Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > நாளை மகத்துவம் மிக்க மாசி மகம் – நாம் செய்ய வேண்டியது என்ன?

நாளை மகத்துவம் மிக்க மாசி மகம் – நாம் செய்ய வேண்டியது என்ன?

print
நாளை திங்கட்கிழமை – பிப்ரவரி 25, 2013 – அன்று மாசி மகம். மாசி மகம் என்பது மகத்துவம் மிக்க நாட்களில் ஒன்று. இதன் சிறப்பை ஒரு பதிவில் விளக்குவது என்பது சமுத்திரத்தை உள்ளங்கையில் அடக்குவது போன்று தான். நம் தளத்தில் இந்த மகத்தான நாளை பதிவு செய்வது என்பது அவசியம் என்பதால் இங்கு அளிக்கிறேன்.

மாசி மகம் என்றால் என்ன? அன்று நாம் செய்ய வேண்டியது என்ன? தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் எவை ? அதனால் என்ன பலன்? யார் யார் கட்டாயம் செய்யவேண்டும் ? மாசி மகத்துவத்தின் சிறப்புக்களை  தேடி, தொகுத்து தந்திருக்கிறேன். பயன் பெறுவீர்களாக!

………………………………………………………………………………………………..

சென்னையில் – அனைத்து தெய்வங்களுக்கும் ஒரே இடத்தில் தீர்த்தவாரி!

ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று கடற்கரையில் அந்தந்த கோவில்கள் சார்பாக தீர்த்தவாரி நடைபெறும். ஆனால் இம்முறை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் அனைத்திலிருந்தும் உற்சவமூர்த்திகள் கொண்டுவரப்பட்டு கடற்கரையில் சீரணி அரங்கில் ஒரே இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும் என தெரிகிறது. நேரம் 25/02/2013 காலை 6.30 – 7.30. இடம் : சீரணி அரங்கம் அருகே, கடற்கரை

இந்து அறநிலையத்துறை இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அறநிலையத்துறை ஆணையாளர் மூலம் பிறப்பித்துள்ளது.

கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மயிலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாலயங்கள், திருவேற்காடு வேதபுரீஸ்வரர், மற்றும் பாரிமுனை கச்சாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், திருவொற்றியூர் திருவொற்றீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், அங்காளம்மன், மயிலை மாதவப்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உள்ளிட்ட பல ஆலயங்களில் இருந்து உற்சவமூர்த்திகள் கொண்டுவரப்பட்டு கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளன.

ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களையும் காணக்கூடிய இந்த அரிய நிகழ்வுக்கு நாம் நாளை செல்லவிருக்கிறோம்.

சர்வ ஜனோ சுகினோ பவந்து!!

…………………………………………………………………………………………………..

மாசி மகம் – சிறப்பு கட்டுரை

மாசி மகம் என்றால் என்ன?

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,

இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

மாசி மாதத்தில் என்ன சிறப்பு ?

தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.
மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிட்சமாக இருக்கும்.

உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.

பித்ருக்களை குளிர்விக்க ஏற்ற நாள்

எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்யவேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மஹா ஸ்நானம்” என்கிறது சாஸ்திரம்.

மாசி மாதம் மக நட்சத்திர பவுர்ணமி தினத்தன்று திருண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள், மனித வடிவில் பறந்து வருவர். ஆனால், அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும். இந்த வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களின் பிரச்சினைகள் அடுத்த சில மாதங்களில் (அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.

மாசி மக கிரிவலம் – பன்மடங்கு பலன் தரக்கூடிய ஒன்று!

நீதித்துறையில் இருப்பவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் போன்றோருக்கு நியாயமான பதவி உயர்வுகளையும், சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம், நியாயம், சத்தியம் தவறாது நடப்பவர்களுக்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும், விருதுகளும் பதவிகளும் மாசி மகத்தன்று அண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிட்டும்.

கல்வித்துறையில் இருப்பவர்களுக்கும், மின்அணுத் துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும். பல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமி அன்று தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம். அப்படி ஒரே ஒரு முறை மாசி மகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.

முன்ஜென்ம வினைகள் தீர்க்கும் !

முன் ஜன்ம வினைகள் நீங்கவும், பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம் திருந்தி வாழவும், குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரவும் இந்த மாசி மாத பவுர்ணமி அன்று அண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருக! வருக!! வருக!!! அண்ணாமலைக்கு வருக! அனைத்துவித வளங்களும் பெறுக!!!

மகம் நட்சத்திரம் மற்றும் சிம்ம ராசி அன்பர்கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் !

குறிப்பாக மகம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்கள் அனைவரும் இந்த மாசி மகத்தை – நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்வது அவசியம். அன்றைய தினம் , இறை வழிபாடும், இறை தரிசனமும், அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்கு தேவையான மன வலிமையை தரும்.

மாசி மகத்தின் சிறப்புக்கள் – ஒரு பார்வை!

1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

மாசி மகத்தன்று செய்யவேண்டியது என்ன?

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத் தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். உயர்ந்தவன்- தாழ்ந்தவன், ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அன்றிரவு பௌர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும் பூஜைகள், அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும்.

சதுரகிரி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை ஷேத்ரங்களில் கிரிவலம் செல்வது சாலச் சிறந்தது.

(நன்றி : மாலைமலர், தினமலர், நக்கீரன்)

நீர்நிலைகளில் நீராடும்போது பாதுகாப்பாக நீராடுங்கள். மாசி மகத்தை கொண்டாடுங்கள். நல்வாழ்வு பெற்றிடுங்கள்.

…………………………………………………………………………………………………..

4 thoughts on “நாளை மகத்துவம் மிக்க மாசி மகம் – நாம் செய்ய வேண்டியது என்ன?

  1. Dear Sundar,

    It is one of your beautiful article with powerful information.We are also following this “Masimaham” festival here in Canada Richmond Hill Ganesha Temple.

    Keep writing this type of information to our people.
    Thanks.

  2. மாசி மகம் இவ்வளவு மகிமை வாய்ந்தது என்று இப்பொழுது தான் தெரிகிறது தெஇர்ய படுத்தியமைக்கு மிக்க நன்றி

  3. அரிய செய்திகளை எளிமையாக வழங்கியமைக்கு மிக்க நன்றி !!!
    ஆன்மிகம் அறிவோம் !!!
    இறை அருள் பெறுவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *