Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

print
பாரதி விழா நடைபெற்ற இடத்தில் மேடை அமைப்பு மற்றும் STAGE BACKDROP ஆகியவைகளை வடிவமைப்பது தொடர்பாக அளவெடுக்க டிசம்பர் 1, அதாவது சென்ற ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு, நம் நிகழ்ச்சி நடந்த இடமான சக்தி விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தோம்.

அது தொடர்பாக யோசனைகள் கேட்க, வீடியோ கிராபர் மற்றும் ஆடியோ அமைப்பாளர் ஆகியோரையும் அன்று வரச் சொல்லியிருந்தோம். அவர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் நாம் MEASUREMENT செய்து கொண்டிருந்தபோது, நிகழ்ச்சி நடைபெற்ற அந்த ஹால், அன்னதானத்திற்கு தயாராகி கொண்டிருந்தது.

DSC06429

சற்று நேரத்திற்க்கெல்லாம் சுமார் 50-60 பேருக்கு அங்கு அன்னதானம் நடைபெற்றது. கோவில்களில் தினசரி நடக்கும் அன்னதான திட்டத்தின் கீழ், அது நடைபெறுவது தெரிந்தது.

பயனாளிகளை பார்க்கும்போது ஏழை எளியவர்களும், மிகவும் வயதானவர்களும், வியாதியஸ்தர்களும் பெருமளவு அந்த அன்னதானத்தில் பங்கேற்று சாப்பிடுவது தெரிந்தது.

நமக்கு ஒரு நாள் இதற்கு உபயம் செய்ய வேண்டும் என்று தோன்ற, கோவில் அலுவலகத்தில் இதற்கு எவ்வளவு ஆகும்? என்று விசாரித்தபோது, அரசு அளிக்கும் இந்த அன்னதான திட்டத்திற்கு உபயம் செய்ய விரும்பினால் ரூ.1000/- செலுத்தவேண்டும் என்றும், 52 பேருக்கு அன்னதானம் (சாதம், பொரியல், சாம்பார், ரசம், மோர்) ஆகியவற்றுடன் அன்னதானம் நடைபெறும் என்றும், அதை வடை பாயசத்துடன் அளிக்க விரும்பினால், கூடுதலாக ரூ.800/- அவர்களிடம் செலுத்தினால் அவர்கள் வடை, பாயசம் ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பார்கள் என்றும், (அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்வதால் இந்த 800க்கு ரசீது கிடையாது)  நாம் விரும்பினால் நாமே வந்திருந்து நம் கைகளால் பரிமாறலாம் என்றும் கூறினார்கள்.

“இது நல்லாயிருக்கே…” என்று நினைத்துக்கொண்டு, மனதில் குறித்து வைத்துக்கொண்டோம்.

தொடர்ந்து பாரதி விழா தொடர்பான பணிகளில் மூழ்கிவிட்டோம். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையில் இந்த முறை பாரதி விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபடியால், இது போன்ற விழாக்களின் போது நாம் வழக்கமாக செய்யும் அன்னதானம் இம்முறை செய்யப்படவில்லை.

அன்னதானத்திற்குரிய ஸ்பான்ஸர் தொகை குறைந்தது ரூ.3500/- ஆகிறது. பிரேமவாசம், திருவள்ளுவர் குருகுலம் எங்கு அன்னதானம் செய்தாலும் குறைந்தது இந்த தொகை வேண்டும். நமக்கிருந்த நெருக்கடியில் விழாவை நல்லபடியாக நடத்தி முடித்தால் போதும், வேறு எதையும் இப்போதைக்கு இழுத்து விட்டுக்கொள்ளவேண்டாம் என்றே தோன்றியது. எனவே அன்னதான யோசனையை ஒதுக்கிவிட்டோம்.

பாரதி விழா குன்றத்தூர் முருகன் அருளால் மிக சிறப்பாக நடைபெற்றபோதும், அன்னதானம் செய்யாமல் நடைபெற்றபடியால் எம்மை அது உறுத்திக்கொண்டே இருந்தது. ஆயிரம் சமாதானம் சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஏனெனில், பசிக்கொடுமைக்கு எதிராக பாரதியை போல பாடியவர்கள் எவரும் இருக்கமுடியாது.

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்று முழங்கியவனாயிற்றே….

அவர் பிறந்தநாளை அன்னதானம் இன்றி கொண்டாடியது என்னவோ போலிருந்தது.

ஆகவே, எத்தனையோ சிறப்புக்களுடன் பாரதி விழா நடைபெற்றபோதும் அன்னதானம் இன்றி நடைபெற்றது குறையாகவே இருந்தது.

எப்படியாவது டிசம்பர் 11, பாரதி பிறந்த நாளன்று எங்காவது அன்னதானம் செய்துவிடுவோம். (டிசம்பர் 11 தான் பாரதியின் பிறந்த தினம். அனைவரின் சௌகரியம் கருதி டிசம்பர் 8 ஞாயிறு நாம் விழா ஏற்பாடு செய்திருந்தோம்). அப்போது தான் இந்த உறுத்தலில் இருந்து விடுபடமுடியும் என்று தோன்றியது.

DSC06430

இந்நிலையில், இந்நிலையில் விழா முடிந்த அடுத்த நாள் திங்கட்கிழமை மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கோவில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க கோவிலுக்கு சென்றிருந்தோம்.

அப்போது, மதிய அன்னதான திட்டத்திற்கு ஒருவர் உபயம் செய்துகொண்டிருந்தார்.

என்ன தோன்றியதோ… “டிசம்பர் 11 அன்னைக்கு அன்னதான உபயம் வேகன்ட் இருக்கா பாருங்க… இருந்தா அன்னைக்கு நாம செய்றோம்…” என்று கேட்க, “அன்னைக்கு என்ன?” என்றார்கள்.

“அன்னைக்கு தான் சார்… பாரதியாரின் பிறந்த நாள்…!”

“கொஞ்ச இருங்க… லெட்ஜரை பார்த்து சொல்றோம்” என்றவர்கள் சில நொடிகளில் அன்று வேகன்ட் இருப்பதாக சொன்னார்கள். நம் நேரம்… அன்று யாரும் உபயம் செய்யவில்லை. (உபயம் செய்யாத அன்று அரசாங்கத்தின் கணக்கில் அது நடைபெறும்).

உடனடியாக எம் தனிப்பட்ட பணம் ரூ.1000/- செலுத்தி டிசம்பர் 11 அன்று அன்னதானத்திற்கு உபயம் செய்துவிட்டோம். வடை, பாயசத்துடன் செய்ய விரும்பினால் கூடுதலாக ரூ.800/- செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ‘செய்றது செய்றோம்… நல்லா செஞ்சிடுவோமே’ என்று அதற்கும் ஒப்புக்கொண்டு பக்கத்தில் ஏ.டி.எம். சென்று பணம் வித்ட்ரா செய்து கூடுதலாக ரூ.800/- செலுத்திவிட்டோம்.

“அன்னதானத்தை நல்லபடியாக செஞ்சிடுங்க. நான் வரமுடியுமான்னு தெரியலே…” என்றோம்.

“நீங்க அவசியம் வரணும் சார்…. நீங்களே வந்திருந்து உங்க கையால பரிமாறிட்டு, நீங்களும் அவங்க கூட சேர்ந்து சாப்பிடனும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

“சரி… முயற்சிக்கிறோம்!” என்று கூறி விடைபெற்றோம்.

DSC06433

கோவிலில் இருந்து விடைபெற்று வீட்டுக்கு திரும்பிகொண்டிருக்கும்போது, நொய்டாவிலிருந்து சுந்தரகாண்ட அனுபவத்தை எழுதியனுப்பியிருக்கும் வாசகர் ஸ்ரீநாத் தொடர்புகொண்டார்….

“சுந்தர் சார்… பாரதி விழா செலவுகளுக்கு ரைட் மந்த்ரா அக்கவுண்ட்ல கொஞ்சம் பணம் போட்டிருக்கேன். விழாவுக்கு முன்னேயே செய்யனும்னு நினைச்சேன்… முடியலே. ஸாரி… இன்னைக்கு தான் முடிஞ்சுது” என்றார்.

அவரிடம், அன்னதானத்திற்கு நாம் பணம் கட்டிவிட்டு வந்த விஷயத்தை கூறி, உங்கள் தொகையை அதற்கு  கொடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள் என்றோம்.

அவருக்கு ஒரே மகிழ்ச்சி.

வீட்டிற்கு வந்ததும் நண்பர் பிரேம் கண்ணன் மற்றும் வாசகி சுபாஷினி அம்மாவை தொடர்புகொண்டு கோவிலில் அன்னதானம் ஏற்பாடு செய்திருக்கும் விபரத்தை கூறி, “எம்மால் நேரில் போகமுடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் போய் அன்னதானத்தை நல்லபடியாக முடித்துவிட்டு வரமுடியுமா? அப்படியே நீங்களும் சாப்பிட்டுவிடலாம்” என்று கூறினோம்.

இருவரும் ஒப்புக்கொள்ள “அப்போ…. நீங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள். நாம் முடிந்தால் வருவோம். அதுவும் எனக்கு லீவ் கிடைப்பதை பொறுத்து!” என்றோம்.

“நீங்க கவலைப்படவேண்டாம். நாங்க பார்த்துக்குறோம்” என்று நமக்கு ஒரு பெரிய RELIEF தந்தார்கள்.

புதன்கிழமை மதியம் சரியாக 12.00 மணிக்கு கோவில் சென்றுவிட்டோம். (அலுவலகத்தில் அரை நாள் லீவ் அப்ளை செய்ய அதிசயமாக அது சாங்க்ஷன் ஆகிவிட்டது.).

பிரேம் கண்ணனும், சுபாஷினி அம்மாவும் வந்துவிட (இருவருமே நம் உழவாரப்பணிகளில் முன்னின்று உதவுபவர்கள்) சரியாக அன்னதானம் 12.00 மணிக்கு துவங்கியது.

அனைவருக்கும் முன்கூட்டியே டோக்கன் தரப்பட்டு பின்னர் பந்தியில் அமரவைக்கப்பட்டனர்.

DSC06435

அன்னதானம் துவங்குவதற்கு முன்பு, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு…

“வழக்கமாக இங்கு அரசாங்கம் அன்னதான திட்டத்தின் கீழ் தினசரி அன்னதானம் நடைபெற்றாலும், உபயதாரர்கள் உபயம் செலுத்தி சில நாட்கள் நடைபெறுவதுண்டு. இன்று உங்களுக்கு வடை, பாயசத்துடன் ஏன் அன்னதானம் நடைபெறுகிறது தெரியுமா?” என்று கேட்டபோது, அனைவரும் “தெரியாது?” என்பது போல எங்களை பார்த்தனர்.

“இன்றைக்கு மகாகவி பாரதியின் பிறந்தநாள். எனவே உங்களுக்கு வடை, பாயசத்துடன் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. பசிக்கொடுமைக்கு எதிராக பாரதியை போல பாடியவர்கள் எவரும் இருக்க முடியாது.”

“பாரதி பசி குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா??? தனியொருவனுக்கு உணவில்லை எனில்……” நாம் சொல்லி முடிப்பதற்குள் பலர், “ஜகத்தினை அழித்திடுவோம்” என்று அனைவரும் குரல் கொடுத்தனர். கேட்கவே சந்தோஷமாக இருந்தது.

“ஆம்… தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி ஒரு ஏழையின் பசி குறித்து குமுறியிருக்கிறார். இன்று உங்களுக்கு வடை, பாயசத்துடன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெறுகிறது. ஆனால், பாரதி தன் வாழ்நாளில் இது போன்று வடை, பாயசத்துடன் சாப்பிட்ட நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே இன்று நீங்கள் சாப்பிடும் இந்த விருந்துக்கு பாரதிக்கு தான் நன்றி சொல்லவேண்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!” என்று ஒரு பக்கம் பரிமாறிக்கொண்டே மறுபுறம் அவர்கள் அனைவருக்கும் பாரதியை பற்றி கொஞ்சம் எடுத்துக் கூறினோம்.

DSC06440

நண்பர்களும் உடனிருந்து பரிமாற, பந்தி வேகமாக நடைபெற்றது.

பந்தியில் அமர்ந்திருந்தவர்களிடம் கோவில் ஊழியர்கள் சென்று டோக்கனை கேட்டு பெற்றுக்கொண்டார்கள். ஒரு பையனிடம் டோக்கன் இல்லை. அவனை கோவில் நிர்வாகத்தினர் எழுப்பிவிட்டுவிட்டனர். எமக்கு என்னவோ போலிருந்தது.

“சார்… பரவாயில்லே….இருக்கட்டுமே… ஏன் எழுப்பனும்?”

“இல்லே சார்… டோக்கன் வாங்காம சாப்பாடு போடக்கூடாது என்பது ரூல்ஸ். மேலும் இப்படி இடையில் இவர்களை அனுமதித்தால் முறைப்படி காத்திருந்து டோக்கன் பெற்றுக்கொண்டு சாப்பிடுபவர்களுக்கு உணவு போதாமல் போய்விடும். இது போன்றவர்களை காத்திருக்குமாறு கூறிவிட்டு, அனைவரும் சாப்பிட்ட பின்பு சாப்பாடு மிகுதியாக இருந்தால் சாப்பிட செய்வோம்.” என்றார்.

DSC06439

சரி… இதில் நாமெங்கே தலையிடுவது…?

இருப்பினும் பசியோடு உட்கார்ந்தவர் எழுப்பப்பட்டது எம்மை என்னவோ செய்தது. பந்தியில் அமர்ந்தவர்களை எழுப்பவது பாபத்திலும் மிகப் கொடிய பாபம்.

“இறைவா… என் மனக்குறையை நீ தான் போக்கவேண்டும்” என்று கணம் பிரார்த்தித்துவிட்டு பந்தியை துவக்கினோம்.

சாதம், பொரியல், சாம்பார், ரசம், மோர், வடை, பாயசம் என விருந்து ஜோராக நடைபெற்றது.

இது போன்ற கோவில் அன்னதானங்கள் சோம்பேறிகளை ஊக்குவிப்பதாக கருத்துடையவர்கள் ஒரு முறை வந்திருந்து இந்த பயனாளிகளை பார்க்கவேண்டும். அப்போது தான் அவர்கள் கருத்து எந்தளவு தவறு என்று புரியும்.

காரணம், சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் ஏழைகள், முதியவர்கள், போக்கிடம் அற்றவர்கள், உழைக்க உடலில் தெம்பில்லாதவர்கள், அங்கஹீனமுடையவர்கள், இப்படிப்பட்டவர்கள் தான்.

நண்பர் பிரேம் கண்ணன், சுபாஷினி அம்மா
நண்பர் பிரேம் கண்ணன், சுபாஷினி அம்மா

ஒரு முதியவரிடம் பேச்சு கொடுத்ததில், “தம்பி… எனக்கு ஒரே ஒரு பொண்ணு. அவளுக்கும் வாழ்க்கை சரியா அமையலே. எனக்கும் சாப்பாட்டுக்கு வழியில்லே. வீடில்லே. உழைக்கவும் உடம்புல தெம்பில்லை. எங்கே போறதுன்னும் தெரியலே. இது மாதிரி அன்னதானத்தை நம்பித் தான் என் காலத்தை ஓட்டிக்கிட்டுக்கேன்” என்றார்.

இப்படி ஒவ்வொருவரிடமும் ஒரு சோகம் ஒளிந்திருப்பது அவர்கள் முகத்தை பார்த்த போது புரிந்தது. ஒரு சிலரை தவிர்த்துவிட்டு பார்த்தால் அனைவருமே உண்மையில் அந்த பொழுது உணவுக்கு வழியில்லாமல் இருப்பவர்கள் தான்.

(பல ஏழைகளின் பசியை தினசரி இது போலத் தீர்த்துக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் தான் நம் பாரதி விழா நடைபெற்றது. அப்படி என்றால் அந்த விழா எத்தனை மகத்துவம் பெற்றிருக்கும் என்று யூகித்து பாருங்கள்!)

அன்னதானம் நம் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடையது. அன்னதானத்தை போற்றாத பக்தி இலக்கியங்களே இல்லை. சிவனடியார்கள் வரலாற்றை கூறும் அறுபத்து மூவர் கதைககள், திருமால் அடியவர்களின் வரலாற்றை கூறும் ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் வரும் பல சம்பவங்கள் அன்னதானத்துடன் சம்பந்தப்பட்டவைகளே.

நம் கர்மாவை உடைப்பதில் அன்னதானத்திற்கு மிகப் பெரும் பங்கு உண்டு.

இந்த கோவில் அன்னதான திட்டத்தை பொறுத்தவரை 50 பேருக்கு தான் திட்டம். அந்தளவே சமைக்கப்படும். எனவே 50 டோக்கன்கள் முன்கூட்டியே கொடுத்துவிடுவார்கள். கூடுதலாக ஓரிருவர் சாப்பிடலாம். அவ்வளவே.

ஆனால் இங்கு சாப்பிடும்போது டோக்கன் பெற்றுக்கொள்ளாத மேலும் சிலர் வந்திருந்து சாப்பாட்டுக்காக காத்திருந்தார்கள். ஏழைகள் சாப்பாட்டிற்கு காத்திருக்க, நாம் இங்கே சாப்பிடுவது முறையல்ல என்று நாங்களும் இவர்களுடன் சாப்பிடும் யோசனையை கைவிட்டோம்.

அனைவருக்கும் என்ன வேண்டும், ஏது வேண்டும் என்று கேட்டு கேட்டு நண்பர்கள் பரிமாறினார்கள். சாப்பிட்டவுடன், இலைகளை அனைவரும் எடுக்க முயற்சிக்க, “மற்ற நாட்களில் எப்படியோ தெரியாது… இன்று யாரும் இலையை எடுக்கவேண்டாம். நாங்கள் எடுக்கிறோம்” என்று கூறி பெருமிதத்துடன், டேபிளை சுத்தம் செய்துகொண்டே அன்னம் சாப்பிட்ட இலையை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டே வந்தோம். நண்பர்களையும் நம்முடன் இணைந்து ஆளுக்கொரு பெஞ்சை மகிழ்ச்சியுடன்  சுத்தம் செய்தார்கள்.

இவன் பெயர் என்ன தெரியுமா?
இவன் பெயர் என்ன தெரியுமா?

அனைவரும் சாப்பிட்ட பின்பு, இலைகளை அகற்றிவிட்டு இந்த பக்கம் கூடையை கொண்டு வந்து பார்த்தால், பந்தியில் இருந்து எழுப்பப்பட்ட அந்த பையன் ஆர்வமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அவனருகே சென்று அவனை வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்தேன்.

“அட…நீங்க பந்தியில உட்கார்ந்தாச்சா? வெரிகுட் வெரிகுட்…”

அவனை பார்த்தபோது, ஏதோ ஒருவிதத்தில் உடல்நலம் / மனநலம் பாதிக்கப்பட்டவன் போலிருந்தது.

“உன் பேரு என்னப்பா…?”

தட்டுத் தடுமாறி “சி….வா!” என்றான்.

யாருக்கு எப்படியோ, அன்பே சிவம் என்பது உண்மையெனில் இவன் வேறு யாருமல்ல, எந்தை சிவனே!!

=============================================

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

=============================================

[END]

10 thoughts on “வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

  1. டியர் சுந்தர்ஜி

    பாரதியார் பிறந்த நாள் அன்று அன்ன தானம் செய்து புண்ணியம் தேடி கொண்டீர்கள். பிரேம் கண்ணன், சுபாஷினி அம்மாவிற்கும் உங்களால் அன்ன தான பந்தியில் பரிமாற ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டீர்கள் .

    நன்றி
    uma

  2. மக்கள் சேவையே மகேசன் சேவை. உண்மைதான் சுந்தர், இந்த சிவாதான் எந்தை சிவன் என்று எனக்கும் தோன்றுகிறது. பாரதியின் நினைவை மற்றவர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் சுந்தர், நண்பர் பிரேம்கண்ணன் மற்றும் சுபாஷினி அம்மா மூலம் ஏழைகளின் ஒரு வேளை வயிற்றுப்பசியை ஆற்றி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

    தானத்தில் சிறந்து அன்னதானம் எனபது பந்தியில் சாப்பிடுபவர்களின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. நன்றி சுந்தர்.

  3. சுந்தர்ஜி
    பாரதி பிறந்த நாள் அன்று ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து அவர்
    பிறந்த நாளை சிறப்பாக நடத்திவிட்டிர்கள். பசியின் கொடுமை பசித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். எனவே தானத்தில் சிறந்தது அன்னதானம் தான்.

  4. பாரதியாருக்கு இதை விட சிறந்த அஞ்சலி எதுவும் இருக்க முடியாது.

    வாழ்த்துக்கள்.

  5. புண்ணியம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையை எனக்கு கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் சுந்தர் அவர்களே!!!!!!!!

  6. உண்மை ,உண்மை இப்போது தான் பாரதி விழா முழுமை அடைந்துள்ளது .

    நன்றி.நன்றி.நன்றி …

  7. பொருள் செலவு பண்ணி விழா எடுத்ததை விட ஒரு அன்னதானத்தில் பாரதிக்கு மகுடம் சூட்டி விட்டிர்கள்.
    மிகவும் பெருமையாக இருக்கிறது. உணமையான பாரதி விழா இன்றுதான்.
    எத்தனையோ இடங்களில் ரைட் மந்திரா அன்னதானம் செய்தும் புண்ணியமும் பலனும் கிடைத்தது இந்த இடத்தில தான்.

  8. “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தது,,சாட்சாத் நம் வழிதுனைநாதர் சிவனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *