Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > “முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

print
நேற்று செவ்வாய்க் கிழமை என்பதால் நேற்றே இதை அளித்திருக்கவேண்டியது. ஆனால் தட்டச்சு செய்து முடிக்க தாமதமாகிவிட்டதால் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். ஆனால் இன்று காலை எதேச்சையாக எப்.எம். வானொலி ஒன்றில் இன்று கார்த்திகை – முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்றார்கள். ‘அடி… தூள் அப்போ இன்னைக்கு ஜமாய்த்துவிடலாம்’ என்று குஷிமூடில் அலுவலகம் புறப்பட்டு வந்தோம். வந்த இடத்தில் இங்கே வேறு ஒரு முக்கிய பதிவை எதிர்பாராமல் தயார் செய்ய வேண்டியிருக்க… நேரம் ஓடிவிட்டது. அடடா… இன்னைக்கு ஒண்ணுமே போடலியே இதுவரை. முருகன் ஒரு நாள் கிரேஸ் கொடுத்தததுக்கு அர்த்தமே இல்லாம போய்டக்கூடாதே என்று உடனடியாக இதை போஸ்ட் செய்தோம். படங்களை சேர்த்து.

சாரி!

சென்ற டிசம்பர் துவக்கத்தில் நமது இல்லத்திற்கு ஒரு அழைப்பிதழ் வந்தது. ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பின் சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு அது. அந்த அழைப்பிதழை பார்த்ததும் நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அழைப்பிதழை பிரித்து பார்த்ததும், நமது மகிழ்ச்சி இரட்டிப்பாக மாறியது. காரணம் எப்போதும் சென்னையில் நடைபெறும் இந்த அமைப்பின் நிகழ்ச்சி இந்த முறை கோவையில் நடைபெறுகிறது என்பதினால்.

கோவை என்றதும் ஏன் நமக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி? நாம் தான் கோவைக்கு இதற்கு முன்பும் சென்றிருக்கிறோமே…. அது வேறு ஒன்றுமில்லை. மருதமலை முருகனை தரிசிக்க மிகவும் ஆவல் கொண்டிருந்தோம். முந்தைய முறை கோவை சென்றபோது அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்களை பார்க்க சென்றுவிட்டபடியால் மருதமலை செல்லும் வாய்ப்பு தவறிவிட்டது. எனவே அடுத்த முறை அதற்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தோம். அப்போது நாம் பணிக்கு சென்று கொண்டிருந்தமையால் நினைத்தவுடன் எங்கும் சென்று வரமுடியாத நிலை. வெளியூர் பயணங்களை கூடுமானவரை CLOUD TRIP ஆக திட்டமிட்டே நாம் செய்துவந்தோம். அதாவது ஒரே பயணத்தில் பல குறிக்கோள்களை முடித்துக்கொள்வது.

இந்த முறை கோவை செல்வது இறுதியானதும், கோவையில் வசிக்கும் நண்பர் விஜய் ஆனந்திடம் கூறி ‘எண்ணங்களின் சங்கமம்’ நிகழ்ச்சியில் நம்முடன் கலந்துகொள்ளவேண்டும் என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அப்படியே மாலை மருதமலைக்கு நம்முடன் வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

Marudhamalai  copy copy

“பைக்கிலேயே போய்டலாம்ணா… இங்கேயிருந்து 11 கி.மீ. தான்!” என்றார்.

பைக் பயணம் என்றால் நமக்கு எப்போதும் குஷி தான். டபுள் ஒ.கே.

ஜனவரி 4, கோவையில் காலை நண்பர் ஜெகதீஷ் வீட்டில் போய் இறங்கி குளித்து முடித்து அவர் வீட்டிலேயே காலை டிபனை முடித்துவிட்டு (வழக்கம்போல விஜய் ஆனந்த் பரோட்டா சூரியாக மாறிவிட்டார்!) அப்படியே அருகே ராம்நகரில் ஒரு பள்ளியில் நடைபெற்ற ‘எண்ணங்களின் சங்கமம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். மாலை 4 வரை அங்கே இருந்துவிட்டு அங்கேயிருந்து அப்படியே மருதமலை பயணம்.

Marudhamalai  2

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!

மனம் பாடிக்கொண்டே வந்தது.

நமது மருதமலை தரிசன அனுபவத்தை நீங்கள் படிப்பதற்கு முன் ஒரு மிகப் பெரிய அடியவரின் வாழ்வில் அந்த மருதாசல மூர்த்தி பொழிந்த அருள்மழையை பற்றி சில பக்கங்களை பார்ப்போமா?

==============================================================

“அட, பொறுக்கிப் பையா…வள்ளி தெய்வானையோட இருக்குற சந்தோஷத்துல என்னை மறந்துடாதே..!”

குழந்தை மனசு, அயராத உழைப்பு, தளராத தன்னம்பிகை, அதீத தொழில் பக்தி, வாரி வழங்கும் வள்ளல் தன்மை, வியாபார நேர்மை என தான் வணங்கும் ஆறுமுக கடவுள் போலவே ஆறு தனித்திறமையுடன் வாழ்ந்து காட்டியவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.

லாஜிக்கா..?? இங்கே எல்லாம் மேஜிக்தான்டா… போட்ட பணத்தை எடுக்கணும் ஊரெங்கும் முருகனுக்கு கோயில்  கட்டணும் அது மட்டும் தான் அவர் குறிக்கோள்.

ஒவ்வொரு பட வெற்றியிலும் பணத்தை அள்ளி அள்ளி தன் முருக பெருமானுக்காக ஆறு படை வீடுகளிலும் செலவு செய்வதையே வழக்கமாக கொண்டவர்.

எம்.ஜி.ஆரை வைத்து தேவர் எடுத்த படம் ‘காதல் வாகனம்’ எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்த நேரம் அது. தேவரின் கோபமெல்லாம் வடபழனி முருகன் மீது திரும்பியது. அவரிடம் நன்கு வசை வாங்கிக்கொண்டிருந்தான் வடபழனி முருகன். சன்னதியில் நின்று கொண்டு கந்தசாமிக்கே சவால் விட்டார் சின்னப்பா தேவர்.

Marudhamalai
சுப்ரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி), மருதமலை – 641046. கோவை மாவட்டம்.

“இத பார் முருகா. காதல் வாகனம் தேவர் பிலிம்ஸ்க்கே கரும்புள்ளி  ஆயிடுச்சு. எம்.ஜி.ஆர். கால்ஷீட் இனி உடனே கிடைக்காது. இதுவரையில் ஏறக்குறைய முப்பது படம் எடுத்துட்டேன். எல்லாம் உன் தயவாலே நடந்தது. எம்.ஜி.ஆர். ஆதரவுல ஜெயிச்சது. இப்ப நான் சொல்றது முக்கியமான விஷயம். அடுத்து நான் எடுக்குற படத்துக்கு உம்மேல வெச்சிருக்குற பக்தி, உனக்கும் எனக்கும் உள்ள நேரடி உறவு இது ரெண்டும் தான் மூலதனம். என்னை கைதூக்கி விடுறதும் குப்புற தள்ளுறதும் உன் இஷ்டம். எனக்கு துணையா நீ இருந்தா இந்த கோவில் மட்டுமில்லே தமிழ்நாட்டில் ஏன் வெளிநாட்டில் உள்ள முருகன் கோவில்கள் அத்தனையும் வளரும். வளம் கொழிக்கும். இது என் முதல் பக்தி படம். இதுல ஜெயிச்சுட்டா தொடர்ந்து நிறைய சாமி படம், உன் புகழை சொல்ற மாதிரி எடுப்பேன். இல்லே வழக்கம் போல நாயைப் போட்டோ, பாம்பை போட்டோ படம் எடுப்பேன். என்ன சொல்றே? எனக்கு துணை நிக்கிறியா?”

Chinnappa Devarஅர்ச்சகர் கற்பூர ஆரத்தி காட்டினார். தேவரின் கண்களில் கண்ணீர் தளும்பியது. பூசாரிகளுக்கு தேவரின் நடவடிக்கைகள் அத்துபடி. ஆரத்தித் தட்டை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.

தேவரின் மனசுக்குள் ஒரு வார்த்தை விழுந்துவிட்டது.

“துணைவன்!”

தன் அடுத்த படத்திற்கு அதையே தலைப்பாக்கினார். படம் சூப்பர் ஹிட்.

மருதமலை மருதாசல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் – ஆங்கிலத்தில் சுருக்கமாக எம்.எம்.ஏ. என்று கடவுளின் பெயர் ஒன்றை தனக்கு இனிஷியலாகவே அமைத்து கொண்டவர் தேவர்.

எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கு. நீதிபதி அவரிடம் கேட்டார்.

“நீங்கள் எப்போது பேசினாலும் முருகா என்பீர்களா?”

“ஆமாம் முருகா!” என்றார். அதற்கு பிறகு ஜட்ஜ் அது பற்றி கேட்பாரா என்ன?

கந்தா, கடம்பா, கதிர்வேலா என்றெல்லாம் தேவரின் உதடுகள் உச்சரிக்காது. எப்போதுமே முருகா தான். அந்த முருகனும் வள்ளி, தெய்வானையோடு இருந்தால் ஆகாது. தண்டாயுதபாணி மட்டுமே அவர் விருப்பம். ‘அட, பொறுக்கிப் பையா…வள்ளி தெய்வானையோட இருக்குற சந்தோஷத்துல என்னை மறந்துடாதே.. சுக போகத்துல இருக்குற நீ மக்களை கண்டுக்கவா போறே’ன்னு பாமரத் தனமா முருகனையே கேலி பேசுவார். போடா மயிராண்டி. எனக்கு ஒண்ணும் நஷ்டமில்ல.. இனிமே பணம் வந்தாத்தானே உனக்கு ஊர் முழுக்க கோயில் கட்ட முடியும்… சுவாமிநாதனுடன் அவர் சண்டை போட்ட தருணங்கள் அதிகம்.

தேவர் பிலிம்ஸ்ஸின் தயாரிப்புகளில் கிடைத்த லாபத்தின் முதல் பங்கை மருதமலை முருகனுக்காகவே செலவிட்டார். தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூலம் பெற்ற வருவாய் முழுவதையும் அறுபடை வீடுகளுக்காகவும் சென்னை வட பழனி முருகன் ஆலயதிற்க்காகவும் வாரி வழங்கினார். மருதமலையை ஏழாவது படை வீடாக உயர்த்துவதே லட்சியம் என்று செயல்பட்டார்.

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் கிருத்திகை தோறும் தமிழ் வருடம் பிறக்கும் ஏப்ரல் 14 லிலும் மருதமலையிலேயே மருதமலை முருகனுடனேயே கழித்தார்.

தனது 60வது பிறந்தநாளின் போது மருதமலையில் இரவு தங்கினார். அடுத்த நாள் சென்னையில் மணிவிழா. அன்றைய தினம் மழைத் துளிகளை விழவைத்து முருகன் தன்னை ஆசீர்வதிக்கமாட்டாரா என்று தேவருக்கு ஆசை. ஆனியில் வறண்ட வானிலையில் மழை பெய்யுமா என்ன? தேவர் பிடிவாதத்துடன் இருந்தார். மழை பெய்யாமல் மருதமலையைவிட்டு இறங்கமாட்டேன் என்றார். எல்லாரும் கையை பிசைந்தபடி நின்றனர். “முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா” என்று உணர்ச்சி வசப்பட்டார்.

என்ன அதிசயம்… வானம் திறந்து கொட்டிற்று!!

ஆறுமுகனோடு அவர் காட்டிய அன்னியோன்யம் சினிமா கலைஞர்களுக்கே கலகலப்பூட்டும் நகைச்சுவைக் காட்சி. ‘டே முருகா… கல்லெடுத்து அடிப்பேன். உடனே சூரியனை வரச்சொல்லு’ என்று மழைக்காலங்களில் முருகனை மிரட்டுவார்.

ஒவ்வொரு வாரமும் பழனி தண்டாயுதபாணி அணிந்த கோவணங்கள் தேவருக்கு வந்து சேரும். தேவர் அவற்றை பயபக்தியுடன் பாதுகாத்தார். வருமான வரி இலாகாவிலிருந்து சோதனைக்காக ஒருமுறை தேவரின் வீட்டுக்கு  வந்திருந்தார்கள். அவர்கள் கையில் சிக்கியதேல்லாம் என்ன தெரியுமா? பழனி பஞ்சாமிர்தம், அபிஷேக சந்தனம், விபூதி பொட்டலங்கள், முருகனின் கோவணங்கள். இதெல்லாம் தான். அரண்டுவிட்டார்கள் அதிகாரிகள்.

காலையில் எழுந்ததும் பல் விளக்கி முடிப்பார் தேவர், அவர் மனைவி மாரிமுத்தம்மாள், மகன் தண்டபாணி மூவரும். பின்பு முருகனின் கௌபீனங்களை (கோவணம்) தூய நீரில் தோய்த்தெடுத்து அதை புனித தீர்த்தமாக எண்ணி குடித்தார்கள்.

Devar

கோவை ராமநாதபுரத்தில் புதிய வீடு கட்ட எண்ணினார். தன் சொந்த ஊரின் வசிப்பிடத்தில் இருந்து பார்த்தால் மருதமலையான் சன்னதி தெரியவேண்டும் என்பது அவர் ஆசை. நான்கு மாடிகள் எழுப்பினார். அதன் மேல் தளத்திலிருந்து மருதமலை கோவில் தெரிவது கண்டு கையெடுத்து கும்பிட்டார். தேவரின் முயற்சிகளினாலேயே இறைவனுக்கும் கூட்டம் பெருகியது.

1960 வரை மருதமலைக்கு நடந்து தான் செல்லவேண்டும். ஒழுங்கான பாதை, மின்சாரம், குடிநீர் என எதுவும் கிடையாது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பக்தர்கள் போக முடியாத நிலை.

மருதமலையை ஏழாவது படையாக ஆக்கியே தீருவது என்று 1962 ம் ஆண்டு மருதமலை முழுவதும் மின்சார வசதி செய்து கொடுக்க தேவர் நேரடியாக களத்தில் இறங்கினார். மருதமலையிலிருந்து இரண்டரை மைல் தூரத்தில் வடவள்ளி என்றொரு சிற்றூர் உண்டு. அங்கு மின்சார வசதி உண்டு. அங்கிருந்து மருதமலைக்கு மின்வசதியை நீட்டிக்க வேண்டும். அதை அடுத்துள்ள ஊர் கல்வீரன்பாளையம். வடவள்ளி தொடங்கி மருதமலை வரை மின்கம்பங்கள் நடுவது சாத்தியமில்லை என்றது மின்சார வாரியம். வேண்டுமானால் கல்வீரன்பாளையத்திற்கு இணைப்பு தருகிறோம். அதற்கு டெப்பாசிட் காட்டுங்கள். அங்கிருந்து மருதமலை ஒளிபெறட்டும் என்று யோசனை சொன்னார்கள்.

தேவர் தயங்கவே இல்லை.  கல்வீரன்பாளையம் மருதமலை இரண்டு ஊர்களுக்குமான டெப்பாசிட் தொகையை கட்டினார். இணைப்பு கிடைத்தது. அதற்காக கோட்டை வரையில் சென்று போராடினார். மின்சார கட்டுப்பாடு அமலில் இருந்த காலம் அது.

‘உங்கள வெச்சு நாலு படம் எடுத்தேன்’ அதுல முதன் முதலா செய்யுற நல்ல காரியம் இது. நீங்களே வந்து ஆரம்பிச்சு வைங்க முருகா!’ – எம்.ஜி.ஆர். முன்பு கைகூப்பி நின்றார் தேவர். எம்.ஜி.ஆருக்கு தர்ம சங்கடமாக போயிற்று. காரணம் தி.மு.க.விலிருந்த கட்டுப்பாடு. இருந்தாலும் ஒப்புக்கொண்டார் தேவர் மீதிருந்த நட்புக்காக.

“முருகா.. ஜனங்களுக்கு மின்சார வசதி செஞ்சி வெக்கப்போறீங்க. அதை யாரும் குறை சொல்வாங்களா? நான் கார்த்திகையில கரண்ட்ல பல்பு
எரியவுடுறேன். அவ்ளோதான்!” எம்.ஜி.ஆரால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.

மருதமலையில் மகிழ்ச்சி ததும்பிய முகத்துடன் சேவற்கொடியோனின் கர்ப்பகிரகத்திற்கு விளக்கேற்றி உச்சிக்கு சென்றார் எம்.ஜி.ஆர். தேவர் கர்ப்பகிரகத்தில் கண்ணீர் விட்டார். மருதமலையில் ஒளி பிறந்தது. “தேவரண்ணன் வணங்கும் தெய்வத்தின் கோவிலிலே திருவிளக்கு ஏற்றும் வாய்ப்பினை பெற்றமைக்காக பெருமைப்படுகிறேன்!” என்றார் எம்.ஜி.ஆர்.

2013 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது...
2013 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது…

சுவாமிக்கு தேவையான ஆபரணங்கள், வெள்ளிக்கவசம் தொடங்கி, பல புனித காரியங்களை மருதமலையில் நடத்தினார் தேவர். அதற்கு எதுவாக நிலங்களையும் நன்கொடையாகவே கொடுத்தார்.

மருதமலை மீது மக்கள் கவனம் திரும்பியது. கோவிலுக்கு வரும் கூட்டமும் அதிகரித்தது.

(கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, பா.தீனதயாளன் எழுதிய ‘சாண்டோ சின்னப்பா தேவர்’ என்கிற நூலில் படித்தது!)

நமது மருதமலை தரிசன அனுபவம் அடுத்து வரும் பதிவில்…

=============================================================

Also check :

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

=============================================================

[END]

 

19 thoughts on ““முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

  1. சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி படிக்க படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. எப்பேர்பட்ட முருக பக்தர் அவர். இந்த பதிவை படித்ததும் மருதமலை சென்று முருகனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. தங்களின் மருதமலை பதிவை வெகு விரைவில் எதிர்பார்கிறேன்.

    அனைத்து படங்களும் அருமை

    நன்றி
    உமா வெங்கட்

  2. மருதமலை மாமணியே முருகையா.
    சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
    உள்ளமெல்லாம் உன் பெயரை
    சொல்ல சொல்ல இனிக்குதடா.
    முருகா முருகா என அவன் நாமம் சொன்னால் நம் உள்ளம் மகிழும்.
    மருதமலை என்ற உடனே தேவரும் சேர்ந்து தான் நம் நினைவுக்கு வருவார்.
    தேவர் அவர்களின் முயற்சியால் தான் மருத மலை ஜொலித்தது என்று பாமர மக்களுக்கு கூட தெரியும்.
    மலைப்பாதை படங்கள் அருமையாக உள்ளது.
    தேவரின் நினைவுகளோடு இந்த கார்த்திகை தினத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    ஆனால் ஏதோ ஒன்று இடிக்கிறதே?
    ஆரம்பம் தொடங்கிய பயணம் நடுவில் காணாமல் போய் முடிவில் நிறை இல்லாமல் தொக்கி நிற்கிறது.
    எப்போதும் போல நீங்கள் suspense வைத்தாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.

    1. அதற்கு காரணம் இருக்கிறது… தேவரின் திவ்ய அனுபவத்தில் இந்த அற்பனின் அனுபவத்தை கலக்கவேண்டுமா என்ன என்று என் அனுபவத்தை விட்டுவிட்டேன்.

      எண்ணங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவம் தனிப் பதிவில் தருகிறேன். அதை மருதமலை பயணத்தோடு சேர்த்தால் சரியாக இருக்காது.

  3. மருதமலை பற்றிய மிக அருமையான பதிவு. தேவர் அவர்கள் பற்றி அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி.

    கிருத்திகை அன்று முருகனை பற்றி படித்தது அவன் அருளால் தான். ஓம் சரவணபவ ஓம்… மருதமலை முருகனுக்கு அரோகரா!

  4. Nice article.

    GOD is more closer to yo when you treat him as your Sakaa (Friend). That when you become so close to GOD.

  5. மருதமலை ஒரு முறை சென்றிருக்கிறேன். அருமையான மன நிம்மதி தரும் தலம்

  6. சுந்தர் எங்கள் ஊரில் உள்ள மருத மலையை பற்றி எங்களுக்கு தெரியாத விஷயம் எல்லாத்தயும் சொல்லி வியபடித்து விட்டீர் !!!அடுத்த முறை கோவை வரும் போது கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்.

  7. ”மருதமலைக்கு நீங்க வந்துபாருங்க
    ஈசன் மகனோட மனம்விட்டு பேசிப்பாருங்க
    தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
    சத்தியமா சொல்லறேன்
    தீராத வினைகளெல்லாம் தீர்ந்துபோகுங்க
    அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க” என்ற பாடலில் தன்னுடைய அனுபவத்தையே
    திருவருள் – ன்ற படத்தில் கொங்குத் தமிழில் வைத்துள்ளார். மிகச் சிறப்பான பதிவு, படம். மிக்க நன்றி.

  8. முருகா சரணம்………….மருத மலைக்கு சிறு வயதில் சென்றது நினைவில் நிழலாடுகிறது……….மருதமலை முருகனை மீண்டும் காணும் நாள் எந்நாளோ?

    சின்னப்பா தேவரைப் பற்றி அருந்தகவல்களை இன்று தெரிந்து கொண்டோம்………நன்றிகள் பல…………

  9. இன்றைக்கு முருகன் கோயில் போகமுடியவில்லையே என்ற ஏக்கததை தித்திக்கும் முருகன் பட தரிசனமும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாத பதிவும் போக்கிவிட்டன.

    வேலும் மயிலும் சேவலும் துணை

    மிக்க நன்றி

  10. படிக்கும்போதே மனசு ஜில்லென்று இருக்கிறது எனக்கு அது கொடு இது கொடு இறைவா என்று கேட்க்கும் மக்களுக்கு நடுவில் தனக்கு கிடைத்து எல்லாம் முருகனுக்கே என்று செலவிட்டுள்ளார் முருகா முருகா

  11. முருகன் என்றால் அழகு. கருணை , வீரம், அனைத்தும் நிரம்பிய முருகன் திருவருள் படிக்க படிக்க அழகு.

    தேவர் அவர்களின் திருவடிக்கு நம் நமஸ்காரங்கள்.

    நன்றி தங்கள் பதிவுக்கு.

    கே. சிவசுப்ரமணியன்

  12. Many information in this portal are really good and enchanting. Mr.Sundar shared the Marudamalai Muruguan and Mr.Thevar in an apt way.

    I have ready many such articles. But Right Mantra Sundar knows how to present as a memorable experience with photos.

    Happy Going.

    Regards,
    Sankar J

  13. உண்மையான பக்தி. பக்தி என்றல் இப்படி இருக்கவேண்டும் .வேலும் மயிலும் சேவலும் துணை.

  14. முருகனின் ஆளுயர பலமும், தேவரின் சிரித்த முக படமும் அருமை.
    எல்லோரும் அப்பா, அய்யா, ஆண்டவா என்று கூப்பிட்டு வேண்டிக்கொண்டு இருக்கும் போது தேவர் அய்யா மட்டும் அடா, டேய் என்றல்லாம் கூப்பிடும் உரிமை பெற்றவர்.
    நான் முருகன் அடிமை என்பது சாத்தியமானால் மழை பெய்யும் என்று சொல்லி கடும் கோடை காலத்தில் மழை வர வைத்தவர்.
    அதுபோல நாமும் நம் மனதுக்கு ஏற்ற மாதிரி சில பல சமயங்களில் கடவுளிடம் வைக்கும் பிரார்த்தனைக்கு இந்த மாதிரி சில சமயங்களில் நம் ஏக்கம் தீர்ப்பார் நம் முருகன்.

  15. தேவர் ஃபிலிம்ஸ் என்றாலே எதோ மிருகங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் என்ற நினைப்பை மாற்றிவிடீர்கள். எவ்வளவு பெரிய பக்தர் அவர் என நினைக்கும்போது ‘உள்ளம் உருகுதையா’.

  16. வாழ்க வளமுடன்

    திரு முருக கிருபானந்தவாரியார் ச்வாமிகளிடமும் தேவர் ஐயா அவர்களுக்கு ஈடுபாடு அதிகம் . தன்னுடைய படங்களில் சுவாமியை நடிக்கும்படி கேட்டபோது சுவாமி மறுத்து விட்டார் , பிறகு நீங்கள் பிரசங்கம் செய்யும் போது நான் அதனை எடுத்து பயன்படுத்தி கொள்கிறேன் என்று சொல்லி ‘தெய்வம் ‘ மற்றும் சில படங்களில் நடிக்க வைத்துவிட்டார் .

    அவருடய முருட்டு பக்திக்கு வாரியார் சுவாமிகளும் தப்ப முடியவில்லை

    நன்றி

  17. பக்தி என்பது நற்சிந்தனைகளுடன் பொது நோக்கத்திற்காக இருக்கும் பட்சத்தில், இறைவன் பக்தனுக்கு கடமை பட்டவனாகின்றான் என்று தேவர் தன் செயல்களின் மூலம் காட்டியுள்ளார்.

    அருமையான பதிவு, சுந்தர்.
    வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *