நெஞ்சு நிறை அஞ்சாமை நித்தம் நீ தர வேண்டும்!
நிமிர் நடையும் நேர் பார்வையும் குறைவின்றி பெற வேண்டும்!!
வஞ்சகரை நேர் காணா வழியமைத்து உதவ வேண்டும்!
வாக்கென்றும் பிறழாத நா காக்க வரம் வேண்டும்!!
சோர்விலா மனமென்றும் நீ அருளும் நிலை வேண்டும்!
ஓய்வில்லா உடலுக்கு நீ உரமாய் மாறவேண்டும்!!
நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்!
தீமை ஏதும் செய்திடாத திட சித்தம் பெற வேண்டும்!!
பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!
உறவுக்குள் ஒளிபகையே உருவாகா நிலை வேண்டும்!!
தருகின்ற வளம்என்றும் தடையின்றி வர வேண்டும்!
தான் என்ற அகம்பாவம் தலை காட்டாது அமைய வேண்டும்!!
விசுவாசம் உதிரத்தில் ஊடிழையாய் ஓடவேண்டும்!
வீண் பெருமை சிறிதேனும் ஒட்டிடாத மனம் வேண்டும்!!
வசமாகும் நின் கருணை பெரும் பேறு தினம் வேண்டும்!
வாய்க்கின்ற வாய்பெல்லாம் நினதருளால் நிறைய வேண்டும்!!
உண்மை என்னும் மலராலே அர்ச்சிக்கும் நிலை வேண்டும்!
எண்ணுகின்ற நினைவெல்லாம் உனக்கிசைவாய் அமைய வேண்டும்!!
என் மனத்தே நீ என்றும் நின்று நிலை பெற வேண்டும்!
நின் தளமாய் என்னுடலும் என்றென்றும் ஆக வேண்டும்!!
[END]