மஹா பெரியவாவுக்கு பிறகு அவருக்கு சமமாக நாம் ஒருவர் மீது அன்பும், மதிப்பும் வைத்து பக்தி செலுத்தி வருகிறோம் என்றால் திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் தான்.
அண்மையில் வாரியார் ஸ்வாமிகள் பிறந்த ஊரான காங்கேயேநல்லூரில் அமைந்திருக்கும் அவரது அதிஷ்டானம் சென்று தரிசித்து விட்டு வந்தோம். அது பற்றிய ஒரு சிறப்பு பதிவு புகைப்படங்களுடம் வரவிருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் வாரியார் சுவாமிகளை பற்றிய ஒரு பதிவையும் காணொளியையும் அளித்துவிட்டு அதன் பின்னர் அந்த பதிவை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே தான் இந்த பதிவு.
பதிவின் இறுதியில் பொதிகையில் ஒளிபரப்பான வாரியார் அவர்களை பற்றிய டாக்குமெண்டரி வீடியோ இணைக்கப்பட்டிருக்கிறது. மறக்காமல் பார்க்கவும்.
வாரியார் ஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திருமுருக.கிருபானந்த வாரியாரின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் திருமுருகனின் பெருமையை உலக்குக்கு அறிவிக்கவும், அவனது திருப்புகழை மக்களின் மனங்களில் பதியும் படி சொற்பொழிவுகள் ஆற்றுவதுமாகவே கழிந்தது. திருப்புகழ் மட்டுமின்றி இதர தமிழ் இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஞானமும், நல்ல ஞாபக சக்தியும் இருந்த படியால் இவரால் பேசமுடியாத தலைப்புகளே இல்லை எனலாம். ஆன்மீகம், பக்தி, நல்வழி இவற்றுக்காகப் பாடுபட்டவர்கள் இவரைப் போல் வேறு யாரும் இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை.
நல்லொழுக்கம், நேரம் தவறாமை, கடமைகளை முறைப்படி செய்தல் என்பவை இவரிடம் இருந்த பண்புகள். தினமும் ஸ்நானம் செய்து இறைவனுக்கு முறையாகப் பூஜைகளைச் செய்தபின்தான் உணவு உண்பது என்பது இவருடைய வழக்கம். இவருடைய வாழ்நாளில் ஸ்நானம் பண்ணாத பூஜை செய்யாத நாள் ஒன்றுகூட இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு அதில் மிகவும் கவனத்தோடு இருந்திருக்கிறார்.
கிருபானந்த வாரியார் தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக பிறந்தவர். செங்குந்த வீர சைவ மரபைச் சேர்ந்த இவர், தனது ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணபத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றவர். இவா தனது 19-வது வயதில் அமிர்தலட்சுமி என்பவரை திருமணம் புரிந்தார். இவர் சிறந்த முருக பக்தர்.
தனது தந்தையாரிடம் கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்த இவர், எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.
இவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். இவரது ‘ஆன்மீக மொழி’ பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மீக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட ஏறதாழ 150 நூல்கள் இயற்றியுள்ளார்.
1993 ஆம் ஆண்டு வாரியார் சுவாமிகள் ஒரு சொற்பொழிவு நிகழ்த்த லண்டன் பயணமானார். அதே ஆண்டு நவம்பர் 7-ஆம், தேதி லண்டனில் இருந்து திரும்பும் வழியில் திருத்தணி மலை மீது விமானம் வருகையில் விமானப் பயணத்திலேயே வாரியார் முருகனடி சேர்ந்தார்.
மஹா பெரியவாவை போன்றே இவர் வெளியுலகம் அறியாமல் சர்வ சாதாரணமாக செய்த அற்புதங்கள் ஏராளம் ஏராளம். இவர் ஏதாவது ஒன்றை நினைத்தல இவரது ஹிருதய கமலத்தில் குடிகொண்டிருக்கும் எம்பெருமான் முருகன் அதை அடுத்த நொடி நடத்தி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.
இதோ சாம்பிளுக்கு ஒன்று.
பூஜா மூர்த்தியின் தாலிக்காசுகளை தந்து ஏழை வீட்டு திருமணத்துக்கு உதவிய வாரியார்!
வாரியார் ஸ்வாமிகள் எண்ணற்ற ஏழைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத் தொடர்பாக அவர் வாழ்வில் நடந்த அதிசயம் அநேகம்.
ஸ்வாமிகள் சேலத்தில் இருந்த நேரம், தஞ்சையை சேர்ந்த ஏழை பக்தர் ஒருவர் தன மகள் திருமணத்துக்கு உதவி வேண்டினார். அந்த நேரம் சுவாமிகளிடம் பணமில்லை.தமது பூஜா மூர்த்தியின் தேவியர் கழுத்திலிருந்த தாலிக்காசுகளை எடுத்து தந்து, இதை சேலம் ஸ்டோர்ஸ் ரங்கநாத செட்டியார் கடையில் தந்து, அதற்கு ஈடாக பணத்தை பெற்றுக்கொள்ளும்படி சொன்னார். அவரும் மகிழ்ச்சியுடன் அதன்படியே சேலம் ஸ்டோர்ஸ் சென்று பணத்தை பெற்றுக்கொண்டு சென்றார்.
அடுத்த நாள் வேறோர் இடத்தில் நடந்த பூஜையில், ஒரு தம்பதியினர் இரண்டு தாலிக்காசுகளை பூஜா மூர்த்திகளுக்குக் காணிக்கையாக அளிக்க வேண்டி வந்து நிற்கின்றனர்.
எவ்வளவு பெரிய அதிசயம் இது!
இப்படி மக்களுக்கு திருமணம் செய்து வைத்த அந்த மகாத்மா தெய்வத் திருமணத்தையும் அடிக்கடி செய்து வைப்பார். அவர் சொற்பொழிவுகளில் ‘சீதா கல்யாணம்’ மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.
“நேரிழையாம் சீதை நிறைகற்பை நெஞ்சுருக
ஆரினி கம்பரைப் போல் ஆய்ந்துரைப்பார்” என்று அங்கலாய்த்தவர் வாரியார் ஸ்வாமிகள்.
எத்தனை வகை ராமாயணமுண்டோ அத்தனையையும் கற்றுக் கம்பனில் கரைந்து நின்றவர்.
சுய ஒழுக்க சொரூபி இராமபிரான். இவன் சீதையைக் கண்டதும் சிந்தனை தளருவதை ஸ்வாமிகள் தம் வித்வத் தன்மையால் விரித்துக்கூறும் பாங்கே ஒரு வித்தியாசம் தான். கம்ப சித்திரத்தில் கலங்கரை விளக்கமான நம் ஸ்வாமிகள் ஜனக மகரிஷியாக இருந்து நடத்தி வைக்கும் சீதா கல்யாணத்தில் நாமெல்லாம் கலந்திடுவோம்.
திருமண வரம் வேண்டி நிற்கும் ஆணோ, பெண்ணோ, தினமும் வாரியாரின் சீதா கல்யாண வைபோகத்தை கேட்டுவந்தால் விரைவில் அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும்.
இந்த ஆடியோ சி.டி. மற்றும் வாரியாரின் பிற சொற்பொழிவு சி.டி.க்கள் கிரி ட்ரேடிங், லக்ஷ்மன் சுருதி, சரவண பவன் கிளைகள் மற்றும் இதர முன்னணி ஆடியோ கடைகளில் கிடைக்கும்.
==================================================================
மனதில் ஏதாவது கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அதை வேண்டிக்கொண்டு திருமுருக. கிருபானந்த வாரியாரிடம் அதை சமர்பித்துவிட்டு இந்த காணொளியை காணவும். முருகன் திருவருளால் அது இனிதே நடக்கும் என்பது உறுதி.
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
தெய்வத்திரு. திருமுருக கிருபானந்த வாரியார் – டாக்குமெண்டரி வீடியோ!
Video Url : https://www.youtube.com/watch?v=INtLsD14R-A
==================================================================
[END]
சுந்தர் அண்ணா
மிகவும் நல்ல பதிவு.நல்ல நாளில் வாரியாரை பற்றி படித்து மிகவும் மகிழ்தோம்.
சுபா
நமது ரைட் மந்திர வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .இந்த வருடம் இனிய வருடமாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்கள்.
இந்த நன்னாளிலே வாரியார் அவர்கள் பற்றிய பதிவு மனதிற்கு அமைதியை தந்துள்ளது.
Thanks.
நண்பர் சுந்தர்ஜி அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் …
புத்தாண்டு தினத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறும் ,அவர்களின் ஆசி நம் வாசகர்கள் அனைவருக்கும் கிடக்க செய்த பெருமை ,தங்களையே சாரும் .
-வாழ்த்துக்களுடன்
மனோகர்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வாரியார் பதிவு அருமை. இந்த பதிவின் மூலம் வாரியார் பற்றி அறிந்து கொண்டோம்
நன்றி
உமா
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்……………..வாரியாரைப் பற்றிய பதிவுக்கு நன் ற்!……………..
சுந்தர்ஜி
ரைட் மந்திரா வாசகர்கள் அனைவருக்கும் நம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஜெய வருடம் நம்மை அனுதினம் காத்துவரும் ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவா அவர்களின் பிறந்த வருடம். பெயரிலேயே ஜெயம் உள்ள வருடம் . சத்குரு அவர்களின் நல்லாசி உடன் இந்த வருடத்தில் அனைவரின் நல்ல எண்ணங்களும், நம் தளத்தின் பொது வேண்டுதல்களும், வாசகர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளும் விரைவில் நிறைவேறட்டும்!
வருடத்தின் துவக்கத்திலேயே நல்லதொரு பதிவு. ஸ்ரீ வாரியார் சுவாமிகளின் வடிவத்தில் முருகபெருமானை தரிசித்த திருப்தி காணொளி மூலம் கண்டோம். மேலும் ஸ்ரீ மஹா பெரியவாவும், ஸ்ரீ வாரியார் சுவாமிகளும் இணைந்து உள்ள படத்தின் மூலம் இருவரையும்(சிவனும் முருகனும் போல) புத்தாண்டு அன்று நம் தளத்தின் மூலம் தரிசிக்க வைத்த சுந்தர்ஜி அவர்களுக்கு நன்றி! அருமை!
கிருபானந்த வாரியார் அவர்களின் நேரடி ஆசியும் ,,,எங்கள் வீடு உணவும் அவருக்கு பரிமாறும் பாக்கியமும் எங்கள் அம்மாச்சி மூலமாக கிட்டியது, எனக்கு அப்போ வயது என்ன வென்று தெரியவில்லை அனால் ஆவர் ஒரு சுருக்கு பையில் திருநீறு வைத்திருப்பார் ஆசிபெற வருபவர்களுக்கு அதை கை நெறைய அள்ளி பூசி விடுவார் ….வாயிலும் போடு விடுவார்
நல்ல பதிவு…….வாரியர் சுவாமிகள் பற்றியும் அறிந்துகொண்டோம்