Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, April 28, 2024
Please specify the group
Home > Featured > இன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1

இன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1

print
வ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்ரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

Lord Muruga 1விசாக நட்சத்திரம் மாதம் தோறும் வந்தாலும், வைகாசி மாதத்தில் வரும் விசாகம் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் முருகப்பெருமான் அவதரித்த நாளாகும். முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் விசாகம் என்பதால், கந்தக் கடவுளுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. சூரபத்மன் முதலான அசுரர்களின் அசுர ஆட்சியால் தேவர்கள் பல துயரங்களை பல காலமாக அனுபவித்து வந்தனர். தங்கள் துயரங்களை கூறி சிவபெருமானிடம் முறையிட்டனர்.

‘ஆதியும் அந்தமும் இல்லாத, அருவமும் உருவமும் அல்லாத, இன்பமும், துன்பமும் இன்றி, வேதங்களை கடந்து நிற்கும் இறைவா! எங்கள் துயரங்களைப் போக்க உன்னைப் போல் ஒரு புதல்வனை தந்தருள வேண்டும்’ என்று தேவர்கள் அனைவரும் ஈசனிடம் வேண்டினர்.

‘ஆதியு மீறு மன்பு மருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமல! வோர் குமரன் தன்னை
நீதல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க’.

என்று கச்சியப்பர் கந்தபுராணத்தில்   குறிப்பிடுகிறார்.

தேவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று, அசுரர்களின் துயரங்களில் இருந்து அவர்களை காப்பாற்ற எண்ணினான் கருணைக் கடலான சிவபெருமான். தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அவ்வாறு ஆறு பொறிகளும் பயங்கர சத்தத்துடன் தோன்றின. அந்த தீப்பொறிகளை வாயுதேவனும், அக்னி தேவனும், சிவபெருமானின் உத்தரவுப்படி கங்கையில் கொண்டு போய் விட்டு வந்தனர். கங்காதேவி, தன்னிடம் சேர்க்கப்பட்ட தீப்பொறிகளை சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தாள்.

அங்கு ஆறு தீப்பொறிகளும், ஆறு தாமரை மலர்களில் ஆறுமுகப்பெருமான் தோன்றினார். அவர் அவதரித்த விசேஷ தினம் வைகாசி விசாகம் ஆகும். பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒரு குழந்தையாக்கி தூக்கினார். பின்னர் தன் குமரனுக்கு ஞானப்பால் புகட்டினார். இதெல்லாம் நடந்தது வைகாசி விசாக நட்சத்திர தினம் என்பதால் இந்த தினம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

வைகாசி மாத விசாகம் சிறப்பு வாய்ந்தது. அந்த நட்சத்திரத்திலே பல ஞானிகள் பிறந்திருக்கிறார்கள். சித்தார்த்தன் என்னும் இயற்பெயர் கொண்ட புத்தர் பிறந்தது இந்த தினத்தில் தான். அதே போல் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும், ஜோதி நிலையை அடைந்ததும் கூட இந்த வைகாசி விசாக நாளில்தான் என்பது சிறப்புக்குரியதாகும்.

Muruga_0

இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்தும், அலகு குத்தியும் இறைவனை வழிபடுவார்கள். முருகன் தலங்களில் எல்லாம் உற்சாகமும், கொண்டாட்டமும் சிறந்தோங்கும்,

வைகாசி விசாக தினத்தில் அதிகாலையிலேயே துயில் எழுந்து, நீராடி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பகல் பொழுதில் உணவருந்தாமல் இருப்பது நல்லது. அல்லது நீர் ஆகாரத்துடன் இருக்கலாம். இதனை அவரவர் உடல்நிலைக்கு ஏற்பச் செய்யலாம். மாலையில் ஆலயத்துக்குச் சென்று முருகனுக்கு நடக்கும் விசேஷ பூஜையில் கலந்து கொள்ளலாம். அன்றைய தினம் முழுவதும் முருகன் புகழ்பாடும் பாடல்களைப் பாடுவது நன்மை தரும்.

இந்த விரதத்தை கடைபிடிப்பவர்களின் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். துன்பங்களும், துயரங்களும் நீங்கி சுகம் பெறுவார்கள். செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

விசாகத்தை, ஞான நட்சத்திரம் என்று போற்றுவார்கள். தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நாட் களை முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக வழிபட்டாலும் இந்நாட்கள் சிவபெருமானோடும் சம்பந்தப்பட்டவை. ஆனால், முருகனுக்கென்றே தனிப்பட்ட விழாக்களாக அனுசரிக்கப்படுபவை, வைகாசி விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே ஆகும்.  அதுசரி, முருகனைப் போற்றுவதற்கு என்று தனியே நாள், நேரம் என்று பார்க்க வேண்டுமா என்ன? ஆனாலும், விரதமிருந்து தம்மை வருத்திக்கொண்டு தன் பக்தியை வெளிப்படும் பக்தர்கள் இந்த தினத்தைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.

விரதம் என்றில்லாவிட்டாலும் அன்று முழுவதும் முருக சிந்தனையோடே இருப்பது வளம் சேர்க்கும்.  இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இன்றைய தினம் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவாகவும் நடைபெறுகின்றன. இந்நாளில் தர்ம சிந்தனையுடன் தானம் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்று சொல்வார்கள்.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனிரெண்டைக் கொண்டவன் வடிவேலன்.

எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் `விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும்.

அன்று தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜையறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

“ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்”  என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.

கடவுள் என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர். விநாயகர், சிவன், விஷ்ணு என எல்லா கடவுளரையும் பொதுவாக சுவாமி என குறிப்பிட்டாலும் சமஸ்கிருதத்தில் இச்சொல் சுப்பிரமணியரை மட்டுமே குறிக்கிறது. அமரகோசம் என்னும் புகழ்பெற்ற சமஸ்கிருத அகராதியில் இதற்கான சான்று உள்ளது. அமர கோசம் என்றால் அழிவில்லாத பொக்கிஷம் என்பது பொருள்.

முருகனுக்கு பெருமாள் பெயர்: அருணகிரிநாதர் முருகனை பெருமாள் என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதிய திருப்புகழ் நூலில், ஒவ்வொரு பாடலின் கடைசி வரியிலும், பெருமாளே என்ற சொல் இடம்பெறும். பெருமாள் என்பது திருமாலைக் குறிக்கும் சொல்லாகவே இன்று வரை இருந்து வருகிறது. முருகனை தமிழக மக்கள் திருமாலின் மருமகன் என்பதால் மால்மருகன் என்று அழைப்பர். முருகனை மணந்த இந்திரனின் மகள் தெய்வானை, நம்பிராஜன் மகள் வள்ளி இருவரும் திருமாலின் மகள்களாக முற்பிறவியில் அமுதவல்லி, சுந்தரவல்லியாக வளர்ந்தனர். பின்னரே முருகனை மணக்கும் பேறு பெற்றனர். சிவ, விஷ்ணு இருவருக்கும் பாலமாக சிவபாலனாகவும், மால் மருகனாகவும் முருகன் விளங்குகிறார்.

வைகாசி விசாகத்தன்று என்ன செய்ய வேண்டும்?

* பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும்.

* நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால்,பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

* முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.

* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.

* முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் செல்லலாம். ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.

* முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகமான இன்று முருகப்பெருமானை, இந்த ஸ்லோகம் சொல்லி வழிபடுவோமே!

நல்லோர் உள்ளம் அமரும் உத்தமனே! அருணகிரிக்கு அருளிய முருகனே! ஆறுபடை அமர்ந்தவனே! பழநியில் வாழும் பாலகுமாரனே! சிக்கல் சிங்காரவேலனே! செந்தில் ஆண்டவனே! தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! மயிலேறிய மாணிக்கமே! எமக்கு நல்வாழ்வு தந்தருள்வாயாக.

Lord Kanda Murugaவடபழநியாண்டவனே! வல்வினை தீர்ப்பவனே! வயலூர் வாழ் வள்ளலே!
செங்கோட்டு வேலவனே! தணிகைநாதனே! வள்ளி மணாளனே!
திருப்பரங்குன்றம் வாழ் நாதனே!
சுப்பிரமணியனே! தேவசேனாபதியாக விளங்குபவனே! உன்னருளால் எங்கள் வாழ்வு மலரட்டும்.

குன்றுதோறும் எழுந்தருளிய குமரக் கடவுளே! ஆவினன்குடிவாழ் அமுதனே! ஆதிபரஞ்சுடராம் சிவனின் நெற்றிக் கண்ணில் உதித்தவனே!
ஆனைமுகன் தம்பியே! முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவனே! சூரசம்ஹாரனே! பால தண்டாயுதபாணியே! எமக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.

பார்வதி பெற்றெடுத்த பாலகனே!
தெய்வானையின் உள்ளம் கவர்ந்தவனே! சேவல் கொடியானே! மரகதமயிலில் உலகை வலம் வந்தவனே! வேலாயுதமூர்த்தியே! சரணவபவனே! சண்முகனே! சூரனுக்கு பெருவாழ்வு தந்தவனே! எமக்கு வளமான வாழ்வு தர வேண்டும்.

செந்தூர் கந்தனே! சுவாமிநாதனே!
சென்னிமலை சேவகனே! அவ்வைக்கு கனி அளித்த சுப்பிரமணியனே!
மால் மருகா! கார்த்திகேயனே!
விசாகத்தில் அவதரித்த வித்தகனே!
சரணடைந்தவரைக் காக்கும் தயாபரனே! சித்தநாதனே! எம்மைக் காக்க சீக்கிரம் வந்தருள்க.

தஞ்சமென வந்தவரைத் தாங்குபவனே!
அபயம் அளித்திடும் அம்பிகை புதல்வனே! கதிர்காமம் அமர்ந்தவனே! பன்னிருகையனே! பாமரர் போற்றும் பரம்பொருளே! காங்கேயனே! கடம்பனே! குறிஞ்சி நாதனே!

உம் பன்னிரு கண்களால் எங்கள் மீது கருணை மழை பொழிவாயாக!
குமரப்பெருமானே! திருப்புகழ் போற்றும் திருமுருகா! பிரணவ மந்திரத்தை உபதேசித்தவனே! அருணாசலத்தில் உறையும் கம்பத்து இளையவனே!
முருகம்மையாரைக் காத்தவனே! முக்திக்கு வித்தே! தமிழ்த்தெய்வமே!
உன்னருளால் இந்த வையம் வாழ்வாங்கு வாழட்டும்.

======================================================

இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து இன்று முழுதும் உச்சரித்துக்கொண்டே இருங்கள்

இன்று முருகப் பெருமானை ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது. கந்த புராணம் உள்ளிட்ட அவன் புகழ் பாடும் புராணங்களை, கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பாடல்களை, ஸ்லோகங்களை படிப்பது மிகவும் நன்று.  எதுவுமே இயலாத பட்சத்தில் இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து இன்று முழுதும் உச்சரித்துக்கொண்டே இருங்கள். முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

சுப்ரமணிய காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக ப்ரசோதயாத்

இம் மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும்.

======================================================

(ஆக்கத்தில் உதவி : தினகரன், தினமலர், மாலை மலர் )

[END]

10 thoughts on “இன்று முழுதும் முருகன் உங்கள் சிந்தையில் இருக்கட்டும் – ‘வைகாசி விசாகம்’ சிறப்பு பதிவு 1

  1. ஒரு சொந்த பிரச்சனையால் அதீத மன அழுத்தத்துடன் இருந்த எனக்கு அருமருந்தாக அமைந்தது வைகாசி விசாகம் சிறப்பு பதிவு. இந்த புண்ணிய நாளில் திருமுருகன் அவதரித்தான் என்னும் சிறப்போடு புத்தன் அவதரித்தது மற்றும் ஞானம் பெற்றது போன்ற சிறப்புக்களும் உண்டு எனபது எனக்கு புதிய தகவல். ஒரு புண்ணிய நாளில் மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் தந்த அருமையான பதிவிற்கு நன்றி சுந்தர்.

    1. இறுதியில் கூறப்பட்டுள்ள சுப்ரமணிய காயத்ரியை மனப்பாடம் செய்து இன்று உச்சரித்து வாருங்கள். உங்கள் பிரச்சனைகள் யாவும் பஞ்சாய் பறந்துவிடும்.

      – சுந்தர்

  2. வைகாசி விசாக பதிவு மிகவும் அருமை. முருகன் அவதரித்த இன் நன்னாளில் முருகன் துதிகள் பாடி, விரதமிருந்து இறை அருள் பெறுவோம். நம்முடைய கோரிக்கைகளை முருகன் கண்டிப்பாக நிறைவேற்றுவார். முருகன் photos superb ஆக உள்ளது. இன்று அனைவரும் முருகன் காயத்ரி சொல் லுவோம்.வீடு ப்ராப்தி, கல்யாண ப்ராப்தி, சந்தான ப்ராப்தி கிடைப்பதற்கு விரதம் இருக்க வேண்டிய முக்கிய மான நாள்

    //ஓம் சரவணா பவ //

    நன்றி.
    உமா

  3. சுந்தர்ஜி.

    அருமையான பதிவு. படங்களும் அருமையாக உள்ளது. முருகனை அப்படியே தூக்கி கொள்ளலாம் போல் உள்ளது. அவரவர் வினை தீர்க்க இந்த நாளை கொண்டாடி முருகன் அருள் பெறுவோம்

    நன்றி

  4. சுந்தர் சார்,

    நல்ல விசேசமான செய்தி. நல்ல விளக்கம். கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்.

    நன்றியுடன் அருண்.

  5. வைகாசி விசாகம் இன்று மிகவும் சிறப்பான பதிவு
    நன்றி

  6. வைகாசி விசாக பதிவு நன்றாக உள்ளது .
    முருகன் திருநாளில் முருகனை துதித்து நாம் வேண்டுவன கேட்டு மகிழ்வோம்.
    முருகன் படம் மூன்றும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது.

  7. சுந்தர் சார் வணக்கம்

    மிகவும் பயனுள்ள தகவல்

    நன்றி

  8. சுந்தர் சார் ….ஈசனின் நெற்றி அனலில் தோன்றிய முருக பெருமானும் ,ஈசனில் தோன்றிய பைரவரும் மஹா வர பிரசாதிகள் ……உங்கள் விசாக நன்னாள் கட்டுரை மிகவும் அருமை …சரவணா …சண்முகா ….சிவாய சிவா ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *