இந்த பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து சிவனை தொழும் வாய்ப்பு கிடைப்பதும், சிவபெருமானை சிந்தை நினைப்பதும் கூட ஒரு மிகப் பெரிய பேறு தான். அந்த வகையில் நாம் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள்.
விரதங்களை கடைபிடிப்பது, சிவாலயங்களை, வைணவ ஆலயங்களை தரிசிப்பது இவை அனைத்தும் ஒரு வகையில் மிகப் பெரிய பேறு.
விரதம், வழிபாடு, ஆலயம், அனுஷ்டானம் முதலியவை குறித்து எந்தவித அறிவும் இல்லாமல் சதா சர்வ காலமும் கேளிக்கை மற்றும் கொண்டாட்டாங்களில் ஈடுபட்டு, மது அருந்தி, உண்டு, உறங்கி, காமத்தை துய்த்து, புற்றீசல் போல பிள்ளைகள் பெறுவது ஒரு வாழ்க்கையே அல்ல. அப்படிப்பட்டவர்களை பார்த்து ஒருவர் பொறாமைப்படுவதைவிட பரிதாபப்படுவதே நியாயம். எந்த காலத்திலும் அவர்கள் பிறவித் தளையை அறுக்க முடியாது. இன்று இன்பம் தருவது நாளை துன்பமாக மாறி வருத்தும். (சிலருக்கு விரதமுறைகளையும் வழிபாடுகளை பற்றியும் உணர்வு இல்லாமல் வாழ்க்கை அமையப்பெற்று அவர்கள் சொகுசாக இருப்பதாக நினைப்பவர்களுக்கு தான் நாம் இதை கூற விரும்புகிறோம். இப்படிப்பட்ட வாழ்க்கை ஒரு வகையில் நரகம்!)
ஆனால் நாமெல்லாம் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள்….!
63 நாயன்மார்களும், பன்னிரு ஆழவார்களும், அவதரித்த புண்ணிய பூமியில் அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசங்களும், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற தலங்களும் நாம் வாழ்ந்து வரும் இந்த புண்ணிய பூமியில் குறிப்பாக தமிழகத்தில் அமைந்துள்ளன என்பது உண்மையில் நாம் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலன் என்று தெரியாது.
கருவறையின் முன்னே நிற்கும் போது இறைவனிடம் இன்றும் நாம் கேட்பது என்ன தெரியுமா? மன்னிப்பு ஒன்று தான்.
“ஆம்…. இந்த புண்ணிய பூமியின் அருமை தெரியாமல் இந்த பிறவியின் பெருமை புரியாமல் உன்னை பற்றி சிந்திக்காமல் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டோம் இறைவா… அதற்கு முதலில் மன்னித்துவிடு” என்பது தான்.
சிவராத்திரி விரதத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தான் அனுஷ்டித்து வரும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. சாஸ்திரங்களும் சமயப் பெரியவர்களும் வகுத்துள்ள விதிமுறைப்படி நாம் எந்தளவு அந்த விரதத்தை சரியாக அனுஷ்டித்தோம் என்று தெரியாது. ஆனால் சிவராத்திரி அன்று உறங்காமல் விழித்திருந்து அவன் சன்னதியில் இரவை கழித்ததையே நாம் மிகப் பெரிய வரமாக கருதுகிறோம்.
சென்ற ஆண்டு சிவராத்திரியை நாம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியோடு துவக்கி இரவு பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் நான்கு கால பூஜைகளையும் கண்டு அனுஷ்டித்ததும் நினைவிருக்கலாம்.
சென்ற ஞாயிறு திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு உழவாரப்பணிக்கு சென்ற போது, சிவராத்திரிக்கு நாம் அந்த ஆலயத்திற்கு வரவேண்டும் என்று கோவிலின் அர்ச்சகர் சுப்ரமணிய குருக்கள் நம்மை கேட்டுக்கொண்டார்.
சென்ற இருமுறையும், பூவிருந்தவல்லி கோவிலில் நாம் சிவராத்திரிக்கு இருந்த போது கூட்ட மிகுதியால் சுவாமியை சரியாக தரிசனம் செய்ய முடியவில்லை. நகரில் வேறு எந்த கோவிலுக்கு சென்றாலும் இந்த நிலை தான்.
குருக்களிடம் இதை பற்றி கூறியபோது, “நீங்க இங்கே வாங்க சார்… இங்கே கூட்டம் அவ்வளவாக இருக்காது. நீங்க இருந்தீங்கன்னா எனக்கும் பூஜையில கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்” என்றார்.
ஊன்றீஸ்வரரையும் ஏனோ நமக்கு மிகவும் பிடித்துவிட்டதால், சிவராத்திரியை நகரத்து பரபரப்புக்களில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருக்கும் இந்த கோவிலிலேயே அனுஷ்டிப்பது என்று முடிவு செய்தோம். மேலும் இந்த கோவிலுக்கு பெயரே நம்பிக்கை கோவில் என்பதாகும்.
“நீங்க கவலையே படாதீங்க சுவாமி… நான் நிச்சயம் வர்றேன். உங்களுக்கு என்னென்ன வேணும்னு சொல்லுங்க… நாங்க வாங்கிட்டு வர்றோம்!” என்று கூறினோம்.
அவருக்கு நாம் இவ்வாறு கூறியதும் மிக்க மகிழ்ச்சி.
“நீங்க வந்தாலே போதும் சார்… வேறு எதுவும் வேண்டாம். முடிஞ்சா சிவாரத்திரிக்குள்ளே பின்னால் பக்கம் நான் சொன்ன ஃபோகஸ் லைட் போடமுடியுமா பாருங்க! பூஜை சாமான்களுக்கும் அபிஷேக பொருட்களுக்கும் ரொம்ப சிரமப்படவேண்டாம். உங்களால என்ன முடியுமோ அதை வாங்கிட்டு வாங்க. முடியலேன்னாலும் பரவாயில்லே!” என்றார்.
அவர் கேட்டுக்கொண்டபடி இரண்டு ஃபோகஸ் விளக்குகளையும் சிவராத்திரிக்குள் ஏற்பாடு செய்வதாக சொன்னோம்.
உழவாரப்பணி செலவுகளுக்கும், எலக்ட்ரிகல் பொருட்கள், பல்புகள் வாங்குவதற்கும் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் ஏற்கனவே உதவிவிட்ட சூழ்நிலையில், இதற்கு யாரிடம் போய் கேட்பது. இது பற்றி கூறி அவர்களிடம் மேற்கொண்டு பொருளதவி கேட்டால் நிச்சயம் அவர்கள் மறுக்கப்போவதில்லை. இருப்பினும் இது போன்ற கைங்கரியங்களில் ஈடுபடும் வாய்ப்பை அனைவருக்கும் தரவேண்டும் அல்லவா? மேலும் அவகாசம் வேறு இல்லை. வியாழன் சிவராத்திரி வேறு வருகிறது. அதற்குள் இதை செய்தால் தான் உபயோகமாய் இருக்கும். இது போன்ற நெருக்கடியான நேரங்களில் தவறாமல் தம்மை தொடர்புகொள்ளும்படி நண்பர் ஒருவர் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அவரிடம் பேசி ஏற்பாடு செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அவரிடம் பேசியதில் “இது எனக்கு கிடைத்த பாக்கியம்!” என்று உடனே சரி என்று சொல்லிவிட்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் ஃபோகஸ் லைட்டுக்கான தொகையை ஏற்பாடு செய்துவிட்டோம். நாம் அலுவலகம் செல்லவேண்டியிருப்பதால் நம் தந்தையிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து முன்னர் உழவாரப்பணிக்கு வந்து எலக்ட்ரிகல் வேலை செய்த எலக்ட்ரீசியனின் நம்பரை கொடுத்து அவரது கலந்து பேசி, ஃபோகஸ் லைட்டை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூறி அதற்குரிய பணத்தையும் தந்துவிட்டோம்.
அப்பா பிராட்வே சென்று ஃபோகஸ் லைட்டுகளை வாங்கி வந்தார். பின்னர் நேரடியாக திருவள்ளூர் சென்று எலக்ட்ரீசியனையும் உடன் அழைத்துக்கொண்டு ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டார்.
ஃபோகஸ் லைட் சற்று கூடுதல் வாட்ஸ் என்பதால் அதற்கு என தனி வயரிங் மற்றும் சுவிச் பாக்ஸ் அமைக்கப்பட்டு ஒரு வழியாக சிவராத்திரிக்கு முன்னதாக அந்த பணி முடிக்கப்பட்டது.
நண்பர் ஒருவர் ஏற்கனவே சிவராத்திரி அன்று பூஜை செலவுகளை தாம் ஏற்றுகொள்வதாக கூறி பணம் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய பணம் மற்றும் மேலும் நமது தளத்தின் வங்கி கணக்கில் இருந்த தொகை என அனைத்தையும் சேர்த்து, அபிஷேகப் பொடி, விபூதி, பால், தயிர், தேன், பன்னீர், எலுமிச்சை, பலவகைப் பழங்கள், நான்கு கால பூஜைகளுக்கும் சுவாமிக்கு வஸ்திரங்கள், அம்பாளுக்கு புடவை, பிற மூர்த்தங்களுக்கு அங்கவஸ்திரம் என பூஜை பொருட்கள் மற்றும் அபிஷேக பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டோம். அனைத்துமே சற்று தாராளமாக. உதிரிப்பூக்கள் மற்றும் மாலைகளுக்கு இருக்கவே இருக்கிறார் நம்ம மணிகண்டன்
அபிஷேகத்திற்குரிய பொருட்களை வாங்கும்போது ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக இருந்தோம்.
நாம் அபிஷேகத்திற்கு வாங்கி தரும் – பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல பொருட்கள் கெமிக்கல்கள் தான். அதாவது அந்தந்த வாசனைகளை கொண்ட எசென்ஸ் மட்டும் மிக்ஸ் செய்து தயாரிக்கிறார்கள். அவை உண்மையான பன்னீரோ அல்லது சந்தனமோ கிடையாது. தேன் இயற்கை பொருள் தான் என்றாலும் அதிலும் பெரும்பாலும் கலப்படம் வந்துவிட்டது.
இயற்கையாக நாம் அதன் குணம் மாறாமல் நாம் கொடுக்கக்கூடியது பசும்பால், இளநீர், மற்றும் எலுமிச்சை சாறு இவை தான். இதில், இளநீர் வேண்டாம் என்றும், மொத்தமாக அபிஷேகத்திற்கு இளநீரை ஒருவர் ஏற்பாடு செய்து தந்துவிட்டார் என்றும், முடிந்தால் பசும்பால் மற்றும் தயிர் & எலுமிச்சை பழம் ஆகியவை வாங்கி வருமாறு குருக்கள் நம்மிடம் கூறியிருந்தார்.
எனவே பாக்கெட் பால் மற்றும் பாக்கெட் தயிருக்கு பதில் பசும்பாலை எப்படியாவது ஏற்பாடு செய்து அபிஷேகத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
சென்னை போன்ற நகரங்களில் பசும்பால் கிடைப்பது அத்தனை சுலபமல்லவே… மேலும் நம்மால் அலுவலகமும் போய்க்கொண்டு, இந்த தளத்தையும் நடத்திக்கொண்டு, இதற்காக அலைவது என்பது முடியாத ஒன்று. எனவே பசும்பால் மற்றும் தயிர் ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் பொறுப்பை நம் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டோம்.
அவர் எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் பசும்பாலும், தயிரும் ஏற்பாடு செய்துவிட்டார்.
இப்படியாக சிவராத்திரிக்கு முன்பு நேரம் கிடைக்கும்போது இப்படி ஒவ்வொன்றாக அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டோம். மாலை மற்றும் பூக்களை நம் மணிகண்டனிடம் அட்வான்ஸ் கொடுத்து ஆர்டர் செய்தாயிற்று.
சரி எல்லா வேலையும் முடிந்தது. அடுத்து போக்குவரத்து. இவற்றையெல்லாம் எப்படி கோவிலுக்கு அதுவும் சுமார் 40 – 45 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டிக்கு…? ஒரு கூடை நிறைய வில்வம் மற்றும் பூக்கள் + ஆறு மாலைகள், பால் தயிர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள், வஸ்திரம், ஒரு பெரிய பை நிறைய பலவகைப் பழங்கள் – இவ்வளவு பொருட்களையும் எப்படி எடுத்துச் செல்வது ?
நண்பர் செந்தில் உதவிக்கு வந்தார். நம்முடன் சிவாராத்திரிக்கு கோவிலுக்கு வர விருப்பம் தெரிவித்த அவர், தனது காரை கொண்டு வருவதாக கூறினார்.
சிவராத்திரி அன்று மாலை, அவரை நேரே வடபழனி சென்று மணிகண்டனிடம் பூக்களையும் மாலையும் வாங்கிக்கொண்டு நம் வீட்டுக்கு வீட்டுக்கு வந்துவிடும்படியும், நாம் அலுவலகம் முடிந்து வரும்போது எஞ்சிய சில பொருட்களை நாம் வாங்கிக்கொண்டு வந்துவிடுவதாகவும் கூறினோம்.
என்னைக்கு நாம முக்கிய வேலையா ஏதாவது பிளான் செய்றோமோ அன்னைக்கு தான் ஆபீஸ்ல வேலை அதிகம் தருவாங்க. சிவராத்திரி அன்றும் அதே தான். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலைப் பளு அன்று நம்மை வாட்டியது. ஒருவழியாக அனைத்தையும் முடித்துவிட்டு அவசர அவசரமாக கிளம்பி மேலும் சில பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது மணி 8.30 PM இருக்கும்.
உடனடியாக குளித்து முடித்து தயாரானோம். சில நிமிடங்களில் நண்பர் செந்தில் வந்துவிட்டார். வடபழனி சென்று மணிகண்டனிடம் மாலை மற்றும் உதிரிப்பூக்களை வாங்கிவிட்டதாகவும் கூறினார்.
நாம் வாங்கி வைத்திருந்த பிற பொருட்களையும் ஏற்றிக்கொண்டு பூண்டி நோக்கி புறப்பட்டோம்.
நாம் கோவிலை அடையும்போது எப்படியும் மணி 10.00 இருக்கும். விளக்கொளியில் கோவில் தக தகவென மின்னியது பரவசமான ஒரு காட்சி!
அந்த ஊரில் உள்ள பசுக்கள் அனைத்தும் ஆலய வளாகத்தில் தான் இரவு படுத்துக்கொள்ளும் போல… கோவிலில் எங்கு பார்த்தாலும் பசுக்கள் ஆங்காங்கே படுத்துக்கொண்டிருந்தன. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அனைத்து பொருட்களையும் இறக்கி வைத்துவிட்டு, முதலில் நாம் பொருத்திய லைட்டுக்களை பார்க்க சென்றோம். உழவாரப்பணிக்கும் சரி… அதற்கு முந்தைய ட்ரிப் வந்தபோதும் சரி… நாம் வந்தது காலை வேளை. இரவு நேரத்தில் கோவில் விளக்கொளியில் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஃபோகஸ் லைட்டுகளின் வெளிச்சத்தில் கோவிலின் பிரகாரம் ஒளிமழையில் மின்னியது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இந்த கைங்கரியத்தில் உதவிய தன்னலம் கருதா நம் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து சுப்பிரமணிய குருக்களை பார்க்க சென்றோம். மூலவரிடம் ஏதோ பணியில் இருந்தார். நம்மை பார்த்ததும், உள்ளே இருந்து வெளியே வந்தார்… “வாங்க… வாங்க…ரொம்ப சந்தோஷம். ஏதோ உங்க புண்ணியத்துல கோவிலே பிரமாதமா ஜொலிக்குது. அப்பா எலக்ட்ரீசியனோட வந்து ஃபோகஸ் லைட்டை போட்டு கொடுத்துட்டார். லைட்டை பாத்தீங்களா?”
“சிவ சிவ… இதுல நம்ம புண்ணியமெல்லாம் ஒன்னும் கிடையாது சுவாமி. இது அவன் எங்களுக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு… எத்தனையோ பேர் அவனுக்கு பணி செய்ய காத்திருக்கும்போது அவன் இதற்கு எங்களை தேர்ந்தெடுத்தற்கு நன்றி சொல்லி கொள்கிறோம் முதலில்!” என்றோம்.
“ரொம்ப சந்தோஷம்… ரொம்ப சந்தோஷம்…”
“அடுத்த கால பூஜை இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள ஆரம்பமாயிடும். நீங்க சட்டை பனியனை கழட்டிட்டு துண்டை கட்டிக்கோங்க… பூஜை சாமான்களையெல்லாம் எடுத்து வைங்க…” என்றார்.
நண்பர் செந்திலும் நாமும் பம்பரமாக சுழன்று அனைத்தையும் எடுத்து வைத்து பூஜைக்கான ஏற்பாடுகளில் உதவினோம். நாம் வேட்டி அணிந்திருந்ததால் மிகவும் சௌகரியமாக இருந்தது.
சற்று நேரத்தில்இரண்டாம் கால அபிஷேகம் மற்றும் பூஜை துவங்கியது.
சன்னதியில் நின்று கொண்டு, அபிஷேகப் பொருட்களை எடுத்து தருவது, அபிஷேகம் செய்த பின்பு, பாத்திரங்களை வாங்கிக்கொள்வது, ஆரத்தி தட்டை எடுத்து தருவது, என்று பரபரப்பாக அந்த அபிஷேகம் மற்றும் பூஜை கழிந்தது.
ஒரு பக்கம் குருக்கள் அபிஷேகம் செய்ய, மறுபக்கம் நாம் பொருட்களை எடுத்து கொடுக்க, மற்றொரு பக்கம் சிரவணன் ருத்ரம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தான். ஆக, நமக்கு மட்டுமில்லே தலைவருக்கும் அன்னைக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
எம் தலைவனுக்கு (இறைவனுக்கு) நடைபெறும் அபிஷேகங்களை அத்தனை அருகில் நாம் பார்த்தது கிடையாது. எத்தனையோ வித இறைபணிகளில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தாலும் அபிஷேகத்துக்கு கூட இருந்து உதவும் வாய்ப்பு இங்கு கிடைத்தது மறக்க முடியாத ஒன்று.
இளநீர் அபிஷேகத்தின்போது சீவி வைக்கப்பட்டிருந்த இளநீரை குனிந்து நிமிர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து தந்து கொண்டிருந்தோம்.
ஒருகட்டத்தில் நமக்கு வியர்வை ஆறாக பெருகி வழிந்தது. என்ன நினைத்தாரோ, நம்மை பார்த்து குருக்கள், “உங்களுக்கு ஒன்னும் சிரமமில்லையே? உங்களை ரொம்ப வேலை வாங்குறேன்ன்னு நினைக்கிறேன்” என்றார்.
“மாமா…நான் வந்த முக்கிய நோக்கமே உங்களுக்கு பூஜையில கூட மாட இருந்து ஒத்தாசை பண்ணத்தான். கவலையே படாதீங்க… என்ன வேலை வேணும்னாலும் சொல்லுங்க…” என்றோம்.
அபிஷேகம் முடிந்ததும் சன்னதியை சுற்றி சிதறிக் கிடந்த அபிஷேகக் பொருட்களை கூட்டி பெருக்கி அகற்றச் சொன்னார்.
இதைவிட ஒரு பெரிய பாக்கியம் இந்த பிறவியில் கிடைக்குமா?
சிவபெருமானின் திருமேனி மீது பட்டு கீழே சிதறிக் கிடந்தவைகளை துடைப்பம் வைத்து தள்ள என்னவோ போலிருந்தது. எனவே துடைப்பத்தை தூக்கி போட்டுவிட்டு கைகளால் அவற்றை அள்ளி கூடையில் போட்டோம். மேலும் காலி எண்ணை பாக்கெட்டுகள், காலி தேன் பாட்டில்கள், பூக்கள், எலுமிச்சை தோல்கள், இளநீர் மட்டைகள் என அனைத்தையும் அள்ளி, ஒரு கூடையில் போட்டு வெளியே கொண்டு போய் கொட்டினோம். நண்பர் செந்தில் பெருமளவு உதவினார்.
ஒவ்வொரு முறையும் அபிஷேகங்கள் செய்யும்போது, ஆலயங்களில் அர்ச்சகர்கள் எந்தளவு சிரமப்படுவார்கள் என்பதை அருகிலிருந்து புரிந்துகொண்டோம்.
அபிஷேகம் முடிந்ததும் திரை மூடப்பட்டு அலங்காரம் நடைபெற்றது.
நாம் சற்றும் எதிர்பாராத வாய்ப்பு அடுத்து கிடைத்தது. “கையில் மணியை எடுத்து வெச்சிக்கோங்க… நான் சொல்லும்போது திரையை விலக்குங்க… தீபாராதனை காட்டும்போது மணியடிங்க!” என்றார்.
சில நிமிடங்களில், திரையை விலக்குங்க என்று நம்மிடம் சிரவணன் குரல் கொடுக்க, நாம் திரையை விலக்கி, மணியடிக்க, நாதஸ்வர மற்றும் தவில் இசை முழங்க தீபாராதனை காட்டப்பட ஆர்வமுடன் காத்திருந்த பக்தர்கள் பரவசத்துடன் இறைவனை தரிசனம் செய்தனர்.
“ஓம் நமச் சிவாய… ஓம் நமச் சிவாய…” என்ற கோஷத்தில் ஆலயம் அந்த இரவிலும் அதிர்ந்தது.
தொடர்ந்து மின்னொளி அம்பாளுக்கும் ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நாம் வாங்கி தந்த புடவை அளவு போதவில்லை. எனவே வேறு ஒரு புடவை அம்பாளுக்கு சாற்றப்பட்டு, நாம் வாங்கி தந்த புடவை மேலே போர்த்தப்பட்டிருந்தது.
பாற்கடலை கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் அருந்திய போது, அது எங்கே உள்ளே சென்று இறைவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பதறிய அன்னை, அதை தொண்டையிலேயே நிறுத்தும் பொருட்டு ஓடிச் சென்று, இறைவனின் கழுத்தை பிடித்தாளாம். அன்னையின் கைபட்ட அடுத்த நொடி கொடிய நஞ்சு அமுதமாக மாறிவிட்டதாம்.
அன்னையின் ஸ்பரிசத்துக்கே அப்படி ஒரு சக்தி உண்டு.
“அம்மா… அப்பா கொஞ்சம் பாராமுகமா இருக்கார் எங்க மேலே… நீ தான் எடுத்து சொல்லி கொஞ்சம் கவனிக்க சொல்லணும். அவர் கவனிக்கலேன்னாலும் பரவாயில்லே… நீயாவது கொஞ்சம் இந்த பிள்ளைகளை கவனி!” இது தான் நாம் மின்னொளி அம்பாளிடம் வேண்டிக்கொண்டது.
தொடர்ந்து பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. அபிஷேக பஞ்சாமிர்தம் + புளிசாதம். இந்த சுவைக்கு அந்த அமுதமும் ஈடாகுமா?
குருக்கள் நம்மிடம் கேட்கவில்லை என்றாலும் எதற்கும் இருக்கட்டும்… என்று நாம் தொன்னைகளை கொண்டு சென்றிருந்தோம். அது பிரசாதம் விநியோகிக்க மிகவும் உபயோகமாய் இருந்தது.
அடுத்த பூஜைக்கும் அபிஷேகத்துக்கும் எப்படியும் நேரமிருக்கிறது. அமர்ந்து அறுபது மூவர் கதைகள், சிவபுராணம் என்று நாம் கொண்டு சென்ற புத்தகங்கள் ஏதேனும் படிக்கலாம் என்று கருதி அமர்ந்தோம். சற்று நேரத்தில் தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. இருக்கும் களைப்பில் நம்மையும் அறியாமல் உறங்கிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் எழுந்து முகம் கழுவி விபூதி தரித்து, வெளிப் பிரகாரத்தை பிரதட்சிணம் வரலாம் என்று வெளியே வந்தோம்.
பக்தர்கள் சாப்பிட்டுவிட்டு போட்டிருந்த தொன்னைகளும் பேப்பர் கப்புகளும் ஆங்காங்கே கிடந்தன.
தூக்கத்தை விரட்ட சரியான வேலை கிடைத்தது என்றெண்ணி, அனைத்து குப்பைகளையும் ஒன்று விடாமல் அள்ளி… ஒரு ஓரமாக போட்டோம். கோவிலின் உள்ளேயே சிலர் ஆங்காங்கே… தொன்னைகளை போட்டிருந்தனர். அவற்றையும் சேகரித்து குப்பைக்கூடையில் போட்டோம்.
சற்று நேரத்தில் ஒரு மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் பஸ்சிலும் வேனிலும் வந்தது. ஆலயமே திமிலோகப்பட்டது. சிவராத்திரி தரிசனத்திற்காக ஒவ்வொரு கோவிலாக அவர்கள் போவது தெரிந்தது. இங்கே முடித்துவிட்டு அடுத்து திருப்பாச்சூர் செல்வதாக அறிந்தோம். கொடுத்து வைத்தவர்கள். ஹூம்…
அடுத்து நண்பர் செந்திலிடம் சற்று நேரம் (ஆன்மீக விஷயங்கள் தான்) பேசிக்கொண்டிருந்தோம்.
மங்கள வாத்தியங்கள் இசைப்பவர்களிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களது தெய்வீக தொண்டின் சிறப்பை எடுத்துக்கூறிநம்மால் இயன்ற ஒரு சிறிய தொகையை இருவருக்கும் தந்தோம்.
நேரம் போவது தெரியவில்லை.
அடுத்த கால அபிஷேகத்திற்கு ஆயத்தமானோம். மாவட்ட முதன்மை நீதிபதி ஒருவர் தரிசனத்திற்கு வந்திருந்தார். அவருடன் அவரது உதவியாளர்களும் வந்திருந்தனர்.
நமது ‘தினசரி பிரார்த்தனை’ படம் கோவிலில் மாட்டப்பட்டிருந்தது. அதை அவர் ஒரு பேப்பரில் எழுதிக்கொள்ள முனைய, நாம் சென்று அதை அச்சடித்து நோட்டீசை கொண்டு வந்து கொடுத்தோம்.
நம்மை பற்றி விசாரித்தவர் நமது பணிகள் பற்றியும் தளத்தை பற்றியும் தெரிந்துகொண்டவுடன். கைகளை பற்றி குலுக்கினார்.
“ரியல்லி கிரேட் சார்…. ரியல்லி கிரேட்!” என்றார். அடுத்த உழவாரப்பணியில் நிச்சயம் தாமும் கலந்துகொள்வதாக கூறினார்.
அடுத்த கால அபிஷேகம் துவங்கியது.
முந்தைய கால பூஜையை போலவே நாம் அருகில் இருந்து உதவ, அபிஷேகங்கள் நடைபெற்றது. முக்கியமாக தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்களின்போது நமதுபிரார்த்தனை பலமாக இருந்தது. பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருந்த சிரவணன், ருத்ரம் முதலான வேத மந்திரங்களை உச்சரித்தபடி, தூள் கிளப்பிவிட்டான்.
அடுத்த கால பூஜை அவனே முன்னின்று செய்வதாக தெரிந்தது. தனியே கூப்பிட்டு நண்பர்களின் சில முக்கிய பிரார்த்தனைகளை சொல்லிச் பிரார்த்தனை செய்தபடி அபிஷேகம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
“பக்கத்து இலையில கொஞ்சம் பாயாசம் வைங்க”… என்கிற கதையாக அப்படியே நம் கோரிக்கை ஒன்றையும் தயங்கி தயங்கி சொன்னோம்.
“நிச்சயம் பிரார்த்தனை பண்றேன் அண்ணா…!” என்றான் சிறுவன்.
அவன் அப்படி சொன்னதே நமக்கு ஏதோ பிரார்த்தனை நிறைவேறிய மகிழ்ச்சியை தந்தது.
குருக்கள் பிரசாதம் கொண்டு வர வீட்டுக்கு செல்ல, கடைசி கால பூஜையை சிரவணனே முன்னின்று செய்தான். நாம் உடனிருந்து அனைத்து பொருட்களையும் எடுத்துகொடுத்து உதவினோம்.
சற்று நேரத்தில் குருக்கள் வந்துவிட்டார். அபிஷேகம் முடிந்து அலங்காரம் துவங்கியது. நாம் வாங்கித் தந்த வஸ்திரங்கள் ஒவ்வொன்றாக இறைவனுக்கு சாத்தப்பட்டது.
பலவிதம் வண்ணங்களில் நாம் வஸ்திரம் வாங்கி சென்றிருந்தோம். அதை கட்டிக்கொண்டு இறைவன் கொடுத்த காட்சி இருக்கிறதே… அடி தூள் போங்க!
தீபாராதனை முடிந்து பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இப்போது கேசரி மற்றும் பஞ்சாமிர்தம். கேசரி அப்படியொரு சுவை. சிவராத்திரி விரதம் என்பதையும் ஒரு கணம் மறந்து இன்னொரு முறை வாங்கி சாப்பிட்டோம்.
“வீட்டுக்கும் கொஞ்சம் கொண்டு போங்க” என்று கூறி, நமக்கும் நண்பர் செந்திலுக்கும் கொஞ்சம் பிரசாதம் கட்டித் தந்தார்கள்.
சிரவணன் அபிஷேகப் பிரசாதம் மற்றும் தேங்காய், பூ, பழம் மற்றும் விபூதி பிரசாதம் ஆகியவை அடங்கிய பையை தந்தான்.
விடைபெறும்போது “ரொம்ப தேங்க்ஸ்… நீங்க மட்டும் வரலேன்னா ரொம்ப சிரமமா போயிருக்கும்…” என்றார்.
நம் மனதில் வேறு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. மனமும் சற்று வாடியிருந்தது. (After all, we all are human beings!)
“என்ன ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க… ?” என்றார் குருக்கள்.
“இல்லே சுவாமி… நமக்கு எத்தனையோ பிரச்சனைகள். இதுவரைக்கும் அதையெல்லாம் நாம பெரிசா நினைச்சது கிடையாது. எனக்குன்னு அவன் கிட்டே எதுவும் கேட்டதும் கிடையாது. முதல் தடவையா எனக்காக அவன் கிட்டே கேக்க வெச்சிட்டான். அது என் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. அவனுக்கு பணி செய்வதும், அவன் விரும்பிய பணி செய்வதும் நம்மோட கடமை. நம்மளை காப்பாத்துறது அவன் கடமை!” என்றோம்.
“என்ன நீங்க… உங்களுக்கு என்ன குறை? எவ்வளோ பெரிய விஷயங்கள் பண்றீங்க… உங்களை விட்டுடுவானா அவன்? அவன் தானே உங்களை இங்கே வர வெச்சிருக்கான். சிவராத்திரிக்கு எங்கெல்லாமோ போறதா இருந்தீங்களே…ஆனா அவன் இங்கே இழுத்து பக்கத்துலேயே வெச்சிருந்து அபிஷேகங்களை பார்க்க வெச்சி அதுக்கு கூட இருந்து உதவுற வாய்ப்பையும் கொடுத்திருக்கான். அவன் அருள் உங்களுக்கு என்னைக்கும் உண்டு! கவலைப்படாதீங்க!” என்றார்.
“அந்த நம்பிக்கையில் தான்… நான் மட்டுமில்லே… எங்கள் வாசகர்களும் வாழ்கிறோம்!” என்றோம்.
சரிதானே?
இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம். நேரே வீட்டுக்கே வந்து டிராப் செய்துவிட்டு போனார் நண்பர் செந்தில்! அவர் மட்டும் உடனிருந்து நமக்கு உதவவில்லை எனில், நிச்சயம் தனியாளாக தவித்துப் போயிருப்போம். அவருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.
======================================================
வாசகர்கள் அவரவர் தங்களுடைய சிவராத்திரி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாமே…?
நன்றி !!
======================================================
[END]
டியர் சுந்தர்ஜி
எவ்வளவு பெரிய பதிவு, WONDERFUL இதை படித்தவுடன் நேரில் பூஜையை பார்த்தது போல் உள்ளது. நாங்களும் இதில் கலந்து கொள்ள முடியவில்லை என்று மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் சிவனுக்கு சிவராத்திரி அன்று தொண்டு செய்வதற்கு. உங்களுக்கு சிவனின் அருள் கண்டிப்பாக வெகு விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மிக அழகாக ரசனையுடன் விவரித்ததற்கு மிக்க நன்றி. அடுத்த சிவராத்ரிக்கு நாங்களும் கண்டிப்பாக கலந்து கொள்வோம்
நன்றி
உமா
அருமையான பதிவு.வெளியூரில் இருக்கும் எங்களுக்கு லைவ் ஆக பார்த்தது போல் இருந்தது.தங்களின் தினசரி பிரார்த்தனையையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.மிக்க நன்றி.
Please check the below link.
http://rightmantra.com/?p=5370
இந்த பதிவையும் அந்த தினசரி பிரார்த்தனையையும் அவ்வப்போது தளத்தில் பதிவுகளுக்கிடையே பகிர்ந்தும் வருகிறோம். கவனிக்கவில்லையா?
– சுந்தர்
சுந்தர் சார் உங்களுடைய இந்த பதிவை படிக்கும்போது, நானும் உடன் இருந்தார் போல ஒரு உணர்வு ஏற்படுகிறது,,மின்விளக்கில் கோவில் பார்க்க மிக அற்புதமாக உள்ளது,
சிவராத்திரி அன்று என் குடும்பத்துடன் அருகில் உல்ல ஒரு சிவன் கோவிலுக்கு சென்றிருந்தோம்…உங்கள் அளவிற்கு எனக்கு வர்ணனை செய்து எழுத தெரியாது…ஆனால் பிரமாதமான தரிசனம்…தரிசனம் செய்து முடித்ததும் வீட்டிற்கு வந்து ஒரு உணவை பிடி பிடித்துவிட்டேன்..
சுந்தர் சார் காலை வணக்கம்
தங்கள் பதிவு மிகவும் அருமை
நன்றி
சுந்தர்ஜி
உங்கள் சிவராத்திரி அனுபவம் நெகிழ வைக்கிறது. யானும் உங்கள் சிவராத்திரி பதிவினால் பெற்ற தெளிவில் அருகில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு என்னால் முடிந்த அபிசேகப்பொருட்களொடு சென்றேன். அன்று பிரதோஷம் என்பதால் அலுவல் முடிந்து , சிறிது அளவு கைங்கர்யம் செய்து பிரதோஷ பூஜை முடித்து இல்லம் சென்று பெரியவா முன்பு விளக்கேற்றி, அபிசேக பொருட்கள் எடுத்து, தோழி ஒருவரை அழைத்து கொண்டு, மறுபடி கோவில் வரும்போது ஒரு கால அபிசெகம் முடிந்துவிட்டது. பிறகு நாம் அலங்காரம் செய்வதற்குள் நமது தோழியின் உதவியொடு சுற்றி உள்ள பரிவார தெய்வங்களுக்கு விளக்கேற்ற உதவினொம்.
அலங்காரபூஜை முடிந்ததும் அன்னதான பணி. இதில் பெரும்பாலானவர்கள் முதல் காலத்துடன் இல்லம் சென்றுவிட்டார்கள். அடுத்து 2 வது அபிசேகத்தில் நமது நெருங்கிய நண்பர்களுக்கான பிரார்த்தனை, பொது மற்றும் நமது குடும்ப பிரார்த்தனை வைத்தேன். அலங்காரம் முடியும் வரை “ஓம் நமசிவாயா என ஆலய வலம். அலங்காரத்திற்கு பிறகு புஷ்பம் தொடுத்தொம். முடியும் தருவாயில் மீண்டும் 3 வது அபிசேகம். இம்முறை சிவபுரானம் படித்துகொண்டே பார்த்தொம். பிறகு அலங்காரம் ஆகும் வரை ஆலய வலம். ஆலய வலத்தின் பொது இந்த சிவராத்திரி விரதம் எனக்கு மட்டுமல்ல எனது சொந்த குடும்பத்திற்கும் நம் தள குடும்பத்திற்கும் என நினைத்து வணங்கினேன். ஏன் என்றால் எமது குடும்பத்தினர் இல்லாமல் நாம் இல்லை. அதொடு தற்பொது ரைட்மந்திரா இல்லை என்றால் மஹா பெரியவாவின் அருள் எமக்கு புரிந்து இருக்காது.
பிறகு அடுத்த 4 வது அபிசெகத்தின் பொது “ரிண விமொசன ஸ்தோத்திரம் படித்து கொண்டே பார்த்தொம். முடிந்ததும் ஆலய தர்மகர்த்தா 108 காமாட்சி விளக்கு எடுத்து வந்து அலங்காரத்திற்குள் அவற்றை ஏற்ற சொன்னார். முன்பு முதல் காலத்தில் ஆங்காங்கு ஏற்றப்பட்ட அவற்றை நாங்கள் ஒரு சுமார் 6 பேர் கலக்ட் செய்து மீண்டும் எண்ணெய் ஊற்றி நந்தியின் முன்பும் பின்பும் மூலவரை நோக்கி, 108 விளக்கும் வருமாறு வரிசைப்படுத்தி ஏற்றினொம். அவைகளின் முன்பு மார்க்க பந்து ஸ்தோத்திரம் படித்தொம். . பிறகு அலங்காரம் முடிந்ததும் பிரசாதம் வாங்கிக்கொண்டு இந்த முறைதான் பஞ்சாமிர்ததுடன் இலையில் சிறிது உப்புமா வாங்கி சாப்பிட்டொம். அதுவரை பஞ்சாமிர்தம் மட்டுமே.
மீண்டும் இல்லம் வந்து வீட்டில் பெரியவா முன்பு பிரார்த்தனை செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து விடிந்ததும் குளித்து உணவருந்தினொம். பிறகு என் அன்னையுடன் வேறு ஒரு ஜீவசமாதி கோவிலில் காலை தரிசனம் (பள்ளைய தரிசனம் என்பது) செய்து அலுவலகம் சென்றொம். ஈசன் அருளுக்கு நாமும் ஒருநாள் சாட்சி கூறுவோம் என மனப்பூர்வமாக நம்புவோம்.
நன்றி!
மிகமிக அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி ..
////என்ன நீங்க… உங்களுக்கு என்ன குறை? எவ்வளோ பெரிய விஷயங்கள் பண்றீங்க… உங்களை விட்டுடுவானா அவன்? அவன் தானே உங்களை இங்கே வர வெச்சிருக்கான். சிவராத்திரிக்கு எங்கெல்லாமோ போறதா இருந்தீங்களே…ஆனா அவன் இங்கே இழுத்து பக்கத்துலேயே வெச்சிருந்து அபிஷேகங்களை பார்க்க வெச்சி அதுக்கு கூட இருந்து உதவுற வாய்ப்பையும் கொடுத்திருக்கான். அவன் அருள் உங்களுக்கு என்னைக்கும் உண்டு! கவலைப்படாதீங்க!” என்றார். “அந்த நம்பிக்கையில் தான்… நான் மட்டுமில்லே… எங்கள் வாசகர்களும் வாழ்கிறோம்!” என்றோம்.////
இறைவனோடு நேரடி உரையாடல் என்றுதான் தோன்றுகிறது .
நிச்சயம் நாம் அனைவருக்கும் ஈசன் அருள் நிச்சயம் உண்டு .
-மனோகர்
சார் உங்களின் வழிகாட்டல் படி நானும் என் தோழிகளும் திருவண்ணாமலை போனோம். சிவராத்திரி அன்று கிரிவலம் வந்தோம். எல்லா
லிங்கமும் நல்ல தரிசனம். அபிஷேஹம்.
மற்ற நாளை போலல்லாமல் எல்லா லிங்கதிற்கும் நடக்கும் அபிஷேகத்தை பார்த்தது ரொம்ப நல்லா இருந்தது. அந்த புண்ணியம் எல்லாம் சுந்தர் சார் உங்களை தான் சேரும்.
selvi
சிவாய சிவ ……..எல்லாம் ஈசன் அருள் ……