Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

print
NSKரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பெற்ற தந்தையையே மகன் திட்டுவது & ஒருமையில் அழைப்பது, தெய்வமாக பாவிக்க வேண்டிய ஆசிரியர்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டி சக மாணவர்கள் மத்தியில் அழைப்பது, பிறரின் அங்கஹீனத்தை கேலி செய்வது, திருநங்கைகளை நகைச்சுவை பொருளாக்கி அனைவர் மனத்திலும் வக்கிரத்தை விதைப்பது…. இது தான் இன்றைக்கு திரைப்படங்களில் நகைச்சுவை. நகைச்சுவை என்றால் அது இப்படித் தான் போல என்று கருதும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். தொலைகாட்சி சேனல்களில் இவற்றை தான் பார்த்து சிரித்து மகிழ்கிறோம். அவர்கள் செய்யும் பாவத்தை நாமும் பங்கிட்டுக்கொள்கிறோம்.

ஆனால், மக்களை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்தவர் அமரர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். எத்தனை பேருக்கு அவர் ஒரு கொடை வள்ளல் என்பது தெரியும்? பணம் கொட்டிக்கிடக்கும்போது கொடையாளியாக இருப்பது வேறு. ஆனால், வறுமை நிலையிலும் தனது கொடைத் தன்மையிலிருந்து வழுவாமல் வாழ்ந்தவர் என்.எஸ்.கே. அவர்கள்.

இன்று நவம்பர் 29 – கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்!

நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களை சொல்லி சிந்திக்க தூண்டிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் வறுமையிலேயே உழன்று வறுமையிலேயே மறைந்தார்கள்…!

ஆனால்,  தமிழ் திரையுலகில் நகைச்சுவை என்கிற பெயரில் வக்கிர விதைகளை தூவி வயிறு வளர்க்கும் நகைச்சுவை நடிகர் ஒருவர் இன்றைய ரேஞ்சுக்கு தென்னிந்தியாவிலயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என்கிற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்??

எங்கே போகிறோம் நாம்???

தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன் திரு.என்.எஸ்.கே.

“சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே அவரது சீரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு. ‘

தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய தமிழ்நாட்டு சாப்ளின் என்று அழைக்கப்பட்டார். ஆனால் அதற்கு என்.எஸ்.கே. கூறியது என்ன தெரியுமா? ”என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளின் என்று சொல்கிறார்கள். சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாகமாட்டேன்!” என்றார் அடக்கத்துடன். ஆனால் உண்மையில் என்.எஸ்.கே. அதற்கு தகுதியானவர் தான். சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர் என்.எஸ்.கே.

(இந்த பதிவில் இடம்பெற்றிருப்பவை நேற்று காலை நமது தளத்திற்காக பிரத்யேகமாக எடுத்த படங்கள். சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள என்.எஸ்.கே. சிலை இது!)

N S Krishnan 1

மாதாந்திர சம்பளக்காரரர்கள் படும் பாட்டை தனது கீழ்கண்ட பாடலில் அழகாக விளக்கியிருப்பார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பாடிய பாடல் இன்றைக்கும் பொருந்துகிறது என்பது தான் ஆச்சரியமே!

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் – இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் – இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே – தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே – கொஞ்சம்
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய திரையுலக வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, இன்றும் சினிமா ரசிகர்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு அனைவரும் படிக்கவேண்டிய ஒரு பாடமாகும்.

திரு.என்.எஸ்.கே. அவர்களின் கொடையுள்ளத்தைப் பற்றியும், அவரது வேறு ஒரு பரிமாணத்தையும் விளக்கும் சில சம்பவங்களை பார்ப்போம்.

N S Krishnan 2

சுடு சோறும் பழைய சோறும் – கலைவாணர் விளக்கிய பேருண்மை!

ஒரு நாள் மாலை கலைவாணர் தம் நண்பர்கள் ப. ஜீவானந்தம், தென்காசி சண்முகசுந்தரப் புலவர் ஆகியோருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

ஆமாம். சம்பாதிக்கிறீர்கள், சடுதியில் செலவு செய்து விடுகிறீர்களே! ஊராருக்கெல்லாம் உதவும் தாங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா? பேச்சுக்கு இடையே சண்முகசுந்தரப் புலவர் கேட்ட கேள்வி இது.

அதற்குப் பதிலாக கலைவாணர் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.

ஓர் ஊரில் ஒரு பணக்கார இளைஞர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி வந்து வாருங்கள் பழையது சாப்பிடலாம் என்று கணவரை அழைத்தார்.

இதேபோல் பலமுறை பத்துப் பேருக்கு முன்பாக பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.

N S Krishnan 3

மற்றொரு நாள் வழக்கம் போல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞரை பழையது சாப்பிடலாம் என்று மனைவி அழைத்தவுடன் சற்றுக் கோபமாக எழுந்து உள்ளே சென்றார். வகை வகையான பதார்த்தங்கள் இலையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அப்பெண் சுடச்சுட சோற்றைப் பரிமாறினார்.

உடனே அந்த இளைஞர் கேட்டார்…. “எப்போது பார்த்தாலும் நான்கு பேருக்கு மத்தியிலே பழையது சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுகிறாயே, இங்கே என்ன பழைய சோறா போடுகிறாய்? நெய், வடை, பாயாசத்தோடு சுடு சோறல்லவா போடுகிறாய்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். கஞ்சப்பிரபு என்றல்லவா எண்ணுவார்கள்?” என்று கூறியவுடன் அவர் மனைவி, “நீங்கள் சுடச்சுட புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன? உங்கள் அப்பா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பழைய சொத்தை வைத்துக் கொண்டுதானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று பதிலளித்தாராம்

கதையை முடித்த கலைவாணர் தொடர்ந்தார், “நான் சம்பாதித்த பழையதைக் கொண்டிருக்க வேண்டுமா? அவர்களே உழைத்துச் சுடுசோறு சாப்பிடட்டுமே!”

அவர் சொன்னதுபோல் தம் வாரிசுகளுக்குச் சொத்துக்களை அல்லது பணத்தைச் சேமித்து வைத்துவிட்டுப் போகவில்லை. அவருடைய பிள்ளைகள் பழையது சாப்பிடாமல் உழைத்து கௌரவமாக வாழ்கிறார்கள்.

நீங்கள் எப்படி சுடுசோறு சாப்பிடுபவரா? பழையசோறு சாப்பிடுபவரா?

N S Krishnan 4

* 1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர் ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். ‘இவ்வளவு நல்ல டாக்டரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்’ என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!

* ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், ‘எனக்குத் திருமணம்’ என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, ‘இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்’ என்றார்!

* ‘தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!

* தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். ‘அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்’ என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, ‘அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே’ என்பாராம்!

* கலைவாணர், காந்தி பக்தர். நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.

* சென்னையில் ‘சந்திரோதயம்’ நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. ‘நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!’ என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.’பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!’ என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்! (துணுக்குகள் உதவி : ஆனந்த விகடன்)

==============================================================

Also check (from our archives) :

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

5 thoughts on “சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

  1. “தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
    சில்லறையை போட்டு வைப்பார் தேதி ஒன்னிலே
    தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
    சில்லறையை போட்டு வைப்பார் தேதி ஒன்னிலே
    அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயை கொஞ்சம்
    அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயை கொஞ்சம்
    அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொன்னிலே”…சுந்தர் அய்யா
    அருமையான பதிவுங்க……அருமையான பாடல் வரிகள்…

  2. இன்றைய நகைச்சுவையின் தரத்தை பார்க்கும்போது கலைவாணர் எவ்வளவு பெரிய தங்கம் என்று புரிகிறது.

    உண்மையில் இன்றைய நகைச்சுவை மனதில் வக்கிரத்தையே விதைக்கிறது.

    முதுமையில் தனது தாய் ஆசைப்பட்டார் என்பதற்காக அவரை காசி முதல் புண்ணிய ஷேத்ரங்களுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் அழைத்துச் சென்றார் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

    அருமையான தரமான தங்கமான பதிவு.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. கலைவாணர் பற்றி அறிந்திருந்தாலும் அவர் நடித்த படங்களை அதிகம் பார்த்ததில்லை……….பார்த்த ஒரு சில படங்களிலும் அவரும் அவரின் மனைவியார் திருமதி.மதுரம் அவர்களும் பார்ப்பவர்களை அருமையாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருப்பார்கள்…….அவர்களது புகழ் என்றும் நிலைத்திருக்கும்…….

  4. கலைவாணர் மிகச் சிறந்த நகைச்சுவை கலைஞர். அவர் நம்மிடம் இல்லாவிட்டாலும் அவரின் நகைச்சுவை பேச்சு இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்

    அவரை பற்றிய பதிவு அருமை

    நன்றி
    உமா

  5. கலைவாணர் அய்யா வீட்டின் அருகில் வளர்த்தவன், கலைவாணர் NSK அவர்களின் வீடும் எனது பெற்றோர் வீடும் 2 தெரு தள்ளி உள்ளது. அவரது பெருமைகளை ஆயுள் முழுவது பேசிக்கொண்டே இருக்கலாம். அவரது பெயரன்களுடன் விளையாடும் பாக்கியம் பெற்றவன்.

    சங்கர நாராயணன்
    http://www.myriadwealth.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *