Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

print
ன்று ஆடி கிருத்திகை தினமாகும். முருகப்பெருமானை ஏதேனும் ஒரு தொன்மையான ஆலயத்திற்கு சென்று தரிசிப்பது சாலச் சிறந்தது.

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகையும் விழாவும் ஒன்று.

சென்னையில் இருப்பவர்கள் வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், சிறுவாபுரி, ஆண்டார் குப்பம், குமரக்கோட்டம், கந்தகோட்டம், வல்லக்கோட்டை  ஆகிய தலங்களில் முருகனை தரிசிக்கலாம்.

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.

DSC05651 copy

முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக் கிழமையும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னி பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப்படுகிறது.

இப்படி சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் `சரவணபவ’ என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது முருகனே என்பது அருணகிரியார் கூற்று. கார்த்திகை விரதமே கார்த்திகை பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக்கூறுவார்கள்.

சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி போற்றி வளர்த்ததும், குமாரன் வளர்ந்ததும், அவனை சேர்த்து ஒன்றாக்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்’ எனவும் அழைக்கப்படுவான் என்று சொன்னார்.

மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார். இந்த கார்த்திகை விரதம் தான் கிருத்திகை விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கும் பொருந்தும். என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாகக் கருதுகின்றனர்.

உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. ஆடி மாத கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயணம் திருமணம், உபநயனம், கிரகப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

அதனால் தான் தை மாதக் கார்த்திகையை விட ஆடிக்கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம் ஆரவாரம் அலைமோதும் தற்கால வாழ்வில், அடிக்கடி முருகக் கடவுளை தரிசிக்க இயலாவிடினும், ஆண்டுக்கொரு முறை, சுடராகப் பொலியும் தை கிருத்திகை நன்னாளிலாவது முருகன் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து, அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் – சபைகள் சென்று, அவனை அகம் உருகி வழிபட்டு அருளும் பொருளும் பெறுவோமாக!

இன்று நம் தளம் சார்பாக கே.கே.நகர் விநாயகர் கோவிலில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை அன்று குன்றத்தூர் செல்லாமலா? குன்றத்தூர் முருகனையும் தரிசிக்கவிருக்கிறோம்.

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்

தூயா முருகா மாயோன் மருகா – உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!

உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!

மயிலை திருவள்ளுவர் கோவிலில் நடிபெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணக்காட்சி
மயிலை திருவள்ளுவர் கோவிலில் நடிபெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணக்காட்சி

ஆடிக்கிருத்திகை விரதம் இருந்தாலும் இருக்க முடியாவிட்டாலும் கீழ்கண்ட இரு திருப்புகழ் பாடல்களையாவது படிக்கலாம். இவை நிம்மதியையும் சகல செல்வங்களையும் அருளிச் செய்வன என்று கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கூறியிருக்கிறார்.

“அதிருங் கழல் பணிந்து னடியேனுன்
அபயம் புகுவதென்று நினைகாண
இதயந்தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

எதிரங்கொருவரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கிலுமைபாலா
பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலு மர்ந்த பெருமானே”

சரணகமலாலயத்தை அரை நிமிஷ
நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த
தமியன்மிடி யால் மயக்க முறுவேனோ!

கருணைபுரியா திருப்பதென குறையி வேளை செப்பு
கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே!
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமணமார் கடப்ப மணிவோனே

தருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு
தலைமைசிவ ஞானமூத்தி பரகதியு நீ கொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா!

அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க
அரிய தமிழ்தானளித்த மயில்வீரா
அதிசயம் நேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகதிருவேரகத்தின் முருகோனே!

============================================================

 வாரியார் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் அற்புதமான காட்சி
வாரியார் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் அற்புதமான காட்சி

முருகனுக்கு உகந்த நாளான இன்று, 64 ஆம் நாயன்மார் என்று அன்போடு அழைக்கப்படும் திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும், அவரது அமுதமொழிகளையும் பார்ப்போம்.

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன?

ஒரு முறை வாரியார் நாகப்பட்டிணத்துக்கு போயிருந்தபோது, ஒரு சிறுவன் அவர் நெற்றி முழுதும் திருநீறு இருப்பதை கண்டு ஏளனம் செய்தானாம். என்ன இப்படி சுண்ணாம்பு பூசியிருக்கிங்க என்றானாம் அப்போது வாரியார் சுவாமிகள் அந்த சிறுவனிடம் கேட்டாராம், “தம்பி, குடியிருக்கும் வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பாங்களா? இல்லை குட்டி சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பாங்களா?

சிறுவன் மீண்டும் நக்கலாக “இது கூடத் தெரியாதா?? குடியிருக்கும் வீட்டுக்குத்தான் சுண்ணாம்பு அடிப்பார்கள்.”

உடனே வாரியார் சுவாமிகள் சொன்னார், “சரியாக சொன்னய் தம்பி. என்னுள் முருகப் பெருமான் முடிகொண்டுள்ளான்; எனவே நான் வெள்ளை பூசுவது போல திருநீறு பூசியுள்ளேன்; உன்னில் இறைவன் இல்லைபோலும் அதனால் நீ பூசிக்கொள்ளவில்லை.”

தானும் கோபப்படாமல் சிறுவன் மீதும் சினம் கொள்ளாமல் ஒரு பேருண்மையை எத்தனை அழகாக வாரியார் ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா? பெரியோர் என்றும் பெரியோரே!

============================================================

கடவுளை ஏன் வணங்க வேண்டும் ? கடவுளை வணங்காமல் வாழமுடியாதா?

வாரியாரின் அமுதமொழிகள்

* பன்னிருகைகளால் வாரி வழங்கும் வள்ளலாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். வாழ்வு வளம் பெற ஆறுமுகனின் திருவடிகளைப் பணியுங்கள்.

* உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து ஆறுதல் இன்றி அலைகின்றன. அறுபடை வீடுகளைத் தரிசித்தால் வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்கும்.

* தமிழ் தெய்வமான முருகன் கருணை மிக்க ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு அடியார்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறான்.

* வெற்றி வேலை வணங்கியவர்களுக்கு தீவினை அகலும். இதையே, “வேலுண்டு வினையில்லை’ என்னும் பழமொழியாக கூறினார்கள்.

* ஆறுமுகனை தாங்கும் பேறு பெற்றது மயில். முருகனின் திருவடிகளைச் சுமக்கும் மயிலை வணங்குபவர்களுக்கு பயம் நீங்கும்.

* உயிர்களை எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான். ஆனால், முருகனின் அடியார்களைக் கண்டால் அஞ்சுவான்.

* நம் இதயக்குகையில் முருகன் வீற்றிருக்கிறான். அதனால், அவனை “குகன்’ என்று போற்றுவர்.

* முதலும், முடிவும் எனப்படும் ஆதி அந்தமில்லாதவன் முருகன். அவனுடைய திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு இப்பிறவியில் நல்வாழ்வும், இனி பிறவாத முக்தி இன்பமும் உண்டாகும்.

* கடவுள் வணக்கம் தேவையா? கடவுளை வணங்காமல் வாழமுடியாதா? என்றெல்லாம் சிந்திக்கிறோம். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான். ஆடையில்லாமல் வாழ முடியாதா என்ன! அதுபோல, மனம் உள்ளவன் கடவுளை வணங்குவான்.

* புகழை விரும்பாத நல்லவர்களின் பெயரை, கடவுளே மூன்று உலகத்திலும் விளம்பரப்படுத்தி விடுவார்.

* வயது தளர்ந்த பெரியவர்கள் படும் துன்பத்தை சிந்தித்துப் பார்த்து உதவ முயல வேண்டும்.

* படிப்பினால் உண்டாகும் அறிவை விட அனுபவத்தால் உண்டாகும் அறிவே மேலானது.

* பணம் சேரச் சேர சாப்பாடு குறையும். பக்தி, ஒழுக்கம், தூக்கம் இவையும் கூட குறைந்து போகும்.

* நாம் இதுவரை முன்னேறாமல் இருக்க, நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே காரணம்.

============================================================

[END]

10 thoughts on “சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

  1. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    தாக்க தாக்க தடையற தாக்க
    பார்க்க பார்க்க பாவம் பொடிபட

  2. வேலுண்டு வினை இல்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைஇல்லை
    கந்தனுண்டு கவலை இல்லை மனமே.

  3. ஆடி கிருத்திகையில் கந்தனை பற்றிய பதிவு அருமை. வாரியார் சுவாமிகள் பொன்மொழிகள் நன்றாக உள்ளத

    //தானும் கோபப்படாமல் சிறுவன் மீதும் சினம் கொள்ளாமல் ஒரு பேருண்மையை எத்தனை அழகாக வாரியார் ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா? பெரியோர் என்றும் பெரியோரே!//

    உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை ஒருவரையான் பின் செல்லேன் – பன்னிரு கைக்
    கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா செந்தி வாழ்வே

    நன்றி
    உமா வெங்கட்

  4. ஆடிக்கிருத்திகை சிறப்புப் பதிவு அருமை. பெரியோர் என்றும் பெரியோரே, எந்த சூழ்நிலையிலும் தம் நிலையில் இருந்து விலக மாட்டார்கள் எனப் புரிந்தது. வாரியார் சுவாமிகளைப்பற்றியும் ஆடிக்கிருத்திகையின் சிறப்பினைக் குறித்தும் தெரியத் தந்தமைக்கு நன்றிகள்.

  5. PuDear sir,I am a teacher from karambakkudi,Pudukkottai dist.here one very very old and damaged sivan temple is there.we and our right mantra group must do ulavara pain urgently. Please give your number to call or my number 9659094220

  6. வாரியார் வாழ்வில் ……

    எல்லாக் கஷ்டத்தையும் , மனுஷங்க மேல இறக்கி வைக்க முடியாது. அது நம்ம குடும்பமா இருந்தாலும் சரி , இல்லை நெருங்கிய நண்பர்களா இருந்தாலும் சரி. ஆனா, ஒருத்தர் மேல நீங்க தைரியமா இறக்கி வைக்கலாம் . அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு.
    உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் மகாத்மா காந்தி.

    திருமுருக கிருபானந்த வாரியார் , இறைவன் தனக்கு உதவியதை நிரூபித்து உலகுக்கே எடுத்து சொன்னவர்.

    வாரியார் சுவாமிகளின் சிறு வயதில் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

    வாரியார் சுவாமிகள், ” ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் ” என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார். புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

    இது உண்மையில் நடந்த சம்பவம். ஒரு அளவுக்குத் தான் நமக்கு வர்ற கஷ்டங்களை சமாளிக்க முடியும் கையை மீறி விஷயங்கள் நடக்கும்போது , ஆண்டவான்னு அவரை சரணடைபவர்களை , அவர் கை விடுவதில்லை . நம் ஒவ்வொருவருக்குமே இதைப் போன்ற அனுபவங்கள் அடிக்கடி நிகழும் . ஆனால் பிரச்னை முடிந்தவுடனே , நாம் அவனது கருணையை நினைத்துக்கூட பார்ப்பதில்லை – திரும்ப ஒரு பூதாகரமான பிரச்னை வரும்வரை…!

    1. //”ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால், இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் ” என்று யோசிக்கலானார். //

      துன்பத்திலும் இறைவனின் கருணையை எண்ணி வியக்கிறார் பாருங்கள்…அது தான் ஞானிகளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *