Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > பாவலர் மானங்காத்த பாவை!

பாவலர் மானங்காத்த பாவை!

print

மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணம் நூலை வடித்தார். அதன் மூலம் தான் நமக்கு சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் பற்றி ஓரளவு தெரிந்தது. பக்தர்களுக்கு அவன் அருள்பாலிக்கும் விதம், அவன் எதை விரும்புவான், எதை வெறுப்பான், யாருக்கு எப்போது அருள் செய்வான் இப்படி பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. இவை அனைத்துமே தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் நடந்தவை.

சேக்கிழார் பெருமான் ஒவ்வொரு ஊராக சென்று, ஆதாரங்களை திரட்டி 12 ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம் எழுதினார். இன்று நடப்பது 21 ஆம் நூற்றாண்டு. இந்த இடைப்பட்ட காலகட்டத்திலும் ஈசன் பல்வேறு திருவிளையாடல்களை புரிந்திருக்கிறான். அருள் விளையாட்டுக்களை நடத்தியிருக்கிறான். அவற்றை பதிவு செய்ய சேக்கிழார்கள் பிறக்கவில்லை என்றாலும் உ.வே.சா போன்றவர்கள் பிறந்திருக்கின்றனர் என்பது நமக்கு ஆறுதலான விஷயம். உ.வே.சா. அவர்களின் படைப்புக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை நம் தளத்தில் அளித்திருக்கிறோம்.

அந்த வரிசையில் இன்று ஒரு சிவனடியாரைப் பற்றி பார்ப்போம். அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு சற்றும் சளைத்தவரல்ல இந்த சம்பவத்தில் வரும் அடியார்.

உ.வே.சா போன்றவர்கள் எழுத்துக்கள் LOADS OF POSITIVITY என்றால் மிகையாகாது. ஒவ்வொரு படைப்பும் ஏன் ஒவ்வொரு வரியும் அத்தனை அருமையாக இதமாக இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர் எழுத்துக்களை படித்து நம்மை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

அந்தக் காலத்தில் (சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர்) தமிழகம் எப்படி இருந்தது, மக்களின் பழக்கவழக்கங்கள் என்ன, எந்த அடிப்படை வசதிகளும் முழுமை பெறாத காலகட்டங்களில் எப்படி அவர்கள் வாழ்ந்தார்கள் என்றெல்லாம் அறிந்துகொள்வதே ஒரு சுவாரஸ்யமான விஷயம் தான்.

தனது எழுத்துக்கள் மூலமாக காலக்கருவியை நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தமிழ்த் தாத்தா அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

பாவலர் மானங்காத்த பாவை!

by டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்

சோழநாட்டை இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்டு வந்த காலத்தில் ஒட்டக்கூத்தர் அவனுடைய ஆஸ்தான வித்துவானாகவும் குருவாகவும் விளங்கினார். அவனுடைய ஆதரவு பெற்றுப் பல வித்துவான்கள் தங்கள் புலமைத் திறத்தை வெளிப்படுத்தி அக்காலத்திற் பல நூல்களை இயற்றினார்கள். சைவத்திலும் தமிழிலும் பற்றுடைய அம்மன்னன் அங்கங்கே தக்க அதிகாரிகளை நியமித்துத் தன்னுடைய பேரரசைப் பாதுகாத்து வந்தான்.

அவனது ஆட்சியின்கீழ் அவனுடைய முன்னோர்கள் வென்று அடிப்படுத்திய வேற்று நாடுகளும் இருந்தன. தொண்டை மண்டலமும் சோழர்களுக்கு அடங்கியதாக இருந்தது.அதனால் அம்மண்டலத்துக்கு ஐயங்கொண்ட சோழ மண்டலமென்ற பெயர் வழங்கிவந்தது.

சோழ நாடு முதலிய இடங்களிலுள்ள உட்பிரிவுகளுக்கும் தொண்டை நாட்டிலுள்ள உட்பிரிவுகளுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. தொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்தது. அவற்றுள்ளே புலியூர்க் கோட்டமென்பது ஓன்று. சென்னையைச் சார்ந்த கோடம்பாக்கம் முதலிய ஊர்களை உள்ளடக்கியது அது. சேக்கிழார் இருந்த குன்றத்தூரென்பது அக்கோட்டத்தில் இருப்பதே.

நெற்குன்றமென்பது அக்கோட்டத்திலுள்ள ஓர் ஊர். இவ்வூரில் நெற்குன்றவாண முதலியாரென்னும் வேளாளச் செல்வரொருவர் வாழ்ந்துவந்தார். ஏழை மக்களுக்கு வேண்டிய பொருள்களை ஈவதிலும் வித்துவான்களை ஆதரிப்பதிலும் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு ஒழுகுவதிலும் அவர் சிறந்தவர். சிறந்த தமிழ்ப் புலமையும் அவருக்கு உண்டு.

சிவபக்திச் செலவம் மிக்கவராதலின் ஒவ்வொரு வருஷமும் சிலகாலம் யாத்திரை செய்து தம் நாட்டிலும், சோழ நாடு பாண்டிய நாடு முதலிய வேறு நாடுகளிலும் உள்ள சிவஸ்தலங்களைத் தரிசித்து வருவது அவர் வழக்கம். சோழ நாட்டு ஸ்தலங்களைத் தரிசித்து வந்தபோது திருப்புகலூர் என்னும் ஸ்தலத்தில் அவருக்கு ஈடுபாடு அதிகமாயிற்று. அதனால் அடிக்கடி அந்த ஸ்தலத்துக்குச் சென்று சிவதரிசனம் செய்து வருவதில் அவர் மிக்க இன்பத்தைக் கண்டார். அந்த ஸ்தலத்தில் சில நிவந்தங்களையும் அமைத்தார்.

ஒரு வருஷம் மழையின்மையால் நாட்டில் பஞ்சம் உண்டாயிற்று அதனால் நெற்குன்றவாண முதலியாருடைய நிலவளம் சுருங்கவே அவர் இயல்பாகச் செய்யும் தருமங்களை செய்ய முடியாமல் வருந்தினார். சிலவற்றைக் குறைத்துக்கொண்டார். ஆயினும் திருப்புகலூர் சென்று தரிசனம் செய்வதை மாத்திரம் நிறுத்த அவர் மனம் துணியவில்லை.

அரசனுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தைச் செலுத்துவதற்கும் வழியில்லாமல் அவர் மிகவும் வருந்தினார். சோழ சக்கரவர்த்தியின் அதிகாரியாக இருந்தவருக்கு நெற்குன்றவாண முதலியாரைக் கண்டிக்க மனம் வரவில்லை. பலமுறை வற்புறுத்தினார்; இறுதியில் சக்கரவர்த்திக்குத் தெரிவித்து அவரிடம் வரியை வாங்குவதற்குத் தண்ட முறையைப் பின்பற்றுவதே தகுதியென்று விண்ணப்பம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் தமக்கு நேர்ந்துள்ள இடையூற்றுக்குப் புகலூர்ப் பெருமானையே புகலாக எண்ணிய முதலியார் சோழ நாட்டுக்குப் போய்ப் புகலூரை அடைந்தார். அப்போது, அப்பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கி உதவின அருள் விளையாட்டு ஞாபகத்துக்கு வந்தது. சக்கரவர்த்தியின் அதிகாரத்தால்தான் அவரிடம் வரியை வாங்க முடியும் என்று எண்ணியிருந்த தொண்டை மண்டல அதிகாரி அந்தச் சந்தர்ப்பத்தில் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமென்று நினைத்தார். உடனே முதலியார் புகலூருக்கு வந்துள்ளாரென்றும் அங்கே அவரை அதிகாரத்தால் வற்புறுத்தி வரியை வாங்க முயற்சி செய்யலாமென்றும் அரசனுக்கு விண்ணப்பம் செய்து கொண்டார்.

நெற்குன்றவாண முதலியார் புகலூரை அடைந்து அந்த ஸ்தலத்து மூர்த்திகளைத் தரிசனம் செய்வதிலே மனத்தை ஈடுபடுத்தி உலகையே மறந்திருந்தார். திருப்புகலூரில் முக்காலத்துக்கும் தலைவராகிய சிவபெருமானுடைய மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கும் பூதேசுவரம், வர்த்தமானேசுவரம், பவிஷ்யேசுவரம் என்ற மூன்று சந்நிதிகள் உண்டு. அவற்றுள் வர்த்தமானேசுவரமென்னும் சந்நிதியில் எழுந்தருளியுள்ள பெருமானைத் தனியே பாராட்டும் தேவாரப் பதிகம் ஓன்று உண்டு. அங்கே ஓர் அகழி இருக்கிறது. அதன் கரையில் பதினெட்டுச் சித்தர்களுடைய ஆலயங்கள் உள்ளன.

முதலியார் அந்த ஸ்தலத்தில் இருப்பதையறிந்த அதிகாரிகள் அவரைச் சிறைப்படுத்த உத்தரவு செய்தனர். காவலாளர் ஒரு நாட் காலையில் அவரைத் தேடித் கண்டுபிடித்து அழைத்துச் செல்லலாயினர். அப்பொழுது அவர்களை முதலியார். நோக்கி, ”உங்களிடம் ஒரு விண்ணப்பம் செய்துகொள்ளுகிறேன். நான் தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்து சிவபூஜையும், சிவதரிசனமும் செய்வது வழக்கம். எதிர்பாராதபடி என்னைக் காவலில் வைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இனிப் புகலூர்ப் பெருமானை எப்பொழுது காண்பேனோ! காணாமலே என் வாழ்க்கை முடிந்துவிடுமோ! அறியேன். ஆதலால் இன்று மாத்திரம் அப்பெருமானைத் தரிசித்துக் கொண்டுவர அநுமதி செய்தால் உங்களுக்கு எவ்வளவோ புண்ணியம் உண்டு” என்று கண்ணீர்விடாக் குறையாகக் கூறினார். அவரது கம்பீரமான தோற்றத்தாலும், நடையுடை பாவனைகளாலும், பேச்சின் அமைதியாலும் அவர் பெருந்தன்மையை உணர்ந்த காவலாளர்கள் மனமிரங்கி, ”செய்யலாம்” என்று சொல்லி அனுமதி செய்தனர்.

பெரும்பேறு பெற்றவரைப்போல மகிழ்ந்த நெற்குன்றவாணர் மரண காலத்தில் உள்ளம் ஒன்றிய பக்தியோடு இறைவனை நினைந்துருகும் சிவ பக்தரைப் போல ஆனார். உடனே அகழியில் நீராடி முறைப்படி ஆலய தரிசனம் செய்யத் தொடங்கினார். முதலில் அங்கே எழுந்தருளிய விநாயகரைத் தரிசித்தார். அவருடைய பக்தியும் புலமையும் இணைந்து நின்றன. அவ்விநாயகர் விஷயமாக ஒரு செய்யுள் இயற்றிப் பாடலானார்; அது வருமாறு:

”உரைசெய் மறைக்கும் தலைதெரி
யாவொரு கொம்பை யென்றே
பரசு மவர்க்குப் பெருநிழ
லாக்கும் பழனமெல்லாம்
திரைசெய் கடற்றுறைச்
சங்க முலாவுந் திருப்புகலூர்
அரசி னிடத்து மகிழ்வஞ்சி
யீன்றவோ ரத்திநின்றே.”

(வயல்களிளெல்லாம் அலையைச் செய்யும் கடல் துறையிலுள்ள சங்குகள் உலவும் திருப்புகலூர் இறைவனது வாம பாகத்தில் எழுந்தருளிய உமாதேவியார் ஈன்ற யானைமுகப் பெருமானாகிய விநாயகர், தோத்திரஞ் செய்யும் வேதத்தின் சிரமாகிய உபநிடதத்தாலும் அறியப்படாத ஒற்றைக் கொம்பை யுடையாயென்று துதி செய்பவர்களுக்கு மிக்க தண்ணளியைச் செய்வார். இதில் அரசு வஞ்சி அத்தி என்னும் மூன்று மரப் பெயர்கள் ஈற்றடியில் ஒருங்கே தொனிக்கின்றன.

ஒரு கொம்பை – ஒற்றைக் கொம்பை உடையாய். பரசும் – துதிக்கும். நிழல் – சாயை, தண்ணளி; சிலேடை. பழனம் – வயல். திருப்புகலுர் அரசு – திருப்புகலூர்ச் சிவபெருமான். வஞ்சி – உமா தேவியார்.)

அந்த ஸ்தலத்து ருத்திர கணிகையர்களுள் ஒருத்தியும் பல திருப்பணிகள் செய்தவளும், பிராயமும் செல்வமும் நிறைந்தவளுமாகிய ஒரு பெண்மணி அன்று காலையில் நீராடிவிட்டு அவ்வழியே ஆலய தரிசனத்துக்காக அப்போது போய்க்கொண்டிருந்தாள். அவள் காதில் நெற்குன்றவாணர் சொல்லிய பாடல் விழுந்தது. அந்தப் பாட்டு அழகாக அமைந்திருப்பதை அவள் அறிந்து அதனைப் பாடியவர் யாரென்று பார்த்தாள். யாரோ வித்துவானாக இருக்கலாமென்று ஊகித்த அவள், ‘இந்த அழகான செய்யுள் விநாயகர் விஷயமாக இருக்கிறது. இத்தலத்துச் சிவபெருமான் விஷயமாகவும் இவர் பாடினால் எவ்வளவோ நன்றாக இருக்குமே’ என்று எண்ணினாள். உடனே வாய்விட்டு, ”இந்த பாட்டை ஓர் அந்தாதிக்குக் காப்பாக்கலாமே” என்று மெல்லச் சொன்னாள்.

அதுகாறும் விநாயக வணக்கத்தில் மூழ்கியிருந்த முதலியார் இந்த வார்த்தையைக் கேட்டுத் திரும்பினார். ஒரு தாசி சிவ வேடப் பொலிவோடு நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தார். ”ஆம், அந்தாதிக்குக் காப்பாக்கலாம். ஆனால்…” என்று எதையோ நினைந்துருகினார். அந்தக் கணிகைக்கு விடை சொல்ல வேண்டுமென்ற உணர்ச்சியொன்று அவர் உள்ளத்தே இருந்து தூண்டியது.

“உண்மைதான். அந்தாதிக்குக் காப்பாக்கலாம். காப்பாக்கினால் அரசனுக்குப் பணம் ஆகுமா?” என்று அவர் கேட்டு விட்டார்.

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில் ராஜகோபுரம்

அந்தக் கேள்வி கணிகைக்கு விளங்கவில்லை. அவர் எதோ சங்கடமான நிலையில் அகப்பட்டுக்கொண்டுள்ளார் என்று மட்டும் ஊகித்துக் கொண்டாள். அப்போதுதான் அவள் அருகில் நின்றவர்களை உற்றுப்பார்த்தாள். காவலாளர் நிற்பதை உணர்ந்து அவர்களிடமே விஷயத்தை விசாரித்தாள். வரி கொடுக்க இயலாத நிலையில் அவரைச் சிறைப்படுத்தப்போகும் செய்தியை அறிந்து மிக்க வருத்தத்தை அடைந்தாள்.

உடனே, ”எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?” என்ற கேள்வி அவள் வாயிலிருந்து எழுந்தது. காவலர் மூலமாகத் தொகை இன்னதென்று அறிந்துகொண்டு, ”அரசனுக்குப் பணத்தைச் செலுத்திவிடலாம். இனி இவரை விட்டு விடுங்கள். இவர் பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லிப் பணத்தையளித்து முதலியாரை மீட்டாள்.

சிவபக்தி மிக்க அவள் செயல் புகலூர்ப் பெருமானுடைய திருவருளால் நிகழ்ந்தென்று கருதிய முதலியார் மிக்க நன்றியறிவோடு அவளைப் பாராட்டினார். அவள், ”எல்லாம் திருவருட் செயல். நீங்கள் சொன்ன விநாயக வணக்கத்தைக் காப்பாக வைத்துக் கொண்டு ஓர் அந்தாதி பாடி முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள்.

”ஆம், அச்செய்யுள் காப்புச் செய்யுளாக இருக்கும் தகுதியுடையதுதான். என் மானத்துக்கும் உயிருக்கும் காப்பை அளித்த அச்செய்யுள் அந்தாதிக்குக் காப்பாகவும் இருக்கும்” என்று சொல்லி நூறு செய்யுட்களால் ஓர் அந்தாதி பாடி நிறைவேற்றினார். அது திருப்புகலூரந்தாதி என்ற பெயரோடு வித்துவான்களால் பாராட்டப் பெற்று விளங்குகின்றது.

நெற்குன்றவாணர் தம் ஊர் சென்றார். பஞ்சகாலம் போய் நல்ல காலம் வந்தவுடன் தம்மைச் சிறை மீட்ட கணிகைக்கு ஒரு பெருந்தொகையை அனுப்பி நன்றி பாராட்டினார். அப்பெண்மணி அப்பொருளை புகலூர்ப் பெருமான் திருப்பணிக்கே வழங்கி விட்டாள்.

  • டாக்டர்.உ.வே.சா | ரைட்மந்த்ரா.காம்

என்ன வாசகர்களே, ஒரு திரில்லர் போல இருந்த இந்த கதையில் ஈசன் எப்படி திருவிளையாடல் நிகழ்த்தினான் பார்த்தீர்களா? நமக்காக ஒவ்வொரு நொடியும் அருள் செய்ய  அவன் காத்திருக்கிறான் என்பதே உண்மை. 

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

========================================================

Also check :

களவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்!

பக்கிரிக்கு யானை கொடுத்தவர்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *