Thursday, March 21, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

print
‘அம்பிகை வளர்த்த அறங்கள்’ என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்பு ‘மனித குலம் செய்யவேண்டிய 32 வகை அறங்கள்’ குறித்து ஒரு பதிவை அளித்திருந்தோம். அவை மிகவு சுருக்கமாக இருந்தது. அது பற்றி விரிவான ஒரு பதிவை அளிக்குமாறு அப்பொழுதே ஒரு வாசகர் கேட்டிருந்தார். அது குறித்து உரிய ஆதாரங்களை திரட்டி நேரம் வரும்போது அளிப்பதாக அவருக்கு பதிலளித்திருந்தோம்.

சமீபத்தில் ஒரு நாள் பல்லாவரம் சென்றிருந்தபோது, ‘ஸ்ரீ பூர்ண மஹா மேரு டிரஸ்ட்’ என்னும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் ‘மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்’ குறித்து ஒரு மிகப் பெரிய பேனரை வைத்திருந்தார்கள். அதை படித்தபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

DSCN4091

இவை அனைத்தும் நம் அம்பிகை தனது பல்வேறு அவதாரங்களில் வளர்த்த  அறங்களே. ஆகையால் தான் அவளுக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்கிற பெயர்  உண்டாயிற்று. ‘தர்மசம்வர்த்தினி’ = அறம் வளர்த்த நாயகி.

அறங்களை படிக்கும்போதே இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறதே… அவற்றை செய்தால் இன்னும் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் 39)

இவற்றில் பல அறங்கள் செய்ய மிகப் பெரிய பொருளாதார வசதி தேவையில்லை. பரபரப்பான உங்கள் வாழ்க்கையில் சில மணித்துளிகளும், இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் ஈரமும், ஏழைகளுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமுமே போதுமானது.

DSCN4093

திருக்குறளில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் அறம் செய்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (குறள் 228)

===========================================================

மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்

1) ஆதுலர்க்கு சாலை அமைத்தல் : நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாக மருந்தளித்தல்

2) ஓதுவார்க்கு உணவு : கல்வி பயில்பவர்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி அவர்களுக்கு உணவு அளித்தால்

தர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி
தர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி

3) மாந்தர்க்கு உணவு : சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குதல்

4) பசுவுக்கு வாயுறை : பசுக்களை தெய்வமாக பாவித்து அவற்றை போஷித்து உணவளித்தல்

5) சிறைச்சோறு : சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு நல்ல உணவளித்தல்

6) ஐயம் : இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்தல்

7) வழிப்போக்கர்க்கு உதவுவதல் : வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசி தீர்த்தல்

8) அறவைச் சோறு : ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளித்தல்

9) மகப்பேறுவித்தல் : பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தல்

10) மகவு வளர்த்தல் : குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுதல்

11) மகப்பால் வார்த்தல் : தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளித்தல்

12) அறிவைப் பிணம் சுடுதல் : அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்ய உதவுதல்

DSCN4098

13) அறவைத் தூரியம் : ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்

14) சுண்ணம் : தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்

15) நோய்மருந்து : நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்

16) வண்ணார் : ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுதல், அவர்கள் ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுதல் (வண்ணார்களுக்கு தரவேண்டிய கூலியை உடனே தந்துவிடவேண்டும். தாமதிக்ககூடாது.)

17) நாவிதர் : ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல் (நாவிதர்களின் கூலியையும் உடனே தந்துவிடவேண்டும். தாமதிப்பது பாபம்.)

18) கண்ணாடி : ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்

19) காதோலை : பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்

20) கண்மருந்து : பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மை அளித்தல்

21) தலைக்கு எண்ணை : பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுத்தல்

22) பெண் போகம் : தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருதல்

23) பிறர் துயர் தீர்த்தல் : காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுதல்

24) தண்ணீர் பந்தல் : தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுதல்

25) மடம் : வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல்

26) தடம் : வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுதல், அவற்றை பராமரித்தல்

27) சோலை : நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுதல்

28) ஆ உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் : பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவதல்

29) ஏறு விடுதல் : பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுதல் மற்றும் எருதுகளை பேணுதல்

30) விலங்கிற்கு உணவு : பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுதல்

31) விலை கொடுத்து உயிர் காத்தல் : கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல்

32) கன்னிகா தானம் : வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுதல்.

===========================================================

மாதம் ரூ.5,000/- சம்பாதிப்பவர் முதல் ரூ.5,00,000/- சம்பாதிப்பவர் வரை அவரவர் சக்திக்கு ஏற்ப, செய்யக்கூடிய பலவகை அறங்கள் மேற்படி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேற்கூறிய 32 வகை அறங்களில் மிக மிக எளிமையான சில அறங்களை அடுத்தடுத்து வரும் வார இறுதிகளில் வெவ்வேறு இடங்களில் செய்ய உறுதி பூண்டிருக்கிறோம்.

சென்னையில் எத்தனையோ முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் இல்லங்களும் உள்ளன. அவற்றில் தகுதி உடையவற்றை தேர்ந்தெடுத்து அங்கு சென்று, முதியோர்களுக்கு வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணம் கொடுப்பது, தலைக்கு எண்ணை கொடுப்பது, அனைவருக்கும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, பெண்களுக்கு கண் மை, வளையல் கொடுப்பது போன்வற்றை செய்ய முடிவு செய்திருக்கிறோம். நம்முடன் வர விருப்பம் உள்ளவர்கள் நம்மை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறிய சிறிய அறங்களை செய்து நீங்கள் அதில் உள்ள இன்பத்தை உணர்ந்துகொண்டுவிட்டால், மிகப் பெரிய அறங்களை அனாயசமாக செய்யக்கூடிய சக்தியும் வலிமையையும் சூழ்நிலையும் உங்களுக்கு தானே வந்துவிடும்.

சமீபத்தில் நம் வாசகர்களுடன் வடலூர் சிவப்பிரகாச சுவாமிகளின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றபோது, மேற்கூறிய அறங்களில் பலவற்றை செய்யும் வாய்ப்பை நம் வாசகர்கள் ஏற்படுத்தி தந்தார்கள். அனைவருக்கும் நன்றி. (வடலூர் பயணம் பற்றிய பதிவு விரைவில் வருகிறது. சற்று பொறுத்திருக்கவும்! ப்ளீஸ்!!!!)

DSCN3731

(வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் ஆஸ்ரமத்திற்கு நாம் வாங்கி சென்ற கேரம்போர்டுகள், பேட்மிண்டன் செட், செஸ் உள்ளிட்ட விளையாட்டு சாமான்கள், ஸ்டீல் தண்ணீர் டிரம், பி.வி.சி. சேர்கள், தலையணை, சீலிங் ஃபேன்கள், எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்கள், முதியோர்களுக்கு துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை குழந்தைகளின் ஆரவாரத்துக்கு நடுவே சுவாமிகளிடம் ஒப்படைத்ததோம். அப்போது எடுத்த படம் தான் மேலே நீங்கள் காண்பது.)

அறம் எல்லாச் சிறப்பையும், செல்வத்தையும் தருவது! அறத்தைவிட உயிர்க்கு நன்மைதருவது வேறு எதுவும் இல்லை. வாழ்நாட்களெல்லாம் வீண் நாட்களாக்காது, நாளை செய்து கொள்ளலாம் என்று இருந்துவிடாது, நம்மால் முடித்தவரை, முடிந்த பொழுதெல்லாம், அறங்களை செய்யவேண்டும். வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறம் செய்வது மட்டுமே. அறவழியில் வரும் இன்பமே என்றும் நிலைத்திருக்கும் !

நம் துயரே பெரிதென்று எண்ணாது அறநெறி போற்றுவோம் ! அறங்கள் தவறாது செய்வோம் ! மனச்சான்று காட்டும் வழிநடப்போம் !

========================================================

வேண்டுகோள்!

வரும் ஞாயிறு ஜூன் 15 அன்று பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் கோவிலில் நாம் செய்யவிருக்கும் உழவாரப்பணி குறித்தும், அங்கு நாம் வாங்கித் தரவேண்டிய ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் ஆன தீப மேடை குறித்தும் கீழ்கண்ட பதிவில் விளக்கியிருக்கிறோம். வாசகர்கள் படித்துவிட்டு அவர்களால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!

========================================================

[END]

 

4 thoughts on “மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

 1. நாம் செய்ய வேண்டிய 32 அறங்களையும் பட்டியலிட்டு பதிவாக அளித்ததற்கு நன்றி. 32 அரங்களிலும் நம்மால் முடிந்த அறங் களான பசுவிற்கு உணவளித்தல்,. ஏழைகளுக்கு மருந்து வாங்கி கொடுத்தல், அன்னதானம் அளித்தல், முதியோர்களுக்கு உதவுதல், விலங்குகளுக்கு உணவு அளித்தல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு உதவுதல் முதலிவற்றை செய்யலாம், இதனால் நம் வருங்கால சந்ததியினரும் நல்லபடியாக இருப்பர்.. நமக்கும் இந்த பிறவி பயன் அடைந்த சந்தோசம் இருக்கும். நமக்கு இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இறைவன் நம்மை பார்த்து கொள்வார். வடலூர் பயணம் மூலமாக மறக்க முடியாத அனுபவங்களும் , ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் நமக்கு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. வடலூர் பயணம் ஏற்படுத்தி கொடுத்த ரைட் மந்த்ராவிற்கு நன்றிகள் பல

  நன்றி

  உமா

 2. மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்களையும் தெரிந்துகொண்ட பிறகுதான் அறம் செய்ய விரும்பு என்பதன் உண்மையான பொருள் விளங்குகிறது. உன்னதமான பதிவுக்கு நன்றி சுந்தர்.

  செய்யவேண்டிய அறங்கள் எவ்வளவோ இருக்கும்போது நாம் ஏன் தேவையில்லாத விஷயங்களில் நமது பொன்னான நேரத்தை வீணடிக்கவேண்டும். என்னை சிந்திக்க வைத்து செய்யத்தூண்டும் அறங்களின் பட்டியல்.

 3. ‘மனித குலம் செய்யவேண்டிய 32 வகை அறங்கள்’
  அருமை ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *