Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

print

ற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஒரு அரசர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒரு முறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை எல்லாம் கண்டு களித்தும், ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில் தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போஜனம் முடித்துக் கொண்ட பிறகு தாம்பூலம் போட்டுக் கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்திருந்தார். தம்முடன் வந்தவர்களோடு பேசிக்கொண்டு பொழுது போக்குகையில் பேச்சுக்கிடையே அன்று ஏகாதசியென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசியன்று ஒரு வேளை மாத்திரம் உணவு கொள்ளும் விரதமுடையவர்; விரத தினத்தன்று தாம்பூலம் தரித்துக்கொள்வதும் வழக்கமில்லை. அப்படியிருக்க, அவர் ஏகாதசி என்று தெரியாமல் அன்று தாம்பூலம் தரித்துக் கொண்டார். தஞ்சாவூரில் இருந்தால் அரண்மனை ஜோதிடர் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து அன்றன்று திதி வார நக்ஷத்திர யோககரண விசேஷங்கள் இன்னவையென்று பஞ்சாங்கத்திலிருந்து வாசித்துச் சொல்வார். அதற்காகவே அவருக்கு மான்யங்களும் இருந்தன.

uththamadhanapuram2

அரசருடைய பிரயாணத்தில் ஜோதிடர் உடன் வரவில்லை; அதனால் ஏகாதசியை அரசர் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்பாராதபடி விரதத்திற்கு ஒரு பங்கம் நேர்ந்ததைப் பற்றி வருந்தி அரசர் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென்று சில பெரியவர்களைக் கேட்கத் தொடங்கினார். அவர் வைதிக ஒழுக்கமும் தானசீலமும் உடையவரென்பதை யாவரும் அறிந்திருந்தனர்; ஆதலின் அப்பெரியவர்கள் “ஓர் அக்கிரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேதவித்துகளாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும்” என்றார்கள்.

“இதுதானா பிரமாதம்? அப்படியே செய்து விடுவோம்; இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்” என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறாக 24 கிணறுகளையும் அமைக்கச் செய்தார். வேதாத்தியயனம் செய்த 48 பிராமணர்களை அருகிலும் தூரத்திலும் உள்ள ஊர்களிலிருந்து வருவித்து அந்த வீடுகளையும், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு மா நன்செயும் அதற்குரிய புன்செயுமாகிய நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால் அவ்வூர் உத்தமதானபுரம் (பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது) என்னும் பெயரால் வழங்கலாயிற்று.

அரசருடைய விரதபங்கம் நாற்பத்தெட்டு குடும்பங்களுக்குப் பாக்கியதை உண்டாக்கிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதானபுரத்தில் வைதிக ஒழுக்கம் பிறழாமல் வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் பெற்ற நிலங்கள் இன்றும் தனித்தனியே ஒரு பங்கு என்று வழங்கி வருகின்றன. நாற்பத்தெட்டு பங்கு நிலமும், நாற்பத்தெட்டு வீடுகளும், இருபத்துநாலு கிணறுகளும் கொண்ட இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழந்து விடாமல் தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசம் தாலுகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகிறது.

(…. டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் “என் சரித்திரம்” நூலிலிருந்து)

விரதத்திற்கு ஏற்பட்ட ஒரு சிறு பங்கத்திற்காக அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் பிராயச்சித்தம் தேடியிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இத்தனைக்கு அவர் அந்த சமஸ்தானத்துக்கே ராஜா. அவரை கேள்வி கேட்பவர் யாரும் இல்லை. ஆனாலும் நியமம் தவறியமைக்கு அவர் செய்த பரிகாரத்தை பாருங்கள்.

“துன்பத்தை வெற்றிகரமாக தாண்டுவது எல்லாராலும் முடியும். ஆனால் ஒரு மனிதனின் உண்மையான குணம் தெரியவேண்டும் என்றால் அவனுக்கு அதிகாரத்தை கொடுத்தப் பார்” என்று சொல்வார்கள்.

அந்த வகையில், மேற்படி மன்னன் போற்றப்படவேண்டியவன் மட்டுமல்ல வணங்கப்படவேண்டியவன்.

********************************************************

ஏடு வாங்கலையோ ஏடு…

– மதிப்பறியாமல் விற்கப்பட்ட ஏடுகளை மீட்டு அச்சில் ஏற்றிய தமிழ்த் தாத்தா உ.வே.சா.

இன்றைக்கு நாம் பல தமிழ் நூல்களை இலக்கியங்களை எல்லாம் படித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் யார் தெரியுமா?

‘தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்படும் திரு.உ.வே.சா. அவர்கள் தான். காலத்தால் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அரும்பெரும் பொக்கிஷங்கள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களை எல்லாம் அங்கும் இங்கும் ஓடி சென்று காப்பாற்றி இன்றைய தலைமுறையின் பார்வைக்கு எடுத்து வந்தவர் தமிழ்த் தாத்தா அவர்களே!

தமிழுக்காகவே தன்னை வார்த்துக் கொண்ட அறிஞர்கள் பலர் இருந்தாலும் அவர்களுள் தனித்து நிற்பவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள். ஓலைச்சுவடி வடிவில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களை அதன் மெய்த்தன்மை குன்றாமல் அச்சு வடிவில் மீட்டுக் கொடுத்த ஆபத்பாந்தவன்.

கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் 1855-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்கிற உ.வே.சா. பிறந்தார். அன்றைய நிலையில் அழிந்து கொண்டிருந்த 90-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், 3000-க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் ஊர் ஊராக அலைந்து கண்டெடுத்து ஆவணப்படுத்தி யதில் உ.வே.சா. மிகப் பெரிய பங்களிப்பினை ஆற்றினார்.

இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். ஏழு வயதில் குன்னம் என்ற ஊரில் சிதம்பரம் பிள்ளை என்பவரிடம் திருக்குறள், திருவிளையாடற் புராணம் உள்ளிட்ட நூல்களையும் பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் தமிழ் பயின்றும் தமிழறிஞர் ஆனார்.

பெற்றோர் சமஸ்கிருதம் படிக்கச் சொல்லி வற்புறுத்தியும் தமிழின் மீது இருந்த அளவு கடந்த ஆர்வம் காரணமாக அதை ஏற்கவில்லை. தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

இவரது தியாகத்தை மொழிப் பணியில் மட்டும் அடக்கிவைத்துவிட முடியாது.

சேலம் இராமசாமி முதலியார் என்பவரிடம் நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த ஒருவர், ஓலைச்சுவடி கட்டு ஒன்றை காட்டி அதை விலை பேசியிருக்கிறார். எவ்வளவு தெரியுமா? முப்பத்தைந்து ரூபாய்க்கு. பவுன் ஆறு ரூபாய் விற்ற காலம் அது.

அந்த ஆசாமி விலை பேசியது என்ன தெரியுமா?

மாபெரும் காப்பியமான ‘சீவகசிந்தாமணி’.

அப்போது அங்கே இருந்த தன் நண்பர் உ.வே.சா.விடம் “இன்னும் எங்கெல்லாம் யார் யாரிடமெல்லாம் இது போன்ற பொக்கிஷங்கள் மதிப்பறியாமல் இருக்கின்றனவோ? யார் இவற்றை தேடித் பிடிப்பார்கள்?” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்த, அவ்வளவு தான்… களத்தில் இறங்கினார் உ.வே.சா. அவரது தமிழ் தேடல் துவங்கியது அதன் பிறகு தான்.

அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. ஒரு நூலைத் தேடிக் கண்டுபிடிப்பதும், படிப்பதும், அதனைப் பதிப்பிப்பதும் மிக எளிய எளிய விஷயமல்ல. அனைத்து வசதிகளும் நிரம்பிய இக்காலத்திலேயே இது சவால் நிறைந்ததாக இருக்கும்பொழுது அக்காலத்தில் இப்பணி எத்துனைத் துன்பம் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்க திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

uththamadhanapuram 2

உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம். அதனைத் தெளிவுபடுத்திப் பின்னரே பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்றும் கூறுவார்கள்.

IMG_3007 copy

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது. இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.

இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். “சங்க நூல்கள்’, “பிற்கால நூல்கள்’, “இலக்கண நூல்கள்’, “திருவிளையாடற் புராணம்’ போன்ற புராண நூல்களாகும்.

UVESAஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

அது தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை ‘கலித்தொகை’ பதிப்புரையில் எடுத்துக்காட்டுகிறார்:

“ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது”

ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் சவால் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி இருக்காது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் கிடையாது. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் முடியாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும் முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம்.

uththamadhanapuram uvesaஇவர் சுவடிகளை பார்த்து பதிப்பித்த நூல்களுள் சில : சிலப்பதிகாரம் (1892), மணிமேகலை (1898), பத்துப்பாட்டு (1889), புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), பரிபாடல் (1918), குறுந்தொகை (1937) மேலும் 1883 முதல் 1940 வரை 14 புராணங்களைப் பதிப்பித்துள்ளார். இவர் ஏறக்குறைய 84 நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

திருமுருகாற்றுப்படை!

நெல்லையை சேர்ந்த திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்பவரை சந்தித்து அவர் மூலம் பல ஓலைச் சுவடிகளை பெற்று பதிப்பித்தார். அப்படி இவர் மீட்ட நூல்களுள் ஒன்று தான் நக்கீரதேவர் இயற்றிய திருமுருகாற்றுப்படை.

ஒரு மூதாட்டியிடம் சில தமிழ்ப் பாடல்களின் ஏடுகள் இருப்பதாக கேள்விப்பட்ட உ.வே.சா. அவர் வீட்டுக்கே சென்றுவிட்டார். ஆனால், அந்த மூதாட்டியோ, “அப்பா… இப்போ தான் படுத்தேன். எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு. தலைவலி வேற. தெருமுனைக் கடைக்கு போய் சுக்கும் சுண்ணாம்பும் வாங்கி வர்றியா? கொஞ்சம் பத்து போட்டுக்கிட்டு படுத்தா சரியாயிடும். எழுந்திரிச்ச பிறகு தேடி எடுத்து தர்றேன்” என்று கூற, அவர் கூறியபடி அந்த பாட்டிக்கு சுண்ணாம்பும் சுக்கும் வாங்கி வந்து கொடுத்து அவர் உறங்கி எழும் வரை காத்திருந்து சுவடிகளை வாங்கி வந்தாராம்.

maha swamiஇப்படி பட்டிதொட்டியெல்லாம் அலைந்து திரிந்து எத்தனையோ இன்னல்களுக்கு இடையே செல்லரித்தது போக மீதி இருந்த அத்தனை தமிழ் நூல்களையும் பதிப்பித்தவர் உ.வே.சா. இவரது இனத்தை காட்டி இவருக்கு வரவேண்டிய பல பெருமைகளை தடுக்க முனைந்து இவர் பெயரைக் கெடுக்க முயற்சித்த கதைகள் பல உண்டு. ஆனால் தமிழ் தாத்தா உ.வே.சா தமது தமிழ் தொண்டிற்காகத்தான் அறிஞர்கள் மனதில் இன்றளவும் நிற்கிறாரே தவிர அவர் சார்ந்த சமுதாயத்தின் புரட்சியாளராக அல்ல. அந்த இடத்தில தம்மை நிலைநிறுத்தி கொள்ளவும் அவர் முயற்சித்ததும் இல்லை. அவ்வாறு அறியப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எண்ணற்ற பட்டங்களை தமது தமிழ்த் தொண்டுக்காக வாங்கியிருந்தாலும் அதில் தனிச்சிறப்பு மிக்கது எந்த பட்டம் தெரியுமா?

‘தஷிணத்ய கலாநிதி’ என்னும் பட்டம் தான். பின்னே… காஞ்சி மஹா ஸ்வாமிகள் கொடுத்த பட்டமாயிற்றே அது!

தன் இறுதி மூச்சு உள்ளவரை அயராமல் தமிழ்தொண்டாற்றிய உ.வே.சா. அவர்கள் 21.04.1942 அன்று தனது 87 ஆம் அகவையில் திருக்கழுக்குன்றத்தில் சிவலோகப் ப்ராப்தி அடைந்தார்.

வாழ்க உ.வே.சா. அவர்களின் புகழ்! வளர்க தமிழின் பெருமை!!

இந்த பதிவு நேற்றே தயார் செய்யப்பட்டுவிட்டது. இன்று கும்பகோணம் மகாமகம் செல்லும் வழியில் பாபநாசம் அருகே உள்ள உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சா. அவர்களின் நினைவு இல்லத்திற்கு நாமும் நண்பர் சிட்டியும் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அந்த படத்தை தான் நீங்கள் இந்த பதிவில் பார்க்கிறீர்கள்.

மேலும் பல அரிய பொக்கிஷங்கள் பல நமக்கு கிடைத்துள்ளன. சென்னை வந்த பின்னர் விரிவாக பேசுகிறோம். நன்றி.

========================================================

Support Rightmantra to sustain!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

========================================================

[END]

 

3 thoughts on “ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

 1. உத்தமதானபுரம் பற்றி இப்பொழுதான் கேள்வி படுகிறேன். பதிவு மிகவும் அமர்க்களமாக உள்ளது. அருமை.அந்த காலத்தில் மன்னரே எப்படி விரத ஒழுக்கங்களை கடைப்பிடித்து உள்ளார் என்பதை பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. சென்னையில் நெருக்கமான சாலைகளையும், கட்டிடங்களையும், பார்த்து பழகிய நமக்கு அக்ரஹார போட்டோவை பார்க்கும் பொழுது மனதிற்கு ரம்யமாக காட்சி அளிக்கிறது. திரு உ வே சா அவர்கள் தமிழ் நூல்களை புதுப்பிப்பதற்காக எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கிறார். அவர் இல்லையேல் நாம் தமிழ் பொக்கிஷங்களை பார்ப்பது அரிதாக இருந்து இருக்கும். தாங்களும் திரு உ வே சா தமிழுக்கு ஆற்றிய தொண்டு போல், இந்த பதிவின் மூலம் அறிய பல தகவலை தங்கள் தளம் மூலம் அழகாக வெளிக் கொணர்ந்து விட்டீர்கள். தேடல் உள்ள தேனிக்களுக்கு தானே இந்த மாதிரி விஷயங்கள் சாத்தியப் படும்.
  மகா மகம் செல்லும் வழியில் தங்களுக்கும், தங்கள் நண்பர் சிட்டி க்கும் , மேலும் ஒரு பழமை வாய்ந்த தமிழ் அறிஞரின் நினைவு இல்லத்திற்கு சென்று மாலை மரியாதை செய்யும் பாக்கியம் கிடைத்து உள்ளதை அறிய மிக்க மகிழ்ச்சி. ஒரு அழகிய பதிவை வாசகர்களுக்காக கொடுத்ததற்கு மிக்க நன்றி, மகா மகா பயணம் இனிதே நடைபெற இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  வாழ்க … வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

 2. எப்பேற்ப்பட்ட தகவல், பதிவு! உத்தமதானபுரம் தோன்றிய விதம் சிலிர்க்க வைக்கிறது.

  தமிழ் தாத்தாவை நினைவில் வைத்திருந்து அவரது பிறந்த ஊருக்கு சென்று அவரை கௌரவித்தமைக்கு மிக்க நன்றி.

  புகைப்படங்களை பார்க்கும்போது, நாமும் இப்போதே உத்தமதானபுரம் செல்லவேண்டும் என்று தோன்றுகிறது.

  உ.வெ.சா. அவர்களுக்கு காஞ்சி பெரியவர் பட்டம் வழங்கியது அவரது புகழ் மகோடத்தில் மற்றுமொரு சிகரம்.

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர்

 3. It’s so great to know more about the history of Utmadhanapuram through Tamil Thaththa U.Ve.Sa’s autobiography ‘En Charitham’.
  **
  I was seeking to know more about U.Ve.Sa when you have called me to visit his memorial. And so, from that I have come to know more about this great man.

  So many people in our tamizh nadu have done phenomenal things. to uncover those truths, is a painful but inspiring work – which you do – is a wonderful thing. keep doing.

  ***
  And I am very happy to have been part of this trip and for such a great man, the memorial built is not enough – but at least the past govt has done this thing. Good at least for that.
  **
  People are speaking – tamizh, tamizh..blah blah. But they don’t put good effort in the real purpose of it – to know more about it – spread the good word about rich traditions in it and know the real meaning behind our customs etc.
  **
  Overall, happy and have got some meaning in my thoughts to improve my thinking towards tamil and devoting some time to it.
  **
  Thanks so much to you, ji.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *