போகங்கள் கொட்டிக்கிடக்கும் திரையுலகில் சக்கரவர்த்தியாக இருந்தும் மதுவையோ மாதுவையோ தீண்டாத உத்தமர்.
‘அண்ட சராசரங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்ககூடிய முருகப் பெருமான் இவரின் வாட்ச்மேன்’ என்று மகா பெரியவா ஒரு முறை வேடிக்கையாக கூறினார் என்றால் இவரது பாக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்களேன்.
தேவர் வராலற்றில் முருகப் பெருமான் எவ்வாறு உள்ளே வந்தார் என்று பார்ப்போம். கவியரசு கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூட இதைப் பற்றி கூறியிருப்பார். ஆனால் இது சற்று வித்தியாசமான VERSION. தேவரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தே எடுத்தது.
முருகா, இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன்… ஒழுங்கா நடந்துக்கறேன்…!
அய்யாவுத் தேவருக்கு ஆறும் மகன்கள். மூத்தவன் சுப்பையா, இரண்டாவது சின்னப்பா, அவனைத் தொடர்ந்து முருகையா, நடராஜன், திருமுகம், மாரியப்பன். பிழைப்பு தேடி ராமநாதபுரம் வந்தவர் கடுமையாக பாடுபட்டு, ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருந்தார். சொந்தமாக பயிர் நிலம் கொஞ்சம் இருந்தது. சிறு விவசாயி. வறுமைக் கோட்டுக்கு கீழே வசித்து வந்தனர். மூத்தவன் சுப்பையா மில் தொழிலாளி. கூடவே வீர மாருதி தேகப்பயிற்சி சாலை நிறுவனர். குஸ்தி வாத்தியார். தெருக்கூத்து கலைஞர் என்று பலமுகங்கள் அவருக்கு.
சின்னப்பாவுக்கு சிலேட்டு, பல்பம், பள்ளிக்கூடம், கலைமகள் எல்லாமே சுப்பையா அண்ணன்தான். சின்னப்பா கண்களை மூடாமல் குஸ்தி போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவர்களின் ஒவ்வொரு அசைவும் தித்தித்தது. அதை விட்டுவிட்டு கற்சிலைக்கு கற்பூரம் காட்டுவதை பார்ப்பதில் என்ன இன்பம் வந்துவிடப் போகிறது. ‘ஏண்டா அய்யாவு மகனா நீ?’ யாரோ பயில்வான் அடையாளம் உணர்ந்தவராக அருகே வந்தார். சின்னப்பா தலையாட்டினான். ‘நீ கோயிலுக்குப் போகலையா?’ போட்டியைப் பார்க்க முடியாதுங்களே! மறுபடி என்னிக்கு குஸ்தி நடக்கும் தெரியாதே. சாமியை எப்ப பார்த்தா என்ன? மலையும் நகராது. சிலையும் பறக்காது.’
பாருங்கடா அய்யாவு மகன், என்னா போடு போடறான். இந்தச் சின்ன வயசுலேயே கடவுளப்போய் பலிச்சு பேசுறியா தம்பி. சாமி கண்ணைக் குத்திடும்’
‘பொய் சொல்லாதீங்க மாமா. மின்னல் பட்டாதான் கண்ணு பொட்டையாவும். எங்கப்பா என்னைய மழையில வெளிய விடமாட்டாரு.’
**************************************
“அம்மா சோறு போடுவியா மாட்டியா?”
அம்மா சாப்பாட்டு பாத்திரங்களை எல்லாம் எடுத்து மூடி வைத்துவிட்டு எதிரில் வந்து நின்றார். எரிந்து கொண்டிருந்த காடா விளக்கையும் ஊதி அணைத்து விட்டார்.
“போ, உன் மூஞ்சிக்கு சாப்பாடு வேறயா…. அய்யனைப் போய்க் கேளு! நீயும் நாலு காசு சம்பாதிச்சுக் கொண்டு வந்தாதான் கால் வயிறுக்காவது கஞ்சி ஊத்துவேன். இல்லைன்னா எனக்கு அஞ்சு புள்ளைங்கன்னு நெனச்சுட்டு வாழுறேன்.”
பசித்தது. அதைவிடப் பெற்ற தாய் பிச்சைக்காரனை விரட்டுவதுபோல் துரத்தியடித்த அவமானம் வலித்தது. நின்று கொண்டே இருந்தான் சின்னப்பா. அம்மாக்களின் கண்டிப்பெல்லாம் மழைக்கால சூரியன் மாதிரி. அதிகம் சுடுவதில்லை. அம்மாவின் குறட்டை சத்தம் வீதிவரை கேட்டது. அடுத்து, அப்பா எழுந்து கொண்டது பீடி வாசத்திலேயே புரிந்தது. அவர் கண்களில் விழுந்தால் சவுக்கடி நிச்சயம். சின்னப்பாவுக்கு வாழ்வு நரகமாகப்பட்டது. விளையாட விடமாட்டேன் என்கிறார்கள். அம்மா கும்பிடுகிற சாமியாவது நல்லது செய்யுமா? மருதமலையை நோக்கி நள்ளிரவில் சென்றான்.
“முருகா எனக்கு வாழ்வு கொடு. இல்லேன்னா உன் சந்நிதியிலேயே நான் செத்துப்போறேன்.”
திருட்டுத்தனமா சுவர் ஏறிக் குதித்தான். கர்ப்பக்கிரகம் சாத்தப்பட்டு கிடந்தது. முருகனிடம் நேரடியாக முறையிட வழி இல்லையா? சுற்றி சுற்றி வந்தான். உள்ளே புக ஏதாவது சந்து, பொந்து, காரை பெயர்ந்த சுவர் கண்ணில் படாதா? இரண்டாம் ஜாம நிலவொளி. சொற்பமாக வெளிச்சம் தெரிந்தது. காட்டு யானையின் பிளிறல் காதருகே கேட்டது. அதன் சுவாசமும் தும்பிக்கையின் ஸ்பரிசமும் தோள்களில் தெரிந்தன.
அம்மாடியோவ்… யா… யா… யானை. அலறியபடியே மலையடிவாரம் நோக்கி உருண்டு புரண்டான். படிகள் உடலைப் பதம் பார்த்தன. மூர்ச்சையற்றுப் போனான் சின்னப்பா.
**************************************
“டேய் சின்னப்பா! அய்யன் பண்ணை வீட்டுக்கு பசு மாடு வாங்க ஓசூர் போயிட்டாரு. நீ எங்கே இருக்க. சாப்பிட வாடா. மாட்டுப் பொங்கல் அதுவுமா ஊரே தேரும் திருநாளுமா இருக்கே. என் பெத்த வயிறு பத்தி எரியுது. இன்னிக்கு ஒரு நாளாவது அரிசிச் சோறும் வாத்து முட்டையும் கருவாட்டுக் குழம்பும் போடக் காத்திருந்தேனே! மகனே நீ எங்கேப்பா போயிட்ட?”
அம்மாவின் குரலா? அழுகையா? இல்லை, தன் மரணத்துக்கான ஒப்பாரியா? நான் இறந்து விட்டேனா? பிணமாகிக் கிடக்கிறேனா? இது கனவா, நனவா? நேரம் ஆக ஆக அம்மாவின் குரல் மட்டுமே காதுகளில்! உலகத்தில் வேறு ஓசைகள் அற்றுப்போய் விட்டதா? திரும்பத் திரும்ப காதில் கேட்டது ‘வீட்டுக்கு வா மகனே…’ சின்னப்பா விழித்துக் கொண்டான்.
சூரியன் முகத்தில் அடித்தது. பிழைத்தது மறுபிறவி என்று புரிந்தது.
காட்டு யானையின் கால்களில் மிதிபடாமல் காப்பாற்றியதும், சாப்பிட அழைத்ததும் அம்மாவா? அவளால் எப்படி இத்தனைத் தூரத்துக்குக் கத்திக் கூப்பிட முடியும்? ஊருக்குள் ஓடினான். ‘அம்மா நேத்து ராத்திரி நீ என்னைத் தேடி மருதமலைக் கோயிலுக்கு வந்தியா? வீட்டுக்கு வரச் சொல்லி அழுதியா? என்ன சாப்பிடச் சொன்னியா?
அம்மா மலங்க மலங்க விழித்தாள். ‘இல்லையே’ என்றாள் கூந்தலை அள்ளி முடிந்தபடி. “நான் கூப்பிடலேன்னா என்ன கண்ணு. அந்த மருதமலை முருகன் நம்மோட குல தெய்வம். அவன் உனக்கு புத்தி சொல்லித் திருத்தி, இங்கே அனுப்பி வச்சிருக்கான். இனியாவது பொழைக்கிற வழியப் பாரு ராசா! கூத்து, நாடகம், கோதா, ஊமைப்படம் காட்டறாங்கன்னு காசைக் கரியாக்காதே. முருகன் கூட ஒரு தரம்தான் புத்தி சொல்லுவான். காப்பாத்துவான். நீயா உணர்ந்து திருந்தோணும். போ! போயி! பல்லை வெளக்கிட்டு வா. கருவாட்டுக் குழம்பும் பழையதும் எடுத்து வைக்கிறேன்.”
சின்னப்பாவுக்குள் சிலிர்த்தது. “முருகன் கல்லில்லை. கடவுள். காட்டு யானையிடமிருந்து என் உயிரைக் காப்பாற்ற அம்மாவாகவே வந்து விட்டான். முருகா! இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன். ஒழுங்கா நடந்துக்கறேன். ஒவ்வொரு கிருத்திகைக்கும் விரதமிருக்கிறேன். உன்னை தரிசிக்கிறேன். இனி நீயே என் உலகம்.
**************************************
பங்கஜா மில்லில் இருந்த பட்டறையில் சின்னப்பாவுக்குக் கூலி வேலை. சம்மட்டியால் இரும்பைத் தட்டித் தட்டி சீராக்கும் பணி. மாதம் ஒன்பது ரூபாய் சம்பளம்.
முன்பு காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்தார். அங்கு சம்பாதித்தை விட மூன்று ரூபாய் அதிகம். சின்னப்பாவுக்கு ஏழ்மையை வென்றுவிட வேண்டும் என்கிற வெறி. எப்போதும் பசி, பஞ்சம், பட்டினி அலுப்பைத் தந்தன. அரிசிச் சோறும் அசைவப் பதார்த்தங்களும் சாப்பிடும் ஆசை அதிகமாகவே இருந்தது. ஒன்பது ரூபாய் என்பது வாலிப வயிற்றுக்கு எந்த மூலைக்கு? மிலிட்டரி ஹோட்டல் என்று விஸ்தாரமாக கூறமுடியாது. ஆனால் சமைக்கிறவர்களின் கைமணத்தில் அங்கு கூட்டம் அதிகம். பாட்டாளிகள் அந்தச் சின்னக்கடையை அதிகம் விரும்பினர். சிற்றுண்டி, மதியச்சோறு என்று சாப்பிட்டார்கள். சின்னப்பா ஏகத்துக்கும் சாப்பிட்டார். விளைவு கடன்பாக்கி ஆறு ரூபாய்க்கு வந்துவிட்டது. கல்லாவில் இருந்தவர்கள் சின்னப்பாவை எச்சரித்தனர். ‘எங்க மொதலாளி மோசமானவரு. கழுத்துல துண்டைப் போட்டு காசை வசூல் பண்ணுவாரு. இன்னமும் ஏமாத்தாதே. வர்ற ஒண்ணாம் தேதிக்குள்ள கடனை பைசல் பண்ணிடு.’
சின்னப்பா தலையை நிமிர்த்தவே இல்லை. எங்கே போய் துட்டுக்கு அலைவது? அத்தனை பெரிய கூட்டத்தின் நடுவே அதை சொல்லியிருக்கக் கூடாது. நாலு மணிபோல டீக்கு வருகையில் காதோடு காதாக ஓதியிருக்கலாம். நாளையோ, நாளை மறுநாளோ பணத்தைக் கொடுத்து விடலாம். கைகழுவும் போது டேபிள் துடைப்பவன் நக்கலாகச் சிரிப்பான். ‘இன்று ரொக்கம் நாளை கடன்’ என்கிற போர்டையே பார்த்தபடி நின்றார் சின்னப்பா. இனி பாக்கியை கொடுத்தாலும் உள்ளே நுழையக் கூடாது என்று சபதம் எடுத்தார் சின்னப்பா. வாசலில் கடை முதலாளி வரும் ஆரவாரம். சின்னப்பா வசமாகச் சிக்கிக் கொண்டார். தப்பியோட முடியவில்லை. துண்டு கழுத்தை நெறித்தது.
விழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல இருந்தது. சிலர் சுதேச மித்திரன், ஓரிருவர் தினமணி என்று முகத்தை மூடியபடி கழன்று கொண்டார்கள். மூக்கு பிடிக்க தின்ற முட்டை தோசையும், ஆப்பம் பாயாவும் அடையாளம் தெரியாமல் போய்விட்டன. ‘யாரை ஏமாத்தறே? கல்லால சொல்லல. என்ன பெரிய சண்டியரா நீயி? கோதால வச்சுக்க அதை. காசு கொடுத்து சாப்பிடத் துப்பில்லே. நீயெல்லாம் ஆம்பளன்னு… வேஷ்டி ஒரு கேடு.’ பேச்சு நின்று போனது சின்னப்பாவுக்கு. கழுத்தில் சுளீரென ஓர் அடி வேறு கிடைத்தது. கால் இடறி விழுந்தார். எழுந்திருக்க மனசில்லாமல் அப்படியே சவமாகத் தோன்றியது. யாரும் ஓடிவந்து அனுதாபப்படவோ, கைதூக்கி விடவோ முயலவில்லை. உனக்கு இது வேண்டும் என்பதாகக் கடந்து போனார்கள். உலகம் எப்போதும்போல் இயங்கியது. அன்று கிருத்திகை. வழக்கமாக மருதமலை தெய்வத்தை தரிசிக்கும் தினம். சின்னப்பா தற்கொலை முடிவுக்கு வந்து விட்டார்.
‘முருகா! எனக்கேற்பட்ட அவமானத்தில் இருந்து நீ என்னை காப்பாற்றினால் நான் காலமெல்லாம் உன் அடிமை. அப்படி இல்லையென்றால் என் வாழ்க்கை இன்றோடு அழிந்து போகட்டும்.’ துக்கம் தொண்டையை அடைத்தது. ச்சீ இவ்வளவுதானா மனிதர்கள். மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் நழுவி ஓடுகிறார்களே. நமக்கு பணம், பவிசு என்று வந்தால் அப்படி வாழவே கூடாது. யாரும் கேட்பதற்கு முன்னாலேயே ஓடி உதவுவதே தர்மம். ஏழைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் அது சாத்தியமா? மருதமலை முருகா! என் எதிர்காலம் சூன்யமா, ஒளி வெள்ளமா? அது உனக்கு மட்டுமே தெரியும்.
வழிநெடுக மனம் புலம்பியபடியே உடன் சென்றது. உயிரை விட அவர் அஞ்சவில்லை. கடனுக்காக செத்து மடிவதே தலை குனிவாக தோன்றியது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தாகிவிட்டது. எல்லோருமே அன்றாடங்காய்ச்சிகள். பிள்ளைக்குட்டிக்காரர்கள். கடைசியாக ஒரேஒருமுறை முருகனைக் கண்கள் குளிரக் குளிர தரிசித்தால் போதும். திகட்டத் திகட்டக் கும்பிட்டுவிட்டு குதித்து விட வேண்டும். கடன்காரன் சின்னப்பா செத்தான். காற்று இனியாவது இதமாக வீசட்டும். சிறுவாணியில் தண்ணீர் வற்றாமல் ஓடட்டும். மாதம் மும்மாரி பொழிவதாக! ஏழைகள் சுகமாக வாழ்வார்களாக!
நடப்பதை நிறுத்தினார். உட்கார்ந்து ஓலமிட்டு அழுதார். ‘என் நிலைமை மாறாதா முருகா? நாலு பேர் மதிக்கும் அளவுக்கு எனக்கு கௌரவமான வாழ்க்கை கிட்டாதா? ஆயிரம் முறை வேண்டியும் பயனில்லை. வருவது வரட்டும் என்று எண்ணியபடியே மீண்டும் நடந்தார். காலை ஏதோ இடறியது. குனிந்து எடுத்தார். சிகரெட் டப்பா. ச்சீ…ச்சீ! முருகனைக் கும்பிடப் போகும்போது இது வேறு அசிங்கம். தூக்கிப் போட்டார். எட்டிப்போய் விழுந்தது. இனி என்ன இருக்கிறது எனக்கு. முருகன் கைவிட்டு விட்டான். வழக்கமாக பீடி குடிப்போம். கடைசியாக சிகரெட் பெட்டியைக் கண்ணில் காட்டி இருக்கிறான். அடப்பாவி பழனியாண்டி! யார் யாருக்கோ செல்வத்தை வாரி வழங்கியவனே, தலைமுறை தலைமுறையாக உன்னையே வழிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு சிகரெட்பெட்டி மட்டும்தானா? இது அடுக்குமா?
மறுபடியும் அதைப் போய் எடுத்தார். இரண்டு சிகரெட்டுகள் தெரிந்தன. இன்னும் ஏதாவது துண்டு பீடி இருக்குமா? கவிழ்த்துப் பார்த்தார். பத்து ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்தது. பத்து ரூபாய் தாள்தானா? போலிக் காகிதம் இல்லையே? துடைத்து துடைத்துப் பார்த்தார். முருகா! அலறினார். ஆனந்த வெள்ளத்தில் நீராடினார். ‘என் மானத்தக் காப்பாத்திட்ட சாமி! மருதமலை மூர்த்தியே இந்தக் காட்டுப் பாதையில என் கண்ல மட்டும் படற மாதிரி சிகரெட் டப்பாவை காட்டினியே. முருகா, நீயே என் தெய்வம்! இனி உன்னை மட்டுமே கும்பிடுவேன்.” அதற்கு பிறகு நடந்தது எல்லாம் வரலாறு !
திரு.பா.தீனதயாளன் எழுதியிருக்கும் SIXTHSENSE வெளியீடான ‘சாண்டோ சின்னப்பா தேவர்’ என்கிற நூலிலிருந்து….
* இந்த நூல் வேண்டுவோர் நம்மை தொடர்புகொண்டால் வாங்கி அனுப்புகிறோம்.
==========================================================
Rightmantra needs your support!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to serve you better.
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
Also check earlier episodes of this series…
மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!
“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
==========================================================
Also check :
வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
=================================================================================
[END]
Tears rolling from eyes…No words to write,…Marudhamalai murganukku arohara….Kadavulai nambinor kai vida padar
Where can i get this book?
It is published by Sixth Sense Publications, T.Nagar. You can come and collect from me. I have a few copies.