சில மாதங்களுக்கு முன்பு காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானத்திற்கு முதன்முறை சென்றிருந்தோம். அப்போதே வாரியாரின் அவதார தினத்தன்று நிச்சயம் மீண்டும் அதிஷ்டானம் வந்து அவரை தரிசிக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஆவணி சுவாதியில் வரும் வாரியார் சுவாமிகள் ஜெயந்திக்காக காத்திருந்தோம். நண்பர் ஒருவரிடம் பேசும்போது வாரியார் ஜெயந்தி அன்று காங்கேயநல்லூர் சென்று அவரை தரிசிக்க திட்டமிட்டிருப்பது பற்றி கூறினோம். உடனே அவர், தான் தன் காரை எடுத்துக்கொண்டு வருவதாகவும் அதிலேயே போய் வந்துவிடலாம் என்றும் கூறினார். எப்படியும் மாலைக்குள் ரிட்டர்ன் வந்துவிடலாம் என்பதால் அதை மனதில் கொண்டு மாலை காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் ஏற்பாடு செய்துவிட்டோம். ஆனால் எதிர்பாராத விதமாக வருவதாக சொன்ன நண்பருக்கு வர இயலாத சூழ்நிலை. சரி, நாம் மட்டும் பஸ்ஸில் போய்விட்டு வரலாம் என்றால், போக 4 மணிநேரம் வர 4 மணிநேரம் என்று நேரம் செலவாகிவிடும். அங்கு அதிஷ்டானத்தில் இரண்டு மணிநேரம் குறைந்தது ஆகும். மாலை காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அர்ச்சனையும் பிரசாத விநியோகமும் ஏற்பாடு செய்திருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தோம். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று வேறு வழியின்றி காங்கேயநல்லூர் பயணத்தை ரத்து செய்துவிட்டு நம் பணிகளை கவனிக்கலானோம்.
வாரியாரின் அதிஷ்டானத்தை அன்று தரிசிக்கும் பாக்கியம் தான் கிடைக்கவில்லை… குறைந்தபட்சம் அதை பற்றிய பதிவையாவது அன்று தளத்தில் அளிப்போம் என்று ஆகஸ்ட் 31 ஞாயிறு ஆவணி சுவாதி தினத்தன்று கணினியில் அமர்ந்து நமது முந்தைய காங்கேயநல்லூர் பயணத்தை பற்றிய பதிவை தயார் செய்துகொண்டிருந்தோம்.
“சாப்பிட வாடா… சாப்பிட வாடா…” என்று அம்மா அழைத்துக்கொண்டிருக்க… நாம் இங்கே பதிவை மும்முரமாக தயார் செய்து கொண்டிருந்தபடியால், “இதோ இன்னும் அஞ்சு நிமிஷம்… இன்னும் அஞ்சு நிமிஷம்” என்று நேரம் கடத்திக்கொண்டிருந்தோம்.
சரியாக மணி 10.30 இருக்கும், திருவள்ளூரில் இருந்து நண்பர் மனோகரன் ஃபோன் செய்தார். ஞாயிறு அலுவலகம் வந்திருப்பதாகவும் (அண்ணனுக்கு டபுள் ஓ.டி.!!) சும்மா பேச நம்மை அழைத்ததாகவும் சொன்னார். சில விஷயங்கள் அவரிடம் பேசிவிட்டு முடிக்கும் தருவாயில் காங்கேயநல்லூர் பயணம் எதிர்பாராத விதமாக இரத்தானது பற்றி அவரிடம் நமது மனக்குறையை தெரிவித்தோம்.
“இன்னைக்கு திருவள்ளூர்ல காக்களூர் சிவா விஷ்ணு கோவில்ல கூட வாரியார் சிலை ஒன்னு திறக்கிறாங்க ஜி…” என்று சர்வசாதரணமாக கூற, நமக்கு தூக்கிவாரிப்போட்டது.
“என்னங்க… எவ்ளோ பெரிய செய்தி இது… சர்வ சாதரணமா சொல்றீங்க?… கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தா நான் போயிருப்பேனே….?”
காங்கயேநல்லூர் செல்ல முடியாமையால் வருத்தத்தில் இருந்த நமக்கு அவரது செய்தி இன்பமாய் காதில் பாய்ந்தது.
“நேத்து கூட வீட்ல சொன்னாங்க… ஜி கிட்டே சொல்லுங்க… அவர் நிச்சயம் வந்து கவர் பண்ணுவார்னு…” மென்று முழுங்கினார்.
“ப்ரோக்ராம் டயம் மட்டும் என்னனு பார்த்து சொல்லுங்க… உடனே நான் அங்கே போறேன்…”
விசாரித்துவிட்டு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுவதாக சொன்னார்.
ஐந்து நிமிடம் கழித்து கூப்பிட்டார். “ஜி… 11.00 மணின்னு தான் நோட்டீஸ்ல டைம் போட்டிருக்கு… எப்படியும் கொஞ்சம் முன்னே பின்னே ஆகும். இப்போ வந்தீங்கன்னா கூட சரியா இருக்கும்…”
நேரம் அப்போது மணி 10.40. am. திருவள்ளூருக்கு பைக்கில் செல்ல எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். முடியும் தருவாயிலாவது விழாவை தரிசிக்கலாம் என்று திருவள்ளூர் புறப்பட முடிவு செய்தோம்.
“நான் உடனே திருவள்ளூர் கிளம்புறேன் ஜி….”
“நான் வேணும்னா நீங்க வருவீங்கன்னு சொல்லி வீட்ல அங்கே போகச் சொல்றேன்….” என்றார்.
சொன்னபடி தனது துணைவியாரையும் மகன் மோனிஷ் ராஜையும் மேற்படி வாரியார் சிலை திறக்கப்படும் சிவா விஷ்ணு கோவிலுக்கு அனுப்பி வைத்தார்.
நாம் தயாரித்துக்கொண்டிருந்த பதிவை அவசர அவசரமாக நிறைவு செய்து பப்ளிஷ் செய்துவிட்டு திருவள்ளூர் விரைந்தோம். அப்போது நாம் காலை உணவு கூட சாப்பிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாக 12.00 மணிக்கெல்லாம் திருவள்ளூரை அடைந்தோம். அங்கே இங்கே விசாரித்துவிட்டு கோவிலை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
அங்கே சென்ற பிறகு தான் தெரிந்துகொண்டோம். அது சாதாரண சிலை திறப்பு விழா அல்ல. வாரியாருக்கு நடத்தப்பட்ட ஒரு கும்பாபிஷேகம் என்று. வாரியார் ஸ்வாமிகளுக்கென்றே ஐம்பொன்னால் ஒரு சிறிய விக்ரகம் செய்து அதை கோவிலுக்கு உள்ளே தனியாக ஒரு சன்னதியில் எழுந்தருளச் செய்து, யாகம் ஹோமம் உள்ளிட்டவற்றை வளர்த்து குடமுழுக்கு செய்திருக்கிறார்கள்.
நாம் சென்ற நேரம் கும்பாபிஷேகம் நிறைவுப் பகுதியை எட்டியிருந்தது.
தோரண அலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த வாரியார் சுவாமிகளை கண்குளிர தரிசித்து மகிழ்ந்தோம்.
கோவிலில் மனோகரன் அவர்களின் திருமதியும் மகன் மோனிஷும் நம்மை கண்டுபிடித்துவிட்டார்கள். பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பிறகு நம்மை சாப்பிட அழைத்துச் சென்றார்கள்.
“முதல்ல சாப்பிடுங்க சார்… அந்த பக்கம் அன்னதானம் நடக்குது…” என்று நம்மை சாப்பிட அழைத்துச் சென்றார்கள்.
அங்கே பார்த்தால், சாம்பார் சாதம், பிரிஞ்சி, தயிர்சாதம் என்று பிரமாதப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நமக்கிருந்த பசியில், அனைத்தையும் ஒரு பிடி பிடித்தோம்.
வாரியார் சுவாமிகளின் கருணையை எண்ணி ஒரு கணம் அகமும் புறமும் சிலிர்த்தது. “ஐயனே உன்னை காண பசியை கூட பொருட்படுத்தாது ஓடி வந்தேன். ஆனால் நீ தரிசனம் தந்ததோடல்லாமல் பசிக்கு உணவும் அளித்துவிட்டீர்கள்!”
‘அன்னமிடும் அண்ணல்’ என்னும் பட்டம் முருகனுக்கு மட்டுமல்ல, அவன் அடியார்களுக்கும் பொருந்தும் போல…!
சாப்பிட்டு முடிந்ததும், கையோடு நாம் வாங்கிச் சென்றிருந்த பழங்களை கொடுத்து முருகனுக்கு அர்ச்சனை செய்தோம். ஜலநாராயணர் உட்பட அனைத்து சன்னதியையும் தரிசித்துவிட்டு, மீண்டும் வாரியார் ஸ்வாமிகள் சன்னதி முன்பாக வந்து நின்றோம்.
“காங்கேயநல்லூர் பயணம் இரத்தானவுடன் உங்களை உங்கள் அதிஷ்டானத்தில் தரிசிக்கும் பாக்கியத்தை இழந்ததை எண்ணி மிகவும் கவலையில் இருந்தேன். ஆனால் அது ஏன் என்று இப்போது தான் புரிகிறது சுவாமி. காங்கேயநல்லூர் சென்றிருந்தால் இங்கு உங்கள் ஆலய கும்பாபிஷேகம் அன்று உங்களை தரிசிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன். காங்கேயநல்லூர் பயணத்தில் தடை ஏற்பட்டது ஏன் என்று இப்போது புரிகிறது!” என்று வாரியாரின் முன்பு அவரிடம் மானசீகமாக பேசிக்கொண்டிருந்தோம்.
நாம் காங்கேயநல்லூர் மட்டும் சென்றிருந்தால் நமக்கு மட்டுமல்ல… உங்களுக்கும் இந்த ஆலயம் பற்றியோ இங்கு வாரியார் எழுந்தருளியிருப்பதை பற்றியோ தெரியாமல் போயிருக்கும். இந்த படங்களையும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.
அதிஷ்டானத்தையும் கோவில் பிரகாரத்தையும் நம் வாசகர்களுக்கு விருந்தாக அளிக்க புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தோம். அனைத்தும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று யாரோ சிலர் வேக வேகமாக வந்து நாம் காமிராவும் கையுமாக இருப்பதை பார்த்து “ஃபோட்டோல்லாம் எடுக்கக்கூடாது… யாரை கேட்டு எடுத்தீங்க?” அது இது என்று ஒரே பிரச்சனை செய்துவிட்டார்கள். காமிராவை பிடுங்க முயற்சித்தனர். (ஆனால் அவர்கள் மட்டும் ஒரு ஃபோட்டோக்ராபரை வைத்து அனைத்தையும் புகைப்படம் எடுத்திருந்தனர்!)
நமக்கு ஒரே படபடப்பாகிவிட்டது. கோவில் அலுவலகத்திற்கு சென்று, நமது நோக்கத்தை விளக்கினோம்.
நமது தளத்தின் விசிட்டிங் கார்டை காண்பித்து, “சார்… ஒரு நல்ல நோக்கத்துக்காகவும் நாலு பேருக்கு இந்த கோவில் பத்தியும் வாரியார் ஸ்வாமிகள் திருவுருவச் சிலை இங்கே திறக்கப்பட்டிருப்பது தெரியனும்கிறதுக்காகவும் தான் ஃபோட்டோ எடுத்தேன்!!”
அவர்களுக்கு நாம் புகைப்படம் எடுத்ததை விட நாம் எங்கே எடுத்த புகைப்படத்தை வைத்து பிரிண்ட் போட்டு சம்பாதித்துவிடப்போகிறோம் என்பதில் தான் பயம் என்பது தெளிவாக புரிந்தது. (இது போன்ற கோவில்களில் பிரகாரத்தை கூட நம்மால் எடுக்க முடிவதில்லை. பல இடங்களில் நம்மை போன்ற சாமான்யர்கள் படம் எடுத்தால் தான் தவறு. அரசு சார்புடைய தொலைக்காட்சியோ, பத்திரிக்கைகளோ அல்லது மிகப் பெரிய ஊடகங்களோ எடுத்தால் தவறில்லை என்கிற நிலை தான் நிலவுகிறது. ஆனால் உண்மையில் சம்பாதிப்பது யார் ??)
“ஐயா… வணிக நோக்கமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் தான் இந்த தளம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் எங்களுக்கு செலவுதானே ஒழிய வருவாய் ஒன்றும் கிடையாது. நல்ல விஷயத்தை நாலு பேருக்கு தெரியப்படுத்தவேண்டும் என்பது தான் நமது நோக்கம்” என்று விளக்கினோம்.
அவர்களுக்கு அனைத்தையும் புரியவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
மீண்டும் வாரியார் ஸ்வாமிகள் முன்பாக அமர்ந்து அனைத்தும் சுமூகமாக முடிந்ததற்கு நன்றி கூறிவிட்டு, சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்துவிட்டு எழுந்தோம்.
திரு.மனோகரனின் திருமதியிடமும், மகன் மோனிஷிடமும் விடைபெற்றுவிட்டு அவர்களுக்கும் நன்றி கூறிவிட்டு நம் இல்லத்துக்கு கிளம்பினோம்.
அனைத்தும் முடிந்து வீட்டுக்கு வருவதற்குள் 2.30 ஆகிவிட்டது.
அன்று மாலை காசிவிஸ்வநாதர் கோவிலில் வாரியார் ஜெயந்தியையொட்டி சிறப்பு அர்ச்சனை + பிரசாத விநியோகம்.
வாரியார் ஸ்வாமிகள் படம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, அலைந்து திரிந்து கடைசியில் வடபழனி முருகன் கோவில் உள்ள இருந்த கடையில் வாரியார் ஸ்வாமிகள் படம் கிடைத்தது.
அப்படியே அதே சன்னதி தெருவில், பிரசாத விநியோகம் செய்ய தொன்னையும் கிடைத்தது. வாங்கிக்கொண்டு நேரே கோவிலுக்கு வந்தோம்.
முன்பே ஏற்பாடு செய்துவிட்டபடியால் நாம் வரும்போது பிரசாதம் தயாராக இருந்தது. பசுக்களுக்கு பாலும் நெய்யும் சேர்க்காமல் தயார் செய்த சர்க்கரை பொங்கல். பக்தர்களுக்கு வெண்பொங்கல் & சுண்டல். வாரியார் ஸ்வாமிகள் படத்தை பாலாஜியிடம் கொடுத்து “பிரசாத டேபிள் பக்கத்துல எங்கேயாச்சும் மாட்டுங்க” என்று கூறிவிட்டு அர்ச்சனைக்கு சென்றுவிட்டோம்.
நண்பர் திரு.பாலுமகேந்திரன் அவர்கள் நம் பதிவை பார்த்துவிட்டு குடும்பத்துடன் வந்திருந்தார். அதே பகுதியில் வசிக்கும் நம் வாசகர்கள் திரு.ராஜகோபாலன் மற்றும் சக்திபாய் தம்பதியினரை வந்திருந்து அன்னதானத்தை துவக்கி தரும்படி அழைப்பு விடுத்தோம்.
“மாமா வெளியே போயிருக்கார். நான் மட்டும் வர்றேன்” என்று கூறி மாமி மட்டும் வந்தார். தற்செயலாக வேறு ஒரு வாசகியையும் சந்திக்க, அனைவரும் சென்று முதலில் காசி விஸ்வநாதரை வணங்கினோம். வாரியாரை வேண்டிக்கொண்டு விஸ்வநாதருக்கு சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்யப்பட்டது. பிள்ளையாருக்கு சுண்டலும், முருகனுக்கு வெண்பொங்கலும் நிவேதனம் செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. நம் வாசகர்கள் சிலர் குடும்பத்தினருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. அனைவருக்காகவும் வேண்டிகொள்ளப்பட்டது.
நிவேதனமும் அர்ச்சனையும் நிறைவு பெற அதை தொடர்ந்து முதலில் கோ-சம்ரோக்ஷனம் நடைபெற்றது. முதலில் கோ-சாலையில் சில வினாடிகள் பிரார்த்தனை பின்னர் சர்க்கரை பொங்கலை கொஞ்சம் சூடு ஆற வைத்து வாழை மட்டையில் வைத்து ஒரு பிளாஸ்டிக் டப்புக்குள் போட்டு பசுக்களுக்கு தர, ஆனந்தமாய் அவை சாப்பிட்டன. பசுக்கள் வயிறு குளிர்வது போல, நம் அனைவரின் வாழ்வும் நிச்சயம் குளிரும். பசுக்கள் சாப்பிட்டு முடித்தவுடன், பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் தொடங்கியது.
அனைவரும் ஆர்வமாய் வாங்கிச் சென்று சாப்பிட ஆரம்பித்தனர். வாரியார் சுவாமிகளின் பிறந்தநாளையொட்டி இந்த பிரசாத விநியோகம் நடைபெறுவதாக கூறி கூறி பிரசாதம் தந்தோம்.
பின்னணியில் நாம் வாங்கிச் சென்ற படத்தில் வாரியார் ஸ்வாமிகள் ஆசி கூறியபடி புன்னகை புரிந்துகொண்டிருந்தார்.
குழந்தைகள் பிரசாதம் வாங்க வரும்போது, அவர்களுக்கு மட்டும் சுண்டல் சற்று கூடுதலாக கொடுக்கப்பட்டது. “இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா?” என்று கேட்டபோது, அவர்கள் தெரியாது என்று கூற, “அதோ பார்… நாம் தாத்தா… வாரியார் ஸ்வாமிகள்… அவரோட பிறந்தநாள் இன்னைக்கு.” என்று கூறியபடி தான் பிரசாதத்தை கொடுத்தோம்.
ஒரு பாட்டி, “நீங்க இந்த மாதிரி இன்னாருக்கு பிறந்தநாள்னு சொல்லி கொடுக்கிறது ரொம்ப நல்ல விஷயம் சார். இந்த காலத்து குழந்தைகளுக்கு வாரியார் ஸ்வாமிகளை எல்லாம் அறிமுகப்படுத்துறது ரொம்ப சந்தோஷம் …” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துவிட்டு சென்றார்.
வாங்கிச் சென்ற ஒரு சிலர் மீண்டும் எங்களிடம் வந்து “பொங்கல் ரொம்ப பிரமாதம் சார்” என்று கூறிவிட்டு போக, நாம் நமக்கு ஒரு தொன்னையில் பொங்கலை பத்திரப்படுத்தச் சொன்னோம்.
குழந்தைகள் சுண்டலை ஆர்வமுடன் வாங்கிச் சாப்பிட்டனர்.
நாம் விநியோகம் செய்த இடத்தில் சுவற்றில் வாரியார் ஸ்வாமிகள் படத்தை மாட்டி அதில் ஒரு சிறு பூச்சரத்தை சூட்டி ஸ்வாமிகள் முன்பாகத் தான் பிரசாதம் விநியோகித்தோம்.
கடைசீயில் தான் கவனித்தோம்,பின்னணியில் மகா பெரியாவா படமும் இருப்பதை. தன்னை பாதி மறைத்துக் கொண்டு வாரியாருக்கு இடம் கொடுத்திருந்தார் மகா பெரியவா. என்னில் பாதி வாரியார் என்று சொல்லாமல் சொல்கிறாரோ?
===============================================================
முக்கிய அறிவிப்பு
நம் தளம் சார்பாக நவராத்திரி பாடல் நிகழ்ச்சி – அனைவரும் வருக!
நம் தளம் சார்பாக வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு வாரியாரின் இசை வாரிசுகளாக விளங்கும் அவரது கொள்ளுப் பேத்திகள் வள்ளி, லோச்சனா அவர்களின் பாடல் நிகழ்ச்சி நடைபெறும்.
சென்ற மாதம் நமது தளத்தின் பேட்டிக்காக அவர்களை சந்தித்தபோது அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற நமது விருப்பத்தை அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள், நவராத்திரியின்போது குழந்தைகளை ஏதேனும் ஒரு கோவிலில் பாடவைத்தால் அதுவே போதுமானது என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மேற்படி கோவிலில் அக்குழந்தைகளின் இசை நிகழ்ச்சியை எளிமையாக ஏற்பாடு செய்திருக்கிறோம். கோவிலில் பிரமாதமான ஹால் போன்ற அமைப்பு உள்ளது. சிறிய மேடை வசதியும் உள்ளது. வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை மாலை வள்ளியும் லோச்சனாவும் அங்கு நவராத்திரி பாடல்களை ஒரு மணிநேரம் பாடவிருக்கிறார்கள். அப்போது நம் தளம் சார்பாக வள்ளி, லோச்சனா சகோதரிகள் கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.
நம் வாசகர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மேற்படி நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும். திருமுருக.கிருபானந்த வாரியாரின் அருளையும் விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதரின் அருளையும் பெறவேண்டும்.
நிகழ்ச்சியின் இறுதியில் அக்குழந்தைகளை கொண்டே பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் நடைபெறும். நிகழ்ச்சிக்காக கோவிலில் ஹாலை புக் செய்தாகிவிட்டது. மற்ற ஏற்படுகளை செய்துவருகிறோம். இந்த அரும்பணியில் தங்கள் பங்களிப்பை அளிக்க விரும்பும் வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும்.
===============================================================
Also check:
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
===============================================================
[END]
மிகவும் அருமையான பதிவு . திரு வாரியார் அவர்கள் தங்களுக்கு காங்கேய நல்லூரில் தரிசனம் கொடுக்காமல் ஏன் காக்களூர் தங்களை வரச் சொன்னார் என்பது இப்பொழுதான் புரிகிறது, தாங்கள் காக்களூர் செல்லவில்லை என்றால் இவ்வளவு அழகான பதிவு எங்களுக்கு கிடைத்திருக்காது. கக்காளூர் சிவன் கோவில் மற்றும் வாரியார் சுவாமிகளின் கும்பாபிஷேகக நிகழ்சிகளை பற்றியும் தெரிந்திருக்காது,
வாரியார் சுவாமிகள் படம் மிக அருமை. என் மகன் ஹரிஷும் வாரியார் சுவாமிகள் படம் வீட்டில் வைத்து வணங்க வேண்டும் என்று சொன்னான். நாங்கள் போனவாரம் வடபழனி கோவில் அருகே தேடித் பார்த்தோம் கிடைக்கவில்லை. ப்ராப்தம் இருந்தால் கிடைக்கட்டும்
தங்களை காக்கலூருக்கு வரவழைத்த திரு மனோகரன் அவர்களுக்கும் எமது நன்றிகள் பல
நடப்பதும் நன்மைக்கே நடக்காதது இன்னும் நன்மைக்கே என்ற தங்களின் ஸ்லோகன் எனக்கு நினைவுக்கு வருகிறது.
அன்ன தான நிகழ்ச்சியையும் மிக சிராபாக வாரியார் மற்றும் மகா பெரியவா முன்னிலையில் வெகு சிறப்பாக நடத்தி விட்டீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
சுபெர்ப் article
நன்றி
உமா
எண்ணங்களே செயலுக்கு அடிப்படை என்பது தங்களின் அனுபவம் மூலம் அறியமுடிகிறது. தங்களின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகளும், வணக்கங்களூம். நன்றி.
வணக்கம்……….
நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்இறைவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார் என்பதற்கு ஒரு சான்று………..நாம் ஒரு நல்ல செயலை செய்ய நினைத்தாலே அவர் அதற்கு தக்க வழியை கண்பித்து விடுகிறார்………
இப்பொழுது நாமும் அதை கண்கூடாக உணரத் தொடங்கி விட்டோம்……
நன்றிகள் பல…………
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல், தங்களின் திட்டம் தள்ளிப்போனது கூட நன்மைக்கே. இந்த உண்மை அறிவுக்கு எட்டினாலும், மனதுக்கு புரியவில்லை. நம் எண்ணப்படி தன எல்லாமே நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். தங்களின் அற்பணிப்பை பார்க்கும்போது தங்கள் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தீர்கள் என்றே தெரியவில்லை. நம்மை எல்லோரும் இணைத்து அந்த தெய்வம் செய்யும் விளையாட்டு கூட என்னால் நம்ப முடியவில்லை.
Dear Sundarji,
Arumaiyana padhivu. Vaariyar dharisanam kidaithathil mikka magizhchi. Nanum vaariyarin pugaipadathai thedi parthom aanal netru than engaluku kidaithathu.
ரேகர்ட்ஸ்
Harish
நல்ல அருமையான பதிவு.
கிருபானந்த வாரியார் ஜெயந்தி பதிவு மட்டுமல்ல இது.
காக்களூர் கும்பாபிசேகம் + வாரியார் குடும்ப வாரிசுகளின் புகழ் + காசி விஸ்வநாதர் கோயில் அன்னதானம் மற்றும் நவராத்திரி மேடை கச்சேரி என்று பலதரப்பட்ட விசயங்களையும் கருத்துகளையும் கலந்து கொடுத்து எங்களை ஆனந்தத்தில் மெய் சிலிர்க்க வைத்து இருக்கிறிர்கள்.
எல்லாம் அவன் செயல். நடப்பது எல்லாம் நன்மைக்கே.
அருமையான பதிவு.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியை போல ,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;
என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப தங்கள் நல்லதே நினைக்கிறீர்கள். தங்களுக்கு நல்லதே நடக்கும்.
நடந்ததற்கு ஒரு முறையும் நடவாததற்கு பல முறையும் நன்றி சொல்வோம். இது தாங்கள் சொன்னது.
நவ ராத்திரி நாளை ஆரம்பம்.
படிப்படியாக நமது தளமும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
மென்மேலும் முன்னேறும்.
உண்மையான சுவாமிகள் (வாரியார்) தொண்டர்