திருநெல்வேலி சமஸ்தானத்தில் வ.உ.சியின் தந்தை வக்கீலாக பணியாற்றிக் கொண்டு இருந்தார். அதே சமஸ்தானத்தில் தான் பாரதியாரின் தந்தையும் பணியாற்றி வந்தார்.
இதனால் இருவரும் நட்புடன் பழகிவந்தனர். வ.உ.சி.யின் வீட்டுக்கு பாரதியாரின் தந்தை அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வ.உ.சி. மரியாதையுடனும், அன்புடனும் அவருடன் உரையாடுவார்.
ஒருசமயம் ”என் மகன் சுப்பிரமணிய பாரதி நன்றாக கவிதை பாடுவான். தாய்நாட்டை பற்றி பாடல் பாடுவது அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம்” என்று சிறுவயது வ.உ.சியிடம், பாரதியாரின் தந்தை சொன்னார்.
இதைக் கேட்ட பின்பு பாரதியாரை சந்திக்க வேண்டும், அவருடன் உரையாட வேண்டும், அவரைப் போலவே தாய்நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று உள்ளத்தில் உத்வேகம் கொண்டார் வ.உ.சி. அப்போது அவருக்கு வயது 15.
இந்த சிந்தனைகளுடனே வளர்ந்த வ.உ.சி. பள்ளிப் படிப்பை முடித்து ‘பிளீடர்’ என்று சொல்லக்கூடிய கல்லூரி படிப்பையும் முடித்தார்.
1890-1900 காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், காந்தியடிகள் போன்றோர் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து வந்தனர். நாட்டின் விடுதலை பற்றிய இவர்களுடைய உரைகள், வ.உ.சி.யை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார்.
‘வெள்ளையனே வெளியேறு’, ‘வந்தே மாதரம்’ போன்ற கோஷங்களை உரக்கச் சொல்லி ஆங்கிலேயரின் அடக்கு முறைகளை கடுமையாக எதிர்த்தார். வ.உ.சி.யின் போராட்டத்தையும், அவரது நாட்டுப்பற்றையும் பார்த்த மற்ற தலைவர்கள், ‘வந்தேமாதரம் பிள்ளை’ என்று வ.உ.சி.யை அழைத்தனர்.
இந்நிலையில் பாரதியாரை சந்தித்து உரையாடும் ஒரு வாய்ப்பு வ.உ.சி.க்கு கிடைத்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் பாரதியாரும், வ.உ.சி.யும் நெருங்கிய நண்பர்களாயினர். இந்த சந்திப்பு குறித்து கீழ்கண்டவாறு ஒரு கட்டுரையில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.
”1906-ஆம் வருஷம் என்று நினைக்கிறேன். அப்போது நான் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்றிருந்தேன். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சங்கரராம செட்டி தெருவில் என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன்.
ஒருநாள் மாலை 4 மணியளவில் இந்தியா இதழின் ஆசிரியரை பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன். அப்போது ஆசிரியர் மாடியில் இருப்பதாக வீட்டில் இருந்தவர்கள் கூறினர். நான் மாடிக்குச் சென்றேன். அங்கிருந்த ஒருவரிடம், என் ஊர் மற்றும் பெயரை சொன்னேன். இதை கேட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அருகில் இருந்த ஒருவர் வந்து என்னை கட்டிப்பிடித்து ஆரத்தழுவினார். அப்போது எனக்கு எதுவுமே புரியவில்லை. ‘இவர் யாராக இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
”இவரும் உங்கள் ஊரை சேர்ந்தவர்தான். பெயர் சுப்பிரமணிய பாரதியார். இந்தியா இதழின் ஆசிரியர்” என்று அவரை அறிமுகப்படுத்தினார்கள். என்னுடைய நீண்டநாள் கனவு நனவானது குறித்து பெருமகிழ்ச்சியடைந்தேன்.
”தங்கள் தந்தை எங்கள் வீட்டுக்கு வருவார் என்றும், அவர் மூலம் தங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன். இதை கேட்டு பாரதியாரும் உள்ளம் மகிழ்ந்தார். இருவரும் நாட்டுநடப்புகள் குறித்து சில மணிநேரம் பேசிக் கொண்டி ருந்தோம். அப்போது கம்பீரமாக பாரதியார் பேசியதை பார்த்து அவரை கம்பராகவும், என்னை சோழனாகவும் நினைத்து பெருமை கொண்டேன்!”
இவ்வாறு வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட வேட்கை மிகவும் அதிகமானது. பாரதியார், சுப்ரமணிய சிவா ஆகியோருடன் இணைந்து போராட்ட களத்தில் வ.உ.சி. ஆவேசமாக ஈடுபட்டார்.
தமிழர்களின் வணிகத்தை முடக்கும் நடவடிக்கைகளில் ஆங்கிலேயர் ஈடுபட்டதை கண்டு உள்ளம் கொதித்தெழுந்தார். இதையடுத்து தமிழர்களின் நலனுக்காகவும், பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையிலும் சொந்தமாகவே கப்பல் நிறுவனம் ஒன்றை உருவாக்கினார்.
1906-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி வ.உ.சியின் இரண்டு கப்பல்கள் கம்பீரமாக கடலில் பயணித்தன. தூத்துக்குடி – கொழும்பு (தற்போதைய இலங்கை) இடையே வணிக போக்குவரத்துக்கு பெரும் உதவியாக அமைந்தன.
இவ்வாறு சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கினார் வ.உ.சி. தாய்நாடு மற்றும் தமிழ் மொழி மீது சிறுவயதிலேயே வ.உ.சி கொண்ட பற்றுதலால், ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராக அவரை உலகம் அறிந்து கொண்டது.
தமிழகத்தில் விடுதலை உணர்வை வீறு எழச் செய்த வ.உ.சி-க்கு இறுதிக்காலம் அவ்வளவு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. ஓர் ஆலை மூடப்பட்டு, தொழிலாளர்கள் பசியில் வாடுகிறார்கள். வேறு வழியின்றி, மனைவியிடம் அவளின் நகைகளைக் கழற்றித் தரச் சொல்லிக் கேட்கவேண்டும் என்று நினைத்தபடியே வீட்டுக்குள் வருகிறார். அங்கே அவரின் மனைவி, ஏற்கெனவே நகைகளைக் கழற்றி வைத்துக்கொண்டு அவரிடம் தருவதற்குத் தயாராகக் காத்திருக்கிறார். என்ன உத்தமமான தம்பதி அவர்கள்!
மக்களின் மகத்தான தலைவராக சிறைக்குள் போனவர் நான்கரை ஆண்டுகள் கழித்து (1912) வெளியில் வந்தபோது, அரசியல் சூழ்நிலை மாறியிருப்பதைப் பார்த்து மனம் வெம்பிப்போனார். கப்பல் ஓட்டும் அளவுக்கு செல்வாக்குப் படைத்தவரால் தன் குடும்பத்தை ஓட்டவே சிரமம் ஏற்பட்டது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நாயக்கன் வீதியிலும் பெரம்பூரிலும் வாழ்ந்த வாழ்க்கை கண்ணீர் வர வைக்கும். அரிசி, நெய், மண்ணெண்ணெய் வியாபாரம் பார்த்தார். தமிழ் கற்பித்தார். திலகர் சுயராஜ்ய நிதி மூலமாக மாதம் 50 ரூபாய் வந்தது. அதைவைத்து வாழ்ந்து வந்தார்.
சிறை சென்றதால் பறிக்கப்பட்டு இருந்த வக்கீல் உரிமத்தைத் திரும்பப்பெற்று கோவில்பட்டியிலும் தூத்துக்குடியிலும் மீண்டும் வழக்கறிஞராக வாழ்ந்து பார்த்தார்.
‘வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று – சந்தமில் வெண்பாச்
சொல்லிப் பிச்சைக்கு பாரெல்லாம் ஓடுகின்றான்
நாச் சொல்லும் தோலும் நலிந்து’
என்று அவரே கவிபாடும் அளவுக்குத் துன்பங்களை அனுபவித்தார்.
‘என்னைத் துன்புறுத்தியவர்கள் முன் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே’ என்று சொல்லியபடியே (1936) மறைந்தார். வறுமை மட்டும் இல்லாதிருக்குமானால், சுதந்திர இந்தியாவை வ.உ.சி பார்த்திருப்பார்.
(ஆக்கத்தில் உதவி : விகடன் | கழுகார் கேள்வி-பதில் | விக்கிப்பீடியா)
==============================================================
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆனந்த விகடனில் ‘நானே கேள்வி; நானே பதில்’ பகுதியில் இடம்பெற்றிருந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் உங்கள் பார்வைக்கு….
மதவெறியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
“ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதம்தான் சிறந்தது என்று சொல்லும் மதவெறியைத் தவிர்க்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?”
”செக்கிழுத்த செம்மல்’ என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார், சைவ சமயத்தில் ஆழமான அறிவும் உறுதியான நம்பிக்கையும்கொண்டவர். ஆனால், அவர் சைவ நூல்களை அனைவரும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் இல்லை. ஆனால், அதே வ.உ.சி, திருக்குறளுக்கு 1,000 பக்கங்கள்கொண்ட உரை ஒன்றை எழுதினார். அதில் இப்படிக் குறிப்பிடுகிறார், ‘தமிழர்கள் எல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1,330 திருக்குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத் தமிழர் முற்றுந் துறந்த முனிவரே ஆயினும், யான் பெற்ற மக்களேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதும் இல்லை, நேசிப்பதும் இல்லை’ என்ற கப்பலோட்டிய தமிழனின் பாதையைக் கடைப்பிடியுங்களேன்!”
==============================================================
Also check (from our archives) :
திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்
சங்கரி சங்கர நாராயண விருட்சம் & நவ நாத சித்தர்கள் — திருவள்ளுவர் திருக்கோவில் பாகம் 2
திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்!
சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!
இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!
“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?
உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!
ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!
================================================================
[END]
வ.உ.சி. போன்றோர் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இன்று படும் பாட்டை பார்த்தால் ஏன் சுதந்திரம் பெற்றோம் என்றே எண்ணத் தோன்றுகிறது…
தமிழகத்தில் நடைபெற்ற இந்திய விடுதலை போரில் வ.உ.சி.க்கு ஒரு தனியிடம் உண்டு. அவர் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ வாழ்ந்திருக்கலாம்… நீங்கள் முன்பே ஒரு பதிவில் கூறியது போல கடைசி மூச்சு வரை நாட்டைப் பற்றியே சிந்தித்தபடி மறைந்த அவரை போன்றவர்களை வறுமையில் உழலவிட்ட பாவம் தான் நம் தேசம் இன்று சந்திக்கும் பல அவலங்களுக்கும் காரணம்.
திருக்குறள் பற்றிய வ.உ.சி. அவர்களின் கருத்து அருமை.
நல்லதொரு பதிவுக்கு நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும் தந்த சிதம்பரன் மட்டும் தாழவில்லை….அவன் குடும்பமும் இன்று தாழ்ந்து தான் கிடக்கிறது. சிதம்பரம் குடும்ப வழி வந்தோர் இன்று கல்வி கற்க முடியாமல் உதவி கேட்டு நிற்கின்றனர். வ உ சி நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம் ! தலைமுறைக்கும் சொத்து சேர்த்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் விட்டதனால் இன்று கையேந்தி நிற்கிறது அவன் தலைமுறை…ஆனால் நாமோ சினிமா நடிகர்களின் பிறந்தநாள் கொண்டாடுகிறோம் ! என்று மாறுவோம் நாம் !
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
செல்வச் செழிப்புடன் வாழ்ந்த வ உ சி யின் கடைசி கால வாழ்கையை நினைக்கும் பொழுது மனது கனக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததை பார்க்காமலே சென்றது வேதனைக்கு உரியது. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உன்னத தலைவர்.
திருக்குறளை பற்றிய வ உ சியின் கருத்தை அனைவரும் பின் பற்றுவோம்
ஜெய்ஹிந்த்
நன்றி
உமா