Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > “விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

print
ன்று பாரதியை உலகே கொண்டாடும் ஒரு சூழ்நிலையில், அன்று அவர் எப்படி வாழ்ந்தார் அவர் இல்லறம் எப்படி நடைபெற்றது என்பதை அறிந்துகொள்ள உதவும் ஒரு அருமையான தொகுப்பு இது.

(1951-ஆம் ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்’ என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை!)

“என் கணவர்!”

ஊருக்குப் பெருமை என் வாழ்வு.

வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்…

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும்கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழமுடியுமா?

Bharathi Chellamal

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டிவருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்யமுடியும்? கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்;

அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்கவேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்கமுடியும்? சிறுவயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டுவிடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரேவிதமாகத்தான் அமைந்திருக்கிறது.

ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை.

எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளத்தை அணைபோட்டுத் தடுத்தது அடக்குமுறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம்போல அடக்குமுறையை உடைத்துக்கொண்டு பாய்ந்துசெல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யிற் குளியல். சூரிய கிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம்.

காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவற்றைத் தோசையின்மேல் பெய்து தின்பார்.  அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்கமுடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்தி களுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக்கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்யமுடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்கு சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்கவேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவுகண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று. புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்டபோதிலும், அவற்றையெல்லாம் மோதி மிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவுகொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ்ப் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக்கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “”விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!”” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

பாரதியார் காசியிலிருந்தபோது, சுதந்திரப் போராட்ட‍த்தில் ஈடுபட்டார். அதை கடையத்திலிருந்த அவரது மனைவி செல்ல‍ம்மாள் அறிந்து கவலைப்பட்டு கடிதம் எழுதினார்.

அதற்கு பாரதியார் எழுதிய பதில் கடிதம் என்ன‍தெரியுமா?

ஓம்  ஸ்ரீகாசி ஹனுமந்தமடம்

என் அருமைக்காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம்.

உன் அன்பான கடிதம் கிடைத்த‍து.

நீ எனது காரியங்களில் பயப்படும்படியாக, கவலைப்படும் படியாக நான் ஒன்றும் செய்ய‍வில்லை. நான் எப்போதும் தவறான வழியில் நடப்ப‍வன் அல்ல‍. விசுவநாதன் உனக்கு அனாவசியமான பயத்தை விளைவித்திருக்கிறான்.

நான் எப்போதும் தவறான வழியில் நடப்பவனல்ல.

நீ இம்மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்துவந்தாயானால், உனது கவலை தீரும். அவ்வாறு நீ செய்துவந்தால், நான் மிகவும் சந்தோஷப்படுவேன்!

உனதன்பன்,
சி.சுப்பிரமணிய பாரதி

=========================================================

நல்லாரை காண்பதும் நன்றே!

நமது தளத்தின் ரோல்மாடல்/வி.ஐ.பி. சந்திப்பு பகுதிக்காக பல சாதனையாளர்களை, சேவையில் சிறந்தோரை சந்தித்து அவர்களை ஊக்குவித்து வருவதை நீங்கள் அறிந்ததே. நேற்று முன்தினம், ஞாயிறன்று வெளிமாவட்டம் ஒன்றில் நடைபெற்ற நமது ரோல் மாடல் சந்திப்பு, பின்னர் நாம் தரிசித்த ஒரு அற்புதமான ஆலயம் ஆகியவை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறோம். நம்முடன் நண்பர் மனோகரன் வந்திருந்தார்.

இந்த மனிதர் இருக்கிறாரே…. அப்பப்பா… இதுவரை சந்தித்த சாதனையாளர்களுள் மிக மிக வித்தியாசமானவர். முதன்மையானவர்.

DSC01884

அவருடன் கழித்த ஒவ்வொரு நொடியும், நீதிநூல்கள் அனைத்தையும் சாறாக்கி பருகியது போல உணர்ந்தோம். உண்மையில் நான் ‘வாழ்ந்த’ தருணங்கள் அது தான்!

நம் தளம் சார்பாக  அவர் கேட்ட பொருட்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. (அதையும் தனக்கென கேட்காமல் பிறர்க்கென கேட்டது தான் அவர் சிறப்பு!)

யார் இவர்…?

அப்படி என்ன தொண்டு செய்து வருகிறார்??

விரைவில்…

=========================================================
வேண்டுகோள் !

நம் தளத்திற்கான மாதாந்திர சர்வர் கட்டணம் (Rs.3000/- per month – Virtual Dedicated Server) இரண்டொரு நாளில் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு முன்பு மொத்தமாக 6 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தியிருந்தோம். அது முடிந்துவிட்டது. இந்த மாதம் RENEWAL செய்ய வாசகர்கள் எவரேனும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

(நம் தளத்திற்கு உதவ ஸ்பான்சர்களோ அல்லது விளம்பர வருவாயோ இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். வாசகர்கள் அளிக்கும் நிதி மூலமாகவும், சில நேரங்களில் நமது கைக்காசை இட்டும் தான் இந்த தளம் நடத்தப்பட்டு வருகிறது.)

நன்றி!!

– சுந்தர், www.rightmantra.com
=========================================================

[END]

3 thoughts on ““விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

  1. திருமதி செல்லம்மாள் அவர்களின் உரை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது,

    என்ன தான் அவர்களின் மிக பெரிய கவிஞரின் மனைவி ஆக இருந்தாலும் அன்றாட வாழ்கையை கஷ்டப்பட்டு நடத்தி இருக்கிறார்கள்

    மிகவும் உருக்கமான பதிவு

    ரோல் மாடல் சந்திப்பின் பதிவை எதிர்பார்கிறோம்

    நன்றி
    உமா

  2. பாரதி …இந்த பாருக்கு அதிபதி [பார் -உலகம் ]..

    நீ இம்மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்துவந்தாயானால், உனது கவலை தீரும். அவ்வாறு நீ செய்துவந்தால், நான் மிகவும் சந்தோஷப்படுவேன்! ..அருமையான வரிகள் ….[தமிழ் -தேவாரம் ]

  3. சராசரியாக , ஒரு இல்லத்தரசியாக,திருமதி செல்லம்மாள் அவர்களின் கண்ணீரையும் ,ஏக்கத்தை நினைக்கும் போது நெஞ்சு கணக்கிறது.

    எனது கண்ணீர்த்துளிகளை கணிக்கையக்குகிறேன் .

    -கணமான மனதுடன்
    மனோகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *