இராம புத்திரர்களான லவ குசர்கள் பூஜித்த கோவில் இது. இந்த ஆலயத்தை பற்றிய விரிவான பதிவுக்கு http://rightmantra.com/?p=10169.
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இந்த கோவிலில் நமது உழவாரப்பணி நடைபெற்றது. நமக்கு மிகவும் திருப்தியையும் ஆத்ம சந்தோஷத்தையும் தந்த உழவாரப்பணி இது.
முதல் முறை மார்ச் மாதம் இந்த கோவிலுக்கு சென்ற போதே இங்கு நிச்சயம் உழவாரப்பணி செய்ய செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டோம். கோவில் அலுவலகத்தில் பேசி அனுமதியும் பெற்றோம். பிறகு சுவாமி சன்னதிக்கு சென்று, அங்கு பணியில் இருந்த சசிக்குமார் குருக்களிடம் நாம் உழவாரப்பணிக்கு அனுமதி பெற்றிருப்பது பற்றி கூறி, கோவிலின் தேவைகள் மற்றும் நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்து விவாதித்தபோது, பிரம்மோற்சவம் விரைவில் துவங்கவிருப்பதாகவும் யாகசாலைக்கு ட்யூப் லைட் பிட்டிங்குகளுடன் சுமார் எட்டு, மற்றும் கோவிலில் பல்வேறு இடங்களில் மாட்ட சீலிங் ஃபேன்கள் நான்கு தேவைப்படுவதாகவும் கூறினார்.
“அத்தனையும் முடியுமா என்று தெரியாது. நாங்கள் மிகவும் சாதாரண ஒரு க்ரூப் தான். ஒரு சில வாசகர்கள் இந்த பணிகளில் தோள் கொடுக்கிறார்கள். அவ்வளவு தான். எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம். ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதிக்கவேண்டும்!” என்றோம்.
“சரி” என்றார். அதுவே நமக்கு பெருமகிழ்ச்சி.
நாம் ஏற்கனவே சொன்னது போல, நல்லதை நினைத்தால் போதும். இறைவன் நம்மையும் தகுந்தவர்களையும் கருவியாக்கி பணிகளை நிறைவேற்றிக்கொள்வான்.
அந்த நேரம் நமது பணிகளில் எப்போதும் உதவும் வாசகர் ஒருவர் இந்த உபகரணங்கள் வாங்குவதற்கான தொகையில் பெருமளவு கொடுத்து உதவியமையால், கோவில் தரப்பில் கேட்டபடியே அனைத்தும் வாங்க முடிந்தது.
உழவாரப்பணிக்கு முந்தைய தினம் தான் அனைத்தும் வாங்க முடிந்தது. ‘சுமை கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்’ என்பது சென்னையை பொருத்தவரை மிகவும் சரி. மேற்கண்ட உபகரணங்களை வாங்கி அவற்றை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் இறக்கியதும் தான் நிம்மதியாக இருந்தது. இது சிவாலய உழவாரப்பணிக்கு என்றதும் ஆடோக்காரர் தன் பங்கிற்கு பேசிய தொகையில் ஐம்பது ரூபாய் குறைத்துக்கொண்டார். இப்படியும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வீட்டில் சாமான்களை இறக்கியதும் மறுபடியும் போரூர் மார்கெட் சென்றோம். நேரம் அப்போது 9.00 PM. நாம் வழக்கமாக நாம் கோவில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் அனைவருக்கும் வழங்கும் வேட்டி, சட்டை, புடவை, ரவிக்கை, ஸ்வீட், சால்வை என எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வரவே மணி பத்தரை ஆகிவிட்டது.
எதற்கு இதையெல்லாம் இங்கே சொல்கிறோம் என்றால், நமது உழவாரப்பணிக்கு பின்னால் உள்ள BACKGROUND WORKS சிலருக்கு தெரிவதில்லை. மேலும் உழவாரப்பணிக்கு முந்தைய தினம் தான் அனைத்து வேலைகளையும் பார்க்கமுடிகிறது. சனிக்கிழமை மாலையை தியாகம் செய்யக்கூடிய அன்பர்கள் நம்முடன் வந்திருந்து பணிக்கு தேவையான பொருட்களை வாங்க கூடமாட உதவினால் மிகவும் நன்றாக இருக்கும். சில சமயம் நாம் பணி செய்ய செல்லும் கோவில்களுக்கு எண்ணை டின் வாங்கவேண்டியிருக்கும். அப்போதெல்லாம் மிகவும்கஷ்டமாக இருக்கும். (எண்ணை டின்னை பைக்கில் எடுத்து வருவது சிரமம்.) சில சமயம் நண்பர் குட்டி சந்திரனும் பிரேம்கண்ணனும் வருவார்கள். அவர்களால் எல்லா நேரங்களிலும் வர முடிவதில்லை. அது போன்ற நேரங்களில் நமது நிலை கொஞ்சம் திண்டாட்டம். உழவாரப்பணியை பொறுத்தவரை எவ்வளவு பணியை செய்யத் நாம் தயாராக இருந்தாலும் நேரம் என்னவோ குறைவாகவே இருக்கிறது.
(“சரி…சரி… விஷயத்துக்கு வாங்க சாரே” என்று சிலர் முனுமுனுப்பது கேட்கிறது. என்னங்க செய்றது? இதுக்கெல்லாம் தனியாக பதிவு போட்டா நம் கஷ்டங்களை சொல்ல முடியும்?)
மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து தயாராகி ஒரு கால்டாக்சியை அமர்த்தி அனைத்து பொருட்களையும் ஏற்றிக்கொண்டு கோயம்பேடு சென்றுவிட்டோம். கோயம்பேட்டுக்கு நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளதால் வேன் ஏற்பாடு செய்யவில்லை.
கோவிலுக்கு நாம் சற்று முன்னரே சென்றுவிட, பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் வைபவத்தில் கலந்துகொள்ளும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மேலும், பந்தக்காலை தொட்டு நமஸ்கரிக்கும் வாய்ப்பும், அபிஷேகப் பால் ஊற்றும் பொன்னான வாய்ப்பும் நமக்கும் அந்நேரம் அங்கிருந்த நம் வாசகர்கள் சிலருக்கும் கிடைத்தது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
உழவாரப்பணியை பொருத்தவரை காலை உணவை நாம் தான் வீட்டில் பெற்றோர் மூலம் தயார் செய்து கொண்டு வருவோம். பெரும்பாலும் வெண்பொங்கல், சாம்பார் அல்லது கொத்சு அல்லது அரிசி உப்புமா, கிச்சடி இப்படி ஏதாவது ஒன்றை தயார் செய்து கொண்டு வருவோம். ஆனால் குறுங்காலீஸ்வர் கோவில் பணியை பொருத்தவரை காலை சிற்றுண்டியை நண்பர் குட்டி சந்திரனே தான் பணிபுரியும் ஓட்டலில் இருந்தே ஒரு மிகப் பெரிய கேரியரில் கொண்டு வந்துவிட்டார்.
அனைவரும் சுமார் 8 மணியளவில் வந்து சேர்ந்தவுடன் சுவாமியை தரிசித்துவிட்டு கோவிலில் உள்ள அன்னதானக்கூடத்திலேயே சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தோம். ஆனால் அதற்கு முன்பு கோ சாலைக்கு சென்று ரிஷபத்துக்கும் பசுவுக்கும் சாப்பிட கொடுத்துவிட்டு பின்னர் தான் நாங்கள் சாப்பிட்டோம்.
திகட்ட திகட்ட நெய் பொங்கல், நாலுவகை சட்னி சாம்பார் என நாங்கள் சாப்பிட்டது போக மீதி நிறைய இருந்தது. அப்படியே கோவில் வாசலில் உள்ள மண்டபத்துக்கு எடுத்துச் சென்று அங்கு அமர்ந்துள்ள யாசகம் பெறுவோரிடமும் முதியவர்களிடமும் கொடுத்து கொடுத்துவிடலாம் என்று நண்பர் மனோகரன் யோசனை கூற, அதன்படியே அங்கு கொண்டு சென்றவுடன் அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலியாகிவிட்டது.
அனைவரும் வந்து சேர்ந்தவுடன் சுமார் 8.30 க்கு பணி துவங்கியது. முதலில் கோவில் முழுதும் ஒட்டடை அடிக்கப்பட்டது. பின்னர் பிரகாரம் முழுக்க பெருக்கி சுத்தம் செய்து நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது.
தூண்களில், தூண் இடுக்குகளில் அப்பிக்கொண்டிருந்த விபூதி, குங்குமம் ஆகியவை பிரஷ் வைத்து துடைக்கப்பட்டது.
நவக்கிரகங்கள் சன்னதி, தாயார் சன்னதி, சுவாமி சன்னதி என தலா இருவருக்கு பிரித்து விடப்பட்டது. மகளிர் குழுவினர் ஒரு சிலர் தாமதமாக (வழக்கம் போல!) வந்தாலும் சிறப்பான பணிகளை செய்து முடித்தனர்.
கோ-சாலையை சுத்தம் செய்யும் பணியை நாம் பார்த்துக்கொண்டோம். நம்முடன் வாசகி சசிகலா தனது மகளுடன் சேர்ந்து கோ-சாலையை சுத்தம் செய்தார். அவர்கள் சற்று புதியவர்கள் என்பதால், சாணத்தை எல்லாம் முறத்தில் அள்ளிப்போட்டு நாம் ஆரம்பித்து வைக்க அதற்கு பிறகு குட்டிசந்திரன், முகுந்தன் ஆகியோர் கோ-சாலையை சுத்தம் செய்வதில் சேர்ந்துகொண்டனர்.
கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். மனித உடலில் கூடத் தோஷம் இருக்கிறது. ஆனால் தோஷமே இல்லாத புனித உயிர் பசு. பார்வைக்கு மிருக உடலாக இருந்தாலும் தன் உள்ளே தேவதைகள் வாசம் செய்கின்றன. பசுக்களுக்கு செய்யும் தொண்டு வீண் போகாது. பல மடங்காக அது நன்மைகளை வீட்டுக்கும் நாட்டுக்கும் கொடுக்கும், பொருளாதார நிலை உயரும், வீட்டில் லட்சுமிகரம் பெருகும்.
இங்கே நாங்கள் கோ-சாலையை முழுக்க, சாணத்தை அள்ளிப்போட்டு, நீர் விட்டு அலம்பி சுத்தம் செய்வதை அங்கிருக்கும் ரிஷபம் அமைதியாக பார்த்துகொண்டிருந்தது. பார்க்க சற்று பயமாக்க இருந்தாலும் பரமசாது அது. ஆலயத்தில் உள்ள பசு ஈன்ற குட்டியாம் இது.
கோ-சாலையை சுத்தம் செய்து முடித்ததும் பிரகாரங்களில் நீண்ட நாட்களாக இருந்த குப்பைகள் மொத்தமும் அள்ளி, வெளியே கொண்டுபோய் போடப்பட்டது.
பழைய உடைந்த விளக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. தீபபேற்றும் மெட்டல் மேடை சுரண்டி சுத்தம் செய்யப்பட்டு பின்னர் நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது.
மகளிர் குழுவின் ஒரு பகுதியினர் சன்னதிகளின் முன்பு இருந்த எண்ணை பிசுக்கை சுரண்டி எடுத்து சுத்தம் செய்தனர்.
வெளியே காலபைரவர் சன்னதி இருக்கும் ராமாயணக் காட்சி மண்டபத்தை நண்பர் மனோகரனும், சந்திரசேகரனும் அவர்களின் மகனும் பார்த்துக்கொண்டிருந்தனர். மண்டபத்தில் உள்ள குப்பைகள் முழுக்க பெருக்கி சுத்தம் செய்யப்பட்டது.
பிறகு தான் மிகப் பெரிய பணி வந்தது.
யாகசாலை பொருட்கள், மற்றும் உர்ச்சவர்களை சுமக்கும் மர பலக்குகள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றார் சசிக்குமார் குருக்கள். உள்ளே சென்று பார்த்தால் தலைசுற்றியது. எப்படியும் ஒரு 30 நபர்கள் இருந்தால் தான் வேலையை முடிக்கமுடியும் என்று தோன்றியது. மேலும் பணி ஆரம்பித்து இரண்டு மணிநேரத்துக்கும் மேல் ஆகிவிட்டபடியால் நண்பர்கள் அனைவரும் களைத்துப் போயிருந்தனர். சசிக்குமார் குருக்கள் கோவிலுக்கு அது சமயம் வந்த சிலரை உதவிக்கு கூப்பிட்டார்.
அனைவரும் சேர்ந்து சசிக்குமார் குருக்கள் வழிகாட்ட, யாகசாலை மண்டபத்தை சுத்தம் செய்தோம். இராவணனன் கையிலையே தூக்கினான் என்பார்கள். நாங்கள் எல்லாம் சேர்ந்து அவனை தூக்கிவிட்டோம்.
உழவாரப்பணியை பொருத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு வேலை அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்.
கோவில்களை பொருத்தவரை நாம் எத்தனையோ தொண்டுகள் செய்ய விரும்பினாலும், நம்மிடம் உரிய தேவைகளை சொல்லி அவற்றை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்பவர்கள் மிகவும் குறைவு. அதே போல, பணி செய்யும்போதும் அருகில் இருந்து நம்மை வேலை வாங்குபவர்களும் குறைவு. ஆனால் சசிக்குமார் குருக்கள், மிக அழகாக நமது குழுவினரிடம் வேலை வாங்கி, நமது தொண்டு சிறக்க மிகவும் உதவியாக இருந்தார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. அவர் இல்லையேல், நமது உழவாரப்பணி அன்று சிறப்பு பெற்றிருக்காது.
அதே போல, பணி முடியும் வரை கோவிலேயே இருந்து, இறுதியில் நம் குழுவினர் அனைவருக்கும் இறைவனின் பிரசாதமாக மாலைகளை சூட்டி ஆசீர்வதித்தார். கையோடு விபூதி பிரசாதமும் அனைவருக்கும் தந்தார். அவரவர் கோரிக்கைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு அனைத்தும் நிறைவேற ஆசீர்வதித்தார். இதை மிகப் பெரிய பாக்கியமாக நமது குழுவினர் கருதுகிறார்கள்.
தொடர்ந்து மூன்று முறை தவறாது நம் உழவாரப்பணியில் பங்கேற்றவர்களுக்கு நம் தளம் சார்பாக திரு.சசிக்குமார் குருக்கள் மற்றும் நம் வாசகர்கள் மூலம் சால்வை அணிவித்து பின்னர் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
திரு.சசிக்குமார் குருக்கள் அவர்களின் சேவையை பாராட்டி அவருக்கு நம் தளம் சார்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
கோவில் ஊழியர்கள் மற்றும் கீழ்நிலை பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சேவையையும் அதன் மேன்மையையும் அனைவர் மத்தியிலும் எடுத்துக்கூறி சால்வை வேட்டி மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
உதாரணத்துக்கு, இங்கே இருக்கும் ராஜூ என்பவர் காலங்காலமாக அவரது தந்தை மற்றும் பாட்டனார் காலம் முதல் இவர் குடும்பத்தினர் தான் டமாரம் வாசித்து வருகிறார்கள். அபிஷேகம் மற்றும் உற்சவங்களின்போது இந்த டாமரத்தை அடிப்பார்கள். இவர்களுக்கெல்லாம் வருமானம் ஒன்றும் பெரிதாக கிடையாது. நம்மைப்போன்றவர்கள் உற்சவம் மற்றும் திருவிழாக்களின்போது ஏதாவது கொடுப்பது தான்.
நாங்கள் வாங்கிச் சென்ற வேட்டி சட்டைகள் சேலை எல்லாம் தீர்ந்ததால் சிலருக்கு கையில் ரொக்கமாக பணம் தரப்பட்டது. அதுசமயம் பொதுமக்களுக்கு வழக்கமாக தினமும் 12.00 மணியளவில் நடைபெறும் அன்னதானம் நடந்து அது நிறைவு பெற்றவுடன் அதற்கு வந்திருந்த சில மூதாட்டிகள் நாங்கள் இங்கு மண்டபத்தில் கும்பலாக இருப்பதை பார்த்து நம்மிடம் வந்தார்கள்.
மூதாட்டிகள் உருவில்….?
அனைத்தையும் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏதேனும் தரமாட்டோமோ என்று அவர்கள் ஏங்கிக் காத்திருந்தது நமக்கு தெரியும். பொதுவாக இது போன்ற கோவில் அன்னதானத்துக்கு வருபவர்கள் அனைவரும் ஏழை பாழைகள் தான். அனைத்தையும் முடித்துவிட்டு அவர்கள் அருகில் சென்றோம். “பாட்டி, வாங்கி வந்தது எல்லாம் இங்கே இவங்களுக்கு கொடுத்துட்டோம். இப்போ எதுவும் இல்லே. வேணும்னா இந்த பணத்தை வெச்சிக்கோங்க. வேண்டியதை வாங்கிகோங்க” என்று கூறி மூவருக்கும் கையில் கொஞ்சம் ரொக்கத்தை அளித்தோம். அவர்களுக்கு தான் எத்தனை சந்தோஷம். அதை பார்த்தபோது கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சந்தோஷதை அன்று மற்றொரு முறை உணர்ந்துகொண்டோம்.
பெயரைக் கேட்டபோது அவர்களும் சாரதா, லோகநாயகி, கமலா என்றனர். ஓஹோ… வந்தவர்கள் மூதாட்டிகள் அல்ல. முப்பெரும்தேவியர் போல… (சரஸ்வதி தேவிக்கு சாரதா என்ற பெயர் உண்டு. செந்தாமரையில் வீற்றிருப்பதால் லக்ஷ்மிக்கு கமலா என்ற பெயர் உண்டு. லோகநாயகி என்பது நம் அன்னையின் பெயர்!). கருவறையில் காணவேண்டிய எங்கள் அன்னையரை நாம் இங்கேயே பார்த்துவிட்டோம். பிறகென்ன… அவர்களிடம் நமது கோரிக்கை ஒன்றை சொல்லி ஆசிபெற்றோம். “ஒரு குறையும் இல்லாம மகராசனா இருப்பா” என்று நம்மை ஆசீர்வதித்தார்கள்.
அடுத்து மதிய உணவு. கோவில் சார்பாக மடப்பள்ளியிலேயே எங்களுக்கும் சமைத்திருந்தார்கள். வடை, பாயசம், அப்பளத்துடன் கூடிய அறுசுவை உணவு. இதை சாப்பாடு என்று சொல்வதை விட கோவில் பிரசாதம் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்படி ஒரு சுவை. ஒவ்வொரு பதார்த்தமும் சுவையில் ஒன்றையொன்று விஞ்சி நின்றன. (அது பற்றி நம்முடன் பணிக்கு வந்திருந்த வாசகர்கள் எவெரேனும் இங்கு தெரிவித்தால் நன்று!) ஏற்கனவே பணி செய்த களைப்பால் சரியான பசியில் அனைவரும் இருந்தபடியால் திருப்தியாக சாப்பிட்டனர். காலை வேறு 8.30 அளவில் தான் டிபன் சாபிட்டபடியால் ‘பசியேயில்லை’ ‘பசியில்லை’ என்று சொன்னவர்கள் எல்லாம் வெட்டு வெட்டு என்று வெட்டிவிட்டனர். கைக்கும் வாய்க்கும் சண்டை தான் போங்கள். வயிறும் மனமும் நிறைந்தது போன்றதொரு உண(ர்)வு.
அனைத்தும் முடிந்து விடைபெற்றோம்.
ஆனாலும் அன்றைய உழவாரப்பணி நிறைவு பெறவில்லை.
ஏன் தெரியுமா?
நாங்கள் உழவாரப்பணி செய்யும்போது இங்கே அகல் விளக்குகளை சுத்தம் செய்து திரி போடும் பணியில் முருகன் என்பவர் ஈடுபட்டிருந்தார். இவர் கோவில் ஊழியர் அல்ல. மதுரையிலிருந்து வாழ வழியின்றி இங்கு வந்தவர். இந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தவரை கூப்பிட்டு இந்த வேலையை கொடுத்து சாப்பாடும் போட்டு வருகிறார்கள். விளக்குகளுக்கு எண்ணை போட்டு, திரி வெட்டித் தரும் பணி இவருடையது. அவருடைய சட்டை கிழிந்துபோயிருந்ததை அப்போது தான் கவனித்தோம். பகீரென்றது. இறுதியில் அனைவருக்கும் மரியாதை செய்யும்போது இவரை அழைத்து ஒரு சட்டை கொடுக்கலாம் என்று பார்த்தால் மனிதர் அந்நேரம் எங்கோ போய்விட்டார். மனதுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. உண்மையிலேயே சட்டை தேவையானா ஒருவரை விட்டுவிட்டோமே என்று மனது அரித்தது.
அந்த உறுத்தல் நம்மை வேறு வேலை செய்யவிடவில்லை. அன்று மாலையே கடைக்கு சென்று ஒரு சட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் கோயம்பேடு சென்றோம். முருகன் கோவிலில் இருக்கவேண்டுமே… அது வேறு கவலையாக இருந்தது. நல்லவேளை. முருகன் இருந்தார். அவரை பார்த்தவுடன் தான் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு காலையே அனைவருக்கும் மரியாதை செய்யும்போது நாம் செய்ய நினைத்ததை குறிப்பிட்டு அவர் இல்லாதாதால் செய்யமுடியவில்லை மன்னிக்கவேண்டும் என்று கூறி அவருக்கு சட்டயை பரிசளித்தோம். நாம் முருகனுக்கு சட்டை கொண்டு வந்து கொடுத்ததை பார்த்த ஒருவர், “சார்… நான் கூட காலையில வரும்போது பார்த்தேன். கிழிஞ்சுப் போன சட்டையை போட்டிருந்தான். நான் தான் வீட்டுக்கு போய் என்னோட டி.ஷர்ட் ஒன்னை கொண்டு வந்து கொடுத்தேன்!” என்றார்.
டமாரம் அடிக்கும் திரு.ராஜூ அவர்களின் கைகளால் அதிகார நந்திகேஸ்வரருக்கு முன்பாக அந்த சட்டையை முருகனுக்கு கொடுத்தோம். முருகன் அதை சந்தோஷமாக பெற்றுக்கொண்டவுடன் தான் நமக்கு நிம்மதியாக இருந்தது.
அப்போது தான் உழவாரப்பணி நிறைவுபெற்ற திருப்தி நமக்கு ஏற்பட்டது.
================================================================
அட என்ன அதுக்குள்ளே கொட்டாவி விட்டுடீங்க…?
ஒரு முக்கிய சம்பவத்தை பற்றி உங்களிடம் குறிப்பிடவேண்டும்.
வள்ளி என்றொரு சிவத்தொண்டர்!
ஒவ்வொரு முறையும் நாம் உழவாரப்பணி செய்யும் ஆலயத்தை இறுதி செய்தவுடன், அந்த ஆலயத்திற்கு நாமே நேரில் சென்று செய்ய வேண்டிய வேலைகள், தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றை குறித்துக்கொண்டு, ஆலய நிர்வாகத்திடமும் அர்ச்சகர்களிடமும் பேசி அவர்களுக்கு தேவையான பொருட்களை கேட்டறிந்து, பின்னர் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் குறித்தும் விபரங்களை கேட்டுவருவோம். ஏனெனில், அதற்கு ஏற்றார்போல வேட்டி, சட்டை மற்றும் சேலை ஆகியவற்றை வாங்குவதற்கு.
அப்படி ஒரு நாள் உழவாரப்பணிக்கு முன்பு நாம் அங்கு சென்றபோது, சசிக்குமார் குருக்கள் மற்றும் ஆலய அலுவலக ஊழியர்கள் என அனைவரிடமும் பேசி, அவர்களுக்கு தேவையானதை குறித்துக்கொண்டு, “ஆலயத்தில் துப்புரவு பணி செய்வது யார்?” என்று விசாரித்தோம். வள்ளி என்ற பெண் ஒருவர் அதற்கு இருப்பதாக சொன்னார்கள். வள்ளியை தேடி ஆலயத்தை வலம் வந்தபோது, பிரகாரத்தில் ஒரு ஓரமாக அவர் பெருக்கிகொண்டிருந்ததை கவனித்தோம்.
நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரிடம் பேச்சுகொடுத்தோம். பேச்சுகொடுத்ததில், தென்மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த கோவிலில் தான் பணிபுரிகிறார் என்பதும் அவருடைய கணவர் ஒரு லாரி ஓட்டுனர் என்பதும் விபத்தில் சிக்கி அவர் பலியாகிவிட்டார் என்றும் அது முதல் அனாதையாகிவிட்ட தாம் இந்த கோவிலை எப்படி எப்படியோ நாடி வந்து தற்போது இங்கு துப்புரவு வேலை செய்து வருவதாகவும் சொன்னார்.
பதில் சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு தனது பணியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். பணியில் அவர் கொண்டிருந்த சின்சியாரிட்டியை கொஞ்ச நேரம் அவரை கவனித்தபோதே கண்டுகொண்டோம். நான்கு பேர் நம்மை கண்காணிக்கும்போது நாம் எப்படி வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல. கண்காணிக்க எவரும் இல்லாதபோது எப்படி செய்கிறோம் என்பது தான் முக்கியம். வள்ளியை பொருத்தவரை அபாரமான அலட்டிக்கொள்ளாத உழைப்பாளி அவர் என்பது பார்த்தபோதே புரிந்தது. ஒல்லியான உடம்பு தான். ஆனால் மிகப் பெரும் பணிகளை கூட அனாயசமாக செய்கிறார். நிச்சயம் நாம் இவரை உழவாரப்பணியின் போது கௌரவிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். எனவே வள்ளி அவர்களுக்கு ஒரு புடவை, ரவிக்கை பிட் மற்றும் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக்கொண்டோம்.
உழவாரப்பணி நடைபெற்ற தினத்தன்று நாங்கள் ஒரு பக்கம் கோவிலை சுத்தம் செய்துகொண்டிருந்தோம். வள்ளி அவர் பாட்டுக்கு தான் வழக்கமாக செய்யும் பணிகளை சுணக்கமின்றி செய்துகொண்டிருந்தார். நாங்கள் வந்து பணி செய்கிறோம் என்பதற்காக அவர் ஒய்வெடுக்கவில்லை.
இறுதியில் அனைவரையும் கௌரவிக்கும்போது, வள்ளியையும் அழைத்து நம் வாசகியர் மூலம் அவருக்கு புடவை மற்றும் ப்ளவுஸ் பிட், இனிப்பு, கொஞ்சம் ரொக்கம் ஆகியவை கொடுத்தோம். வள்ளியின் பணியின் மேன்மையையும் எடுத்துக்கூறி பலத்த கைதட்டல்களுக்கு இடையே அவருக்கு வெகுமதிகளை கொடுத்தோம். வள்ளி அமைதியாக பெற்றுச் சென்றார்.
பொதுமக்களுக்கு அன்னதானம் முடிந்தவுடன், எங்கள் குழுவினருக்கு ஆலயம் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. வழக்கம்போல சாப்பிட்ட பின்பு இலையை எடுக்க எவரையும் நாம் அனுமதிக்காமல் நாமே அனைத்து இலைகளையும் எடுத்தோம்.
கை கழுவ குழாயடி சென்றபோது, வள்ளி நம்மை நோக்கி வந்தார்.
“என்னம்மா?” என்பது போல பார்த்தோம்.
“ஏன் சார் ஃபோட்டோ எடுத்தீங்க? ஃபோட்டோவுல எல்லாம் நான் நின்னதில்லை….” என்றார்.
நமக்கு தூக்கிவாரிப்போட்டது. ஃபோட்டோ எடுத்ததில் அவருக்கு விருப்பம் இல்லை போல. நமக்கு அது தெரியாதல்லவா?
வள்ளிக்கு விளக்கினோம்… “என்னை மன்னிச்சுடுங்க….. ஒவ்வொரு கோவில்லேயும் நாங்க உழவாரப்பணி செய்றப்போ அங்கே வேலை செய்றவங்களுக்கு நாங்க மரியாதை செய்யும்போது எடுக்குறது தான்மா… அப்படி செய்றதுக்கு காரணம், கோவில்ல வேலை செய்றவங்களுக்கு மரியாதை கொடுக்கணும். நம்மால முடிஞ்ச உதவிகளை அவங்களுக்கு செய்யனும்னு மத்தவங்களுக்கு புரியவைக்கத் தான்…. வேற ஒண்ணுமில்லே. தப்பிருந்தா என்னை மன்னிச்சுடுங்க. இந்த ஃபோட்டோ வெளியே வராது கவலைப்படாதீங்க!” என்றோம்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர் பாட்டுக்கு போய்விட்டார். ஆனால் நமக்கு மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அவங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்னை செஞ்சிட்டோமே…. “இறைவா என்னை மன்னித்துவிடு” என்று மனம் இறைவனிடம் மன்னிப்பு கேட்டது.
அன்று மதியம் உழவாரப்பணி முடிந்து வீட்டுக்கு வந்து கேமிராவில் உள்ள அத்தனை படங்களையும் கணினியில் TRANSFER செய்கிறோம்… நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. வள்ளி இடம்பெற்ற படங்கள் ஒன்று கூட கேமிராவில் சரியாக பதிவாகவில்லை. அந்த படங்கள் அனைத்தும் BLUR ஆக இருந்தது. அதாவது யார் உருவமும் தெரியவில்லை. சுமார் ஐந்து புகைப்படங்கள் இருக்கும். ஐந்துமே சரியாக விழவில்லை. நண்பர்கள் எடுத்தால் மிஸ் செய்துவிடுவார்கள் என்று ஒவ்வொரு புகைப்படத்தையும் நாமும் காமிராவை கையில் வாங்கி எடுத்துள்ள நிலையில் இது எப்படி சாத்தியம்? (ஐந்தில் இரண்டு நாம் எடுத்தது. அது கூட சரியாக விழவில்லை.)
என்ன விந்தை இது? இதுவரை இப்படி ஆனதே இல்லையே? அதுவும் சரியாக வள்ளியை எடுத்த படங்கள் மட்டும் பதிவாகவில்லையே… வள்ளிக்கு முன்பாக எடுத்தபடங்கள் அனைத்தும் சரியாக பதிவாகியுள்ளது. வள்ளிக்கு பிறகு எடுத்த படங்களும் சரியாக பதிவாகியிருக்கிறது. சொல்லப்போனால் அதற்கு பிறகு மதிய உணவு சாப்பிட்டோம். அப்போது எடுத்த படங்கள் கூட சரியாக உள்ளது. ஆனால் வள்ளி உள்ள படங்கள் மட்டும் நஹி. எப்படி இது?
வள்ளி சாதாரண பெண் அல்ல என்பது மட்டும் புரிந்தது. இவரது முற்பிறப்பு நிச்சயம் சிவபெருமான் தொடர்புடைய ஒன்றாகத் இருக்கவேண்டும். ஏதோ ஒரு வினைப்பயன் பாக்கி இருக்க, சிவனுக்கு தொண்டு செய்ய மீண்டும் பிறப்பெடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இப்போது நீங்கள் குறுங்காலீஸ்வர் கோவிலுக்கு போனாலும் அவரை பார்க்கலாம்.
திருக்கோவிலில் செய்யும் துப்புரவு பணி சாதாரணமானதல்ல!
கோவிலில் பணி செய்பவர்கள் குறித்து நமக்கு என்றுமே அலட்சியப் பார்வை இருந்ததில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு அவர்களை நாம் பார்க்கும் கோணமே வேறு. எல்லோரும் வள்ளி போல இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆனால் திருக்கோவிலில் செய்யும் துப்புரவு பணி சாதாரணமானதல்ல. அது ஒரு பேறு. அது எல்லாருக்கும் கிடைக்காது. அதை மட்டும் அனைவரும் உணரவேண்டும். ஆகையால் தான் மாதமொரு முறையாவது திருக்கோவிலை சுத்தம் செய்யும் இந்த உழவாரத் தொண்டை எத்தனையோ சிரமங்களுக்கு இடையே செய்துவருகிறோம். உணர்ந்தவர்கள் பாக்கியசாலிகள்.
================================================================
[END]
வணக்கம்
ஒவ்வொரு உழவார பணியை பற்றி படிக்கும் போதும் இந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டாகிறது. அதே சமயம் நம் நண்பர்களுக்கு கிடைத்த வரத்தை எண்ணி மகிழ்ச்சி உண்டாகிறது.
அடுத்த உழவார பணியிலாவது நாம் கலந்துகொள்ள இறைவனின் திருவருள் வேண்டும்…
பதிவு மிகவும் நன்றாக உள்ளது. ஒரு இன்சிடென்ட் விடாமல் அப்டேட் பண்ணி விட்டீர்கள். நாங்கள் இந்த உழவார பணி யில் பங்கு பெற்றதை மிக பெரிய பாக்கியமாக கருதுகிறோம். நம்மை இந்த உழ வாரபணியில் சால்வை அணிவித்து பாராட்டியதற்கு ரைட் மந்த்ராவிற்கு நன்றி கூறி கொள்கிறோம்
இன்னும் பல உழவாரப் பணிகளை நம் தளம் காண வாழ்த்துக்கள்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர் சாருக்கு புண்ணிய கணக்கு டெபாசிட் ஏறி கொண்டே செல்கிறது. கண்டிப்பா ஓவர் டிராப்ட் வசதியோட ஹேன்ட்சம் இன்ட்ரஸ்ட் கிரெடிட் ஆகிரும் சூப்பர் சார்.
வாழ்க உங்கள் பணி.வளர்க உங்கள் தொண்டு.
கடமையை செய். பலனை எதிர்பாராதே என்று சொல்வது எளிது.
ஆனாலும் யாரும் தன்னை கவனிக்காவிடினும் தனது கடமையை செவ்வனே செய்யும் வள்ளி போன்றவர்கள் எங்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
துப்புரவு பணி அதிலும் திருகோவிலில் எனும் போது அது போன பிறவியில் நாம் செய்த புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.
நாம் என்றாவது செய்கிறோம். ஆனால் அவர்கள் தினமும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையிலேயே வள்ளி அவர்கள் தெய்வ பிறவி தான்.
அற்புதம். அருமை. அமைதியாக தன வேலையே மட்………டும் (வள்ளி அவர்களை போல) பார்த்தாலே போதும் நாம் நினைப்பதை இறைவன் நடத்தி கொடுத்து விடுவான் போல.
ஆஹா…..வள்ளிக்கு வள்ளியின் பாராட்டா?
– சுந்தர்
சுந்தர் சார் வணக்கம்
ஒவ்வொரு உழவார பணி நடக்கும் போதும் ரொம்ப FEEL பன்னுவோம் but படிக்கிறதக்கே சந்தோஷம் தான் சார்..
நன்றி
சுந்தர்,
உங்களது இந்த தெய்வீக திருத்தொண்டை பாராட்டுகிறேன் என்று சொல்வது மிகவும் சாதாரணமான வார்த்தையாகத்தான் இருக்கும். இது அதற்க்கெல்லாம் மேலே. ராகவேந்திரன் அவர்கள் சொன்னதை வழி மொழிகிறேன்.
என்னையும் இந்த புனித பணியில் சேர்த்து கொள்ள ஆண்டவன் சித்தம் கொள்ளட்டும்.
வாழ்த்துகள் சார். தொடரட்டும் தங்களின் உழவாரப்பணி. ……………. சகோதரி வள்ளி போன்றோரை எங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க உங்களையன்றி வேறு யார் உள்ளார்கள். நன்றி.
தங்களின் பதிவு அருமை.
தங்கள் தொண்டு தொடர தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ இறையை வேண்டுகிறோம்.
அடுத்த முறை நீங்கள் உழவார பணிக்கு செல்லும் பொழுது எனக்கும் கொஞ்சம் தகவல் சொல்லுங்கள் நானும் உங்களிடம் கலந்து கொள்ள விருப்பபடுகிறேன் … என்னுடைய தொலைபேசி எண் 9535280182 எனக்கு விடுப்பு இருந்தால் கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன்…
நன்றி
விக்னேஷ்.
Dear sir,
We heard about your team, you were doing lot of Temple cleaning activites in chennai, our team also want to participate with you. we are from Lions club.
Kindly send your contact name & address.
thks
Srikumar R
Treasurer – Lions Club of GKD Millennium – chennai
9841203115.
Welcome sir.
please drop in a mail to simplesundar@gmail.com & rightmantra@gmail.com so as i will archive it and remember when i arrange for next uzhavarappani.
thank you very much
வணக்கம் சுந்தர் சார்.
என் பெயர் ஹரி தயாளன். எனக்கு ஒரு நண்பர் மூலமாக உழவாரப்பணி பற்றி தெரிய வந்தது. ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதுவும் நான் வணங்கும் அந்த அண்ணாமலையார் கோயில் பணி. சரி கடவுள் நமக்கு அந்த பாக்கியம் அளிக்கவில்லை என்று மனதை தேற்றிக்கொண்டேன். தயவுசெய்து உழவார பணி பற்றிய தகவலை எனக்கு முன்கூட்டி தெரிவிக்க வேண்டுமென்று வேண்டிகொள்கிறேன். அதன் மூலமாக வாய்ப்பு கிடைக்கும்போது இறைத் தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்.
இப்படிக்கு
ஹரி தயாளன்
பெங்களூர்.
9900525882
நமசிவாயம். இது சிதம்பரத்தில் வசிக்கிறது. 7ஆண்டுகல் உழவாரப்பணீயில் கலந்து கொன்டிருக்கின்றது. தங்களை எப்படி தொடர்பு கொள்வது நீங்கள் செய்வது போல் அணைத்து பனியும் நாங்களும் செய்வோம் அனால் கோவிலில் பனி புரிவோருக்கு துணி வாங்கி தந்ததில்லை வரும் ஞாயிறு 15/3/2015 சிதம்பரத்தில் கோடண்டராமர் கோவிலில் 148அம் உழவரபனி நடைபெரைருக்கிறது எங்களில் பலதரப் பட்டவர்களும் இருப்பார்கள் பலரின் நிலை(ஜாதி) இதற்க்கு தெரியாது நாங்களும் பணியில் கலந்து கொள்ளலாமா
நமசிவாயம் சார் நேரடியாக தமிழில் அடிக்கத் தெரியும் இப்படி அடிப்பது மிகவும் சிரமமாகவும் பிழையாகவும் இருக்கிறது
மிக்க மகிழ்ச்சி. என் அலைபேசி எண் 9840169215. உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பெயரை குறிப்பிட்டு எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். நானே சாவகாசமாக தொடர்புகொள்கிறேன். அல்லது simplesundar@gmail.com என்கிற எண்ணுக்கு உங்கள் அலைபேசி எண்ணை மின்னஞ்சல் அனுப்பவும்.