பத்து வயதாக இருக்கும்போது, மதிய வேளையில் தறியில் நெய்துகொண்டிருந்தார். அவரது அன்னையார் உணவு உண்ண அழைக்கும் வேளை வந்தது. ஆனால் அன்னையாரோ அவரைக் கூப்பிடாமல் சமையலறையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அன்னை கண்கலங்கி நின்றதை ஆந்தப் பிஞ்சு உள்ளத்தால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. தனது அன்னையின் கால்களைக் கட்டிக்கொண்டு, ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.
அன்னை அவரை இறுக அணைத்தபடி, “ஏன் செல்லமே நாங்கள் உன்னை தவமிருந்து பெற்றோம். ஆனால் இன்று உன் பசிக்குக் கூழ் கொடுக்க முடியாமல் தவிக்கும் பாவியாக இருக்கிறேனடா” என்று கூறி அழுதார். சிறுவனான வேதாத்திரியும் அழுதுவிட்டார்.
வறுமை ஏன் ஏற்படுகிறது? கடவுள் யார்? நான் யார்? உயிர் ஏன்றால் ஏன்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்ற வேட்கை அவருக்கு எழுந்தது. பிற்காலத்தில் இக்கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு, பாமர மக்களின் தத்துவ ஞானியாக விளங்கினார் வேதாத்திரி மகரிஷி.
(கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் ஆழியார் சென்றிருந்தோம். அப்போது அறிவுத் திருக்கோவிலை நேரடியாக சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுத்தவை இந்த புகைப்படங்கள்.)
வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்கள் நமக்கு ஆதிசங்கரரை மட்டுமல்ல, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையும் ஆடையாளம் காட்டுகின்றன. சடப்பொருள்களானாலும், உயிரிகளின் பரிணாமமாக இருந்தாலும், தனது கருத்துக்களை ஆதியாகிய இறைவெளியில் விளக்க ஆரம்பித்து, அதை அறிவியலோடு தொடர்புபடுத்தி முடிப்பதால், வேதாத்திரியின் தத்துவங்கள் அறிவியல் அம்சத்துடனும் அமைந்துள்ளன.
தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார்.
எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார்.
1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது.
எது இறைவன் என்ற கேள்விக்கு சுத்த வெளியே இறைவன் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. சுத்த வெளியான இறைவெளியே தன்மாற்றம் பெற்றுத் தோற்றப் பொருள்களாக மாறியுள்ளது. எனவே இறைவன் ஒன்றுதான் என்று இறைநிலையைப் பகுத்துணரச் செய்கிறார்.
விலங்கினத்தின் குணங்கள்
மனிதன் உடலாலும், அறிவாற்றலாலும் சிறப்பு வாய்ந்தவன் என்றாலும், பரிணாமத் தொடரில் அவன் முதலில் உருவானது விலங்கினத்தின் வித்தின் மூலமே. எனவே மனிதனிடம் பிற உயிரை வதைத்தல், பிற உயிரின் பொருளைப் பறித்தல், பிற உயிர்களின் வாழும் சுதந்திரத்தை அழித்தல் போன்ற விலங்கினத்தின் குணங்களும் இன்றுவரை சேர்ந்தே இருக்கின்றன. அத்தகைய பறித்துண்ணும் ஒரே குற்றம்தான் மனிதனிடத்தில் பொருள், புகழ், ஆதிகாரம், புலனின்ப வேட்கை என எழுச்சி பெற்று, பொய், சூது, களவு, கொலை, கற்பழிப்பு எனும் ஐந்து பெரும் பழிச் செயல்களாக மாறியிருக்கிறது.
இக்குணங்கள் மனிதனிடம் இருக்கும்வரை வாழ்வில் சிக்கலும் துன்பமும் நீடித்து அமைதியே கிட்டாமல் போய்விடும், மனவளக் கலைப் பயிற்சியாலும், அறநெறியாகிய ஒழுக்கம், கடமை, உவகை என்ற மூவகைச் செயல் பயிற்சியாலும் மனிதன் மனத்தூய்மை, வினைத்தூய்மை பெற முடியும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
எந்த அசைவானாலும், செயலானாலும் அதற்குத் தக்க விளைவு பிரதிபலனாகக் கிடைக்கும் என்பதே இறை நீதி. எனவே எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தனக்கும், பிறருக்கும் துன்பமளிக்காத வாழ்க்கை முறையைக் கற்று, அதன்படி அறிவில் விழிப்பு நிலையுடன் வாழ வேண்டும் என்கிறார் இவர்.
பண்டைய தத்துவங்களையும், பயிற்சி முறைகளையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததன் விளைவாகத் தான் கண்டறிந்த தியான முறைகளில் சிறந்த குண்டலினி யோகம், அவயங்களை வருத்தாத உடற்பயிற்சி, மனத்தூய்மை அளிக்கும் தற்சோதனை, உயிர் சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் காயகல்பப் பயிற்சி என இவை நான்கும் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையைக் கண்டறிந்தார். அறிவை உயர்த்தி அறம் வளர்க்கும் தத்துவக் கருத்துக்களையும், பயிற்சி முறைகளையும் கற்றுத்தர மனவளக் கலை மன்றங்களையும், அறிவுத் திருக்கோயில்களையும் பல்வேறு ஊர்களில் உருவாக்கி, மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி ஏற்படுத்தினார்.
மனிதன், குடும்பம், சுற்றம், நாடு, உலகம் ஆனைத்தும் இறைநிலையோடு இணைந்து பேரின்ப வாழ்வு பெற்றிட “வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!” என்ற தாரக மந்திரத்தை இயற்றிப் பல லட்சம் அன்பர்களின் மனதில் அருள் ஓளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட எளிய உடற்பயிற்சி, தியானப் பயிற்சிகள் மனதையும், உடலையும் காக்கும் வல்லமை படைத்தவைகளாக உள்ளன. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் இளைஞர்கள் மத்தியில் நுகர்வு கலாசாரம் அதிகரித்து மன இறுக்கம், விரக்தி, தீய எண்ணங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஆளாகும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது.
இதிலிருந்து இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் மீட்டெடுக்கும் சக்தியாக மகரிஷி அருளிய எளிய யோகா, தியான பயிற்சிகள் உள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீலகிரி மாவட்டத்தில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் அனைவரும் சேர்ந்து பயனடையலாம் என்றார்.
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மன்றம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தியான வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. ஆழியாரில் உள்ள அறிவுத் திருக்கோவிலிலும் வகுப்புக்கள் உண்டு.
ஆண்கள் பெண்களுக்கென தனித் தனி அறைகள், கேண்டீன், பாத்ரூம் வசதி என அனைத்தும் இங்கு உண்டு. மூன்று வேளை உணவு, மற்றும் மூலிகை சாறு என அனைத்தும் கச்சிதமாக இருக்கும்.
நகரத்து பரபரப்புக்களில் இருந்து விடுபட்டு அங்கேயே ஒரு வாரம் பத்து நாட்கள் என தங்கி தியானம் கற்கலாம். திரும்ப வரும்போது புத்துணர்வோடு வருவீர்கள் என்பது உறுதி. மேல் விபரங்களுக்கு http://vethathirimaharishi.com, http://official.vethathiri.edu.in/
==============================================================
மகரிஷியின் அருள்மொழிகளில் சில…
அன்பே சிவம்! சிவனே அன்பு! மெய்ப்பொருளாகிய சிவம் என்பது இயங்கும் போது சக்தியாகிறது. சக்தி தன் இயக்கத்தை நிறுத்தும்போது சிவமாகி விடுகிறது.
எந்தப் பொருளைப் பார்த்தாலும், மெய்ப் பொருளான சிவமாகிய கடவுளையே பார்க்கப் பழகுங்கள். இதனால், நான் என்னும் சிறிய எண்ணம் அற்றுப் போய் விடும்.
அன்பும் சிவமும் இரண்டும் ஒன்றே. சிவமாகிய இறைநிலையை உணர்ந்தால், மனம், அன்பு நிலையில் மலரத் தொடங்கும்.
உலகில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுளின் செயலே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இயற்கை, நீதி, தர்மம் இவற்றுக்கு முரண்படாமல் வாழ முடியும்.
கடமையை உணர்ந்து செயலாற்றினால், சமுதாயத்தில் எல்லா மக்களின் உரிமையும், நலமும் காக்கப்படும்.
கடமையில் சிறந்தவன் கடவுள் நாட்டமுடையவனாக இருப்பான். கடவுளை உணர்ந்தவன் கடமையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.
உள்ளத்தில் கருணை, உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் இவையே நல்லோரின் அடையாளங்கள்.
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். வாழ்வில் உயர்வு அடைவீர்கள்.
கடவுளே எல்லாமுமாக இருக்கிறார். நமக்கும் கடவுளுக்கும் ஒரு சங்கிலிப்பிணைப்பு இருக்கிறது.
வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வில் துன்பமே அதிகமாகும்.
இன்பம் பெற வேண்டுமானால், உணவு, உறக்கம், உழைப்பு, எண்ணம் என ஒவ்வொன்றையும் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிய மொழி பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல் பெற்றிருப்பர்.
பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும் போதும் கொண்டு போவதும் இல்லை. இந்த சமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது.
அறிவாற்றல், உடல் ஆற்றல் இரண்டாலும் முடிந்த செயல்களை, சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை.
வாழ்க வளமுடன் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது, பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது.
பிறருக்கு நன்மையைச் செய்வதும், பயன் பெற்றவர்கள் நிறைவோடு வாழ்த்துவதும் தான் உண்மையான புகழாகும்.
உண்மையில் மனிதனுக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்றால், அது அவன் உள்ளத்தில் எழுகின்ற ஒழுங்கற்ற எண்ணம் தான்.
எண்ணத்தில் உறுதியும், ஒழுக்கமும் ஏற்பட்டு விட்டால், எண்ணிய அனைத்தையும் எண்ணிய படியே பெற்று மகிழலாம்.
மனதை அடக்க நினைத்தால் அலையும். அதையே அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.
உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம் மனதில் தான் இருக்கிறது. தன்னைத் தானே சீர்படுத்திக் கொண்டு விட்டால், இந்த மண்ணிலுள்ள எல்லா இன்பமும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.
வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும் அணுகுமுறை வேண்டும்.
ஆசையை அடியோடு ஒழித்து விடுவது இயலாத காரியம். ஆசையை சீர்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் குறைந்து விடும்.
உன் வாழ்க்கை உன் கையில்!
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
===========================================================
Also check :
தினசரி சில நிமிடம் போதுமே! தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்!!
தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையான விளக்கம்!
===========================================================
[END]
மிகவும் அருமையான பதிவு . வேதாத்திரி மகரிஷியை பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டோம். மிகவும் தெள்ளத் தெளிவாக உள்ளது ஒவொரு வரிகளும்.
அறிவுத் திருக் கோயில் படங்கள் மிக அருமை. பச்சை பசேலென்று ஒவொரு படத்தையும் பார்க்கும் பொழுது உள்ளம் உவகை கொள்கிறது.
‘
மகரிஷியின் தத்துவங்கள் அனைத்தும் சுபெர்ப்
//இனிய மொழி பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல் பெற்றிருப்பர்.
பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும் போதும் கொண்டு போவதும் இல்லை. இந்த சமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது.//
// வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும் அணுகுமுறை வேண்டும்.//
வாழ்வில் ஒரு முறையேனும் அறிவுத் திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இந்த பதிவை படித்த பிறகு ஏற்பட்டுள்ளது. இந்த நகரத்து சத்தத்திலிருந்து நிம்மத்யாக இருக்கலாம்.
வாழ்க வளமுடன்
நன்றி
உமா
பதிவை பார்த்தவுடன் மிகவும் சந்தோசம்.
அருமையான பதிவு.
நானும் 2 தடவை ஆழியார் அறிவுத் திருக்கோவிலுக்கு சென்றுள்ளேன்.
மனதிற்கு மிகவும் அமைதியை தரும் இடம். சுற்றிலும் மலைகளின் நடுவே ரம்மியமாக அமைந்திருக்கும்.திரும்பி வரவே மனம் இருக்காது.
ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றிய பதிவைப் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது………பதிவும் படங்களும் அருமை…………..நன்றிகள் பல………ஆழியார் என் கணவரின் ஊர்……… எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஊர்……….அழகே உருவான அவ்வூரை விட்டு சென்னையில் வாழ்வது சிறிது வருத்தமாக உள்ளது…….
அனைவரும் ஆழியார் வருக…………