Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

print
‘பக்தி’ மற்றும் ‘ஆன்மிகம்’ ஆகிய இரண்டு பதங்கள் குறித்து தவறான கருத்து பலர் மத்தியில் இருக்கிறது. இறைவழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டாலோ அல்லது விரதங்கள் அனுஷ்டித்தாலோ அல்லது பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அடிக்கடி செல்வதாலோ ஒருவர் பக்திமானாகிவிடமுடியாது. ஏனெனில், இவையனைத்தும் ஒரு வகையில் சுயநலம் சார்ந்த செயல்களே.

அது போல பணம் செலவழிப்பதால் மட்டும் ஒருவர் தர்மவான் ஆக முடியாது. அன்னதானம் செய்வதால் அவர் அறம் செய்தவர் ஆகவும் முடியாது. நெற்றியில் திருநீறு பூசியவர்கள் எல்லாம் சிவ பக்தர்கள் அல்ல. திருமண் இட்டவர் எல்லாம் விஷ்ணு பக்தரும் அல்ல. பலர் பகட்டுக்காகவும், நானும் பக்திமான் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், பெருமைக்காவுமே இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஏழைகளின் தொண்டே இறைவனின் தொண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஒருவர் துன்பப்படும் போது அவருக்கு துணை நின்று அவர் துயர் துடைப்பதே ராம கைங்கர்யம். உதவி செய்பவர் ஏழையாக இருக்கலாம். நெற்றியில் திருமண் இடாதவராக, பஜனை, ஜெபம், வழிபாடு அறியாதவராக இருக்கலாம். இருப்பினும் ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்து துயர் துடைக்க முன்வருவாரே ஆயின் அவரே உண்மையான உயர்ந்த பக்தர்.

SrinivasaGovinda11 copy

உண்மையான பக்தி உடையவன் யார்?

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது’ நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.

அப்போது இறைவன், “தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்” என்றார்.

உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.

ஒருவன், “நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை… தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,” என்றான்.

அடுத்தவன், “நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,” என்றான்.

மற்றவன், “நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,” என்றான்.

இன்னொருவன், “எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,” என்றான்.

இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, “இதில் யார் உண்மையான பக்தன்’ எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, “அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?” என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், “எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை… அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்…” என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.

தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.

எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

“தேவனே… உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?” என்று கேட்டன.

“கண்டுபிடித்துவிட்டேன்!” என்றார் கடவுள்.

“யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?” என்று கேட்டன தேவதை கள்.

கடவுள் புன்னகைத்தபடியே, “இல்லை… இல்லை… கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே… உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,” என்றார்.

உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

தன்னலமற்ற சேவையே உண்மையான ஆன்மிகம் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

தன்னை ஒரு  பக்தனைப் போல காட்டிக்கொள்வது எளிது. ஆனால் உண்மையான பக்தனாக நடந்துகொள்வது அத்தனை எளிதல்ல.

Lord Muruga

ஒரு பக்தன் அல்லது பக்தை என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்று கந்தபுராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார்.

*  தெளிவான அறிவோடு இருக்க வேண்டும்.

*  எல்லோரிடமும் அமைதியாகவும், இனிமையாகவும் பேச வேண்டும்.

*  உணர்ச்சியை வென்றவனாக நடந்து கொள்ள வேண்டும்.

*  எவரிடமும், எந்த விதத்திலும் பகைமை பாராட்டாதிருக்க வேண்டும்.

*  எப்பொழுதும் கருணை கொண்ட மனதுடன் இருக்க வேண்டும்.

*  தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும்.

*  நல்ல காரியங்கள் செய்பவனாகவும், பிறர் இன்ப – துன்பங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.

*  எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும், ஏற்றத் தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும்.

*  ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும்.

*  பிறர் குறைகளை பற்றி கவலைப்படாமல், அவனுக்கு உதவ வேண்டும்.

மேற்கூறிய குணநலன்கள் இருந்து, ஈடுபாடுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எவனோ, அவனே உண்மையான பக்தன். இதில் ஒரு குறை இருந்தாலும் அவனை என் பக்தனாக ஏற்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் முருகப்பெருமான்.

இது முருகப்பெருமானுக்கு மட்டும் அல்ல அனைத்து தெய்வங்களுக்கும் பொருந்தும்.

மேற்கூறிய குணநலன்கள் உங்களிடம் இருக்கிறதா? ‘ஆம்’ என்று உங்கள் மனசாட்சி சொன்னால்  நீங்கள் உண்மையில் பெரிய பக்திமான் தான்!

[END]

7 thoughts on “ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

  1. மிகவும் அருமையான சிந்திக்க வைக்ககூடிய கதை.,

    முருகன் படம் மிகவும் அருமையாக அழகாக உள்ளது. முருகன் என்றாலே அழகு தானே.

    விஷ்ணு பாதம் superb

    //கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே… உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,”// இந்த வரிகள் உங்களுக்கு மிகவும் பொருந்தும். தன்னலம் கருதாமல் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு நடப்பது போல், சேவை செய்யும் மனப்பான்மையை தங்களிடம் இருந்து நாங்கள் கற்று கொள்ளவேண்டும்.

    மற்றும் கந்த புராணத்தில் முருகன் கூறியது போல் நாம் இருக்க முயற்சி செய்ய வேண்டும். இன்னும் நாம் பக்தன் ஆகவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. நாம் மாறுவோம் மற்றவர்களையும் மாற்றுவோம்

    நன்றி
    உமா

  2. மனிதன் உடலாலும், எண்ணங்களாலும் மேம்பட்டு உயர்ந்து நிற்கவும் கட்டுபாடுடன் வாழ்க்கை நடத்தவும், நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடிக்கவும், நமது முன்னோர்கள் கோவில்களை அமைத்து நமக்கு நல்வழி காட்டி உள்ளனர்.
    கோவில் செல்வதும்,பூஜை புனஸ்காரங்கள் செய்வதும், வேத பாராயணங்கள் செய்வதும் எல்லாம் நமக்கு தான் நன்மையே அன்றி இறைவனுக்கு அன்று.
    அப்படி எனில் இறைவனுக்கு எது பிடிக்கும்?
    “மேற்கூறிய குணநலன்கள் இருந்து, ஈடுபாடுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எவனோ, அவனே உண்மையான பக்தன். இதில் ஒரு குறை இருந்தாலும் அவனை என் பக்தனாக ஏற்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் முருகப்பெருமான்”

    அன்னை தெரசா கூறியது
    ” பிராத்தனை செய்யும் உதடுகளை விட உதவி செய்யும் கரங்கள் மேலானவை”

    மக்களுக்கு செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு.

    “எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும், ஏற்றத் தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும்”.

    இந்த ஒரு கோட்பாடை பின்பற்றினாலே மற்ற அனைத்தும் நம்மிடம் வந்து சேரும்.
    இறைவனை அடைய தூய்மையான மனம் கண்டிப்பாக வேண்டும்.
    ஆகவே நாம் தூய்மையான மனதோடு இறைவனை எப்பொழுதும் நினைத்துக்கொண்டு நமது வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை எளியவர்க்கும், முடியாதவர்களுக்கும் ஒதுக்கி விட வேண்டும்.

  3. Mr. Sundar,
    It is not so but at times every one feels disgruntled for not getting apathy on needy & poor

    Any way good article to ponder and atleast try to change ones attitude

    Thank you

  4. அருமையான பதிவு
    யார் பக்தன் என்பதற்கான அருமையான விளக்கம்
    ஏழையின் சிரிப்பில் இறைவன் – என்பது முற்றிலும் உண்மை
    பக்தனாக முயல்வோம்
    பரம்பொருளை சரணடைவோம்

    வாழ்க வளமுடன் !!!

  5. கேட்டல்,வேண்டல், நினைவிற்கொள்ளுதல், திருவடிதொழுதல், பூஜை,வணக்கம், சேவை,நட்பு, தன்னைக்கொடுத்தல் இவையே பக்தியின் ஒன்பதுவிதங்கள்.
    ஏதேனுமொன்றை நம்பிக்கையுடனே தான்கைக்கொண்டால் இறைவன்மகிழ்ந்து தன்னுருக்காட்டித் தரிசனம்தருவார். சாதனையெதுவும் பக்தியிலாவிடின் பயனெதும்தாரா !!!

  6. அருமையான பதிவுகள் உங்கள் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *