1930ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13ஆம் நாளன்று பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29ஆம் வயதில் 1959ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாளன்று மறைந்தார். இன்று அவரது நினைவு நாள்.
பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. தீவிர சிந்தனையும், சமூகப் பொறுப்புணர்ச்சியும் இயற்கையாகக் கொண்டிருந்த பட்டுக்கோட்டையார் பள்ளி சென்றதில்லை. உள்ளூரிலே இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் இரண்டு மூன்று ஆண்டுகள் அடிப்படை கல்வி கற்றதோடு சரி.இருப்பினும் கலைமகள் அவரது சிந்தனையில் நடனமாடினாள். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார்.
அந்த காலத்தில் திரை உலகில் நுழைவது என்பது எளிதான காரியமில்லை. அதற்கு கல்யாணசுந்தரம் விதிவிலக்கல்ல. பல சோதனைகளை அனுபவித்து இருக்கிறார். இப்போதெல்லாம் பாடலாசிரியர்கள் கோடிகளில் புரள்கிறார்கள். ஒரு படத்துக்கு பாட்டெழுதி அந்த ஒரு பாட்டு ஹிட்டானாலே அவர்கள் கிராஃப் எங்கோ சென்றுவிடுகிறது. கல்லூரி நிகழ்ச்சியில் வந்து பேசவேண்டும் என்றால் கூட, என் புத்தகத்தை பல பிரதிகள் வாங்க வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்துகிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அப்படி கிடையாது. பாடலாசிரியர்கள் பலர் வறுமையே சொந்தம் என்று வாழ்ந்தவர்கள்.
கல்யாணசுந்தரம் அவர்களுக்கு நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு, நடிகர் டி.எஸ்.துரைராஜ் மூலம் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். 1953இல் சக்தி நாடக சபா கலைக்கப்பட்டதும் சிவாஜி நாடக மன்றத்தில் சென்னையில் சேர்ந்து, நாடகங்களில் நடித்துக் கொண்டே நாடகங்களுக்கு பாடல்களும் எழுதினார். போதிய வருவாய் இன்றி பட்டினியோடு பட்டுக்கோட்டையார் கழித்த நாட்கள் பல. அந்த ஓரிரு ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து கொண்டு அவர் பார்த்த உலகம் அவருக்கு மிகப் பெரிய அனுபவ அறிவைக் கொடுத்தது. அதன் மூலம் அவர் பெற்ற சிந்தனைத் தெளிவு, இளமையில் வறுமை, கவிஞரின் இயற்கையான கவித்திறனை ஒருமுகப்படுத்தியது. பொதுவுடைமைச் சிந்தனையைப் பெருக்கியது.
சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டையாருக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக ஜனசக்தியில் பாடல்கள் எழுதினார். முதல் பாடல் ஜனசக்தியில் 1954இல் வெளிவந்தது.
சென்னை வாணிமஹால் பக்கமா நடந்துபோகும்போது கல்யாணசுந்தரத்தோட செருப்பு அறுந்துபோச்சு. கையில் எடுத்துக்கிட்டுப் போயிருக்கார். எதிரே வந்த நண்பர் ஒருவர் ‘என்ன கல்யாணசுந்தரம்… செருப்பு அறுந்துபோச்சா?’ என்று சிரித்திருக்கிறார். அப்போது அவருக்குப் பதில் சொல்றது போல எழுதின பாட்டு இது…
‘உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன்
செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பேன்
நெருப்பை எதிர்ப்பதற்கும் அஞ்சாத
எண்ணம் படைத்தாற்பின்
கொதிக்கும் தார்
எனக்குக் குளிர் நீர்.’
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஒருபோதும் அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப் பறித்தவர் அல்ல. அடுத்தவருக்குப் போகவேண்டிய பாடல் வாய்ப்பு தனக்கு வந்தபோதும் அதை மறுத்து ஒதுக்கிய பண்பாளர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆரம்ப காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராக இருந்து வந்திருக்கிறார்கள். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். அதற்குரிய பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றார். ‘பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வேண்ணா வந்து பாருங்கோ’ என்று பதில் வந்தது.
ஆனால் கல்யாண சுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தார். ‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’ என்று சொல்லிவிட்டு அந்த அதிபர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
உடனே கல்யாண சுந்தரம் தனது சட்டைப் பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து ஏதோ சில வரிகள் எழுதி அதை மேசை மீது வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார்.
கல்யாணசுந்தரம் அப்படி என்னதான் எழுதி வைத்தார்?
இதோ இதுதான்:
“தாயால் வளர்ந்தேன்;
தமிழால் அறிவு பெற்றேன்;
நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்;
நீ யார் என்னை நில் என்று சொல்ல?”
இதைப் படித்துப் பார்த்த பட அதிபர், ஏழை கவிஞன் அறம் எழுதிவிட்டு போய்விட்டானே என்று பயந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.
திரைப்பட உலகில் 180 பாடல்கள்தான் எழுதினார் என்றாலும் அவற்றில் பல காலத்தால் அழியாதவை. கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்த கவிஞர்.
புகழின் உச்சியில் இருந்த போது யாரும் எதிர்பாராத வகையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தனது 29 வது வயதில் மரணம் அடைந்தார்.
பட்டுக்கோட்டையார் இறந்த போது ஒரேயொரு நடிகை மட்டுமே அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தாராம். அவர் அப்போது பட்டுக்கோட்டையார் பாட்டெழுதிக்கொண்டிருந்த ஒரு படத்தை தயாரித்துக்கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை பண்டரி பாய். ஒரு கையில் மாலையும் இன்னொரு கையில் காசோலையும் கொண்டு வந்து, மாலையை அணிவித்து, தான் கொடுக்க வேண்டிய தொகைக்கான காசோலையை பட்டுக்கோட்டையார் குடும்பத்துக்கு கொடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலும் தான் உதவி – கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி
இந்த பிரபல வரிகளை எழுதியது மக்கள் கவிஞர் தான். படம்: ஆளுக்கொரு வீடு
கடவுள் மறுப்பாளராக திகழ்ந்த பட்டுகோட்டையார் சினிமாவுக்காக முதலில் எழுதிய பாடல் வரி என்ன தெரியுமா?
“அம்பிகையே முத்து மாரியம்மா – உன்னை
நம்பி வந்தேன் ஒரு காரியமா
ஆளை விழுங்குற காலமம்மா – இங்கு
ஏழை நிலைமையைக் கேளுமம்மா.”
(மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மகேஸ்வரி’ படத்துக்கு மக்கள் கவிஞர் எழுதியது இது!)
ஒரு ஏழை புலவுனுக்கு அன்னை செய்த அருளை பார்த்தீர்களா? கடவுளை நாம் ஏற்றுகொள்கிறோமா இல்லையா என்பது விஷயமல்ல. கடவுள் ஏற்கும் நிலையில் நாம் இருக்கிறோமா என்பதே விஷயம். அப்படிப் பார்த்தால், அன்னை அவரை ஏற்றுக்கொண்டதோடு சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொண்டாள்.
மக்கள் கவிஞர் ஒரு பாடலாசிரியர் மட்டுமல்ல…
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
என பல பரிமாணங்களை கொண்டவர்.
1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்தது. 1981ஆம் ஆண்டு தமிழக அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதல்வரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி கௌரவம்மாள் பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
1993ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
ஆவணப்படம்
அவரது வாழ்க்கை பயணத்தில் இருந்த வலி, ஏற்றம், தாழ்வு, வாழ்வு, அனைத்தையும் ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாட்டாளி – படைப்பாளியான வரலாறு (1930-1959)’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இருக்கிறார் பு.சாரோன். தனது 29 வயதில் இறந்து போன மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நல்ல புகைப்படம் ஒன்றுகூட நம்மிடம் இல்லை. இந்நிலையில் அவரைப் பற்றிய ஆவணப்படத்தை 7 ஆண்டுகள் உழைப்பில் எடுத்திருக்கிறார் இயக்குனர் பு.சாரோன்.
பட்டுக்கோட்டையாரின் பால்ய நண்பர் ஓவியர் ராமச்சந்திரன் நண்பர்களுடன் கவி்ஞரின் நினைவுகளை அசைபோடுவதாக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் சினேகன் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
மணி மண்டபம்
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை, அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவர் எழுதிய காலத்தால் அழியாப் பாடல்களுள் சில :
“தூங்காதே தம்பி தூங்காதே சேம்பேறி என்ற பெயர் வாங்கதே”
“சின்னப்பயலே சின்னப் பயலே சேதிகேளடா”
“வசதி படைச்சவன் தரமாட்டான் வயிறு பசிக்கறவன் விடமாட்டான்”
“குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா”
“காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்”
“திருடாதே பாப்பா திருடாதே”
“உனக்காக எல்லாம் உனக்காக… இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக”
நாடு இன்றிருக்கும் நிலை!
பாசவலை (1956) படத்திற்கு கவிஞர் எழுதிய கீழ்கண்ட இந்த பாடல் நாடு இன்றிருக்கும் நிலைக்கு மிகவும் பொருத்தம்.
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே – இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது ஹஹாங்
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது – இந்தப்
பாழாய்ப் போற மனிதக் கூட்டம் தானாய் விழுந்து மாயுது
இந்த ஆட்டுக்கும் இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஆசையென்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசமென்ற கொடுங்கயிற்றால் ஆட்டங்கண்டு
நேசமென்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு ஆஆஆஆஆஆஆஆஆஆ
இதைப் படித்திருந்தும் மனக்குரங்கு பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு வௌவா போலத் துடிக்குது
நடக்கும் பாதை புரிஞ்சிடாமல் குறுக்கே புகுந்து தவிக்குது
அடுக்குப் பானை போன்ற வாழ்வைத் துடுக்குப் பூனை உடைக்குது
இந்த ஆட்டுக்கும் இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
(ஆக்கத்தில் உதவி : விகடன்.காம், தினமணி, தினத்தந்தி.காம் | புகைப்படங்கள் : www.rightmantra.com)
* உயிரினும் மேலான உழைப்பில் விளைந்தவை இப்பதிவும் இதில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும். புகைப்படங்களை எடுத்தாளுபவர்கள் நமது தளத்தின் லோகோவை மறைக்காமல் எடுத்தாளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி!
[END]
பட்டு கோட்டை நினைவு நாளில் அவருடைய பதிவை போட்டுவிட்டீர்கள்.. நச் ……என்று உள்ளது. அவர் மிகவும் குறுகிய காலம் தான் வாழ்ந்தாலும் புகழின் உச்சிக்கு சென்று விட்டார் தன்னுடைய கவிதை புலமையால்.
அவருக்கு முதல் குரு பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள். அவருக்கு பாட்டு எழுத கற்றுக் கொடுத்தது பாவேந்தர். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட்டிருக்கிறார். இந்த செய்தியை போன வாரம் வசன கர்த்தா திரு ஆரூர் தாஸ் அவர்கள் ஒரு கட்டுரையில் அவரை பற்றி எழுதி இருக்கிறார். கண்ணதாசனையே வியக்க வைத்த அற்புத கவிஞர் .
காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்த பட்டுகோட்டை கல்யாண சுந்தரனாரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
பல வித அலுவல்களுக்கு இடையிலேயும் அவரது நினைவு நாளை நினைவு வைத்து பதிவு அளித்தமைக்கு நன்றிகள் பல.
நன்றி
உமா
பட்டுக்கோட்டையார் அவர்களின் உறுதியும், நேர்மையும் வியக்க வைக்கிறது. இவரின் பாடல்கள் இன்றளவும், இளைய தலைமுறையினறாலும் கூட விரும்பப்படுகிறது. 29 வயதிலேயே மறைந்து விட்டார் என்பது மட்டும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மகாகவிக்குப் பிறகு இவரின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.
—
பட்டுகோட்டை அய்யா பற்றிய ஆவணப்படம் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. இயக்குனர் பு.சாரோன் அவர்களுக்கு நன்றிகள்.!
—
சுந்தர் அண்ணா, வழக்கம் போல் புகைப்படங்கள் அனைத்தும் சூப்பர். நன்றி !
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
இன்று காலையில்தான் நண்பர் ஒருவரிடம் பேசும்போது “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என்கிற பட்டுக்கோட்டையாரின் பொன்னான வரிகளை நினைவு கூர்ந்தேன். அதுவும் குறிப்பாக இப்போது நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை மனதில் வைத்து அவ்வாறு சொன்னேன். என்ன ஒரு ஒற்றுமை – அதே தலைப்பில் நம் சுந்தர் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டையார் அவர்கள் 29 வயதில் இறந்து போனாலும் 200 வருடங்கள் வாழ்ந்து அனுபவித்து உணரவேண்டிய நல்ல விஷயங்களையும் உருப்படியான கருத்துகளையும் நமக்கு அவரது பாடல்கள்மூலம் எளிமையாக இரத்தின சுருக்கமாக பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கிறார்.
மக்கள் மறந்த மகத்தான கலைஞனை பற்றிய உன்னதமான பதிவுக்கு நன்றி சுந்தர்.
வணக்கம்……….
எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல……..எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம் என்ற கூற்றுக்கு திரு.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் சரியான உதாரணமாக வாழ்ந்திருக்கின்றார்…….காலத்தால் அழியாத காவியங்களை படைத்த அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்……….
அரிய கலைஞைரைப்பற்றிய அற்புதமான பதிவு. படங்கள் அனைத்தும் அருமை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது அவரது வாழ்க்கை ஆவணப்படுத்தப்பட்டதையறிந்து மகிழ்ச்சி. கவிஞரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அழகாக தொகுத்தளித்திருக்கிறீர்கள். பதிவுக்கு நன்றி!.
அருமையான பதிவு.
கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது
///
எவளவு உண்மையான காலத்தினும் அழியா வரிகள்
அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. என்கிறார்களே அப்படி என்றால் அவற்றோடு இணைந்த இசையை எப்படி பயன்படுத்துவது? அவரது பாடல்களை நம் பயன்படுத்திக்கொள்ள முடியுமா?
மக்கள் கவிஞர் அவர்களை பற்றிய செய்திகள் அருமை.பட்டுக்கோட்டை ஒரு பாராட்டுக்கோட்டை.அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் என்றும் வாழும்.
PATTUKKOTTAIYAR IS A SIDDHAR