ஓரளவு உயர்ந்தது.

Madura Travels

இன்று மதுரா ட்ராவல்ஸ் வருடத்திற்கு ரூ.20/- கோடிக்கும் மேலான வர்த்தக எல்லையைத் தாண்டி, சொந்தக் கட்டிடத்தில் எழும்பூர் இரயில் நிலையத்துக்கு எதிரில் மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிமிடெட் ஆக உயர்ந்து நிற்கிறது. இன்று இந்தியாவிலேயே அதிக அங்கீகாரங்களைப் பெற்றிருக்கும் பயண நிறுவனத்தின் சொந்தக்காரர்! தமிழக அரசின் சுற்றுலாக் கழக ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருப்பது இவருடைய அனுபவத்திற்கு கிடைத்த கௌரவமாகும்.

அனைத்து தமிழ் திரை இசைக் கலைஞர்களையும் ஒரே இடத்தில் திரட்டி 1992 இல் மாபெரும் இசை விழாவினை நடத்தி, அதை காசெட்டில் பதிவு செய்து அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் மூலம் வெளியிடச் செய்து உலெகெங்கும்  தமிழர்களின் வீடுகளில் பொக்கிஷமாக இடம் பெற செய்தவர். 1987 முதல் 2007 வரை ஆயிரத்துக்கும் அதிகமான கலைஞர்களை உள்ளடக்கி இருநூறுக்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளை பல அயல்நாடுகளில் நடத்தியுள்ளார்.

இவரது மதுரா இன்ஸ்டிட்டியூட் எனும் சுற்றுலா தொடர்பான பயிற்சி பள்ளியையும் நிறுவியுள்ளார். இதில் உடல் ஊனமுற்றவர்களுக்கு கட்டணமின்றி இலவச பயிற்சி அளிப்பதோடு உடனடி வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்கிறார்.

அது மட்டுமா? தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்  என்கிற பாரதியின் கனவுக்கிணங்க, தமிழின் அறிவியல் பூர்வமான உலகளாவிய வளர்ச்சிக்கு பல முயற்சிகள் எடுத்துள்ளார். அதில் ஒன்று ‘தமிழ் குரல்’ ஈனும் இணைய வானொலி. ஒற்றை மனிதனின் அரசாங்கமாய் இவர் ஆற்றிய தமிழ் பணிகளை பட்டியலிட்டால் அதற்கு முடிவே கிடையாது.

கல்லூரிப் படிப்பை எட்டமுடியாத இவரைக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், கரம்கூப்பி வரவேற்கின்றன, தம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை உரை நிகழ்த்துவதற்காக!

சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டே தன்னை வழிநடத்திக் கொண்டு வரும் இவர் சுற்றுலா – மனிதம் என்பவைகளுக்கு மாத்திரமே முன்னுரிமை தந்து வாழ்ந்து வருபவர்.

இவரது குடும்பத்தினர் என்றால் இவரது தாய் இசக்கியம்மாள் , தந்தை அமரர் கண்ணையா, மனைவி சுசீலா, குழந்தைகள் இருவர் – மகள் சரண்யா மகன் ஸ்ரீஹரன்.

இன்றும் எளிமையான கதர் சட்டை, கதர் வேட்டி, நெற்றியில் சந்தனம் – குங்குமம், காலில் இரப்பர் செருப்புடன் உழைத்து வரும் மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் (பி) லிமிடெட்டின் தலைவர், நிர்வாக இயக்குநர் வீ.கே.டி. பாலன் பாராட்டுக்குரியவர். வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.

பாலன், அன்று அவரை அடித்து விரட்டிய போலீஸ்காரரைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதை வாசிப்பவர்கள் அந்த போலீஸ்காரரைச் சந்தித்தால் பாலனைத் தொடர்புகொள்ளவும். பாலனுக்குக் கைவிலங்கு மாட்ட எத்தனித்த அந்த போலீஸ்காரரின் விரலுக்கு ஒரு தங்க மோதிரத்தை அணிவித்து அழகு பார்க்க விரும்புகிறார் பாலன்!

திரு.பாலன் தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு மதிப்பளிப்பது அமர்சேவா சேவா சங்கத்தை சேர்ந்த திரு.ராமகிருஷ்ணன் அவர்களை தான். ரமாக்ரிஷணன் அவர்களுக்கு கழுத்துக்கு கீழே எந்த வித செயல்பாடும் கிடையாது. இருப்பினும் தொண்டின் சிகரமாய் வாழ்ந்துவருகிறார். (இவரை பற்றிய ஒரு பதிவு விரைவில் வருகிறது. ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய  அற்புத மனிதர் இவர்.)

தனது 'மதுரா மாமனிதர் விருது' வழங்கும் விழாவில் அமர் சேவா சங்க நிறுவனர் திரு.ராமக்ரிஷ்ணனுடன். (சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர்!).
தனது ‘மதுரா மாமனிதர் விருது’ வழங்கும் விழாவில் அமர் சேவா சங்க நிறுவனர் திரு.ராமக்ரிஷ்ணனுடன். (சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர்!).

வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டால் கடந்து வந்த பாதையை மறந்துவிடுவர் பலர். அனால் பாலன் அவர்கள் அப்படியல்ல. எத்தனையோ அறப்பணிகளை தனிப்பட்ட முறையிலும் தனது நிறுவனம் சார்பாகவும் இன்றும் செய்து வருகிறார். கார்கில் போர், குஜராத் பூகம்பம், அண்மையில் நிகழ்ந்த உத்தர்காண்ட் பேரழிவு, முள்ளிவாய்க்கால் போர் ஆகியவற்றுக்கு தாரளமாக நிதி உதவி அளித்திருக்கிறார்.

தனது வெற்றிக்கு காரணமாக திரு.பாலன் அவர்கள் கூறுவதென்ன?

“நான் அடிக்கடி சொல்றது தான். நான் அதிகம் படிச்சதில்லை தம்பி. ஆனாலும் நான் ஜெயித்தேன். காரணம், என் விடாப்பிடியான உழைப்பு. ஆரம்பத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் தினசரி ஐந்து ரூபாய் கூலிக்கு வேலையில் சேர்ந்தேன். வெளிநாட்டுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை உரியவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதே என் வேலை. அந்த வேலையை செய்துகொண்டிருந்தபோதுதான் எனக்கான திருப்புமுனை வந்தது. ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புக்கு தினசரி பயணிகள் கப்பல் சென்றுவரும். அந்த கப்பலில் செல்கிற வியாபாரிகளுக்குத் தேவையான விசாவை நான் வேலை பார்த்த நிறுவனம் வாங்கித் தந்தது. இந்த விசாவை தர ஒருமுறை நான் ராமேஸ்வரம் போனேன்.

நான் போன ரயில், ராமேஸ்வரத்திற்கு அருகில் பாம்பன் தூக்கு பாலம் ரிப்பேர் காரணமாக மண்டபம் ரயில் நிலையத்திலேயே நின்றுவிட்டது.  பஸ் பாலம் அப்போது இல்லை. காலை ஒன்பது மணிக்குள் பயணிகளுக்கான  பாஸ்போர்ட், விசாவை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்தாக வேண்டும். நான் எப்படியாவது இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனே ரயில் தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினேன். பாலத்தைக் கடந்துவிட்டால் எப்படியாவது துறைமுகத்தை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.

ஆனால், பாலத்தைக் கடப்பது சாதாரணமாக இல்லை. கடல் சீற்றமாக இருந்தது. இரும்பு பாலத்தின் வழி நெடுக கிரீஸ் தடவியிருந்ததால் கால் வழுக்கியது. திரும்பிப் போகலாம் என்றால் கஷ்டப்பட்டு பாதித் தூரத்தைக் கடந்திருந்தேன். திரும்பிச் செல்கிற தூரத்தை முன்னேறிச் செல்வோம் என்கிற துணிவோடு, சூட்கேஸை முதுகோடு கட்டிக்கொண்டு பாலத்தில் தவழ்ந்தபடி கடந்து போனேன். கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறோம், எப்படி தக்க வைத்துக்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.”

With VKT Balan sir

கிருஷ்ண கானத்தில் டி.எம்.எஸ். அவர்களின் வெண்கலக் குரலில் நம்மை உருக்கிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாடலில் “ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்” என்றொரு வரி வரும். இன்று இவரது மதுரா அலுவலகத்தில் எல்லா நாட்டுக்கொடியும் பறக்கிறது. எத்தனை பெரிய சாதனை!!

புறப்படுவதற்கு முன், “சார்… உங்களுடைய வாழ்க்கை பயணத்தை இரண்டே வரிகளில் ஒரு மெஸ்ஸேஜ் போல எங்கள் வாசகர்களுக்கு சொல்லமுடியுமா?”

“பணிவு… நாணயம்… இது இரண்டும் எனக்கு இரண்டு கண்கள் போல. ஒருமுறை ஒருவர் வாடிக்கையாளராகிவிட்டால் அவரை வாழ்நாள்  முழுதும் பாதுகாக்கும் பணிவும் நாணயமும் என்னிடம் இருக்கிறது. இது தான் எனது சொத்து தம்பி!”

“அழைப்பிதழை தயார் செய்துவிட்டு நேரில் வந்து தருகிறோம் சார்…”

“அதெல்லாம் எந்த பார்மாலிட்டியும் வேண்டாம் தம்பி. நேரம்… நேரம்… ரொம்ப முக்கியம். நீங்களும் ஓடிக்கிட்டுருப்பீங்க… நானும் ஓடிக்கிட்டுருப்பேன்… சும்மா ஒரு போஸ்ட்ல அனுப்பினா போதும். அட்ரெஸ்க்காக. நான் நிச்சயம் வந்து கலந்துக்குறேன்!” என்றார்.

“சார்… எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு பாரதி விழாவில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட உங்களுக்கு எங்கள் தளம் சார்பாக நன்றி சார்…!”

[இந்த பதிவை தயார் செய்ய திரு.பாலன் அவர்கள் நம்மிடம் அளித்த PAMPHLET கையேடு ஒன்று மிகவும் உதவியாக இருந்தது. பாரதி விழாவில் அதை அனைவருக்கும் வழங்க அவரிடம் சுமார் 250 கையேடுகளை கேட்டிருக்கிறேன். தருவதாக சொல்லியிருக்கிறார்!!]

விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.

‘நல்லதோர் வீணை செய்தே… அதை நலம் கெட புழுதியில் இறைவன் என்றுமே எறிவதில்லை’ என்பதைத் தான் பாலன் அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அந்த நம்பிக்கையோடு தான் நாமும் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறோம்.!

“இறைவா… வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒருவருக்கு வெற்றிக்கோப்பையை கொடுத்துவிட்டாய்… எனக்கு எப்போது தரப்போகிறாய்? குறைந்தபட்சம் காலில் நீ கட்டியிருக்கும் குண்டுகளையாவது அவிழ்த்துவிடு… என்னால் அவைகளையும் இழுத்துக்கொண்டு ஓடமுடியவில்லை…!!” நம்மையுமறியாமல் கண்கள் கசிந்தது!

ஆனால் இறைவன்…. கண்டும் காணாதது போலல்லாவா இருக்கிறான்!!

[END]

9 thoughts on “வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!

  1. டியர் சுந்தர்ஜி

    திரு பாலனின் உண்மை கதையை நீங்கள் எழுதியதை படித்து கண்கள் குளமாகின. நீங்கள் உண்மையில் சிறந்த கதாசிரியர். திரு பாலன் அவர்களை போல் துணிவும் நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் வாழ்கையில் வெற்றி பெறலாம். திரு பாலன் அவர்களை பாரதி விழாவில் சந்திக்க போவதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நம் எல்லாருக்கும் ரோல் மாடல். அவருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

    “இறைவா… வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒருவருக்கு வெற்றிக்கோப்பையை கொடுத்துவிட்டாய்… எனக்கு எப்போது தரப்போகிறாய்? குறைந்தபட்சம் காலில் நீ கட்டியிருக்கும் குண்டுகளையாவது அவிழ்த்துவிடு… என்னால் அவைகளையும் இழுத்துக்கொண்டு ஓடமுடியவில்லை…!!” நம்மையுமறியாமல் கண்கள் கசிந்தது! – what a கிரேட் sentence

    THANK U FOR YOUR SUPERB போஸ்ட். MAY GOD BLESS YOU .AND YOU WILL REACH SUCH எ GREATER HEIGHTS

    நன்றி
    UMA

  2. மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களுக்கு,

    எல்லோருக்கும் வாழ்கையில் நம்பிக்கை கொடுக்கும் ஒரு சிறப்பான பதிவினை கொடுத்த, தாங்களா மனம் தளருவது

    இதுவும் கடந்து போகும். எல்லாம் நன்மைக்கே.

    நம் கடமையை செய்வோம். பலன் தன்னால் வரும்

    வெகு விரைவில் தாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு இறையருள் கிடைக்கும்

    .

  3. நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் அளிக்கும் உன்னதமான பதிவு

    வாழ்க்கையில் வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் குவிந்து கிடக்கின்றன – சிலர் அதைபற்றி சிந்திக்காமல் புலம்புகின்றனர் – சிலர் அதைப்பற்றியே எந்த நேரமும் சிந்தித்து தமது இலக்கை அடைகிறார்கள் – வாழ்க்கையின் முன்னேற்றப்பாதையில் தமக்கு ஏற்படும் அவமானங்களை வேகுமானங்கலாக கருதி முன்னேறுபவர்கள் தான் சாதனையாளர்களாக உயர்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களை உயர்த்தும் ஏணியை திகழ்கின்றனர்

    ஒரு பெண் தாய் ஆகும்போது எல்லை இல்லாத சந்தோசத்தை அடைகிறாள் – அவளுக்கு தன வயிற்றில் பிறக்கப்போகும் பொக்கிஷத்தை காண எல்லை இல்லாத ஆவல் இருக்கும் – இருந்தபோதும் அந்த கருவை பத்து மாதங்கள் பொறுமையோடு கண்ணும் கருத்துமாய் சுமக்க வேண்டியது அவளுடைய கடமையாகிறது – அந்த பொறுமையின் பரிசு பத்தாவது மாதம் உலகில் உள்ள சந்தோசத்தை எல்லாம் உருக்கி செய்தார்போல தவழும் அவளது குழந்தை

    எந்த ஒரு செயலுக்குமே ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது – நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பொறுமையாய் இருந்து கடமையை செய்ய வேண்டியது அவசியமாகிறது

    சுந்தர், நீங்கள் உங்கள் இலக்கை அடையப்போகிற நாள் வெகு தொலைவில் இல்லை – இறைவன் உங்களை சரியான பாதையில் வழிநடத்தி செல்வதாகவே கருதுகிறேன் – மனம் தளர வேண்டாம்

    திரு பாலன் ஐயா அவர்களைப்போல உங்களை பற்றிய கட்டுரையை படித்து இன்புற நானும் என்னை போல பல ஆயிரக்காணக்கான நமது தல வாசகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்

    பொறுமையே பெருமை சேர்க்கும்

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை நின்று உங்கள் இலக்கை விரைவில் அடைய வழிகாட்டி அருள வேண்டுகிறோம்

    வாழ்க வளமுடன் !!!

  4. திரு பாலன் மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிமிடெட் அவர்களின் வாழ்கை பற்றிய செய்தியை படிக்கும் போது நம்மையறியாமல் கண்களில் நீர் வருகிறது. அவர்களின் வாழ்கை மூலம் பணிவு… நாணயம், வீடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்ற அரிய பொக்கிஷம் நாம் அறியலாம் .

    இந்த தளம் நடத்துவது, விழா நடத்துவது உட்பட அனைத்திலும் உள்ள கஷ்டங்கள் நமக்கு கொஞ்சமாவது தெரியட்டுமே என்று தான் சுந்தர்ஜி இந்த பதிவில் சற்று மனம் திறந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கவலைவேண்டாம். நல்லதே நடக்கும்.

  5. எளிமையின் சிகரம் திரு , பாலன் சார் அவர்கள் , நம் பாரதியின் விழாவிற்கு வருகை தருவதினால் நம் விழா சிறப்பாக அமையும் என்பதில் சண்தேகம் இல்லை… அவரை காண மிகவும் ஆவலுடன் உள்ளோம் …

  6. வாழ்கையில் பட்ட அடிகள் வேர்களாக மறைந்திருக்க ,இன்று சமுகத்திற்கு தெரிவது மலர்கள் மட்டுமே … உழைப்பால் உயர்ந்த மனிதருக்கு எங்கள் உளம் கனிந்த வாழ்த்துக்கள் ..

  7. “ETHIR NEECHAL”—One of my most favoruite words–!!
    And BALAN sir has taught me and everyone HOW TO RISE AGAINST THE TIDE…
    What determination to reach the other side of pamban bridge—who else would have thought so??
    Dis also shows his commitment to his customers—a thing which is commonly uncommon in today’s world!!
    Also to have an office in egmore—goodness its not a small thing!!
    And what maturity to gift the policeman who hit him—this is the best lesson Sir could have taught him!!
    Another trait is—Sir learnt the tricks of the trade before starting his business while working itself—without in-depth knowledge of the trade , survival won be possible!!
    Blessed to have read about SUCH a great SOUL!!
    All the qualities SIR spoke about would not be even discussed in the best colleges of our nation!! NO WONDER practical knowledge is superior to theoretical knowledge!!
    I would keep writing about BALAN sir—if I am allowed too—Such is the astonishment and inspiration I derived from Sir.

    Regards
    R.HariHaraSudan
    “HW WHO KNOWS THE SELF KNOWS ALL.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *