ஆம்… இவர் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர்!!
எப்படி? யார் இவர்?? இவர் சேர்த்துள்ள சொத்துக்களின் மதிப்பு என்ன???
மேலே… படியுங்கள்..!
தொண்டுக்கு ஒரு கணேசன்!
கலியுகத்தில் மிகவும் சுலபமாய் செய்யக்கூடிய ஆனால் கற்பனைக்கெட்டாத அளவு புண்ணியம் தரக்கூடிய அறம் எது தெரியுமா?
‘அநாத பிரேத சம்ஸ்காராத் அஸ்வமேத பலம் லபேத்’ என்று கூறியிருக்கிறார் நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா ஸ்வாமிகள். ஒரு அனாதை பிரேதத்தை அடக்கம் / தகனம் செய்ய உதவினால் 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நம்மால் அஸ்வமேத யாகம் செய்ய முடியாது. ஆனால் அநாதைப் பிணங்களின் இறுதிக் காரியத்தைச் செய்ய முடியும்.
“அட போங்க சார்… நான் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் கோவிலுக்கு போறேன். என் குடும்பம் நல்லா இருக்கணும்னு விளக்கு போடுறேன். அதைவிட என்ன சார் புண்ணிய காரியம் வேணும்??”
“சார் நான் மூணு வருஷத்துக்கு முன்னே என் பிறந்தநாளுக்கு அன்னதானம் பண்ணினேன். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் போறேன்… இதை விடவா?”
இது போன்று புண்ணியம் சேர்ப்பதிலும் ஒருவித சுயநலம் ஒளிந்துள்ள குரல்களை தான் கேட்கமுடியும். காரணம் இன்றைய சமூகம் அப்படி. புண்ணியம் கருதி தருமத்தை செய்யவேண்டாம். அது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை அல்லவா?
தன்னலமற்ற சேவையைவிட மிகப் பெரிய ஆன்மிகம் வழிபாடு வேறு எதுவுமில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (குறள் 31)
ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் தனது சொந்தக் காரில் வாடகை வாங்காமல் 5000 த்துக்கும் மேற்பட்ட சடலங்களை மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு ஏற்றிச்சென்று உதவியுள்ளார் ஒரு மனிதர். நூற்றுக்கணக்கான பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்து உள்ளிட்ட அவசர உதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்களில் நிறைய பேர் பிழைத்துள்ளனர்.
இந்த வியக்க வைக்கும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த திரு.கணேசன். ஆலங்குடியில் 515 கணேசன் என்றால் இவரை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. பொதுவாக அவசர உதவிக்கு நாம் அழைப்பது ஆம்புலன்ஸ் வண்டிகளைத் தான். ஆனால், சற்றுப் புதுமையாக ஆம்புலன்ஸ் மூலம் செய்யப்படும் அதே சேவையைப் இவர் தான் வைத்திருக்கும் ஒரு பழைய கார் மூலமாக ஏழை எளியவர்களுக்கு இலவசமாகச் செய்து வருகிறார்.
இவரைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தமிழ் ஹிந்து நாளிதழில் சுரேஷ் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். படித்ததுமே எப்படியாவது கணேசன் அவர்களை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் நமக்குள் எழுந்துவிட்டது. அவரது அலைபேசி எண்ணை பெற்று, உடனடியாக கணேசன் அவர்களை தொடர்பு கொண்டோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது சேவைக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டோம். ஒரு ஞாயிறு காலை அவரை சந்திக்க வரும் விஷயத்தை கூறி, அன்று அவர் வெளியூர் எங்கும் சென்றுவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.
இதையடுத்து பயண ஏற்பாடுகள் துவங்கியது. நண்பர் சிட்டியை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை புறப்பட்டோம். சென்னை எழும்பூரில் சனிக்கிழமை இரவு ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரெஸ்ஸில் ஏறி புதுக்கோட்டையில் காலை இறங்கியவுடனேயே முதல் வேலையாக கணேசன் அவர்களுக்கு போன் செய்தோம். மனிதர் எடுக்கவேயில்லை. ஓரிரு முறை முயற்சித்தோம். ஹூம்…. ஹூம்…. !! நமக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. வந்தது வந்தாகிவிட்டது. முதலில் குளித்து உடை மாற்றிகொள்வோம் என்று பேருந்து நிலையத்தின் அருகே ஒரு விடுதியில் அறை எடுத்து குளித்து உடைமாற்றிக்கொண்டு மீண்டும் கணேசனை தொடர்புகொண்டபோது தான் லைனில் வந்தார்.
நாம் வந்துவிட்ட விஷயத்தை கூறி, “எப்போது சந்திக்கலாம்? எங்கே வரவேண்டும்?” என்று கேட்டோம்.
“அப்படிங்களா? நான் இப்போ வெளியூர்ல இருக்கேனே…. ஒரு சின்ன ஃபேமிலி பங்க்ஷன்.. அதுக்கு குடும்பத்தோட வந்திருக்கோம்” என்றார் பதட்டமின்றி.
‘என்னது வெளியூர்ல இருக்கீங்களா? ஐயா சாமி… உங்களை நம்பி உங்களை பார்க்குறதுக்காகவே 400 மைல் தாண்டி வந்திருக்கோம். நான் தான் திரும்ப திரும்ப போன் செஞ்சி நான் வந்துட்டிருக்குற விஷயத்தை சொன்னேனே…’ என்று பதறியபடி இருந்தோம்.
(இது போன்ற சந்திப்புக்களில் என்னவெல்லாம் சங்கடங்கள் சவால்கள் ஏற்படும் என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் பதிவு செய்கிறோம்).
வந்தாயிற்று. எப்படியாவது காத்திருந்து அவரை பார்த்துவிட்டு செல்லவேண்டும்.
“சரி… .பரவாயில்லே.. உங்களை பார்க்காமல் புதுகோட்டையைவிட்டு போகமாட்டோம்… எப்போ வருவீங்க?”
“நான் வர்றதுக்கு பத்தரை மணியாகும் சார்… ” (அப்போது மணி காலை 7.00).
மூன்று மணி நேரம் என்ன செய்வது? என்று யோசித்தபடி இருந்தோம்.
“நீங்க புதுகோட்டையில இருந்து பஸ் ஏறி ஆலங்குடி வந்துடுங்க. இங்கே நாமபுரீஸ்வரர்னு ஒரு பழைய சிவன் கோவில் இருக்கு. கோவிலுக்கு போய் சாமி தரிசனம் பண்ணிட்டு இருங்க… நான் அதுக்குள்ளே வந்துடுவேன்” என்றார்.
“சார்… உங்களை பார்க்குறதைவிட உங்க வீட்டம்மாவை அவசியம் பார்க்கணும். மறக்காம அவங்களை கூட்டிகிட்டு வந்துடுங்க” என்றோம்.
“எல்லாரையும் பார்க்கலாம்.. இப்போ என் கூடத்தான் பங்க்ஷன்ல தான் இருக்காங்க. அவங்களையும் கூட்டிகிட்டு தான் திரும்புவேன்”
அப்பாடா… இப்போ தான் வயிற்றில் பால் வார்த்தது போல இருந்தது.
நமக்கு ஆலங்குடி நாமபுரீஸ்வரரை தரிசிக்கவேண்டும் என்கிற பேராவல் உடனே எழுந்தது. உடனே நாமும் நண்பர் சிட்டியும் ஆலங்குடி கோவிலுக்கு புறப்போட்டோம். புதுகோட்டையில் இருந்து சுமார் 30 நிமிட பஸ் பயணத்தில் ஆலங்குடி வந்தது.
நாம் சென்ற நேரம், அங்கு கோவிலில் ஒரு திருமணம் நடந்துகொண்டிருந்தது. நல்லதொரு அறிகுறி என்று நண்பர் சொன்னார்.
நல்ல சுவாமி தரிசனம். அந்த திருமண பரபரப்பிலும் அர்ச்சனையும் நன்கு திருப்தியாக நடைபெற்றது.
ஒரு அரைமணிநேரம் செலவிட்டு கோவிலை அங்குலம் அங்குலமாக ரசித்தபடி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தோம்.
நாம் வெளியே வரவும் கணேசன் அவர்களிடமிருந்து அலைபேசி வரவும் சரியாக இருந்தது.
“நான் வீட்டுக்கு வந்துட்டேன். நீங்க எங்கே இருக்கீங்க?”
தரிசனம் முடிந்துவிட்டதாகவும், ஒரு பத்து நிமிடத்தில் அவர் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் கூறினோம்.
பூ, பழங்கள், மாலை உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டு திரும்பவும் கணேசன் அவர்களின் வீட்டுக்கு வந்தபோது கணேசனும் அவர் மனைவி திருமதி.தெய்வானையும் வந்திருந்தனர்.
“நீங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு நாங்க ரெண்டு பேரும் முதல்ல வந்துட்டோம். என் பொண்ணுங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க…”
வீடு வாடகை வீடு தான். சாதாரண ஓட்டு வீடு. மிக மிக எளிமையாக இருந்தது. வாசல் வந்து நம்மையும் நமது நண்பர் சிட்டியையும் வரவேற்றனர் கணேசன் – தெய்வானை தம்பதியினர். அவருடன் அவரது பேரன் (மூத்த மகளின் மகன்) யுவராஜ் என்பவர் இருந்தார்.
தமிழகத்திலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் வசிக்கும் வீட்டில் நாம் காலடி எடுத்து வைக்கிறோம் என்கிற உணர்வு ஏற்பட்டபோது சிலிர்ப்பாக இருந்தது.
கோடீஸ்வரர் ?? ஆம்… புண்ணியம் சேர்ப்பவர் தான் பணக்காரர் என்றால், தமிழகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர், செல்வந்தர் இவர் தான். நாம் சேர்க்கும் பொருட்செல்வம் நம்முடன் கூட வராது. ஆனால் இவர் சேர்க்கும் அருட்செல்வம் இவருடன் வரும். இவரது அடுத்த 10 தலைமுறையை காக்கும்.
எங்கள் உரையாடல் துவங்குவதற்குக் முன்பாக, நம்மையும் நமது தளத்தையும் அதன் பணிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டோம். நண்பர் சிட்டியையும் அறிமுகப்படுத்தினோம்.
நாம் கொண்டு சென்ற பூ, பழம் உள்ளிட்டவைகளை தம்பதிகளுக்கு கொடுத்தோம்.
அவர் பேரன், யுவராஜை பார்த்து “உங்க தாத்தா செஞ்சிக்கிட்டுருக்குற சேவை சாதாரண விஷயம் அல்ல. எங்கே கைதட்டுங்க பார்க்கலாம்!” என்று கூறி, பலத்த கரகோஷத்துக்கிடையே திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினோம்.
அடுத்து அவர் திருமதி.
எவ்வளவு பெரிய மனிதரானாலும் செல்வந்தரானாலும் தொண்டுள்ளம் கொண்டவராக இருந்தாலும் அவர்களது திருமதிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் இது போன்ற தொண்டை செய்யவே முடியாது.
கணேசனின் மனைவி தெய்வானை அவர்களுக்கு திரு.கணேசனின் கரங்களால் மாலையிட்டு மரியாதை செய்தோம்.
“அம்மா… இவர் இந்தளவு இப்படி ஒரு மகத்தான தொண்டை செய்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். உங்களுக்குத் தான் முதல் மரியாதை. “இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது… நம்ம புள்ளகுட்டியை பார்ப்போம்” என்று நீங்கள் ஒரு பிரேக் போட்டிருந்தால் இவர் இத்தனை ஆண்டுகள் இதை செய்திருக்க முடியாது. இவரது தொண்டுக்கு நீங்கள் மேன்மேலும் துணை நின்று உதவ வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டோம்.
எங்கள் உரையாடல் துவங்கியது.
ஏழை மக்களுக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட ‘515’ கணேசன் என்று அழைக்கப்படும் 62 வயதான எஸ்.கணேசன் அவர்களிடம் பேசியதிலிருந்து….
பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் நீங்கள் இதற்கு எப்படி? பலரும் செய்யத் தயங்கும் இந்த தொண்டுக்கு வந்தது எப்படி?
குடும்பச் சூழ்நிலையால் 8-ம் வகுப்புக்குப் பிறகு என்னால் படிப்பைத் தொடரமுடியலே. அப்போதிலிருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். அப்போ ஆலங்குடியில வசதியில்லாத ஒரு குடும்பத்தினர் – நான் சொல்றது 30 40 வருஷத்துக்கு முன்னே – இறந்து போன உறவினரின் சடலத்தை காரில் எடுத்துச் செல்ல வழியில்லாம தள்ளுவண்டியில வச்சு அவங்களே வீட்டுக்கு தள்ளிக்கொண்டு போனதைப் பார்த்து மனசுக்கு ரொம்ப வேதனையாகிடுச்சு.
ஊரில் 2 வாடகைக் கார் இருந்தும் அவங்க காரில் பிணத்தையெல்லாம் ஏத்துறதில்லை. இந்த சம்பவத்துக்கு அப்புறம் இரும்பு வியாபாரம் செய்து சேர்த்து வச்சிருந்த ரூ.17 ஆயிரத்தைக் கொண்டு 44 வருஷத்துக்கு முன்னாடி 515 என்ற பதிவு எண்ணுள்ள காரை வாங்கினேன்.
யார் யாருக்கெல்லாம் இந்த உதவி செய்வீங்க?
அவசர தேவைக்காக தவிக்கிறவங்களுக்கு மட்டும் அந்தக் காரை வாடகை வாங்காமல் ஓட்டவேண்டும் என்பதே என் லட்சியம். பெரும்பாலும் பிரசவம், விபத்து, அனாதைப் பிணங்களை ஏற்றிச்செல்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எத்தனையோ அனாதைப் பிணங்களை நானே குழிவெட்டி அடக்கம் செய்திருக்கேன். நானா காசு கேட்க மாட்டேன். ஒருசிலர் டீசல் போடுறதுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க.அதை வாங்கிக்குவேன். எனக்கும் பொண்டாட்டி பிள்ளை குட்டிங்க இருக்கே சார்…
உங்கள் மனதை உருக வைத்த சம்பவம் ஏதாவது ?
ஒருமுறை சென்னையில இருந்து ஒரு பிணத்தை ஏத்திக்கிட்டு வர போயிருந்தேன். ஆலங்குடியில இருந்து நான் டீசல் போட்டுக்கிட்டு வந்துட்டேன். நீங்க டீசல் மட்டும் போடுங்க. ஊருக்கு போயிருவோம் என்றேன். என்னை அங்கே வரச்சொன்ன பெண்ணிடம் கையில காசு இல்லை. டக்குனு தாலியைக் கழற்றிக் கொடுத்து இதை அடகு வச்சு டீசல் போட்டுக்கிட்டு வாங்கன்னாங்க. இதுக்காடா நம்ம கார் வாங்குனோம்னு மனசு ரொம்ப வேதனையா இருந்திச்சு. வேண்டாம்மான்னு சொல்லிட்டு அங்கேயே கொஞ்சம் கடன் வாங்கி டீசல் போட்டுக்கிட்டு பிணத்தை ஊருக்கு கொண்டுவந்து சேர்த்தேன்.
நீங்க செய்ற இந்த சேவைக்கு போலீசாரோட ஒத்துழைப்பு ரொம்ப முக்கியமாச்சே?
புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்ல யும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு சரியில்லாம சீரியசா இருக்கிறவங்க, விபத்துல சிக்கினவங்கன்னு நான் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததில் 1000 பேராவது பிழைச்சிருப்பாங்க. சுமார் 2000-ம் பேருக்கு மேல் பிரசவத்துக்கு உதவி செஞ்சிருக்கேன். பலருக்கு நல்லபடியா குழந்தைங்க பிறந்திருக்கு.
அது ஏன் அம்பாசிடர் கார்?
இது தான் சார்.. செகண்ட் ஹேண்ட்ல சீப்பா கிடைக்கும். இப்ப வச்சுருக்குறது 17-வது காரு. இதை 2 வருஷத்துக்கு முன்னாடி ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கினேன். பாடிங்க ஏத்துறதுக்குன்னே சகல வசதியோட இப்ப ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தாலும், என்னுடைய காரும் ஓடிக்கிட்டேதான் இருக்குது. இப்போது அவ்வளவாக பிரசவ உதவி கேட்டு யாரும் வருவதில்லை. பிரசவத்துக்கு நாள் நெருங்குறது தெரிஞ்சா போய் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுறாங்க.
கார்னா சும்மாயில்லையே… மெயிண்டெனன்ஸ் அது இதுன்னு நிறைய இழுக்குமே….செலவையெல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க?
இரும்பு வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் காரைப் பாத்துக்க முடியுது.
உங்க வீட்டைப் பத்தியும் குடும்பத்தை பத்தியும் சொல்லுங்களேன்…
எனக்குன்னு ஒரு இன்ச் நிலம் கூட கிடையாது. இன்றைக்கும் பழைய இரும்பு வியாபாரம்தான் செய்கிறேன். அதை வச்சுத்தான் காரை பராமரிக்கிறேன். 5 மகள்களில் 4 பேருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன். ஏழை ஜனங்களுக்கு இறுதிக்கட்டததுல உதவி செய்யுறது மனசுக்கு ரொம்பவும் திருப்திகரமா இருக்கு. நாம பொறந்த இந்த வாழ்க்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்குங்கிறத நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. என் உயிர் இருக்கும்வரை ஏழைகளுக்காக இந்த சேவையைத் தொடர்வேன்!” என்றார்.
விலங்குகள் மீதும் பரிவு!
இது தவிர கணேசன் இன்னொரு தொண்டையும் செய்துவருகிறார். குரங்குகள் சாலையில் வாகனங்களில் அடிபட்டு இறந்துகிடப்பதை பார்த்தால், அவற்றை எடுத்துச் சென்று மாலை மரியாதையோடு அடக்கம் செய்கிறார்.
அவை ஆஞ்சநேய ஸ்வரூபம் என்பது அவர் கருத்து.
“இவ்ளோ சேவை பண்றோமே இதுனால நமக்கென்ன பிரயோஜனம்னு என்னைக்காவது தோணினதுண்டா?” நம் யதார்த்தமான சந்தேகத்தை கேட்டோம்.
“அதான் சொன்னனே தர்மம் தலை காக்கும்னு. புதுக்கோட்டை பக்கத்துல ஒரு கிராமத்துல ஒரு தடவை ஒரு பாடியை வண்டியில ஏத்திகிட்டு போய் இறக்கி வெச்சுட்டு, அந்தப் பக்கம் நகர்றேன்… அந்தப் பக்கம் வேகமா வந்த ஒரு பஸ் பிரேக் பிடிக்காம என் வண்டி மேல மோதி வண்டி அப்படியே அப்பளம் மாதிரி நொறுங்கிடுச்சு. ஒரு செகண்ட் நான் லேட்டா இறங்கியிருந்தாலும் போய் சேர்ந்திருப்பேன். என் தர்மம் தான் என்னைய காப்பாத்திச்சு.
நெகிழ வைத்த சம்பவங்கள் ஏதாவது ?
அப்புறம் ஒரு தடவை, என் கடைக்கு ஒரு வயசானவர் வந்தார். அவருக்கு எப்படியு 85-90 வயசிருக்கும். சாப்பிட்டு நாலு நாள் ஆச்சி. ஏதாவது வாங்கிக் கொடுன்னுன்னார். அவர் வந்த நேரம் ஹோட்டல் எதுவும் இல்லை. டீயும் ரெண்டு பன்னும் வாங்கிக்கொடுத்தேன். சாப்பிட்டுட்டு “நீ நல்லாயிருப்பே”ன்னு வாழ்த்தினார். காலயில வந்து பார்க்குறேன். அப்படியே சேர்ல உட்கார்ந்த படியே உயிர் பிரிஞ்சிருந்தது. அவர் யார் எவர்னே எனக்கு தெரியாது. அப்புறம் போலீஸ்ல சொல்லி, நானே அடக்கம் பண்ணினேன்.
நான் பிரசவத்துக்கு கூப்பிட்டுகிட்டு போன பல பெண்களுக்கும் நல்லபடியா குழந்தைகள் பிறந்து அவங்க இப்போ கல்யாணம் ஆகி செட்டிலாகிட்டாங்க… இப்படி எத்தனையோ சொல்லலாம் சார்…”
கணேசனுக்கு ஐந்து மகள்கள். ‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்ற பழமொழியே வழக்கில் இருக்கிறது. ஆனால், இந்த கணேசன் ஆண்டியாகவில்லை. மிகப்பெரிய தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதே சமயம் ஐந்து பெண்களையும் கரை ஏற்றியிருக்கிறார்.
எப்படி இது சாத்தியமாயிற்று?
தர்மம் தலை மட்டுமல்ல குடும்பத்தையும் காக்கும் என்று கூறுகிறார் கணேசன்.
பெற்ற மகளின் சங்கடம்
ஐந்து பெண்களில் நான்கு பேருக்கு நல்லபடியாக திருமணம் செய்துகொடுத்துவிட்டு அவர்களும் குழந்தைகளை பெற்று நல்லபடியாக செட்டிலாகிவிட்டனர். கடைசி மகள் கிருஷ்ணவேணி என்பவர் மட்டும் திருச்சியில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.டி. படித்து வருகிறார். நாங்கள் செல்லும்போது கிருஷ்ணவேணி இருந்தார். அவருக்கு அதிகபட்சம் 21 வயது இருக்கக்கூடும். அப்போது எங்களுக்கிடையே நடைபெற்ற ஒரு சம்பாஷணையின் மூலம் தன் தந்தை இப்படி ஒரு சேவை செய்வதை சொல்லிக்கொள்ள விரும்பவில்லை அதை அவமானமாக அவர் கருதுகிறார் என்பதை புரிந்துகொண்டோம்.
“சகோதரி… நாங்க எங்கேயிருந்து வர்றோம் தெரியுமா?”
“…………. மெட்ராஸ்லே இருந்து”
“இங்கேயிருந்து மெட்ராஸ் எவ்ளோ தூரம் இருக்கும்?”
இதெல்லாம் எதுக்கு இவர் கேட்கிறார் என்பது போல நம்மை பார்த்தார்…
“சும்மா சொல்லுங்க… எவ்ளோ தூரம் இருக்கும்?”
“ஒரு 400 கி.மீ. இருக்கும்ம்ம்ம்ம்”
“ஏன் அவ்ளோ தூரத்துல இருந்து உங்கப்பாவை பார்க்க வந்திருக்கோம் தெரியுமா??”
“………….”
“உங்கப்பாவை எங்களுக்கு முன்னே பின்னே தெரியுமா? இல்லே எனக்கு வேண்டியவாரா?”
“………….”
“சென்னையில இருந்து எங்கேயோ 400 கி.மீ. தூரம் தள்ளியிருக்குற ஆலங்குடிக்கு வந்து, உங்கப்பாவுக்கு சால்வை போட்டு மரியாதை செஞ்சி… எங்கள் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் போடவேண்டிய மாலையை உங்கம்மாவுக்கு போடவெச்சு … ரெண்டு பேர் கால்லயும் விழுறோம்… அவரை பேட்டி எடுக்குறோம். இதோ இன்னும் ரெண்டு மூணு வாரத்துல உங்கப்பா பேரு எங்க வெப்சைட் மூலமா உலகத்துல மூலைமுடுக்கெல்லாம் பரவப்போகுது. ஏன் இதெல்லாம் செய்றோம்??”
“………….”
“அவர் செஞ்சிகிட்டு இருக்குற சேவையோட மதிப்பு அப்படி!”
“………….”
“அஸ்வமேத யாகம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?”
மௌனத்தை கலைத்தார்…. “கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா ரொம்ப டீடெய்லா அதை பத்தி தெரியாது…”
“அஸ்வமேத யாகம் என்பது பெரிய பெரிய சக்கரவர்த்திகள் குதிரையை வெச்சு செய்றது. நூற்றுக்கணக்கான யாக குண்டங்கள், ஹோமங்கள் வளர்த்து, பல வேதியர்களை கொண்டு பல நாட்கள் செய்யப்படுவது. யாகம் நடக்கும்போது ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் செய்வார்கள். சாமான்யர்களால் இந்த யாகத்தை செய்ய முடியாது. அவ்வளவு செலவு பிடிக்கும் யாகம் இது. ஒரு அனாதை பிரேதத்தை சம்ஸ்காரம் பண்ண உதவிப் பண்ணினால் 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.”
சிறிது இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்தோம்….
“அது சரி… உங்கப்பா இதுவரை எத்தனை பிணங்களை தூக்கிட்டு போய் அடக்கம் பண்ணியிருப்பார்?”
“அது கணக்கேயில்லைங்க… 30 வருஷமா இதைத் தான் பண்ணிட்டு இருக்கார்!”
“அப்போ உங்களுக்கு அவர் சேர்த்திருக்குற புண்ணியத்துக்கும் அளவே இல்லைங்க. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டுலயே உங்கப்பா தான் பெரிய பணக்காரர்.”
நாம் பேசியதை கேட்டு இதில் இப்படி ஒரு கோணம் இருக்கிறதா என்று அந்த பெண் வியந்துபோனார்….! அவர் மட்டுமல்ல அந்த குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் கூட.
“இனிமே உங்கப்பாவை பத்தி உங்கள் ப்ரெண்ட்ஸ் மத்தியில பேசும்போது நான் ஆலங்குடி கணேசனோட மகள். எங்கப்பா இப்படி ஒரு சேவையில பெரிய ஆள். நிறைய அனாதைப் பிணங்களை அடக்கம் பண்ண உதவியிருக்கார். நான் அவர் பொண்ணுன்னு சொல்லிக்க பெருமைப்படுறேன்னு தான் சொல்லணும். ஒ.கே…?”
“நிச்சயம் சார்!” என்றார்.
“அடுத்த மாசம் நடக்கப்போகிற எங்க ஆண்டுவிழாவுல உங்கப்பாவுக்கு விருது கொடுத்து கௌரவம் பண்ணப்போறோம். குடும்பத்தோடு நேர்ல வந்து அங்கே அவரைப் பத்தி நாங்க பேசுறதை கேளுங்க…”
“கட்டாயம் வர்றோம் சார்!” என்றார்.
ஒரு மிகப் பெரிய கடமையை நிறைவு செய்த திருப்தி நமக்கு.
புறப்படும் முன் தம்பதிகளின் கால்களில் விழுந்து ஆசிபெற்றோம்.
இவர்களின் கால்களில் விழும் பாக்கியம் பெற்றமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.
(* திரு,கணேசன் குடும்பத்தோடு நம் ஆண்டுவிழாவுக்கு வரவிருக்கிறார். ரைட்மந்த்ரா விருதை பெற்றுக்கொண்டு பேசவிருக்கிறார்!! யார் பெயரில் இவருக்கு விருது வழங்கப்படவிருக்கிறது தெரியுமா? அது சஸ்பென்ஸ்!)
=================================================================
Also check :
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
திருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்!
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!
இது போன்ற பிரமிக்க வைக்கும் ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :
=================================================================
[END]
திரு கணேசன் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் முதற்கண் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள் . திரு கணேசன் அவைகள் செய்யும் சேவையை பார்த்து மிகவும் வியப்பாக உள்ளது. இந்த கலி யுகத்திலும் ஒரு நல்ல மனிதர் … கோடி கன்யா மகா தானம் செய்த பலன் அவருக்கு உண்டு
இவ்வளவு உயர்ந்த மனிதரை பேட்டி அளித்து கௌரப படுத்தி உலகம் முழுவதும் தெரியப் படுத்தி விட்டதில் மிக்க மகிழ்ச்சி
அவரது குடும்பம் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்
தாங்கள் சந்தித்த ரோல் மாடலில் மிக சிறந்த ரோல் மாடெல்
நன்றி
உமா V
அற்புதமான பதிவு. அனைவருக்குமே ஏதோ ஒருசில தேடல்கள் இருக்கும். ஆனால் உங்களின் தேடல்கள் இந்த சமுதாயத்திற்கு நன்மையைத் தருபவனவாகவும், பதிவை படிப்பவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் உள்ளது. தேடல் எனும் சொல்லே ஒரு வினைச் சொல்லுக்குண்டான (தேடினேன், தேடுகிறேன், தேடுவேன்) பெயர்ச் சொல்தான். தங்களின் தேடல்கள் யாவும் தங்களுக்கு நன்மை பயக்க இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி
கே.எஸ்.வெங்கட்
வணக்கம்…….
திரு.கணேசன் தம்பதிகளின் பாதங்களில் நாங்களும் மானசீகமாக விழுந்து வணங்கி விட்டோம்……..நேரில் டிசம்பர் 14 அன்று ஆசி பெற்றுக் கொள்கிறோம்…….
தங்களின் புதுக்கோட்டை விஜயத்திற்கான காரணம் இப்போது புரிந்தது…….தங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…………
சுந்தர் சார் நீங்கள் செய்யும் சேவைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்து.உங்கள் சேவை தொடர மேன்மேலும் வாழ்த்துகிறோம் .
நன்றி
ரஞ்சினி
சென்னை
பெரியவா சரணம்.
இன்று ஒரு மஹா புண்ணியம் செய்தேன். இந்த புண்ணியவானைப் பற்றிப் படித்ததே மஹா புண்ணியம். ஆத்மார்த்தமாக இந்த பரமேஸ்வர பார்வதியை நமஸ்கரிக்கின்றேன்.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
புதுக்கோட்டை பயணத்தின் மற்றுமொரு அனுபவம் அருமை. திரு.கணேசன் ஐயா அவர்களைப் பற்றி விரிவாக உணர்ந்துகொண்டோம். ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் சேவையின் மதிப்பை உங்கள் மூலமாகவே உணரும்படி செய்கிறீர்கள். வாழ்த்துகளும்…நன்றியையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.
புதுக்கோட்டை பயணத்தின் மற்றுமொரு அனுபவம் அருமை. திரு.கணேசன் ஐயா அவர்களைப் பற்றி விரிவாக உணர்ந்துகொண்டோம். ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் சேவையின் மதிப்பை உங்கள் மூலமாகவே உணரும்படி செய்கிற
தான் செய்யம் சேவை எத்தகையது என்பதை பெரியவர் திரு 515 கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று அளவிட்டுக்காட்டி இருக்குறீர்கள். உண்மையில் பாராட்டுக்குரியது. அவர் நீண்டகாலம் வாழ வேண்டும்…
நாம் யார் எந்த பின்னணியில் இருக்கிறோம் என்பதைவிட நம்முடைய எழுத்து, நம்முடைய பணி இந்த சமூகத்துக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், பலனுள்ளதாகவும் இருக்கும். அந்த வகையில் நம்முடைய பணிகளை தொடருவோம்… வாழ்த்துக்கள், நன்றிகள் சார்.
கே. சுரேஷ், (தமிழ் இந்து நாளிதழ் நிருபர்)
புதுக்கோட்டை
மகா புண்ணியவானைப் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டதற்கு நன்றி.
இப்படியும் சிலர் என்று நாம் வியக்கும் மனிதர்கள் தற்போது வெகு சிலரே.
அதிலும் தன்னலம் கருதாது இப்படியொரு மகத்தான புண்ணியத்தை செய்பவர்கள் மிக மிக சிலரே.
திரு.கணேசன் அவர்கள் தன் வாழ் நாளில் எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்.
வாழ்க வளமுடன்.
நன்றி
உங்கள் தேடல் உண்மையில் வித்தியாசமானது போற்றுதலுக்குரியது.
இவரைப் போன்றவர்களை பற்றி படிப்பதே புண்ணியம் எனும்போது நேரில் பார்த்து பேட்டி எடுத்து வந்துள்ள நீங்கள் எவ்வளவு பெரிய புண்ணியசாலி… நீங்கள் பெற்றது மட்டுமின்றி எங்களுக்கும் அள்ளி வழங்கிவிட்டீர்கள்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் இவர் சேவை நீள்கிறது என்பது மிகப் பெரிய விஷயம்.
வாழ்க பல்லாண்டு. திரு.கணேசனும் அவர் குடும்பத்தினரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
Bless you sundar …….
இந்த பதிவினை படிப்பதற்கு மிகவும் பாக்கியம் செய்திருக்கவேண்டும் .
தங்களின் சீரிய முயற்சியால் மிகப்பெரிய மனிதரை அடையாளம் காட்டிய தங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்….
நன்றிகளுடன்
மனோகர் .
எல்லா நிகழ்வுக்கும் ஒரு காரணம் ஒன்று உண்டு ..உங்களை அங்கு கொண்டு சென்றதும் அந்த காரணத்திற்காகவே
அவருக்கு அவருக்கு பாரட்டும் பணமும் விட
அவரது மகளுக்கு அவரது சேவையை புரிய வைத்தது
திரு கணேசன் அவர்களுக்கு நிறைய மன நிறைவை தரும்
தேடல் உள்ள மனிதர்களுக்கு எளிதில் கிடைக்காத பொக்கிசங்கள் கிடைக்கும். உங்கள் தேடல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
இப்படி பட்ட நல்லவர்கள் மத்தியில் வாழ்வதற்காக பெருமைப்படுகிறோம் !!!