Thursday, September 20, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்!

திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்!

print
திருமயிலையில் வள்ளுவப் பெருமான் பிறந்த இடத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆகம விதிப்படி அவருக்கு கோயில் எழுப்பப்பட்டு, பன்னெடுங்காலமாக நித்ய பூஜைகளும் நடந்து வருவது தெரிந்ததே. அது தொடர்பாக ஏற்கனவே நாம் இரு பதிவுகள் அளித்துவிட்டோம்.

இந்த கோவிலில் மூன்று திருக்கல்யாண உற்சவங்கள் மிக மிக விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் வள்ளுவர் வாசுகி திருக்கல்யாண உற்சவம், தை மாதம் சதய நட்சத்திரத்தில் நடைபெறும் ஏகாம்பரேஸ்வரர் – காமாட்சி திருக்கல்யாணம், கந்த சஷ்டியில் நடைபெறக்கூடிய முருகன் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் ஆகியவை தான் அந்த திருக்கல்யாண உற்சவங்கள்.

தமக்கு சிறந்த வாழ்க்கை துணை வேண்டுவோர் மற்றும் திருமண வயதை எட்டியும் உரிய துணை கிடைக்கப்பெறாமல் திருமணம் தடைபடுவோர் ஆகியோர் இந்த உற்சவங்களில் பங்கேற்று ‘மாலை சாற்று’க்கு உபயம் செய்தால் எல்லாம் வல்ல ஏகாம்பரேஸ்வரர் அருளாலும் திருவள்ளுவரின் அருளாலும் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இந்த உற்சவங்களில் பங்கேற்று மாலை சாற்றுக்கு கைங்கரியம் செய்தோர் விரைந்து பலன் பெறுவதாக கூறப்படுகிறது.

ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தன்று முதல் முறை இந்த கோவிலுக்கு நாம் செல்லும்போது கோவிலின் தலைமை அர்ச்சகர் திரு.ஆறுமுகம் குருக்கள் இது பற்றி நம்மிடம் கூறியிருந்தார்.

சரியாக திருக்கல்யாண உற்சவ தினத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நமக்கு நினைவூட்டினார்.

திருவள்ளுவர் ஆண்டு 2044 – (பிப்ரவரி 11, 2013) – தை மாதம் 29 ஆம் தேதி சதய நட்சத்திரத்தன்று கூடிய சுபதினத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோவிலில் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.

அன்று காலை 9.00 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமமும் கலச அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. (என்னால் காலை செல்ல முடியவில்லை. மாலை தான் போகமுடிந்தது.)

மாலை 6.30க்கு அலுவலகம் முடித்தவுடன், மயிலை சென்றுவிட்டோம்.

திருவள்ளுவர் திருக்கோவிலை அடைந்து அங்கு வள்ளுவரை தரிசித்து பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோவிலுக்கு சென்றோம்.

அங்கிருந்து தான் திருமணத்திற்கு பல்வகை சீர் கொண்டு வருவார்கள். நாம் முண்டகக்கண்ணியம்மன் கோவில் சென்றபோது சீர் தயாராக இருந்தது. சற்று நேரத்தில் மேல தாள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து சீர்கள் ஊர்வலம் துவங்கியது.

பெரிய வீட்டு கல்யாணம் என்பதால் சீர்களும் தடபுடலாக இருந்தன. மலர்கள், வாழை, திராட்சை, அன்னாசி, சாத்துக்குடி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், தேன்குழல், பால்கோவா உள்ளிட்ட பட்சணங்கள், பட்டு வேட்டி மற்றும் புடவை, வளையல்கள் உள்ளிட்டவை சீர்களில் அடங்கும்.

மேல தாள் வாத்தியங்களுடன் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருக்கள் வழியே பெண்கள் அவற்றை சுமந்து வர, நாமும் அந்த ஊர்வலத்தில் நடந்து வந்தோம்.

சற்று நேரத்தில் வள்ளுவர் கோவில் வந்தடைய…. அனைத்து சீர்களும் இறக்கி வைக்கப்பட்டன.

பஞ்ச மூர்த்திகள் தயாராக இருந்தார்கள். தனி அம்பாள், ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி, சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஆகியோர் திவ்ய அலங்காரங்களுடன் காட்சி தந்தார்கள்.

அதிலும் மணமக்கள் ஏகாம்பரேஸ்வரருக்கும் அன்னை காமாட்சிக்கும் திவ்ய அலங்காரம்.(இந்த அலங்காரங்கள் அனைத்தும் ஆறுமுகம் குருக்கள் அவர்களின் மகன் திரு.பாலகுமார் அவர்கள் செய்தது ஆகும். இது போன்ற அலங்காரங்கள் செய்வதில் அவர் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். பணிக்கு செல்வதை தவிர, இந்த அலங்கார வேலைகளை மற்ற நேரத்தில் செய்து தருகிறார்).

திருக்கல்யாண உற்சவத்திற்கு உபயம் செய்தவர்கள் பெயர்கள் மற்றும் சாற்று மாலைக்கு உபயம் செய்தவர்களின் பெயர்கள், மற்றும் நட்சத்திரங்கள் கூறி சங்கல்ப்பம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து ஹோமத் தீ வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன.

பின்னர், பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்ய பூஜை நடந்தது. சுவாமி, அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ந்தது. சுவாமி, அம்பாள் 3 முறை மாலை மாற்றி கொண்டனர். சுவாமி, காமாட்சி அம்மனுக்கு பட்டு வஸ்தரம் அணிவிக்கப்பட்டு கெட்டி மேளங்கள், செண்டை மேள, தாளங்கள் ஒலிக்க, வேத, மந்திரங்கள் சொல்ல முதலில் காமாட்சி அம்மனுக்கு தாலி அணிவிக்கப்பட்டது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மணமக்கள் சார்பில் திருமாங்கல்யம், பட்டுத்துணிகள், அர்ச்சனை பை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. உபயம் செய்தவர்களுக்கு ‘சாற்று மாலை’ வழங்கப்பட்டது. (சாற்று மாலை என்பது மணமக்கள் மாற்றிக்கொள்ளும் மாலைகள் ஆகும்.)

மாலைகள் மற்றும் திருக்கல்யாண பிரசாதங்களை பார்த்தவுடன் உபயம் செய்யாதவர்களுக்கும் அவற்றை பெற ஆர்வம் ஏற்பட்டது. இது இயல்பு தானே. “அடடா.. நாம உபயம் செய்யாம விட்டுட்டோமே… எப்படியாவது மாலையும் திருமாங்கல்யமும் வாங்கிவிடவேண்டும்” என்று பலர் கடைசி நேரத்தில் பணம் கொடுத்து பெற முயற்சித்தனர். ஆனால் ஏற்கனவே உபயம் செய்தவர்களுக்கே அனைத்தும் சரியாக இருந்ததால் கூடுதலாக எவருக்கும் கொடுக்க முடியவில்லை.

ஆனாலும் திருமணத்தில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட திருமாங்கல்யங்கள் மட்டும் அனைவருக்கும் தரப்பட்டது. பல சுமங்கலிகள்  பயபக்தியோடு கண்களில் அதை ஒற்றியபடி வாங்கிக்கொண்டனர்.

சாற்று மாலைக்கு முறை செய்தவர்களுக்கு வள்ளுவரின் சன்னதியில் வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. மாலையை அணிந்துகொண்டு கோவிலை மும்முறை வலம் வருமாறும் பின்னர் வீட்டில் வைத்திருந்து ஐந்து நாட்கள் கழித்து சமுத்திரத்தில் வீசிவிடுமாரும் கேட்டுகொள்ளப்பட்டனர்.

நமக்கும் வள்ளுவரின் சன்னதியில் விசேட மாலை அணிவிக்கப்பட்டது. மாலையை அணிந்துகொண்டு மும்முறை வலம் வந்து மணமக்களான ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி முன்பாக வீழ்ந்து நமஸ்கரித்தோம்.

பின்னர் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, சாம்பார் சாதம், உருளைக் கிழங்கு பொரியல் உள்ளிட்டவைகளோடு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் பஞ்ச மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. வள்ளுவர் கோவிலில் இருந்துச் அனைத்து உற்சவங்களும் மேல தாள வாத்தியங்களுடன் திரு வீதி உலா வந்தனர்.

அப்பகுதி மக்கள் அனைவரும் வாசலில் காத்திருந்து திருவீதி உலா வந்த தெய்வங்களை கண்டு வணங்கினர். திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று ஏகாம்பரேஸ்வரர் – காமாட்சி அருளை பெற்றனர்.

இந்த ஆண்டு இது நாம் கலந்துகொள்ளும் இரண்டாவது பெரியவீட்டு கல்யாணம். ஒன்று – நந்தம்பக்கம் கோதண்டராமர் கோவிலில் ரங்கநாதப்பெருமான்-ஆண்டாள் திருக்கல்யாணம் அடுத்தது வள்ளுவர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர்- காமாட்சி திருக்கல்யாணம்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

 

 

9 thoughts on “திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்!

 1. சுந்தர்ஜி எம்பெருமானை தரிசிப்பதே மிகவும் புண்ணியம் !!!
  அதிலும் அவரது திருக்கல்யாண வைபவத்தை நேரில் கண்ட அனுபவத்தை எங்கள் அனைவருக்கும் வழங்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?
  என்ன சொல்லி வாழ்த்துவது?
  எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்றென்றும் துணை இருப்பாராக !!!
  தொடரட்டும் உங்கள் திருப்பணி !!!

 2. திருக்கல்யாணதிற்கு நேரில் பார்த்ததுபோல் உள்ளது. தங்களுக்குள் கேமராமேனை பார்க்கமுடிகிறது ….

  வாழ்த்துக்களுடன்,
  மனோகரன்.

  1. நன்றி மனோகரன்…. ஆனால் இந்த பதிவில் இடம்பெற்றுள்ள இரண்டாவது படம் மட்டுமே நான் எடுத்தவை. மற்ற அனைத்தும் அவர்கள் ஏற்பாடு செய்த ஃபோட்டோகிராபர் எடுத்தவை. எனவே பாராட்டு அவருக்கே உரியது.

   – சுந்தர்

 3. சார், எப்பிடி சார், தாங்கள் வேலையும் செய்து கொண்டு இவ்வளவு அற்புதமாக தினம் தினம் ஒரு தகவல் கொடுக்கின்றீர்கள் ? அம்மன் திருகல்யாண உற்சவம் நேரில் பார்த்த மகிழ்ச்சி தங்களை தவிர யாரால் கொடுக்க முடியும். காட் பிளஸ் யு சார்,

  1. வந்த (பிறந்த) நோக்கம் புரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருந்தவன், செல்ல வேண்டிய சரியான பாதை தெரிந்ததும் செலவிட்ட நேரத்தை ஈடுகட்ட அதில் வேகமாக செல்வதில்லையா? அது போலத் தான் இதுவும்.

   – சுந்தர்

 4. நான் அந்த திருமண வைபவத்தில் பங்குகொண்டேன் அதில் மாற்று மாலை சாற்றுபவர்கள் பெயரில் யாரும் சங்கல்பம் செய்யவில்லை VIP இக்கு மட்டுமே செய்தார்கள்.திருமாங்கல்ய சரடு வழங்க பட்டது மற்றும் தாம்புல பையுடன் சிறந்த பிரசாதமும் ஏற்பாடு செய்யப்பட்டது அருமை மேலும் அலங்காரம் செய்தவருக்கும், குருக்களுக்கும் அதை
  சிறப்பாக வெளிஇட்ட உமக்கும் எமது வணக்கங்கள்.

 5. ஓம் நமசிவய!

  கயிலையே மயிலைஇல் அய்யன் திருவள்ளுவர் திருகோவிலில் அருள் மிகு ஏகாம்பரேஸ்வரர் – காமாட்சி திருக்கல்யாண காட்சி நேரில் காணதவர்கள் இங்கு புகைப்படங்கள் வாயிலாக இன்புற்று களிப்பார்கள்.

  இந்த அறிய செயல் செய்தமைக்கு நன்றிகள் பல.

  வே. வசந்த் குமார்
  மல்லீஸ்வரர் கோயில் தெரு,
  மயிலாப்பூர், சென்னை – 4.

 6. ஏகாம்பரேஸ்வரர் – காமாட்சி தரிசனம் செய்து
  இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் துவங்குகிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *