Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > யாமிருக்க பயமேன் ? அபயம் தருவான் குமரக்கடவுள் – கந்த சஷ்டி ஸ்பெஷல்!

யாமிருக்க பயமேன் ? அபயம் தருவான் குமரக்கடவுள் – கந்த சஷ்டி ஸ்பெஷல்!

print
08/11/2013 வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி. நாம் தவறவிடக்கூடாத மகத்துவம் வாய்ந்த நாட்களில் கந்த சஷ்டியும் ஒன்று. கந்த சஷ்டியன்று முருகனை தரிசிப்பது மிக மிக நன்மை தரக்கூடியது. பல வித பிரார்த்தனைகள் விரதங்கள் இருந்தும் தங்கள் பிரார்த்தனை நிறைவேறவில்லை என்று கருதுபவர்கள் கந்த சஷ்டி தினத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முருகப் பெருமானை தரிசிப்பவர்களுக்கு அவனது அருள் பரிபூரணமாக வெளிப்படும் தினங்களில் கந்த சஷ்டியும் ஒன்றாகும். கந்த சஷ்டி மொத்தம் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. எனவே இது குறித்து முன்பே பதிவளித்திருக்கவேண்டும். மன்னிக்கவும். இருப்பினும் நமக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. நாளை இறுதி நாளன்று என்ன செய்யவேண்டும் என்பது பற்றி கூறியிருக்கிறோம். இயன்றவற்றை உள்ளன்போடும் எளிமையோடும்  செய்து, முருகனை நாளை அவன் ஆலயத்தில் தரிசித்து அவனருள் பெறுங்கள்.

மற்ற தெய்வங்கள் அனைத்தும் தங்களை கைவிட்டுவிட்டதாக நினைப்பவர்கள் கந்தனிடம் சரண் புகவேண்டும். கைவிடப்பட்டோரை காப்பதே கந்தவேளின் கடமை. இது பொய்யில்லை. சத்தியம். அருணகிரி நாதர் முதல் பலரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இறுதியில் வாரியார் சுவாமிகள் முருகனின் அழகையும் பெருமையையும் கூறும் கட்டுரை ஒன்றை தந்திருக்கிறோம். அதை தவறாது படியுங்கள். இதை பக்தியுடன் மனப்பூர்வமாக படியுங்கள். நீங்கள் நான்கு பேருக்கு படித்து காட்டுங்கள். பரிந்துரை செய்யுங்கள். முருகன் உங்களுக்கு சஷ்டி விரதம் இருந்த பலனை அருள்வான் என்பது உறுதி. ஸ்ரவணத்தின் மகிமை சரவணனுக்கு தெரியாதா என்ன? 

பரபரப்பு மிகுந்த இந்த கலியுகத்தில் இறைவனின் பெருமையை படிக்கும், காதால் கேட்கும் ‘ஸ்ரவணமே’ கண்கண்ட மருந்து.

நாளை காலை நம் தளம் சார்பாக வடபழனி / குன்றத்தூர் முருகன் கோவிலில் விஷேட வழிபாடு நடைபெறும். பிற்பகல் ஆதரவற்ற மற்றும் நரிக்குறவ குழந்தைகள் இல்லமான சைதை திருவள்ளுவர் குருகுலத்தில் நம் தளம் சார்பாக அன்னதானம் நடைபெறும். கந்தசஷ்டியன்று அன்னை வள்ளியின் உறவினர்களை மறந்தால் எப்படி? எனவே நாளை அவர்களுக்கு நம் தளம் சார்பாக வடைபாயசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்படும்.

===================================================================

Lord Muruga

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான். சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருக்கலாம். சஷ்டியன்று விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

கந்த சஷ்டியன்று என்ன செய்யவேண்டும் ?

இந்த ஆண்டு கந்த சஷ்டி 3.11.2013 முதல் 08.11.2013 வரை. இறுதி நாளான நாளை சூரசம்ஹார தினத்தன்று (08.11.2013) மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.

உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள்.

வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

சஷ்டி விரதத்தின் சிறப்பு

செவ்வாய் திசை, குரு திசை நடப்பவர்கள், நிலப் பிரச்னை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, புத்திர பாக்கியமின்மை ஆகியோர்களுக்கு அருமருந்து இந்த கந்தசஷ்டி1

முருகனுக்கு பல்வேறு விரதங்கள், உற்சவங்கள், வழிபாடுகள் இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக சஷ்டி விரதம் கூறப்பட்டுள்ளது. ‘சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பார்களே, அது கந்த சஷ்டி விரத மகிமையை வெளிப்படுத்தும் வகையில் உருவானதுதான். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற வாக்கியமே மருவி இவ்வாறு மாறியிருக்கிறது. அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வேண்டினால் சற்புத்திர யோகத்தை அருள்வார்.

முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. இந்நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சகல தடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

நீர் விரதம், பால் விரதம், மவுன விரதம் என பலவகை விரதங்கள் உண்டு. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகளையும் கந்த சஷ்டியன்று செய்வார்கள்.

சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் காலை, மாலை இரு வேளையும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். மனதை ஒருமுகப்படுத்தி இவற்றை சொல்லி முருகனை துதிப்பது நற்பலன்களை தரும்.

ஜாதக அமைப்பின்படி செவ்வாய் திசை, குரு திசை நடப்பவர்கள், நிலப் பிரச்னை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார தரிசனம் செய்தால் சூரனை வேல்கொண்டு அழித்ததுபோல நமது பிரச்னைகளையும் கந்தப்பெருமான் வேலாய் வந்து நின்று அழித்து வளமிகுந்த வாழ்வை அருள்வார் என்பது நம்பிக்கை.

முருகனை குறித்து செய்யப்படும் அர்ச்சனையில் ‘சஷ்டிப் பிரியாய நம’ என்று வரும். சஷ்டிப் பிரியனான முருகனை கந்தசஷ்டியன்று வழிபடுவோம். சகல நலன்களும் பெறுவோம்.

===================================================================

குழந்தை வரம் தரும் சஷ்டி தேவதை

கந்த சஷ்டி என்பது ஓர் திதி விரதம். இது ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு வருவதாகும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது ஓர் புராதனத் தமிழ்ப் பழமொழியாகும்.

bala murugan_

இதற்கு சஷ்டி திதியில் விரதம் அனுஷ்டித்தால் அகத்தில் உள்ள கருப்பையில் கரு உருவாகி வளரும். சிலர் இதனை சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று வேறுவிதமான பழமொழியாக்கி பொருள் சொல்வது மிகவும் தவறாகும்.

சஷ்டி என்பவள் ஒர் திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். இவள் பிரம்ம தேவனின் மானசபுத்ரி.

முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தேவயானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியா கத் திகழ்ந்த (தேவ சேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள்.

அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது. சஷ்டி எனும் இந்த திதி தேவதையானவள் குழந்தை இல்லாதப் பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை.

மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பாலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள். அதனால் இந்த சஷ்டி திதி தேவதையை குழந்தை பாக்கியம் வேண்டி அக்கால மக்கள் வழிபட்டனர். இவளை பிரசவம் நடந்த வீட்டில் 6-வது நாளும், 21-வது நாளும் அவர்கள் வணங்கி பூஜித்துள்ளனர்.

அப்போது இவளை சம்பத் ஸ்வரூபிணியாக அவர்கள் வழிபடுவார்களாம். ஒரு சமயம் சுவாயம்புவ மனு எனும் மன்னனுக்கும், அவன் மனைவி மாலினி தேவிக்கும் வாரிசாக ஓர் ஆண் குழந்தையின்றி புத்ரதோஷம் இருந்தது. அவர்கள் சஷ்டி விரதமிருந்து சஷ்டி தேவியின் அருளால் 12 ஆண்டுகள் கழித்து புத்ரபாக்யமும் ஏற்பட்டது.

ஆனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளால் அக்குழந்தை இறந்தே பிறந்தது. அதனால் அக்குழந்தையை மயானத்தில் கொண்டு சென்று புதைப்பதற்கு முன்பு அழுது புலம்பினர். அப்போது அங்கு நேரில் தோன்றிய சஷ்டி தேவி அக்குழந்தையிடம் சென்று அதனை எடுத்து தம் மார்போடு அணைத்து தம் இதழ்களால் முத்தமிட்டு அதை ஆசிர்வதித்தாள்.

உடனே இறந்த அக்குழந்தை உயிர் பெற்றெழுந்தது. இதனைக் கண்டு அரசனும், அரசியுடம் அவன் சேனைகளும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அக்குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டழைத்த சஷ்டிதேவி, இவன் நெடுநாட்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து அரசு புரிவான் என்று ஆசீர்வதித்தாள் பிறகு அக்குழந்தையை சுவாயம் புவ மனுவின் மனைவி மாலினியின் கைகளில் தந்து மறைந்தாள்.

சுவிரதன் என்றால் நன்கு விரதம் அஷ்டித்ததால் பிறந்தவன் என்பது பொருளாகும். அதனால் தான் குழந்தை வரம் வேண்டும் அனைவருமே முருகப்பெருமானுக்கு மிகவும் பிரியமான தேவதையான இந்த சஷ்டி தேவியின் நாளில் சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானையும் சஷ்டி திதி தேவதையையும் வழிபட்டு புத்ரபாக்கியம் பெறுவதோடு மற்றும் பல பெரும்பேறுகளையும் பெற்று மகிழ்கிறார்கள்.

===================================================================

திருமணத் தடைகள் விலக – வாரியார் காட்டும் வழி!

திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது. இதில் “விறல் மாரனைந்து” எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்.

திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.

சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ:-

விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிருந்து – வெயில் காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் – வசை கூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடி தான துன்ப – மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே!

===================================================================

சுப்ரமணிய காயத்ரி :

`ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்’

– முருகப் பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.

===================================================================

Dinamalar_Kanda Sashti

(Double click to ZOOM and again click the image to READ the text)

===================================================================

variyar2முருகனின் பெருமை – திருமுருக. கிருபானந்த வாரியார்

* ஒரு பெரிய நகரத்திற்கு ஆறு வழிகள் இருக்கும். அவை பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. பல வகையாக வளைந்து வருகின்றன. முடிவில் அவை அந்த நகரத்தில் வந்து முடிகின்றன. அதுபோல, ஆறு சமயங்களும் பல்வேறு விஷயங்களை போதித்தாலும், இறுதியில் அவை முழுமுதற் கடவுளான முருகப்பெருமானிடமே முடிவடைகின்றன.

* சமயங்களுக்கு தலைவன் முருகனே என்பதற்கு அறிகுறியாகவே, அந்தக் குமர நாயகனுக்கு ஆறு திருமுகங்கள் விளங்குகின்றன. அந்த ஆறுமுகங்களிலும் ஈஸ்வரனுடைய ஆறு குணங்கள் இலங்குகின்றன.

* சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் அம்பிகையின் ஒரு முகமும் சேர்ந்து எம்பெருமான் ஆறு திருமுகம் கொண்டுள்ளார்.

* சுப்பிரமணிய மூர்த்தியின் ஆறு முகங்களில் ஒரு முகம் ஓம்கார வடிவத்தை உடையது. அது இன்பத்தை தருவதாகும். மற்றொரு முகம் ஞான மொழியை மொழிகிறது. இன்னொரு முகம் “சரவணபவ’ என்ற ஆறெழுத்தை அன்புடன் கூறி, பக்தர்களின் வினைகளை தீர்க்கிறது. ஒரு முகம் லட்சத்து ஒன்பது வீரர்களையும் மயக்கிய கிரவுஞ்ச மலையை பிளக்கும் வகையில் ஞானசக்தியை ஏவி இன்னருளை தருகிறது. ஒரு முகம் பக்தி மார்க்கத்தில் இருந்து தவறிய சூரர்களை அழித்த வீரத்தை கொண்டது. இன்னொரு முகம் மான் வயிற்றில் பிறந்த வள்ளி நாயகியின் மனம் கவர்ந்தது. இத்தனைக்கும் சொந்தக்காரனாக ஆறுமுகப்பெருமான் விளங்குகிறார்.

* நவரத்தின மாலைகளை அணிந்த மார்பைக் கொண்டவர் முருகன். மணிமகுடங்களை உடையவர். அவரது வனப்பை எடுத்துரைக்க மிகச்சிறந்த எழுத்தாளர்களாலும் முடியாது. இதனால்தான் அருணகிரிநாதர் அவரது ஆறு முகங்களையும் “எழுதரிய அறுமுகமும்’ என்று பாடினார்.

* அழகில் சிறந்த மன்மதர்கள் ஆயிரம் கோடி பேர் ஒன்று சேர்ந்தாலும் குமரக்கடவுளின் பாத அழகுக்குக்கூட இணை வராது. மன்மதனை தன் அழகால் முருகன் ஏளனம் புரிபவன் ஆன படியால் அந்த பெருமானுக்கு “குமரன்’ என்ற பெயர் ஏற்பட்டது. மன்மதனோ கரியநிறம் உடையவன். குகப்பெருமானோ செந்நிறம் உடையவர். இதனால்தான் மன்மதனை கருவேள் என்றும், குமாரப்பெருமானை செவ்வேள் என்றும் சொல்கிறார்கள்.

* சூரபத்மனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனால், அவனை அழிக்காமல் ஆட்கொள்ள வேண்டும் என்பது பாலகுமாரனாகிய முருகப் பெருமானின் ஆசையாக இருந்தது. அந்தளவுக்கு அவர் கருணைக்கடலாக விளங்கினார்.

* முழுமதி போன்ற ஆறு முகங்களும், ஒளிவீசும் 12 மலர்விழிகளும், வைரம் பதித்த செஞ்சுருட்டி போன்ற திருவாபரணங்களும், ரத்தின குண்டலங்கள் அணிந்த 12 காதுகளும், செந்தாமரைகள் மலர்ந்தது போன்ற 12 திருக்கரங்களும், பவள மலைமேல் வெள்ளியருவி ஓடுவது போன்ற திருமேனியில் மிளிரும் முப்புரி நூலும், புகழ்பெற்ற ஆடைகளும், அரைஞாண் மணிகளும், பல வினை அகற்றும் பாதாரவிந்தங்களும் கொண்ட அவனது திரு உருவத்தின் பேரழகை வர்ணிக்க வார்த்தையில்லை. கந்தசஷ்டி காலத்தில் அவன் திருப்பாதம் பணிவோம்.

இவ்வாறு முருகனை பாராட்டுகிறார் வாரியார்.

===================================================================

(ஆக்கத்தில் உதவி : DINAMALAR, DINAKARAN.COM, MAALAIMALAR.COM)

7 thoughts on “யாமிருக்க பயமேன் ? அபயம் தருவான் குமரக்கடவுள் – கந்த சஷ்டி ஸ்பெஷல்!

  1. முருகபெருமானின் கருணை அளவிடற்கரியது. உலகில் பிற தெய்வங்கள் சம்ஹாரம் புரிந்துள்ளனர். முருகபெருமான் புரிந்த சம்ஹாரம் வேறு வகை. தம்மை எதிர்த அசுரர்க்கு இறை நிலை தந்த தெய்வம் முருகன். அசுரர்கே கருணை என்றால் , மானிட பதர்கலான நமக்கு அருளாமல் விட்டுவிடுவானா ?.

    ”’ஓம் சரவண பவ ”’…

    மோகன் முருகப்ரியன்.

  2. கந்தசஷ்டியன்று அன்னை வள்ளியின் உறவினர்களை மறந்தால் எப்படி? வார்த்தை விளையாட்டு போல இருந்தாலும் மண்டை உச்சியில் கொட்டியது போல இருந்தது.
    முருகன் என்றால் அழகு. முருகன் படத்தை எந்த இடத்தில், எந்த நேரத்தில் என்ன மாதிரி பார்த்தாலும் நம் மனம் சந்தோசம் கொள்ளும்.
    குழந்தை வரம் கொடுப்பதில் சஷ்டி விரதம் முக்கிய பங்கு வகிக்கும்.
    சஷ்டி திதி தேவதையின் பெருமையை உணர்த்தும் மன்னன் கதை அருமை.
    என்ன தடை வந்தாலும் எப்பாடுபட்டாவது நான் கடைபிடிப்பது கந்த சஷ்டி விரதமும், சிவராத்திரி விரதமும் தான்.
    “வழித்துணை வா முருகா” அருமை.
    வாரியார் முருகனை பற்றி சொல்லியது கந்த சஷ்டி கவசம் படித்தது போல நிறைவாக இருந்தது.
    கந்த சஷ்டியின் கடைசி நாளில் முருகன் பெருமை அறிந்தது சந்தோசம். நன்றி சார்.

  3. சுந்தர்ஜி
    கந்த சஷ்டியின் கடைசி நாளில் முருகன் பெருமை அளித்து தங்கள் பெருமை சேர்த்து கொண்டிர்கள்.தமிழ் தந்த முருகனை பேச, பாட அவன் திருவருள் பெருமைகளை கேக்க புண்ணியம் செய வேண்டும்.தங்கள் அளித்த முருகனின் கந்த சஷ்டி சூப்பர் .

  4. நல்ல வேலை சுந்தர் சார் நாளைக்கு சஷ்டி விரத கடைசி நாள்னு இன்னைக்கே பதிவை போட்டீங்க இல்லனா மறந்துபோய் என் வேலையை பார்க்க போயிருப்பேன்…நெஞ்சார்ந்த நன்றிகள்..

  5. துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
    சஷ்டி கவசம் தனை.
    அமர ரிடர்தீர அமரம் புரிந்த
    குமரனடி நெஞ்சே குறி.

    http://www.youtube.com/watch?v=3RIPz_mP_VI

    முருகன் அருள் இந்த பதிவினை படித்த அனைவருக்கும் கிடைத்திருக்கும் .

    நன்றி .
    மனோகர் .

  6. சுந்தர், இந்த பதிவை இன்றுதான் படித்தேன். இன்று கந்த சஷ்டி என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனாலும் நம் தலத்தில் அதைப்பற்றி படித்தவுடன் இன்னும் நிறைய விவரங்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

    இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் நேற்று அதாவது இந்த பதிவை போட்ட நாள் நவம்பர் 7, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் நினைவு தினம். அந்த நாளில் கருணையே உருவான முருகனை பற்றியும் அவரது பரம பக்தரான வாரியார் அவர்களின் சொற்பொழிவையும் கொடுத்தது அந்த முருகனின் சித்தம்தான்.

  7. கந்த சஷ்டி பற்றிய பல செய்திகளை அறிந்துகொண்டோம். இன்று கந்த சஷ்டி. முருகன் அருளால் இந்த வலை தளம் வளர்ச்சி பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *