Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 27, 2024
Please specify the group
Home > Featured > கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

print
க்காலங்களில் குடிமக்களை பரிபாலனம் செய்யும் ராஜாவுக்கு முக்கிய விஷயங்களில் ஆலோசனை கூற ‘ராஜகுரு’ என்று ஒருவர் உண்டு. சரித்திரத்தில் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. பல சாம்ராஜ்ஜியங்கள் சரிந்ததற்க்கும் நிமிர்ந்ததற்கும் இவர்களே முக்கிய காரணம். அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பு இந்த ‘ராஜகுரு’ என்னும் பதவி.

தஞ்சையை ஆண்ட சேவப்ப நாயக், அச்சுதப்ப நாயக், ரகுநாத நாயக் ஆகிய மூன்று நாயக்க மன்னர்களுக்கு ராஜகுருவாகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் (1515-1634) என்பவர். இவரது திருவுருவச் சிலை குடந்தை அருகே உள்ள பட்டீசுவரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உள்ளது. கோவிலுக்குள் இடம் பெறும் அளவு இவர் செய்த சாதனை தான் என்ன?

சரித்திரத்தில் எத்தனையோ பேர் எவ்வளவோ பதவிகளை வகித்திருக்கின்றனர். ஆனால் கோவிந்த தீட்சிதர் இன்றளவும் பேசப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது.

வேத நெறி தழைத்தோங்க ஆவன செய்ததோடு மட்டுமல்லாமல், தனக்கு அரசர்களிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாதி மத பேதம் பாராமல் பல சமூகப் பணிகள், கோவில் திருப்பணிகள் ஆற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Govinda Deekshitar
மகாமக குளத்தில் தோன்றிய நவ தீர்த்தங்கள் – நமது ஓவியரின் பிரத்யேக ஓவியம்

இவரது நல்லாட்சி காரணமாக ‘ஐயன்’ என்று அழைக்கப்பட்டார். குடந்தையில் இன்றும் இவரது பெயர்களை தாங்கி தெருக்களும், குளங்களும் கடைவீதிகளும் இருக்கின்றன.

தென்னகத்தின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்த விஜய நகரப் பேரரசின் கிருஷ்ண தேவராயரின் மறைவுக்கு பிறகு அவரது இளைய சகோதரர் அச்சுத தேவராயர் ஆட்சிக்கு வந்தார். அப்போது சேவப்ப நாயக்கர் என்பவரை தஞ்சைப் பகுதியின் பிரதிநிதியாக 1532ல் நியமித்தார். அப்போது தமிழகத்தில் நடந்த சில கலவரங்களை சாமர்த்தியமாக அடக்கி சேவப்ப நாயக்கர் அச்சுத தேவராயரின் மதிப்பைப் பெற்றார்.

அப்போது ஆரணியை திம்மப்ப பூபதி என்பவர் விஜய நகர பேரரசின் சார்பாக ஆண்டுவந்தார். அவருடைய ராஜகுருவாக இருந்தவர் கேசவ தீட்சிதர். அவருடைய மைத்துனர் தான் கோவிந்த தீட்சிதர். கோவிந்த தீட்சிதரின் இயற்பெயர் பலராம தீட்சிதர். அக்கால வழக்கப்படி 18 வயது நிறைவடைவதற்குள் அனைத்து கலைகளையும் கற்று அதில் பாண்டித்யமும் பெற்றிருந்தார் கோவிந்த தீட்சிதர். அப்போது ஆரணிக்கு தனது பிரதிநிதியை சந்திக்க வந்த பேரரசர் அச்சுத தேவ ராயர், கோவிந்த தீட்சிதரின் புத்திக் கூர்மையையும் முகப் பொலிவையும் கண்டு வியந்து அவர் யார் என்று கேட்டு தெரிந்துகொண்டார்.

கேசவதீட்சிதரின் பால்ய நண்பர் நாராயண மகி என்பவற்றின் மகள் நாகம்மாளை கோவிந்த தீட்சிதருக்கு திருமணம் செய்து வைத்தனர். பேரரசர் அச்சுத தேவராயர் முன்னிலையிலேயே இந்த திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அதன் பின்னர் சக்கரவர்த்தியின் சிபாரிசின் பேரில் தஞ்சையை விஜயநகரப் பேரரசின் சார்பாக ஆண்ட சேவப்ப நாயக்கரின் ஆலோசகராகவும் ராஜகுருவாகவும் கோவிந்த தீட்சிதர் நியமிக்கப்பட்டார். இது அக்கால முதலமைச்சர் பதவி போல.

கோவிந்த தீட்சிதர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பல நற்பணிகளை செய்யலானார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தருவிக்கப்பட்ட தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு நூல்களை (ஓலைச்சுவடிகள்) கொண்ட, ‘சரஸ்வதி பண்டாரம்’ என்ற நூல்நிலையத்தை நிறுவச் செய்தார். பின்னர் மக்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக ஓர் ஏரியை வெட்டச் செய்தார். தனது முதலமைச்சரின் வழிக்காட்டுதலின் படி, மன்ன சேவப்ப நாயக்கன் வெட்டிய அந்த ஏரியை ‘சேவப்ப ஏரி’ என்று அழைத்தனர். தற்போது அது மருவி ‘சேப்பனவாரி’ என்று அழைக்கப்படுகிறது. (தற்போது அந்த ஏரி இருக்கிறதா இல்லை ஃபிளாட் போட்டு விற்றுவிட்டார்களா என்று தெரியவில்லை.)

giHVKpZoGI6BI3PvOxgy“ராஜானம் ராஷ்ட்ரஜம் பாபம், ராஜபாபம் புரோஹிதம்
பர்த்தாரம் ஸ்த்ரீ-க்ருதம் பாபம், சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்”

புரோஹிதருக்கும் குருவுக்கும் வித்யாஸம் காட்டினாற்போலவும் ஒரு சாஸ்த்ர வசனம் இருக்கிறது. ஸாதாரணமாக நினைப்பது, ராஜா ஜனங்களை ஆட்டிப் படைப்பவன், அவனையும் ஆட்டிப் படைப்பவர் ராஜகுரு, பதி என்கிறவன் பெண்டாட்டியை ஆட்டிப் படைப்பவன், குரு என்பவர் சிஷ்யனை ஆட்டிப் படைக்கிறவர், என்று. ஆனால் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் அந்த நாலு பேருக்கும் அவர்கள் யார் யாரை ஆட்டிப் படைப்பதாகத் தோன்றுகிறதோ அந்த நாலு பேரை நல்வழிப்படுத்தியாக வேண்டிய பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. ராஜா ப்ரஜைகளைநல்வழிப்படுத்தும், ராஜகுரு அந்த ராஜாவையே நல்வழிப்படுத்தணும், அகமுடையானமார்கள் பொண்டாட்டிமார்களை நல்வழிப்படுத்தணும், குரு என்று இருப்பவர் சிஷ்யாளை நல்வழிப்படுத்தணும். இப்படி அவர்கள் கட்டாயப் பொறுப்பு ஏற்க வேண்டும். பயங்கரமான பொறுப்பாகவே கொடுத்திருக்கிறது. என்ன பயங்கரம் என்றால், அப்படி அவர்கள் நல்வழிப்படுத்தத் தவறினால், அந்த ப்ரஜைகளும், ராஜாவும், பெண்டாட்டியும், சிஷ்யர்களும் பண்ணுகிற பாபம் முறையே அந்த ராஜாவையும், ராஜகுருவையும், அகமுடையனையும் குருவையுமே சேரும். இப்படி ஒரு பெரிய பொறுப்பு ஏற்பதால்தான் அந்த நாலுபேரை அடங்கி நடக்கும்படிச் சொல்லியிருப்பது.

– தெய்வத்தின் குரலில் மகா பெரியவா

கும்பகோணத்தில் 1542ஆம் ஆண்டு கோவிந்த தீட்சிதர் சோமயாகம் ஒன்றை பிரமாண்டமாக நடத்தினார். அதற்கு அப்பைய தீட்சிதர் வருகை புரிந்தார். இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் அதே இடத்தில் மாணவர்கள் குருகுல முறையில் பயிலத்தக்க பாடசாலை ஒன்றை நிறுவினார் கோவிந்த தீட்சிதர். ‘ஸ்ரீ ராஜா வேத காவ்ய பாடசாலை’ என்ற பெயரில் அப்பாடசாலை இன்றளவும் குடந்தையில் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான வேத பாடசாலை இது தான் என்று கூறப்படுகிறது.

1969 ஆம் ஆண்டு இந்த பாடசாலையை காஞ்சி மகா பெரியவரின் அறிவுறுத்தலின் பேரில் சொஸைட்டி சட்டத்தின் படி பதிவு செய்தனர். சாதி பேதமின்றி சமஸ்கிருதத்தை யார் கற்க விரும்பினாலும் இங்கு அவர்களுக்கு சமஸ்கிருதம் சொல்லித் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

சனாதன தர்மத்தின் மீது கோவிந்த தீட்சிதருக்கு பற்று இருந்தாலும் பிற சமயத்தினரிடம் அன்போடு நடந்துகொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் தனது அதிகாரத்தை கொண்டு செய்து சமய நல்லிணக்கம் பேணினார் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சையில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பள்ளிவாசலைக் கட்ட ஏழு வேலி நிலத்தை அரசின் சார்பாக பெற்றுத் தந்தார். அதே போல பிரபல நாகூர் தர்க்காவில் உள்ள ஐந்து மினார்களில் ஒன்றை மன்னன் செவப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்பன் கோவிந்த தீட்சிதரின் அறிவுரைப்படி கட்ட உதவிகள் செய்தான். அதே போல ST.XAVIER என்னும் கிருஸ்தவ பாதிரியார் நாகையில் கட்டிடங்கள் கட்டவும் அனுமதி பெற்றுத் தந்தார். இப்படி மதநல்லினக்கம் பேணிய கோவிந்த தீட்சிதரின் பணிகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

அதே போல திண்டிவனம் அருகே உள்ள ஜைனத் திருக்கோவிலுக்கு அரசின் பல உதவிகளை பெற்றுத் தந்தார். அப்போதைய மத்வ பீடாதிபதிகளான விஜயீந்திர ஸ்வாமிகள் உட்பட பலருக்கும் அரசின் மானியங்களும் உதவிகளும் பல கிடைக்க காரணமாக இருந்தார். (இவர் அத்வைதம். அவர்கள் த்வைதம் என்பது குறிப்பிடத்தக்கது).

கோவிந்த தீட்சிதர் திருப்பணி செய்த கோவில்களில் ஒன்றான ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்...
கோவிந்த தீட்சிதர் திருப்பணி செய்த கோவில்களில் ஒன்றான ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்…

திருவண்ணாமலை உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோவில்களின் திருப்பணிகளுக்கு உதவினார் கோவிந்த தீட்சிதர். கும்பகோணத்தில் உள்ள மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு இராஜகோபுரமும், மதில்களும் கட்டி 1580ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தையும் நடத்தினார்.

govindadசோழர்களுக்குப் பின்னர், ஆலயங்களைத் திருத்தி அமைத்து மறுமலர்ச்சியை உருவாக்கிய மகான் தீட்சிதர் அவர்கள். கும்பகோணம் ஷேத்திர மகாத்மியத்தின் கடைசி சுலோகம்,

கோவிந்த தீட்சிதோ நாம மகாநாஸீத் கலௌ யுகே
தேன ஷோடசலிங்காணி ஸ்தாபிதானி சரோவரே

என்று இவரைப் போற்றுகிறது.

அது மட்டுமல்ல நீர்வழிகளையும் நீர்நிலைகளையும் தூர்வாரி அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு செப்பனிட்டார்.

திருவையாறு தொடங்கி கும்பகோணம் வரை காவிரியில் பல இடங்களில் படித்துறைகள் கட்டினார். அவற்றில் பல இன்றும் கூட இருக்கின்றன.

போர் வெற்றி நிலையற்றது என உணர்த்திய மகான்!

அப்போது போர்ச்சுகீசியரின் படையெடுப்பு தென்னிந்தியாவில் அதிகம் இருந்தது. இலங்கையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்த போர்ச்சுகீசியரை நாயக்க மன்னர்கள் தோற்கடித்து வெற்றி வாகை சூடி வந்தனர்.

ராமசாமிக் கோவில், குடந்தை
ராமசாமிக் கோவில், குடந்தை

வெற்றியை கொண்டாட பலவித கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்தனர். அதைக் கண்டு வேதனையடைந்த கோவிந்த தீட்சிதர், “மன்னா, இந்த வெற்றி நிலையற்றது. இன்று உன்னுடையதாக இருக்கும் ராஜ்ஜியம் நாளை வேறு ஒருவருடையது. மற்றொரு நாள் வேறு ஒருவருடையது. உங்கள் வெற்றியை உண்மையில் அர்த்தமுள்ளதாக ஆக்கவேண்டும் என்றால் உங்கள் பெயரை சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும் மன்னா!” என்றார் மன்னரை சந்தித்து.

“அதற்கு என்ன செய்யவேண்டும் தீட்சிதரே… சொல்லுங்கள்… நீங்கள் என்ன செய்தாலும் அதை தட்டாமல் செய்கிறேன்” என்றார் மன்னர் அச்சுதப்ப நாயக்கர்.

அப்போது தீட்சிதரின் ஆலோசனையின் பெயரில் கட்டப்பட்டது தான் குடந்தையில் உள்ள பிரபல ராமசாமிக் கோவில்.

தீட்சிதரின் வாக்கு படி காலம் கடந்தும் நிற்கும் மன்னர் அச்சுதப்ப நாயக்கர்!
ராமசாமிக் கோவிலில் உள்ள சிற்பம் – தீட்சிதரின் வாக்கு படி காலம் கடந்தும் இதோ நிற்கிறார் மன்னர் அச்சுதப்ப நாயக்கர்

இங்கு இராமாயணக் காட்சிகள் அழகிய ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்கள். முழு ராமாயணமும் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளது. இவற்றில் நமக்கு தெரியாத பல கிளைக்கதைகளும் அடங்கும்.

Ramaswamy temple 2

இசையில் மிகவும் ஆளுமை மிக்க கோவிந்த தீட்சிதர், ‘சங்கீத ஸதாநிதி’ என்ற நூலை இயற்றி, அதனை ரகுநாத நாயக்கருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். ‘ரகுநாத மேள வீணா’ என்ற புதிய தஞ்சாவூர் வீணையையும் கோவிந்த தீட்சிதர் உருவாக்கியுள்ளார். (இந்த வீணை தான் இப்போது நீங்கள் பார்க்கும் வீணையின் வடிவம்!)

Ramaswamy temple
பிரகாரத்தில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாக

தமிழுக்கும் இவர் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். வடமொழியிலிருந்த திருவையாற்றுப் புராணத்தைத் தமிழில் மொழி பெயர்த்து எழுத உதவினார். ‘தாண்டவமாலை’ என்ற ஜோதிட நூலையும் இயற்றியிருக்கிறார். ஆக, இவர் ஒரு ஆல் ரவுண்டர். இவர் தொடாத துறைகளே இல்லை எனலாம்.

கும்பகோணம் மகாமகத்தின்போது, பூமியில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் மகாமகக் குளத்திற்குள் வந்துவிடுவதாக ஐதீகம்.

Nava theerththangal
நவ தீர்த்தங்கள்!

ஒருமுறை கோவிந்த தீட்சிதருடன் குடந்தைக்கு வந்திருந்த மன்னர் ரகுநாத நாயக்கர் மகாமகக் குளக்கரையில் நின்று தீட்சிதருடன் பேசிக்கொண்டிருந்தார்.

“இப்போதும் புண்ணிய நதிகள் இங்கு வருகின்றனவா?” என்று சந்தேகத்துடன் கேட்டார் மன்னர்.

“அதிலென்ன சந்தேகம் அரசே? இதோ நிரூபித்துக் காட்டுகிறேன்…” என்று கூறி நதியரசிகளைப் பிரார்த்தனை கங்காஷ்டகத்தை சொல்லி சிறிது நீரை குளத்தின் மீது புரோக்ஷணம் செய்தார்.

அடுத்த நொடி மிகப் பெரும் அதிசயமாக ஒரே நேரத்தில் மகாமகக் குளத்தில் ஒன்பது நதியரசிகளின் பதினெட்டுக் கரங்கள் தோன்றின. 1624ஆம் ஆண்டு இந்த அதிசயம் நடந்தது!

இதைக் கண்டு மகிழ்ந்த ரகுநாத நாயக்கர் கோவிந்த தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கத்தைத் துலாபாரமாகக் கொடுத்து கௌரவித்தான். அதை உணர்த்தும் சிற்பம் இன்றும் கூட மகாமகக் குளத்தில் உள்ளது. சிறிதும் தன்னலம் இல்லாத மகானாகிய கோவிந்த தீட்சிதர் அப்பொன்னைக் கொண்டு மகாமகக் குளத்தில் புதிய படித்துறைகளை அமைத்தார். குளத்தைச் சுற்றிப் பதினாறு சிவாலயங்களையும் கட்டினார்.

இன்று ஒரு கவுன்சிலர் கூட தன் பதவிக்காலத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாகிவிடும் துர்பாக்கிய சூழ்நிலையில் மூன்று மன்னர்களுக்கு முதலமைச்சராகவும், ஆலோசகராகவும் விளங்கிய கோவிந்த தீட்சிதர் எவ்விதமான ஆடம்பரமும் இன்றி எளிமையே உருவாக வாழ்ந்தவர்.

கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீசுவரத்தில் உள்ள சிங்கரசன்பாளையம் என்ற கிராமத்தில் சிறிய இல்லத்தில் தான் இறுதிக் காலத்தில் வாழ்ந்தார். தன் ஆசானை கௌரவிக்கும் வகையில் அச்சுதப்பன் சிங்கரசன்பாளையம் என்ற ஊரின் பெயரை மாற்றி ‘கோவிந்தகுடி’ என்று பெயரிட்டான். இன்றளவும் அவ்வூர் அதே பெயரில் வழங்கி வருகிறது. அங்கு ஒரு வேத பாடசாலையும் உள்ளது.

ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டவும், மக்களுக்குத் தொண்டு செய்யவுமே, இறைவன் தமக்குப் படிப்பையும், பதவியையும் அருளியிருந்ததாகக் கருதிய கோவிந்த தீட்சிதர் 120 ஆண்டுகள் (கி.பி. 1515 முதல் 1634 வரை) பூவுலகில் வாழ்ந்தார். இன்றும் நம் மனங்களில் வாழ்கிறார்.

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…!

**************************************************************

Rightmantra needs your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For Paypal you can transfer the amount to the following id : rightmantra@gmail.com

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

**************************************************************

Also check :

இனி கும்பகோணம் மகாமகம் செல்பவர்கள் கவனத்திற்கு…

மகாமகம் 2016 : அமுதக் கடலில் சில மணித்துளிகள்! ஒரு மகா அனுபவம்!!

கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?

2015 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம் – மாசிமக தீர்த்தவாரி 2015 @ சென்னை மெரீனா!

2014 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage!

2013 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

========================================================

[END]

5 thoughts on “கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

  1. Extraordinary information about Govindha Deekshithar. Great efforts from Sundar in bringing out such information to all of us. So many lessons to be learnt from our history and Sundar is doing a great job by bringing out such forgotten and suppressed information. Kudos to Sundar and our RM family in sharing such valuable piece of information from history.

  2. Highlight of this article is the guidelines of Kanchi Maha Periyava about the difference between Puruhit and Guru. Most valuable information is about the duty and responsibility of a King, Rajaguru, Husband and a Guru. Classic explanation from our Paramacharyal. Undoubtedly one of the best articles of our Sundar.

  3. மிகவும் அருமை சுந்தர்ஜி!

    தங்கள் எழுத்தும் தீட்சிதரின் வாழ்வும் Arrappaniyum

    மீண்டும் நேரில் சந்திக்க விழையும்!
    அன்பன்,
    நாகராஜன் ஏகாம்பரம்

  4. அதே போல் இதையும் கவர் செய்து சுய முன்னேற்றம் பகுதியில் வெளியிட வேண்டுகிறேன்

    நாலு இளைகர்களும் நல்லா இருக்கும் oorum @ இன்றைய தினமலர்

  5. கோவிந்த தீட்சிதர் பற்றிய செய்திகள் தகவல்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அவரைப் பற்றி மேலும் தகவல்கள் இருந்தல பகிரவும். நாங்கள் படிக்கத் தயார்.

    மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு மகன் அவர் என்பதை நினைக்கும்போது சிலிரிப்பாக இருக்கிறது.

    இந்த பதிவைப் பொருத்தவரை உங்கள் உழைப்பை புரிந்துகொள்ளமுடிகிறது. அதற்கு முதலில் நன்றியோ நன்றி.

    பாபாராம் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை போல, மகா பெரியவர் கூறிய கருத்தையும் பதிவின் ஊடே அளித்திருப்பது பதிவின் தரத்தை பன்மடங்கு கூட்டிவிட்டது.

    பதிவுக்கு பக்கபலமாய் அளிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் பதிவை விட்டு கண்களை எடுக்க மறுக்கின்றன.

    திரும்ப திரும்ப படித்த பதிவுகளில் ஒன்று இது.

    – பிரேமலதா மணிகண்டன்
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *