(* இந்த பதிவில் அதிகபட்ச புகைப்படங்களை அளித்திருப்பதால் பேஜ் லோட் ஆவதற்கு சற்று நேரம் பிடிக்கும். எனவே இணையம் முழுமையாக லோட் ஆன பிறகு பொறுமையாக பார்க்கவும்.)
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதுவும் சமுத்திரக் கரையில் அனைத்து தெய்வங்களையும் பார்க்கக்கூடிய இந்த வாய்ப்பு அரிதினும் அரியது!
ஒவ்வொரு மாசிமகத்தின் போதும் ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் நீர்நிலைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது வழக்கம். சென்னையில் உள்ள முக்கிய ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் மெரினா கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்தனர். சென்ற ஆண்டு இது குறித்த விசேஷ பதிவை நாம் அளித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்த ஆண்டு, இந்த மாசிமக தீர்த்தவாரி குறித்து திருவள்ளுவர் கோவில் ஆறுமுகம் குருக்கள் நமக்கு சரியான நேரத்தில் நினைவூட்டினார். சென்ற ஆண்டு தீர்த்தவாரி புகைப்படங்களை நாம் பிரத்யேகமாக அளித்திருந்தாலும் நேரில் செல்லவில்லை. ஆனால் இம்முறை இந்த அரிதினும் அரிய வாய்ப்பை நேரில் காணும் பாக்கியத்தை தவறவிட்டுவிடக்கூடாது என்று தீர்த்தவாரி நடைபெற்ற வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையே எழுந்து நீராடி தயாராகி நமது கேமிராவுடன் நேரே மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டோம். நாம் சென்ற போது சரியாக மணி 7.00 AM.
நாம் சென்றபோது ஏற்கனவே இரண்டு ஆலயங்களின் மூர்த்திகள் எழுந்தருளியிருந்தனர். ஒவ்வொரு கோவிலின் உற்சவமூர்த்திகளும் வர மேள தாளம் முழங்க வர ஆரம்பித்தனர். மொத்தம் 26 திருக்கோவில்களில் இருந்து தெய்வங்கள் இந்த உற்சவத்திற்கு எழுந்தருளியதாக தெரிகிறது. நம் தள வாசகர்களுக்காக இந்த அறிய நிகழ்வின் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புராதன கோவில்களில் எழுந்தருளியிருக்கும் பல்வேறு உற்சவ மூர்த்திகளை இதோ ஒருங்கே தரிசியுங்கள்.
தீர்த்தவாரி நடைபெற்ற வெள்ளியன்று யதேச்சையாக கடற்கரைக்கு வாக்கிங் மற்றும் உடற்பயிற்சிக்காக வந்தவர்களுக்கு அடித்தது யோகம். அனைத்து மூர்த்தங்களும் ஒரே இடத்தில் எழுந்தருளியிருப்பதை பார்த்து பக்தி பரவசமடைந்து தத்தங்கள் வீடுகளுக்கு ஃபோன் செய்து குடும்ப உறுப்பினர்களிடம் தங்கள் காணும் காட்சியை பகிர்ந்துகொண்டனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக கடற்கரைக்கு விரையுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று நடைபெறும் இந்த தீர்த்தவாரிக்கு அந்தந்த திருக்கோவில்களிலிருந்து அவரவர் சௌகரியப்படி உற்சவ மூர்த்திகளை இந்த புனித நாளில் கடற்கரைக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி செய்வர். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக சௌகரியங்களை மனதில் கொண்டு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரே நேரத்தில் தீர்த்தவாரி செய்விக்கும்படி அறநிலையத்துறை ஆணை பிறப்பித்ததையடுத்து, அனைத்து தெய்வங்களும் ஒரே நேரத்தில் தீர்த்தவாரி செய்தனர்.
சிலர் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யவேண்டும் என்பதால் கடல் நீரை தலையில் ப்ரோக்ஷனம் செய்து கொண்டனர். சிலர் ஆடை ஈரமாவதை பற்றி கவலைப்படாமல் கடலில் குளிக்கவும் செய்தனர்.
இதற்காக பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகளை சிறப்பாக அலங்கரித்து, கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அசுராயுதம் எனப்படும் இறைவனின் ஆயுதத்துக்கு (சூலாயுதம், வேல், ஸ்ரீ சுதர்சனர் முதலியன ) பால், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், பன்னீர், உள்ளிட்டவற்றால் அபிஷேக ஆராதனைகள் செய்து, தீபாராதனைகள் காட்டி பின்னர் மூன்று முறை கடலில் முக்கி எடுத்து தீர்த்தவாரி செய்வர். இறைவேனே சமுத்திரத்தில் நீராடுவதாக ஐதீகம்.
அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் காணக்கூடிய இந்த அரிய காட்சியை காண, பெருந்திரளான மக்கள் கடற்கரையில் கூடியதால் கடற்கரையே திணறியது.
சில மூர்த்தங்கள் வரும்போது நாம் ஓடிச் சென்று சுவாமியின் பல்லக்கிற்கு தோள் கொடுத்தோம். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி எழுந்தருளியபோது தோள் கொடுத்தது மறக்க முடியாத அனுபவம்.
இந்த ஆண்டு மாசி மகம் தீர்த்தவாரியில் திருவள்ளுவர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் உற்சவரான சந்திரசேகரர், உமா மகேஸ்வரி, கச்சாலீஸ்வரர், காரணீசுவரர், வெள்ளீஸ்வரர், கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், வீரபத்திரர், கங்கையம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், அங்காளம்மன், கேசவப்பெருமாள், மாதவப்பெருமாள், பார்த்தசாரதி உள்ளிட்டக் சைவ, வைணவத் தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. கிட்டத்தட்ட 22 ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் இந்த தீர்த்தவாரியில் பங்கேற்றனர். எல்லா மூர்த்திகளும் தனித்தனி பல்லக்கில் இருந்தவாறு கடலில் இறங்கி பக்தர்களுக்கு தீர்த்தவாரி அளித்தனர்.
கடற்கரையெங்கும் கோவிந்தா கோவிந்தா, ஓம் நம சிவாய, ஓம் நமசிவாய, அரோகரா கோஷங்கள் தான் கேட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தீர்த்தவாரியின் தாத்பரியம் என்ன?
தீர்த்தவாரியின் தாத்பரியத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். மனிதர்களுக்கும் தரை மீது வாழும் விலங்கினங்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கும் இறைவனை சென்று திருக்கோவிலில் தரிசிக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மீன் உள்ளிட்ட கடல் வாழ் & நீர் வாழ் உயிரினங்களுக்கு? இயற்கையின் விதிப்படி அவை நீரை விட்டு வெளியே வரமுடியாது அல்லவா?
இறைவன் படைப்பில் தான் அனைவரும் சமமாயிற்றே. எனவே அவர்களுக்காக மனமிரங்கிய இறைவன், “என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம். உங்களை தேடி உங்கள் இருப்பிடத்திற்கே வருடம் ஒருமுறை – மகத்துவம் மிக்க ஒரு நன்னாளில் – நாமே வருவோம்” என்று வரமருளினார். அந்த நாள் தான் மாசி மகம். இறைவன் வந்து கடலில் இறங்கி கடல்வாழ் உயிரனங்களுக்கு தரிசனம் தரும் அந்த நிகழ்வே “தீர்த்தவாரி” என்றழைக்கப்படுகிறது.
சமுத்திரம் இருக்கும் ஊரில் இறைவனை சமுத்திரத்தில் எழுந்தருளச் செய்வர். சமுத்திரம் இல்லாத ஊரில் அந்த ஊரில் நதி ஏதேனும் இருக்குமானால் நதியில் தீர்த்தவாரி செய்வர். அதுவும் இல்லாவிடில், அந்த ஊரில் உள்ள கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி செய்வர். இந்த நிகழ்வின் மூலம் நீரில் வாழும் உய ரி ரனங்களும் இறைவனை தரிசித்து மகிழ்வதாக ஐதீகம்.
நாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்று கருதுகிறோம். அடுத்த ஆண்டு இறைவன் திருவருளால் நமது வாசகர்களுடன் திரளாக சென்று இந்த அரிதினும் அரிய வைபவத்தை கண்டு தரிசிக்க ஆவல் கொண்டுள்ளோம். அது சமயம் வாசகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து, ஒரே நேரத்தில் அனைத்து தெய்வங்களையும் தரிசிக்கும் இந்த மஹா தரிசனத்தை செய்து அவனருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 14, 2014 – சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரி
FULL GALLERY
[nggallery id=7]
[END]
மிக்க மகிழ்ச்சி சகோதரா
மாசி மகம் நாளை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன்…ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தீர்த்தவாரியை தரிசிக்கும் பேரு எனக்கு கிடைக்கும்…என்னுடைய அலுவலகம் கடற்கரை ஒட்டி இருப்பதால் இந்த ஒரு பேறு ஆனால் இந்த வருடம் மிகப் பெரும் பேறு பெற்றேன் நாடு கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு இந்த அறிய நிகழ்வை அட்டகாசமான புகைப் படங்களுடன் நேரில் கண்டதைப் போல மிக தத்ரூபமாக விளக்கி உள்ளீர்கள் மற்றும் தீர்தவாரியின் தாத்பர்யம் குறித்து உங்களுடைய விளக்கம் படித்து மெய் சிலிர்த்தது…கருட தரிசனம் அற்புதம் …அறிய செய்தி நான் இது வரை அறியாத செய்தி….என்ன தவம் செய்தேனோ உன்னை என் தம்பியாய் அடைய … நன்றி நன்றி தம்பி…. வாழ்க வளமுடன் தம்பி
மிகவும் அருமை.நன்றி.
சுந்தர்ஜி
திங்கள் காலையில் இப்படி ஒரு அருமையான தரிசனத்தை எதிர்பார்க்கவில்லை. மிக்க நன்றி. அருமையான சிலிர்ப்பூட்டும் கண் குளிரும் தரிசனங்கள். படங்கள் அத்தனையும் அருமை. நேரில் பார்த்த உணர்வு. தீர்த்தவாரியின் தாத்பரியம் அறிந்து நெகிழ்ந்தேன். மொத்தத்தில் தித்திக்கும் பதிவு.
சுந்தர் சார்,
ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி பதிவு மிக அருமை மற்றும் புகை படங்களை பார்த்து பரவசம் அடைந்தேன்.
மாசிமக தீர்த்தவாரியை பற்றி கேள்வி பட்டதில்லை. இதுவே முதல் முறை. இன் நன் நாளை முன்பே தெரிய படுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.
நன்றியுடன் அருண்.
டியர் சுந்தர்ஜி
மாசி மக தீர்த்தவாரி பதிவு with photos மிக அருமை.
நன்றி
உமா